March 19, 2009

உலகச் சாம்பியன் இலங்கை

1996 மார்ச் 17 - இலங்கையின் வரலாற்றில் - குறிப்பாக விளையாட்டுக்களின் பக்கத்தில் பொன்னெழுத்துக்களால் எழுதப்படவேண்டிய தினம் - கிரிக்கெட்டின் 6வது உலகக் கிண்ணத்தை இலங்கை தன்வசமாக்கிக் கொண்டநாள் அது!

சரியாக 13 ஆண்டுகள் இருநாட்களுக்கு முன்னர் (17-03-1996) பாகிஸ்தானின் பூங்கா நகர் என்று அழைக்கப்படும் லாகூர் விழாக்கோலம் பூண்டு,ஒரு மாற்றத்தை உலக கிரிக்கட்டில் ஏற்படுத்தப் போகின்ற தாவீத்-கோலியத் யுத்தமொன்றைக் காணக் காத்திருக்கிறது.

94ஆம் ஆண்டிலிருந்து படிப்படியான முன்னேற்றத்துடன் சில ஆச்சரியமான சாதனைக்குரிய வெற்றிகளை இலங்கை கிரிக்கெட் அணி பெற்றுவந்திருந்தது.

உள்நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாட்டு மண்ணிலும் குறிப்பிடத்தக்க வெற்றிகளை இலங்கை பெற ஆரம்பித்து,விற்பன்னர்கள் மத்தியில் இலங்கைக் கிரிக்கெட் அணி இனிமேலும் கூர்ந்து கவனிக்கப்படவேண்டிய அணி என்று குறிப்பிடவைத்தது.

(பாகிஸ்தான்,நியூசிலாந்து ஆகிய நாடுகளில் வைத்து ஈட்டப்பட்ட டெஸ்ட் தொடர் வெற்றிகள்)

அர்ஜூன் ரணதுங்க என்ற God father போன்ற அனுபவமும் துணிச்சலும் சூழ்ச்சி நெளிவு சுளிவுகள் புரிந்த தலைவரின் வழிநடத்தலில் உலகத்தரம் வாய்ந்த வீரர்களாக அப்போதே நோக்கப்பட்ட அரவிந்த டீ சில்வா,ரொஷான் மகாநாம,அசங்க குருசிங்க போன்றோரோடு ஒரு சில ஆண்டுகால அனுபவத்தினோடு அப்போதே போட்டிகளைத் தனித்து வென்று கொடுக்கக் கூடிய பெறுபேறுகளை வழங்கிவந்த முத்தையா முரளீதரன்,சமிந்த வாஸ்,சனத் ஜயசூரிய,ரொமேஷ் களுவிதாரண,ஹஷான் திலகரட்ண என்று இளமையும் அனுபவமும் கலந்த ஒரு அணி உலகத் தரம் வாய்ந்த அணிகளுக்கு சவால்விடும் அணியாக வளர்ந்து வந்து கொண்டிருந்தது.

எனினும் consistency என்று சொல்லப்படும் தொடர்ச்சியான வெற்றிகள் இலங்கை அணிக்கு கிடைப்பதற்கு இலங்கை அணி விசுவரூபம் எடுப்பதற்கு முதல் விதை விழுந்தது அவுஸ்திரேலிய மண்ணில்.

முரளீதரனின் பந்துவீச்சு சர்ச்சை இலங்கை அணியின் மீதான திட்டமிட்ட பழிவாங்கல்கள் நடுவர்களின் பக்கச்சார்பு (பின்னர் இந்தியாவும் இவ்வாறே குறிவைக்கப்பட்டது அனைவருமே அறிந்தது)  இனத்துவவேஷம் விஷம சீண்டல்கள் (இலங்கைக்கேயா? பழனிக்கே பஞ்சாமிர்தமா?) போன்றவை தீயை வளர்த்து விட இலங்கை கிரிக்கெட்டின் வளர்ச்சியின் உச்சம் கூர்மையானது!

விதை போட்டவர்களுக்கே அறுவடை லாகூரில் கிடைத்தது தான் விதியின் விளையாட்டு!
(பின் அதே லாகூரில் அண்மையில் இலங்கை கிரிக்கெட அணயோடு தீவிரவாதம் விபரீதமாக விளையாடியது கொடுமையிலும் கொடுமை)

உலகக்கிண்ணப் போட்டிகள் ஆசிய சகோதரங்கள் இந்தியா பாகிஸ்தான் இலங்கை ஆகியன இணைந்து நடத்தப் போவதாக முடிவெடுக்கப்பட்ட உடனேயே இந்தியா அல்லது பாகிஸ்தானுக்கு சாம்பியனாக வாய்ப்புள்ளது எனப் பரவலாக ஆரூடங்கள் எழுந்தன. எனினும் அவுஸ்திரேலியாவில் கிளம்பிய சரவெடிகளான ஜெயசூரிய களுவிதாரண ஆரம்ப இணைப்பாட்டப் பட்டாசுகளைக் கொளுத்திப் போட முடிவு மாறும் என யார் கண்டார்?

குண்டுவெடிப்பு அச்சத்தைக் காரணம் காட்டி அவுஸ்திரேலியாவும் அவர்களுக்கு வால்பிடித்து மேற்கிந்தியத் தீவுகளும் இலங்கையில் போட்டிகளில் விளையாடாமல் Forfeit அடிப்படையில் புள்ளிகளை இலங்கைக்கு கொடுத்தது இலங்கையர்களுக்கும் கிரிக்கெட் அணிக்கும் மேலும் அக்கினிப் பிழம்பை விசிறிவிட்டாலும் அரையிறுதிவரை முன்னேறப் பாதையை அந்த புள்ளிகள் இலகுவாக்கின.

எந்தவொரு தோல்வியையும் சந்திக்காமல் லாகூரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இலங்கை அணி தனது வெற்றிப்பாதையில் பல சாதனைப் பதிவுகளைப் படையலாக்கியது சிறப்பம்சம்!

  • கென்ய அணிக்கெதிராக அதிக ஒட்ட உலக சாதனை – அப்போது இலகுவில் அந்த 398 என்ற சாதனை முறியடிக்கப்படாது என்றே கருதப்பட்டது.(இப்போதெல்லாம் அடிக்கடி கடப்பது நடந்து கொண்டிருக்கிறது..)
  • டெல்லியில் இந்திய அணியை முதற் சுற்றிலும் பின் அரையிறுதியில் கொல்கத்தாவிலும் துவைத்துப் பிழிந்து வெளியேற்றியது.
  • Tournament Favourites என்ற பெயரோடு நட்சத்திர அணியாக விளங்கிய இந்தியாவுக்கு இரு தோல்விகளும் இலங்கை மூலமாக வழங்கப்பட்டது கிரிக்கெட் உலக முழுவதுமே அதிர்ச்சி அலைகளை உருவாக்கியது.
  • கொல்கத்தா ரசிகர்கள் அதிருப்தி அதிர்ச்சியின் உச்சக்கட்டத்தில் வன்முறை நிகழ்த்தி அன்பான இந்தியாவின் விருந்தோம்பல் பண்புக்கே கரிபூசினர்.
  • 1975இல் மேற்கிந்தியத் தீவுகளுக்குப் பின் ரணதுங்கவின் இலங்கை மட்டுமே. ஒரு உலகக் கிண்ணத்தொடரின் இறுதிப்போட்டி வரை முன்னேறிய ஒரே அணி – unbeaten Champs

ஆஸ்திரேலிய அணி மீது ஆசியர்களுக்கு இருந்த எதிர்ப்பும், தொடர்ந்து கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திவந்த காரணத்தால் அவர்கள் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று இருந்த எதிர்பார்ப்பும்,இலங்கை ஒரு வளர்ந்துவரும் அணி என்று இருந்த அனுதாபமும் லாகூர் முழுவதும் இலங்கை அணி சார்பாக ஆதரவு தெரிவிக்க,இலங்கையிலே கூட அவ்வாறான முழுமை ஆதரவு இருந்ததில்லை இலங்கைக்கு.. 

தொடர் முழுவதும் இலங்கை அணி செய்ததைப் போலவே,வாசின் ஆரம்பப் பந்து வீச்சும், முரளி,ஜெயசூரிய,தர்மசேன,டீ சில்வா ஆகிய சுழல் பந்துவீச்சாளர்களின் திணறச் செய்யும் இறுக்கமான,கட்டுப்பாடான பந்து வீச்சும் துடிப்பான களத்தடுப்பும் ஆஸ்திரேலியாவின் ஓட்டங்களைக் கட்டிப்போட,இலங்கை அணி 241 என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்தது.

பகல் இரவுப் போட்டியில் இந்த இலக்கு ஒரு சவாலான இலக்கு மட்டுமல்ல,இதற்கு முன்னர் எந்த ஒரு அணியுமே இறுதிப்போட்டியில் இரண்டாவதாக துடுப்பெடுத்தாடி உலகக் கிண்ணம் வென்றதில்லை.அத்துடன் இந்த உலகக் கிண்ணம் ஆரம்பித்த போதே சொல்லப்பட்ட இன்னொரு ஆரூடம் சொல்லப்பட்டது.. உலகக் கின்னப்போட்டிகளை நடத்திய எந்த நாடுமே அந்த உலகக் கிண்ணத்தை வென்றதில்லை.. 

இந்தப் போட்டியிலும் முதல் இரு விக்கெட்டுக்கள் சரிந்த போது அவ்வாறே எண்ணத் தோன்றினாலும், டீ சில்வா-குருசிங்க இணைப்பாட்டம் (125)நிலைமையை மாற்றிப் போட்டது.. 

அரவிந்த டீ சில்வாவின் நுணுக்கமான,அழகான பிரயோகங்களும்,தேவையான போது அதிரடியாடிய விதமும், மக்க்ரா,வோர்ன் போன்றோரை ஓட ஓட விரட்டிய விதமும் இன்றும் பலர் நினைவுகளில் நிழலாடும். அதிலும் குருசிங்கவும்,ரணதுங்கவும் ஷேன் வோர்னுக்கு அடித்த இரண்டு அடிகள் இன்று வரை மனதை விட்டு மறையாதவை.. 


தலைக்கு மேல் பறக்கும் பந்தை இயலாமையோடு பார்க்கும் வோர்னும், நகம் கடித்து விரக்தியோடு நிற்கும் ஆஸ்திரேலிய அணித் தலைவர் மார்க் டேய்லோரும், தோல்வியை நெருங்க நெருங்க இடிந்து போன ஆஸ்திரேலியாவின் வீரர்களும் புகைப்படங்களாகி இன்று வரை காலத்தால் மறக்க முடியா பதிவுகளாகியுள்ளனர்.  

தலைவரும்,உப தலைவருமாக இலங்கையை வெற்றியை நோக்கி தமது 97 ஓட்ட இணைப்பாட்டம் மூலமாக அழைத்து செல்ல மிகப் பொருத்தமாக அர்ஜுன க்ளென் மக்ராவின் பந்தில் பெற்ற நான்கு ஓட்டங்களுடன் இலங்கைக்கு 1996ஆம் ஆண்டின் WILLS உலகக் கிண்ணம் கிட்டுகிறது..


லாகூரே மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரிக்கிறது.. உலகம் முழுவதும் ஆனந்தமும் அதிர்ச்சியும் கலந்த அலைகள்.. இலங்கையெங்கும் மகிழ்ச்சி ஆரவாரம் கரைபுரண்டோடுகிறது..

இதுவரை நடந்த ஐந்து உலகக் கிண்ணப்போட்டிகளில் வெறுமனே நான்கு போட்டிகளில் மட்டும் வெற்றி ஈட்டிய அணி உலக சாம்பியன்.

Whipping boys என்று எல்லாராலும் விரட்டி விரட்டி அடிக்கப்பட்ட இலங்கை சர்வதேச கிரிக்கெட்டுக்குள் முழுமை அந்தஸ்துள்ள அணியாக பிரவேசித்து பதினான்கு ஆண்டுகளில் உலகக் கிண்ணத்தை சுவீகரிப்பது என்றால் சும்மாவா?   

இறுதிப் போட்டியில் இலங்கை அணியால் மேலும் பல சாதனைகள்..

அரவிந்தவின் சதம் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஒரு வீரர் பெற்ற மூன்றாவது சதம்..

இரண்டாவதாகத் துடுப்பெடுத்தாடி வெற்றி பெற்ற ஒரே அணி (பின்னர் 2003இல் ஆஸ்திரேலியாவும் இதை நிகர்த்தது) 

இறுதிப் போட்டிக்கு முன்னதாகவே தொடர் முழுவதும் அசத்தி,வேகமான,துடிப்பான கிரிக்கெட்டுக்கு புது வரைவிலக்கணம் கொடுத்த சனத் ஜெயசூரிய தொடரின் மிகப் பெறுமதிவாய்ந்த வீரர் (Most valuable player) என்ற விருதை வென்றிருந்தார்..

எனினும் இறுதிப் போட்டியில் அசத்திய அரவிந்த டீ சில்வாவும் அந்த விருதுக்குப் பொருத்தமாகவே இருந்தார்.. அரை இறுதியிலும்,இறுதியிலும் அவர் காட்டிய சகல துறைப் பெறுபேறுகள் யாரோடும் ஒப்பிடப்பட முடியாதவை..

இலங்கையின் இந்த மகத்தான வெற்றி ஒருநாள் கிரிக்கெட்டின் பரிமாணத்தையே மாற்றியது..

இலங்கையின் ஆரம்பத் துடுப்பாட்ட அதிரடிகள்,பின் வரிசையின் தாங்கிப் பிடிக்கும் திறன்,அதி பாதுகாப்பான,துடிப்பான களத் தடுப்பு,சுழல் பந்து வீச்சாளர்கள் மூலம் சாதுரியமாக எதிரணி துடுப்பாட்ட வீரர்களை திணறடிப்பது என்று அத்தனை நுட்பங்கலுமே எதோ ஒரு வகையில் சர்வதேச கிரிக்கெட்டில் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தியது..

1983இல் இந்திய அணியின் உலகக் கிண்ண வெற்றி இந்திய உப கண்டம் முழுவதுமே கிரிக்கெட்டை மதம் போல பரப்பியது போல, 1996இல் இலங்கையின் வெற்றியும் ஒரு பெரிய மாற்றத்தையும்,குறிப்பாக இலங்கையில் ஒரு மிகப்பெரிய கிரிக்கெட் அலையையும் ஏற்படுத்தியது..  

இலங்கையில் கிரிக்கெட் வீரர்களுக்கு கடவுளுக்கு அடுத்த அந்தஸ்து,பண்ணையார்களை ஒத்த சொத்து,சுகம்,இன்னும் பிரபலம்,விளம்பரம் என்று பல்கிப் பெருகவும்,ஏழ்மை வாழ்வு வாழ்ந்துகொண்டிருந்த பல கிரிக்கெட் வீரர்களுக்கு நம்பிக்கை ஊட்டவும் இந்த வெற்றி தந்த ஊட்டம் கொஞ்ச நஞ்சம் அல்ல.

உலகக் கிண்ண வெற்றி அலை மூலம் கிடைத்த வாய்ப்பையும்,சர்வதேச அந்தஸ்தையும் இதன் மூலம் விரிவாக்கக்கூடிய சந்தர்ப்பத்தையும் சரியான வழியில் பயன்படுத்திக் கொண்ட இலங்கை கிரிக்கெட் அணி இன்று டெஸ்ட் போட்டிகளிலும் பெயர் சொல்லக் கூடிய முன்னணியாக மாற்றம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனால் சரியான முறையில் இளையவர்களுக்கான தலைமைத்துவ மாற்றம் தொண்ணூறுகளின் இறுதியில் நடைபெறாது தான் பெரிய தாக்கம் ஒன்றையும்,தேக்கத்தையும் இலங்கை கிரிக்கெட்டின் வளர்ச்சியில் உருவாக்கியது. 

முன்னர் தேயிலை,இரத்தினக் கற்கள், பின்னர் ஈழ விடுதலைப் போராட்டம்,யுத்தம் (இன்று வரை இது நீடித்தபடியே இருப்பது பெரும் துயரம்) என்று இலங்கையை உலகப் புகழ் (!) பெற வைத்த, உலக வரைபடத்தில் உற்று நோக்க வைத்தவற்றுக்குப் பின்னர் உலகக் கிண்ண வெற்றியும் இலங்கையை பலரும் கவனிக்க வைத்தது..

இன்று வரை இலங்கை கிரிக்கெட்டில் பல சாதனையாளர்களை தந்து கொண்டே இருக்கிறது.. பல சாதனைகளும் இலங்கையின் பெயர் தாங்கி நிற்கின்றன,,..

உலகக் கிண்ணம் வென்ற இலங்கை அணியில் இடம் பெற்ற மூன்று வீரர்கள் இலங்கையின் ஒரு நாள் அணியில் இடம் பெற்றுள்ளார்கள்.. சனத் ஜெயசூரிய, முத்தையா முரளிதரன் & சமிந்த வாஸ் 


டிஸ்கி -  இலங்கையின் பெயர் ஓரளவு நன்றாக பேசப்பட காரணமாக இருந்த விண்வெளி ஆராய்வாளர்,விஞ்ஞானி, புனைகதை எழுத்தாளர் ஆர்தர் சி கிளார்க் அவர்களின் நினைவு தினம் இன்று.. (இலங்கையின் குடியுரிமையை வேண்டிப் பெற்று நீண்ட காலம் இந்தப் பாவ பூமியில் வசித்த பெருமகன் அவர்.  

மறக்க முடியா இறுதிப் போட்டியின் ஒளிப்படப் பதிவுகளைப் பார்க்க,கீழே சொடுக்குங்க.. 
பார்த்திட்டு மறக்காமல் மறுபடி வந்து வோட்டையும்,பின்னூட்டத்தையும் போட்டிட்டு போங்க.. :)

Australian innings
3 comments:

கிருஷ்ணா said...

என்னண்ணே மலரும் நினைவுகள்ள இறங்கிட்டீங்க?

இந்தப்போட்டி நடந்தபோது நாங்கள் இடம்பெயர்ந்து கிளிநொச்சியில் இருந்தோம். கைவலிக்க டைனமோ சுத்தி றேடியோவில் நேரடி வர்ணனை கேட்டது ஞாபகமிருக்கிறது. இதைப்போலவே இறுதியாக நடந்த உலகக்கிண்ணப் போட்டியும் வாழ்க்கையில மறக்க முடியாத ஒன்று(எனக்கு மட்டுமில்லை உங்களுக்குந்தான்) :)

//ஆனால் சரியான முறையில் இளையவர்களுக்கான தலைமைத்துவ மாற்றம் தொண்ணூறுகளின் இறுதியில் நடைபெறாது தான் பெரிய தாக்கம் ஒன்றையும்,தேக்கத்தையும் இலங்கை கிரிக்கெட்டின் வளர்ச்சியில் உருவாக்கியது//

கிரிக்கெட்டில் மட்டுமா???

வேத்தியன் said...

வந்து பார்க்க

Subankan said...

இதையும் பாருங்க‌

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner