January 30, 2009

சகோதரா முத்துக்குமரா, யார் நீ?சபிக்கப்பட்ட எம் இனத்துக்காக 
சாவை முத்தமிட்டவனே
முத்துக்குமரா 
எமது நீண்டதொரு
விடிவுக்கான யாத்திரையில் 
விதைகளாக விழுந்தோரின் பட்டியலில்
நீயும் இப்போது
ஒருவனாக..

தீக்குளிப்பதை பூக்குவியலில் குதிப்பது போல 
புன்னகையுட ஏற்றுக் கொண்டாயாமே ..
எம் நெஞ்சம் துடித்துக் கலங்கியது..

இன்னொரு தமிழன்.. 
இன்னொரு மனிதன்..
இன்னொரு இன்னுயிர்..
யுத்தமே,இன வெறியே உன் கோரப்பசி 
இன்னும் அடங்காதா?

சகோதரா முத்துக்குமரா,
யாரோ ஒருவனாக
இருந்த நீ நேற்றுமுதல் 
நம்மில் ஒருவனாக..
முகமறியாத உன்னைப் பற்றியே 
நேற்று முதல்
நாமெல்லோரும் உண்மையாகவே 
கவலைப்பட்டோம்

 யார் நீ?
எம்மேல் ஏன் இத்தனை கரிசனம்?
உதிரம் கொடுத்து,உயிர் தந்த 
உன் பெற்றோரைவிடவா
இலங்கையில் இன்னல் பட்டு
தினம்தோறும் 
இறந்துபோகும் எம்
இலங்கைத் தமிழர்
பெரிதாய்ப் போய்விட்டோம்?

தனிப்பெரும் தலைவர்கள்
தானைத் தளபதிகள்
'அம்மா' என்ற பெயரை வைத்துக்கொண்ட
அவமானச் சின்னங்கள்
காந்திவழி நிற்கிறோம் என்று
பெருமை பேசியும்
பிணமாகிப் போகும் தமிழ் சகோதரர் மீது
இரக்கமே காட்டாத
பாசாங்கு அகிம்சாவாதிகள்..
இவர்கள் எல்லாம் வாய்மூடி,
வாய் வீரம் மட்டும் பேசி, 
வசூலையும்,வாக்கையும் மட்டும் தேடி,
தத்தம் நலன் பற்றி மட்டுமே யோசித்து நிற்கையில் 
நீ மட்டும் ஏன் இப்படி?

உன் குடும்பத்தின் கதி?
எத்தனையோ இலங்கைத் தமிழருக்கே 
இல்லாத உணர்வு 
உனக்கு வந்ததே..
ஆனால் உயிரின் மதிப்பு உனக்குத் தெரியாததா?

உன் இறுதி அறிக்கை பார்த்தேன்.
உணர்ச்சிவசப்பட்டு உயிரை தீக்கு இரையாக்கி 
நீ தியாகியானாய்..

ஒரு சில தினங்களில் 
மற்ற தியாகிகள் எங்கள் வாழ்வில்
எம்மக்களால் எப்படி மறக்கப் பட்டனரோ
அப்படியே உன்னையும் மறந்து விடுவர்..

போரும்,அழிவும் தொடரும்.. 
புலம்பெயர்வும்,அகதி அவலமும் தொடரும்..
ஈழத்தில் இறுதி தமிழன் அழிந்த பிறகும்
உங்கள் தமிழ்நாடு தமிழனை வாழவைக்கும்..

எங்கோ ஒரு புலம்பெயர் தேசத்தில் 
எதோ ஒரு மூலையில்
யாரோ ஒருவன் உன் பெயர் சொன்னால் 
அப்போது நானும் மகிழ்வேன்..

ஒவ்வொரு தமிழனின் உயிரும் முக்கியமே..
எமக்காக அநியாயமாக மாயாதீர்..
திருந்தாத அரசியல் ஜென்மங்கள்-இரங்காத தலைமைகள்
உங்கள் இறப்பினாலும் திருந்தாது..

நாளை தமிழன் விடிவுக்காக 
இன்று உங்கள் குடும்பங்கள் நடுத் தெருவுக்கு வருவதா?

வேண்டாம் தற்கொலைகள்.. தீக்குளிப்புக்கள்..

பல மரணம் பார்த்துவிட்டோம் இங்கே..
அங்கேயும் வேண்டாம் உயிர்ப் பலிகள்..வேதனையான இன்னொரு விடயம், இன்று இந்தியாவின் தேச பிதா மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட நினைவுதினம்.. எத்தனை பேருக்கு இது ஞாபகமோ?

நேற்றொரு தியாகம், இன்று இந்தியாவில் தியாகிகள் தினம்.. இனியும் வேண்டாம் தற்கொலைத் தியாகங்கள்.. நடப்பது நடக்கட்டும்..


January 29, 2009

உணவகத்தில் ஒரு ரணகளம்

அண்மையில் ஒரு உணவகத்துக்குக் குடும்பமாக இரவு உணவுக்காகச் சென்றிருந்தோம். வாரத்தில் ஒருநாள் அல்லது நேரமில்லாவிட்டால் சிலவேளை மாதத்தில் ஒருநாள் எப்போதாவது இவ்வாறு வெளியே போய் உற்சாகமாக இருப்பதுண்டு. கிட்டத்தட்ட இருமாத காலத்துக்குப் பின் இவ்வாறு இரவு உணவுக்காக ஒன்றாக வெளியே போயிருந்தோம்!

அந்த உணவகம் ஆரம்பித்தக் கொஞ்ச நாள் (வழமை போல் இம்முறையும் பெயர் சொல்லமாட்டேன்) இடம் சிறிதாக இருந்தாலும் பெரிதாகக் கூட்டம் இல்லாததால் நிம்மதி! உணவும் ஓடர் செய்து கொஞ்ச நேரத்திலேயே வந்தது ருசியும் மோசமில்லை.

பரிமாறியவர் எங்களுக்கு கட்டணத்துக்கான பில்லைக் கொண்டு வர முன் என்னுடைய அருமைத் தந்தையார் கழிவறைக்கு செல்ல வேண்டுமென்று கேட்டுப் போனார்.

அவர் போய் வரவும் பில்லைக் கடைச் சிப்பந்தி கொண்டு வரவும் நேரம் சரியாக இருந்தது.

அந்த நேரம் பார்த்து கழிவறை சென்று வந்த மனமார்ந்த நிம்மதியுடன் என்னுடைய அப்பா அந்த சிப்பந்தியைப் பார்த்து அப்பாவித்தனமாக சொன்னார்.

'தம்பி இண்டைக்குத்தான் முதல் தடவையாக இங்கே வந்தனாங்கள் - சாப்பாடு அருமை – உங்கடை டொய்லெட் - அதைவிட அருமை!'

January 28, 2009

உலகின் வேகமான மனிதர் பிரணாப் முகர்ஜி !

உலகின் வேகமான மனிதர் என்ற பட்டத்தை இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு வழங்கலாம் என்று சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்துக்கு சிபாரிசு செய்ய இருப்பதாக நம்ம நண்பர் கஞ்சிபாய் காலையிலே என்னிடம் சொன்னார்.. பின்ன இல்லாமலா? உசைன் போல்ட்டாவது நூறு மீட்டரை கடக்க 9.69 விநாடிகள் எடுத்தார்.. 

நம்ம அண்ணாச்சி முகர்ஜியோ (பெயர்லயே ஜி வச்சிருக்காரே.. பெரிய ஆள் தான்) இந்தியாவில் இருந்து இலங்கை வந்து இலங்கையின் மாண்புமிகு ஜனாதிபதியை சந்தித்து இலங்கைப் பிரச்சினை,நாட்டின் தற்போதைய சூழ்நிலை மற்றும் உலக பொருளாதார வீழ்ச்சி மற்றும் ஆசிய பிராந்திய நாடுகளுக்கிடையில் பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல் போன்ற விடயங்கள் குறித்து தீவிரமாக,ஆழமாக அலசி ஆராய்ந்த பின்னர்
 
    
இந்த பேச்சுவார்த்தையின் போது நாட்டின் தற்போதைய சூழ்நிலை மற்றும் உலக பொருளாதார வீழ்ச்சி மற்றும் ஆசிய பிராந்திய நாடுகளுக்கிடையில் பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல் போன்ற விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. -  வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ செய்தி 

இந்தியப் பிரதமர்,தமிழக முதல்வர் சொல்லி அனுப்பிய விஷயங்கள் பற்றியும் விளக்கமளித்து விட்டு 
(இதெல்லாம் நாமாகவே ஊகித்து அறிந்ததுங்கோ.. ஹீ ஹீ ) மரியாதை நிமித்தம் வழங்கப்பட்ட இராப்போசனமும் அருந்தி விட்டு மறுபடியும் இந்தியாவுக்கு செல்வதாக இருந்தால் எத்தனை வேகம் இந்த வேகம்.. 

இவ்வளவு காரியமும் செய்து முடிக்க அவருக்கு எடுத்தது வெறும் ஐந்து மணித்தியாலங்கள் மட்டுமே..விமான நிலையத்தில் வந்து இறங்கியது இரவு 8.27க்கு, மறுபடி விமானம் இந்தியாவுக்கு முகர்ஜியை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது அதிகாலை 1.27க்கு.. 


இலங்கையில் இருந்தவர்கள்,இலங்கையைப் பற்றி அறிந்தவர்களுக்கு விமானநிலையத்தில் இருந்து கொழும்பு நகருக்கு வருவதற்கும்,மறுபடி கொழும்பில் இருந்து கட்டுநாயக விமான நிலையத்திற்கு செல்வதற்கும் எடுக்கும் நேரம் பற்றித் தெரிந்திருக்கும்..  

நேற்று பிரணாப் முகர்ஜி விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலமாக கொழும்புக்கு வரவில்லை என்று கூறப்பட்டுள்ளது.. பாருங்கையா நம்ம முகர்ஜி ஐயாவின் வேகத்தை..

சரி அதை விடுவோம்.. அவரது பெருமைக்கும் தகுதிக்கும் இலங்கையின் ஜனாதிபதியைத் தவிர அவர் வேறு யாரோடும் பேசவேண்டிய தேவையில்லை..

ஆனால் நேற்று பேசப்பட்ட விடயங்கள்?????

தமிழக முதல்வர் இந்த விடயங்கள் பற்றித் தான் பேசவேண்டும் என்று தொலைபேசியில் பேசும்போது சொல்லி இருந்தாரா? 

எங்கள் இலங்கை தமிழ் பத்திரிகைகள் என்ன சொல்லி இருக்கின்றன என்றும் கொஞ்சம் பாருங்களேன்.. இலங்கையில் உள்ளவர்கள் பத்திரிகைகளை வாங்கிப் பாருங்கள்.. ஏனையோர் இணையத் தளங்களில் பார்த்துக் கொள்ளுங்கள்..

நேற்று எல்லோருக்கும் சொல்லப்பட்ட முகர்ஜியின் ப்ளான் இலங்கையில் இரண்டு நாள் சுற்றுப் பிரயாணம்.. (அதில் தம்புள்ளை சென்று கிரிக்கெட் போட்டி பார்ப்பதும் இருந்ததோ தெரியாது). அதைத் தான் பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன.. 

அப்படி இருக்கும்போது ஏன் அவசர அவசரமாக முகர்ஜிஜி (ஒரு எக்ஸ்ட்ரா ஜி மரியாதைக்கு) அதிகாலையே புறப்பட்டார்?? என்ன அவசரம்??

ஒரு வேளை ஏதாவது அவசர தகவல் ஏதாவது சொல்லவந்தாரோ? 
    
டெல்லியில் முகர்ஜி" அப்பாவித் தமிழரைப் பாதுகாக்க இலங்கை அரசை வலியுறுத்துவேன்"

இல்லை இந்திய தமிழ் ஊடகங்கள் பல சொல்வது போல அவசர உதவிகள் மட்டும் கொடுக்க வந்தாரோ?

இல்லை ஒரு விருந்தாளியாய் வந்து இராப்போசனம்,சுட சுட ஸ்பெஷல் இலங்கை தேநீர் குடிக்க வந்திருப்பாரோ?

நாலு சுவர்களுக்குள் என்ன நடந்தது என்பதை யாமறியோம் பராபரமே..

எனினும் என்ன நடந்திருக்கு என்பதை இன்னும் ஒரு சில நாளில் நடைபெறும் நிகழ்வுகளில் ஊகிக்கக் கூடியதாக் இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.. 

கலைஞர் இன்று என்ன சொல்லப் போகிறார் என்பதை அறிய ரொம்ப ஆவலாயிருக்கிறேன்..

இன்று எனது சக சிங்கள பெண் ஊழியர் ஒருவர் சொன்னது "இந்தியா என்ன சொல்லப் போகிறது.. அப்படித் தான் யுத்தத்தை நிறுத்தச் சொன்னாலும் நம்ம பெரியவர் நிப்பாட்டுவாரா?நீங்க இல்லேன்னா பாகிஸ்தான்,சீனா இருக்கு எண்டு முகர்ஜிக்கு சொல்லி இருப்பார்.. அவரும் யெஸ் சார் சொல்லிட்டு அடுத்த பிளைட்லயே பறந்திருப்பார்".

அப்படித் தான் நடந்திருக்குமோ??? 

தமிழன் தான் உலகம் முழுக்க ஏமாளியா?

January 27, 2009

வானிலிருந்து பூமி பாருங்கள்..

மேலிருந்து பாருங்கள் அழகு தெரியும்  என்ற தலைப்பில் நான் முன்பு தந்த பத்துப் படங்களுக்கும் நல்ல வரவேற்புக் கிடைத்திருந்தது. இதோ இன்னும் எனக்குக் கிடைத்த அதே போன்ற இன்னும் சில படங்கள்..  

கமெரா கண்களால் பார்க்கையில் இன்னும் அழகாக மிளிர்கிறது பூமி..

எல்லாப் படங்களையும் பார்த்த பிறகு கீழே உள்ள முக்கியமான விஷயத்தையும் வாசித்து விட்டு செல்லுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.. ;) 

தலைப்பு விளக்கம் அங்கே தான் இருக்கு..  யுத்தத்தின் எச்சங்களாக காட்சி தரும் உடைந்து,சிதைந்த தாங்கிகளும் காணப்படுகின்றன.. பார்த்தீர்களா?

அழிவுகளைத் தந்தவை அழிந்து நிற்கும்போது அதுவும் அழகு தானே..

அழகை ரசிக்க காலமா நேரமா? யாரோ ஒரு முகமறியா கமெரா கலைஞனுக்கு நன்றிகளை சொல்லிக் கொண்டே பார்த்து ரசிப்போம்.. கடந்த முறை நான் தந்த தலைப்பு -
மேலிருந்து பாருங்கள் அழகு தெரியும் டபுள் மீனிங் என்று நம்ம நண்பர் ஒருவர் கண்டுபிடித்திருந்தார்.. (என்ன மாதிரியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா.. ;) )  

அதனால் இம்முறை இந்த அழகு ததும்பும் பூமியின் அழகான புகைப் படங்களை (இவையும் வானிலிருந்து கொண்டே எடுக்கப்பட்ட பூமியின் புகைப் படங்கள் தான்.. அவர் பறந்து கொண்டோ,மிதந்து கொண்டோ எடுத்திருக்கிறார்) வானிலிருந்து பூமி பாருங்கள்.. (இதிலேயும் ஏதாவது கில்மா அர்த்தம் கண்டு பிடிப்பாங்களோ?)

என்ன கொடும சார்.... ;)


January 26, 2009

துணிச்சல் வேணும் தம்பி !

நேற்றைய நாள், காலை முதலே பரபரப்புத் தொற்றிய ஒருநாள்!
பலவிதமான பரபரப்புச் செய்திகள்,வதந்திகள்,வாழ்த்துக்கள் என்று குறைவில்லாமல் முழுநாளுமே ஒருவித முக்கியமான நாளாகவே காணப்பட்டது.

அதிகாலையிலேயே (ஞாயிறு என்றால் எனக்கு காலை 9மணியும் அதிகாலைதான்) வந்த வெளிநாட்டு அழைப்பொன்று 'அணைக்கட்டும் 5000உம் சரியாம்' என்று செய்தி சொல்லிப்போனது.

பிறகு வந்த தகவல்கள் (முன்வீடு,பக்கத்துவீடு,பேப்பர்காரன் என்று பலபேரும் சொன்னது) 500 முதல் 10000 வரை பலதரப்பட்டது.

உண்மையைத் தெரிந்த விஷயங்களையே சொல்லமுடியாமல் ஊமையாய் இருக்க வேண்டிய நிர்பந்தமுள்ள எங்கள் இலத்திரனியல் ஊடகங்கள் இதுபற்றி எதுவுமே சொல்லாதது ஆச்சரியமில்லைத் தானே? (துணிச்சலாய் எழுதிய பல பத்திரிகைகளே பேனாக்களை இறுக்கி மூடியபின்னர் டிவி,வானொலிகள் எம்மாத்திரம்)

கலைஞரும் ஜெயாவும் (தொலைகாட்சிகளைத் தான் சொன்னேன்) 1500 என்றன! இணையத்தளங்களும் வலைத்தளங்களும் 500 முதல் 50000 வரை சொல்லின! சில அறுதியிட்டு அப்படியெதுவுமே இல்லை;அவ்வளவுமே பொய் என்றன.

நவம்பர் 14க்கு முன் என்றால் என்வீட்டுத் தொலைபேசிக்கும் என்னுடைய செல்போனுக்கும் அழைப்பெடுத்து விபரம் கேட்டும் பலரும் இம்முறை என் நலனையோ தம் நலனையோ கருத்தில் கொண்டு எந்தவொரு விபரமுமே கேட்கவில்லை. அப்படியும் சிலர் 'தம்பி செய்தி உண்மையோ?' என்று மட்டும் கேட்டு வைத்தனர்.

இன்னும் ஒரு சிலர் அதியுச்ச பாதுகாப்போடு தொலைபேசியில் நான் வீட்டில் இருக்கிறேன் என்று கேட்டு நேரிலே வந்து விஷயம் விபரம் கேட்டனர்.
'உறுதியாகத் தெரியவில்லை. தெரிந்தால் சொல்லுவோம். இணையத்தளங்களில் இவ்வாறு தான் இருக்கிறது'என்று சொல்லி அனுப்பனேன்.

பதினொன்றரை அளவில் இன்னுமொரு புதிய செய்தி பரவ ஆரம்பித்தது. ஆளுகின்ற தரப்பில் மூன்று பெருந்தலைவர்கள் முடிந்தது அல்லது மோசமான நிலையில் என்று.அமைச்சரொருவர்,முடிவெடுக்கும் முக்கியஸ்தொருவர்,அமைச்சராவதாக செய்தி அடிபடும் புதிய நாடாளுமன்ற உறுப்பினரொருவர்.(எனக்கேன் வம்பு? நீங்களே கண்டுபிடிச்சுக் கொள்ளுங்கள் யார்,யாராக இருக்கலாம் என்று)

மீண்டும் அதே தகவலறியும் ஆர்வம் - தேடிப்பார்த்தேன் சாடை மாடையாய் நம் செய்திப்பிரிவு நண்பர்கள் பத்திரிகையுலக நண்பர்களிடம் கேட்டு பார்த்தேன். அவர்களும் தங்களுக்கும் இப்படித் தகவல்கள் வந்ததாகவும் உறுதிப்படுத்த முடியவில்லையென்றும் சொல்லினர். எல்லோர் குரலிலும் சந்தோஸமா, உறுதிப்படுத்த முடியாத கவலையா, சந்தேகமா தொனித்தது தெரியவில்லை.

Facebook,Skype என்று ஒட்டுக் கேட்க முடியாது என்று நாம் ஒரளவு உறுதிப்படுத்தியுள்ளவை ஊடாக இந்த விஷயங்கள் சூடு கிளப்பும் நேரம் எங்கள் ஊடகங்களில் முல்லைக்குள் நுழைந்த கதையை அரசு சொன்னது. எனினும் மாலையில் வெற்றியில் நான் செய்தி வாசித்தபோது என் செய்திகளில் அதுபற்றி எதுவும் இருக்கவில்லை.

வேலை முடிந்து வரும்போது வழமையாக நான் வாழைப்பழம் வாங்கும் கடைக்கு முன்னால் நான் வாகனத்தை நிறுத்தியபோது எங்கள் குடும்ப நண்பரொருவர் என் வாகன ஓட்டி இருக்கைக்கு முன்னால் வந்தார். நானும் கண்ணாடியை இறக்கினேன்.

அவர் இவ்வாறான செய்தி விஷயங்களில் ரொம்பவே ஆர்வமுள்ளவர் - துணிச்சலோடு எங்கென்றாலும் எதுபற்றியும் பேசுவார்.
"என்ன தம்பி அந்தப் பக்கம் சூடு பறக்குது அஞ்சாயிரம் பேர் சரி;இங்கை மூண்டுபேர் முடிஞ்சதாம். நீங்கள் ஒண்டுமே சொல்றியளில்லை?" என்று கொஞ்சம் ஆர்வமும் கடுப்புமாகக் கேட்டார்.

"நாட்டு நிலமை தெரியாதோ" என்றேன்.

"என்ன நாட்டு நிலமை தம்பி – பேப்பர்காரன் றேடியோகாரன் என்டால் துணிச்சல் வேணும். இல்லாட்டி என்னத்துக்கு? உண்மையளைத் துணிஞ்ச சொல்லவேணும். சும்மா பாட்டுப் போடவே றேடியோ"

"அங்கிள் சொல்லுறது – சுலபம் கொஞ்சம் வந்து எங்கட இடத்தில இருந்து பாருங்கோ தெரியும்"

"அப்படியில்லைத் தம்பி – பயப்பிடாமல் உண்மையைப் பட்டென்று சொல்லவேணும். இப்ப பாரும் ஒன்றை அண்ணன்ரை மகன் எப்பிடியெல்லாம் நெட்டிலை எழுதிறான்." பெருமையோடு சொன்னார்.

"நெட்டிலை? இங்கை இருந்தோ" என்று கேட்டேன்.

"சீச்சி அவன் அவ்வளவு முட்டாளே – வெளிநாட்டில இருந்து வேற பெயரிலை" என்று சொன்னவர் கொஞ்சம் மெதுவான குரலில் "தம்பி கனநேரம் ஒருத்தன் எங்களையே உத்துப் பார்க்கிறான் - உம்மோடை கதைக்கிறதை CIDகாரர் கண்காணிக்கினமோ தெரியாதே! தற்செயலா ஆரும் கேட்டா என்னைப் பற்றி ஒண்டும் சொல்லாதேயும் - நீர் வெளில வந்த பிறகு பயத்தில தான் உம்மை வந்து பார்க்கவும் இல்லை" என்று படபட என்று சொல்லிவிட்டுப் பாய்ந்து விழுந்து அந்த இடத்தை விட்டுப் போய்விட்டார்.

January 24, 2009

அக்தாருக்கு ஆப்பு!'ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்' என்று அழைக்கப்பட்ட உலகின் அதிவேகப் பந்து வீச்சாளராக முன்னர் விளங்கிய சோயிப் அக்தார் இன்று கராச்சியில் இடம்பெறுகின்ற இலங்கைக்கு எதிரான பாகிஸ்தான் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். நீக்கப்பட்டுள்ளார் என்பதை விட அணியை விட்டு தூக்கப்பட்டுள்ளார் அல்லது துரத்தப்பட்டுள்ளார் என்பதே பொருத்தமாகும். 

இரண்டாவது ஒரு நாள் சர்வதேச போட்டியில் படு மோசமாக இலங்கை அணியிடம் தோற்றபோதே, அக்தாரின் இறுதிப்போட்டி அதுதான் என்பது பலபேரும் ஊகித்த ஒரு விடயம்தான். அந்தப் போட்டியின் பின்னர் பாகிஸ்தானிய அணித்தலைவர் சோயிப் மாலிக் ஒரு பேட்டியின்போது அக்தார் விளையாட்டில் காட்டும் ஈடுபாடு பற்றியும் அவரது உடல் தகுதி பற்றியும் சந்தேகத்தை பகிரங்கமாகவே வெளியிட்டிருந்தார். 2011ம் ஆண்டின் உலகக்கிண்ணப் போட்டிக்கான பாகிஸ்தான் அணி பற்றி யோசிக்கும்போது அக்தாரை விட்டு விட்டு புதியவர்கள் பற்றியே யோசிக்கவேண்டும் என்று குறிப்பிட்டதானது அக்தாருக்கு ஆப்பு வைக்கப்பட்டு விட்டது என்பதை புலப்படுத்தியது.

காயம், சர்ச்சைகள், உடல் உபாதைகள், தடைகள் என்று பல காரணங்களால் பல மாதங்களின் பின் இலங்கை அணியுடனான போட்டிகளில் தனது மீள் கிரிக்கெட் பிரவேசத்தை மேற்கொண்டார்.

ஆனால் மணிக்கு 140 கிலோமீட்டர் அல்லது 150 கிலோமீட்டர் வேகத்தை தொடுகின்ற பழைய புயல் அக்தாரை காணமுடியவில்லை. கொஞ்ச நேரத்தில் வியர்த்து களை த்துவிடும் ஒரு வயதேறிய, வினையூக்கமில்லாத ஒரு பலவீனமானவரையே கராச்சியின் இரு போட்டிகளிலும் கண்டோம். 

                              இறுதியாக கராச்சியில்- காலம் முடிந்ததா?

அக்தார் என்ற பெயரைக் கேட்டாலே பீதியிலே நடுங்கும் வீரர்கள் கூட "அக்தாரா? வா வா....." என்று கேட்டு கேட்டு அவரை துவைத்தெடுக்கும் நிலை. கராச்சியில் அடுத்தடுத்த நாட்களில் இடம்பெற்ற போட்டிகளில் தனது பத்து ஓவர்களையே பூர்த்தி செய்ய முடியாதவராகவும், களத்தடுப்பில் பந்துகளை விரட்டமுடியதவராகவும் காணப்பட்டார். இரண்டு போட்டிகளிலும் தான் வீசிய 13 ஓவர்களில் 88 ஓட்டங்களையும் வாரி வழங்கிய அக்தார் கைபற்றியது ஒரே ஒரு விக்கெட்டை மாத்திரமே. 

அதிரடி, அதிவேகப் பந்து வீச்சாளராக ஆரம்பித்த அக்தார் மிகக்குறுகிய காலத்தில் அதிகப் பிரபலத்தையும், துடுப்பாட்ட வீரர்கள் மத்தியில் ஒரு நடுக்கத்தையும் ஏற்படுத்திக்கொண்டார். அப்போது தமது கிரிக்கெட் வாழ்கையின் அஸ்தமனத்தை நெருங்கிக் கொண்டிருந்த வசீம் அக்ரம், வக்கார் யூனிஸ் ஆகியோரின் பின்னர் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சின் துரும்புச்சீட்டாக கருதப்பட்டவர் அக்தார்.

குறுகிய காலப் பிரபல்யம், ஊடகங்கள் கொடுத்த அளவுக்கதிகமான விளம்பரம், நுனிநாக்கு ஆங்கிலம், அடிக்கடி குழம்புகின்ற பாகிஸ்தானிய கிரிக்கெட் என்று இருந்த காரணிகள் அலைபாயும் மனது கொண்டிருந்த அக்தாருக்கு விளையாடவந்த ஒரு வருடங்களிலேயே தலைக்கனம் கொடுத்த விடயங்கள்.

          புயல் வேகப்பந்துவீசுபவராக அக்தார் - அது ஒரு காலம்

தனது பயிற்சிகளிலும், உடல் பராமரிப்பிலும் போட்டிகளிலும் செலுத்தாத கவனத்தை விளம்பரங்கள், போட்டிகள், கிளப் விசிட்டுகள், கேளிக்கைகளுக்கு கொடுத்ததால் கவனம் சிதறியது. தலைக்கனம் ஈரியத்துடன் அடுத்த பாகிஸ்தானிய அணித்தலைவர் தான்தான் என்றும் அறிக்கையும் கொடுத்தார்.

அடிக்கடி காயங்களால் அணியைவிட்டு விலகியதுடன், விளையாடிய போட்டிகளிலும் முழுமையாக பந்து வீச முடியாமல் தவித்தது என்று பாகிஸ்தான் அணியை அடிக்கடி நட்டாற்றில் விட்டவர் அக்தார்.

இதைவிட போதைமருந்து, ஊக்கமருந்து, ஒப்பந்தங்கள்,மோதல்கள், பாகிஸ்தானிய தெரிவாளர்கள், கிரிக்கெட் சபைக்கு எதிரான கருத்துக்கள் என்று தொடர்ந்து சர்ச்சைகள்! 
எல்லாவற்றிலும் மிகப்பெரிய சர்ச்சை ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றத்துக்காக அக்தாருடன் ஆசிப்பும் 2007 உலகக்கிண்ணப் போட்டிகளில் விளையாடமுடியாமல் தடைசெய்யப்பட்டது.

பல பொல்லிவூட் நடிகைகளுடன் கிசுகிசு, பல அழகிய பெண்களுடன் பல இடங்களில் இரவு நேரக் களியாட்டம் என்று அக்தார் மீது ஏகப்பட்ட புகார்கள்; அது மட்டுமல்லாமல், சக வேகப்பந்து வீச்சாளரும்,பின்னர் இவருடனே சேர்ந்து சர்ச்சைகளில் அகப்பட்டவருமான அசிப்பைத் துடுப்பினால் தாக்கிய குற்றத்துக்காக அக்தார் தடை செய்யப்பட்டது,என்றும் ரசிகர்களுடன் மோதலில் ஈடுபட்டது என்றும் இன்னும் பல மோசமான குற்றச்சாட்டுக்கள். 

இரவு விடுதிகளில் பெண்களுடன் - ஆடிய ஆட்டம் என்னஇனி அக்தாரைக் காணவே முடியாது என்றிருந்தபோது மீண்டும் அக்தார் வருகிறார் என்று இலங்கை அணிக்கெதிரான தொடருக்கு அழைத்துவரப்பட்டார். ஆனால் அவருக்கு இருந்த கொஞ்ச நஞ்ச மதிப்பு, மரியாதை, புகழ் எல்லாமே இவ்விரு நாட்களில் இல்லாமல் போனதே மிச்சம்!

ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் தனது சக்தியெல்லாம் வடிந்து, வேகமெல்லாம் குறைந்து இப்போது எங்களூர் ராசையா அண்ணனின் பழைய கரத்தை வண்டி போல் மாறிவிட்டது. 

கடைசி இரண்டு போட்டிகளிலும் அக்தார் பந்து வீசியதைப் பார்த்தபோது, அக்தார் போட்டிகளுக்கு மட்டுமே இப்போது ஓரளவு தகுதி பெறுவார் போல இருந்தது. அணித்தலைவரினாலேயே சந்தேகம் தெரிவிக்கப் பட்ட பிறகு அக்தார் இனி தனது ஓய்வை அறிவிப்பது நல்லது என்றே தோன்றுகிறது.பாகிஸ்தானும் தனது எதிர்காலத்துக்கான இளம் வேகப்பந்து வீச்சாளர்களைத் தேட ஆரம்பிப்பது நல்லது.

இன்று இலங்கை அணிக்கெதிராக ஸொஹைல் கான் சிறப்பாகப் பந்து வீசினாலும் பின்னர் இலங்கை அணி பிரித்து மேய்ந்து விட்டது.. பிரம்மாண்டமான வெற்றியையும் இதை நான் பதிந்து கொண்டிருக்கும்போது பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்..

ஷோயப் அக்தாருக்கு மட்டுமா அல்லது ஷோயப் மாலிக்குக்கும் தலைமைப் பதவிக்கு ஆப்பா?

      

January 23, 2009

மேலிருந்து பாருங்கள் அழகு தெரியும்

"இருக்குமிடத்தில் இருந்து கொண்டால்.." என்ற கண்ணதாசனின் வரிகளை அடிக்கடி நாம் எடுத்துக்காட்டுகளாக கையாண்டாலும், எல்லா விஷயங்களுமே இருக்கும் இடத்தில் எங்கள் கண்களுக்கு அழகாகத் தோன்றுவதேயில்லை.. 

எங்கள் பூமியின் அழகு கூட அவ்வாறு தான்.. பூமியின் ஒவ்வொரு அம்சமும் அழகானது. எனினும் வெற்றுக் கண்களுக்கு அந்த அழகு புரிவதும் இல்லை;அந்த அழகை ரசித்து பருகுவதற்கு எமது பரபரப்பான சூழலில் நேரமும் வாய்ப்பதில்லை..

இந்தப்படங்கள் மின்னஞ்சல் மூலமாக எனது வெளிநாட்டு நண்பர் ஒருவர் அனுப்பியது.. வான்பரப்பில் இருந்து எடுக்கப்பட்ட இந்த ஒளிப்படங்களில் எங்கள் பூமியின் ஒவ்வொரு கோணமும் எத்தனை அழகு பாருங்கள்..

இந்தப் படங்கள் எவற்றுக்கும் மேலதிக வர்ண சேர்க்கை எவையும் செர்க்கப்படவோ,கணினியால் graphix வித்தைகள் எவையும் காட்டப்படவோ இல்லையாம்...

மேலிருந்து பார்க்கையில் மேலும் அழகு எமது பூமி.. ஒவ்வொரு இடமுமே கை தேர்ந்த ஓவியன் ஒருவனால் தீட்டப்பட்டு, அழகான,பொருத்தமான வர்ணக்கலவை கொடுக்கப்பட்ட சிறந்த ஓவியம் போல.. 

ரசியுங்கள்;வாழ்த்துங்கள் அந்தப் பெயர் அறியா கமெராக் கவிஞனை ..
January 22, 2009

முட்டாள் அமைச்சரே


அமைச்சர் : மன்னா, கல்விச்சாலைகளுக்கு போதிய வசதிகள் இல்லையென்று கல்வி போதிக்கும் ஆசிரியர்களும் மாணவர்களும் அதிருப்தி அடைந்துள்ளார்கள்! வெகுவிரைவில் வேலை நிறுத்தத்திலும் இறங்கலாமாம்! 

மன்னர் : சமாளித்து விடும் அமைச்சரே! இப்போதிருக்கும் நிதி நெருக்கடியில் ஒன்றுமே செய்ய இயலாது!  

அமைச்சர் : மன்னா, போக்குவரத்தப் பாதைகள் நீண்டகாலமாக செப்பனிடப்படவில்லையென்று மக்கள் குறைப்படுகிறார்கள. எல்லாப் பாதையுமே குன்றும் குழியுமாம் என்று பரவலான அதிருப்திப் பேச்சுக்கள்!  

மன்னர் : முடியாது அமைச்சரே - வீதி அபிவிருத்திக்கென்று வாங்கிய வரிகளையும் கடன்களையும் தானே பல்வேறு விதமாக அமுக்கிவிட்டோமே! புரட்சி செய்வோரை நசுக்கிவிடலாம்! 

தளபதி : மன்னரே சிறைச்சாலைகளில் இடவசதிஇ ஏனைய வசதிகள் போதவில்லையென்று ஆர்ப்பாட்டம் நடத்தகிறார்கள். 

மன்னர் : அப்படியா?  
அமைச்சரே , உடன் நடவடிக்கை எடும்! அவர்கள் கேட்கும் எல்லா வசதியும் உடனே செய்து கொடுக்கப்படவேண்டும்!  
எல்லா சிறை அறையிலும் ஏ சி பூட்டி விடும்!  
விரும்பினால் கைதிகளுக்கு வாரத்தில ஒருநாள் விடுமுறையும் கொடுக்க உத்தரவிடுவோம்!  

அமைச்சர் : (ஆச்சரியத்துடன்) என்ன மன்னரே இது..அத்தியாவசிய தேவைகளான கல்வி வீதிகளை விட்டுவிட்டுப் போயும் போயும் சிறைகளுக்கா..  

மன்னர் : முட்டாள் அமைச்சரே – புரியாமல் பேசுகிறீர்...நாளையே தமது பதவி பறிபோனால், பதவிக்காலம் முடிந்த பிறகு பள்ளிக்கூடம் போகப் போகிறோமா ? இல்லையென்றால் வீதியில் பயணிக்கப் போகிறோமா... 
சொன்னதைச் செய்யும்.. 

பி.கு - இது அண்மையில் நான் வானொலியில் சொன்ன நகைச்சுவை.. சும்மா ஒரு பதிவாகப் போடலாம்னு போட்டேன்.. வேறு எந்த உள் குத்து,உடன் குத்தும் இல்லை..

January 21, 2009

வேலை வெட்டியற்ற அமெரிக்கரும்,வேலை தொடங்கிய ஜனாதிபதியும்

நேற்று இரவு அநேகமாக எந்தத் தொலைக்காட்சியைத் திருப்பினாலும் ஒரே ஒபாமா மயம் தான்! நம்ம தமிழ்மொழியின் சன்,விஜய்,கலைஞர் போன்ற ஒரிரண்டு நல்ல சனல் தவிர ஏனைய அநேக அலைவரிசைகளில் அமெரிக்காவில் 44வது ஜனாதிபதியாக பராக் ஒபாமா பதவியேற்கும் சரித்திரபூர்வ நிகழ்வு நேரடியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.

இன்றும் ஒபாமாவா என்று சலிக்காதீர்கள்.. நிறைய விஷயங்கள் எங்களுக்குப் பாடங்கள்.. படங்களையும் பாருங்கள் புரியும்

அதிகம் நீண்டதாக இல்லாமல் தேவையற்ற ஆளுங்கட்சி வெற்றி பெற்றவரின் புகழ்பாடாமல் முன்னைய ஜனாதிபதிகளையும் மறக்காமல் (அவர்கள் எந்தக் கட்சியாக இருந்தாலும்) சம்பிரதாயபூர்வமாக மிக நேர்த்தியாக நேரந் தவறாமல் சுருக்கமாக பதிவியேற்பு நிகழ்வுகள் இடம்பெற்றன.

அமெரிக்காவின் 1937இல் திருத்தியமைக்கப்பட்ட புதிய அரசியல் யாப்பின்படி ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கும் ஒரு தடவை ஜனவரி 20ஆம் திகதி நண்பகல் 12மணிக்குப் புதிய ஜனாதிபதியும் உப ஜனாதிபதியும் தங்கள் கடமைகளைப் பொறுப்பேற்று சட்டரீதியாகப் பணிகளை ஆரம்பிக்க வேண்டும். நம்நாட்டு அரசியல்வாதிகள் மாதிரி விரும்பிய நேரம் விரும்பிய இடத்தில் ஆடம்பரமாக எல்லாம் பதவியேற்பு விழா நடாத்த முடியாதுங்கண்ணா!

அமெரிக்கர்கள் தங்களைப் பற்றிப் பெருமையுடன் புகழ்ந்து கொள்வதைப் போல அமைதியாக பதவி மாற்றம் புஷ்ஷிடமிருந்து ஒபாமாவுக்கு மாறியது. 

ஒபாமா தேர்தலில் எப்போதோ வெற்றி பெற்றும் நேற்றுப் பதவியை அவர் பைபிள் மீது சத்தியப்பிரமாணம் செய்து பொறுபேற்கும் வரை ஜோர்ஜ் புஷ் மிக மரியாதையுடன் 'ஜனாதிபதி' என்றே அழைக்கப்பட்டார் என்பது நாங்கள் எல்லோரும் கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு அரசியல் நாகரிகப் பாடம்! 

இப்போதே நாற்காலியின் நுனியிலா? சிரிக்கும் ஒபாவும்,சீரியசான ஒபாமாவும்


நான் இதிலெல்லாம் மிக உன்னிப்பாக ரசித்தது நேற்றைய நாளின் நாயகன் பராக் ஒபாமாவை! தனது வழமையான trademark உடை, சிந்தனை வயப்பட்ட முகத்தில் ஒரு கீற்றான புன்னகை!  வெற்றி பெற்ற பெருமிதமோ கர்வமோ பதவியின் கனத்தையோ காட்டாத முகம்! எப்போதையும் விட சற்று பதட்டமாக நெற்றிக் கோடுகள் (இருக்காதா எத்தனை பேரை எத்தனை சவால்கள் எத்தனை விமர்சனங்களை எத்தனை நாடுகளை சமாளிக்க வேண்டும்) இவற்றின் மத்தியிலும் சற்றும் தடுமாறாமல் ஒரு தடவை கூட நின்று யோசிக்காமல் சிறு துண்டு பேப்பர் கூட பார்க்காமல் உரையாற்றிய  விதம் இருக்கே!

என்ன சொல்லலாம்! அற்புதம்! class! marvellous!
கென்னடிக்குப் பிறகு தலை சிறந்த அமெரிக்க பேச்சாளார் இவர் என்கிறார்கள்.. 

ஒரு சீரான நதி நடப்பது போல தெள்ளிய ஆங்கிலத்தில் அழகாக இருந்தது அவர் உரை.. இடையிடையே அமெரிக்கரை உணர்சிப்படுத்த வழக்கமான அமெரிக்க ஜனாதிபதிகளின் பாணியில் வீர வசனங்கள் சொன்னாலும் கூட, அனைவருக்கும் சம உரிமை, அனைவருக்கும் சம பொறுப்பு, புதிய மாற்றத்துக்கான தேவை,பொருளாதார வீழ்ச்சி கண்ட அமெரிக்காவை மீண்டும் கட்டியெழுப்ப அனைவரும் இணையவேண்டும் போன்றவற்றை வலியுறுத்தியபோது, வழக்கமான ஒரு அமெரிக்க ஜனாதிபதியாக இல்லாமல் ஒரு உத்வேகமான புதிய தலைமுறைத் தலைவரை நான் கண்டேன்.


      முன்னைய முதல் தம்பதியும், புதிய முதல் தம்பதியும்

எல்லா நிகழ்வுகளும் முடிந்து ஒவ்வொருவராகக் கிளம்பிய பின் இறுதியாக ஒபாமா தம்பதியரும், உப ஜனாதிபதி ஜோ பிடென் தம்பதியரும் காங்கிரஸ் கட்டட படிக்கட்டுக்களில் நின்று கொண்டு, பதவியில் இருந்து விடைபெற்றுச் செல்லும் புஷ் தம்பதியரை ஹெலிகோப்டேரில் ஏற்றி விடை கொடுத்த காட்சி ஒரு கவிதை..  

 தம்பி, நாடு உன் கையில்;நடத்து நீயாவது நல்லபடியாக .. புஷ் சொல்கிறாரோ ஒபாமாவுக்கு

இனி வெள்ளை மாளிகை எங்கள் வீடு , நன்றி நீங்கள் செல்லலாம் என்று அமைதியாக சொன்னது அந்தக் காட்சி..

எல்லாம் சரி, நேற்று அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்க்டனில் திரண்டவர்கள் மொத்தம் இரண்டு மில்லியன் பேர்.. தொலைக்காட்சிகள் காட்டிய காட்சிகளின் படி அந்த நாட்டின் எல்லா மூலைகளிலுமே ஒபாமா பதவியேற்பை நேரடியாகவே மக்கள் பல்வேறு இடங்களில் திரண்டிருந்து இந்த ஒரு மணி நேர உற்சவத்தைப் பார்த்த வண்ணம் இருந்தனர்..

                  அலைகடலெனத் திரண்டுவந்த அமெரிக்கா   

தேர்தல்,அரசியல்,விழாக்கள் என்றால் பொதுவாக நம் ஆசிய நாடுகளில் தான் மக்கள் நேர,காலமின்றித் திரண்டு வேலைகளையும் விட்டுவிட்டு வெட்டியாவதுண்டு.. உலகின் முன்னணி நாடு அமெரிக்காவிலுமா? 

இத்தனை பேரும் நேற்று ஒரு வேலை நாளில் பகல் வேளையில் திரண்டு நின்றது வேடிக்கையாய் இல்லை? 

ஒரே ஒரு விஷயம் ஒபாமா நேற்றே தனது முதலாவது அரச பணி ஆவணத்தில் கையெழுத்திட்டு விட்டார்.. நடக்கட்டும் நடக்கட்டும்..

புது விளக்குமாறு நல்லாக் கூட்டப்போகுதா? இல்லை எப்போதுமே நல்லவற்றை உலகில் கூட்டப் போகிறதா? (அதிகரிக்க)   

கறுப்பின விடுதலைப் போராளி மார்ட்டின் லூதர் கிங்கை(MLK) ஞாபகப்படுத்தும் பதாகை.. அருகேயே ஒன்றுபட்டு முன்னேற அழைப்பு..

January 20, 2009

ஒபாமா வழி.. லிங்கன் வழி !


இன்று அமெரிக்காவில் ஒரு புதிய மாற்றத்துக்கான யுகத்தின் ஆரம்பம்! மாற்றங்களை நோக்கி அமெரிக்க மக்களை அழைத்த பராக் ஓபாமா அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்கிறார். அமெரிக்க வரலாற்றின் 44வது ஜனாதிபதி. அவர் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பு வைத்துக் காத்திருக்கிறார்கள் அமெரிக்க மக்கள்!

அமெரிக்காவின் முதலாவது கறுப்பின ஜனாதிபதி என்ற பெருமையோடும் தனித்துவத்தோடும் வெள்ளை மாளிகைக்கு வருகின்ற ஒபாமாவுக்கு முன்னால் குவிந்திருக்கும் சவால்கள் ஏராளம். பொருளாதாரம், ஈராக் போர்,உள்ளுர் வேலைவாய்ப்பின்மை என்று பலப்பல. ஆனால் இவை எல்லாவற்றையும் சமாளித்துவிடக் கூடிய வல்லமை ஓபாமாவிடம் இருப்பதாக சொல்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

கடுமையான பிரசாரப் போட்டிகளில் ஒபாமா வெற்றியீட்டியது போல இவையெல்லாவற்றையும் இலகுவாக முறியடிப்பார் என்கிறார்கள். காரணம் ஒபாமாவழி தனிவழியல்ல. ஏற்கெனவே அமெரிக்க வரலாற்றில் தனியிடம் பதித்த அமெரிக்காவின் 16வது ஜனாதிபதியான ஆப்ரகாம் லிங்கன் வழி!

பராக் ஒபாமா தனது பிரச்சார ஆரம்பம் முதல் இன்று பதியேற்பது வரை அமெரிக்க சரித்திரத்தில் The Great Emancipator (அதாவது விடுதலை அளிக்க அவதரித்தவர்)என்ற பெயரால் பெருமைப்படுத்தப்படுகின்ற ஆப்ரஹாம் லிங்கனையே முன்னிலைப்படுத்தி பின்பற்றி வந்திருக்கிறார்.

கறுப்பின ஒதுக்கலுக்கு எதிராகவும்,கறுப்பின மக்களுக்கு சம உரிமை வழங்கப்படவேண்டும் என்பதற்காகக் குரல் கொடுத்து போராடிய லிங்கனை ஒபாமா தனது முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டது மிகப்பொருத்தமானதே!


  • இருவருமே நெடிதுயர்ந்தவர்கள்; கூரிய நாசி,ஆழமான மோவாய்; நேரிய பார்வை உடையவர்கள்; இருவருக்குமே பலரையும் கவர்ந்திழுக்கும் பேச்சுவன்மையே மிகப் பெரிய பலம்!
  • ஒபாமா தான் ஜனாதிபதித் தேர்தலில் நிற்பதைப் பற்றிய அறிவித்தல் விடுத்ததே, லிங்கன் தனது சிறப்புமிக்க விடுதலை உரை ஆற்றிய ஸ்ப்ரிங் பீல்ட் என்ற இடத்திலே தான்..
  • தனது பிரசாரங்களிலே பல இடங்களிலே லிங்கனின் உணர்ச்சிமிகு சொற்பொழிவுகளை ஞாபகப்படுத்தினார்.தான் கறுப்பினத்தவர் என்பதை அழுத்தி சொல்வதை விட எல்லா இனத்தவரும் ஒன்றுபட்ட ஒரு அமெரிக்காவை உருவாக்கவேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டிருந்த அவர், லிங்கன் சொன்ன கறுப்பின விடுதலைக்கான கருத்துக்களையும் சர்ச்சைகள் இல்லாமல் தனது உரைகளில் தூவியிருந்தார்.
  • அமெரிக்க அதிபராகப் பதவியேற்க இருக்கும் பராக் ஒபாமா தான் வசித்து வந்த ஃபிலடெல்ஃபியா (Philadelphia) மாகாணத்தில் இருந்து வாஷிங்டன் டி.சி. (Washington D.C) மாகாணத்திற்கு தனது குடும்பம், துணை அதிபர் மற்றும் சகாக்களுடன் இரயிலில் வந்து இறங்கினார். 1861-ல் அப்போதைய அமெரிக்க அதிபர் ஆபிரஹாம் லிங்கன் இதேபோல், இதே இரயில் பாதையில் பயணம் செய்து தனது அதிபர் பதவியை ஏற்றுக்கொண்டார்.  
  • இன்று இடம்பெறவுள்ள சரித்திரப் பிரசித்தி பெற்ற பதவியேற்பு நிகழ்வுகளிலும் பல இடங்களில் லிங்கன் நினைவுகூரப்பட இருக்கிறார்.
  • இன்றைய பதவி ஏற்புப் பாடல்கள் பல லிங்கனின் பதவி ஏற்போடு தொடர்புடையவை.
  • இன்று தொலைக்காட்சிகளில் ஒபாமாவின் பதவியேற்பு நிகழ்வுகள் நேரடியாகக் காட்டப்படும் நேரம் அவர் ஆப்ரகாம் லிங்கனின் நினைவுத் தூபியிலிருந்தே வருகை தரவுள்ளார்.
  • ஒபாமா சத்தியப்பிரமாணம் செய்து பதவியேற்கவுள்ள பைபிள் கூட தனது பதவியேற்பின்போது லிங்கன் பயன்படுத்தியது என்பது மேலும் ஒரு சிறப்பம்சம்.
  • இதற்கும் மேலாக இன்று பதவியேற்பின் பின் வழங்கப்படவுள்ள மதியபோசன விருந்தில் பரிமாறப்படவுள்ள பெரும்பாலான உணவுகள் லிங்கனுக்குப் பிடித்தவை என்பது இன்னுமொரு சுவாரஸ்யம்.   

லிங்கனின் சுயசரிதையை எழுதிய டோரிஸ் கேர்ன்ஸ் கூட்வின் (Doris Kearns Goodwin) சொல்கிறார் "ஒபாமாவின் மனதிலும்,சிந்தனையிலும் லிங்கன் நிறைந்திருக்கிறார்.. இது நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லதிற்கே"

முன்னாள் ஜனாதிபதியை புதிய அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் பின்பற்றுவது இது முதல் முறையல்ல.. இதற்கு முதல் பில் கிளிண்டனும் முன்னாள் ஜனாதிபதி தொமஸ் ஜெப்பெர்சனை (Thomas Jefferson)பிரசாரம் முதல் பதவியேற்பு வரை பின்பற்றியிருந்தார்.. ஆனாலும் அவரது ஆட்சி பற்றித் தான் உங்களுக்குத் தெரியுமே.. 

ஆச்சரியம் என்னவென்றால் லிங்கன் கூடத் தன் அநேகமான நடவடிக்கைகளில் ஜெப்பெர்சனைத் தான் என்பது தான்..       

எல்லாம் சரி ஒபாமாவின் ஆட்சியும் லிங்கனது போல சிறப்பாகவும்,சீராகவும் நடக்குமா என்பதே அமெரிக்கரும்,மொத்த உலகத்தவரதும் கேள்வியாகும். 

இன்று அமேரிக்காவில் நிலவும் கடும் குளிரிலும் ஏராளமானோர் தலைநகரில் ஒபாமாவை அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாகப் பார்க்கத் திரளவுள்ளார்கள். காலையில் என்னோடு பேசிய கனேடிய நேயர் ஒருவர் கனடாவில் இருந்து மட்டும் முப்பதாயிரத்துக்கு மேற்பட்டோர் செல்வதாகக் குறிப்பிட்டார்.. இதுவரை அமெரிக்க வரலாற்றில் இடம்பெறாத பிரம்மாண்ட ஜனாதிபதி பதவியேற்பாக இது இருக்கப்போகிறது.. நாம் எல்லாம் இலங்கையிலும்,இந்தியாவிலும் இன்றிரவு எட்டு மணி முதல் நேரடியாகத் தொலைக்காட்சியில் பார்க்கலாம்.  


January 19, 2009

கடைசியாக புஷ்..

விடை பெற்றுப்போகும் அமெரிக்க ஜனாதிபதி புஷ் இறுதியாக ஜனாதிபதியாகக் கலந்துகொண்ட பத்திரிக்கையாளர் மாநாட்டில் (Jan 12th) காட்டிய முகபாவனைகள் இவை.. 

அவ்வளவு தான் என்னால முடிஞ்சுது..


அது தான் சதாமைப் போட்டுட்டம்ல..


என்ன செய்றது புது வீடு பார்க்கத் தானே வேணும்..


மோனிகாவா? அது என்னோடதில்லப்பா..

என்னது? இலங்கைக்கா? நானா? ஐயோ சாமி.. வேணாம்..


என்ன செய்யப் போறேனா? நானே யோசிக்கல..


இப்படித் தான் லூசுத் தனமா அடிக்கடி சிரித்து வச்சேன்..


லோஷனும் நம்மைப் போட்டுத் தாக்குறானா .. என்ன கொடும ஒபாமா இது..


சிவாஜி ஸ்டைல கொஞ்சம் ட்ரை பண்ணிப் பார்க்கிறேன்..


மன்மோகன் சிங் பற்றி இப்படித் தான் அடிக்கடி சிரிப்பேன்..


ஓய்வு பெற்ற பிறகும் என்னென்ன ஜோக் என்னைப் பற்றி வருமோ.. விடவே மாட்டாங்களா?

என்ன தான் கொடுங்கோலனாக புஷ் எமக்குத் தெரிந்தாலும் முகம் சிவந்து உணர்ச்சிவசப்படும் அவரது முகம் பரிதாபமாக இல்லையா?

அடிக்கடி மாறிக்கொண்டிருந்த அவரது எண்ணங்கள்,நடவடிக்கைகள் போலவே அவரது முகமும்.. கோமாளி ராஜா கோட்டை(வெள்ளை மாளிகை)விட்டு வெளியேறினார்.. 

நாளை முதல் புதிய ராஜா.. அவர் எப்பிடியோ?

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner