September 25, 2011

தோற்றுப் போன இலங்கையும், கோழையான கிளார்க்கும் - ஒரு கிரிக்கெட் வலம்


இலங்கையில் வைத்து இந்த மைக்கேல் கிளார்க்கின் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியிடம் இலங்கை அணி டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடர்களை தோற்கும் என்று கனவிலும் யாரும் நினைத்திரார்கள்.நானும் தான்..
ஆனால் இப்போது கிரிக்கெட்டில் நினைத்த எது தான் நடக்கிறது?

டெஸ்ட் தரப்படுத்தலில் முதலாம் இடத்திலிருந்த இந்தியா இங்கிலாந்திடம் நான்கு டெஸ்ட்டிலுமே தோற்று முதலாம் இடத்தை இப்படி மோசமாகப் பறிகொடுக்கும் என்று யாராவது நினைத்தோமா?
காயமடைந்த இந்திய வீரர்களைக் கொண்டு இன்னொரு Indian XIஐயே உருவாக்கலாம் என்று நாம் நினைத்தோமா?
உலக சாம்பியன்கள் ஒரு நாள் போட்டியிலும் இங்கிலாந்தால் உருட்டப்பட்டு உருளைக்கிழங்கு பஜ்ஜியாவார்கள் என்று தான் நினைத்தோமா?
சச்சின் டெண்டுல்கர் சதமே அடிக்காமல் நாடு திரும்புவார் என்று யாராவது நினைத்தோமா?
இல்லை டிராவிட் மீண்டும் ஒரு நாள் போட்டிகள் விளையாடுவோர் என்றோ, அல்லது T 20 போட்டிகளில் அறிமுகத்தை மேற்கொள்வார் என்று தான் நினைத்தோமா?

கிளார்க்கின் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி துடுப்பாட்டத்தில் ஓரளவு பலம் வாய்ந்த அணியாகவே இருந்தாலும், ஜோன்சன் தவிர பந்துவீச்சை நம்ப முடியாது என்று முன்னைய பதிவில் சொல்லி இருந்தேன்.


சுருட்டப்பட்ட இந்தியாவும், சுழற்றக் காத்துள்ள இலங்கையும்.. ஒரு கிரிக்கெட் சுழல் அலசல்.



வழமையான விக்கிரமாதித்த மூக்குடைவு தான்.

ஆனாலும் சொன்ன விஷயங்கள் சிலது நடந்திருக்கே..

சுழல்பந்துவீச்சை சிறப்பாக, நேர்த்தியாக எதிர்கொள்ளக் கூடிய அனுபவம் வாய்ந்த துடுப்பாட்டம்..ரிக்கி பொன்டிங் + மைகேல் கிளார்க்.
இந்த இருவருடன் சுழல் பந்தை எதிர்கொண்டு ஆடக்கூடிய வொட்சன், மைக்கேல் ஹசி ஆகியோரும் தொடர்ச்சியாக ஓட்டங்கள் குவித்ததாலேயே ஆஸ்திரேலியா வெல்வதைப் பற்றியல்ல, தோல்வியிலிருந்து தப்புவதைப் பற்றியே சிந்திக்கலாம்.
ஆனால் அண்மைக்காலத்தில் இலங்கை வந்த அணிகளில் ஆஸ்திரேலியா கொஞ்சம் வித்தியாசமானது.. இலங்கை அணியை அச்சுறுத்தக் கூடிய வேகப்பந்துவீச்சு அவர்களின் பலம்.

என்ன ஒன்று முரளிக்குப் பின்னதான சுழல் பந்துவீச்சுத் தேடல் (ரங்கன ஹேரத்தை விடுவோம்) இன்னும் சரிவரவில்லை.
இந்தியா கூட அஷ்வினை நம்பிக்கையோடு நோக்குகிறது.
இலங்கையில் ரண்டீவ், மென்டிஸ், சீக்குகே பிரசன்னா மூவருமே இம்முறை ஏமாற்றிவிட்டார்கள்.

இலங்கை அணி வெளிநாட்டு மண்ணில் எதிர்கொள்ளும் சிக்கலான ஸ்விங் + பவுன்சர் பந்துக்கு எதிரான தடுமாற்றங்களை இம்முறை சொந்த மண்ணிலேயே சந்தித்ததும், வழமையாக வெளிநாட்டு அணிகளை உருட்டிப்போடும் காலியிலே வைத்து ஒரு புதிய, பெயர் அறியப்படாத ஆஸ்திரேலிய சுழல் பந்துக் கற்றுக் குட்டியிடம் கவிழ்ந்து போனதும் நம்பவே முடியாத விஷயங்கள்..

மஹேல , சங்கா, டில்ஷான், சமரவீர இத்தனை துடுப்பாட்ட சிங்கங்கள் இருந்தும் சுண்டெலிக் கூட்டம் ஆகிப்போனது இலங்கை அணி.

இதற்குப் பரிசு பாகிஸ்தானுடனான மத்திய கிழக்கு தொடருக்கு சாம் அங்கிள் அணியில் இல்லை.

ஒரு தொடரின் இரு போட்டிகளில் சறுக்கிய சமரவீரவை அணியை விட்டு நீக்கியது தவறு என சொல்வோருக்கேல்லாம் நான் சொல்வது, ஆஸ்திரேலியா போல இந்த விடயத்தில் நாம் நடப்பதே நல்லது. சமரவீரவின் வயது கவனிக்க வேண்டிய ஒன்று. அதே போல ஷார்ஜா, துபாய், அபுதாபியின் தட்டை ஆடுகளங்களில் யார் வேண்டுமானாலும் ஓட்டங்களை மலையாகக் குவிக்கக் கூடும். அந்த வாய்ப்பை ஒரு இளையவருக்குக் கொடுப்பதன் மூலம் நம்பிக்கையை ஓட்டத் தேர்வாளர் எடுத்த முடிவு சரியே.

அஜந்த மென்டிஸ் ஆஸ்திரேலியாவை T 20  போட்டிகளில் உருட்டிய விதம் என்ன, அது அப்படியே தேய்ந்து புஸ் ஆகிப் போனதென்ன?
இலங்கைக்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் கிடைத்த மிகப் பெரிய நன்மைகள், ஷமிந்த எரங்க, சுரங்க லக்மல் என்ற இளைய வேகப் பந்துவீச்சாளர்கள் மற்றும் உப தலைவர் அஞ்சேலோ மத்தியூஸ் பொறுப்பு உணர்ந்தது.

எல்லாம் சரி, காலியில் வென்ற பின், மழையினால் இலங்கை பல்லேக்கலையில் தப்பித்த பின், பெரிதாக முடிவுகள் தராது என்று நம்பப்பட்ட மைதானத்தில் முதல் இன்னிங்க்சில் தடுமாறினாலும், பின்னர் ஹியூஸ், ஹசி, தலைவர் கிளார்க்கினால் நல்லதொரு ஆதிக்கம் செலுத்தும் நிலைக்கு வந்திருந்தது.

நல்ல ஆதிக்கம் செலுத்தக் கூடிய நிலையில் இருந்தபோதும் இலங்கையை அழுத்தத்துக்குள் தள்ள க்கு முயற்சிக்கவேயில்லை கிளார்க்.
ஏன்??
1-0 என்று தொடரை வென்றால் போதும் என்ற ஒரு defensive மனப்பான்மையா?
ஏற்கெனவே தடுமாறிக் கொண்டிருக்கும் இலங்கை அணியின் மீதும் பயமா?
மார்க் டெய்லர், ஸ்டீவ் வோ போன்றோர் தலைமை தாங்கிய ஆஸ்திரேலிய அணிகள் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் வெற்றி பெற எப்படியாவது முனைவார்கள்.
ஆனால் பொன்டிங் கூட சிலவேளை இதே சுய பாதுகாப்பைத் தான் பார்த்துக் கொண்டார்.

இது தான் சிறந்த அணித் தலைவர்களுக்கும் 'சாதா' அணித் தலைவர்களுக்கும் இடையிலான வித்தியாசம்.
கிளார்க்கின் ஆஸ்திரேலிய அணி முன்னைய அணிகள் போலப் பலம் இல்லாவிட்டாலும், இலக்கை முன்னொரு தாண்டிய பிறகாவது ஒரு முப்பது ஓவர்களில் துரத்தக் கொடுத்து வந்திருந்த ரசிகர்களைக் குஷிப்படுத்தி இருக்கலாம்..

கோழை கிளார்க்.



இன்னொரு விஷயம்,
வோர்ன் - முரளிதரன் என்று தொடருக்குப் பெயரிட்டுவிட்டு பரிசளிப்பு நிகழ்வில் இலங்கையிலிருந்து முரளிதரன் அழைக்கப்படாமையும் , தொலைக்காட்சி ஒளிபரப்பில் எந்தவொரு இடத்திலும் இத்தொடர் வோர்ன் - முரளிதரன் கிண்ணத்துக்கான தொடர் என்று குறிப்பிடப்படாமையும் கவலை + கனடனத்துக்குரியவை.



கடந்தமுறை இத்தொடர் ஆஸ்திரேலியாவில் இடம்பெற்றபோது ஷேன் வோர்ன் கலந்துகொண்டு வெற்றிபெற்ற அணிக்குக் கிண்ணத்தை வழங்கிவைத்ததை ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிந்திருக்குமோ, மறந்திருக்குமோ?

முரளி இனி வேறு நாடுகளுக்கு பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக சென்றால் இதுவும் ஒரு காரணமாக அமையும்.


-----------------------

இப்போது இலங்கை அணி நீண்ட காலத் தேடலில் இருந்த நிரந்தரப் பயிற்றுவிப்பாளராக ஜெப் மார்ஷ் நியமிக்கப்பட்டிருக்கிறார். ஆஸ்திரேலியாவின் முன்னாள் உப தலைவர், உலகக் கிண்ணம் வென்று கொடுத்த பயிற்றுவிப்பாளர், ஆஸ்திரேலிய அணியின் தற்போதைய இளம் நட்சத்திரம் ஷோன் மார்ஷின் பெருமை மிகு தந்தையார்.
அனுபவஸ்தராகவும், சிம்பாப்வே அணிக்கும் ஒரு இக்கட்டான சூழலில் பயிற்றுவிப்பாளராக இருந்த அனுபவமும் உள்ளதனால் இலங்கை அணிக்கு இக்கால கட்டத்தில் இவர் பொருத்தமான பயிற்றுவிப்பாளராகவே தெரிகிறார்.

இலங்கைக்கு வருகின்ற 6வது ஆஸ்திரேலியப் பயிற்றுவிப்பாளர் இவர் என்பது இலங்கை - ஆஸ்திரேலியக் கிரிக்கெட் தொடர்பு நீடிப்பதைக் காட்டுகிறது.
டேவ் வட்மொரோடு ஆரம்பித்த இந்தப் பயணம் வட்மோர், மூடியைப் போல நல்லதொரு பயிற்றுவிப்பாளராக மார்ஷைத் தந்து தொடரவேண்டும் என எதிர்பார்க்கிறேன்.

இலங்கை அணிக்கு இப்போது தேவை நல்லதொரு கண்டிப்பான, வழிகாட்டக் கூடிய வாத்தியார்.
மகன் எதிரணியோன்றில் விளையாடும்போது தந்தை இன்னொரு அணிக்குப் பயிற்றுவிப்பாளராக இருக்கும் முதலாவது சந்தர்ப்பம் (சர்வதேச கிரிக்கெட்டில்) அரிது தான்.
ஆஸ்திரேலியாவுக்கு அடுத்தமுறை இலங்கை செல்லும்போது இதன் சாதக, பாதகங்கள் தெரியும்.

-----------

புதன் கிழமை கொழும்பின் பிரபல ஐந்து நட்சத்திர விடுதியில் நடந்த அடுத்த வருடம் இலங்கையில் நடக்கவுள்ள ICC World Twenty 20 உலக கிண்ணத்துக்கான அறிமுக விழாவில் கலந்துகொள்ளும் வாய்ப்புக் கிட்டியது.

புதிய சின்னம் அறிமுகம், ஆண்கள், பெண்களின் உலகக் கிண்ணங்கள் போன்றவற்றைப் பார்க்கக் கூடிய வாய்ப்பும், சரியாக ஒரு வருடத்தின் பின்னர் ஆரம்பிக்க உள்ள இந்த ICC World Twenty 20 உலகக் கிண்ணத்தின் போட்டி அட்டவணை ஒழுங்குகள் பற்றிய விளக்கத்தை அறியக் கூடிய வாய்ப்பும் கிட்டியது.
 ஆண்கள், பெண்களுக்கான உலகக் கிண்ணங்கள்....

பெண்களுக்கான உலகக் கிண்ணத்துடன் இலங்கை மகளிர் அணித்தலைவி சசிகலா, ஆடவர் உலகக் கிண்ணத்துடன் முன்னாள் தலைவர் சங்கக்கார ஆகியோருடன் பிரதம நிறைவேற்று அதிகாரி ஹரூன் லோகார்ட்.


கடந்த 2009ஆம் ஆண்டு முதல் நடைபெறுவதைப் போலவே, இம்முறையும் பெண்களுக்கான World Twenty 20 கிண்ணமும் அதே காலகட்டத்தில் நடைபெறவுள்ளதொடு, அரையிறுதிகளும், இறுதிப் போட்டியும் ஆண்களுக்கான போட்டிகளுக்கு முதல் அதே மைதானத்தில் இடம்பெறவுள்ளமை விசேடம்.

கிரீஸ் மனிதன் போன்ற உடலோடு ஒட்டிய கரிய உடையணிந்த, முகமூடியணிந்த ஒரு உருவமே இந்த சின்னத்தை உத்தியோகபூர்வமாக திரையில் அறிமுகப்படுத்தியது காலத்துடன் ஒட்டிய ஒரு திட்டமிடலோ? ;)


இலங்கையை அதிர வைக்கும் விறு விறு T20 போட்டிகளுக்காக காத்திருந்தாலும், இங்கே இடம்பெறுவதால் இலங்கைக்குக் கூடுதலான வாய்ப்புக்கள் இருப்பதை விட இந்தியாவுக்கே அதிக வாய்ப்புக்கள் இருக்கும் என்பது ஒருபக்கம் இப்போதைய நிலையாக இருக்க, என்ன தான் கொழும்பிலிருந்து, கண்டி, காலி, ஹம்பாந்தோட்டை என்று ஓடித் திரியவேண்டும் என்பதை விட, எல்லாப் போட்டிகளும் இங்கேயே என்பது தான் கொஞ்சம் கவலை ;)

-------------------

காலமான முன்னாள் இந்திய அணித்தலைவர் டைகர் பட்டோடிக்கு அஞ்சலிகள்..

சாம்பியன்ஸ் லீக் ஆரம்பிச்சு நடக்குது.. ம்ம்ம் பார்க்கிறேன்..
நடக்கட்டும். பார்க்கலாம். :)

ஷோயிப் அக்தாரின் சுயசரிதை கிளப்பியுள்ள சர்ச்சைகள் தான் நாளை முதல் பதிவுலக பரபரப்பாக இருக்கும்.. அதையும் கவனிப்போம்.



September 20, 2011

மங்காத்தா..... நானும் மாறிட்டேன்..

அன்புள்ள வாசக நண்பர்களே, பதிவுலக நண்பர்களே...

வலைப்பதிவராக மாறி மூன்று வருடங்கள் பூர்த்தியாகியுள்ள இந்த மாதத்தில் (என்னுடைய முதலாவது பதிவு வெளியானது 2008ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 6ஆம் திகதி. 

வணக்கம்


என்னுடைய வலைப்பதிவை இணையத்தளமாக மாற்றும் நேரம் வந்தாச்சு என்று நினைக்கிறேன்.


பல அன்பு நண்பர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க நாளை இப்போது முதல் என்னுடைய வலைப்பதிவு 
http://loshan-loshan.blogspot.com/ நான் இவ்வளவு காலமும் பெயருக்கு வைத்திருந்து re direct பண்ணி இருந்த www.arvloshan.com என்ற இணையத்தளத்தில் இயங்கும் என்பதை அன்போடும் மகிழ்ச்சியோடும் தெரிவித்துக் கொள்கிறேன்.




ஆனால்
http://loshan-loshan.blogspot.com/ ஐ மனப்பாடமாக வைத்திருந்து என் பதிவுகளை வாசித்துவரும் நீங்கள் அப்படியே வருகை தரலாம்.. அங்கிருந்தும் நேரடியாக இங்கே வரலாம் :)

இன்று என் விசாரணைகள், தொல்லைகள், சந்தேகங்களை பாதி வேலை நாளில் பொறுத்து என்னுடன் இருந்து வலைப்பதிவில் தேவையற்ற Gadgetsஐ அகற்றி, இன்னும் அகற்றுவதற்கு பரிந்துரைகளை செய்து தந்த தம்பிமார் ஜது, கன்கோன் ஆகியோருக்கு நன்றிகள்.

குறை, நிறைகள், விமர்சனங்கள், மேலதிக ஆலோசனைகளைத் தாராளமாக வரவேற்கிறேன்.

உங்கள் தொடரும் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றிகள்...


** தலைப்பு விளக்கம் - எத்தன நாளுக்குத் தான் எல்லாரும்போலவே "ஆத்தா பாஸ் ஆகிட்டேன்" "ஆத்தா பியூஸ் ஆகிட்டேன்" என்று தலைப்பு போடுவது?
அதான் சீசனுக்கு ஏற்றது போல "மங்காத்தா"வைக் கூப்பிட்டேன்.




September 18, 2011

வந்தான் வென்றான்


நேற்று முதல் உலகமெங்கும் என்று விளம்பரப்படுத்தப்பட்டாலும், வியாழக்கிழமை இரவே திரையிடப்பட்ட விசேட காட்சிக்கு அழைப்புக் கிடைத்தும் களைப்போ, அலுப்போ போக விரும்பவில்லை.
நேற்று இரவுக் காட்சிக்கு அருகில் உள்ள ஈரோஸ் திரையரங்குக்கு வருமாறும் அழைப்பு வந்தது.
ஆனால் கொட்டாஞ்சேனையில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள சினி வேர்ல்ட் உரிமையாளர் எனது நேயர் என்பதால் அவரது அழைப்பைத் தட்ட முடியவில்லை.

முன்னைய செல்லமகால் திரையரங்கு இருந்த இடத்துக்கு முன்னால் ஒடுங்கிய ஒரு கட்டடமாக ஆனால் ஏழு அடுக்கு மாடியாக உயர்ந்து நிற்கிறது இந்தப் புதிய Multiplex. மூன்று வெவ்வேறு திரையரங்குகள்.
சொகுசான இருக்கைகளும், குளிரான ஏசியும், நேர்த்தியான திரையும் மட்டுமல்ல.. இந்த சினி வேர்ல்டில் ஸ்பெஷல் அருமையான ஒலித்தெளிவு.. Digital Dolby sound system கலக்குகிறது.



ரௌத்திரத்துக்குப் பிறகு வருகிறது என்பதால் கொஞ்சம் சுமாராக இருந்தாலும் பரவாயில்லை என்பதே ஒரு எதிர்பார்ப்பாக இருந்தது.
கதாநாயகி டாப்சி என்பது பார்க்க முதலே கடுப்பாக்கி இருந்தது.. (பார்த்த பிறகு ஏற்பட்ட கடும் கடுப்புக்கு என்ன பெயர் வைப்பதென்று நான் இன்னும் முடிவு செய்யலைங்கோ)
தமனின் இசையில் மனம் கவர்ந்த பாடல்களும், இதற்கு முந்தைய தன் இரு படங்களிலும் (ஜெயம் கொண்டான், கண்டேன் காதல் ) இவரிடம் கொஞ்சமாவது எதோ விஷயம் இருக்கு என்று எதிர்பார்க்க வைத்த இயக்குனர் கண்ணனும் 'வந்தான் வென்றான்' பார்க்கக் கூடியதாக இருக்குமென்று எண்ண வைத்தது.

சகோதர பாசத்தின் மீது தாதாயிசமும் காதலும் மோதலும் சேர்த்துக் கலக்கப்பட்ட கதை. (மீதிக் கதைய படம் பார்த்தே அறிக)
தாதா என்று சொன்னால் மும்பாயும், மும்பாய் என்று தமிழ்ப் படங்களில் வந்தால் கொஞ்சம் ஹிந்தியும் நிறையத் தமிழும் பேசும் இடம் என்றும் காட்டுவது தமிழ் சினிமா ஆச்சே.இங்கேயும் அவ்வாறே.

ஈரம் படத்தில் வில்லனாகக் காட்டப்பட்ட பிறகு, அட இனி ஒரு வித்தியாச வலம் வருவார் என்று எதிர்பார்த்துக் காணாமல் போயிருந்த நந்தா கொஞ்சம் கலக்குகிறார்.
ஆனால் தாதாவுக்கான மிரட்டல் மிதப்பைத் தாண்டி ஒரு மென்மையான அழகு தெரிகிறது.

டாப்சி - கருமம். இதையெல்லாம் அழகு என்று சொல்லிக் கொண்டாடும் கூட்டத்தைக் கண்டால் கடுப்பாகிறது. மிதந்த பல்லும், மூன்றரை கிலோமீட்டர் நீண்ட மூக்கும், அவிச்ச ரால் மாதிரி ஒரு கலரும், எந்த நேரமும் இளிச்ச வாய் மாதிரி ஒரு கிழிந்துபோன உதடும் திரையில் இந்த வெள்ளைப் பிசாசு தோன்றும்போதெல்லாம் எரிச்சல் ஏற்படுகிறது.
பாவம் ஜீவா.

வெள்ளாவி வச்சு வெளுத்ததெல்லாம் சரி.. ஆனால் ஓவர் வெளுப்பு.
அதிலும் 'காக்க காக்கவில்' ஜோதிகாவுக்கு 'ஒரு ஊரில் அழகே உருவாய்' பாடல் போல இந்த வெள்ளைப் பிசாசுக்கும் ஒரு பாடல்.. இதையெல்லாம் கேட்க யாருமே இல்லையா?

சந்தானம் - கண்டேன் படம் போலவே இங்கேயும் இந்தக் குருவி தான் பனங்காயை என்ன, பனை மரத்தையே தாங்குகிறது. சிரிக்க வைப்பதுடன் படத்தில் திருப்பம் ஏற்படுத்தவும் பயன்படுகிறார்.
டிரேயிலரைப் பார்த்து படம் நல்லா இருக்கும் என்று நம்பிட்டீங்களா என்று ஆரம்பத்தில் அவர் சொல்லும்போதே கொஞ்சம் அலெர்ட் ஆயிருக்கலாம்.
சந்தானம் தான் படத்தின் ஹீரோ என்று சொன்னாலும் நல்லாவே இருக்கும்.

ஜீவா - பாவம். நம்பி நடித்திருப்பார். ஆனால் எதுவுமே இல்லையே. பாடல்கள், கொஞ்சம் காதல் காட்சிகள், ஒரு சில அக்ஷன் காட்சிகள் மட்டும் போதுமா? கோ தந்த வெற்றியைக் கோட்டை விட்டிருக்கிறார் அடுத்து வந்த இரு படங்களிலும்..

நந்தாவுடன் மோதும் காட்சிகள் ரசிக்கக் கூடியவை.
கேரளா காட்சிகள் + குத்துச் சண்டைப் பயிற்றுவிப்பாளராக வரும் ஜோன் விஜயுடன் அடிக்கும் லூட்டிகள் ரசிக்கக் கூடியவை.
ஆனால் கதாநாயகன் புத்தி சாதுரியத்துடன் எதிரியைக் கட்டம் கட்டி மடக்குவதை இதை விட ரசனையாக வேறு இயக்குனர்கள் காட்டிவிட்டதால் இயக்குனர் மீது மட்டுமல்லாமல், ஜீவா மீதும் கடுப்பாகிறது.

அழகம்பெருமாள், ரகுமான்(இன்னும் அப்படியே இருக்கிறாரே.. எப்படி?), நிழல்கள் ரவி போன்றோருக்கெல்லாம் சிறிய வேடங்கள்.

கண்ணன் இன்னும் தான் முதல் இரு படங்களில் விட்ட தவறுகளைத் திருத்தவில்லை.

ஜெயம் கொண்டான், கண்டேன் காதல் இரண்டிலும் ரசனையான பெயர்கள், ரசிக்கத் தக்க கதையோட்டம், திடீர் திருப்பங்கள் என்றிருந்தபோதும், சொல்லிய விதம், வேகம் போன்றவற்றில் விட்ட குளறுபடிகள் காரணமாக சொதப்பி இருந்தன.

Flashback, கற்பனை, மாற்றாந்தாய் / தகப்பன் சகோதரப் போராட்டம், எதிர்பாராத திருப்பங்கள் (என்று இயக்குனர் நம்புகின்ற விஷயங்கள்) அனைத்தையும் நேர்த்தியாக வைத்து நல்லபடியாகத் தராமல் மூன்றாவது தடவையாகக் குழம்பி இருக்கிறார்.
கண்ணனின் காதல் Flashback மீது தானோ? வந்தான் வென்றானிலும் நிறைந்தே இருக்கிறது.



பட்டுக்கோட்டை பிரபாகரின் வசனங்கள் நச் என்று இருக்கின்றன. சில இடங்களில் கொஞ்சம் ஓவரோ என்றும் தோன்றுகின்றன..
காதல் பற்றி எதிர்மறையாக டாப்சியும், காதலின் மகத்துவம் பற்றி ஜீவாவும் சொல்லும் இடங்கள் ஒலிப்பதிவின் குளுமையோடும் சேர்ந்து அழகாயிருக்கின்றன.

ஒளிப்பதிவு: பி.ஜி முத்தையா. கேரளாக் காட்சிகளும், மும்பையின் சில முக்கியமான இடங்களையும் அழகாக காட்டுகிறார்.
பாடல் காட்சிகளில் முடியுமானளவு முயன்றிருக்கிறார்.
காட்சிகள் அழகாயிருந்து என்ன பயன்?
டாப்சியும், பொருத்தமற்ற இடங்களும் சேர்ந்து கேட்கையில் ரசித்த பாடல்களைக் கொத்தி ரணமாக்குகின்றன.

அதிலும் வரிகளுக்காக ரசித்த 'முடிவில்லா மழையோடு' படத்தில் தேவையே அற்ற இடத்தில் வந்து செத்துப் போகிறது.

ஆரம்ப கட்ட சகோதர மோதல்கள் வந்தபோதே இடைவேளையின் போது கதை புரிந்துவிடுகிறதே..
அதற்கும் பிறகு சில இழுவைகளா? சப்பா..
அதிலும் ஒரு பரபர, பயங்கர (!) தாதா யாரோ ஒருவனின் காதல் flashbackஐப் பொறுமையாக இருந்து கேட்கிறாராம்.
ஹய்யோ..
கேரளாவில் பஸ் பயணத்தில் கதாநாயகனின் மடியில் அவரைக் காதலிக்க ஆரம்பிக்காத நாயகியாம்.. இவருக்குப் பாட்டு..
ஹய்யோ 2

இப்படி நிறையக் கண்ணைக் கட்டும் காட்சிகள் நிறைந்த கலர்புல் திரைப்படம்..
கண்ணன் வாழ்க.

சந்தானத்தால் கொஞ்சம் தப்பிச்சுது...

வந்தான் வென்றான் - வழுக்கி விழுந்தான் 


September 09, 2011

மங்காத்தாவில் காதல் 'பன்றி' & கூகிளில் விஜய் - ட்விட்டடொயிங் - Twitter Log

கடந்த ஒரு மாதத்திய ட்வீட்களின் தொகுப்பு...



முள்ளிவாய்க்காலில் நடந்தது என்ன என்று சொல்லும் Zee Tamizh இறுதிப் போரில் இந்தியா இலங்கை ராணுவத்துக்கு செய்த உதவிகள் பற்றி மூச்சே விடவில்லை


நடக்க முடியாத நாக்கிளிப் புழு எல்லாத்தையும் நக்கிப் பார்க்குமாம்..

அணையப் போகும் விளக்கு கடைசி நேரத்தில் பிரகாசமாகக் கொஞ்ச நேரம் எரியுமாம் ;) Praveen & MSD partnership - INDIA s losing match,series & No.1









பெரிதாக விசேடம் இல்லாவிட்டாலும் ஏனோ இந்தப் பாடல் முன்பிருந்தே பிடிச்சிருக்கு ;p
2/2 கோவக்காரப் பெண்கள் அழகாக இருக்கிறார்கள் என்பதாலோ? ;) கோவக்காரக் கிளியே - வேல்


ஆரிரரோ.. தந்தையின் தாலாட்டு -தெய்வத் திருமகள் ஹரிச்சரண் இதுவரை பாடிய பாடல்களில் மற்றொரு முத்து :) முத்துக்குமாரின் வரிகள் உருகவைக்கின்றன





 வெள்ளைக்கரப்பான் என்று சொன்னவனேல்லாம் 'தலைவி' என்று சொலும் காலம்..யூத்து என்று காட்ட எப்படியெல்லாம் கஷ்டப்படவேண்டி இருக்கு ;)

-தன்னை யூத் என்று காட்டிக்கொள்ள தமன்னா ரசிகராக மாறிய மாமா ஒருவருக்கு ;)



பாடல் கொஞ்சம் பழசாப் போனாலும், எப்போது கேட்டாலும் ஒரு உற்சாகம் மனசுக்குள் துள்ளும் :) அடடா - சந்தோஷ் சுப்பிரமணியம் 



தைரியமுள்ளவனுக்குத் தான் ஒவ்வொரு நாளும் வாழ்க்கை - ரௌத்திரம் படத்தில் பிடித்த வசனங்களில் ஒன்று

அண்ணனும் தம்பியும் விட்டுக் கொடுக்காமல் வஞ்சனையில்லாமல் வாங்கிக்கட்டுகிறார்கள்..  



வெயில் நாட்களில் கேட்கும்போதே மனதில் மழைகொண்டுவரும் பாடல்.. இப்போது மழை கொட்டும் நாழி.. வாவ்.. மனதுள்ளேயும் அடை மழை. #நீ கோரினால் - 180




ஆசையாய் பாட்டுக் கேட்டுக்கொண்டிருக்கும் நேரம் 5 மௌன அழைப்புக்கள். ஹெலோ சொன்னால் சத்தம் மறுமுனையில் இல்லை. கடுப்பேத்திறாங்க யுவர் ஆனர்.




அவசரகாலச் சட்டம் நீக்கியாச்சு.. அடுத்து இனி? எது சேரும், எது நீங்கும்? எது காணாமல் போகும்? 


சில சொற்களின் உண்மையான வலிமை சொல்லப்படும் விதத்திலும் சொல்வோரின் தகமையிலும் சொல்லப்படும் இடத்திலும் தங்கியிருப்பதை உணர்கிறேன்


அடப் பாவிகளா.. ER போனாலும் PTA இருக்கும் போல இருக்கே.. அப்போ ஒரு மாற்றமும் இல்லையா? எல்லாம் தேர்தல் செய்யும் வேலை 


எப்போதோ பலியான ஒருவருக்காக இப்போது உயிருக்காக மன்றாடும் மூவரைத் தூக்கிலிடுவது எப்போதும் ஏற்கத்தக்கதல்ல.. 

அகிம்சையின் தேசம் அகிம்சையையும் மதிக்கவில்லை; ஆயுளையும் மதிக்கவில்லை; மகாத்மாவின் தேசத்தில் மனிதாபிமானம் இனியாவது? 

 நல்லூருக்கும் கொழும்புக்கும் வெகு தூரம்; அதைவிட எனக்கும் பக்திக்கும் தூரம். அரோகரா ;)


நல்லூர் தேருக்கு போகவில்லையா என்று கேட்ட ஒருவருக்கான பதில்.. 


ஒரு பக்கம் மூவர் உயிர்கள் ஊசலாடிக்கொண்டிருக்க, மறுபக்கம் எம்மவர்கள் மங்காத்தாவுக்கும் வேலாயுதத்துக்கும் காவடி தூக்குகிறார்கள் #தமிழன்டா


எமக்கு விருப்பமானதை நாம் செய்யலாம். முக்கியமான விடயங்களுக்கு ஒரு முனகலாவது எம்மிடமிருந்து வெளிவந்த பிறகு #சமூகக்கடமை 



இப்போதைக்குத் தூக்கு இல்லை என்பதால் ஆறுதல் அடைவோம் நாம். ஆனால் இனி நாம் மறந்துபோக தூக்குக் கயிறுகள் மெதுவாக முறுக்கேற ஆரம்பிக்குமோ? :(

ஒரு உயிர்த்தியாகமும் மக்களின் ஒன்றுபட்ட திரட்சியும் தூக்கைத் தள்ளிப் போட்டுள்ளன.. செங்கொடிக்கு அஞ்சலிகள்.. நண்பர்களுக்கு நன்றிகள்.

பருத்தித்துறையிலிருந்து யாழ் நோக்கிப் பயணம் செய்யும் இந்த அரை மணி நேரத்தில் இப்போது தான் முதலாவது பேரூந்து கண்டேன். #நல்ல சேவை


அப்பராகிப் போனார் எங்கள் அப்பர். கோவில் கதவு மூடியதால். மூன்று மணிக்குத் தான் திறக்குமாம். கதவு திறக்கப் பாடியும் பயனில்லை

சிறு வயதில் உருண்டு, தவழ்ந்த ஞாபகங்களை மனைவி, மகனோடும் அம்மா அப்பா , தம்பியோடும் மீட்பதில் நேரம் கரைகிறது 


தோட்டத்துக் கிணற்றில் இறைத்த தண்ணீரில் மகன் ஆனந்தமாகக்குளிக்கிறான் . மனதில் இருபத்தைந்து வருடத்துக்கு முந்திய ஞாபகக் குளிர்மைகள்....


என்ன பாவம் செய்துதோ கூகிளும் தமிழும்

இணையத்தில் தமிழை ஏற்றப் படாதபாடு பாடும் ஒரு அர்ப்பணிப்புள்ள கூட்டம்.. இன்னொரு கூட்டம் விஜயையும் அஜித்தையும் வைத்து /மொழிபெயர்த்து' படுத்துதுகள்..
என்ன பாவம் செய்துதோ கூகிளும் தமிழும்
#
googleTranslate



கண்ணைக் கட்டிக் கொள்ளாதே - இருவர் ... நேற்றைய நாளின் நிஜப் பிரபலம் - சீமான் (நேயர் தெரிவு), உங்கப்பனுக்கும் பே பே-ராஜா சின்ன ரோஜா.. 

எல்லாம் தானா வருது ;) #நான் அப்பாவி 
7 Sep 
யார் பாடிக் கேட்டாலும் இந்தப் பாடல் மனதைத் தொடுகிறதே.. என்ன மாயம்? #மலரே மௌனமா  female version  


வேலாயுதம் பாடல்கள் கேட்க நல்லாத் தான் இருக்கு.. பார்க்க எப்பிடியோ? ;)  

 
அடி கெழக்கால - நாட்டுப்புறப்பாட்டு .. அருண்மொழி பாடிய பாடல்களில் பாடகியின் குரலுக்காகவும் பிடித்த ஒரு பாடல் என்று இதைச் சொல்வேன் 



காதல் பாடல் ஒன்றில் 'பன்றி' பற்றி சொன்னது மங்காத்தாவில் மட்டும் தான் போலும்.. வாடா பின் லேடா.. கவிஞர் - வாலி வாழ்க #அவதானிப்பு



ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner