Showing posts with label கதை. Show all posts
Showing posts with label கதை. Show all posts

February 27, 2014

விராட் கோளியின் மணிக்கூடு


காலை சூரிய ராகங்களின் பிறகு சாப்பாட்டு அறையில் வீட்டிலிருந்து கொண்டு வந்த ரொட்டியைப் பிய்த்து போராடிக் கொண்டிருக்கும் நேரம், கஞ்சிபாயின் தொலைபேசி அழைப்பு..

நேற்றைய விருதுகள் - பரிந்துரைப்பு பற்றி ஏதாவது மேலதிக சந்தேகம் கேட்கப் போகிறாரோ என்று யோசித்துக்கொண்டே "ஹெலோ" சொன்னேன்...

"இண்டைக்கு சுஜாதா நினைவு தினம் தானே?" தெரிந்துகொண்டே மீண்டும் கேட்கும் அதே கஞ்சிபாய்த்தனம்.

"அதான் காலையிலேயே சொன்னேனே? ஏன்? சுஜாதா பற்றி ஏதாவது விசேஷமா விஷயம் இருக்கா?"

"சீச்சீ.. சும்மா தான்.. சாப்பிடுறீங்க போல?" 

"ம்ம்ம். பசிக் கொடுமை அய்யா. அப்புறம்?" வைக்கமாட்டாரா என்ற அங்கலாய்ப்புடனும் வாயில் மென்று கொண்டிருக்கும் ரொட்டியுடனும் நான்.

"நேற்று இரவு award functionல இருந்தபடியா விராட் கோளிட அடி பார்த்திருக்க மாட்டீங்க என்ன?"

"இல்லை கொஞ்சம் கொஞ்சம் பார்த்தேன்... செம form. அணியைத் தனிய நிண்டு தாங்குறான் போல இருக்கு"



"தோனி fansக்கெல்லாம் நல்ல நோண்டி என்ன? இனி கோளி தான் தொடர்ந்து கப்டன். இந்தியா இனி உருப்படும். நீங்க என்ன சொல்றீங்க?" ஸ்ரீனிவாசன் இதைக் கேட்டால் என்ன சொல்வாரோ என்றெல்லாம் யோசிக்காமலேயே கஞ்சிபாய் அள்ளிக் கொட்டிக்கொண்டிருந்தார்.

விளக்கம் சொல்லி வேலையும் இல்லை, கஞ்சிபாய் விளங்கிக் கொள்ளும் 'கிரிக்கெட் ரசிகரும்' இல்லை என்பதை விட அகோரப் பசியுடன் வாயில் இருந்து வயிற்றுக்குள் அவசரமாக தாவிக்கொண்டிருந்த ரொட்டிகள் சொல்ல விடாமல்,

"ம்ம் பார்ப்போம் பார்ப்போம் அடுத்த போட்டிகளில்" என்று சொல்லி வைத்தேன்.

"அதுசரி, கோளியோட பாகிஸ்தான்காரங்கள் ரெண்டு பேரை ஒப்பிட்டு எதோ tweet பண்ணீங்களாம்" அதே கஞ்சிபாய்த்தனம்.

"ஓமோம்.. அனேக shots, aggression, அடித்தாடுற நேரம் உறுதி, timing  எல்லாம் ஒரே மாதிரி தான் எனக்குத் தெரியுது"

"ஆனா கோளிய நெருங்க முடியாது.அடுத்த சச்சின் கோளி தான்" உறுதியாக கஞ்சிபாய் என்னை இப்போதைக்கு பசியாற்ற விடமாட்டார் என்று தெரிஞ்சு போச்சு.

"அப்பிடியா?" கஞ்சிபாயின் பதில் நீ......ளமா வாறதுக்கு இடையில் இன்னும் ரெண்டு ரொட்டித் துண்டுகளை சம்பலில் தொட்டு வயித்துக்கு அனுப்பலாம் என்று இந்தக் கொக்கி.

"பின்ன? என்ன அடி.. அசுர அடி. அவர்ட்ட battingகு கிட்ட அவனும் இல்ல. அடுத்த Mr.Cricket. லோஷன், நேற்று match பார்த்திருந்தீங்கன்னா விளங்கி இருக்கும்"

"ம்ம்ம் பார்த்தேன் சில shots. பார்த்தவரைக்கும் நேற்று கோளிட Timing சூப்பர்" உண்மையாக நேற்று ரசித்த கோளி இன்னிங்க்ஸை பாராட்டினேன்.

"அட ஆமா... அதான் அவர் அடிக்கடி கையில் கட்டியிருந்த கடிகாரத்தைப் பார்த்து பார்த்தே batting செய்துகொண்டிருந்தார்"

தொண்டைக்குள்ளிருந்த ரொட்டி சளேர் என்று நேரே வயிற்றுக்குள் விழ, காதில் சரித்து வைத்திருந்த மொபைல் சரிந்து சம்பல் அப்பிக்கொண்டது.

---- 
கஞ்சிபாய் என்பதை வேறு யாராவதாக பிரதியீடு செய்துகொண்டால் பதிவர் பொறுப்பாளியல்ல.
உருவகக் கதையாக இதை நினைத்தாலும் பதிவர் பொறுப்பெடுக்க மாட்டார்.
மனைவி சம்பலுக்கு சேர்த்த உப்பு, ரொட்டிக்கு சேர்த்த தேங்காய்ச் சொட்டு போல உண்மை சம்பவத்தில் கொஞ்சம் மேலதிக சுவை சேர்க்கப்பட்டது.


January 30, 2014

புதிய உலகம் தேடி இமான் & புதிய முயற்சியில் புரட்சி படைக்கும் எம்மவர்

இமானின் இசையில் வைக்கம் விஜயலக்ஷ்மி பாடிய " புதிய உலகை புதிய உலகைத் தேடிப் போகிறேன் என்னை விடு " பாடல் பற்றி சிலாகிக்காதோர் கிடையாது.

 கடந்த வார இறுதிகளில் தான் இந்தப் பாடலோடு முழுமையாக மூழ்கும் வாய்ப்புக் கிடைத்தது.

கானா.பிரபா அண்ணன் முழுமையாக  இந்தப் பாடல் பற்றி முத்துக்குளித்த பிறகு, அந்த ரசனை அப்படியே நான் பெற்ற உணர்வை மொழிபெயர்த்து இருக்கையில் புதுசா என்ன சொல்ல இருக்கு?

கேட்டதில் இனித்தது : புதிய உலகை புதிய உலகைத் தேடிப் போகிறேன் என்னை விடு

ஆனாலும் இந்தப் பாடலை நேற்று  சூரிய ராகங்களில் ஒலிபரப்பியபோதும் இன்று நட்சத்திரப்  பாடலாக இது வரை இரு தடவைகள் முழுமையாகக் கேட்டபோதும் ஒரு வித கட்டிப்போட்ட உணர்வு....

அந்த வித்தியாசமான குரல், பின்னணி இசை, இடையே மீட்டும் வீணையும் (மூன்றாம் பிறையின் கண்ணே கலைமானே வயலின் பிழிந்து தரும் சோகம் போலவே ) மட்டுமல்ல, இவை தாண்டி கார்க்கியின் வரிகள் தருகிற உணர்வுகள் இளகச் செய்கின்றன மனதை.

பாடகியின் நிஜ வாழ்க்கையின் சில பக்கங்களையும் உருவினால் போல, வரிகளும் இசையும் விஜயலக்ஷ்மியின் நெகிழ்ச்சியான குரலில் இழையோடுவதும் பாடலில் நாம் உருகிப்போக ஒரு காரணமாக இருக்கலாம்.

ஆனால் மாற்றுத் திறனாளிகள் மேல் பரிதாபம் கொள்ளாமல் அவர்களது அதீத திறமைகளை மதித்து கௌரவிப்பதும் பாவம் பார்த்து ரசிக்காமல் அனுபவித்து ரசிப்பதுமே தலையாயது என எண்ணுபவன் நான்.
அந்த வகையில் இவர் குரலில் இன்னும் பல பாடல்களை காத்து எதிர்பார்க்கிறது.



ஏதோ எங்கள் வாழ்க்கையில் நாம் சில பாகங்களின் உணர்வுகளையும் கடந்து வந்த சில வந்த சில ரணங்களையும் இன்பமாகக் கிளறி ஞாபகப்படுத்துகிறது.


"ரணங்களை வரங்களாக்கினாய்

தோளில் ஏறினாய்

எனை இன்னும் உயரமாக்கினாய் ​"

"யாரும் தீண்டிடா இடங்களில்

மனதைத் தீண்டினாய்

யாரும் பார்த்திடா சிரிப்பை

என் இதழில் தீட்டினாய்

உன் மனம் போல விண்ணில் எங்கும் அமைதி இல்லை என்றேன்

உன் மனம் இங்கு வேண்டாம் என்று பறந்து எங்கே சென்றேன்

வேறோர் வானம் வேறோர் வாழ்க்கை என்னை ஏற்குமா ​"

கார்க்கி யாரும் சேர்க்கா இடங்களில் எங்களைத் தன் கவித்துவப் பாடல் வரிகளில்  கொண்டு சேர்க்கிறார்.
புதிய வார்த்தைகள் மட்டுமல்ல, இதுவரை பிரதிபலிக்காத புதிய உணர்வுகள் கூட.


கார்க்கி ​ ​எழுதும் பாடல்களை நான் எந்திரன் முதல் ரசித்து வருகிறேன்.
மற்றக் கவிஞர்களை விட இவரது பாடல்களுடன் கொஞ்சம் அதிகமாக மனசு நெருக்கமாகி லயிப்பதற்கு ஒரு முக்கிய காரணமாக நான் உணர்வது, ஏனைய பாடல்கள் எமக்குள்ளே நுழைந்து எம்மை உணரச் செய்து உருக்கும்.
ஆனால் கார்க்கியின் பாடல்கள் எமது உணர்வுகளைப் பிரதிபலிப்பது, ஏதோ நாமே அந்தப் பாடலை எழுதியது போல, நாமாக மாறி கார்க்கி அந்தப் பாடல்களை எழுதியிருப்பார்.

முன்பும் சில கார்க்கியின் பாடல்கள் பற்றி நான் எனது பதிவுகளில் சிலாகித்திருக்கிறேன்.

சில காலமாக நான் விவரித்து சிலாகிக்காத கார்க்கியின் பாடல்களில்
முட்டாளாய் - என்னமோ ஏதோ
பிறந்தநாள் பாடல் (ஏன் என்றால் உன் பிறந்தநாள்) - இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா
நெகிழி - நிமிர்ந்து நில்
வானெங்கும் - என்றென்றும் புன்னகை
அகலாதே அகலாதே - சேட்டை
அடியே... அடியே என்ன எங்க நீ கூட்டிப் போற - கடல்
ஆகிய பாடல்களின் சில வரிகளாவது முணுமுணுக்க வைத்து, சிலிர்க்க வைத்தவை.

இந்த வைக்கம் விஜயலக்ஷ்மி பாடிய "புதிய உலகை புதிய உலகைத் தேடிப் போகிறேன் " பாடல் பற்றி தனது தளத்தில் கார்க்கி
மகனைப் பிரியும் தாயின் குரல், காதலனைப் பிரியும் காதலியின் குரல்! என்கிறார்.


அண்மையில் பத்ம பூஷன்  பெற்ற தந்தை போல் அதிகம் வர்ணனை இல்லாமல், வாழ்க்கையோடு வார்த்தைகளை இயல்பாக, ஆனால் உருக்கமாகக் கோர்க்கிறார் கார்க்கி.

அடுத்து இமான், சுருங்கச் சொல்வதாயின் தமிழில் அண்மைக்காலமாகத் தொடர்ந்து ஜனரஞ்சகப் பாடல்களைத் தந்துவரும் இரண்டு இசையமைப்பாளர்கள் ஹரிஸ் ஜெயராஜ் & D.இமான்.

இதில் ஹரிஸ் கேட்ட தன் மெட்டுக்களையேமீண்டும் அரைத்துத் தருபவர்.

ஆனால் இந்த அமைதியான இமான் நான் முன்பொரு இடுகையிலே சொன்னது போல மனதுக்கு நெருக்கமான மெட்டுக்களால் மைனா, கும்கி, மனம் கொத்திப் பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்று வரிசையாக வித விதமாக விருந்து படைத்துக் கொண்டேயிருக்கிறார்.

விஜய்யின் ஜில்லாவிலும் கூட கண்டாங்கி மனதை சுண்டி இழுக்கிறது.
கும்கியில் அய்யய்யோ வயலினும், விரசாப் போகையிலே விசிலும் எப்போது கேட்டாலும் காற்றில் மிதக்கச் செய்பவை.

ரம்மியின் கூடை மேலே, வருத்தப் படாத வாலிபர் சங்கத்தின் பார்க்காதே பார்க்காதே , தேசிங்கு ராஜாவின் ஒரு ஓர ஓரப் பார்வை, 3 வருடங்களுக்கு முன்னர் வெளிவந்தாலும் இன்னும் மனதில் நிற்கும் தம்பிக்கோட்டையின் உனக்காக உயிரை வைத்தேன் ஆகிய பாடல்களும்  எப்போது கேட்டாலும் உயிர் அள்ளக் கூடியவை.

என்னைக் கேட்டால் அண்மைய நாட்களில் வித்யாசாகர் இல்லாத தமிழ்த் திரைப்படப் பாடல்களின் இடைவெளியை இமான் தான் நிரப்புகிறார் என்பேன்.
வித்யாசாகர் போலவே வித்யாசாகர் விட்ட பின் அர்ஜுனோடு ஆஸ்தான இசையமைப்பாளராக இணைந்துகொண்ட இமான் கேட்பவர் அத்தனை பேருக்குமே வஞ்சகம் இல்லாமல் நல்ல, வெற்றிகர இசையை வழங்கி வந்திருக்கிறார்.

தன் முத்திரை பதிக்கும் மெலடி பாடல்களில் ஒன்றையாவது ஒரு படத்தில் அழுத்தமாகப் பதிப்பதிலும் D.இமான் ஒரு புதிய வித்யாசாகர் தான்.
ரஹ்மான், ஹரிஸ் ஜெயராஜ், யுவன் , G.V.பிரகாஷ் குமார் ஏன் தேவி ஸ்ரீ பிரசாத், இப்போது எப்படியெல்லாம் விளம்பரம் பண்ணி தனக்கான வெளிச்சம் காட்ட முடியுமோ அப்படியெல்லாம் தனக்கு முகவரி தேடும் அனிருத் போல கூட இல்லாமல் தானுண்டு தன்  இசையுண்டு என்று அமைதியாக அசத்தி வரும் இமானின் இசைப்பயணம் இன்னும் இனிமையாகவும் ஏற்றமாகவும் அமையட்டும்.

'பெரிய' ஹீரோக்கள் இவரையும் இன்னும் கொஞ்சம் பார்க்கட்டும். வித்யாசாகர் மாதிரியே இவரும் காணாமல் போய்விடக் கூடாது.

--------------------------------------
இந்தப் பாடல் போலவே, நான் நண்பர் வட்டாரத்தில் சிலாகித்த, ஏன் நண்பர்கள் அண்மைக்காலத்தில் சிலாகித்த இரு நம்மவர் முயற்சிகள் பற்றி நீண்ட நாள் எழுதவேண்டும், பதியவேண்டும், பலரோடு பகிரவேண்டும் என யோசித்திருந்தேன்.
ஆனால் வழமையான பஞ்சியும், ஏதாவது கவனக் கலைப்பானும் நேரத்தைத் தின்று விடும்.
இமானின் பாடலை ரசித்துகொண்டே இருந்த சனி, ஞாயிறுகளில் இவ்விரு விடயங்களின் பகிர்வு + பரம்பலின் அவசியம் மனதில் நின்றது.

1. கதை ஒளி

ஈழத்தில் மட்டுமல்ல உலகெங்கும் தமிழர் வாழும் இடங்களில் இப்போது அருகி வரும் கதை சொல்லும் கலையை தம்மால் முடிந்தளவு அழகாகவும், இளைய தலைமுறையை ஈர்க்கும் விதமாகவும் கொண்டு செல்லும் ஒரு ஹைடெக் முயற்சி.

ஒரு Facebook குழுமமாக ஆரம்பித்த முயற்சி.
கதை சொல்லடா தமிழா

ஞானதாஸ் காசிநாதர் என்ற நண்பர் என்னையும் ஒரு மூன்று வருடத்துக்கு இந்த Facebook குழுமத்துக்குக் கதையொன்றை அனுப்புமாறு கேட்டார்.
ஹீ ஹீ.. இன்னும் அனுப்புகிறேன்.

ஆனால் அவர்கள் இப்போது Youtubeஇல் காணொளியில் கதை சொல்லும் நவீன முயற்சியில் இறங்கி பெரிய வெற்றியையும் வரவேற்பையும் பெற்றுள்ளார்கள்.
கதை ஒளி

இது எதிர்கால, தமிழ் பேச, கேட்க மட்டுமே தெரிந்த ஒரு புலம்பெயர் தமிழ்ச் சிறுவர் சமுதாயத்துக்கு தமிழை அறிய பெரும் உதவியாக இருக்கப் போகிற விடயம்.
தமிழ் சூழலில் இந்த முதன் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

இந்தக் கதைகளில் தரம், தராதரம் என்பதையும் தாண்டி நான் ரசிப்பது சொல்லப்படும் கதைகளின் பல்வகைமை, சொல்லப்படும் மொழி வழக்குகளின் பல்வகைமை, அது போல அவர்கள் பல தரப்பட்டவர்களையும் அழைத்துக் கதை சொல்லச் சொல்வது அனைவருக்கும் தன்னம்பிக்கை தரக் கூடிய ஒன்று.

கதை ஒளி குழுவினருக்கு வாழ்த்துக்கள்.

இன்னும் பெரிதாக இம்முயற்சி எதிர்காலத்தில் விரிவடையும் என்று மனம் சொல்கிறது.

2. இலங்கைக் கலைஞன்

எங்கள் கலைஞர்களை, கலைப் படைப்புக்களை யாரும் கவனிக்கிறார்கள் இல்லை; கைதூக்கி விடுகிறார்கள் இல்லை என்று புலம்பல் (ஓரளவு நியாயமானதே) பல பக்கங்களிலும் சதா ஒலித்துக்கொண்டேயிருக்கும்.
சும்மா புலம்பி விட்டு, ஊடகங்களனைத்தையும் திட்டித் தீர்த்து விட்டு, தாமுண்டு தம் வேலையுண்டு என்று முடங்கி விடாமல், நாமே நம்மை உருவாக்குவோம், உயர்த்துவோம், தரமுயர்த்துவோம் என்று ஒரு இளைய தலைமுறை புறப்பட்டிருகிறது.

இலங்கைக் கலைஞன் என்ற இணையத் தள அறிமுகம் தற்செயலாக Facebook மூலம் கிடைத்தது.
3 மாதங்களில் எத்தனையோ இலங்கைக் கலைஞர்களையும் படைப்புக்களையும் இவர்கள் வெளியே கொண்டுவந்திருக்கிறார்கள்.

பேட்டிகள்,அறிமுகங்கள், விமர்சனங்கள் என்று சாதிக்கத் துடிக்கும் இளையவர்களுக்கு நம்பிக்கை ஒளியைக் காட்டுகிறது இலங்கைக் கலைஞன்.

இன்னும் இன்னும் இலை மறை காயாக இருக்கும் இலங்கை, புலம்பெயர் கலைஞர்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் முயற்சி தொடரட்டும்.

இந்தத் தளம் மூலம் உங்களுள் இருக்கும் கலைஞர்களும் படைப்பாளிகளும் வெளிவரட்டும்.



May 17, 2012

நல்ல வடிவா எழுதுங்கப்பா #ஹர்ஷு

ஹர்ஷு


"எனக்கு போர் அடிக்குது அப்பா.. என்னோட விளையாட வாங்களேன்.." சரியாகக் களைத்து விழுந்து வீட்டுக்கு வரும் என்னை ஹர்ஷு எக்கச்சக்க ப்ளீஸ் போட்டு அழைக்கும்போது தட்ட முடிவதில்லை. அதுவும் இந்த IPL ஆரம்பித்த பிறகு ஒன்பது அணிகளின் பெயர்களையும் மனப்பாடமாக சொல்லிச் சொல்லியே, தான் ஒரு அணி, நான் ஒரு அணிஎன்று பந்து வீசச் சொல்லித் தான் துடுப்பெடுத்தாடுவதும், பின் தான் வீசும் பந்துகளுக்கு ஆட்டமிழக்கச் சொல்வதும் நாளாந்தம் நடப்பவை. 

ஒரு நாள் சரியான களைப்போடு சொன்னேன் "ஹர்ஷு, அப்பாக்கு கொஞ்ச வேலை இருக்கு.. நீங்க ஒருநாளைக்கு உங்கட பிரென்ட்சைக் கூட்டிக்கொண்டு வந்து 
விளையாடலாமே"

உடனே பதில் வந்தது சலிப்புடன் " இல்லையப்பா அவங்கல்லாம் சரியான பிசி.. வர மாட்டாங்க"

எனக்கு சிரிப்பும் வந்துவிட்டது .. "அப்படி என்னடா அவங்களுக்கு பிசி?" 

"இல்லையப்பா ஸ்கூல்ல (நேர்சரி) நிறைய எழுத்து வேலை குடுக்கிறாங்களே.. English writing, Tamil hand writing எண்டு அப்பா... அவங்க பாவம்" 

அட.. என்று நினைத்துக்கொண்டே " அப்போ உங்களுக்கு? நீங்க எல்லாம் முடிச்சிட்டீங்களா?" என்று கேட்டேன்..
"இல்லையப்பா... அதெல்லாம் விளையாடி முடிச்ச பிறகு தானே செய்யலாம்.. அது study timeல தானே"

ம்ம்ம்ம்... நாலரை வயசில கதைக்கிற கதையைப் பாருங்களேன்.. 
இப்போதெல்லாம் என்னை விட அவன் தான் IPL அட்டவணையை எல்லாம் சரியா ஞாபகம் வைத்திருக்கிறான். 


ஹர்ஷுசென்னை சுப்பர் கிங்க்சின் தீவிர ஆதரவாளன். சென்னை அல்லது அவன் ஒரு நாளில் ஆதரவளிக்கும் அணி தோற்றுவிட்டால் கொஞ்சம் அப்செட் ஆக இருப்பான். நான் "இதெல்லாம் சும்மா விளையாட்டுத் தானே அப்பன்.. இன்றைக்குத் தோற்றால் நாளைக்கு வெல்வார்கள்" என்று சொல்லி சொல்லி இப்போ 
"அப்பா இண்டைக்கு சென்னை தோத்தா நான் கவலைப்பட மாட்டேனே.. நான் இப்போ Big Boy தானே.. its just a game தானே"என்கிறான்.


---------------------------

அன்றொரு ஞாயிற்றுக்கிழமை... எந்தவொரு வேலையும் வைத்துக்கொள்ளாமல் வீட்டிலிருக்கும் நாள் என்பதால் ஹர்ஷுவுடன் அவன் ஆசைப்படும் விளையாட்டு எல்லாம் விளையாடி அவனைக் குஷிப்படுத்துவது வழக்கம்.
திடீரென்று கேட்டான் "அப்பா நாங்க சண்டைப்பிடிப்போமா? நான் விஜய் நீங்க வில்லன் ஓகேயா?"
சரி என்று சொல்லி முடிக்க முதல் சரமாரியாக தன் பிஞ்சுக்காலாலும்கையாலும் மெத்து மெத்து என்று மொத்த ஆரம்பித்தான்.. 

நான் சும்மா விழுவது போல நடிக்க, "வில்லன் வில்லன், ப்ளீஸ் கொஞ்சம் இங்கே வெயிட் பண்ணுங்கோ, நான் என்டை கண்ணை (Gun) எடுத்துக்கொண்டு வந்து உங்களை ஷூட் பண்றேன்" என்று தனக்கேயுரிய மழலையில் சொல்லிவிட்டு ஓடினான்.

---------------------
அசதியாக, வசதியாக சோபாவில் சாய்ந்துகொண்டே கிரிக்கெட் போட்டி பார்த்துக்கொண்டிருந்தேன்.. இவன் கிரிக்கெட் விளையாடுகிறேன் என்று சொல்லி ஓடி வந்து எனக்கு மேலே விழுந்துகொண்டிருந்தான்.. எனது இரு கால்களினாலும் அமுக்கி ஆளைப் பிடித்துக்கொண்டே " You are under arrest" என்றேன்.
"I'm cricket player. Leave me" என்று பதிலுக்கு சொன்னான் ஹர்ஷு.


"So what?" என்று பிடியை விடாமல் நான் கேட்டேன்..
உடனே அவனிடமிருந்து பதில் " என்ன குற்றம் செய்தேன் நான்?"


-------------------------------
அன்றொருநாள் எனது மனைவி எதையோ காணவில்லை என்று முமுரமாகத் தேடி, கிடைக்கவில்லை என்றவுடன் கவலையுடன் புலம்பிக்கொண்டிருந்திருக்கிறார்.
பெரிய மனுஷத்தமாக நம்ம ஹர்ஷு சொன்னாராம் " விட்டுத் தள்ளுங்கம்மா.. எப்ப பார்த்தாலும் சும்மா யோசிச்சுக் கொண்டு"

எங்கே இருந்து தான் இதெல்லாம் பொறுக்கிறானோ...

---------------------------------

இப்போதெல்லாம் இவன் செய்யும் குறும்புகள் கொஞ்சம் அதிகமாகும்போது என் மனைவி கேட்பார் "ஹர்ஷுவின் இந்தக் குழப்படி பற்றி எழுதப்போறீங்களா?"
ஒருநாள் இவன் உடனே என்னைப் பார்த்து சொல்கிறான் " நல்ல வடிவா எழுதுங்கப்பா.. எல்லாருக்கும் சொல்லுங்கப்பா வாசிக்க சொல்லி"

இன்னும் வ(ள)ரும் ஹர்ஷு குறும்புகள்.... 

July 27, 2011

கதை சொல்லப் போறேன்....


கடந்த வெள்ளி விடியல் நிகழ்ச்சியை கதை சொல்லும் பாடல்களுடன், நேயர்களுக்கு மனது மறக்காத கதைகளையும் கேட்டு நடத்தி இருந்தேன்..
சிறுவயதில் கேட்ட, ரசித்த கதைகளைப் பல நேயர்கள் பகிர்ந்திருந்தார்கள்..
அம்புலிமாமா கதைகள், தெனாலி ராமன், பாட்டி-வடை-காக்கா- நரி கதை, முயல் - ஆமை கதை, அக்பர் - பீர்பால், தெனாலி ராமன், மகாபாரதம் என்று சிறு வயதுக் கதைகள் தான் ஏகப்பட்டவரால் சந்தோஷமாக நினைவுகூரப்பட்டிருந்தன..

நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே நம்ம பதிவர் யோகா ஒரு நெகிழ்வான கதையை ஆங்கிலத்தில் அனுப்பி இருந்தார்....


ஒரு தந்தையும் மகளும் நடந்து செல்லும் வழியில் (தெய்வத்திருமகள் வந்த பிறகு - முன்பு அபியும் நானும் தந்த அதே Feeling, இந்த தந்தை-மகள் உறவு ஒரு trend ஆகி இருக்கிறது) ஒரு தொங்குபாலத்தைக் கடக்கவேண்டி வருகிறது. 


அதன் மீது நடக்கும்போது மகள் பயந்துவிடுவாள் என்றெண்ணி, "என் கையைப் பிடித்துக்கொள்" என்கிறார் தந்தை.
"இல்லை அப்பா.. நீங்கள் என் கையைப் பிடிச்சுக் கொள்ளுங்கோ" என்கிறாள் அந்த 'நிலா'.
"நீ என் கையைப் பிடிப்பதற்கும், நான் உன் கையைப் பிடிப்பதற்கும் என்ன வித்தியாசம்?" கொஞ்சம் ஆச்சரியமாகக் கேட்டார் தந்தை.


"அப்பா, நாங்கள் பாலத்தில் நடக்கும்போது, தற்செயலாக விழுந்துவிட்டால், நான் உங்க கையைப் பிடித்திருந்தால் உங்க கையை நான் விட்டிட்டால் விழுந்திடுவேன்.. ஆனால் நீங்கள் என் கையைப் பிடித்திருந்தால் எப்பிடியும் விடமாட்டீங்க"
நம்பிக்கையோடு சொன்னாள் அந்த மகள்.

இந்த நம்பிக்கை தானே உறவுகளையும், நட்புகளையும் இணைத்து உலகை ஓட்டிக் கொண்டிருக்கிறது.
உறவுகள் ஒன்றையொன்று விடாது என்பதும், நாம் பிடிகளைத் தவறவிட்டாலும், அந்த உறவுகள் எம்மை விட்டு விலகாது என்ற நம்பிக்கை தானே வாழ்க்கை.

கதைகள் சொல்வதிலும் கேட்பதிலும் சிறுவயது முதலே அதீத ஈடுபாடு.. இதனால் தான் விடியலில் கதை சொல்லி சொல்லி காலத்தை ஓட்ட முடிகிறது. கஞ்சிபாயுடன் காலத்தை ரசிக்கவும் முடிகிறது.. பதிவுகளிலும் பொழைப்பைக் கட்ட முடிகிறது.

ஆனால் நல்ல கதை சொல்லியாக நான் இருப்பது இப்போது தான் அவசியப்படுகிறது..
(வானொலியில் நான் ஓரளவு நல்ல கதை சொல்லியாக நேயர்களால் ஏற்கப்பட்டிருக்கிறேன் என நம்புகிறேன்.. ஆனால் பதிவுகளில் எழுதும்போது அதே சுவாரஸ்யத்தைக் கொண்டுவருவது கொஞ்சம் கஷ்டம் என உணர்ந்தும் இருக்கிறேன். )
முன்பு பலருக்கும் கதை விட்ட, கதை சொல்லிக் கடத்திய காலம் மலையேறி, இப்போது சொல்லும் கதை செல்லுபடியாகவேண்டிய கட்டாய காலம்.
அதான்.. என் வீட்டுப் பெரியவர் ஹர்ஷுவுக்குக் கதை கதையாக சொல்லியாகவேண்டிய கட்டாயம்.

அந்தக் காலத்தில் எல்லாம் எங்கள் அப்பா,அம்மா சொல்கின்ற பாட்டி, வடை, நரி, முயல், பூனை, நாய் கதைகளை அப்படியே கேட்டுவிட்டு உம் போட்டு, தலையாட்டி பின் தூங்கி விடுவது தானே வழக்கம்..
ஆனால் இந்தக் காலம் அப்பப்பா.. நம்ம பாடு பெரும் கஷ்டம்..

ஹர்ஷு என்னிடம் சொல்லும் மிருகங்களை வைத்துத் தான் கதைகளை நான் உருவாக்க வேண்டி இருக்கும்..
அவன் கார்ட்டூன்களில் பார்த்த, படங்களில் கேள்விப்பட்ட மிருகங்களை எல்லாம் எங்கள் தூக்க நேரத்தில் கொண்டு வந்துவிடுவான்..

ஒரு நாள் டைனோசர் வரும்.. இன்னொருநாள் நீர் யானை வரும்.. இன்னொரு நாளோ அவனுக்கும் எனக்கும் பிடித்த Zebra - வரிக்குதிரை வரும்..
நானும் மனைவியும் நாங்கள் அறிந்த கதைகளில் இவற்றைப் பிரதியிட்டு கொஞ்சம் புதிய முலாம் பூசி ஒப்பேற்றிவிடுவோம்..

கோடரிக் கதை எல்லாம் கொஞ்சம் என்ன நிறையவே புதுசாக்க வேண்டி இருக்கும்..
அத்துடன் நவீன சாதனங்கள், Laptop, Mobiles, planes, etc.. நவீன விஷயங்கள் எல்லாம் சேர்த்து தாளிக்க வேண்டி இருக்கும்..
இடையிடையே "தெய்வத்திருமகளில்" நிலா கேட்டவை போன்ற குறுக்குக் கேள்விகளுக்கும் பதில் சொல்லியே ஆகவேண்டும்...

பத்து, பதினோரு மணிக்கு ஆரம்பிக்கும் கதை கேட்கும், சொல்லும் படலம் சில சமயம் நள்ளிரவு தாண்டியும் செல்லும்.. எனக்கோ அடுத்த நாள் அதிகாலை 5 மணிக்கு வேலைக்கு எழும்பவேண்டும்..
வேலை அலுப்பும் தூக்கக் கலக்கமும் கண்ணை சுழற்றினாலும் அவனை ஏமாற்றிவிடக் கூடாது என்பதற்காக ஏதோ ஒரு கதையையாவது சொல்லிவிட்டே தூங்க செல்வது வழமை....

சிலவேளை சினிமாக் கதைகளை மிருகங்களை வைத்துப் பிரதியிட்டும் சமாளிப்பதுண்டு.. அதிலே குரங்கு தனுஷ் போல அரிவாள் எடுக்கும், சிங்கம் சூரியா போல பஞ்ச் பேசும்.. குதிரை விஜய் போல வில்லனுக்குப் பாய்ந்து பாய்ந்து அடிக்கும்..
ஹர்ஷுவுக்கு இப்படியான கதைகள் என்றால் பாகங்கள் பல போனாலும் கவலை இல்லை.
ஆனாலும் கடைசியாக ஒரு நீதி சொல்லி முடித்துவைப்போம்..

ஒரு நாள் திடீரென்று அதிகாலை 2 மணிபோல தூக்கத்திலிருந்து என்னை எழுப்பி "அப்பா முயல் கதை சொல்லுங்கோ" என்றான்..
கண்ணைத் திறக்க முடியாத அசதியுடன், ஏதோ ஒரு முயல் கதை சொல்லிக் கொண்டிருந்தேன்.. அந்தக் கதையில் முயல் ஒரேஞ் சாப்பிடுவதாக உளறிவிட்டேன்..
அந்த நேரத்திலும் அலெர்ட்டாக "அப்பா ரபிட் ஒரேஞ் சாப்பிடாது.. கரட் தான் சாப்பிடும்" என்றவன் குட் நைட் சொல்லிவிட்டான்..
அதுக்குப் பிறகு எனக்கு தூக்கம் போச்சு.
அட முயல் ஒரேஞ்சைத் தேடித் போகுதே... ஹர்ஷுவிடம் இதைக் காட்டத் தான் வேணும்..

இன்னொரு நாள் நல்ல அசதியாக மூவரும் தூங்கத் தயார்.. மனைவி காய்ச்சல் என்று படுத்தவுடன் தூங்கி விட்டார், எனக்கும் கண்கள் சொருகிக் கொண்டு வருகையில், "அப்பா எனக்கு டைனோசர், ஜிராப்(Giraffe - ஒட்டக சிவிங்கி) கதை சொல்லுங்கோ"
ஹர்ஷுவின் குரல்..
வாயசைக்கவே சோம்பலாக இருக்கும் நேரம் கதையா?
கடுப்பைக் காட்டிக் கொள்ளாமல்.. கண்ணை மூடிக்கொண்டே..
"ஒரு ஊரில ஒரு டைனோசரும் ஜிராபும் இருந்துதாம்.. ஒரு நாள் டைனோசருக்கு பயங்கரப் பசியாம்.. ஜிராபைப் பிடிச்சுத் திண்டுட்டுதாம்.. கதை முடிஞ்சுதாம்"



அவன் தன் மழலை மனதுக்குள் எப்படித் திட்டினானோ தெரியவில்லை.. "ஐயோ அப்பா எனக்குக் கதை வேணும்.. இது கதை இல்லை" என்று கொஞ்சம் முணுமுணுத்தான்.. தூங்கி விட்டான்..

இதுக்கு பதிலடி இவ்வளவு சீக்கிரம் விழும் என்று நான் நினைக்கவில்லை..

அண்மையில் ஒரு நாள் இரவு வழக்கம் போல அவன் என்னிடம் கதை கேட்க, "இண்டைக்கு ஹர்ஷு எனக்கொரு கதை சொன்னால் தான் நான் சொல்வேனாம்"  என்று சொன்னேன்.
வழமையாக முடியாது என்று சொல்பவன் " ஓகே அப்பா" என்று உற்சாகமாகத் தொடங்கும்போதே நான் நினைத்திருக்கவேண்டும்..

"ஒரு ஊரில் ஒரு சிங்கமும், குதிரையும் இருந்துச்சாம்.. சிங்கத்துக்குப் பசி வந்துதாம்... குதிரையைக் கடிச்சு சாப்பிட்டுதாம்.. கதை முடிஞ்சுது.. இப்ப நீங்க பெரீய கதை சொல்லுங்கோ"

ம்ம்ம்ம்.. இபோதும் இந்தக் கதைகள் இரவுகளில் எங்கள் வீடுகளில் நடந்துகொண்டு தானிருக்கு..
கதைகளின் ஸ்டொக் முடியாது என்ற நம்பிக்கையுடன்..
கொஞ்ச நாளில் கஞ்சிபாய் கதைகளையும் சொல்ல ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன்.

June 28, 2011

அவன் - இவன்



விளிம்பு நிலை மனிதர்களை தமிழ் சினிமாவில் காட்டும் வெகு சில இயக்குனர்களில் ஒருவரான பாலா எதிர்பார்க்கவைத்துத் தந்துள்ள புதிய படம்.
வழமையாக எந்த ஒரு திரைப்படத்தினதும் கதையை நான் என் பதிவுகளில் சொல்வதில்லை. எனினும் மனதில் இருந்த எண்ணத்தினைப் பகிர்ந்துகொள்வதற்காக கதைச் சுருக்கத்தைப் பதிவாகவே இட்டுவிட்டேன்.


ஹைனசும்,அவனும் இவனும் - ஞாபக அலைகள்



(எனினும் விமர்சனப் பதிவில் கதை சொல்வதில்லை என்ற கொள்கை நீடிக்கிறது.. )

சினி சிட்டி அரங்கில் கவனித்த ஒரு விஷயம்.....
எழுத்தோட்டங்கள் காட்டப்பட்ட போது, பாலா, ஆர்யா, சூர்யா,யுவன் ஷங்கர் ராஜா ஆகியோருக்குக் கிடைத்த கரகோஷங்களுக்குக் கொஞ்சம் குறையாமல் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரத்துக்கும் கிடைத்தது தான்.. அது ஏன்? அல்லது எப்படி?

ஒரு கிராமம். ஒரு அரண்மனை. அங்கே ஒரு அப்பாவி,பந்தா ஜமீன்தார் ஹைனஸ் (ஜி.எம்.குமார்)
அவரது அடியாட்கள்,நண்பர்கள், வளர்ப்புப் பிள்ளைகள் போன்றவர்கள் - கொஞ்சம் அரவாணி போன்ற தோற்றமும் கலைஞன் ஆகின்ற கனவோடும் திரியும் வோல்டர் (விஷால்)
திருடனாகவும், வம்பிழுப்பவராகவும் திரியும் (ஆர்யா)
இருவரும் ஒரு தந்தைக்கும் இரு தாய்மாருக்கும் பிறந்தவர்கள்.

இவர்கள் மூவரும் பிரதானமாகவும், சகோதரர்களின் குடும்பங்கள், பின்னர் உருவாகும் காதலிகள், ஒரு வாயாடிப் பையன், ஒரு கோமாளிப் போலீஸ், சட்ட விரோதமாக இறைச்சிக்காக மாடுகளை அடைக்கும் முரடன் என்று விரல் விட்டு எண்ணக் கூடிய பாத்திரங்களால் பின்னப்பட்ட கதை.


பிதாமகனுக்குப் பிறகு மீண்டும் இரு கதாநாயகர்கள்.
நந்தாவுக்குப் பிறகு மீண்டும் பாலாவுடன் யுவன் ஷங்கர் ராஜா.
வசனத்துக்கு எழுத்தாளர் ராமகிருஷ்ணன்.சிரிக்க வைக்கும் வசனங்களிலும் சில விஷயங்கள் வைக்கிறார்.

பாலா இந்தப் படம் வர முதல் சொன்னது போல, நகைச்சுவைக்கு முக்கியத்துவத்தைக் கொடுத்துள்ள கதை. இதுவரை வந்த பாலாவின் படங்களிலும் வடிவேலு, விவேக் வந்து சிரிக்க வைப்பதாகக் கதை இராது. மேலோட்டமான நகைச்சுவை இருக்கும். கருணாஸ் போன்றோரைத் தொட்டுக்கொள்வார் பாலா.

இதிலோ விஷாலும் ஆர்யாவும் கோமாளிக் கூத்தே நடத்திவிடுகிறார்கள். போதாக்குறைக்கு அந்த குண்டுப் பையனும், கோமாளி இன்ஸ்பெக்டரும் வேறு..
உச்சக்கட்ட காட்சிகளில் பாலா தன்னுடைய வழக்கமான வன்முறை வேட்டையாடும் வரை திரையரங்கு அதிர அதிர சிரிப்பு..

பாலாவின் படங்களில் வழமையாக நாம் பார்த்த, எதிர்பார்க்கக்கூடிய அத்தனை அம்சங்களுமே நிறைந்துள்ளன.

கொடூரமான, கொஞ்சம் சைக்கோத்தனமான, குரூரமான கதாநாயகன் (கதாநாயகர்கள்)..
(அழகான நாயகர்களை எல்லாம் என் இப்படி குரூபிகளாக மாற்றுகிறார் பாலா? ஏன் இப்படி ஒரு வெறி? சேது மொட்டை விக்ரமில் இருந்து இது தொடர்கிறதே.. இதற்கும் ஏதாவது பின்னணி இருக்குமோ??)
ஆனால் மினுக்கி வைத்த குத்துவிளக்குப் போல அழகான, அடக்கமான, கொஞ்சம் லூசுத் தனமான, பயந்த கதாநாயகி(கள்)..
சாதாரணமாக நாம் கவனிக்கத் தவறும் சமூகத்தின் சில அதிர்ச்சியான பக்கங்கள்..

(ஆனால் இதை யதார்த்தம் - இல்லை இதைத் தான் யதார்த்தம் என்று பலர் தூக்கிப் பிடிப்பதை நான் மறுக்கிறேன். நான் கடவுள் தந்த வன்முறை அதிர்ச்சி இன்னுமே இருக்கிறது)

முன்னைய தனது படங்களின் தாக்கம்.. பாத்திரப் படைப்புக்களிலும், சம்பவங்களிலும், ஏன் சண்டைக் காட்சிகளிலும் கூட..
அதிலும் கடைசிக் காட்சியை சேறு சகதியில்/புழுதியில் இரத்தமயமாக்குவதை எப்போது தான் பாலா விடப் போகிறார்?

அவன் - இவனில் என்னைப் பொறுத்தவரை அதிகமாக ஈர்த்துக்கொள்ளும் ஒருவர் ஹைனஸ் ஜி.எம்.குமார் தான்.

அந்தப் பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். பந்தா காட்டுவது, அன்புக்கும் ஆதரவுக்கும் ஏங்குவது, சிறு பிள்ளை போல தேம்புவது, இளையவர்களுடன் சேர்ந்து அடைக்கும் கும்மாளம், தன்னை ஊர்த் தலைவராக நிலை நிறுத்தும் காட்சிகள், இறுதியாக நிர்வாணமாக அடிவாங்கும்போது எங்கள் மனதில் ஏற்படுத்தும் பரிதாபம் என்று ஜி.எம்.குமார் தனது வாழ்நாளில் மிகச் சிறந்த பாத்திரத்தை ஏற்றுள்ளார்.

விஷால் அண்மையில் பேட்டி ஒன்றில் சொல்லி இருப்பதுபோல, இனி எப்போதுமே அவருக்கு நடிக்க வாய்ப்புள்ள இப்படியான ஒரு பாத்திரம் கிடைக்காது.
மாறு கண்ணும், கொஞ்சம் பெண் தன்மையும், நடிகனாகும் தீராத ஆசையும், போலீஸ் பெண்ணிடம் வழிந்து, உருகிக் காதலிப்பது, கோபம் வருகையில் அசுர பலம் என்று விஷால் கிடைக்கும் காட்சிகளில் எல்லாம் கலக்குகிறார்.
அதிலும் சூர்யாவுக்கு முன்னால் நவரசங்களையும் வெளிப்படுத்தும் இடத்தில் அனைவரையும் கலங்க வைத்துவிடுகிறார்.


மொத்தத்தில் பலம் + பெண் தன்மை கலந்த பிதாமகன் விக்ரம் 

ஆர்யா - கொஞ்சம் லூசுத் தனத்தைக் கலந்த பிதாமகன் சூர்யா பாத்திரம் 



ஆனால் பிதாமகன் விக்ரமின் செம்பட்டை முடியும் அண்மைக்கால ஆர்யா படங்களில் பார்க்கின்ற அதேவிதமான கலாய்த்தல்களும் தொடர்ச்சியாகப் பார்க்கையில் கொஞ்சம் அயர்ச்சி தான்.

லூசுத்தனமாக ஹெட்போனோடு கும்பிடுறேன் சாமி என்று அறிமுகமாகும் இடமும், கும்மாங்குத்து போடுவதும், விஷாலிடம் வம்பு சண்டை போட்டு வாங்கிக் கட்டுவதும் பளீர் கலகலப்பு.

அதிலும் அந்த ஆற்றங்கரையோரத்தில் மது அருந்தும் காட்சியில் ஆர்யா அடிக்கும் கூத்து வயிறு வலிக்க சிரிக்கவைக்கிறது.
அந்த குண்டுப் பையனும் இருப்பதால் இன்னும் பல இடங்கள் சிரிக்க முடிகிறது.

இன்னொரு ரகளையான சிரிப்பூ
ஊசி விழுங்கியதாக ஆர்யா அடிக்கும் கூத்து - வைத்தியசாலையில் பெண் வைத்தியர் போலீஸ் அதிகாரியைப் பார்த்து "இவன் ஊசியை விழுங்கல.. He is a liar" என்று சொல்வார்.
பதிலுக்கு போலீஸ் "என்னாது இவன் லாயரா? எப்போ படிச்சான் ? சொல்லவே இல்லை"

அந்த மொட்டைத்தலை + விபூதிப் பட்டை லூசு போலீஸ் ஒரு கோமாளி..
விஜய் டிவி யின் சூப்பர் சிங்கர் புகழ் ஆனந்த் வைத்யநாதனுக்கு ஒரு அப்பிராணிப் பாத்திரம்.
பாவமாக இருக்கிறது.. இரண்டு மனைவியரிடமும், மகன்மாரிடமும் தாறுமாறாகக் கெட்ட வார்த்தைகளால் திட்டு வாங்குகிறார். (இருக்குமிடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சௌக்கியமே)

அம்பிகாவா அது? வாய் முழுக்க உவ்வே வார்த்தைகளும், புகையும் பீடியுமாக மேலும் ஒரு விளிம்பு நிலைப் பாத்திரம்.அம்பிகாவும் அவரது சக்களத்தியும் சண்டைபோடும் இடங்களில் தணிக்கைக் குழுவினர் தூங்கிவிட்டார்களோ?
இதுதான் யதார்த்தம் என்று பாலா நினைனைக்கிறாரா?

கதாநாயகிகள் - ம்ம்ம் அழகுப் பதுமைகள். நடிக்கப் பெரிதாக எதுவுமே இல்லை. லூசுத்தனமாக இரண்டு மோசமான பொறுக்கிகளிடம் காரணமே இல்லாமல் காதல் வயப்படுகிறார்கள்.

பாலாவின் ஆஸ்தான சிஷ்யர்களில் ஒருவரான சூர்யாவின் கௌரவ வேடம், பாலாவுக்கான விளம்பரமா அல்லது சூர்யாவுக்கான விளம்பரமா?
பார்க்கும் உங்களுக்கும் எங்களுக்கும் பட்டிமன்றத் தலைப்பாகக் கொடுக்கலாம்..

இசைத்தட்டிலும், வானொலியிலும் கேட்ட பாடல்கள் பல திரைப்படத்தில் இல்லை.
பின்னணி இசை படத்துக்கு ஓகே ரகம் தேவைக்கேற்றதை செய்துள்ளார் யுவன்.

ஒளிப்பதிவு ஆர்தர் வில்சன் .. சண்டைக் காட்சிகளிலும் கடைசிக் காட்சிகளிலும் லயிக்க செய்துள்ளார்.
அந்தக் கிராமப்புறத்தின் கள்வர் குடியிருப்பைக் காட்டியுள்ள விதமும் கொடுத்துள்ள ஒளிச் சேர்க்கையும் பிரமாதம்.


பாலா ஒரு யதார்த்த இயக்குனர் என்று பல்லக்குத் தூக்குபவர்களை எல்லாம் பார்த்தால் பாவமாக இருக்கிறது. ஓவர் வன்முறையும் பாத்திரங்கள் பரவலாகப் பயன்படுத்தும் கெட்ட வார்த்தைகளும், கிராமப் புறக் காட்சிகளும், விளிம்புநிலை மாந்தரின் கவனிக்காத வாழ்க்கை முறையைப் படமாக்குவதும் தான் யதார்த்தப்படம் என்றால் இதுவும் இன்னொரு விதமான பேரரசு, வெங்கடேஷ், விஜய டி.ராஜேந்தர் ரக சினிமாத் தனமே.

சேது, நந்தா, பிதாமகன் மூன்றும் பாலாவின் இயக்கத்தில் அவரை நான் சிலாகித்து ரசித்து, ஏற்ற படங்கள்..
அதன் பின்னர் பாலா எங்கே போனார்?
எல்லாம் அதீதம்.. காதலில் புதுமை, உண்மை ஏதும் இன்மை..
மனித உணர்வுகளின் மேன்மையைக் காட்டும் பாத்திரங்களைப் படத்தில் உலவவிட்டும் அதையும் மீறியதாகத் தெரியும் வன்மம் என்று பாலா ஒரு குறித்த வட்டத்துக்குள்ளேயே உழல்கிறார்.

நேரடியாக நமது பாஷையில் கேட்பதாக இருந்தால் பாலா ஏதாவது ஒரு சம்பவத்தால் பலமாகப் பாதிக்கப்பட்ட சைக்கோவா?

ஆனால் 'அவன் - இவன்' எப்படி என்று பொதுவாகக் கேட்டால்..

என் பதில்.. பிடித்திருக்கிறது.
காரணம் அவ்வளவு தூரம் ரசித்து சிரித்தேன்..
& கடைசிக் காட்சிகளின் கொலைவெறி வழமையாக மசாலாப் படங்களில் பார்க்காததா?

விஷாலின் அரவாணித்தனமான தோற்றம், சில உருவகம் போன்ற காட்சியமைப்புக்கள்,சேற்று நிலக் கொலை, ஹைனஸ், புலி வேஷம் என்று சில விடயங்கள் என் என்ற கேள்வி எழாமல் இல்லை. இவை தற்செயலா அல்லது எனது நண்பன் ஒருத்தன் எனக்கு சொன்னது போல "மச்சான் நீ எல்லாம் சும்மா விமர்சனம் எழுதத் தான் சரி. பாலாட ஸ்டாண்டர்ட் எங்கேயோ போய்ட்டுது. இதில எல்லாம் அவர் ஏதாவது ஒரு மறைபொருள் செய்தி வச்சிருப்பார்..அதெல்லாம் உனக்கு விளங்காதடா" என்ற வகையில் பின் நவீனத்துவமா?

விளங்காதவை பின்நவீனத்துவம் என்றால் எனக்கு அவை புரியாமலேயே போகட்டும்.

பாலா தான் இயக்குனர் என்று நினைக்காதபடியால் என்றெல்லாம் இல்லை.
காரணம் 'நான் கடவுள்' படத்திலேயே யோசித்துவிட்டேன் எந்தவொரு எதிர்பார்ப்பும் வைகைக் கூடியவர் பாலா இல்லை என்று...
சரக்கு தீர்ந்தால் எந்தவொரு வியாபாரியும் கிடைப்பதை விற்க ஆரம்பித்து விடுகிறான்.

அவன் - இவன் - அவனவன் அவனவனாக இருந்தால் அதுவே நல்லது 

June 26, 2011

ஹைனசும்,அவனும் இவனும் - ஞாபக அலைகள்


ஊர் மக்களின் அன்புக்கும் பரிதாபத்துக்கும் பாத்திரமான தனியாளாக வாழும் ஜமீன்தார்.

ஊர்மக்களுக்குப் பெரிதாக நன்மைகள் செய்யாவிட்டாலும், கொஞ்சம் பந்தா காட்டி, (தன்னைத் தானே ஹைனஸ் - Highness என்று அழைத்துக்கொள்ளும் அளவுக்கு)கோமாளித்தனம் செய்தாலும் மக்கள் அவரைத் தம் தலைவராகவே ஏற்றுக்கொள்ளும் ஒரு நல்ல மனிதர்.

அவரை உயிராக நேசிக்கும் இரு இளைஞர்களுக்கும் அனைத்தையும் வழங்கி ஒரு God Father ஆக இருக்கிறார் அந்த 'ராஜா'.
அவரது எதிரிகள் அவர்களுக்கும், ஊருக்குமே எதிரிகளே.
போலீசார் கூடக் கோமாளிகள்.

மற்றவர்கள் அவரை ஏமாற்றி, சொத்துக்களை அபகரித்து தனியாளாக விட்டுச் சென்றாலும் அவர் காட்டில் அவரே ராஜா.
அந்த இரு கோமாளி இளைய அடியாட்களோடு தன் நாட்களை மகிழ்ச்சியாகக் கழித்துவரும் தலைவருக்கும் அவரது இரக்கக் குணத்தாலேயே எதிரி உருவாகிறான்.

அந்தக் கொடூர எதிரியாலே, துரத்தி அடித்து, சேற்று நிலத்திலே நிர்வாணமாகப் படுகொலை செய்யப்படும் தங்கள் ராஜாவின் மரணம் கண்டு கொதிக்கும் அந்த இரு விசுவாச அடியாட்களும், கொலையாளியையும் சேர்த்தே எரிக்கிறார்கள்.

சில காட்சிகள் சில காட்சிகளின் உருவகம் சில விஷயங்களை ஞாபகப்படுத்துவதால் நாம் இருக்கும் நிலையில் மனதில் ஏற்படும் ஞாபக அலைகளால் இந்தக் கதை மனதுக்கு நெருக்கமாக வராமல், மனத்தைக் கொஞ்சமாவது உருக்காமல், பிடிக்காமல் போகுமா?

ஆனால் திரைப்படமாக......



பி.கு - நேற்றுப் பார்த்த அவன்-இவன் திரைப்படம் பற்றி நாளை பதிகிறேன்.

June 21, 2011

வில்லங்கமான கதை - அப்பிடி & இப்படி


எச்சரிக்கை - வாசிக்கும்போதும், வாசித்து முடித்தபின்பும் அகிம்சையையே மனதில் கொள்ளுங்கள்..
யாரும் அதிரடியா,கொலைவெறியா ஆட்டோ,கீட்டோ, அரிவாள், பொல்லு என்று தேடிப் புறப்படக்கூடாது.. ஆமா..



ஒரு ஊரில அப்பிடி, இப்பிடின்னு ரெண்டு பேர் இருந்தாங்களாம்..
ஒரு நாள் அப்பிடி, இப்பிடியைப் பார்த்து "எப்பிடி இருக்கீங்க" என்று கேட்டார்.
அதுக்கு இப்பிடி "எப்பிடியோ இருக்கன்" என்று சொன்னார்.
அப்பிடி"இப்பிடி சொன்னா எப்பிடி? அப்பிடி இருக்கேன் இல்லை இப்பிடி இருக்கேன்னு இல்லையா சொல்லணும்" என்றார்.
உடனே இப்படிக்கு அப்படியொரு கோபம் வந்திட்டு.. "டே அப்பிடி, நான் எப்படி இருந்தா உனக்கென்ன" என்று கோபமாகக் கேட்டார்.
அதற்கு அப்படி "அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை..சும்மா தான் எப்பிடி இருக்கீங்கன்னு கேட்டேன்" என்று இப்பிடியை சமாதானப்படுத்தினார்.
அப்பாடா, எப்படியோ அப்பிடியும் இப்பிடியும் மறுபடி நட்பாகிட்டாங்க..

அப்புறம் நீங்க எப்பிடி?


நண்பர் ஒருத்தர் அனுப்பிய கடி எஸ் எம் எஸ் இது..
காலையிலேயே விடியலில் பலரைக் கடித்து ஒன்ஸ்மோர் கேட்கப்பட்டது..
எப்பூடி? ;)


May 25, 2011

அழகர்சாமியின் குதிரை



சில திரைப்படங்கள் பார்க்கும்போது இதற்குமேல் இந்தப் படத்தை வேறு யாராலும் சிறப்பாக எடுத்திருக்கவோ, வேறு யாராலும் நடித்திருக்கவோ முடியாது என்று திருப்தியாகத் தோன்றும்..
அப்படியான ஒரு ரசனையான படம் அழகர்சாமியின் குதிரை.

பாஸ்கர் சக்தியின் சிறுகதையாக வாசித்திருந்த அழகர்சாமியின் குதிரை திரைப்படமாகவும் அதே கம்பீரத்துடனேயே உலா வருகிறது.

வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல அடுத்து இது என மூன்று வெவ்வேறான தளங்களில் வித்தியாசம் காட்டிவரும் இயக்குனர் சுசீந்திரன் கவனிக்க வைக்கிறார். இவர் இயக்கும் அடுத்த படத்தை இப்போதே எதிர்பார்க்கும் முதலாமவன் நான் ஆகட்டும்.

சிறுகதைகளோ நாவல்களோ திரைப்படங்களாக மாறும்போது இயல்புகள் மீறப்படுவதும்,  மூலப்பிரதியில் கண்டசுவை இல்லாமல் போவதும் பல தடவை நாம் கண்ட அனுபவம்.

ஆனால் அழகர்சாமியின் குதிரையில் அந்தக் குறை இல்லாததற்கான காரணம் /காரணங்கள் என நான் நினைப்பது....
படத்தில் முக்கியமான பாத்திரங்களை ஏற்றிருக்கும் அநேகர்/ எல்லோருமே புதுமுகங்கள்.. இதனால் பாத்திரங்களில் நடிக,நடிகையரின் இமேஜ் உறுத்தல்கள் தொற்றவில்லை.
இசைஞானியின் மூன்றே மூன்று பாடல்கள் என்பதால் படத்தின் கதையோட்டத்தை அவை பாதிக்கவில்லை.
சிறுகதையில் தரப்பட்ட பாத்திரங்கள் தவிர எவற்றையும் நகைச்சுவைக்காக இயக்குனர் இணைக்கவும் இல்லை; கிளைக்கதைகள் எவற்றையும் புகுத்தவும் இல்லை.

ஆனாலும் கதையை எதுவித மாற்றமும் இல்லாமல் திரைக்கதையை சுசீந்திரன் உருவாக்கி இருப்பது முதல் பாதியின் மெதுவான நகர்வுக்குக் காரணம் என நினைக்கிறேன்.. 

பாஸ்கர் சக்தி இத் திரைப்படத்தின் இணை இயக்குனராகவும் இருப்பது படத்தின் மற்றொரு பலம் போல் தெரிகிறது. 

மூடநம்பிக்கைகளும், போலியான கடவுளர் உருவாக்கமும் சாதாரண மக்களின் வாழ்வில் செலுத்தும் தாக்கமும், கிராமங்களில் இந்தக் கடவுள்களும் கடவுள்களின் ஏஜென்ட்களான மந்திரவாதிகள், பூசாரிகள் செய்கின்ற பித்தலாட்டங்களும் கதையில் நன்றாக உரிபடுகின்றன.

தேனிப்பக்கம் உள்ள மலைப்பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இந்தப் படம் கண்ணுக்குக் குளிர்ச்சியாக வருவதை மண்ணின் மைந்தன் தேனி ஈஷ்வர் உறுதிப்படுத்தியுள்ளார்.
கண்ணுக்கு உறுத்தலும் இல்லை; தேவையற்ற தொழினுட்பங்களும் இல்லை.
இயக்குனர் சொல்ல வந்த கதையை எங்கள் கண்களுக்கு நாங்களே பார்ப்பதாகக் காட்டியுள்ள ஒளிப்பதிவும், சிரத்தையான நேர்த்தியான படத்தொகுப்பும் சர்வதேசத் திரைப்படமொன்றின் பிரமிப்பை வழங்குகின்றன.
(படத்தொகுப்பு - காசி விஸ்வநாதன்)

அண்மையில் பார்த்த சில ஜப்பானிய, சீன மொழித் திரைப்படங்களில் மனதை அள்ளும்சிறு சிறு உணர்ச்சி சித்திரப்படுத்தல்கள் இதிலும் உண்டு.
சில காட்சிகள் ஏனோ மைனா படத்தைக் கண்ணுக்குள் கொண்டு வந்தன. எடுக்கப்பட்ட மலைப்புறப் பிரதேசங்களாக இருக்கலாம். 

இளையராஜாவின் பாடல்கள் மூன்றும் கதையுடனேயே இணைந்து பயணிப்பதால் அவை பற்றிப் பேசாமல், இசை பற்றி அதிகமாகவே சிலாகிக்கலாம்.. 
பல இடங்களில் இசையைப் பேச விட்டுள்ளார் ராஜா.. பல இடங்களின் காட்சிகளின் வசனங்கள் தரும் உணர்ச்சிகளை விட இளையராஜாவின் இசை தரும் அழுத்தம் அதிகம்.

வழமையாக இப்படியான சில கலைப்படங்களில், அல்லது மசாலா இல்லாத வித்தியாசமான படங்களில் கமல்ஹாசன், விக்ரம் அல்லது சூர்யா போன்றோர் தங்கள் உடலை வருத்தி, அழகைக் குறைத்துக் குரூபிகளாக நடிப்பதைத் தமிழ்த் திரைப்படங்களில் பார்த்துப் பழகிய எமக்கு அப்புக்குட்டி ஒரு அதிசயமான மகிழ்ச்சி.

தமிழ்த்திரைப்பட கதாநாயகர்களுக்கான எந்தவொரு இயல்பும் இல்லாத அவலட்சண தோற்றம், குள்ள உருவத்தோடு இந்தக் கதையின் நாயகனாக அப்புக்குட்டி.
குதிரைக்கும் அப்புக்குட்டிக்கும் இருக்கும் பாசம், நெருக்கம் நெகிழ்ச்சியைத் தருவதாகக் காட்சிப் படுத்தப்படுகிறது.. அப்புக்குட்டி காட்டும் உணர்ச்சிப் பிரவாகத்துக்கேற்ற குதிரையின் அசைவுகளும், பின்னணி இசையும் டச்சிங். 

இதற்கு முதல் அப்புக்குட்டியை சிறு பாத்திரத்தில் குள்ள நரிக் கூட்டத்தில் பார்த்து ரசித்திருந்தேன்.
இதில் கனதியான பாத்திரமொன்றை ஏற்று சிறு சிறு உணர்ச்சிகளையும் கொட்டிக் கலக்கி இருக்கிறார்.
ஆனால் இனி? ஒரு காமெடியனாக, கோமாளியாக எம் தமிழ்த் திரையுலகம் அவரை மாற்றிவிடும். எம்மை ஏமாற்றிவிடும்.. 
பாவம்.

சரண்யா மோகன் இவரின் ஜோடி என்பதால் மட்டும் கதாநாயகி ஆகப் பார்க்கப்படுகிறார். கொஞ்ச நேரமே வந்தாலும் மனதை அள்ளிக் கொள்கிறார்.
அழகான சரண்யாவுக்கும் அப்புக்குட்டிக்கும் எப்படி திருமணம்? ஏன் என்று அழுத்தமாக, அழகாக சொலும் கட்சி நறுக். 

காதல் ஜோடியாக கண்ணால் கதை பேசும் பிரபாகரன்-அத்வைதா ஜோடி கவர்ந்தது.
பிரபாகரன் முக்கியமான கட்டங்களுக்குத் தேவைப்படுகிறார்.
அத்வைதா அழகாக இருக்கிறார். கண்களால் பேசத் தெரிந்துள்ளது. நல்ல படங்களாப் பார்த்துக் குடுங்கப்பா.. 


போலீசாக வந்து போலி சாமியாராக மாறும் சூரி கலகலக்க வைக்கும் ஒரு பாத்திரம்.கதையோடு ஒட்டிச் செல்லும் நகைச்சுவையில் ரசிக்க வைக்கிறார். கிடைக்கும் வாய்ப்புக்களில் வெளுத்துவாங்கும் சூரியை யாராவது தொடர்ந்து முக்கிய படங்களில் பயன்படுத்தலாம்.

போலீஸ் அதிகாரி, கிராமத் தலைவர், கோடாங்கி, ஆசாரியார், பொன்னம்மா, கோடாங்கியாரின் மனைவி, மைனர் என்று அச்சு அசல் இயல்பான தெரிவுகள்.
ரசிக்க வைக்கும் இயல்பான நடிப்புக்கள்; கதையுடன் கூடவே பயணிக்கும் சிம்பிளான நகைச்சுவைகள்..

கிராமத்துக்கே தெய்வமான அழகர்சாமியின் வாகனமாக இருக்கும் மரக்குதிரை காணாமல் போய் விடுகிறது. கிராமத்துக்கு தெய்வ குற்றம் வந்து மழை வராமல் போய்விடும் எனப்பயந்து,அதைத் தேடித் திரிந்து போலி மாந்திரீகவாதி ஒருவனின் வழிகாட்டலில் உண்மையான வெள்ளைக் குதிரை ஒன்று அகப்பட்டுவிடுகிறது. அந்தக் குதிரையே தங்கள் கடவுளின் குதிரை என்று கட்டிவைக்க, குதிரையின் உண்மையான சொந்தக்காரனான அழகர்சாமி வேறு ஊரிலிருந்து வருகிறான்..
அந்தக் குதிரையுடன் அவன் சொந்த ஊர் செல்லாவிட்டால் அவனுக்குத் திருமணம் நடக்காது.. 
அதன் பின் நடப்பவை தான் முடிவாக..

கடவுளின் பெயரும் உயிர்க் குதிரையின் சொந்தக்காரனின் பெயரும் அழகர்சாமி என்பதிலிருந்து பல இடங்களில் மூட நம்பிக்கைகளையும் கடவுள், பக்தி போன்றவற்றை முட்டாள் தனமாக நம்புவதையும் கிண்டலாக, குத்தலாக சாடுகிறது திரைப்படம்.

அதுவும் கடைசிக் காட்சிகள்.. கலக்கல்..
ஓவராகப் பிரசாரப் படுத்தாமல் மேலோட்டமாகக் கதையுடனேயே இப்படியான மூடநம்பிக்கைக் கிழிப்பு இருப்பது ரசிக்கவைக்கிறது.

முதல் பாதியில் கொஞ்சம் வேகத்தைக் கூட்டி அந்தக் காதல் பாடலையும் தவிர்த்திருந்தால் இன்னும் அழகர்சாமியின் குதிரையின் ஆரோகணித்து நாம் பயணித்திருக்கலாம்..

ஆனாலும் தாதாக்களையும், தாத்தாக்களையும் வைத்து அரைத்த மாவையே அரைக்கும் தமிழ் சினிமாவுக்கு இப்படியான படங்களும், இயக்குனர் சுசீந்திரன், கதாசிரியர் பாஸ்கர் சக்தி போன்றோரும் புதிய ஊட்டச் சத்துக்கள்.
பாராட்டுக்கள் இவர்களுக்கு..

ஆனாலும் எனக்கு மனத் திருப்தியாக உள்ளது..
சுசீந்திரன் எனது அபிமானத்துக்குரிய இயக்குனர்களில் ஒருவராக இப்போதே மாறியுள்ளார்.

அழகர்சாமியின் குதிரை - அமைதியான ரசனையான சவாரிக்கு 

May 24, 2011

ஒபாமா - ஐயோ அம்மா... இலங்கையின் மிகச் சிறந்த கிரியேட்டிவ் ஆன நகைச்சுவைப் பதிவு ;)


ஜாலியான தமிழில் தான் இந்த ஜோக் வேண்டும் என்றால் நல்ல ஜாலியான பதிவர் யாரையாவது அணுகி மொழிபெயர்த்துக்கொள்ளுங்கள் ஜாலி மக்காள்ஸ்.. 



அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் கனேடியப் பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பரும் ஒருநாள் சந்தித்துக் கொண்டார்கள்..
நம்ம கஞ்சிபாய் கண்டுபிடித்த ஒரு காலயந்திரம் - Time Machineஅவர்களுக்குக் காட்சிப்படுத்தப்பட்டது.

இந்தக் கால யந்திரத்தின் ஸ்பெஷல் என்னவென்றால் ஐம்பது வருடங்களுக்குப் பின்னதான எதிர்காலத்தைத் துல்லியமாக சொல்லும் ஆற்றல் இருந்தது தான்.

ஒபமா முதலில் அதன் அருகே போய் " ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்கா எப்படி இருக்கும்" எனக் கேட்டார்..

உடனே அந்தக் கால யந்திரம் ஒரு சீட்டை வெளியே தள்ளியது..

அதில்...

நாடு புதிய ஜனாதிபதி ஜோஸ் பெர்னாண்டேசின் ஆட்சியில் மிகுந்த பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் தன்னிறைவு பெற்றதாகவும் இருக்கும். பாதுகாப்புப் பிரச்சினைகள், வன்முறைகள் இருக்காது..

எந்தவொரு பிரச்சினையும் இல்லை. பொருளாதாரமும் சீராக இருக்கிறது.
உப ஜனாதிபதி ஜின் டவோ சீன மொழியைக் கட்டாய மொழியாக எல்லாப் பாடசாலைகளிலும் அறிமுகப்படுத்தியிருக்கிறார்"

வாசித்து முடித்த ஒபமா நெற்றியில் துளிர்த்த வியர்வையைக் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டே போய் அமர்ந்துகொண்டார்.

அடுத்து கனேடிய பிரதமர், "ஐம்பது ஆண்டுகளின் பின்னர் கனடா எப்படி இருக்கும்?"

கால யந்திரம் - Time Machine முன்பு தந்தது போலவே ஒரு துண்டு சீட்டை வெளியே தள்ளுகிறது..
அதை எடுத்த ஹார்ப்பர் அப்படியே வெறித்துப் பார்த்துக் கொண்டு நிற்கிறார்.

"யோவ் ஹார்ப்பர் என்னைய்யா இது? நான் சொன்னனே தானே? நீரும் சொல்லும் என்ன எழுதியிருக்கெண்டு" ஒபாமா ஆர்வத்துடன் கேட்கிறார்.

"தெரிஞ்சா சொல்ல மாட்டேனா? எல்லாமே 'தமிழில்' இருக்கே.. .. ஒண்ணுமே புரியல"



பி.கு - விடியலில் இன்று காலை சொன்னது

சிரிப்பு வரலேன்னாக் கூட எனக்காகக் கொஞ்சம் சிரிச்சுக்கோங்க.. வோட்டுப் போடாமல் போனாலும் பின்னூட்டம் போடமால் போனாலும் கூட நான் கோபித்துக்கொள்ள மாட்டேன் ;)
ஆனால் கிரியேட்டிவ் இல்லையென்று மட்டும் சொல்லப்படாது..
அழுதிருவேன்..


April 27, 2011

கோ



முதல் படத்திலேயே என்னை ஈர்த்த K.V.ஆனந்தின் மூன்றாவது படம்.
ஒவ்வொரு படத்திலும் தெரிந்த சமூகத்தின் தெரியாத சில பக்கங்களை கொஞ்சம் அதிர்ச்சியாகத் தருவது K.V.ஆனந்தின் பாணி.
கோவில் அவர் கையாண்டிருப்பது ஊடகங்கள் vs அரசியல்..

ஒரு பத்திரிகைப் படப்பிடிப்பாளன் தான் ஹீரோ.
ஒரு பத்திரிக்கை அலுவலகத்தின் சூழலின் பின்னணியுடன், அரசியல் சம்பவங்களின் காட்சி மாற்றங்களுடன் எந்தவொரு தொய்வும் இல்லாமல் நகர்கிறது கதை.

ஏற்கெனவே பிரபலமான Hit பாடல்களும், அற்புதமான படப்பிடிப்பும், சுருக்கமான நறுக் வசனங்களும் படத்தின் மிகப் பெரும் பலங்கள்.

வங்கிக் கொள்ளையைத் துணிச்சலாகப் படம் பிடித்து காவல் துறைக்கு உதவி ஹீரோவாகும் அஷ்வின் (ஜீவா), அந்த சம்பவத்திலேயே மற்றொரு துணிச்சலான நிருபர் ரேனுவை(புதுமுக நாயகி கார்த்திகாவை) சந்திக்கிறார்.
அதன் பின் தொடர்ச்சியாக இருவரும் ஜோடிபோட்டு துணிச்சலாக ஊழல், மோசடி, வன்முறை செய்யும் அரசியல்வாதிகளை ஆளும்கட்சி, எதிர்க்கட்சி பேதமின்றி தங்கள் நாளிதழான 'தின அஞ்சல்' மூலமாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்கள்.

இவர்களுக்குப் பக்கபலமான நேர்மையான ஆசிரியரும் சேர்ந்துகொள்ள யாராயிருந்தால் என்ன என்று செய்திகள் சுட சுட வருகின்றன.

இடையில் நேர்மையான எண்ணத்துடன் மக்களுக்கு சேவை செய்ய வரும் இளைஞர் இயக்கமான 'சிறகுகள்' அமைப்பின் நல்ல செயல்களைப் புகைப்படத்துடன் செய்திகளாக்க அந்த அமைப்பு மக்களின் மனதில் இடம்பிடித்து அரசமைக்கும் அளவுக்கு உயர்கிறது.

ஒரு அமைதிப் புரட்சியினூடாக ஆட்சியை மாற்றிய பின் ஜீவாவும் அவரது பத்திரிகையும் அடுத்தடுத்து எதிர்கொள்ளும் சிக்கல்களும் திரைக்கதை எங்களுக்குத் தரும் அதிர்ச்சிகளும் கோவின் பரபரப்பான இறுதிக்கட்டத்துக்குக் கொண்டு செல்கின்றன.

ஆனால் ஒரு முக்கிய வேண்டுகோள் 'கோ' பார்த்தவர்களுக்கு.. படத்தின் முடிவை மட்டுமல்ல, இடைவேளைக்குப் பின்னதான எதையுமே பார்க்காதவர்களுக்கு சொல்லிவிடாதீர்கள். பார்க்கும் ஆர்வத்தையே இல்லாமல் செய்துவிடும்.

திரைக்கதையில் இயக்குனருடன் எழுத்தாளர்கள் சுபாவும் இணைவதால் வழமையாக சுபாவின் துப்பறியும்/மர்மக் கதைகளில் காணக்கூடிய சில பரபரப்புக்கள், திருப்பங்களைக் காணக் கூடியதாக உள்ளது.

சு(ரேஷ்) பத்திரிகை அலுவலகத்தில் ஒருவராக நடிக்கவும் செய்கிறார். எடிட்டர் அண்டனியும் வேறு ஒரு காட்சியில் வருகிறார்.

பத்திரிகைப் பின்னணியில் இருந்தவர் என்ற காரணத்தால் மிகத் தத்ரூபமாக அதைக் காட்சிகளில் கொண்டு வந்துள்ளார் ஆனந்த்.
பரபரப்பாக தலைப்புக்கள் மாற்றப்படுவது, ஆசிரியர், துணை ஆசிரியர் முறுகல்,மோதல்கள், வழக்கறிஞர் ஆலோசனைகள், புகைப்படப் பிடிப்பாளர்களுக்கு எப்போதும் கொமென்ட் அடிக்கும் சீனியர், இப்படியே பல பல..

கோட்டா சீனிவாசராவ் அதிரடி என்றால் பிரகாஷ்ராஜ் அமைதியான அதகளம். ஆனாலும் முதுகைப் பார்த்த ஜீவாவுக்கு தன் இன்னொரு முகத்தை அவர் இறுதிவரை காட்டவே இல்லையே..

பிரகாஷ்ராஜ் முகத்தில் பல உணர்ச்சிகளைக் கொட்டிக் குமுறும் இடங்களில், குறிப்பாக அந்த கார் பேட்டிக் காட்சிகளில் கண்ணுக்கு முன் முதல்வன் ரகுவரன் வந்து போகிறார். இந்தப் பாத்திரத்தில் ரகுவரனைப் பொருத்திப் பார்த்தால்.. தமழ் சினிமா ரகுவரனை நிறையவே மிஸ் பண்ணுகிறது.

ஆரம்ப அக்ஷன் காட்சிகளும் இறுதிக்கட்ட காட்சிகளும் முழுமை பெறுவது அன்டனி + ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் நாதனினால் தான்.

அந்த அரங்கக் குண்டுவெடிப்பிலும், பாடல் காட்சிகளிலும் அன்டனி ஜொலிக்கிறார் என்றால், ரிச்சர்ட் நாதனின் கைவண்ணம் பாடல் காட்சிகளில் குறிப்பாக எல்லா நட்சத்திரங்களும் வந்து ஆடிக் கலக்கும் அக நக பாடல், அமளி துமளி பாடலில் தன் கைவண்ணத்தைக் காட்டியுள்ளார்.

எங்கே தான் இப்படி இடங்களை ஆனந்த் தேடிப்பிடித்தாரோ.. அழகின் உச்சபட்சமாக மலைக்கவைக்கின்றன அந்த மலை உச்சிகளும், அழகான இடங்களும்..

அக நக பாடலில் சூரியா, ஜெயம் ரவி, கார்த்தி, அப்பாஸ், தமன்னா, பரத் என்று எல்லோரும் 'ஓம் ஷாந்தி ஓம்' பாணியில் முகம் காட்டி,ஆடிவிட்டு செல்கிறார்கள்..
அதைத் தொடர்ந்துவரும் காட்சிகளில் கொஞ்சம் நடிகர்களையும், கொஞ்சம் பத்திரிகையாளரையும் கலாய்க்கிறார் இயக்குனர்.
அதிலும் ஸ்மிதா கோத்தாரியாக வரும் சோனா மச்சான்சில் ஆரம்பித்து பேசும் பிரசாரம் நமீதா ரசிகர்கள் பலரைக் கொதிக்க வைக்கும்..;)


சிம்பு நடிக்க இருந்த பாத்திரம் ஜீவாவுக்கேன்றே உருவாக்கியது போல அச்சொட்டாகப் பொருந்துகிறது. ஜீவாவின் துடிப்பும், கண்களும் பாத்திரத்துக்கு ஏற்றவை.
சிம்புவை நேரடியாகவே பொருந்திப் பார்க்க வைப்பதாக பாடல் காட்சியிலும் பின்னர் சில காட்சிகளிலும் உலவ விடப்பட்டுள்ள 'பல்லன்', ஆனந்தின் பழி தீர்த்தலா? ;)

கார்த்திகா தாய் ராதாவை ஞாபகப் படுத்துகிறார். கண்களும், உதடுகளும் உயரமும் ஈர்க்கின்றன.. ஆனால் அந்த மேலுயர்ந்த மூக்கு இவற்றைக் கொஞ்சம் பின்தள்ளி ஈர்ப்பைக் குறைக்கிறது.
துடுக்குப் பெண்ணாகத் துள்ளித் திரியும் பியாவை விடக் கார்த்திகாவுக்கு நடிக்கும் வாய்ப்புக் குறைவே.
பாடல் காட்சிகளில் கார்த்திகாவின் உயரமே குறையாகி விடுகிறது.

பியாவுக்கு ஏற்ற வேடம்.. முன்பென்றால் நிச்சயம் லைலாவை இந்த வேடத்தில் பொருத்தலாம்.. ஆனால் கவர்ச்சியையும் கொஞ்சம் சேர்த்துப் பியா கலக்கி இருக்கிறார்.

காதல் தோல்வியென்று தெரியும் கணத்திலும் கலங்கிய கண்களுடனும் தன் வழமையான சுபாவத்தை மாற்றாமல் அடிக்கும் கூத்துக்கள் டச்சிங்.

அஜ்மல் கம்பீரமாக இருக்கிறார்; திடகாத்திரமாக இருக்கிறார். அவரது பாத்திரப்படைப்பில் சிறப்பாக பரினமித்துள்ளார். மேடைகளில் பொங்கிப்பிரவாகிக்கையில் கண்களும் பேசுகின்றன.

அந்தப் பத்திரிகையாசிரியர் க்ரிஷ் ஆக வருபவர் அருமையான ஒரு தெரிவு.
நவீன ஊடகத்துறையின் முக்கிய கூறான புகைப்படத்துறை ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றியும், செய்திகளை உருவாக்கல்(News making), பரபரப்பு செய்திகளை உருவாக்கல்(sensationalism/sensational news reporting), செய்திகளின் தாக்கங்களை மக்களின் உணர்வுகளாக்கி அந்த அலையினால் ஆட்சிமாற்றத்தையே ஏற்படுத்தல் போன்றவை பற்றியும் மிக நுணுக்கமாக ஊடகவியல் பாடம் நடத்துகிறார் இயக்குனர்.

முன்னைய படங்களான கனாக்கண்டேன், அயன் போன்ற படங்களைப் போலவே கோ விழும் காட்சிக் கோர்வைகளைத் தொடர்புபடுத்தி துரிதப்படுத்துவதில் மற்றும் ஒரு காட்சியில் வரும் பாத்திரமாக இருந்தாலும் அந்தப் பாத்திரத்தின் கனதியையும் தேவையையும் நியாயப்படுத்துவதிலும் ஆனந்தின் கைவண்ணம் மெச்ச வைக்கிறது.

நக்சல் தலைவனாக வரும் போஸ் வெங்கட், சிறகுகளில் ஒருவராக வரும் ஜெகன் ஆகியோரையும் புத்திசாலித்தனமாக உலவவிட்ட விதங்களையும் சமகால இந்திய அரசியல் நையாண்டிகளையும் தன்னைப் புண்ணாக்கும் விதமாக அமைந்துவிடாமல் தந்திருப்பதையும் கூடக் குறிப்பிடலாம்.  

அரசியல் கிண்டல்களை விமர்சனமாக வைத்திருக்கும் இப்படமும் அரசியல் கலவையுடன் தான் வெளியிடப்பட்டுள்ளது என்பது சுவாரஸ்யமானது. (Red Giantஇன் வெளியீடு)
ஆனால் தமிழக தேர்தலுக்கு முன் வெளியாகியிருந்தால் ஏதாவது விழிப்புணர்ச்சி தந்திருக்குமா என்பது எனக்குத் தெரியாத ஒன்று.


கோ பார்த்த பிறகு மனதில் தோன்றியவை..

நல்ல கதை இருந்தால் IPL காலத்திலும் படம் ஹிட் ஆகும்

சிம்பு கோவைத் தவறவிட்டமைக்கு நிச்சயம் கவலைப்படுவார்.

K.V.ஆனந்தை 'பெரிய' ஹீரோக்கள் தேடுவார்கள்.

கார்த்திகா இனி ஆர்யா, விஷால், விக்ரம், விஜய், வினய் போன்ற உயரமான ஹீரோக்களால் தேடப்படுவார்.

ஜீவா அனைத்துப் பாத்திரங்களுகுமே பொருந்திப்போகும் ஒரு Director material
பியாவின் கதாநாயகி சுற்று இத்துடன் முடிந்தது

ஆலாப் ராஜுவின் ஆலாபனைகள் தான் இன்னும் ஆறு மாத காலத்துக்கு எல்லாப் படங்களிலும்..

ஹரிஸ் ஜெயராஜ் இனியும் தொடர்ந்து கொஞ்சமும் யோசிக்காமல் தன் முன்னைய பாடல்களையே கொஞ்சம் (மட்டும்) மாற்றிப் புதிய படங்களுக்குப் பயன்படுத்தலாம்.


கோ என்ற தலைப்பு எவ்வாறு பொருந்துகிறது என்று கொஞ்சமாவது யோசித்தால் மன்னன், ஆட்சி, தலைமை என்ற ஒத்த கருத்துள்ள சொற்கள் நினைவுக்கு வருகின்றன.

பன்ச் வசனங்கள் பேசாமல், பெரியளவு ஸ்டன்ட் காட்டாமல், புத்தி சாதுரியம், மக்கள் மீதான நேசத்துடன் போராடி வெல்லும் ஹீரோவை எங்கள் ஊடகத்துறையில் இருந்தே உருவாக்கித் தந்தமைக்கு இயக்குனருக்கு நன்றிகள்..

நேர்மைக்காகவும், மக்கள்+சமூக நன்மைக்காகவும் (படத்தினைப் பார்த்தவர்கள் இறுதியில் திரையில் தோன்றும் திருக்குறளை ஞாபகப்படுத்தவும்; மற்றவர்கள் திரைப்படத்தை முழுமையாகப் பார்க்கவும்) போராடும் ஊடகவியலாளர்களை நினைவுபடுத்தியதற்கு சிக்கலான ஒரு இடத்தில் இந்த சிக்கலான பணியைக் காமெராவை எடுக்காமல் கையில் மைக் எடுத்து முன்னெடுக்கும் ஒருவனின் நன்றிகள்.


December 26, 2010

கொலைக்காற்று - 05

சுபாங்கனால் ஆரம்பிக்கப்பட்டு நண்பர்களால் தொடரப்பட்டுக் கொண்டிருக்கும் 'கொலைக்காற்று' மர்மத்தொடரின் ஐந்தாவது பாகத்தில் நான் இணைந்திருக்கிறேன்.

இதற்கு முந்திய பகுதிகள்...

கொலைக்காற்று - 01  தரங்கம் - சுபாங்கன்

கொலைக்காற்று - 02  எரியாத சுவடிகள் - பவன்
கொலைக்காற்று - 03  சதீஸ் இன் பார்வை - சதீஸ்


இதோ....

கொலைக்காற்று 
கட்டிலில்..
"ஜெனி கொலை செய்யப்பட்டிருக்கிறா.. அதுக்குப் பிறகு சேகர்.. உங்கட க்ளோஸ் பிரென்ட்.ஆனால் நீங்கள் கொஞ்சமும் அப்செட் ஆனா மாதிரித் தெரியேல்லையே.."
"அப்ப, என்னை நீ சந்தேகப்படுறியா வர்ஷா?"
"சொறி கௌதம்.. எனக்குக் குழப்பமா இருக்கு.." கண்கலங்கி,தலை குனிந்துகொண்டாள் வர்ஷா.

தளர்ந்துபோய் கலங்கி இருந்தவளை, நகர்ந்துசென்று கைகளால் முதுகை அணைத்து,ஆதரவாகத் தலையைக் கோதிக்கொண்டே,மெல்லிய குரலில்
"அப்செட் ஆகாமல் இல்லை டார்லிங்.. ஆனால் எனக்கு நெருங்கின இரண்டுபேரின் கொலைகள் என்டபடியால் தான் கொஞ்சம் யோசிக்கவேண்டி இருக்கு.. ஜெனி,சேகர் ரெண்டு பேரின் mobile போனுக்கும் நேற்று யோசிக்காமல் கோல் பண்ணிட்டேன். அது ரெண்டும் பொலிஸ்சிட்ட இருக்கும் எண்டு யோசிக்கேல்லை.நாளைக்கு எப்பிடியும் பொலிஸ் ஸ்டேஷன் போகவே வேணும்"

அறையின் ஏசிக் குளிருக்கு கௌதமின் அணைப்பு இதமாக இருந்தாலும், விது -பட விவகாரம் மனசில் கறையான்களின் அரிப்பைக் கொடுத்துக் கொண்டிருந்தது.கௌதமிடம் சொல்லலாமா? சொன்னால்  தன்னை நம்புவானா? கௌதம் நம்பினாலும் விது பதிலடியாக என்ன செய்வானோ? என்று பலப்பல சிந்தனைகள் கலங்கடித்துக்கொண்டிருந்தன.

"என்ன மகாராணி இன்னும் சந்தேகம் போல இருக்கே..விட்டா கௌதம் கொலைகாரன்  எண்டு நீயே பேப்பர்,ரேடியோ,டீவீக்கு நியூஸ் குடுத்துடுவாய் போல இருக்கே" சிரித்து சிரிக்க வைக்க முயன்றான் கௌதம்.

சிரிக்கும் மனநிலையில் இல்லாவிட்டாலும் இந்தநிலையில் சிரித்துவைக்காவிட்டாலும் கௌதம் மனம் நோந்துபோகும் என்பதற்காக மெல்லியதாக சிரித்துவைத்தாள் வர்ஷா.
"அடடா இதுக்கே சிரிப்பாய் என்று தெரிஞ்சிருந்தா குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறமாதிரி ஏதாவது ஜோக் சொல்லியிருப்பேனே" என்று அர்த்தபுஷ்டியோடு சொன்ன கௌதமின் பார்வை ஆசையோடு வர்ஷாவின் வளவள கழுத்தில் இருந்து கீழிறங்கி மேய ஆரம்பித்தது.


----------------------

கழுத்தா அது? கண்ணாடிக் குடுவை.தண்ணீர் அவள் குடிக்கும் நேரத்தில் வெளியே இருந்து வழுக்கி செல்வதைப் பார்க்கலாம் போல அவ்வளவு மென்மை.

பூமியில் உள்ள அழகிய பூக்கள் எல்லாம் சேர்ந்து திரட்டி பிரம்மன் செய்த பூப்பந்துகள் என்று வைரமுத்து வர்ணித்த அளவெல்லாம் இல்லை.ஆனாலும் பார்ப்பவர்களை மூச்சுமுட்ட செய்கிற அழகுகள் வர்ஷாவிடம் இருந்தன. பல்கலை நாட்களில் அவள் விளையாடும் வலைப்பந்தைக் காணக் கூடும் கூட்டமெல்லாம் பரிமாற்றப்படும் பந்தைப் பார்த்ததை விட அவள் நெஞ்சப்பந்துகளை வட்டமிட்டதை அவளும் அறிவாள்.

உடுக்கை இடுப்பு என்று தமிழிலும் Hour Glass என்று ஆங்கிலத்திலும் வர்ணிக்கப்படும் அம்சமான இடையும், உடலின் மேற்பாதியை சமன் செய்யும் வளைவு நெளிவுகளுடைய கீழ்ப்பாதியும் தக்கதொரு சிற்பியால் செய்த உயிருள்ள சிலையோ எனப் பார்ப்பவரை பார்க்க செய்யும்.

நினைவுகளும்,சூடான பெருமூச்சுக்களும் சேர்ந்துகொண்டே,
திருமணத்தின் பின்னர் புதிய அழகு பெண்களிடம் சேர்ந்துவிடுகிறது என்பது உண்மைதான். உடலெங்கும் புதிதாக தங்கமுலாம் பூசியதுபோல மினுமினுப்பாக இருந்த வர்ஷாவை மீண்டும் மனசில் ரீவைண்ட் செய்து செய்து மனத்தைக் கிளர்வுபடுத்திக்கொண்டு குளுகுளு ஏசி அறையின் மெதுமெது மெத்தையில் தனியாகப் புரண்டுகொண்டிருந்தான் விது.

கையில் இருந்த அந்தப் புகைப்படங்களை மீண்டும் எடுத்துப் பார்த்துக்கொண்டே
"அதிர்ஷ்டக்கார கௌதம்.. இப்ப தூக்கத்தால் இடையில் எழும்பி எத்தனையாவது ரவுண்ட் போறியோ" மனதுக்குள் கருவிக் கொண்டே மீண்டும் நூற்றுப் பதினெட்டாவது தடவையாக பெருமூச்சு விட்டுக் கொண்டான்.

வர்ஷு என்ன செய்வாள்? மிரட்டலுக்கு இணங்கி நாளை தானாக வருவாளா? இன்னும் ஏதாவது தான் இறங்கி செய்யவேண்டி ஏற்படலாமா? யோசித்துக்கொண்டே ஒரு கையில் பற்றவைத்த சிகரெட்டை வாயில் அமர்த்திவிட்டு, தன் டொஷீபா லாப்டாப்பைத் திறந்து நோண்ட ஆரம்பித்தான்.

வர்ஷு என்ற folderஐத் திறந்து ரகசியமாக எடுத்த படத்தில் அரைகுறையாக ஆபாசமாகத் தெரிந்த வர்ஷுவைக் காமத்தோடு விழுங்கிக்கொண்டே,"எத்தனை பேரடி இப்பிடி ஆரம்பத்தில் டிமாண்ட் காட்டிவிட்டுப் பிறகு மடங்கி இருப்பீங்க? பார்க்கிறேனே.. இங்கே ரூமைச் check out பண்ண முதல் உன்னை check out பண்றேன்" என்று பழைய சத்யராஜாக குரல் கொடுத்துக்கொண்டே, இப்பவே நெட்டில் ஏற்றிவைக்கலாமா,பிறகு பார்த்து ஏற்றிக்கொள்ளலாமா என்று யோசித்துக்கொண்டே இணைய இணைப்பிநூடாகத் தன் ஏதோவொரு fake profileஇல் loginஆகி இணையத்தில் எதோ ஒரு வம்பு வேலையைத் தொடங்கும் நேரம் அதிகாலை 3.55.

அறைக்கதவு மெதுவாகத் தட்டப்பட்டது.

-------------------------------
காலை 7.45
'நீல வானம்... நீயும் நானும் ' கௌதமின் செல்பேசி கமலின் குரலை அறையெங்கும் பரவவிட்டு போர்வைக்குள் கலைந்து,களைத்துக்கிடந்த கௌதம்+வர்ஷாவை எழுப்பியது.

அலுத்துக்கொண்டே "ஹெலோ" சொன்ன கௌதமுக்கு மறுமுனையில் எடுத்த நண்பன் சொன்ன விஷயம்
- அதே ஹோட்டலில் அதிகாலை நேரம் பயங்கரமாக சுடப்பட்டு இறந்துபோன இளைஞன் பற்றி...

விது பற்றி எனக்கும் உங்களுக்கும் வர்ஷாவுக்கும் தெரிந்த அளவு கௌதமுக்குத் தெரிந்திருக்காது போலும்.. இளவயதிலேயே இறந்துபோனவனுக்காகப் பரிதாபப்பட்டுக்கொண்டே

"என்ன இது நாங்கள் போற இடமெல்லாம் கொலை கொலையா நடந்துகொண்டே இருக்கு" என்று வர்ஷாவிடம் அலுத்துக்கொண்டே "வர்ஷாம்மா போலீசுக்குக் கோல் பண்ணி ஜெனி,சேகர் கொலைகள் பற்றிக் கேக்கப் போறேன்.எனக்குத் தெரிஞ்ச விஷயங்களை சொல்லப்போறேன்.இனியும் லேட்டாக்கினா உன்னை மாதிரியே அவங்களும் என்னைக் கொலைகாரன் லிஸ்ட்டில் சேர்த்திடுவான்கள்"
--------------------

"ஒரு கிழமைக்குள்ள மூன்றாவது கொலை.. இவனும் ஒரு softwareகாரன். ஏதாவது தொடர்பிருக்கலாமோ?" இன்ஸ்பெக்டர் சூரியப்ரகாஷ் தன் மனதிலிருந்த சந்தேகத்தை கான்ஸ்டபிளிடம் கேட்டே விட்டார்.

"சார் கொலையுண்டிருக்கிறவன் நேற்றுத் தான் இங்கே வந்து தங்கி இருக்கிறான்.கண்மூடித்தனம சுடப்பட்டிருக்கிறான். அவனுடைய லேப்டாப் சிதறியிருக்கு.இறந்து போன விதுரன் என்றவன்ட வோலேட் (wallet) தவிர வேற தடயங்கள் இல்லை"

"இவனைப் பற்றி இன்னும் விசாரிக்கவேணும்.அதுசரி முதல் ரெண்டு கொலைகளின் கை ரேகை ரிப்போர்ட்டுக்களை மறுபடி பார்க்கணும்.அந்த மொபைல் நம்பர்களுக்கு வந்த கோல் யார்ட்ட இருந்து வந்ததெண்டு கண்டுபிடிச்சாச்சா?" கேட்டுக்கொண்டே இருந்த சூரியப்பிரகாஷின் செல்பேசி கிணு கிணுத்தது.

கான்ஸ்டபில் மேசையில் கொட்டிக்கொண்டிருந்த விதுவின் வொலேட்டிலிருந்து நான்கைந்து கிரெடிட் கார்டுகள்,சில விசிட்டிங் கார்டுகள்,சில்லறைகளுடன் முன்னைய பலகலைக்கழக அடையாள அட்டை,தேசிய அடையாள அட்டை, ஐந்தாறு சிம்களுடன் இறுதியாக விழுந்தது ஒரு போட்டோ...

கொலைக்காற்று இனி ஆதிரை(ஸ்ரீகரன்)யின் தளத்திலிருந்து வீசும்.

November 09, 2010

வயூ+மியூ - புனைவு & வாழ்த்துக்கள்

இது முதன் முதலாக நான் தருகிற புனைவு.
இந்தப் புனைவுக் கதையிலே வரும் பாத்திரங்கள்,சம்பவங்கள் அனைத்தும் முழுக்க முழுக்க கற்பனையே,யாரையும் குறிப்பிடுவன அல்ல என்று நான் அடித்து சொன்னாலும் நீங்கல்லாம் நம்பவா போறீங்க..

சரி சரி..
புனைவுக்குப் போகலாம் வாங்க..



மழை சிறு சிறு தூறல்களாக கொழும்பு நகரின் புழுதி வீதியை ரம்மியமாக நனைத்துக் கொண்டிருக்கும் ஒக்டோபர் மாத மாலைப் பொழுதைக் கையில் உள்ள சூடான கோப்பியுடன் ஜன்னல் தனது அறையின் வழியாக ரசித்துக் கொண்டிருந்தான் வயூ. அவனது கண்ணாடியின் மேலும் ஒரு சில துளிகள் பட லண்டன் ஸ்னோ ஞாபகத்துக்கு வந்தது. இப்போது அங்கேயும் பனி,குளிர் தொடங்கி இருக்கும் என நினைத்துக் கொண்டான்.

மாலை மயங்குவது வயூவுக்கு இப்போதெல்லாம் பிடிப்பதில்லை. கொழும்பிலே மாலை வேளைகள் எல்லாம் தனக்கு வேதனை தரவே வருவது போல வயூ நினைத்துக் கொள்வான்.
லண்டன் நகரத் தேம்ஸ் நதிக்கரையில் தன் கடைசியான காதலி மியூசிக்காவை அவளுக்குத் தெரியாமலே டாவடித்துத் திரிந்த மாலைகளும், இரவிரவாக அவளுக்காக ஏங்கி ஏங்கி வடித்த கவிதைகளுமாக மனது கனக்கும்.

ஆங்கிலப் பாடல்களில் மியூசிக் என ஆரம்பிக்கும் அத்தனை பாடல்களுமே தனக்கும் அவளுக்குமாக எழுதப்பட்டதாக உணர்வதில் தனியான இன்பம் வயூவுக்கு.
மியூசிக்கா திரும்பி ஒரு தடவை பார்த்தாலே அன்று நாள் முழுவதும் தூக்கம் வராது.. அவள் தன் பக்கம் திரும்பித் தும்மினால் கூட அது 'ஐ லவ் யூ' எனக் கேட்பதாக நினைத்துக் கொள்வான்.

மீதிக் கதையினுள் ஆழமாக செல்லுமுன் வயூ யார்? அவன் ஏன் கொழும்பில் இருந்து இப்போது வேதனையில் உழல்கிறான் என அறிய உங்களுக்கு இருக்கும் ஆவலைத் தீர்ப்பது என் கடமையல்லவா?

இந்தப் புனைவின் நாயகன் வயூவின் முழுப் பெயர் மந்தி வயூ..  உங்களில் பெரும்பாலானோருக்கு மந்தி வயூவைத் தெரிந்திருக்க நியாயமில்லை. அதனால் குற்றமும் இல்லை. 

காரணம் லண்டனைப் பிறப்பிடமாகக் கொண்ட மந்தி வயூ ஒரு மிகப் பிரபல,மூத்த ஆங்கிலப் பதிவர்.ஆங்கிலப் பதிவுகள் வாசிக்கும் உங்களில் சிலருக்கு அவரைத் தெரிந்திருக்கலாம்.
தெரியாதோருக்கு -  மூத்த பதிவர் என்றவுடன் இவர் வயதை எக்கச்சக்கமாகக் கூட்டிப் பார்த்துத் தப்புக் கணக்குப் போட்டிடாதீர்கள்.

பாலகனாக இருக்கும்போதே பதிவுலகத்துக்குள் நுழைந்தவராதலால் எப்போதுமே மனதில் இளைஞராகவே இருக்கிறான் வயூ.

அடிக்கடி வரும் இன்ஸ்டன்ட் காதல்கள் கன்னத்தோரம் வரும் நரைகளையும்,முன்னந்தலை முடி உதிர்தலையும் தாண்டி மனதை இளமையாக வைத்திருப்பதாக மனசுக்குள் சொல்லிக் கொள்வான்.

தானுண்டு, தன் ஆங்கிலப் பதிவுகள் உண்டு,தன்னையே அடிக்கடி கலாய்த்து சூப் வைக்கின்ற நண்பர் வட்டம் உண்டு,தனக்குத் தெரிந்த கொஞ்சம் IT உண்டு, இடையிடையே அடிக்கடி வந்து போகும் கல கல ஒரு தலைக் காதல்கள் உண்டு என வாழ்ந்து வந்த லண்டன் வயூவுக்கு அவன் கண்டிப்பான அப்பா ரூபத்தில் வந்த கட்டாய நாடுகடத்தல் தான் கொழும்புப் பயணம்.

ஆமாம் சக்கரவர்த்தியின் ஆட்சியில் செழிப்பான,அபிவிருத்தி கண்ட நாடாக இரு ஆண்டுகளில் மாறிப்போன இலங்கையின் உயர் கல்வித்தரத்தின் புகழும் பெருமையும் கேள்விப்பட்ட தந்தையார் லண்டனில் இருந்து வயூ உருப்படப் போவதில்லை என மேலதிக கல்விக்காக கொழும்புக்கு அனுப்பிவைத்துவிட்டார்.

வீட்டில் செல்லப் பிள்ளையான வயூக்கு இதில் துளியளவும் விருப்பமில்லாவிட்டாலும்,டாடி சொல் மிக்க மஜிக் இல்லை என்பதால் (உண்மையில் மாட்டேன் என்று சொன்னால் அவரது லெதர் பெல்ட் பேசும் என்ற பயமே முதல் காரணம்) உடனே ஓகே சொல்லிவிட்டான்.

இப்போது கொழும்பிலே பட்டப்படிப்பு படித்துக் கொண்டே இரவில் மேலதிக செலவுக்காக பிரபல சைவக்கடை ஒன்றில் (பந்து கபேயோ, பழ நாகமோ எதுவோ ஒன்று) பகுதி நேர வேலையும் பார்க்கிறான்.
லண்டனில் உள்ள நண்பர்களோடு மின்னஞ்சலியோ, ஸ்கைப்பியோ,இல்லாவிட்டால் நம்மைப் போல பேஸ் புக்கியோ தன் பிரிவுத் துயர்களைப் பெருமூச்சோடு போக்கிக் கொள்வான்.
இவனது தனிப்பட்ட வித்தியாசமான ரசனைகள் தெரியுமாதலால் நண்பர்கள் அடிக்கடி 'புதிய காதல் ஏதாவது இருக்கா?' என்று கேட்பது வழமையானது.

காரணம் வயூ லண்டனில் காதல் இளவரசனாக அறியப்பட்டவன்.
ஆனால் அவை அநேகமாக ஒரு தலைக் காதலாக அமைந்தது தன் விதி என்று சொல்லி தன்னை நொந்து கொள்வான் வயூ.
அவனது சில காதல்கள்..

அரச குடும்பப் பெண் ஒருத்தியைக் காதலித்தான்.. அவளுக்குமிவன் காதல் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் என்ன காரணமோ அவசரமாக அவள் யாரோ ஒருத்தனைக் கரம் பிடித்தாள்.
 பிரபல இலக்கிய எழுத்தாளர் டோரோத்தியுடனான இவன் காதல் ரசனை+ரசிப்புக்களுடன் ஊமையாகவே முடிந்தது.
சாதாரண ஒருத்தியாக இருந்த கெனி ப்ளூ என்ற பெண் இவனின் ஒரு தலைக் காதலின் பின்னர் அதன் ராசியோ என்னவோ பிரபல மொடல் ஆக மாறிவிட்டாள்.

மியூசிக்காவுடனான இவனின் ஒருதலைக்காதல் செல்போன்கள் சிலவற்றின் சிக்னல்கள் போலவே சிக்கலாகிக் கிடக்கிறது.
கிடைக்குமா கிடைக்காதா என்பது வருங்காலம் சொல்லும் வரலாறு.

ஆனால் இந்த அப்பாவி வயூவையும் ஒருத்தி காதலித்தாள் என்பது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.
இன்னும் பலர் துள்ளி விழும் இவன் ஆங்கில எழுத்துக்களைக் காதலித்தாலும் ஆளைக் காதலித்தார்களா என்று யாருக்குமே தெரியாது. கூகிள் ஆண்டவருக்கு சில வேளை தெரிந்திருக்கலாம்.

வயூவை உயிருக்கு உயிராகக் காதலித்த பெண் 
அழகான ஒரு பிரபலம்.. 
ஜூப்பா கான்.
வயூவின் வழமையான தெரிவுகளை விட இவள் கொஞ்சம் அழகு தான்.
தானாக முன் வந்த இவளை வயூ தள்ளி வைக்க என்ன காரணம்?
'விட்டுக் கொடுத்துவிட்டேன்' என்று இன்றும் சொல்கிறான் 'ரொம்ப நல்லவனான' வயூ.
ஜூப்பாவைக் காதலித்த சிலருக்காகவும்,ஜூப்பா காதலித்த பலருக்காகவும் வயூ செய்த தியாகமே அது என சிலருக்கே தெரியும்.

இப்போது மியூசிக்காவுக்காக தொலைவிலிருந்து மனதுள் இசை பாடிக் கொண்டிருந்தாலும் கிட்டுமோ கிட்டாதோ கதை தான்.
ஆனாலும் கொழும்பு நகரில் கற்கும்,வேலை செய்யும் இந்தக் கால கட்டத்திலும் காதல் மனம் கண்கள் கொண்டு நோட்டம் விட்டுக் கொண்டே இருக்கிறது.
லண்டனுக்குத் தான் கொண்டு செல்லும் தன்னுடைய தேவிக்காக..

பிந்திய தகவலின்படி நரேந்திர மோடியின் உறவுக்காரப் பெண்ணொருத்தியின் நட்புக்காக மோடி மஸ்தான் வேலைகளில் இறங்கியுள்ள வயூ,தன பெயரையும் மந்தி மோடி என்று மாற்றிக் கொள்வது பற்றி மலையாள ஜோசியர் ஒருவரிடம் ஆலோசனை பெற்றுக் கொண்டிருப்பதாக அவரது நட்புக்குரிய லண்டன் பதிவர்கள் கிசுகிசுக்கிறார்கள்.

தென்னந்தோப்புக்கள் பலவற்றின் உரிமையாளரின் மகளான அந்த குஜிளிக்கு முன்னால் லலித் மோடி தன் அப்பாவின் பிசினெஸ் பார்ட்னர் என்றும், ருசி மோடி  தன் தூரத்து சொந்தம் என்றும் சில,பல பீலாக்கள் விட்டு,பிட்டுக்கள் இட்டு நோட்டம் விடுவது வயூவின் அண்மைக்கால பொழுதுபோக்காம்.

இப்போதெல்லாம் இரவுகளில் உணவகங்களில் பணத்தை எண்ணுகிறானோ இல்லையோ நம்ம ஹீரோ மனசுக்குள் மோடியின் தென்னந்தோப்பில் இருந்து வரப்போகும் தேங்காய்களையும்,சிரட்டைகளையும் கணக்குப் போட்டு சுகம் காணுகிறார்.

கொஞ்சம் அவதானித்துப் பாருங்கள்.. அவரின் காதுக்குள் இரையும் Head phoneஇல் ஒலிக்கும் பாடல்..
Picking coconuts from the coconut tree -eh
nah, nah, nah, nah-nah-nah-nah, nah nah nah
bIggest coconuts you ever seen'
nah nah nah nah nah nah


அடடா மறந்தே போனேனே.. 
இன்று நம் நண்பர்,பதிவுலகின் சிரேஷ்ட பதிவர்களில் ஒருவர் வந்தியத்தேவனுக்குப் பிறந்தநாள்.
சொ.செ.சூ சக்கரவர்த்தி வந்தியத்தேவனுக்கு எனதும்,எமதும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

 மாமா என்று வாயார நாம் அழைக்கும்போதெல்லாம் மனமார தானாக ஆப்புக்களில் ஏறி மறந்து எம்மையெல்லாம் மனமகிழச் செய்கின்ற
எங்கள் மாமா,என்றும் இளமையுடன் இதே பச்சிளம் பாலகனாக மனதில் மகிழ்வுடன் இவ்வாண்டில் இனிக்கும் செய்திகள் எமக்கும் தந்து உயர்வு காண நட்புடன் வாழ்த்துகிறேன்.

பி.கு + மு.கு 
(பிற்குறிப்பு+முக்கிய குறிப்பு)

புனைவு வேறு,வாழ்த்து வேறு..
நம்பவா போறீங்க.. ஆனால் நம்பித் தான் ஆகணும்.

மாமா வந்தி, நீங்க நம்பிறீங்க தானே? அது போதும் எனக்கு..
  

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner