May 31, 2010

கங்கோன் - ஒரு கறுப்பு சிங்கம் - Kangon - The Black Lion


நீண்ட நாட்களாக இன்று,நாளை என்று நானே எனக்கும்,சக நண்பர்களுக்கும் எதிர்பார்ப்பை அளித்து அளித்து ஏமாற்றிய பிரம்மாண்டப் பதிவு இது..
என் வார்த்தைகளில் சொல்லப் போனால் இலங்கைப் பதிவுலகில், இது ஒரு ராவணன்,ஒரு எந்திரன்..
நான் என்னையே மணிரத்தினம்,ஷங்கர் என்பவர்களோடு ஒப்பிடுவதற்காகவல்ல..
இந்தப் பதிவின் நாயகன் ஒரு சூப்பர் ஸ்டார் ரஜினி, இல்லாவிட்டால் சீயான் விக்ரம் ரக பிரபலம் என்பதனால்.. ;)
                              சொன்னா நம்ப மாட்டீங்களே..  எப்பூடி?

பதிவர்களைக் கலாய்த்து மொக்கைப் பதிவு இடுவதென்பது ஒரு கலாசாரம் ஆகிப் போனதால் நானும் சக நண்பர்களான வந்தியத்தேவன்(இவர் சொந்த செலவில் சூனியம் வைத்து எமக்கெல்லாம் ஒரு களிப்பூட்டும் நட்சத்திரம் ஆகின்றவர்- அது பதிவு,கும்மி,ட்விட்டர்,நேரில் என்று சகல வகையிலும்),ஆதிரை (கொஞ்சம் சீரியஸ் பதிவரேன்றாலும் எலிக் குஞ்சுப் பதிவினால் எல்லா நாட்டிலும் பிரபலமானவர்), புல்லட்(கல கல பதிவர்-இப்போதெல்லாம் எப்போதாவது எழுதினாலும் அப்போதைக்கு ஹிட் அடிப்பவர் - லேட்டஸ்ட் தகவலொன்று அண்மைக்காலமாக வாழ்க்கையின் வளப்படுத்தலுக்கு மிக முக்கியமான விடயமொன்றில் ரொம்பவே மும்முரமாம் இவர்) ஆகியோரை கலாய்த்து சிறப்புப் பதிவுகள் இட்டுள்ளேன்.

ஏனைய சகலரையும் அடிக்கடி பின்னூட்டங்கள்,கும்மிகள்,சில பதிவுகளினிடையே கடிப்பது கல கலப்பது வழக்கம்..

இந்தப் பதிவில் எம்மால் சிறப்பிக்கப்படும் இவர்...
உண்மையிலேயே நான் பார்த்து வியந்து,சில வேளை கொஞ்சம் பொறாமைப்பட்ட ஒரு இளம் பதிவர்..


யாரையாவது பிடித்து உரித்து,பின்னி எடுக்க பல விஷயமும் தெரிய வரணுமே..இவர் பற்றித் தான் ஒவ்வொரு நாளும் புதுசு புதுசா பலபல விஷயங்கள் வெளி வரும்..
சகல துறை விஷயம் பற்றியும் இவரோடு நாளின் இருபத்து நான்கு மணி நேரமும் அரட்டலாம்.. (பயல் வெட்டி என்று சொல்லி கேலி பேசப்படாது.. உயர்வு நவிற்சி மட்டுமே எடுக்கப்படவேண்டும்)

இந்தப் பதிவு எங்கள் இன்றைய நாயகன், வந்தி லண்டன் சென்ற பிறகு இலங்கைப் பதிவுலகில் என்றுமே எங்கள் நாயகனாகியுள்ள சின்ன வந்தி என்ற சிறப்புப் பெயரையும் தாங்கியுள்ள கங்கோன்,கோபி என்றெல்லாம் தேவைக்கேற்ப,நேரத்திற்கேற்ப அழைக்கப்படும் இப்போதைய 'க்ரிஷ்' இன் பாராட்டுப் பத்திரம் என்பதைக் கருத்தில் கொள்க.. ;)
(மெய்யாலுமே பாராட்டுத் தாங்கோ)

கங்கோன் - ஒரு கறுப்பு சிங்கம் 
Kangon - The Black Lion


கனக கோபி என்று அறியப்பட்ட கங்கோன் (அண்மைக்காலம் வரை இப்படித் தான் எம் அனைவருக்குமே என் இவர் போகின்ற இணைய உலா வழியாக உலகம் முழுவதுமே இவரைத் தெரியும்) இப்போது தன்னை முன்னர் தானே வைத்துக் கொண்டது போல கோபி என்றோ, கனக கோபி என்றோ அல்லது கங்கோன் கோபி என்றோ அழைக்காமல் கிரீஸ் சாரி.. க்ரிஷ் என்று தன்னை அழைக்க வேண்டும் என்று விரும்புகிறார்..

காரணம் நிச்சயமாக நுமேரோலோஜி அல்ல.. அப்படியானால்?

ஒவ்வொரு மணி நேரமும் மாறும் Facebook மற்றும் G chat statusக்கும் இந்தப் பெயர் மாற்றத்துக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ என கிரிஷின் நட்பு வட்டாரம் இன்னும் புலனாய்கிறது.
கங்கோனின் இன்னொரு ஆயுதம் கமெரா.. ஆனால் சில சமயம் இவனுக்கே அது சொ.செ.சூ வைத்து விடுகிறது..


இணையத்தின் இண்டு இடுக்கு எல்லாம் தெரிந்த ஒரு டேக்னோலோஜி குண்டு இவன் ;)
வலைப்பதிவின் சூட்சுமம் எல்லாம் விரல்களில் வைத்துள்ள நம்ம ஹீரோ, இணையத்தின் சகல தொடர்பு சமூகத் தளங்களிலும் நாள் முழுதும் குடியிருப்பார் (வேற வேலை??)

ட்விட்டர் இவரின் பாரம் தாங்காமல் அடிக்கடி Too much of load.. Try in a few minutes என்று அலறும்..
ஆனானப்பட்ட லலித் மோடியும் இவருக்குப் பின் தான்..
கொஞ்சக் காலத்திலேயே 14 500 twits அடித்தாடியுள்ளார் என்றால் சும்மாவா?

Facebook இவர் வருகை பார்த்ததுமே குய்யோ முறையோ என்று கூச்சலிட ஆரம்பிக்கும்.
பின்னே இவரின் பட லோடுகள் ஒரு பக்கம்.. பண்ணும் status மெசேஜ் லொள்ளுகள் ஒரு பக்கம்..

ஆனால் ஒரே ஒரு பாச உறவுக்கு மட்டும் தம்பியர் பயமோ பெரும் பயம்..
எந்தப் புயலுக்கும் அசையாத இந்த ஆல மரம் அந்தப் பெயர் சொன்னால் மட்டும் அனைத்திலும் Log out ஆகிவிடும்..

அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்.. ;)

இணையத்தில் என்ன வேண்டும்.. அத்தனையும் தெரியும் இவனுக்கு.. ;)
இவன் உடல் போலவே இவன் அறிவும் ஒரு பரந்த கடல்.. ;)
ஹக்கிங்,பிஷிங் தொடக்கம் கண்டன காணாதன எல்லாம் அறிவான்..
சில சமயம் ரஷ்யாவிலும் கூட கங்கோன் இணையம் மேய்ந்து கொண்டிருப்பான்..
கூகிள் ஆண்டவரின் ஆசியில் டச்சு,ஸ்பானிஷ் மொழிகளிலும் ஆன்டிமாருடன் கடலை போடும் வித்தையும் அறிந்தவன் ;)
நாங்கள் எல்லாம் தமிழ் போரம்களில் தடுமாறிக் கொண்டிருக்க சோமாலியா,சுவாசிலாந்து,செர்பியா என்று பேரே அறியாத இடங்களிலெல்லாம் கங்கோனின் பெயர் அறிந்திருக்கும்.

வெட்டிப் பயல் கங்கோன் என்று தன்னை நாவடக்கத்தோடு சொல்லிக் கொண்டாலும் வெட்டி வா என்றால் கட்டி வருவான் தம்பி.
இலங்கையில் இரண்டாவது பதிவர் சந்திப்பில் வியர்வை ஆறாக ஓட ஓட உழைத்துக் களைத்த உழைப்பாளி இவனே..
நனைந்து இவனின் கட்டழகு உடலோடு ஓட்டிப் போன நீல சேர்ட் சான்று.
                                                           உழைப்பாளி

கிரிக்கெட் சபைகள் எல்லாம் நம்ம ஹீரோவின் பெயரைக் கேட்டாலே அதிர்ந்து போய் விடும்..
பின்னே, எல்லா விதிகளையும் விளக்கங்களையும் தெரிந்து வைத்துக் கொண்டு ஒரு போல நடமாடித் திரிந்தால் சும்மாவா?
ஒரு போட்டியில் ஒரு பந்து வீசி முடிய முதல் நம்ம கங்கோன் ஐந்து ட்விட் பந்துகளை வீசி அசரடிப்பான்..
cricinfo கூட செய்திகளைப் போட முதல் இவனுக்கு தனியாக மின்னஞ்சல் செய்து உறுதிப் படுத்திக்கொள்ளுமாம்..

இலங்கை அணி அடுத்த சனத்தாக கருதி ஒவ்வொரு நாளும் அழைப்பு விடுத்துக் கொண்டிருக்காம்.. (ஹே என்னா நக்கல்.. சகலதுறை வீரர்னு சொன்னேன்)

 ஒரு பிரபல பதிவராக இருந்து அதில் தடம் பதித்த ஈரம் (!) காய முதலே பிரபல பின்னூட்டவாதியாக மாறி 'me the first' போட்டே சாதனை நடத்த வேறு யாரால் முடியும்?

எங்கிருந்து தான் வருகிறாரோ.. எல்லாப் பதிவுகளிலும் 'me the first' கங்கோன் தான்..

எவ்வளவோ பண்ணிட்டம் இதைப் பண்ண மாட்டோமா என்று வந்தி சென்ற பிறகு அந்த இடத்தைத் தனதாக்கி சளைக்காமல் சொந்த செலவில் சூனியம் வைக்கும் வித்தையிலும் கை தேர்ந்து குருவை மிஞ்சிக் கொண்டிருக்கும் சிஷ்யன்..
                            காதலுக்கு மரியாதை செய்யும் கறுப்புத் தங்கம்..


தினமும் கும்மியில் சளைக்காமல் எட்டுத் திக்கிலும் வரும் அடிகளை தன பஞ்சு மெத்தை உடலில் பவுன்ஸ் பண்ண விட்டு சிரிப்பார் இந்தக் கறுப்புக் கட்டழகர்.

உடலமைப்பால் தான் இவருக்கு கறுப்பு நமீதா என்ற பெயரும் வந்தது என்று தப்பாக யாரும் தப்பர்த்தம் செய்து விடக் கூடாது.. ;)
இவர் மனசும் பெரிசு..

யாருக்கு என்ன உதவி எப்படி தேவையோ உயிரைக் கொடுத்தாவது செய்யக் கூடியவர்..
பாவம் இந்த அப்பாவி நண்பன்.. ;)
ஏண்டா கூப்பிட்டோம் என்று ஆயிருப்பான்..

தன வீட்டருகில் உள்ள குழந்தைகளுக்கு உணவூட்டும் தாய்மாருக்கு இவன் ஒரு நடமாடும் பூச்சாண்டி..
ஹம்ப்டன் லேனில் உள்ள விற்கமுடியா மரவள்ளிக் கிழங்குப் பொரியல்,முறுக்கு,வடை போன்றவற்றின் ஏகபோக சீரண மெசின் இவனே..
பக்கத்து வீட்டுக் குழந்தைகளுக்கு கிரிக்கெட் பழக்கிறேன் என்று தினமும் பயமுறுத்தி பயமுறுத்தியே அதெல்லாம் இப்போது ஒரு நாளும் ஸ்கூலுக்கு கட் அடிக்காமல் போவதாகத் தகவல்..

இதெல்லாம் போதாமல் தபால் மூலப் பட்டப் படிப்பு போல, மின்னஞ்சல் மூலம் கிரிக்கெட் பயிற்சி என்று திருகோணமலை,வவுனியா,யாழ்ப்பாணப் பக்கம் உள்ள அப்பாவிப் பதிவர்களைஎல்லாம் போட்டுப் படுத்தி எடுக்கிறாராம் நம்ம கிரிக்கெட் ஞானி.

கையடக்கத் தொலைபேசியை இவன் வயதொத்த பச்சிளம் பாலகர்கள் காதலுக்கும் அரட்டைக்கும் பயன்படுத்த, இணையத்தில் 24 மணிநேரமும் தங்கி பாய் விரித்துப் படுத்திருக்கும் நம் ஹீரோவோ, இணையத்திலே அதுக்கெல்லாம் நேரம் ஒதுக்கி எங்கு வந்தாலும் தன் கையிலுள்ள மொபைலை அமுக்கு அமுக்கியே உலக கிரிக்கெட்டைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்.

பில் கட்டுகிற அப்பா போல அந்த டப்பா மொபைலும் நசுங்கி அவதிப்பட்டுத் திணறும்..

இருக்கிற,நிக்கிற சிக்கலில் எல்லாம் நேரடியாக தில்லுடன் மோதி தான் கருத்தை சொன்னதில் எப்போதுமே கங்கோன் பின் நிற்றதில்லை.(இப்படியான கட்டுமஸ்தான உடல் இருந்து பின் என்ன பலன்?)
இவர் வழி தனி வழி..
                       எப்பிடி இருந்தவன்.... ;)


ஆனால் இப்போ கொள்கை மாறி விட்டார் என்று அண்மைக் காலத்தில் எழுந்த சில சல சலப்புக்களை எல்லாம் மறுதலித்து கங்கோன் சொன்ன வார்த்தைகள் சரித்திரப் பிரசித்தி வாய்ந்தவை
"உதவி கேட்டால் யாருக்கும் உயிரையும் கொடுப்பான் இந்த கிரீஸ்..
மறப்போம் மன்னிப்போம்"



பிரபல பின்நூட்டவாதியாகவே வெற்றிப் பயணம் போய்க் கொண்டிருந்தவரை எப்படியாவது தடுத்து நிறுத்தி பதிவுப் பக்கம் அழைத்து வரவேண்டும் என இந்தக் கலாய்ப்புக்கு முயற்சி செய்கின்ற போதே, யாராலும் முடியாத அந்த விடயத்தை சாதித்தார் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் சனத் ஜெயசூரிய.

T 20 உலகக் கிண்ணப் போட்டிகளில் சனத்தின் அபார ஆட்டம் பார்த்த கங்கோன் கொதித்தெழுந்து தன் மௌனம் கலைத்துப் பதிவிட்டார்..
அடுத்தடுத்து இரு பதிவு..

அம்மா பகவான் பக்தர்களுக்குப் பிறகு இப்போது சனத் ஜெயசூரிய ரசிகர்களும் கண்கோனைத் தேடித் திரிகிறார்களாம்.. அவர்களுக்கும் இவரது திருமுகம் காட்டவே இந்தப் பதிவு..


அண்மைக் காலமாகப் பதிவுகள் போடுவதிலிருந்து கொஞ்சம் விலகி இருந்தாலும் G Chat statusஇலேயே மினி பதிவுகள் இட்டு தம்பியர் அசத்தி இருக்கிறார்.. அவையெல்லாம் வெறும் மெசேஜ்களா இல்லை இல்லை.. தனியான தவிப்பும்,தாபமும் நிறைந்த காதல் காவியங்கள்..


போய்ச் சேர வேண்டியவரிடம் போய்ச் சேர்ந்ததா என்பதே இப்போது முக்கியமான கேள்வி..
                  நீங்க எல்லாம் ஏறினா எந்தக் கப்பல் தான் கவிழாது சாரே..


கங்கோனின் காவிய வரிகளில் தெரிந்தெடுக்கப்பட்டவை..

வைகாசி நிலவே வைகாசி நிலவே, மை பூசி வைத்திருக்கும் கண்ணில் நீ பொய் பூசி வைத்திருந்ததென்ன....


சமூகம், கட்டமைப்பு, விழுமியம் இவற்றை விட எனக்கு நான் முக்கியமானவன்.... என் தேடல் தொடங்குகிறது உறவகளுக்காய்...


கொக்கக் கோலா பிறவுணு கலருடா.... என் அக்காப் பொண்ணு வேற கலருடா....


நீ தோலைப் பார்த்து மாடு பிடிச்சா தொழிலுக்காகாது..


மனசு மட்டும் வெள்ளையாக இருந்தாலாகாதா?
நான் கண்ணீராலே கழுவிப் பார்த்தால் கறுப்பும் அழியாதா?


நான் நிராகரித்த நபர்களைத் தேடிய என் பயணம் நிராகரிக்கப்படுகையில் வரும் வலி நான் நிராகரிக்கப்படுவதை விடக் கொடியது.... #காதலேதும் இல்லை....


ஆண்டவா ஆண்டவா ஆறுபடை ஆண்டவா.... நாட்டுக்குள்ள எல்லாருமே நடிக்கிறாங்க ஆண்டவா....


நேசமில்லாத வாழ்வில் பாசமண்டாகுமா?


என் தாயின் மீது ஆணை, எடுத்த சபதம் முடிப்பேன்.............


கதறக் கதறக் காதலிப்பேன், உன்னைச் சிறுகச் சிறுக சிறைபிடிப்பேன்.... #அழகாயிருக்கிறது #பிடித்துப்போய்விட்டது


பூப்பூக்கும் தருணம், பூங்காற்றும் அறியாது... காதல் வரும் தருணம், கண்களுக்குத் தெரியாது....


உசுரே போகுதே உசுரே போகுதே உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கையில...


அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம் எனக்கது தலையணை நனைத்திடும் நேரம்...




யாழ்ப்பாணம் நல்லூர் வீதி ஆச்சியின் ஓசிக் கடலையும், மணியம் காரச் சுண்டலும்,ஹம்ப்டன் லேன் மரவள்ளிக் கிழங்கு சிப்சும், சிந்து கபே தோசையும், நல பாகம் பிட்டும் அப்பமும் இருக்கும் வரை கங்கோன் எனப்படும் கருப்பு நமீதாக் கிரீஸ் இன்னும் பல சாதனைகள் நிகழ்த்தி இலங்கைப் பதிவுலகில் என்ன உலகப் பதிவுலகிலேயே ஒரு தனி முத்திரை பதித்து தான் 'கறுப்பு சரிதத்தை' எழுதுவார் என எம் குழு சார்பாக வாழ்த்துகிறோம்..

இவர் பற்றி எழுதினால் எழுத்து கொட்டிகிட்டே இருக்கு.. ஆனால் எந்தவொரு பதிவுக்கும் ஒரு முடிவு வேண்டும் இலையா..
So.....
                                             THE END


முக்கியமான பிற் குறிப்பு -
இந்தியாப் பக்கம் பதிவுலக அரசியல்(பதிவு-எதிர்ப் பதிவு), இலங்கைப் பக்கம் பதிவுலக அரசியல் (போலி-நிஜம்)என்று முண்டுப்பட்டு,முறுக்கி,மூக்குடைத்து,முட்டி மோதும் நேரம் அந்த சூட்டைஎல்லாம் இந்த மொக்கை,மகா மொக்கை பிரம்மாண்டப் பதிவில் கூலாகி கல கல என்று இருங்க என்ற நல்லெண்ணத்தோடு வழங்கி இருக்கிறோம்..


இது ஒன்று பட்ட ஒரு கூட்டுக் கலாய்த்தல் படைப்பு..

இயக்கம் - A .R .V .லோஷன்


உதவி இயக்கம் - பவன் ;) - எரியாத சுவடிகள்..

ஆலோசனைக் குழு - ஒன்றா ரெண்டா.. ;)

பவனின் வரிகளில் எங்கள் கறுப்புத்தங்கம்....

May 30, 2010

திரையுலகத்துக்கு பதிவுலகம் வழங்கும் விருதுகள்

திரையுலகத்துக்கு பதிவுலகம் வழங்கும் விருதுகள்

சக பதிவர் சதீஷும் இன்னும் சில நண்பர்களும் இணைந்து இந்த வித்தியாசமான முயற்சியை பிரம்மாண்டமாக இம்முறை ஆரம்பித்துள்ளார்கள்..

'வெளியிலிருந்து' ஆதரவை என் தளத்தின் மூலம் வழங்குவதாக சொல்லி இருந்தேன்..


நீங்களும் இதிலே ஆர்வமுள்ளவராக இருந்தால் கீழ்க் காணப்படும் சுட்டியில் கிளிக்கி விபரங்களை அறியுங்கள்..

http://sshathiesh.blogspot.com/2010/05/2010.html

இப்போது இனிக் கீழே காணப்படும் சுட்டியில் கிளிக்கி சென்று வாக்களியுங்கள்..

http://tamilcinemavote.blogspot.com/2010/05/awards-2010.html

May 24, 2010

அகிலன் இன்று வெற்றியின் காற்றின் சிறகுகளில்

இலங்கை வந்துள்ள கவிஞர்,பதிவர்,எழுத்தாளர் த.அகிலனை இன்று எமது வெற்றி வானொலியின் காற்றின் சிறகுகள் நிகழ்ச்சி மூலம் நான் நேர்காணவுள்ளேன்.
இன்றிரவு இலங்கை நேரப்படி 9 .15 இலிருந்து இந்த நிகழ்ச்சி ஒலிபரப்பாகவுள்ளது.



இலங்கையைச் சேர்ந்த அகிலன்,பதிவுலகினாலும்,பின்னர் தனது கவிதைகளினாலும் உலகம் முழுதும் உள்ள தமிழர்களால் அறியப்பட்டவர்..
அண்மைக்காலத்தில் மரணத்தின் வாசனை,வடலி வெளியீடுகள் ஆகியன் இவரை மேலும் உலகறிய செய்துள்ளன..

இன்றிரவு வெற்றி FM மூலமாக அகிலன் பகிரும் தனது அனுபவங்களைக் கேட்க...



A 9 வழியாக யாழ்ப்பாணம் - ஒரு படப் பதிவு

எனது யாழ்ப்பாணப் பயணத்தில் எடுக்கப்பட்ட நிழற்படங்கள்..
சில முக்கிய அடையாளங்களைப் பதிவு செய்து படப் பதிவாகத் தருகிறேன்..

எண்ணங்களை எழுத்துக்கள் சொல்வதை விடப் படங்கள் தெளிவாக சொல்லும் என நம்புகிறேன்.

படங்களைப் பெரிதாக்கிப் பார்க்க படங்களை கிளிக்குக.. 


A9 வீதி வவுனியா - பயணத்தின் ஒரு வித தொடக்கப் புள்ளி..
இலங்கையின் தற்போதைய பரபரப்பான சந்திப்புப் புள்ளி.


யுத்தம் முடிந்ததன் அடையாளம்..
ஷெல் கோதினுள் மலர்ச் செடி..
வன்னியில் இராணுவத்தினரால் நடத்தப்படும் உணவகம் ஒன்றின் வாயிலில் எடுத்தது.
எத்தனை பேரின் உயிரை இதிலிருந்து புறப்பட்ட குண்டு குடித்ததோ?



துணுக்காய் சந்தியில் காணப்படும் இடங்கள் குறித்த அடையாளப்பலகை.
பின்னால் இடிந்த கட்டடம்..

நீண்ட நெடும் வீதி.. 
எத்தனை வாகனங்கள் அங்கும் இங்கும் பயணித்தாலும் இந்த வீதியின் ஆழ்ந்த மௌனமும்,தனிமையும் எங்களுக்கும் ஆழ்ந்த ஏக்கத்தையும் பெரு மூச்சையும் தரக் கூடியவை.


இரு புறமும் குவிக்கப்பட்டுள்ள சீன,ஜப்பானிய,கொரிய உதவிகள்..???
தற்காலிக இருப்பிடங்கள் அமைப்பதற்கான கூரைகள்,சுவர்கள் என்று சொல்லப்பட்டன.
தேவையில்லாமல் இந்தப் பகுதிகளில் வாகனங்கள் நிறுத்தப்பட முடியாது என்ற அறிவித்தல் பலகைகளையும் கண்டேன்.

மழையில் நனைந்து வெயிலில் காய்கின்றன.. இலவச உதவிகள்..



பிள்ளையாருக்கு அரோகரா.. 
முறிகண்டி ..
கோவில் சுவர்களிலும் துப்பாக்கி ரவைகள்,ஷெல்லடி அடையாளங்கள்..
பாவம்.. எல்லோரையும் காப்பாற்ற இங்கே இருக்கும் இவரை யார் அந்த வேளையில் காப்பாற்றினரோ?



யுத்தத்தின்,தாக்குதல்களின் கோரத்தை சொல்லும் குண்டும் குழியுமான வீதி..
நீண்ட வீதியின் இரு மருங்கிலும் இன்னமும் பல இடங்களில் கண்ணி வெடி அபாயமும் உள்ளது.



கிளிநொச்சி..
வீழ்ந்து கிடக்கும் பாரிய நீர்த் தாங்கி.
அழிவுகளின் அடையாளங்கள் இப்போது சுற்றுலா மையங்களாகி படங்களில் பரிதாபங்கள் தேடுகின்றன.

முல்லைத் தீவில் குண்டுகளால் கொத்துக் கொத்தாக சிதறிப்போன,சேதமுற்ற வாகனங்கள் குவியலாகக் குவிக்கப்பட்டுள்ள ஒரு வளவு..

தெளிவாகத் தெரியும் தமிழ்ப் பெயர்ப் பலகைகள்..
'த' வாகன இலக்கத் தகடுகள்..
அனைத்து வாகனங்களிலும் முக்கிய,பாவிக்கக்கூடிய பாகங்கள் இல்லை..

அநாதை வாகனங்கள்..
எம்மவர் எத்தனை சிரமப்பட்டு இந்த வாகன சொத்துக்களை வாங்கினாரோ?
உரிமையாளர்கள் எத்தனை பேர் இன்னும் உயிருடன் எஞ்சியுள்ளனரோ?



ஆனையிறவு படும் பாடு..
மாடி வீடாகிப் போன வாடி வீடு.. 


பின்னணியில் கைப்பற்றப்பட்டதன் அடையாளத்துக்காக இராணுவ வெற்றி சின்னம்..
இராணுவ பராமரிப்பில் ஆனையிறவின் உப்பளப் பகுதிகள்..


ஆனையிறவில் சூரியன் மறையும் காட்சி..
வழமையாக இரசிக்கும் உவப்பான காட்சி கூட மனதில் இறுக்கத்தையும் ஏதோ ஒரு கவலையையும் இந்த இடத்திலே தந்தது..
இரத்த சிவப்பாக வானமும்,கரு நிழல் படிந்து பூமியும்..
இருள் சூழ்கிறது..


அந்தி மறைந்து இரவு வருகிறது..
ஆனையிறவின் உப்பளப் பகுதி..
தனியாகக் கிடக்கிறது..



யாழ்ப்பாண நூலகம்.. 
எரிந்தும் மீண்டு எழுந்து நிற்கிறது..


மத்திய கல்லூரி மைதானத்திலிருந்து வெற்றி வானொலியினூடாகத்  தகவல்கள் பரிமாறும் நேரம்...


இசை நிகழ்ச்சிக்கான மேடை அமைப்பு வேலைகள் நடக்கின்றன..
யாழ்ப்பாணத்துக்கு வெற்றி..





தந்தை செல்வா நினைவுத் தூபி..
(*திருத்தத்துக்கு நன்றி சகோதரர்களே,நண்பர்களே)
இன்னும் வெண்மை மாறாமல்..
இத்தனை யுத்தங்களிலும் இது மட்டும் சேதமில்லாமல்..
உயரமாய் இன்னும் எத்தனை தூபிகளோ?


மத்திய கல்லூரி மைதானத்திலிருந்து மணிக்கூண்டு கோபுரம்..
ஒற்றையாய் தனித்து..


பிராமணாகட்டுக்குளப் புனரமைப்புக்கான நினைவுக் கல்..
புனரமைப்பு ஆரம்பித்து ஐந்து ஆண்டுகளாம்.. 
கீழே உள்ள படத்தில் குளத்தின் நிலை பாருங்கள்.. 
வடக்கின் வசந்தமேல்லாம் இப்படித் தான் போகப் போகுதோ?





வெற்றி Tshirt உடன் நாம் தங்கியிருந்த வீட்டின்(இப்போது விடுதி) மாமரத்தின் கீழே..
நாம் போயிருந்த நேரம் மாம்பழங்களாக இல்லாமல் காய்ப் பதத்திலேயே இருந்தபடியால்,
பழங்கள் சுவைக்கக் கிடைக்கவில்லை.
படம் மட்டுமே.. 


ஐவரில் நால்வர்.. கண்காட்சித் திடலில்.


எவ்வளவு நடந்தும் ஒன்றும் தெரியாதது போலிருக்க நல்லூர்க் கந்தனால் மட்டுமே முடிகிறது...
நல்லூர் ஆலய முன்றல்..


பண்ணைப் பாலம்..
இருபுறமும் அலை கடல்.. நடுவே ஒடுங்கிய பாதையில் தீவகம் நோக்கிய பயணம்.


யாழ் கோட்டைக்கு முன்னால்..


ஊர்காவற்றுறை நோக்கிய வழியில்..தமிழில் றையையும் யாரோ கடத்தி விட்டார்களோ?


மாலை ஐந்து மணிக்கே வெறிச்சோடியிருக்கும் ஊர்காவற்றுறை..
இங்கே தான் பல்லாயிரக்கணக்கான வாக்காளர்கள் இருக்கிறார்களாமே..


இடிந்த ஒரு மிகப் பழைய கட்டடத்துக்கு முன்னால்..1800 களின் பிற்பகுதியில் கட்டப்பட்ட கட்டடமாம்..
சிதைவுகளின் சின்னங்கள்.

நாகதீபயவாக ஆங்கில நயினாதீவு மாறுகிறது..
படையெடுக்கிறார்கள் எம் சிங்கள சோதரர்கள்.
அங்கு சைவ ஆலயம் ஒன்றும் இன்று வரை இருக்கிறதாம்..



திரும்பி வரும் வழியில் இராணுவ நினைவு சின்னம் ஒன்று..
புலிகளின் தாங்கி ஒன்றைத் தடுத்துப் பாய்ந்து இராணுவ சிப்பாய் ஒருவர் உயிர்ப்பலி செய்த இடமாம் இது.




May 22, 2010

இது யாழ்ப்பாணம் தானா?

ஏழு வருடங்களுக்குப் பிறகு யாழ்ப்பாணம் அண்மையில் சென்றிருந்தேன்..
எனக்கு முன் சென்றிருந்த நண்பர்கள் சொன்ன விஷயங்கள்,வெளிவரும் செய்திகள்,பதிவுகள் போன்றவற்றில் இருந்து யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட,ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் பற்றி ஏற்கெனவே தெரிந்திருந்தாலும்,கொஞ்சம் ஆவலுடனும்,நிறைய பயத்துடனும் தான் எனது யாழ் பயணம் ஆரம்பித்தது.


என்னுடன் மூன்று சக சிங்கள அலுவலக நண்பர்களும்,கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்ட தமிழ் நண்பரொருவரும் வந்தனர்.
யாழ்ப்பாணம் மீது சிங்களவருக்கு இருக்கும் ஆர்வம் தனியானது.
நாம் பலர் நினைப்பது போல இடம் பிடிப்பது,ஆதிக்கம் காட்டுவதையும் தாண்டிய ஒரு அன்பும்,பிரமிப்பும்,ஆச்சரியமும் அவர்களுக்கு இருப்பதை உணர்கிறேன்.


"உங்களவர்களின் (பாருங்களேன் அவர்களின் வார்த்தைகளின் வலிமையையும் எம் வலியையும்) கட்டுப்பாட்டில் இருந்தநேரம் வர ஆசைப்பட்டேன்.. நிர்வாகமும் நீதியும் சீரா இருந்ததாமே" என்று ஆதங்கப்பட்டார் ஒரு சி.நண்பர்.


வவுனியா தாண்டும் வரை பற்பல விஷயங்கள்,அலுவலகப் புதினங்கள் பேசிக்கொண்டிருந்த நாம், அதற்குப் பின் A 9 வீதி வழியாக இரு பக்கமும் கண்ட காட்சிகளினால் கடந்த காலங்கள்,அழிவுகள்,அனர்த்தங்கள் பற்றிப் பேசினோம்..
சிங்களவர்களின் அடிப்படை எண்ணங்கள் பற்றி அறிந்துகொள்ளக் கூடியதாக (மீண்டும் ஒரு தடவை) இருந்தது.


தமிழர்களின் பிரச்சினை அவர்களுக்குப் புரிகிறது.. ஆனால் ஆரம்பம்,அடிப்படை, போராட்டம் ஆரம்பித்த நோக்கம்,தீர்வுக்கான வழிகள் பற்றி தெளிவாகப் புரியவில்லை.நான் கொஞ்சம் சில விஷயங்களைத் தெளிவாக்கினாலும் எவ்வளவு தூரம் அதனால் பயன் என்று ஆழமாகப் போகவில்லை.


கிளிநொச்சியின் அழிவுகள் தந்த மனத்துயரம் கொஞ்ச நஞ்சமல்ல..
இறுதியாக 2002 ,2003 களில் இந்தப் பக்கம் வந்தபோது பார்த்த அந்த அழகிய பிரதேசம் எங்கே...


வீதியின் இரு பக்கமும் சிதைந்து போய் நிற்கும் கட்டடங்கள் நடந்த கோர,அகோரத் தாக்குதல்களுக்கு சான்றுகள்..
எத்தனை உயிர்கள் என நினைக்கும்போது மனதை ஏதோ பிசைகிறது..
என்னுடன் வந்த சிங்கள நண்பர்களுக்கும் அதே உணர்வு தான் என்பதை அவர்களது ஆழ்ந்த மௌனங்களும்,நீண்ட பெரு மூச்சுக்களும் காட்டி நின்றன.
*(இதற்கும் எல்லா உயிர்கள் இறப்பதும் இறப்புத் தானே.. அங்கே இறக்கவில்லையா..இங்கே கொலைகள் நிகழவில்லையா என்ன என்ன கொடும தனமா பைத்திய்யக்காரக் கேள்விகளை எழுப்பவேண்டாம்.. அந்தந்த இடங்களில் அது பற்றிப் பேசுவோம்)


கொக்கிளாய்,ஆனையிறவு, கொடிகாமம் என்று தாண்டும் போதெல்லாம், சுய அடையாளங்கள்,பழைய சுவடுகள் தொலைவதை,திட்டமிட்டு மாறுவதை மனது உணர்கிற நேரம் வலித்தது.




இதற்கும் எம் யாருக்குமே வழியோன்றிருக்கப் போவதில்லை.


யாழ்ப்பாணம்..


பார்த்தவுடன் கலவை உணர்வுகள்.. ஒரு பரவசம். கொஞ்சம் கவலை.. கொஞ்சம் அதிர்ச்சி..


உத்தியோகப் பணி நிமித்தமே போன காரணத்தால் யாழ் நகரை விட்டு வேறு இடங்களுக்கு செல்ல முடியவில்லை.




பெரிதாக இந்த ஏழு,எட்டு ஆண்டுகளில் மாறியிராவிட்டாலும், பெற்றுள்ள மாற்றங்கள் பயம்+கவலை தருகின்றன.
பழைய அப்பாவித்தனமும்,அன்பும் நிறைந்த மக்கள் இன்னமும் மாறாமல் இருந்தாலும்,பட்ட துன்பங்களும்,இனியும் படுவோம் என்ற பயமும் அவர்களை துரித பணம் உழைக்கும் யுக்திகளைப் பின்பற்ற மாற்றுகிறது என உணர்ந்தேன்.


யாழ்ப்பாணம் இப்போதெல்லாம் தினமும் அதிகம் பேர் வந்துபோகும் சுற்றுலாத் தலமாக மாறியதும் இதற்கான ஒரு காரணமாக இருக்கலாம்.


எங்கு பார்த்தாலும் தமிழை விட சிங்கள மொழியையே அதிகம் கேட்டேன்.. இது யாழ்ப்பாணம் என்ற உணர்வு இம்முறை பல இடங்களில் மனதில் எழவில்லை.
தென் பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் பார்க்கவேண்டும் என்று ஆர்வத்துடன் வந்திருந்த அப்பாவி,வசதி குறைந்த சிங்கள மக்களைப் பார்க்கையில் கொஞ்சம் பரிதாபமாகவும் இருந்தது.
இடிந்து,சிதிலமடைந்து கிடந்த மற்றும் பூட்டிக் கிடந்த,கை விடப்பட்ட வீடுகள்,கடைகள்,கட்டடங்களிலே இலவசமாகத் தங்கி, காணப்படும் அயல் கிணறுகளில் குளித்து,ஆடைகள் தோய்த்து அருகிலேயே சமைத்து யாழ் சுற்றிப் பார்க்கிறார்கள்.
சிலர் கைவிடப்பட்டு பாழடைந்து இருக்கும் முன்னாள் ரெயில் நிலையத்தில் தற்காலிக வசிப்பிடமாக்கி இருக்கிறார்கள்.


இப்போது நல்லூர் கோவிலடியில் கடை போட்டு,இடம் பிடிக்க இருந்தவர்கள் அங்குள்ள இப்போதைய பலம் வாய்ந்தவர்களால் துரத்தப்பட்டிருப்பது பிந்திய தகவல்.


இவர்கள் வருவதோ,ஜாலியாக இளைஞர்கள் ட்ரிப் வருவதோ பரவாயில்லை..ஆனால் எந்த விதத்திலும் அமைதியான யாழ் வாழ்க்கையையும்,கொஞ்சமாவது எஞ்சியுள்ள கலாசாரத்தையும் கெடுத்து விடக் கூடாது என்பதே அங்குள்ள பொதுவான ஆதங்கம் அங்குள்ள பலரிடமும் இருப்பதை பலருடன் (கல்விமான்கள்,மாணவர்கள்,சாமானியர்கள்,தொழில் செய்வோர்,நமது நேயர்கள்) பேசியபோது தெரிந்துகொண்டேன்.


முன்பு புல்லட் எழுதிய யாழ்ப்பாண இளைய தலைமுறையினர் கலாசார சீரழிவுக்கு உட்படுவதைப் பற்றிய பதிவை உங்களில் பலர் வாசித்திருக்கலாம்..அவ்வேளையில் அது பற்றிப் பலர் அதிர்ச்சி அடைந்திருக்கலாம்..
நான் அதற்கு முன்னரே (ஊடகத்தில் இருந்த காரணத்தினால்)அது பற்றி ஓரளவு தெரிந்திருந்தேன்.
ஆனால் நேரில் கண்டு,உணரக் கூடியதாக நான் இருந்த நான்கு நாட்களும் அமைந்தன.
கட்டுக்கள் அறுந்ததன் பின்னர் எல்லாம் திறந்துவிடப்பட்ட நிலை என்பது இது தானோ?
கவலையாகவே இருக்கிறது.


தாராள மது பாவனை,வீதிக்கு வீதி விடலைகளின் கூட்டங்கள்,அதீத செல்,கணினிப் பாவனை என்று தாறு மாறாக மாறியுள்ளது இளைஞரின் வாழ்க்கை முறை.
அதற்காக யாழ்ப்பாண இளைஞர் ஜாலியாக இருக்கக் கூடாதா என்று அபத்தமாக யாராவது கேட்டால் எதற்கும் ஒரு அளவு வேண்டும் தம்பி என்று தான் என்னால் சொல்ல முடியும்..


யாழ்ப்பாணம் இப்போது முழுக்க முழுக்க தன வாழ்க்கைக் கோலத்தைப் பணம் சம்பாதிக்கும் மையமாக மாற்றியுள்ளது.
நகர்ப்புற வீடுகள் இப்போது அநேகமாக தங்குமிடம்,விடுதிகளாக மாறி வருகின்றன.பழைய,உடைந்த கட்டடங்கள் எல்லாம் இப்போது ஹோடேல்களாக மாறுகின்றன.


முன்பெல்லாம் யாழ்ப்பாண மக்களின் முதலீடாக கல்வியே சொல்லப் பட்டது.இப்போது அப்படியில்லை என்றார் நான் சந்தித்த பிரபல யாழ் கல்லூரி ஒன்றின் அதிபர்.சிந்தனை,செயல்கள் எல்லாம் வேறு வேறாகி விட்டன.பழைய கட்டுப்பாடுகள்,கலாசார விழுமியங்கள் இல்லையாம்.
போரின் பின்னதான தாக்கங்கள் என்று இதை சொல்லலாமா?


யாழ்ப்பாணம் சிற்சில அபிவிருத்திகளைக் கண்டுள்ளது தான்.ஆனால் இன்னும் பல ஆண்டுகள் செல்லும் அந்தப் 'பழைய' யாழ்ப்பாணத்தை நாம் காண.
அதற்கிடையில் இன்னும் எத்தனை எத்தனை வேண்டத்தகா மாற்றங்கள் நாம் அனுபவிக்கப் போகிறோமோ?


நான் 1983 முதல் 1990 வரை யாழ்ப்பாணத்தில் இருந்த களத்தில் எனக்கு ஞாபகமிருந்த அமுத சுரபி இருந்த இடம்,அப்பா வேலை செய்த ஆஸ்பத்திரி வீதி-இலங்கை வங்கிக் கிளை, சீமாட்டி ஆடையகம்,விமாகி Vimaki இருந்த இடம், யாழ் கோட்டைக்குப் போகும் வழியில் இருந்த இடங்கள்,பஸ் நிலையம் என்ற பல ஞாபகமிருந்த அடையாளங்கள் பெரிதாக மாறவில்லை.
ஆனாலும் இது முன்னேற்றத்தின் தேக்கம் என்பதும் புரிகிறது.


ஆனாலும் ஏழு வருடங்களில் இடம்பெற்றுள்ள அந்த அப்பாவித் தனம் மாறி கொழும்பு போன்ற நகரங்களுக்கே உரிய ஒரு செயற்கைத்தனம் பலருக்கு தொற்றி இருப்பது ரசிக்க முடியவில்லை.




யாழ் நூலகம், கோட்டை (சரித்திரப் பொக்கிஷம் உள்ளே சிதிலமடைந்து கிடக்கிறது), பண்ணைப் பாலம், நல்லூர் ஆலய முன்றல், ஈராண்டு கல்வி கற்ற யாழ் இந்துக் கல்லூரி என்று சில முக்கிய இடங்களை அவசர அவசரமாகப் பார்த்தேன்.


கிடைத்த அவகாசத்தில் பண்ணைப் பலம் வழியாக ஊர்காவற்றுறை பார்க்கப் போனோம்.இரு பக்கமும் கடல் வழியாகப் பாதையில் பயணிக்கையிலும் மாற்றங்கள் தெரியவில்லை.வெறிச்சோடிப் போயிருக்கும் ஊராகேவ் கானப்பட்ட்டது. கடற்கரையில் சில நிமிடங்களும் இருக்கவில்லை. ஆளுக்கொரு ஒரு வாழைப்பழமும் குளிர்பானமும் அருந்தி விட்டுக் கிளம்பி விட்டோம்.


 யாழ்ப்பாணத்தின் புதிய அடையாளங்களாக ரியோ(Rio) ஐஸ்க்ரீமும் கைதடி மிக்சரும் மாறி இருக்கிறது.
பெயர்ப் பலகைகளில் 'புதிய' யாழ்ப்பாணம் தெரிகிறது.
வந்தேறு குடிகள் வருவார்கள் என்ற அறிகுறி தெளிவாகத் தெரிகிறது.
மக்களை சுற்றுப் பிரயாணம் அனுப்ப ஆவன செய்யும் அரசு,இங்கிருந்து வெளியேறி அகதி வாழ்வை இரு தசாப்தமாக வாழும் அப்பாவி முஸ்லிம்கள் பற்றியும் கொஞ்சம் அக்கறைப் படலாமே என மனம் அங்கலாய்க்கிறது.


உடலை எரித்த வெயிலையும் தாண்டியதாய் சுய அடையாளங்களை கொஞ்சம் கொஞ்சமாய்த் தொலைத்து வரும் யாழ்ப்பாணமும்,அப்பாவித் தனத்தை இழந்து வரும் யாழ் நகர மக்களும் மாறி வருவது மீண்டும் பயணித்துக் கொழும்பு வருகையில் மனதை சுட்டது.


இது நான்கு நாட்களில் நான் சந்தித்த மக்கள்,இடங்கள் தந்த உணர்வுகளாக இருக்கலாம்.உண்மையும் இது தானா??? மீண்டும் ஒரு தடவை அடுத்த மாதம் அங்கே செல்லும்போதும்,என் ஊர் இணுவில் செல்லும்போதும் மேலும் அறியலாம் என்று நம்புகிறேன்.


யாழ் பயணம் பற்றிய ஒரு புகைப்படப் பதிவையும் அடுத்து இடுகிறேன்.. எழுத்துக்கள் சொல்லாததையும் படங்கள் சொல்லும்.

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner