1977 – அய்யோ அம்மா

ARV Loshan
22
Loshan
வழமையாக விமர்சனங்கள் வாசிக்காமல் படம் பார்க்கப் போகும் என்னையே நம்ம நண்பர் வந்தியத்தேவனின் எச்சரிக்கைப் பின்னூட்டம் தந்து போகாதே என்று கெஞ்சியும்,லக்கியாரின் விமர்சனம் படித்துக் கூட 1977 பார்க்கப் போனேனே என்னை நண்பர் காலாண்டியின் பாழாய்ப்போன பழஞ்செருப்பால் தான் விளாசவேணும்.

சரத்குமாரின் திரைப்படங்கள் பற்றி ஏற்கெனவே எனக்கு ஒரு மதிப்பீடு(?) இருக்கும் நிலையிலும் இந்தப்படம் பார்க்கவே வேண்டும் என்று விடாப்பிடியாக நான் பார்க்கப்போக ஒரு காரணம் இருக்கு! (உடனே நமீதா தான் காரணம் என்று யாரும் விஷமமாக என்ன வேண்டாம்)

அப்பா மகனின் பழிதுடைக்கும் கதை மற்றொரு தமிழ் ஜேம்ஸ்பொன்ட் கதை என்றவுடன் வில்லுவின் இன்னொரு versionஆ எது பெட்டர் என்று ஒப்பிடும் ஆர்வமே அது! (தேவையா?) உண்மையில் ஒன்று கோடம்பக்கத்தினரே இனி யாரும் ஜேம்ஸ் பொன்டைக் கூப்பிடாதீர்கள்.பாவம் அந்த பரிதாப உளவாளி!

எழுத்தோட்டம் முகிலினூடாக செல்லும்போது James Bond படங்களை நினைவுபடுத்தினாலும் பின்னர் தான் புரிந்தது. அது symbolicஆகச் சொன்னது எங்கள் காதுகளில் வரப்போகும் புகையை!

எம்.ஜி.ஆர்,கறுப்பு எம்.ஜி.ஆர்,இளைய குட்டி எம்.ஜி.ஆர் (அதாங்க 'சைலன்ஸ்' புகழ் இளையதளபதி) வரிசையில் 'நம்ம சுப்ரீம் ஸ்டாரும்' கட்சிக்கொடிக் கலர்கள் காட்டி கடற்கரையில் ஆடிப்பாடும் 'வங்கக் கடல்' பாடலின் தொடர்ச்சியாக படத்தின் மேலும் இரு பாடல்களைக் கடற்கரையிலேயே போட்டு நனைத்து எடுக்கிறார் புதுமுக MBA இயக்குனர்.

ஆனால் பர்சானா (புதிய கவர்ச்சிகுண்டு)வும் நமீதாவும் சரத்குமாரோடு கடற்கரையில் நனைந்து ஆடும்போது எங்களுக்கு குளிரடிக்கிறது. போதாக்குறைக்கு சீன மலாய் பெண்கள் வேறு துண்டு துக்கடா உடையோடு உடல் குலுக்கி கிளுகிளுப்பாக்குகிறார்கள்.

இதையெல்லாம் விடப் பெரிய பயமுறுத்துகிற விஷயம் நமீதா பர்சானாவுக்கு போட்டியாக நம்ம 'சமத்துவ' சரத்குமாரும் மேற்சட்டை கழற்றித் தன் பிரமாண்ட உடம்பு காட்டி அசத்துகிறார். (அதில வேறு ஒரு பாட்டுல சரத்தின் உடல் முழுக்க tattoo ! ஏன்யா இப்படி எல்லாம் கிலி பிடிக்க வைக்கிறீங்க?)

பர்சானா பார்க்கும் போது கொஞ்சம் வசுந்தரா தாஸ்(பாடகி & சிட்டிசன் நாயகி) + கொஞ்சம் ஜெனீலியா + கொஞ்சம் கிரண் (மாமி) கலந்த ஒரு கவர்ச்சிக் கலவை..

(ஒரு ரவுண்டு வருவார் போல..)  


மலேசியா செல்லும் சரத்தை எங்கே கண்டாலும் கட்டிப் பிடித்து உருள்வதும்,இடை தெரிய ஆடை அணிந்து செய்தி சேகரிக்க செல்வதுமே இவர் பணி..(இப்படிப்பட்ட ஒரு செய்தியாளர் எங்களுடன் இல்லையே என்று பொறாமை தான் வருகிறது.. ம்ம்ம் எல்லாம் ஒரு ராசி.)

படத்தின் ஆரம்பத்திலேயே 'பத்மஸ்ரீ' விவேக் என்று பெயர் வரும்போது சத்தியமாக சிரிப்பு தான் வந்தது!

ஆனால் படம் போகப் போக விவேக்கை விட ஏராளமான நகைச்சுவை விஷயங்களைக் காட்டுகிறது.. குறிப்பாக வில்லன்..

யார்ரா இது என்று கேட்கவைக்கும் ஒரு வில்லன்.. பயங்கரமாக சிரிக்கிறார்.. செயற்கையாக நடிக்கிறார்.. காது கிழிய (எங்களதும்,அவரதும்) கத்துகிறார்..மொத்தத்தில் 70களில் வந்திருக்கவேண்டிய படத்தில் 80களில் நடித்திருக்க வேண்டிய ஒரு வில்லன்.. 

இதில வேற சரத் இந்தியாவின் தலை சிறந்த விஞ்ஞாநியாம்.. விஞ்ஞானத்தைத் தவிர வேறு எல்லாம் செய்கிறார்.. 

நமீதா வழக்கறிஞர்..ரொம்ப பெரிய கேஸ் மட்டும் தான் கையாளுவாங்க போல.. கனவுக்காட்சிகளிலும்,சரத்துடன் திரியும் போதும் மட்டும் கட்டையாக,இறுக்கமாக ஆடை அணிந்து மிரட்டுகிறார்..

இயக்குனர் தினேஷ்குமார் இந்த விஷயங்களில் மட்டுமல்லாமல்,மலேசிய action காட்சிகளிலும் பாடல் காட்சிகளிலும் கூட பிரம்மாண்டம் காட்டி இருக்கிறார். ஒளிப்பதிவாளர் பூபதிக்கும் பாராட்டுக்கள் போக வேண்டும்.. விரிவுக்கும் விரிவுக்கும் அவரே காரணம்..


அதிலும் ஒரு பாடல் காட்சியில் கமெராவைப் போட்டு குலுக்கி எடுக்கிறார் பாருங்கள்.. அப்படி ஒரு கிளு கிளுப்பு..

உலகம் சுற்றும் வாலிபன் படம் புதிய ஆக வந்தால் இப்படித் தானிருக்கும் என்று இயக்குனர் சொன்னாராம். பல காட்சிகளில் தும்மல் வருகிறது.. ரொம்பப் பழசாய் போய் தூசி தட்டியதாலோ? சரத் குமார் என்ன நம்பிக்கையில் இப்படி ஒரு படத்தை சொந்தமாகத் தயாரித்தார் என்று தெரியவில்லை..

உண்மையில் இடைவேளை வரை கொஞ்சம் பரவாயில்லை.. விவேக்கும் ஓரளவு சிரிக்கவைக்கும் இடங்களைத் தருவதால்.. குறிப்பாக சீன அழகியுடன் ஆவாஸ் அன்ஜிங் காட்சிகள்.. (வேற ஒன்னும் தப்பா யோசிக்காதேங்கோ.. நாய் ஜாக்கிரதை தான்) எனினும் கதை இலகுவாக ஊகிக்கக் கூடியதாக இருப்பதால் இடைவேளையின் பின் கொட்டாவி தான் வருகிறது..

பேசாமல் என்பதற்கு பதிலாக ஆவாஸ் 1977 என்று படம் பார்க்க வரும் எங்களுக்கு எச்சரிக்கை கொடுத்திருக்கலாம்..

முப்பது ஆண்டுகளுக்கு முந்திய காட்சிகளில் பெரிதாக மாற்றங்கள் காணோம்..
ஆனால் தந்தை சரத்தின் கம்பீரமும்,தாயாக வரும் ஜெயசுதாவின் மாறாத இளமையும் அழகு..

எனினும் பழைய சிவாஜி காலத்து போலீஸ் படங்கள் பார்த்த நினைவு வந்து தொலைக்கிறது.. நம்ம மொக்கைப் பதிவுகள் கூட பரவாயில்லை போல.. 

நல்ல ஒரு தொழிநுட்ப ரீதியான சில விஷயங்களையும் மொக்கையாக மோசமாகக் கையாண்டு சொதக்ப்பியுல்லார்கள்..

மைத்துனர் என்ற தோஷத்துக்காக ராதாரவியும் பலிக்கடா ஆகியுள்ளார்.. பாவம்.
விஜயகுமாரோ பரிதாபம்.. (நாட்டாமை திரைக்கதையை மாத்து என்று யாரோ தியேட்டரில் கத்திக் கேட்டது)

இதை விடக் கொடுமை கிளைமாக்ஸ் காட்சி.

துப்பாக்கி சூடு மும்முரமாகும் வேளையில் நானும்,என்னுடன் வந்த நண்பர்களும் சீட்டுக்குக் கீழே பயத்தில் குனிந்து படுத்துக் கொண்டோம்.. கண்ணை மூடிக்கொண்டு மலேசிய போலீசும்,வில்லனும் சரத்தும் மாறி மாறி சுடுவது திரையைக் கிழித்துக் கொண்டு எம்மீது பட்டு விடும் என்ற பயம் தான்..

மகெல பாகிஸ்தானில் வைத்து சொன்னது போல,இலங்கையில் வாழ்வது இயற்கையாகவே கற்றுத் தந்த பாதுகாப்பு உள்ளுணர்வு தான் எங்களைக் காப்பாற்றியிருக்கு.. படம் முடிஞ்சு பார்த்தால் தியேட்டர் சுவர்,சீட்டெல்லாம் குண்டு பாய்ந்து சேதம்..   

மவனே, இனி மேலும் யாராவது உலகம் சுற்றும் வாலிபன், ஹாலிவுட் தர action,அது இதுன்னு சொல்லி எங்களுக்கு படம் காட்டினீங்க ........................................................................................................................................

என்னால ஒன்னும் செய்ய முடியாது.. கேப்டன் விஜயகாந்துகிட்டே சொல்லி காலை சுவர்ல எத்தி கண்டபடி உதைக்க சொல்லுவேன்..

டிஸ்கி- இந்தப்படத்துக்கு பிறகு முடிவெடுத்திட்டேன். இனி சரத்குமாரின் எந்தப்படத்தையும் தியேட்டர் சென்று பணம் செலுத்திப் பார்ப்பதில்லை..    
 

Post a Comment

22Comments

Please Select Embedded Mode To show the Comment System.*