July 31, 2010

வெற்றி FM தாக்குதல் - இன்னும் சில...

(வெள்ளி) அதிகாலை வெற்றி FM மற்றும் இதர இரு வானொலிகள்,இரு தொலைக்காட்சிகள் அடங்கியுள்ள Voice of Asia Networks நிறுவனத்தின் மீதான காடையர் தாக்குதலின் மேலதிக விபரங்களை,புகைப்படங்கள்,காணொளிகளுடனும் இன்னும் வானொலி செய்திகள் வாயிலாகவும் அறிந்திருப்பீர்கள்.


தமிழ் மிர்ரர் தந்த செய்தி+காணொளி 
http://www.tamilmirror.lk/index.php?option=com_content&view=article&id=4864:2010-07-30-12-12-23&catid=46:2009-08-19-03-41-17&Itemid=110




பாதுகாப்பு உத்தியோகத்தரின் இரத்தத் துளிகள். 


எமது வானொலி ஓரளவுக்கு வழமைக்குத் திரும்பி சேவையை நடத்தி வருகின்ற போதும்,தீக்கிரைக்குள்ளான பகுதியினூடாக ஒலிபரப்பாகி வந்த சில பகுதிகளுக்கான சேவை செயலிழந்து விட்டது.


செய்திகள் அறவே இல்லை. இடையே இரு விசேட செய்தித் தொகுப்புக்களை (இத் தாக்குதல் சம்பந்தமாக)வழங்கி இருந்தோம்.


தொலைக்காட்சிகள் இரண்டுமே முற்றாக செயற்படமுடியாத நிலையிலிருந்து மீண்டு இப்போது வழமையான நிகழ்ச்சிகளுக்குத் திரும்பியிருக்கிறோம்.
தீயணைப்பு இயந்திரம்..


காயமுற்ற மூன்று ஊழியர்களில் உதவி ஆசிரியர் ரஜினிகாந்த் , செய்தியாளர் லெனின் ஆகியோர் சிகிச்சையின் பின் வீடு திரும்பியிருக்கிறார்கள்.


தலையில் பலமாகத் தாக்கப்பட்ட வாயில் பாதுகாவலர் இன்னமும் வைத்தியசாலையில்.


இன்று இலங்கையின் எல்லா மொழி நாளேடுகளிலும் நேற்றைய இந்தத் தாக்குதல்+தீக்கிரை சம்பவம் தான் தலைப்பு செய்தி.
ஒவ்வொருவர் ஒவ்வொரு வித ஊகங்களையும் வெளியிட்டுள்ளார்கள்.
வரவேற்பறை 


ஆனால் நாங்கள் எம் அலுவலகம் சார்பாக இதுவரை உத்தியோகபூர்வ அறிக்கை எதனையும் வெளியிடவில்லை.
முகாமைத்துவத்தில் உள்ளவன் என்ற அடிப்படையில் இந்த உத்தியோகபூர்வ அறிக்கையை ஊடகங்களுக்கு திங்கட்கிழமை வெளியிடலாம் என முடிவு செய்துள்ளோம்.


ஆனாலும் நேற்று எமது நேயர்களுக்கு வெற்றி வானொலி மூலமாக நாம் சொன்னது போல..


யார் இவர்கள்? ஏன் செய்தார்கள்?
நாம் பகையை எவ்விதமாகவும் தேடிக் கொண்டதுமில்லை.
பகைவர் யாரும் எமக்கு இல்லை.


இது தான் எங்கள் நிலை.


இது வரை மிரட்டல்கள் வந்ததில்லை.நேரடி நெருக்கடிகளை நாம் எதிர்கொண்டதில்லை.
சக ஊடகங்களுடனும் மிக நாகரிகமான அணுகுமுறைகளையே கடைக்கொண்டிருக்கிறோம்.

வெடிக்காமல் விழுந்து கிடந்த தோட்டா 

உயர் பாதுகாப்பு வலயம் என்பதனால் எம் நிறுவனம்,அருகிலுள்ள வங்கி,மொபிடேல் தலைமை அலுவலகம் ஆகியன எப்போதுமே அதிக பாதுகாப்பை நாடியதில்லை.


செய்திகளைக் குறி வைக்க என்ன காரணம்?


ஆரம்பம் முதலில் எம் செய்திகள் உண்மையான நடுநிலையின் பிரகாரம் இருந்தன.
இதற்காக, பொய்களைப் பரப்பக் கூடாது என நாம் சில செய்திகளை எடுக்காமலேயே விட்டிருக்கிறோம்.
மனிதாபிமான செய்திகளுக்கு முன்னுரிமை கொடுக்க நாம் தலைப்பட்டதும் அதனால் தான்.


அண்மையில் பெறப்பட்ட தரப்படுத்தலிலும் கடந்த காலத்தை விட அதிக முன்னேற்றம் நாம் கண்டுள்ளதும் எமது அனுசரணையாளர்களால் இத் தாக்குதலின் பின்னர் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.





செய்தி அறைக்குத் தீ வைத்த பின்னர் வந்தோர் எமது வரவேற்பறையின் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.
ஆனால் வானொலிக் கலையகங்கள் உள்ள பகுதியின் வாயில் வரை வந்தும் அங்கே சிறு சேதங்களை ஏற்படுத்திய பின்னர் ஏனோ உள்ளே நுழையவில்லை.
தொலைக்காட்சிப் பகுதிக்குள் நுழையும் வழி அவர்களுக்கு தெரியவில்லை என ஊகிக்கிறேன்.


இந்த முகமூடி ஆயுததாரிகளுக்கு சில கட்டளைகள் இறுக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளன என நினைக்கிறேன்.
காரணம் அவர்கள் மூர்க்கத்தனமாகக் காயப்படுத்தினார்களே தவிர கொலை செய்ய எத்தனிக்கவில்லை.(செய்துபோட்டாலும் தடுத்திருக்க முடியாது)


கண்ணாடிகள் எல்லாவற்றையும் அடித்து தூளாக்கியவர்கள்,வரவேற்பறையிலிருந்த மீன் தொட்டியில் கை வைக்கவில்லை.


இந்த சேதங்கள் மிகப் பாரியவை..பொருளாதார அடிப்படையிலும் செய்தி சேகரிப்பிலும்.
பொருட்கள் காப்புறுதி செய்யப்பட்டிருக்கவில்லை.
செய்தி+தகவல் மூலங்களின் Back upsஉம் அங்கேயே தான் இருந்தது.


யார் எதிர்பார்த்தார் எமக்கு இப்படி நேரும் என்று?


எனக்கும் இன்னும் எம்மில் சிலருக்கும் இப்படியான அனுபவங்கள் அடிக்கடி நிகழ்ந்து பழகிப் போய்விட்டது.
ஆனால் அண்மையில் எமது வெற்றி குழுவில் இணைந்துகொண்ட புதிய அறிவிப்பாளர் சீலன் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை.
வந்தவர்கள் செய்த கோரங்களைக் கண்டதும்,பாதுகாப்பு உத்தியோகத்தர் தாக்கப்பட்டதும் அவரை பயங்கரமாகப் பாதித்துள்ளன .
வேலையை விடும் அளவுக்குப் பயந்துள்ள அவரை நான் கொஞ்சம் தேற்றி 
"இதற்கு எல்லாம் பயந்தால் உலகில் எங்குமே ஊடகவியலாளனாகக் கடமையாற்ற முடியாது" என்று சொன்ன பின் இப்போது பையன் கொஞ்சம் அமைதியாக உள்ளார்.
பாவம்.


இப்படி எத்தனை பேர் இந்தத் துறைகளை விட்டு ஓடியுள்ளார்கள்.


ஆனால் ஒன்று நேற்று சம்பவம் நடந்து ஒரு மணிநேரத்துக்குள் நாம் அலுவலகம் அடைந்தபோது நானே எதிர்பாராமல் பெண்களும் உட்பட அதிகளவான எங்கள் ஊழியர்கள் கவலையுடனும்,அதிர்ச்சியுடனும் அங்கே நின்றிருந்தார்கள்.


சம்பவம் நடக்கும் நேரத்தில் அழைத்தும் தமிழ் சினிமா போலீசார் மாதிரியே நம் காவல்துறையினரும்,தீயணைப்புப் படைவீரரும் வந்து சேர்ந்தார்கள் என்பதும் முக்கியமான விஷயம்.


அதற்குள் இங்கேயிருந்த காயமடைந்த மூவரும் இன்னும் மூவரும் சளைக்காமல் தீயணைக்கப் போராடி இருந்தார்கள். அந்தக் கடமையுணர்ச்சிக்குப் பாராட்டுக்கள்.  


இன்று அலுவலகம் வரும்போது எரிந்த எச்ச சொச்சங்களை வெளியே எடுத்து அகற்றிக் கொண்டிருந்தார்கள்..
அழிப்பது இலகு.. ஆனால் மீண்டும் ஆக்குவது?

இப்போது வரை தங்கள் ஆறுதல் தகவல்களாலும்,அன்பாலும்,தாங்களும் இருக்கிறோம் என்று அன்பை வெளிக்காட்டுவதாலும் துணை வருகின்ற அத்தனை நண்பர்கள்,நேயர்கள்,சகல ஊடகவியலாளருக்கும் நன்றிகள்.

நாங்கள் மீண்டும் வருவோம்.
வழி மாறாது,வாக்கு மாறாது இதே நேர் நடுநிலை வழியில் தொடர்வோம்.


மேலேயுள்ள புகைப்படங்கள் யாவும் எனது செல்பேசியினால் எடுக்கப்பட்டவை.
இவற்றுள் பல உலகெங்கும் உள்ள இணையத்தளங்கள்,பத்திரிகைகளில் இன்றும் நேற்றும் வெளியாகியுள்ளன.


நம்ம உதவி முகாமையாளரும்,சம்பவ இடத்துக்கு எனக்கு முன்னதாக விரைந்தவருமான ஹிஷாம் தனது அனுபவத்தைப் படங்களுடன் தந்துள்ளார்.
ஹிஷாமின் பதிவு..

எரிந்தது வெற்றி FM இன் செய்திப்பிரிவு




மேலும் சில முக்கிய விஷயங்கள் -
இது ஒரு முக்கிய பலமுள்ள ஒருவருடைய நிறுவனம் என்றார்கள் ஆரம்பத்தில்.பின்னர் அவருக்கும் பங்குகள் உள்ளது என்றார்கள்.


என்னைக் கைது செய்தபோது முதலில் மூக்குடைந்தது அவர்களுக்கு.
நேற்றுடன் மீண்டும் உண்மைகள் வெளியாகியுள்ளன.
புரிந்துகொள்ளுங்கள்.


இந்த நிலை இனியும் எந்தவொரு ஊடகத்துக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது.
வெற்றிக்கு நடந்ததே இறுதியாகட்டும்.

July 30, 2010

வெற்றி FM மீது தாக்குதல்


நான் அறிவிப்பாளர்/முகாமையாளராக கடமையாற்றும் வெற்றி FM வானொலி அடங்கியுள்ள கொழும்பில் அமைந்துள்ள Voice of Asia Networks நிறுவனத்தின் மீது இன்று இனம் தெரியாத ஆயுதம் தாங்கிய காடையர் கும்பல் மேற்கொண்ட தாக்குதலில் எம் வெற்றி FM செய்திப் பிரிவு முற்றாகத் தீக்கிரையாகியுள்ளது.

இன்று அதிகாலை 1.20 அளவில் அலுவலகத்துக்குள் நுழைந்த 15 பேர் அடங்கிய முகம் மறைத்த ஆயுததாரிகள் செய்திப் பிரிவைக் குறிவைத்து,செய்திப் பிரிவு எங்கே உள்ளது என்று கேட்டு கடமையிலிருந்த வெற்றி செய்திப் பிரிவின் இரு செய்தி ஆசிரிய்ரகளைத் தாக்கிய பின் செய்தி அறைக்கு பெட்ரோல் குண்டுகளை எறிந்து, மேலும் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார்கள்.

அந்த வேளையில் ரஜினிகாந்த்,லெனின் ஆகிய இருவரையும் துப்பாக்கி முனையில் முழந்தாளிட்டு நிறுத்தியுள்ளார்கள்.
அதற்கு முதல் பாதுகாப்பு உத்தியோகத்தரைத் தாக்கிப் பலத்த காயத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

வரவேற்பறை,தொலைகாட்சி நிலையத்துக்கான வழி ஆகிய இடங்களிலுள்ள கண்ணாடிகளை நொறுக்கிய பின்னர்,வானொலி கலையகங்கள் இருக்கும் பக்கமாக நுழைய முயன்றபோதும் வாயில்களை சேதப்படுத்திய பின் வெளியேறிவிட்டனர்.

தீயணைப்புப் படையினர் ஒன்றரை மணி நேரத்துக்குள் வந்தபோதும் தீ முற்றாக எரிந்து செய்திப் பிரிவினுள்ளே அனைத்தையும் சாம்பராக்கிவிட்டது.

செய்திகள்,தொலைக்காட்சி செயலிழந்த போதும் வெற்றி FM, Real Radio (ஆங்கிலம்),சியத FM(சிங்களம்) ஆகியன இயங்குகின்றன.

மேலதிக விபரங்கள்,படங்களை பின்னர் பதிவேற்றுகிறேன்.

உடனடியாக செய்திகளை வெளிப்படுத்தி,மக்களுக்கு அறியத் தந்த சக ஊடகங்களுக்கு நன்றிகள்.

July 29, 2010

நீளம்.. ரொம்பவே நீளம்..

தலைப்பைப் பார்த்திட்டு நீ........ளமான பதிவென்று வந்த வேகத்திலேயே ஓடிடாதேங்கோ.. 
வழக்கத்திலேயே சிறு பதிவென்று நீளமாக நீட்டி முழக்கும் இவன் நீளமோ நீளம் என்றால் எத்தனை கிலோ மீட்டர் என்று நீங்கள் யோசிக்கலாம்.
ஆனால் இன்று நான் சொல்லப்போற இந்த விஷயத்தில் நானெல்லாம் பிச்சை வாங்கிற அளவுக்கு நீளமாக நீட்டுகிற நண்பர்கள் இருக்கிறார்கள்..


அதிகமாக யோசிக்காதீங்க.. 


பொதுவாக மின்னஞ்சல் வைத்திருப்போர் மின்னஞ்சல்கள் அனுப்பும்போது கீழே ஒரு கையொப்பம் (எங்கள் பெயர்+இதர விபரம்) இட்டு அனுப்புவோம் தானே..
Email signature 


உதாரணமாக நான் அனுப்பும் மின்னஞ்சல்களில்.. 


LOSHAN
http://arvloshan.com/



இவ்வாறு இருக்கும்.


(அலுவலக மடல்களுக்கு என் அலுவலக மின்னஞ்சலைப் பயன்படுத்துவதால் இதைக் குறுக்கி வைத்திருக்கிறேன்)


சிலர் அடிக்கடி இந்த மின்னஞ்சல் ஒப்பங்களை மாற்றிக் கொள்வார்கள். 
தங்கள் பீலிங்க்சை இந்த ஒப்பங்களில் காட்டிக் கொள்வார்கள்..


உ+ம் - கங்கோன் 
கொஞ்ச நாள் தன் படத்தைப் போட்டுப் பயமுறுத்திக் கொண்டிருந்தவர், 


இப்போது 


--
K.Gopikrishna

என்று காதலில் உருகுகிறார். 
இவரால் தாங்க முடியாத பாரமென்றால்????


வலைப்பதிவுகள் வைத்திருக்கும் பலர் (என்னைப் போல) தங்கள் வலைப்பதிவுகளை இணைத்து ஒப்பம் இட்டுக் கொள்வர்.
உ+ம் 





அன்புடன்
சுகுமார் சுவாமிநாதன் - வலைமனை

கொஞ்சம் மேலே கொஞ்சம் அட்வான்சாக..
நம்ம பன்மொழிப் புலவர்/பதிவர் அஷோக்பரன்


--
N.K.Ashokbharan
என்.கே.அஷோக்பரன்
එන් කේ අශෝක්භරන්
एन.के.अशोकभरण
एन के अशोकभरन
εν κε ασηοκβηαραν
אן קה אשוקבהרן
إن ك أشكبحران
አን ቀ አሾቅብሃራን
ఎం.కే.అశోక్బరన్
ಎನ್.ಕೆ.ಅಶೋಕ್ಬರನ್
എന്‍.കെ.അശോക് ബാരന്‍

www.nkashokbharan.com
contact@nkashokbharan.com





இப்படிப் பல பேர் பலவிதம்..


நிறையப் படித்தவர்கள் தங்கள் பட்டங்களையும் பதவிகளையும் இதில் சேர்த்துக் கொள்வார்கள்.
அவர்களது முயற்சிகளின் வெற்றியைக் காட்டிக் கொண்டாட வேண்டாமா?


தொழில் புரியும் இடங்கள் மாறினால் அவற்றைக் காட்டவும் இந்த மின்னஞ்சல் ஒப்பங்கள் உதவுகின்றன.


இப்படித்தான் நம்ம நண்பர் பதிவர் ஆதிரை (ஸ்ரீகரன்) தன் புதிய பதவி/அலுவலகத்தை சேர்த்து மின்னஞ்சல் ஒப்பமாக (பாவம் - பின் விளைவைப் பற்றி யோசிக்காமல்)ஒரு கும்மியில் அனுப்பிவைத்தார்.


A.Srikaran

Software Engineer
********** ************* 
(Member of the *** Group)
Tel No : +94 112 *********
Fax No : +94 112 ********
Mobile : +94 *** ********
Website : www.********.com
E-Mail : srikaran.a@*******.com
            : caskaran[at]gmail[dot]com



அதற்கு ரிவிட் அடிக்க பசுப்பையன் மது.. அதாங்க 'நா',மதுயிசம் புகழ் Cowboy மது தன்னைப் பற்றி வரிக்கு வரி விலாவாரியாக அடுத்த மடலிலே கும்ம ஆரம்பித்தார்..


Mathuvathanan Mou
Software Engineer
B.Sc (Hons)
********* INTL (Pvt) Ltd
(Member of **********)
Member of Sri Lankan Tamil Bloggers
Member of Mounasamy's Family
Student of University of Moratuwa
Student of Vidyanada College
Student of Kalaimahal Vidyalayam
Customer of Dialog Telekom
Customer of Airtel Sri Lanka
Customer of HSBC
Customer of ComBank
Tel No : +9411*********
Ext : 234
Mobile : +94*********
Fax : +94112***********
Website : www.********.lk
Blog : www.n-aa.blogspot.com
email : cowboymathu[at]gmail[dot]com
           cowboymathu[at]yahoo[dot]com
           bla

           bla
           bla
           



இதற்கெல்லாம் கொடுமையாக பாட்டி வடை கதை புகழ் (கவிஞர் ) பவன்
இவரது முன்னைய ஒப்பம்..
--
http://nbavan7.blogspot.com/
▌│││▌▌▌▌│ │▌ ││▌▌│▌®
Best regards from - BAVAN



Bavananthan Nithiananthan
Member of Sri Lankan Tamil Bloggers
Student of Colombo Hindu college
Student of Koneswara Hindu college
Member of Young enemies sports club
Member of Bloggers sports club
Member of TAMILCRICKET blogspot
Member of Facebook
Member of Twitter
Member of Gmail
Member of yahoo
Member of MSN
Member of Skype
Member of orkut
Member of COE
Member of Facebook
Member of yaadevi 
Member of Indli 
Member of Tamilmanam 
Customer of Dialog Telekom
Customer of Airtel Sri Lanka
Customer of HNB
Card holder of NSB
Customer  of SLT broad band
Traveler of 155 bus
Tel no - 077********

தரங்கம் புகழ் சுபாங்கன்..

இவரது முன்னைய (அண்மைக்கால) ஒப்பம் -

Subankan Balasubramaniam
<Just because you believe something doesn't make it true>

Subankan Balasubramaniam
Electrical Engineer in 1 year
முக்கால் B.Sc (Hons)
கால் ACMA
******* ******** & Equipment (PVT) Ltd Trainee
(Sole agent of *******)


Member of Sri Lankan Tamil Bloggers
Member of Balasubramaniam's Family

Student of University of Moratuwa
Student of Jaffna Hindu College
Student of Kokuvil Hindu College
Student of Alvai Sinnathambi Vidyalayam

Customer of Dialog Telekom
Customer of Airtel Sri Lanka
Customer of HNB
Customer of ComBank
HNB Card Holder
COM BANK Card holder
National inentity Card Holder
University inentity Card Holder
IESL Student Member
Citizen of Sri Lanka
Tel No : +94112*********
Mobile : +9477********
Blog : www.subankan.blogspot.com
email : subankanb[at]gamil[dot]com
           subankan[at]yahoo[dot]com
           bla
           bla

இப்போதைக்கு இந்த நீளமான ஒப்ப வதை இவ்வளவோடு நிற்கிறது..
நல்ல காலம் லண்டன் புலம்பெயர் வந்தியர் இன்னும் தூக்கத்திலிருந்து எழும்பவில்லை போலிருக்கு..
அவர் எவ்வளவு நீளமாக திட்டம் வச்சிருக்கிராரோ தெரியவில்லை.

(இத்தனை தகுதிகள் உள்ள நண்பர்களைப் பெற்றதில் அளவற்ற பெருமை தான்)

இதிலிருந்து தெரிவது யாதெனில்,மின்னஞ்சல் வாயிலாக உங்களுக்கு எவராவது தொல்லை கொடுப்பவராக இருந்தால் இதே போல நீங்கள் அங்கம் வகிக்கும் அமைப்புக்கள்,உங்கள் குடும மூதாதையர்,பரம்பரை விஷயங்கள்,இன்ன பிற இத்யாதிகள், விரும்பினால் உங்களுக்குப் பிடித்த சாப்பாடுகள்,கிடைக்கும் பட்டங்கள் இதையெல்லாம் சேர்த்துக் கோர்த்து அடிக்கடி அவருக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.

அனுப்புகின்ற மின்னஞ்சலை விட இந்த ஒப்பம் பெரிதாக இருக்கட்டும். வெறுத்துப் போய் ஓடியே போய் விடுவார்கள்..

ஆனால் மறந்தும் உங்கள் காதலியின் (காதலிகளின்) பெயர்கள்,கிரெடிட் கார்ட் இலக்கங்கள்,கடவுச் சொற்களையெல்லாம் போட்டுத் தொலைச்சிராதீங்க.. 

அப்பிடியே உங்க ஒப்பங்களையும் பின்னூட்டமாப் போட்டுட்டுப் போறீங்க..

(இந்த நண்பர்ஸ் எல்லாரும் ரொம்ப நெருக்கம் என்பதால் கோவிக்க மாட்டாங்க.. இன்னும் சிலரின் சுவாரஸ்ய ஒப்பங்கள் இருந்தாலும் அவர்களது தனிப்பட்ட privacyக்காகவும் இதர சிக்கல்களைத் தவிர்க்கவும் இங்கே சேர்க்கவில்லை)

அப்போ வர்ட்டா? ;)


பி.கு - கடைசியாக ஆதிரையிடமிருந்து எனக்கு வந்த சிறு குறிப்பு -
'இனிமேல் என் மின்னஞ்சலில் பெயர் கூட இருக்காது.. இப்ப போதுமா?' 

July 27, 2010

மரங்களே மன்னியுங்கள்..

நேற்று மாலை அலுவலகம் முடிந்து வீடு திரும்பிய வேளை,எங்கள் வீட்டுக்கு முன்னால் உள்ள பெரிய அழகான மூன்று மரங்கள் தறிக்கப்பட்டுக் கொண்டிருந்தன.


மனசு ஒரு கணம் நின்றுபோனது போல.. 
கம்பீரமாக நிமிர்ந்து நின்று காற்றுக்கு இலைகளை ஆட்டி அசைக்கும் அந்த மூன்று நண்பர்களும் எங்கள் உறவினர்கள் மாதிரி எனக்கு.
வாகனத்தை அப்படியே மெதுவாக நிறுத்திப் பார்த்தால் ஒரு பெரிய மரம் தரையோடு சாய்ந்திருந்தது.
அடுத்த இரண்டும் வெட்டப்பட்டு பத்திரமாகக் கீழே வீழ்த்தப்படுவதற்காக கயிறுகள் பிணைக்கப்பட்டிருந்தன.




வெட்டிக் கொண்டிருந்தவர்களிடம் (சிங்களத்தில்) "ஏன் வெட்டுகிறீர்கள்? எமது ஒழுங்கையில் நிற்பவை தானே?"என்று கேட்டேன். 


இந்த வீட்டை(எமது ஆறு வீடுகள் அடங்கிய சிறு தொடர்மாடித் தொகுதியை)கட்டும் நாளிலிருந்து இங்கேயே வளர்ந்து நெடிதுயர்ந்து நின்ற இம்மூன்று மரங்களும் அண்மையில் எழும்பிய புதிய தொடர்மாடிக் குடியிருப்பின் முன்னால் உள்ள மதில் சுவருக்கு ஆபத்தாம்.
எங்கள் அடுக்குமாடிக்கு முன்னால் இருந்தால் கூட என்னால் தடுத்து நிறுத்தமுடியும்.. இதற்கு ஒன்றும் செய்ய முடியாது.
மரத்தை வெட்டாமல் எதுவும் செய்ய முடியாதா? என நான் கேட்டபோது என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள். 




பெருமூச்சோடு கீழே விழுந்து கிடக்கும் மரத்தையும் மேலே பரிதாபமாக கிளைகளை விரித்து சாவை எதிர்கொண்டிருந்த மரங்களையும் பார்த்தேன்.
மனசு பாரமாகிப் போனது


வீட்டுக்குப் போயும் இருப்புக் கொள்ளவில்லை. பல்கனியில் நின்று கவலையோடு மரங்களின் இறுதிக் கணங்களை அவதானித்துக் கொண்டிருந்தேன்.
என்ன ஆச்சரியம் மனைவியும் இது பற்றியே கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்.
என் செல்பேசியில் சில இறுதி நேரப் படங்களையும் எடுத்துக்கொண்டேன்.




எட்டு வருடங்களாகப் பழகிப் போன சூழல்.. இந்த மரங்களால் எமது மாலைகள்,பௌர்ணமி இரவுகள்,மழைப் பொழுதுகள்,பனி சாரலுடன் கூடிய காலைகள் எல்லாம் மேலும் அழகு பெறுவதுண்டு.
காற்றுக் கூட எம் வீட்டு ஜன்னல்களினூடு நுழைய முன்னர் இவற்றின் இலைகளை ஸ்பரிசித்து வருவதால் மேலும் இதமாக இருக்கும்.
ஒவ்வொரு நாளும் மாலையில் நாங்கள் மூவரும் பல்கனியில் நின்று அளவளாவும் நேரத்தில் இந்த மரங்களும் எம்மோடு இணைந்து கொள்வது வழக்கமான ஒன்று.
மகனுக்கு நாங்கள் காட்டுகின்ற காக்கைகள்,கிளிகள்,சில குருவிகள்,அணில்கள் எல்லாம் பூத்துக் காய்த்துக் குலுங்கி நின்ற இந்த மூன்று மரங்களில் தான் தரித்து செல்லும்.


மூன்றில் ஒன்று பட்டர் ப்ருட் மரம், இன்னொன்று தேக்கு, மூன்றாவது அம்பரெல்லா..
யார்க்கும் தனி உரிமையில்லா வீதியில் வளர்ந்து நின்றவை என்பதால் எங்கள் ஒழுங்கையில் உள்ள அனைவருமே இந்த மரங்களில் இருந்து கிடைக்கும் பழங்கள்,காய்களை நுகர்வதுண்டு.


இவ்வாறு நேற்று முன்தினம் முன்வீட்டு அக்கா கொடுத்த இரண்டு பட்டர் ப்ருட் பழங்கள் இன்று எங்களுக்கு ஜூஸ் ஆகி இருக்கின்றன.




பார்த்துக் கொண்டிருக்கும்போதே வரிசையாக இரு மரங்களும் அடுத்தடுத்து நிலத்தில் வீழ்ந்தன.
மனதில் இனம்புரியாத கவலை.
நிலத்தில் வீழ்ந்து கிடந்த அவற்றைப் பார்க்கும்போது என் இயலாமையைப் பார்த்து அவை பரிகசிப்பதாகவும் தோன்றியது.


எந்த மதிலுக்கு இந்த மரங்கள் இருப்பதால் ஆபத்து என்று மரங்களைத் தறிக்க முற்பட்டார்களோ அதே மதிலின் மேலேயே மூன்றாவது மரம் விழுந்தது.


எம் நாட்டில் எவ்வளவோ இடம்பெற்றபோது எவ்வாறு எதையும் செய்ய முடியாமல் பார்த்து,பதறி,கவலையுற்று,பின் பதிவுகள் மட்டும் எழுதி மன சோகங்களைக் கொட்டித் தீர்த்தோமோ இம் மூன்று மரங்களின் வீழ்ச்சிக்கும் அவ்வாறே தான் முடிந்துள்ளது.


வீழ்ந்த மரங்கள் தந்த பாரிய இடைவெளி மேற்கில் மறைந்து கொண்டிருந்த மாலை சூரிய ஒளியை வழமையை விட உக்கிரமாக பல்கனியில் நின்ற எங்கள் முகங்களில் தெறிக்கச் செய்தது.
அரை மணி நேரத்துக்குள் மரங்கள் இருந்த சுவடே இல்லாமல் துண்டு துண்டாக அறுக்கப்பட்டு அகற்றப்பட்டு விட்டன.


நேற்று இரவு முழுவதுமே மனசு ஒரு நிலையாக இல்லை.
இன்று அலுவலகத்தில் இருக்கும் வரை அதைப் பற்றி யோசிக்க நேரமும் இருக்கவில்லை.
மாலையில் வீடு திரும்பி வாகனத்தை நிறுத்தும் நேரம் மூன்று மரங்களும் இல்லாத வெறித்துப் போன வீதி மனதை எதுவோ செய்தது.


எங்களுக்காவது மாலையில் நிழலும்,சில பல வேளைகளில் காய்களும் கனிகளும் தந்தவை. ஆனால் அந்தப் பறவைகளும் அணிலும்??
தங்கள் வழமையான இருப்பிடம் தரிப்பிடம் இல்லாமல் எங்கெங்கு தேடி அலைந்து கொண்டிருக்குமோ???


பதிவை இட்டுக் கொண்டே சுவைக்கும் பட்டர் ப்ருட் ஜூஸ் இனிப்பாக இருந்தாலும் தொண்டைக்குள் இறங்காமல் துக்கமாக தொண்டையை இறுக்கிக் கொள்கிறது.


மன்னியுங்கள் மரங்களே.. என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. 

July 26, 2010

தில்லாலங்கடி

வாழ்க்கையில் சும்மா வாழ்ந்தோம் போனோம் என்றில்லாமல் வாழும் நாட்களை முழு மனத்திருப்தியோடு வாழவேண்டும் என்கின்ற விடயத்தை சொல்வது தான் தில்லாலங்கடி.
அது தான் கிக்கு(kick) என வாழும் ஹீரோ ஜெயம் ரவி.
தெலுங்கில் வெளிவந்த 'கிக்' படத்தின் தமிழாக்கமாம்.
(நான் தெலுங்குப் படங்கள் பார்ப்பதில்லை - நல்ல காலம்)


வழமை போல ரவியின் அண்ணன் ராஜா அப்படியே தெலுங்குப் படத்தைத் தமிழுக்குப் பொருத்தமாக மாற்றி கலகலப்பாக விறுவிறுப்பாகத் தந்திருக்கிறார்.


ஆனால் ராஜாவின் முந்தைய நான்கு படங்கள் போலல்லாமல் (ஜெயம்,M.குமரன் S/O மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம்) தில்லாலங்கடியில் அக்ஷன்+கவர்ச்சி கொஞ்சம் அதிகம்.
எவ்வளவு நாளைக்குத் தான் அப்படியே இருப்பது என்று இவரும் யோசிச்சிட்டாரோ?
இல்லாவிட்டால் அடுத்து தான் இயக்கப்போகும் விஜயின் வேலாயுதத்துக்கான ஒத்திகையோ?
(கலைஞர் டிவியில் வேலாயுதம் தொடக்கவிழா பார்த்தேன். ராஜாவின் புண்ணியத்தால் விஜய்க்கு மிக நீண்டகாலத்தின் பின்னர் உண்மையான வெற்றிப்படம் ஒன்று கிடைக்கப்போகிறது போல)


லொஜிக் பார்க்காமல் ஜாலியாக மூன்று மணி நேரம் எம்மை மறந்து சிரிப்பதற்கு நம்பகமாக செல்லக் கூடியது தில்லாலங்கடி.
இதுவும் மசாலா தான்.. ஆனால் ராஜாவின் பாணியில் அளவாக எல்லாம் சேர்க்கப்பட்டிருப்பதால் மொக்கை மசாலா அல்ல.
சந்தோஷங்கள்,ஜாலி அம்சங்கள்,கொஞ்சம் செண்டிமெண்ட் என்று கலந்து கட்டிக் கவரும் இயக்குனர் K.S.ரவிக்குமாரை எனக்கு ஒவ்வொரு படத்திலும் ராஜா ஞாபகப்படுத்துகிறார்.

வாழ்க்கையில் shockகான கிக்குகளை விரும்புவதற்காக எந்தவொரு ரிஸ்கையும் எடுக்க விரும்பும் துடி துடிப்பான இளைஞன் ரவி எதிர்பாராத திருப்பங்களைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்.
அவரை வெறுத்து வெறுத்தே விரும்ப ஆரம்பிக்கிறார் தமன்னா.
இடையே ஈகோ,புரிந்துணர்வின்மை, ரவியின் கிக்குகள் என்பவற்றால் காதல் ஒரு ஐ லவ் யூவுடனேயே உடைகிறது..
(அது என்ன ஐ லவ் யூவுடன் உடைவது என்று படம் பார்க்காதவர்கள் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்)


அடுத்த பாதியில் ஹீரோ ஒரு திருடனாக மாறிவிடுகிறார்.(ஆரம்பத்திலேயே லொஜிக் எல்லாம் பார்க்ககூடாது என்று சொல்லிட்டேன்)
அவரைத் துரத்தும் போலீஸ்காரராக ஷாம். (கம்பீரமாக,உடன் கும்மென்றிருக்கிறார்-இன்னும் சில வாய்ப்புகள் நிச்சயம்)
இவர்களது திருடன்-போலீஸ் விளையாட்டு எனக்கு Tom Hanks + Leonardo De Caprio நடித்த Catch me if you canஐ ஞாபகப்படுத்தியது. 


படம் முழுக்க சுவாரஸ்யமாகவும், கல கல என்றும் இருப்பதால் தொய்வு என்பது இல்லை.
ஆனால் முடிவு இப்படித் தான் இருக்கப் போகிறது என்று தெரிவதால் க்ளைமாக்ஸ் கொஞ்சம் சுவைக்காமல் போய்விடுகிறது.


திரைப்படத்தில் மிக முக்கியமான பாத்திரங்களாக ஒரு நான்கைந்து பேர் தான்.. ஆனால் நட்சத்திரங்கள் ஒவ்வொரு காட்சியிலும் வருவது வழமையான ரவி+ராஜா படங்களின் கலர்புல் தன்மையைத் தருகிறது.
ரவி,தமன்னா,வடிவேலு,ஷாம்,பிரபு,தமன்னாவின் தங்கை(யாரப்பா அது?காட்டிக் கொண்டே இருக்கிறார்.. அடுத்த படங்களுக்கு இயக்குனர்கள் இப்போதே புக் பண்ணி இருப்பாங்களே),சுகாசினி(நல்ல ரோல் என்று கூப்பிட்டாங்களா?),ராதாரவி ஆகியோர் தான் முக்கிய பாத்திரங்களில்.


ஆனாலும் சந்தானம்,கஞ்சா கருப்பு,காதல் தண்டபாணி,சத்யன்,நளினி,தியாகு,பசங்க புகழ் ஜெயப்ரகாஷ்,மன்சூர் அலி கான்,லிவிங்க்ஸ்டன்,மனோபாலா ஆகியோரும் காட்சிகளை நிரப்புவதால் ஒரு வெயிட் கிடைக்கிறது.


தில்லாலங்கடி பார்த்த பிறகு நம்மக்கும் சில சொற்கள் அடிக்கடி தாராளமாக வாயில் வந்துபோகக் கூடும்.. 
கிக்கு,Now the game starts,ஜில் ஜில் ஜிகா ஜிகா,Memory Loss, I love you.


வசனமும் இயக்குனரே.பல இடங்கள் மனம் விட்டு சிரிக்க வைக்கின்றன.
சில வசனங்கள் நெஞ்சைத் தொடவும் செய்கின்றன.
வாழ்க்கை பற்றி,தேடல்,காதல் பற்றி சொல்லும் இடங்கள்..


ரவி கலக்கி இருக்கிறார்.உறுதியான உடலோடு ஆஜானுபாகுவாக கம்பீரமாகத் தெரிகிறார்.
நகைச்சுவையில் முதல் தடவையாக வெளுத்துவாங்குகிறார்.அலட்டலில்லாமல் நடனத்திலும் ஜொலிக்கிறார்.
தமன்னாவுடனான காட்சிகளில் தமன்னாவின் கவர்ச்சியை விட ரவி ஈர்க்கிறார்.
முகபாவங்களும் அருமை.


அக்ஷன் காட்சிகளில் அதிரடியும் காட்டுகிறார்.
ஸ்டைலிஷாக இருக்கிறார்.தமன்னாவைக் கலைக்கும் காட்சிகளிலும் ஷாமுடன் போட்டிபோடும் இடங்களிலும் ரசிக்கலாம்.
வடிவேலுவை மாட்டிவிடும் இடங்களில் அசத்துகிறார்.
ஒவ்வொரு படத்திலும் காட்டும் வித்தியாசத்தில் ஜெயம் ரவி ஜெயிக்கிறார்.


சில இடங்களில் ஜெயம் ரவி எல்லார் இதயங்களையும் ஜெயிக்கிறார்..


குறிப்பாக - தமன்னாவையும் தங்கையையும் கலாய்க்கும் இடம்.
விஜய் மில்டன் + மயில்சாமி குழுவினருடனான காட்சி 
ஷாமை ஏய்க்கும் சில காட்சிகள்.
மெமரி லாஸ் பாடல்..
தமன்னா சீரியசாகக் காதல் பற்றிப் பேசும் நேரத்திலும் தனது கிக் பற்றியே ஜாலியாகக் கதைக்கும் இடம்.. 
கடைசி சோகக் காட்சிகளில் நடிக்க முயன்றிருக்கிறார்.




முதல் காட்சியில் யோகா செய்வது முதல் ஆரம்பிக்கிறது தமன்னாவின் கவர்ச்சி ராஜாங்கம்.
சுறாவில் காட்டியதெல்லாம் தூசாகப் போகும் அளவுக்கு தில்லாலங்கடி பண்ணுகிறார்.


வாயைத்திறந்து போடாங் எல்லாம் சொல்கிறார்.
ஆனால் நடிக்கவும் நிறையவே வாய்ப்பு..
சமாளிக்கிறார்.
கொஞ்சம் ஆனந்ததாண்டவம் தமன்னாவும்,கொஞ்சம் சந்தோஷ் சுப்பிரமணியம் ஜெனீலியாவும் அடிக்கடி இந்த நிஷாவுக்குள் எட்டிப் பார்க்கிறார்கள்.


வடிவேலுவைக் காதலிப்பதாக ரவியைக் காண்டாக்கும் இடத்திலும்,ரவி தன்னிடம் நெருங்க மாட்டாரா என்று தவிக்கும் இடங்களிலும் அழகு.


வடிவேலு - வெடிவேலு.. வாய் விட்டு சிரிக்க வைக்கிறார் after long time.
ஜாக்சன் என்ற பெயரோடு செய்கின்ற அட்டகாசங்கள் அவருக்கே ஆப்பாவது சிரிப்பு வெடிகள்.
தமன்னாவிடம் காதல்வயப்படும் இடங்களில் நான்கு வயலின் வாசிப்போர் வருமிடம் ரசனையான சிரிப்பு.
அதில் ஒருவர் பாலாஜி.. அட..


பாத்திரங்கள் இவ்வாறு வைத்தால் வடிவேலு பிளந்துகட்டுவார்.


சந்தானம் கொஞ்சம் சிரிக்கவைத்தாலும் வடிவேலுக்கு முன்னால் சோபை இழந்துவிடுகிறார். 
ஆனால் வடிவேலு,ரவி,சந்தானம் இணைகிற சில இடங்கள் வெடி சிரிப்பு தருபவை.
போர்வை+படுக்கை காட்சி கொஞ்சம் A தரமாக இருந்தாலும் சிரிப்போ சிரிப்பு.


பிரபுவுக்கு கலக்கல் பாத்திரம்.சிரிக்கவும் செண்டிமெண்ட் ஆக்கவும் வாய்ப்புக் கிடைக்கிறது.
உனக்கும் எனக்கும் திரைப்படம் மூலம் பிரபுவுக்கு கம்பீரமான மறு சுற்றிக் கொடுத்தவர் ராஜா என்பது முக்கியமானது.
கந்தசாமி போலவே போலீஸ் வேடத்தில் மன்சூர் அலி கான் கொஞ்ச நேரமே வந்தாலும் அவர் திரையில் தோன்றும் நேரமெல்லாம் கலகல.
குறிப்பாக போலீஸ் நிலையத்தில் பிரபுவும்,ரவியும் இவரைப் படுத்தும் பாடு..


ராதாரவி முதலமைச்சர்.
இவரும் அமைச்சரவையுடன் ஜில் ஜில் ஜிகா ஜிகா சாமியாருடன் செய்யும் கலாட்ட செம நக்கல். 


சுவாரஸ்யமான திருப்பங்களோடு வேகமாக பயணிக்கும் படம் கொஞ்சம் நிதானிப்பது இரண்டாம் பாதியில்.இந்தப் பாதி தான் நீளத்தை எங்களுக்கு உணரச் செய்கிறது.
ஜெயம் ரவி+சந்தானத்தின் ஞாபக மறதி குளறுபடியும் ஷாமின் தேடுதல் வேட்டையும்,குழந்தையின் சத்திரசிகிச்சையும் கொஞ்சம் இழுத்துவிடுகிறது.
முடிவும் இன்னும் கொஞ்சம் வேகமாக இருந்திருக்கலாம்.

இது தான் முடிவு என்று அனைவரும் ஊகித்தபிறகு அதை சட்டென்று முடித்திருக்கலாம்.




பாடல்கள் படம்பிடிக்கப்பட்ட விதம் குளுமை+செழுமை.
ஷோபியே எல்லாப் பாடல்களுக்கும் நடனம் அமைத்துள்ளார்.
நவீனம்,நளினம் பாடல்களைத் திரையில் கண்களை அகற்றாமல் ரசிக்க வைக்கின்றன.


டிங் டிங் பாடல் எனக்கு நன்றாகப் பிடித்துவிட்டது. இது விவேகாவின் வரிகளாலும் ஜெயம் ரவியின் ரசிக்கவைக்கும் அசைவுகளாலும் மனத்தைக் கொள்ளையடிக்கிறது.(இந்தப் பாடல் பற்றி தனிப் பதிவே போடும் எண்ணமிருக்கிறது)
பட்டு பட்டு பாடல் திரையில் பார்க்கும்போது ஒரு Club feeling.சிம்பு பாடியிருப்பதும்,முத்துக்குமாரின் குறும்பு வரிகளும் ஸ்பெஷல்.
தோத்துப்போனேன் செம குத்து ரகம். தத்துவங்களைக் கொட்டித் தருகிறது பாடல்.இதுவும் விவேகா.


முத்துக்குமாரின் வரிகளால் வனப்புப் பெற்றுள்ள சொல் பேச்சுக் கேட்காத சுந்தரி நடனத்தாலும் ஐந்தாறு ரவி,ஐந்தாறு தமன்னாவினாலும் அழகாகப் பிரமிக்க வைக்கிறது.மிக நுணுக்கமாக தொழினுட்பத்தால் விளையாடியுள்ளார்கள்.


பாடல்களுக்கு யுவன் ஷங்கர் ராஜா மினக்கேட்டிருப்பதை விட தமன் பின்னணி இசையில் பயங்கர நுணுக்கமாக இருந்திருக்கிறார்.சேஸிங் +சண்டைக் காட்சிகளில் ரஹ்மான் தான் இசையமைத்தாரோ எனும் எண்ணம் வருகிற அளவுக்கு பிரமாதம்.
காதல் காட்சிகளில் காதல் வழிகிறது. 


ஒளிப்பதிவு - ராஜசேகர்.முதல் படமாம்.. அருமை.தேவையற்ற பரீட்சார்த்த முயற்சிகளைத் தவிர்த்து தெளிவாகவும் பிரகாசமாகவும் தந்திருக்கிறார்.
மிலனின் கலையும் கலக்கல்.வீட்டு அமைப்புக்களும் பாடல் காட்சிகளின் செட்களும் பிரமிக்கவும் ரசிக்கவும் வைக்கின்றன.


ஆரம்பத்தில் ஒரு கார்டூன் மூலமாக தரப்படும் டெக்னிக் அற்புதம்.சலிக்காமலும் அதே நேரம் ரசிக்கக்கூடியதாகவும் இருந்தது. 
இன்னும் எத்தனை காட்சிகளைத்தான் தனித்தனியாக நல்லா இருக்கு நல்லா இருக்கு என்றே சொல்வது.. ஒரு தடவை போய்ப் பாருங்களேன்.. ரசிப்பதும் சிரிப்பதும் உறுதி.
ஒரு சில குறைகளைத் தவிர மீண்டும் ராஜாவுக்கு ஒரு வெற்றிப்படம் எங்களுக்கும் ரசிக்க ஜாலியான படமாக வந்திருக்கிறது.


ராஜா - தில்லாலங்கடியுடன் ஐந்து தொடர்ச்சியான வெற்றிகள்.. அசத்தல் தான்..
ஆனாலும் ஐந்தும் ரீ மேக் என்பது தான் கொஞ்சம் உறுத்துகிறது.
அதனாலென்ன எதை செய்தாலும் சரியாக செய்கிறாரே அது தான் முக்கியம்.
(எத்தனை பேர் ரீ மேக் படங்களை எடுத்து எங்களையும் வதைத்து படத்தையும் சொதப்பி இருப்பார்கள்)


தில்லாலங்கடி - ஜெயம் ரவி சொல்வது போலவே .. கிக்கோ கிக்கு.. 

July 24, 2010

முரளி 800 @ காலி | Murali 800




காலியில் நேற்று முன்தினம் எப்படியாவது இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டேன்.


மிக நீண்ட காலம் கிரிக்கெட்டில் நான் நேசித்த ஒரு வீரர் தனது இறுதி நாள் ஆட்டத்தை விளையாடும் வேளையில் அவரை மைதானத்தில் அந்த வெள்ளை உடையில் இறுதியாக ஒரு தடவை பார்க்க ஆசைப்பட்டேன். 


முரளியின் எண்ணூறாவது விக்கெட் வீழ்த்தப்படும் நாளாகவும் நேற்று முன்தினம் அமைந்தது என்பதில் ஆச்சரியம் கலந்த இரட்டிப்பு சந்தோஷமாக இருந்தது.
அலுவலகத்தில் விடுப்புக் கேட்பது ஒன்றும் சிரமமான விடயமில்லை;ஒரு smsஇலேயே எடுத்துவிடலாம்.. ;)
காரணம் வானொலிக்கான நேரடித் தகவல்,செய்தி,கள விபரம் சொல்கிற வேலையும் சேர்ந்தே இருக்கிறதே. 


என் வாகனத்திலேயே செல்லப்போகிறேன் என்றவுடன் மனைவி,மகனும் தொற்றிக் கொண்டார்கள்.


அப்பாவையும் அழைத்து செல்ல விரும்பினேன்.காரணம் அவர் தான் முரளிதரன் என்ற ஒரு விளையாட்டுவீரரை ஒரு கல்லூரி கிரிக்கெட்டராக எனக்கு அறிமுகப்படுத்தி முரளியுடன் பேசவைத்தவர்.


என் அப்பாவும் என் வாரிசும் ..

முரளியை தொடர்ந்து அவரது சாதனைகள் பற்றிய பல குறிப்புக்களை முன்பிருந்தே மூலமாக எனக்கு சேகரித்துத் தந்து கிரிக்கேட்டிலும் முரளியிலும் அதிக ஆர்வத்தை ஏற்படுத்திய அப்பாவை முரளியின் இறுதிப் போட்டிக்கு நான் அழைத்துச் செல்வது அவருக்கு நான் செய்யும் பிரதியுபகாரமாக இருக்கும் என்று ஆசைப்பட்டேன்.
காலியில் அப்பா அடைந்த அந்த மகிழ்ச்சி உண்மையில்மிகத் திருப்தி தந்தது.
   
அலுவலக அறிவிப்பாளர் விமலும் கடமை நிமித்தம் வந்தார்.


காலை 6.30க்கு புறப்பட்ட பயணத்தில் என்னுடைய Speed & Steady செலுத்துகையில் அலுவலக,பாடசாலை போக்குவரத்து நெரிசல்களில் பெரிதாக மாட்டிக் கொள்ளாமல் மூன்று மணித்தியாலத்திலேயே அடைந்தோம்.


பாணந்துறையிலிருந்து காலி வரையான 75 km தூரமுள்ள பல இடங்களிலும் முரளியின் கட் அவுட்டுகள்..
பல சுவாரசியமான வாசகங்களுடன்.


Bowling Bradman Murali
Srilankan Super Man Murali
We salute u Murali
Bowling Maestro
Marvellous Murali


கொழும்பு மாநகரம் வெட்கித் தலை குனியவேண்டும்.


காலி மாநகரசபைக்குட்பட்ட இடமெல்லாம் ஆளுயர மற்றும் ராட்சத கட் அவுட்டுகள்.


காலி மைதானத்துக்குள் நுழைவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு செய்தியில் ஜனாதிபதி இன்றைய நாளில் முரளிதரனைக் கௌரவிக்க மைதானத்துக்கு வர இருப்பதாக சொல்லப்பட்டது.
ஆகா பாதுகாப்புக் கெடுபிடியில் கொல்லப் போறாங்களே.. பேசாமல் கொழும்பிலேயே நின்றிருக்கலாமோ என்று யோசித்தோம்.


ஆனாலும் மைதானத்துக்குள்ளோ ,வெளியிலோ எந்தவொரு கெடுபிடியுமில்லை.


ஆடுகளத்தை சமாந்தரமாகப் பார்க்ககூடிய பெரிய திரை, Electronic score screen தெரியக் கூடிய இருக்கைகளாகப் பார்த்து தெரிவு செய்தோம்.


எவ்வளவு நாளுக்குப் பிறகு நான் மைதானத்துக்கு செல்கிறேன்..
முன்பெல்லாம் ஒரு போட்டி தவறவிடாமல் மைதானத்துக்கு செல்வது வழக்கம்.
அப்பா ஆரம்பத்தில் எனக்குப் பழக்கிவிட்டது,பின்னர் வானொலிப் பணி தொடங்கிய பின்னர் ஓசி ஊடகவியலாளர் அனுமதிப் பத்திரத்தின் அனுசரணையில் சகல வசதிகளுடனும் காலி முதல் கண்டி,தம்புள்ளை,என்று ஒரு மைதானம் தவறவிட்டதில்லை.
எனினும் கடந்த ஒன்றரை வருடங்களாக அலுவலகப் பணி காரணமாக செல்லக் கிடைக்கவில்லை.


லசித் மாலிங்க முதலாவது ஓவரை ஆரம்பிக்கவும் நாங்கள் அமரவும் சரியாக இருந்தது.


ரசிகர்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் திரள ஆரம்பித்திருந்தார்கள்.

மாலிங்க தோனியை யோர்க் செய்தவுடன் சந்தோஷ ஆர்ப்பாட்டம்.
இலங்கையின் வெற்றிக்கும் சமநிலைக்கும் இடையிலிருந்த ஒரு முக்கிய தடைக்கல் நீங்கிய மகிழ்ச்சி இது.


எங்கள் பக்கம் இருந்த சிங்கள நண்பர் ஒருவர் சிங்கள மொழியில் சங்காவுக்கு கத்தி அட்வைஸ்  அனுப்பினார்...
"தோனியை அனுப்பிட்டோம்.. இனி முரளிக்கு மட்டும் சான்ஸ் குடுங்க"


சொன்ன மாதிரியே ஹர்பஜனை முரளி ஆட்டமிழக்க செய்ய உற்சாகம் கரைபுரள ஆரம்பித்தது.
ஆகா மூன்று மணிநேரம் பிரயாணம் செய்து வந்ததுக்கு முப்பது நிமிடத்திலேயே போட்டி முடிஞ்சிடும் போலிருக்கே என்று நினைத்துக் கொண்டேன்.

மதியபோசனத்துக்கு முன் போட்டி முடிவடையும் போல இருந்ததால் மனைவி அப்போதே காலி கோட்டை பார்ப்பது பற்றியும் கடற்கரைக்கு போவது பற்றியும் என்னிடம் கேட்டுவைத்துவிட்டார்.


ஆனால் வழமையாகவே ஆடுகளத்துக்கு பாய் தலையணையுடன் வரும் லக்ஸ்மனுடன், போட்டிக்கு மிதுனும் பின் இஷாந்த்,ஒஜாவும் இலங்கை வீரர்களையும் ரசிகர்களையும் சோதித்தார்கள்.


லக்ஸ்மன் இப்படியான ஆட்டங்களுக்கேன்றே பிறந்தவர். ஆனால் இந்தியாவின் Tailenders வழமையாக இவ்வாறு பொறுமையாக நின்றாடுவதைப் பார்ப்பது மிக அபூர்வம்.
அதுக்காக முரளியின் இறுதி நாளிலா?
இந்தியாவின் இறுதி மூன்று துடுப்பாட்ட வீரர்களும் இணைந்து மொத்தமாக 215 பந்துகளை சந்தித்ததுடன் 33 ஓவர்கள் இலங்கை அணியைப் போட்டு வதைத்திருந்தனர்.


சங்காவுக்கு பெரிய தர்மசங்கடம்.முரளியை மிக இலகுவாகத் துடுப்பாட்ட வீரர்கள் கையாள்கிறார்கள்.
அவருக்கு விக்கெட்டும் வேண்டும்,மற்றவர்கள் எடுக்கவும் கூடாது.ஆனால் கருமேகங்கள் சூழ்ந்தும் இருந்தன. போட்டியையும் வெல்லவேண்டும்.நேரமும் கடந்து செல்கிறது.


ஒரு தலைவருக்கு இதைவிட வேறு நெருக்கடிகள் இருக்க முடியுமா?


விக்கெட்டுக்களை எடுக்கக்கூடியவராகத் தெரிந்த லசித் மாலிங்க கால் உபாதைக்குள்ளானது கொஞ்சம் ஆறுதல்.
முரளி தவிர வேறு யார் ஆட்டமிழப்புக்கு நடுவரிடம் முறையிட்டாலும் ரசிகர்கள் திரண்டிருந்து ஒரே குரலில் நடுவரிடம் சிங்களத்தில் எபா(வேண்டாம்) என்று கூக்குரல் எழுப்பியது ஆச்சரியம்.


முரளிக்கான போட்டியாகவே இது அத்தனை ரசிகர்களுக்கும் மனதில் பட்டுள்ளதே தவிர இலங்கை அணியின் வெற்றி இரண்டாம் பட்சமே.


ஒரு தமிழனுக்காக (இப்படி சொன்னால் நிறையப் பேருக்கு எரிகிறதே.. ஆனால் இது தான் உண்மை) ஸ்ரீ லங்காவை மறந்திருந்தார்கள் அந்த 25000 பேரும்.
அமெரிக்காவிலிருந்து வந்திருந்த முரளி ரசிகர் 

 எம் அருகே அதிகமாக சிங்களவர்கள்.. அவர்களில் ஒருவர் முரளி பந்துவீசும் ஒவ்வொரு பந்துக்கும் ஓவராக உணர்ச்சிவசப்பட்டுக் கொண்டிருந்தார்.
நாம் தமிழிலே பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு கொழும்பிலிருந்து வந்தீர்களா? எனக் கேட்டார்.ஆமாம் என்றேன் .தான் காலியில் இருப்பவரென்றும் முரளிக்கு மரியாதை செலுத்த வந்திருப்பதாகவும் சொன்னார்.


அலுவலக நாளிலேயே மைதானம் முழுக்க நிறைந்திருந்தது.
ஒன்பதாவது வீக்கெட் வீழ்ந்ததும் மைதானம் அனைவருக்கும் இலவசமாகத் திறந்துவிடப்பட்டது.


அதற்கு முன்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முரளியின் இறுதி டெஸ்ட் போட்டியில் அவரை கௌரவிக்க மதியபோசனத்துக்கு முன்னர் வந்திருந்தார்.(நம்மை மாதிரியே யாரோ விரைவிலேயே போட்டி முடிந்துவிடும் என்று தப்புக் கணக்குப் போட்டு ஜனாதிபதிக்கு தகவல் அனுப்பியிருப்பாங்க போலும்)
ஆனால் முரளி விக்கெட்டை எடுக்கிற மாதிரி இல்லை என்றவுடன் மதியபோசன இடைவேளையின் போதே தன கௌரவத்தை வழங்கிவிட்டு நடையைக் கட்டிவிட்டார்.

இறுதிநாளில் வீசப்பட்ட 56 ஓவர்களில் முரளிக்கு வழங்கப்பட்ட ஓவர்கள் மட்டும் 27 .முரளியின் தீவிரமான ரசிகனான நானே எண்ணூறாவது  விக்கெட் எடுக்காவிட்டாலும் பரவாயில்லை இலங்கை வென்றால் போதும் என்ற மனநிலைக்கு வந்திருந்தாலும் கூட சங்கா பொறுமை இழக்காமல் முரளியை மீண்டும் மீண்டும் பந்துவீச அழைத்துக் கொண்டிருந்தார்.


வேறு யாராவது ஒருவருக்கென்றால்கடைசி விக்கெட் டென்ஷன் அதுவும் கடைசிப் போட்டியில் கொஞ்சம்வாது முகம் காட்டும்.ஆனால் முரளி always cool.லக்ஸ்மன் ரன் அவுட்டில் ஆட்டமிழந்தாலும் அதே டென்ஷன் இல்லாத சிரிப்பு.



கடைசி நேரத்தில் முரளி களத்தடுப்பில் ஈடுபட நாம் இருந்த இடத்துக்கு கொஞ்சம் அருகே வர திரண்டிருந்த ஏராளமான ரசிகர்கள் 'முரளி' என்று கோஷம் எழுப்பினர்.அதே நாணத்துடன் கூடிய சிறு புன்னகையும் கை அசைப்பும் மட்டுமே அவரிடமிருந்து.
முரளி எப்போதுமே மாறப்போவதில்லை.
சிங்களத்திலே யாரோ ஒருவர் 'என்ன முரளி கடைசி விக்கெட் தானே.. சீக்கிரம் எடுங்களேன்' என்று கேட்க, தோளைக் குலுக்கி சிரித்து விட்டு மற்றப் பக்கம் திரும்பிக் கொண்டார்.
தன்னையே தான் பார்க்கும் முரளி..

ஓஜாவின் விக்கெட் முரளியின் எண்ணூறாவது விக்கெட்டாக அமைந்தவிதம் ஒரு சுவாரஸ்யம்.
முரளியின் பந்துவீச்சில் மஹேல ஜெயவர்த்தன எடுத்த 77 வது பிடி.
இவ்விருவரது இணைப்புத் தான் அதிக ஆட்டமிழப்புக்களை உலகில் செய்துள்ளது.


மைதானமே ஆர்ப்பரித்து அலறியது.எங்கே பார்த்தாலும் கரகோஷம். முரளி முரளி என்ற சந்தோஷ ஆர்ப்பரிப்புக்கள்..
வெடிச் சத்தங்கள்..
நமது மண்ணின் மைந்தர் சாதித்துக் காட்டிவிட்டார்.
எல்லோரும் ஒரு நாள்,பின்னர் மூன்று மணிநேரம் காத்திருந்த அரிய சாதனை நிகழ்த்தப்பட்டு விட்டது.


அதன் பின்னர் 95 என்ற இலக்கை இலங்கை அடையும் என்பது அனைவரும் எதிர்பார்த்த இலகுவான வழக்கமான விடயம் தானே?


ஆனால் டில்ஷான் விரைவாக அடித்துமுடிக்கவேண்டும் என்று அனைவரும் விரும்பியது முரளிக்கான கௌரவம்+விடைகொடுத்தளுக்கான சரித்திரபூர்வ சாட்சியாக அனைவரும் பங்குபெறவேண்டும் என்பதற்கே.


சிக்சரோடு டில்ஷான் போட்டியை இலங்கைக்கு வெற்றியாக மாற்ற மைதானம் மீண்டும் விழாக்கோலம் பூண்டது.


காலி நகரம் முழுவதும் மைதானத்துக்குள்.


மீண்டும் முரளி முரளி என்ற கோஷங்கள்.


மைதானத்துள் முரளியைத் தங்கள் தோளில் காவியபடி இலங்கைவீரர்கள் மைதானத்தை வலம் வர ரசிகர்கள் தங்கள் சாதனை நாயகனை அருகிலே பார்த்து ஆரவாரிக்க ஆரம்பித்தனர்.


இத்தனை ஆண்டுகள்- இரு தசாப்தங்கள் தன் தோளில் இலங்கை அணியைத் தாங்கிய ஒரு வீரனைத் தூக்க இலங்கை அணி வீரர்களுக்குள் போட்டி..தலைவர் சங்கா முக்கியமாக முரளியைக் காவி வந்தார்.


ஒரு வீரன் விடைபெறும் மகத்தான கட்டம் இது.
உச்சத்தில் இருக்கும்போதே யாரும் போ என்று சொல்லமுன்னர் போகாதே என அனைவரும் இறைஞ்சும் நேரம் அணியின் வெற்றியுடன் விடைபெறுவதானது எத்துணை சாதனை மிக்க செயல்?


இந்த மகத்துவம்,முரளியின் மேலும் பல முக்கியத்துவங்கள் பற்றி முழுமையான விரிவான பதிவோன்றைக் கொஞ்சம் நேரம் எடுத்துத் தருகிறேன்.


 இத்தனை பரபரப்பான நிலையில் முரளியுடன் நேரடியாகப் பேசவேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும் அது அன்று சாத்தியபடாது என்று தெரிந்தது.அவரது செல்பேசியில் வாழ்த்துத் தகவல் ஒன்றை smsஆக அனுப்பிவைத்தேன். எனினும் முரளியின் முதலாவது டெஸ்ட் போட்டியையும் இறுதிப் போட்டியையும் மைதானத்தில் நேரடியாகப் பார்த்த பரவசம் எனக்குள்.


பல விருதுகள்,பல பாராட்டுக்கள்,பல பரிசுகள்..
தொலைக்காட்சியில் முரளியின் தாயையும் தந்தையையும் பார்த்த போது எத்தனை பரவசமும் பெருமையும் அவர்கள் முகங்களிலே.மனைவி மகிழ்ச்சி முகத்திலே பிரவாகிக்கிறது. இனிப் பக்கத்திலேயே இருப்பார் என்றோ?


மாறி மாறி நினைவுச் சின்னங்களைப் பெற்றுக் கொண்டபோதும் டோனி கிரெய்க் கேள்விகள் தொடுத்தபோதும் மாறாத அதே எளிமையான வெட்கம் கலந்த சிரிப்பு.


காலியிலிருந்து மகிழ்ச்சி,பெருமை கொஞ்சம் பிரிவுத் துயர் கலந்த உணர்வுகளோடு மீண்டும் வாகனத்தை எடுக்கும் வேளையில் முரளி சொன்ன சில வார்த்தைகள் மனதிலே அவரை இன்னும் உயரத்துக்கு ஏற்றியது..


"I told my captain [Kumar Sangakkara] to somehow get the wickets. We knew the situation in Galle and had the match ended in a draw it would have been very sad. I badly wanted to win in my final Test. We all play for a win. At that moment we would have taken even a run out.


"I chose to finish my career at the end of the first Test because I know my knees are not going to last to bowl 50-60 overs. If I am there it will be four spinners and only two can play. I will be blocking the place of another young spinner."


Murali is a true Sportsman and Real Gentleman.


முரளி போல ஒருவரை நாம் நினைத்தாலும் கிரிக்கெட்டில் பார்க்கமுடியாது..
  
பி.கு 1 - இந்தப் பதிவில் ஒரு சில படங்கள் தவிர அனைத்துமே என்னால் எடுக்கப்பட்டவை.ஏனையவை வழமை போல cricinfo வில் சுடப்பட்டவை.


பி.கு 2 -முரளிதரன் பற்றிப் பல பதிவுகள் தொடர்ச்சியாக வந்துள்ள நிலையில் நான் கொஞ்சம் இடைவெளி விட்டு ஒரு பகிர்வைத் தரப்போகிறேன்,..
அதில் பல விஷயங்கள் வரும்.. :)



ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner