April 25, 2012

கள்ளக்கணக்கு காட்டும் Facebookஉம் அதை இனி வாங்கப் போகும் நானும்


உண்மையில் Facebook மதிப்பு என்ன?
இது எங்களுக்கு எப்படித் தெரியும் என்று யாருப்பா கேட்கிறது??

Wall Street ஆய்வாளர்கள் மற்றும் தொழிநுட்ப வலைப்பதிவாளர்கள், போன்றோர் இணைந்து Instagramஐ பேஸ்புக் இணையத்தளம் உரித்தாக்குவது குறித்து உன்னிப்பாக அவதானித்து வருகிறார்கள்.

சமீப காலங்களில் இது தொடர்பில் எழுப்பப்பட்ட மிகப்பெரிய
கேள்வி,பேஸ்புக்கின் உண்மையான மதிப்பு என்ன என்பது தான்.
(ஏதோ நானே வாங்கப் போறதுமாதிரி இது பற்றி என்னடா ஆராய்ச்சி என்று
யோசிக்காதீங்க.. பங்குச் சந்தை மற்றும் இது போன்ற (Facebook, Instagram)
நான் அன்றாடம் பயன்படுத்துகிற விஷயங்கள் பற்றி இருக்கிற ஆர்வம் தான்..)

இது தொடர்பில், New yorkன் The New York Times சஞ்சிகையின் படி,
பேஸ்புக்கின் மதிப்பு 104 பில்லியன் டொலர்களாம். Instagramன் கொள்முதல்
ஆலோசனை பற்றி Facebook ஆர்வம் காட்டியபோது உத்தியோகபூர்வமாக அறிவித்தது எழுபத்தைந்து பில்லியன் டொலர்கள் மட்டுமே. இருந்தும் பேஸ்புக்கின் உண்மையான மொத்த சொத்துப் பெறுமதி அதனைவிட இருபத்தைந்து பில்லியன் டொலர்கள்ஆவது அதிகமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.


பேஸ்புக் இந்த மாத ஆரம்பத்தில் Instagramஐக் கொள்வனவு செய்தபோது வெறும் ஒரு பில்லியன் டொலர்களுக்கு வாங்கவே தன் பெறுமதியைக்
குறைத்துக்காட்டியதாகக் கருதப்படுகிறது.
(Instagram என்றால் என்ன என்று Smartphones பயன்படுத்தும் அனேகருக்குத்
தெரிந்திருக்கும்.. முன்பு iPhoneக்கு என்று மட்டும் இருந்தது இப்போது
Android OS போன்களிலும் இயங்குகிறது.)

இந்த ஒரு பில்லியனில்,  கிட்டத்தட்ட முப்பது வீதம் பணமாகவும், எழுபது
வீதம் பங்குகளாகவும் கொடுத்துத் தீர்க்கப்படவுள்ளதாகத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தான் தம் பெறுமதியைத் தாமே குறைத்துக் காண்பித்துள்ளார்கள் Mark Zuckerbergகின் ஆட்கள்.

நூற்றுநான்கு பில்லியன் டொலர்கள் என்பது, கிட்டத்தட்ட, இரண்டாம் தரப்
பங்குச்சந்தையில் தனியார் நிறுவனங்கள் தம் பங்குகளை விற்கும் பெறுமதி என பிரபல நிதியியல் ஆய்வாளரான எவெலின் ருஸ்லி சொல்கிறார். காரணம் தனியார் நிறுவனங்கள் தமது பங்குகளை அதிக பட்சமாக நாற்பது டொலருக்கு விற்பனை செய்வது வழமை.
முன்னதாக Facebookகின் பங்குகளும் விற்கப்பட்டது இதே 40 $ க்கு தானாம்..

Instagram தொடர்பில் பேஸ்புக் நிர்ணயித்திருக்கும் இந்த 104 பில்லியன் டொலர்களுக்கும் Instagram நிர்ணயித்துள்ள எழுபத்தைந்து பில்லியன் டொலர் என்ற கொள்முதல் தொகைக்குமிடையிலுள்ள வித்தியாசமானது,
பேஸ் புக்கின் பங்குகள் நுகர்வோர் பொது வழங்குகைக்காக (IPO ) காத்திருக்கும் நேரத்தில் மிக முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.

எது எப்படி இருப்பினும் பேஸ்புக்கின் இராட்சத வலையமைப்பான 31 வங்கிகளும் இப்போதே கூட்டிக் கழித்து கணக்குப் போட்டு பேஸ்புக்கின் (பங்குகளின்) உண்மையான பெறுமதியைத் தீர்மானித்திருக்கும் என்பது தெளிவு.
(இது நம் போன்ற பேஸ்புக் வாடிக்கையாளரைப் பாதிக்காத வரை ஓகே தான்)
பில்லியனில் 75ஓ அல்லது 104ஓ Mark Zuckerberg அடையப்போவது மகிழ்ச்சி மட்டுமே..
ஆரம்பித்து எட்டு வருடங்களில் இப்படியொரு வளர்ச்சி என்றால் பெரிய விஷயம் தானே..

எனக்கு இப்போ இதில் தனியாக பிரத்தியேக அக்கறை வருவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு..

Facebookஐ விட, எனக்கு Instagramஇல் தனியான ஈடுபாடு உண்டு..

அந்தப் படங்களை வைத்தே ஒரு இடுகையை இட்டு, இன்னும் சில இடுகைகளுக்கான படங்களும் உள்ளன..

படம் காட்டப் போறேன்...



Instagram பார்த்து ரசிக்கும் விடயங்களைப் பகிர்வதற்கும், மற்ற உலகளாவிய நண்பர்கள் பகிரும் படங்களை ரசிப்பதற்குமான ஒரு பயனுள்ள தளம்.

Facebook அதனை வாங்குவதனால் ஏதும் விரும்பத்தகாத மாற்றங்கள் வந்துவிடுமோ என்பது ஒன்று..

அடுத்தது எங்கள் புகைப்படங்களை தனியே iPhone, Androidகளில் மட்டுமில்லாமல் உலகளாவிய ரீதியில் இணையத்தளங்களில் காட்சிப்படுத்தவும், விற்கவும் வாய்ப்பை வழங்கும் ஒரு தளம் உருவாகியுள்ளது.
Instacanv.as
இது எங்கள் படங்களை ரசித்தோர் வழங்கிய வாக்குகள்/விண்ணப்பங்கள் மூலமாகவே வரிசையாக வழங்கப்பட்டன..
உங்களில் யாரோ நல்லவர்கள், வல்லவர்கள் வழங்கிய வாக்குகளால் நேற்று எனக்கான ஒரு Instacanvas Galleryயும் திறக்கப்பட்டுவிட்டது.


இப்போ ரசிகப் பெருமான்கள் நீங்கள் யாராவது என் படங்களில் பிடித்ததை விலைகொடுத்து வாங்கினால் எனக்கும் ஒரு கணிசமான தொகை சேருமாம்.. $$$$
அப்படியே அதை சேமித்து சேமித்து நானும் ஒருகாலத்தில் Instagramஐயோ ஏன் Facebookஐயோ வாங்குவேணாம் ;)

--------------------------------

இவ்வகையான பதிவுகள் எனக்குத் தனியான ஒரு திருப்தி + உங்களுக்கு மகிழ்ச்சி :)
இவையும் தொடரும்..
விரைவில் படங்களைத் 'தனி'ப் பதிவாக வலையேற்றுகிறேன்.

April 22, 2012

இதுவரை IPL 2012 - ஒலி இடுகை


இவ்வருடத்துக்கான IPL போட்டிகள் ஆரம்பிக்கும் முன்னர் முன்னோட்டப் பதிவுகள் இட்டதன் பின்னர்,

ஆரம்பமாகிறது IPL 2012


IPL பற்றி ட்விட்டரில் அலட்டி, அரட்டிக் கொள்வதுடன் ஒவ்வொரு நாளும் கழிகிறது.

ஒவ்வொரு அணிக்கும் தலா 16 போட்டிகள், மே மாதம் 27ஆம் திகதிவரை நீடிக்கப் போகின்றன எனும்போது ஒருவித அயர்ச்சி ஏற்படுவதனால் இதைப் பற்றி இடுகைகளை இடும் எண்ணம் ஏற்படுவதே இல்லை..

சிலாகித்து, பாராட்டி எழுதுவதானால் தனித்தனியாக எத்தனை வீரர்கள் பற்றிச் சொல்லவேண்டி இருக்கும்...



இம்முறை இதுவரை அதிகம் ரசித்த சில விஷயங்கள்....

ரஹானே, பீட்டர்சனின் சதங்கள்...

க்றிஸ் கெய்லின் அசுரத்தனம்


ஸ்டெய்ன், மோர்னி மோர்கேலின் அற்புத வேகப்பந்துவீச்சு
நதீம், நரேன் போன்ற இளைய சுழல் பந்துவீச்சுக்கள் 


பாப் டூ ப்லேசிஸ், ஒவேயிஸ் ஷா, டீ வில்லியர்ஸ், ரோஹித் ஷர்மா ஆகியோரின் தொடர்ச்சியான சிறப்பான துடுப்பாட்டங்கள்..


இன்னும் முரளி, மாலிங்க, குலசேகர ஆகியோர் தவிர (மூவருமே பந்துவீச்சாளர்கள்) இலங்கையர் யாரும் இன்னும் ஜொலிக்காதது வருத்தமே...

ஆனால் வழமையான என் பாணியில் நீட்டி- முழக்கி இடுகையாகப் போட நேரம் தானே சிக்கல்..

அதற்குத் தோதாக வந்தது வெள்ளி இரவுகளில் நான் வெற்றி FMஇல் தொகுத்துவழங்கும் V for வெற்றி V for விளையாட்டு எனும் விளையாட்டு அலசல் நிகழ்ச்சி...

வெள்ளி இரவுகளில் இலங்கை நேரப்படி 11 மணி முதல் ஒரு மணிநேரம்.

(உங்களில் சிலருக்காவது இந்நிகழ்ச்சி பற்றித் தெரிந்திருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது)

இந்த வெள்ளி அதில் இடம்பெற்ற இதுவரை IPL 2012 என்ற அம்சத்தை அப்படியே இங்கே இடுகையாகத் தருகிறேன்...

கேட்டு குறை,நிறைகள் & விமர்சனங்களைப் பின்னூட்டுங்கள்..

இடுகையாக டைப்புவதை விட, தயார்ப்படுத்தி பேசி, ஒலிப்பதிவு செய்து இடுகையாகப் பகிர்வது இலகுவாக இருக்கிறதே..

ஐடியா லோஷன்ஜி ;)

இதுவரை IPL 2012 பகுதி 1





இதுவரை IPL 2012  பகுதி 2

 



April 19, 2012

கடுப்பைக் கிளப்பும் விடுப்பு


விடுமுறைகள் மலிந்த ஒரு நாட்டில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பது பெருமையான விஷயமா தெரியவில்லை; ஆனால் நிச்சயமாக தனிப்பட்ட முறையில் எனக்கு அவ்வளவு மகிழ்ச்சி இல்லை. உடனே தொழில்துறை, ஆக்கபூர்வம், நாட்டின் மொத்த உற்பத்தி எப்படி இப்படி பெரிதாக சிந்தித்து என்னை ரொம்பப் பெரிசா எல்லாம் மாற்றிவிடாதீர்கள்.

இவ்வளவு விடுமுறை இருந்தும் நீண்ட விடுமுறைகளையோ, மற்றவர்கள் விடுமுறை அனுபவிக்கும் பண்டிகைக்கால விடுமுறைகளையோ அனுபவிக்க முடியாதவன் என்பதால் தான் இந்தக் கடுப்பு.
அவனவன் ஆசையாகக் கேட்டு, அனுதாபம் தேடி விடுமுறை கேட்கிற நேரம் அள்ளி அள்ளிக் கொடுக்கும் எனக்கு அனேக நேரங்களில் விடுமுறை இல்லை.

விடுமுறை இல்லாமலே வேலை செய்து (விடியல் செய்து) பழகியதோ என்னவோ, விடுமுறை எடுப்பதிலும் ஆர்வம் இல்லாமல் போய்விட்டது.. அத்துடன் விடுமுறை கொடுப்பதும் நானே என்பதனாலும் இருக்கலாம்..
ஆனால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணம் சொல்லி விடுமுறை எடுப்பதில் ஒரு சுவாரஸ்யம் தான். அத்துடன் பணிபுரியும் இடம் ஊடகத்துறை என்பதால் அனாவசிய விடுமுறைகளை எம்மவர்கள் எடுப்பதும் கிடையாது; பொறுப்பானவர்கள். :))


இந்திய கார்ட்டூனிஸ்ட் நண்பர் சதீஷ் ஆச்சார்யாவின் கைவண்ணம்..


ஆனால் வேறு வேறு இடங்களில் எடுக்கப்படும் விடுமுறைகளைப் பற்றி ஒருமுறை விடியல் செய்தபோது நிறைய சுவாரஸ்யமான விடயங்கள் வெளிவந்தன..
அதுபற்றி இந்த இடுகைக்குப் பின்னர் இதுபற்றி ஒரு விடியல் செய்து எல்லாவற்றையும் தொகுத்துப் பதிகிறேன்..

அண்மையில் வாசித்த இணையத்தளக் கட்டுரை ஒன்றில் சில சுவாரஸ்யமான தகவல்களைக் கண்டேன்.. அவற்றை உங்களோடு பகிர்ந்துகொள்ளலாம் என்று..

தொழிலாளர்கள் பொதுவாக எடுக்கும் சுகயீன விடுமுறைகளில் என்ன செய்கிறார்கள்? என அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் வெளிவந்துள்ளன.
அவர்களில் பெரும்பான்மையானவர்களுக்கு உண்மையிலேயே உடல்நலம் சரியில்லை என்று இந்த ஆய்வு சொல்லியிருப்பது ஆச்சரியமானது.

அண்மையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், பல்வேறுபட்ட வேலைகளில் மற்றும் பல மட்டங்களிலான சம்பளங்களிலுள்ள ஆண்கள் மற்றும் பெண்களின் புள்ளிவிபரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

புதிய வேலை வாய்ப்புத்தளமான theFIT இந்த ஆய்வை, 5000 பேரை மையமாகக்கொண்டு நடாத்தியுள்ளது.
இந்த ஆய்வின்படி 84 சதவீதமானோர் அவர்கள் கடைசியாக எடுத்த சுகயீன விடுமுறையானது, உடல் நிலை சரியில்லாத தமது குழந்தைகளைக் கவனிக்கவே எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

அதிசயிக்கத்தக்கதாக ஐந்து ஆண்களில் ஒருவரும் ஏழு பெண்களில் ஒருவரும் மட்டுமே சுகயீனம் என பொய்யான காரணத்தைக்கொண்டு விடுப்பு எடுத்துள்ளனர். உண்மையான காரணத்தை சொல்ல முடியாத சந்தர்ப்பங்களில், ஒருநாளேனும் ஓய்வாக இருப்பதற்கு, வேறுவேலைகளுக்கான நேர்முகத்தேர்வுகள் போன்ற காரணங்களுக்காகவே சுகயீனம் என்று அவர்கள் சொல்லியுள்ளதாகவும் இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. (இந்த ஆய்வு அமெரிக்கா மற்றும் மேலைத்தேயத்தில் எடுத்திருக்கிறாங்க என்று மனசுக்குள் சொல்லுவீங்களே)  

பெண்களைப் பொறுத்தவரை இப்படிப் பொய்யான விடுப்புகள் எடுப்பது குறைவாகவே உள்ளது. அதிலும் அவர்களுக்குரிய விடுமுறை நாட்களில் கூட வேலை செய்வதில் பெண்கள் விருப்பம் காட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (அட இதை நம்ப முடியலையே... இலங்கையில் இந்தக் கருத்துக்கணிப்பை யாராவது எடுப்பீங்களா?)

41 வீதமான ஆண்களுடன் ஒப்பிடும் போது 54 சதவீதமான பெண்கள், ஒன்பது மணிநேரம் வரை வேலையில் ஈடுபடுவதாகவும்  இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. மேலும் 91 சதவீதமானவர்கள், வாரநாட்கள் ஐந்திலும் தங்களது வேலையை வேலைநேரத்தில் செய்வதுடன்,  ஆண்களில் கிட்டத்தட்ட பாதியளவான 47 சதவீதம் பேர், எட்டு மணித்தியாலங்கள் வரை வேலை செய்வதாகவும், 41 சதவீதம் பேர், எட்டு மணித்தியாலங்களுக்கு அதிகமான நேரம் வேலையில் ஈடுபடுவதாகவும் மேற்படி ஆய்வு குறிப்பிட்டுள்ளது. (ஆகா என்னைப் போலவும் கணிசமானோர் இருக்கிறார்கள் என்று ஒரு ஆறுதல் )



மொத்த வேலைபுரிபவர்களில் 65 வீதமானோரும்,அதில் பெண்களில் 67 வீதம் மற்றும் ஆண்களில் 60 வீதமானோரும் தங்களது விடுமுறை நாட்களில் கூட வேலை புரிவதாகவும் ஆய்வு கூறியுள்ளது. மேலும் பெண்கள், தாம் செலவிடும் நேரம் பயனுள்ளதாக அமையவேண்டுமெனவும் விரும்புவதாக குறிப்பிட்டுள்ளனர்.

இறுதியாக விசித்திரமான கருத்தொன்றையும் வெளியிட்டுள்ளது இந்த ஆய்வறிக்கை.
இது உண்மையில் என்னை ஆச்சரியப்படுத்தியது.
 26 வீதமான ஆண்கள் தமது சம்பள விவரங்களை நண்பர்களிடம் சொல்ல தயங்குகிறார்களாம். பெண்களில் கூட 17 வீதமானோருக்கு இதே மனநிலை காணப்படுகிறதாம்!

யோசித்துப் பார்த்தேன்.. சரியாகத் தான் இருக்கும்.. இந்தக் காலப் பொருளாதார நிலையில் நண்பர்களிடம் கூட இதைச் சொல்லாமல் இருப்பது தான் சரியாக இருக்கும்..
எங்களைப் பிச்சைக்காரன் என்று கேவலப்படுத்தாமல் இருக்கவும், பெரும் பணக்காரன் என்று நினைத்துக் கடன் கேட்டுத் தொல்லை தராமல் இருக்கவும்..

நண்பர்ஸ்.... இப்ப இதை வாசித்த பிறகு என்ன முடிவு எடுத்திருக்கிறீர்கள்?
விடுமுறை எப்படி எடுப்பது என்று ஐடியா போடவா? அல்லது உண்மை மட்டுமே சொல்லி இனிமேல் விடுப்புக் கேட்கப் போகிறீர்கள் என்றா?
எப்படி முடிவெடுத்தாலும் அது எனக்கு மட்டும் எப்போதும் கடுப்பைத் தரும் என்பது நிச்சயம்.

குறிப்பு - ஊர்ப்பேச்சு வழக்கில் விடுமுறையை விடுப்பு என்று சொல்வதும் வழக்கம்.

இதே மாதிரியான முன்னைய இடுகைக்குக் கிடைத்த வரவேற்பும், திருப்தியும் இந்த இடுகையை இட எனக்கு உற்சாகம் தந்தது..
படித்த, பிடித்த விஷயங்களைத் தானே பிடித்த மாதிரியாகப் பகிர ஆசைவரும்.
இந்த இணைப்பு உங்கள் வாசிப்புக்காகவும் தொடர்ந்து வரும்..


April 15, 2012

ஒரு கல் ஒரு கண்ணாடி - OKOK


இரண்டரை மணித்தியாலம் இடைவிடாமல் சிரித்து (எதையும் பற்றி யோசிக்காமல்) படம் ஒன்றை ரசித்து எவ்வளவு காலம் ஆச்சு.. அந்தக் குறையைத் தீர்த்து வைத்தது இந்த OKOK .


இயக்குனர் ராஜேஷ் + சந்தானம்.. இவர்களின் இணைப்பில் ஹட் ட்ரிக் இது. சிவா மனசுல சக்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருக்கவில்லை.. ஆனால் கதையும் நகைச்சுவையும் சேர்ந்து கலக்கியது. அந்த வெற்றியையும் பெற்ற நல்ல பெயரையும் தக்கவைத்துக்கொள்ள கொஞ்சமே கொஞ்சம் கதையைத் தொட்டு ஆர்யா + நயன்தாராவின் நட்சத்திர அந்தஸ்தோடு சந்தானத்தின் நகைச்சுவை சேர்த்துக் கலக்கி மீண்டும் வென்றார் ராஜேஷ்.

இம்முறை கதாநாயகன் புதுசு.. அவரே தயாரிப்பாளர்; நடிப்பார் என்று எதிர்பார்க்கவும் முடியாது. முதல் இரு படங்களிலும் ஹிட் பாடல்களில் கை கொடுத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவும் இல்லை.

இதையெல்லாம் யோசித்த கெட்டிக்காரர் ராஜேஷ் OKOKயில் முழுக்க முழுக்க சந்தானத்தை ஆட, ஆள,அதிகாரம் செலுத்த விட்டிருக்கிறார்.
கதை என்று எதையும் எதிர்பார்க்காமல், லொஜிக், யதார்த்தம், இப்படியெல்லாம் நடக்குமா என்றெல்லாம் கேள்வி கேட்காமல் பார்த்தோமானால் கொடுத்த காசுக்கு குதூகலமாக சிரித்துவிட்டு வரலாம்.

உதயநிதி கதாநாயகனாக முன்னிறுத்தப்பட்டாலும் சந்தானம் திரையில் வரும்போது தான் படத்துக்கே ஒரு கிக்கு.. சந்தானமே சரணம் என்று விழுந்த இயக்குனர் & தயாரிப்பாளர் கம் கதாநாயகனுக்குக் கை கொடுத்து கை தூக்கி விடுகிறார் சந்தானம்.

ஊர் சுற்றி அலையும் நாயகனுக்கு ஹன்சிகாவை வீதியில் சந்தித்த உடனேயே காதல் பற்றிக்கொள்ள, எதற்கும் துணிந்த எப்போதும் பலிக்கடா ஆக்கப்படுகிற நண்பன் இருக்கையில் என்ன கவலை?
ஆனால் படம் எப்படிப் போகப் போகிறது என்று கதைப் போக்கு தெரிந்தபிறகும் தொய்வில்லாமல், சலிப்பில்லாமல் கொண்டு செல்ல இயக்குனருக்கு நிறைய மசாலாவும் இன்னும் நிறைய தில்லும் வேண்டும்..
ராஜேஷ் அதிலும் ஜெயித்திருக்கிறார்.

உதயநிதி ஒரு மாதிரியாக ஒப்பேற்றிவிட்டார். பவர் ஸ்டாரும் ரித்தீஷும் நம்ம விமர்சக, பதிவுலக சகாக்களிடம் பட்ட பாட்டை இவரும் படுவாரோ என்று பார்த்தால், பாடல் காட்சிகளைத் தவிரவும் ஒரு சில சீரியஸ் காட்சிகள் தவிரவும் உதயநிதி நன்றாகவே செய்திருக்கிறார். கண்கள் தடுமாறுவதைத் தவிர்க்க முக்கால்வாசிக் காட்சிகளில் கூலிங் க்ளாஸ் உதவுகிறது.
நகைச்சுவைக் காட்சிகளில் உதயநிதியை சந்தானம் overtake / dominate செய்து பாஸ் பண்ண வைக்கிறார். தொடர்ந்தும் தானே தயாரித்து நடிக்கப் போகிறாரா என்று தான் தெரியவில்லை.

ஹன்சிகா - சின்னத்தம்பி குஷ்பு என்று ஐஸ் வைக்கிறார்கள்; கிடைக்கிற நேரத்தில் எல்லாம் குண்டு, பூசணிக்கா, ஆடை சரியில்லை என்று வசனங்களில் வாரி விடுகிறார்கள். வேலாயுதத்தில் பார்த்ததை விடக் கொஞ்சம் ஊதிப் பெருத்திருக்கிறார் போல. தமிழ் ரசிகர்களுக்கு இப்படி ஊதிப்பெருத்த உப்பு மூட்டைகளைத் தான் பிடிக்கும் என்று ஏதாவது இலக்கணம் ஏதாவது இருக்கா ஏன்னா?

வழமை போலவே ஹன்சிகாவிடம் நடிப்பைத் தேடவேண்டியே இருக்கிறது. கவர்ச்சியும் அவரிடம் ஹூம்.. அதை ஆபாசம் என்றே சொல்லவேண்டி இருக்கிறது.
அதனாலோ என்னவோ சில காட்சிகளில் பார்க்கப் பாவமாக இருக்கிறது.

சந்தானம் - இவர் தானே படத்தின் 'ரியல்' ஹீரோ.. இவரது டைமிங் கொமெடிகளும் சரமாரியான பஞ்சுகளும் திரையரங்கில் பயங்கரமாக ரசிக்கப்படுகின்றன.
நண்பனுக்கு உதவப்போய் ஒவ்வொருமுறையும் அகப்பட்டு ஆப்படிக்கப்படும்போதும் அப்பாவியாக நிற்கும் சந்தானத்தின் முகம் கலக்கல்..

அதிலும் ஹீரோ, ஹீரோயின் அணிந்துள்ள ஆடைகளை விட, சந்தானம் அணிந்து வரும் கண்ணைக்குத்தும் கலர் கலர் ஆடைகளும் அதைவிட கலர் கலர் பெல்ட்டும் அலாதி. சந்தானமே தெரிவு செய்ததா என்று அறிந்துகொள்ள ஆசை. Santhanam, I liked your belts, :)
காதல் பற்றியும் காதலர் பற்றியும் நண்பர்கள் பற்றியும் சந்தானம் அடிக்கும் தத்துவங்கள் இனி Twitter, Facebook முழுக்கப் பரவிக் கிடக்கப் போகும் பாருங்கள்.
அதிலும் 'தண்ணி'யையும் தண்ணீரையும் வைத்து நண்பனின் காதலையும் நட்பையும் விளக்கும் இடம் கலக்கல்.
கடைசிக் காட்சிகளில் ஹீரோ பேசும் அரைகுறை ஆங்கிலத்தைத் தமிழில் மொழிபெயர்க்கும் இடமும் நச்.

இந்த மூன்று முக்கியமானவருக்குப் பிறகு முக்கியமான இடம் சரண்யாவுக்கு..
எம் மகனுக்குப் பிறகு இன்னொரு அப்பாவி அம்மா பாத்திரம். பரிதாபத்தைத் தேடிக்கொள்கிறார்.அழகம்பெருமாளுக்கும் இவருக்கும் இடையிலான கணவன்-மனைவிப் பாசப் போராட்டம் தான் படத்தின் நெகிழ்வுக்கான வெகு சில இடங்களில் முக்கியமானது. ஆனால் அது இல்லாமல் இருந்தாலும் தெரிந்திருக்காது. ராஜேஷ் இதைக் கவனிக்கவில்லையா?

தாயும் மகனும் சேர்ந்து ஹன்சிகாவைக் கலாய்க்கும் இடம் படத்தின் கலகல இடங்களில் முக்கியமான ஒன்று.

அழகம்பெருமாளும், ஷாயாஜி ஷிண்டேயும் கவனிக்கக் கூடிய இன்னும் இரு பாத்திரங்கள்.

சினேகா, ஆன்ட்ரியா ஆகியோர் நட்புக்காக ஒவ்வொரு காட்சிகளில் வருகிறார்கள்.
சினேகா கொஞ்சம் மனசில் நிற்கிறார்.
சந்தானத்தின் "புன்னகை அரசி - புழுங்கல் அரிசி " நக்கல் இருக்கிறது.

ராஜேஷின் முன்னைய படத்தின் ராசி போலவே - பாஸ் என்கிற பாஸ்கரனில் ஜீவா வந்தது போல - இந்தப்படத்தின் கடைசிக் காட்சியில் ஏன் என்று தெரியாமலே ஆர்யா வருகிறார்.
(அட அதான் லொஜிக் எல்லாம் பார்க்காதீங்கன்னு ஆரம்பத்திலேயே லோஷன் சொல்லிட்டாரில்லா)

ஒளிப்பதிவு - வழமை போல பாலசுப்பிரமணியெம். அருமையாக செய்துள்ளார். குறிப்பாக அழகே அழகே பாடல் காட்சியில் வரும் அந்தப் பாலைவன, மலைப் பிரதேசங்களை காட்டியுள்ள விதம அருமை. மற்றும்படி பெரிதாகக் கமெரா வித்தை காட்டக் கூடிய காட்சிகள் அமையாதது இவர் குற்றம் இல்லையே.

நடனம் - தினேஷ். பாராட்டியே ஆகவேண்டும். தினேஷ் குழுவோடு ஆடும் நடனம் கலக்கல்; அதை விட உதயநிதி பற்றித் தெரிந்து அவரையும் கஷ்டப்படுத்தாமல், எங்களையும் எரிச்சல் படுத்தாமல் நடனம் அமைத்து புண்ணியம் தேடிக்கொள்கிறார்.
'வேணாம் மச்சான் வேணாம்' பாடல் காட்சி பாராட்டுக்களை அள்ளிக் கொள்கிறது.

ஹரிஸ் ஜெயராஜ் பாடல்கள் மூலமாக வென்ற பாராட்டுக்களைப் பின்னணி இசையில் சமாளித்து தக்க வைத்துக்கொள்கிறார். பெரிதாக வேலை இல்லை. பாடல்களின் இசையை வைத்த ரீ ரேக்கொர்டிங் செய்திருக்கிறார்.

ராஜேஷின் அடுத்த படம், ஆல் இன் ஆல் அழகு ராஜாவாம்.. வெயிட்டிங்.

ஒரு கல் ஒரு கண்ணாடி - எல்லாம் ஓகே :))))



April 10, 2012

மறுபடியும் முதல்ல இருந்தா? - வரம் வாங்கிட்டு வந்தோமா?- ட்விட்டடொயிங் - Twitter Log


மார்ச் மாதத்தின் எனது ட்வீட்களின் தொகுப்பு..
ட்விட்டடொயிங் - Twitter Log 

கிரிக்கெட் சம்பந்தமாக ஆங்கிலத்திலேயே அதிகளவில் அரட்டுவது வழக்கம் என்பதனால் அதையெல்லாம் என் ட்விட்டரைத் தொடர்ந்து அறிந்துகொள்க; அல்லது தொடராமல் கழன்று கொள்க. ;)




முற்பகல் செய்ததெல்லாம் பிற்பகலில் விளைகிறது; எந்தவொரு தாக்கத்துக்கும் மறு,எதிர்த் தாக்கம் நிச்சயம் இருக்கிறது. #life #lesson #experience
3 Mar 12 via Twitter for iPhone

ஐந்து விக்கெட் போனதும் அடியோடு சுருள்வதற்கு இதென்ன 'அந்த' அணியா? ;) #SL #AdelaideHereWeCome
4 Mar 12 via web

ஒரு போட்டில வென்றிட்டு என்ன ஆட்டமடா போட்டீங்க.. இறுதியில் விளையாடும் தகுதி இருக்குன்னு காட்டினோமா இல்லையா? #AdelaideHereWeCome
4 Mar 12 via web

குற்றம் புரிந்தவன் திருந்தி நடந்தாலும் முன்னைய தவறுகளின் கறைகள் அவனை நல்லவனா என்று சந்தேகிக்கவே வைக்கின்றன #life
4 Mar 12 via Twitter for iPhone

உணர்ச்சி வசப்பட்டு பொங்கிப் பொருமுவதை விட , தெளிவாக பொறுமையாகப் பேசும் போதே அதிகளவில் மற்றவரின் செவிகளையும் மனதையும் அணுக முடிகிறது.
5 Mar 12 via web

வரம் வாங்கிட்டு வந்தோமா?
5 Mar 12 via Twitter for iPhone

உங்களுக்கானவற்றை மட்டுமே உரிமையுடன் எடுத்துக்கொள்ளுங்கள். சொத்துக்கள், பொருட்கள், பொறுப்புக்கள் மட்டுமல்ல கருத்துக்களையும் தான்
5 Mar 12 via Twitter for iPhone

சில விஷயங்களை நாம் புரிந்து கொள்வதும் கஷ்டம்.. அதை மற்றவருக்கு புரிய வைப்பதும் கஷ்டம்.. 1/2
மற்றவர் எப்படி அதைப் புரிந்துகொள்கிறார் என்று நாம் புரிவதும் கஷ்டம். 2/2
6 Mar 12 via web ·

பேசிப் புரிவதை விட, புரிந்து பேசுவதை விட, நேசித்துப் புரிவதும், புரிந்து நேசிப்பதும் யதார்த்தமானது. #அனுபவம்
10 Mar 12 via Twitter for iPhone

அலுவலகம் வருகிற நேரம் என் எதற்கு எப்படியில் @prady_sp ஒலிபரப்பிய அருண்மொழியின் "ஓடைக்குயில் " பாடல் உற்சாகத்தைத் தந்திருக்கு @vettrifm
10 Mar 12 via web

வெக்கை, சூடு ... சப்பா.. வீட்டுக்குள்ளேயே ஒரு ஐஸ்கட்டி நீச்சல் குளம் வேண்டும் இப்ப
11 Mar 12 via Twitter for iPhone

பல்கலை மாணவரின் குறுந்திரைப்படங்களுடனும், குறும்புகளுடனும் மாலைப் பொழுதின் மூன்று மணிநேரம் மகிழ்ச்சியுடன் கழிந்தது.
11 Mar 12 via Twitter for iPhone

பழைய கசப்பானவை + பிடிக்காதவை & காயம் ஏற்படுத்தியவை எல்லாம் மனசிலிருந்தும், மடலிலிருந்தும் அழித்திடுவோமா? ;)
11 Mar 12 via web



எனக்கு மிகப் பிடித்த பாடல்களில் ஒன்று இப்போது விடியலில் ... கண்ணுக்கும் கண்ணுக்கும் - முஸ்தபா - வைரமுத்து & வித்யாசாகர் #Vidiyal
12 Mar 12 via Twitter for iPhone

ஐந்து தரம்; அத்தோடு முடிஞ்சுது, போதும் என்ற நேரம், மீண்டும் ஒருக்கா என்றால், "மறுபடியும் முதல்ல இருந்தா?";) #dejavu
13 Mar 12 via Twitter for iPhone

இன்று உலக பை நாள் என்று வாசித்தேன்.. bagக்கு எல்லாம் ஒரு நாளா என்று ஆச்சரியப்பட்டால் 10,15 வருஷம் முன்னால் படிச்சது ஞாபகம் வருது.. π
14 Mar 12 via web

வா கனியே.. முக்கனியே.. தீயோடும் பனியே.. வாராமல் நீ சென்றால் இவன் தனியே தனியே ;) முத்துக்குமார் - OKOKகாக :) #Romantic
14 Mar 12 via web

நல்லவன் வாழ்வான் #உணர்ந்துகொண்டேன்
15 Mar 12 via Twitter for iPhone

தேவைகளும் உதவிகளும் தான் தீர்மானிக்கும் சக்திகளாகின்றன. - வாழ்க்கையிலும் அரசியலிலும்
15 Mar 12 via Twitter for iPhone

இன்று நான் செல்கிறேன்... இரத்த தானம் செய்கிறேன்.. நீங்கள்?? https://www.facebook.com/VettriFMOfficial/posts/373605519339752 #Vettri #BloodDonation
17 Mar 12 via web


ஸ்டேட்டஸ் போட்டு மன உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் காட்டவேண்டிய காலத்தில் வாழ்கிறோம்.. #சூழ்நிலை
17 Mar 12 via web

காலங் கடந்த கவலை, கண்ணீர், கவனம், கண்டனம் ... எங்கள் வாழ்க்கை + இருப்பு போலவே அர்த்தமற்றுப் போகின்றன
17 Mar 12 via Twitter for iPhone

இயலாது, முடியாது, நடக்காது என்று சும்மா இருப்பதை விட,இங்கிருந்து மனதளவில் தார்மீக ஆதரவை வழங்குகிறேன் #March18Marina
18 Mar 12 via Twitter for iPhone

மெரினாவில் கூடி உணர்வை வெளிப்படுத்தும் உறவுகளுக்கு நன்றிகள். ஆனால் இந்திய அரசுக்கு இதெல்லாவற்றையும் விட இலங்கை அரசின் நட்புத் தான் பெரிதாமே
18 Mar 12 via Twitter for iPhone

என்னாது? மறுபடியும் முதல்ல இருந்தா? நான் இந்த வெளாட்டுக்கு வரல.. பிளீஸ்..
20 Mar 12 via web

இலங்கை ரசிகர் ஒருத்தர் எனக்கு அனுப்பிய sms "இன்று நீலக் கலரைப் பார்த்தா தெரிவது இந்தியா தான்"
20 Mar 12 via web

அவுட் ஆகணும்னு நினைச்சா உடனே முடியுது.. ஆனால் ரன் அடிக்கனும்னு நினைச்சா எப்பிடியும் முடியுதில்லையே.. ஏன்?? - டில்ஷான்
20 Mar 12 via web

சந்தோஷ நேரங்களில் வேடிக்கையாகத் தெரியும் எல்லாமே, சண்டைகள் வரும்போது எரிச்சலைத் தருகின்றன. #அனுபவம்
20 Mar 12 via Twitter for iPhone

காப்பு முதல் ஆப்பு வரை, ரொட்டி முதல் இறுவட்டு வரை எல்லாமே வட்டம் #தத்துவமொக்கை
 20 Mar 12 via Twitter for iPhone



ஆதாரங்கள் இல்லாமல் குற்றம் சுமத்துவோர் ஆப்பிழுத்த குரங்கு நிலைக்குள்ளாவர். #அனுபவப்பாடம்_அத்தியாயம் 1
21 Mar 12 via web

நேரடி அதிகாரம் - ம்ம்ம்ம் மிகக் கடுமையான அர்த்தமுள்ள வார்த்தை தான்.. 'இலங்கைக்கும்' புரிந்திருக்கும் இன்று. #அரசியலும்
22 Mar 12 via Twitter for iPhone

கஞ்சிபாய் to பங்களாதேஷ் - நேற்று வாக்கெடுப்பில் இலங்கைக்கு ஆதரவு குடுத்து அங்கேயும் தோற்று,2 ஓட்டங்களால் வெல்ல வேண்டியதை விட்டுட்டீங்களே..
23 Mar 12 via web

அமரர் ராஜேஸ்வரி அம்மா என் தாத்த சானா அவர்களின் சிஷ்யை என எப்போதும் பெருமையுடன் சொல்லிக்கொள்பவர். #துயர்பகிர்வு
23 Mar 12 via Twitter for iPhone

அடியே குருவம்மா ஆத்துப் பக்கம் போவமா? ;) ஒரு ஜாலியான பாடல்.. யுவனின் இசையில் அன்றே பிடித்த பாடல்.. #NowPlaying
http://www.vettrifm.com
24 Mar 12 via web

தென்னை மரத் தோப்புக்குள்ளே குயிலே - வேகம் விவேகத்தில் இன்னொரு இனிய பாடலுடன் என் விடுமுறை நாள் வேலைகள் ஆரம்பம் @vettrifm
25 Mar 12 via Twitter for iPhone

ஓய்ந்துபோன இமயம் ஒன்று பற்றி ஒரு சில நிமிடங்கள் அஞ்சலி உரை நிகழ்த்தும் வாய்ப்புக் கிடைத்தது. #இராஜேஸ்வரி சண்முகம்
25 Mar 12 via Twitter for iPhone



வெற்றி வானொலி,தொ.கா சார்பாக நான் உரையாற்ற தமிழ்ச் சங்கம் சார்பாக அப்பா - குடும்பத்தின் நண்பராக இருந்தவர் என்பது பொருந்தித்தான் போகிறது.
 25 Mar 12 via Twitter for iPhone

உங்கள் @vettritv இல் ஏழு மணிக்கு கொழும்பு பல்கலைக் கழக மாணவரின் குறும்படங்கள் ... பார்த்து பாராட்டுங்கள்
http://Facebook.com/VettriTVOfficial
25 Mar 12 via Twitter for iPhone

"பேசக்கூடாது... வெறும் பேச்சில் சுகம் ஏதும் இல்லை" - முன்பை விட இப்போது அதிகம் பிடிக்கிறது. #செயலே_சிறப்பு
26 Mar 12 via Twitter for iPhone

Amarkkalam on @Vettritv :) அஜித் - ஷாலினி இடையிலான திரையைத் தாண்டிய காதல் காட்சிகளில் தொனிப்பதை ரசிக்கலாம் மீண்டும்
26 Mar 12 via Twitter for iPhone

மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு... ம்ம்ம் வைரமுத்துவின் வரிகள் அமிலமும் அமுதமுமாக
26 Mar 12 via Twitter for iPhone

அவசரப்பட்டு முடிவுகளை எடுப்பவர்கள் ஆறுதலாகக் கவலைப்படுகிறார்கள். #கண்டதும்_கேட்டதும்
27 Mar 12 via Twitter for iPhone

நிம்மதி, அமைதி, புத்துணர்வு இவற்றை மீளப் பெற்றுக்கொள்ள சிறந்த நிவாரணி நித்திரை மட்டுமே :) நிம்மதியான மனதோடு தூங்கச் செல்கிறேன் :)
30 Mar 12 via Twitter for iPhone

இலங்கை கிரிக்கெட் பற்றி எப்போது பேசினாலும் எழுதினாலும் இன்னமுமே முரளிதரன் பற்றிக் குறிப்பிடாமல் இருக்க முடிவதில்லை. #Legend
30 Mar 12 via web

எதிரிக்கும் புதிரிக்கும் வெடி வைக்க ஒரு பாடல் 'வெற்றி'விழாவிலிருந்து .. ;) #avathaaram
 31 Mar 12 via web

ஓய்வெடுக்க விரும்பாத சில உத்தமர்கள் பற்றி அவதாரத்தில் கிசு கிசு ;) #cricket #Sri Lanka @vettrifm
31 Mar 12 via web


April 04, 2012

ஐந்தாவது IPL ஐந்து அணிகள் பற்றி - IPL 2012 அலசல் 2


நானும் அரசியல்வாதியாகிப் போனேனே என்பது தான் கவலை.. சொன்ன வாக்கைக் காப்பாற்ற முடியல.. (பதிவுலக வாழ்க்கையில் இதென்ன புதுசா? ) ஆனாலும் என்ன முதல் போட்டி முடியிற நேரம் இடுகை வருதில்ல ;)
இதோ IPL 2012 இன் அணிகளின் அலசல் பகுதி 2


முதல் பாகத்தை வாசிப்பதற்கு இங்கே சொடுக்குக..அல்லது கீழே உள்ள சுட்டி வழி செல்க..

ஆரம்பமாகிறது IPL 2012




கொல்கொத்தா நைட் ரைடர்ஸ்




இல் எப்போதுமே பரபரப்பான அணியாக இருக்கும் அணி - இவர்களது உரிமையாளர்களில் ஒருவரான ஷாருக் கானே எப்படியும் அணி தோற்றுக் கொண்டிருந்தாலும் வெல்கின்ற அணிகளை விடப் பிரபலமாக்கிக் காட்டிவிடுவார்.

தொடர்ச்சியாக மண் கவ்விக் கொண்டிருந்த அணி, கடந்த வருடம் கௌதம் கம்பீரின் தலைமையில் உயர்வு கண்டது.
அதை இந்த வருடம் மேலும் தொடரக்கூடிய ஆற்றலும், வீரர்களும் தெரிகிறார்கள்.

உலகின் மிகச் சிறந்த இரு சகலதுறை வீரர்கள் & match winners ஆன ஜக்ஸ் கல்லிஸ் மற்றும் ஷகிப் அல் ஹசன், உலகில் சர்வதேசப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்துள்ள அதிரடி வீரரான பிரெண்டன் மக்கலம், உலகின் அதிவேகப் பந்துவீச்சாளர் ப்ரெட் லீ, தனியாக நின்று போட்டியொன்றின் போக்கை மாற்றக் கூடிய யூசுப் பதான், நெதர்லாந்தின் ரயான் டென் டொச்கட், ஒயின் மோர்கன் ஆகிய மூன்று பெரும், ஆஸ்திரேலியாவின் பிரட் ஹடின், அண்மைக்காலத்தில் வேகமாக முன்னேறி வரும் ஜேம்ஸ் பட்டின்சன் மற்றும் மேற்கிந்தியத் தீவுகளின் சுழல் பந்துவீச்சாளர் சுனில் நரேனும் இருக்கிறார்கள்.
பலம் வாய்ந்த இந்த நட்சத்திர வரிசையில் இந்தியாவின் எதிர்கால நட்சத்திரங்களில் ஒருவரான மனோஜ் திவாரியும் இருக்கிறார்.

இன்னொரு கவனிக்கக் கூடிய வீரர் வளர்ந்துவரும் இந்திய சுழல் பந்துவீச்சாளரான இக்பால் அப்துல்லா.. அதேபோல தென் ஆபிரிக்காவுக்கான தன் அறிமுகப் போட்டியில் அசத்திய மெர்ச்சன்ட் டீ லங்கேயும் இம்முறை கவனிக்கப் படக் கூடியவர்.

இன்னொரு சுவாரஸ்யமான விடயம், முதலாவது IPL இல் கொல்கொத்தாவுக்காக முதல் போட்டியிலேயே பட்டை கிளப்பிய மக்கலம், கடந்த வருடம் கொச்சின் அணியால் வாங்கப்பட்டிருந்தாலும், இப்போது மீண்டும் தனது முதல் அணிக்கே திரும்புகிறார். கொல்கொத்தா எதிர்பார்த்துள்ள பெரிய மாற்றம் இவரால் கிடைக்குமா என்பது கேள்வியே..

கம்பீர் தனது தலைமைத்துவத்தைத் தேசிய தேர்வாளர்களுக்கும் நிரூபிக்கக் கூடிய வாய்ப்பு ஒன்று அமைகிறது.

அணியின் கட்டமைப்பைப் பார்த்தால் அரையிறுதி உறுதி; ஆனால் ஆடுகளத்தில் ஆடுவது தானே முடிவு சொல்லும்.


மும்பாய் இந்தியன்ஸ்



சச்சினின் அணி.. இப்படி சொன்னால் தான் இந்த அணிக்கே அது மகுடம்.
அம்பானியின் அணி; பணக்கார அணி என்பதெல்லாம் அடுத்தவை தான்.
முதலாவது IPLஇல் இருந்து முன்னணி அணி, முக்கியமான அணி, பலமான அணி, நட்சத்திர அணி என்றெல்லாம் உசுப்பேற்றப்பட்டு வந்தாலும், இதுவரை அந்தப் பெயருக்கேற்ற மாதிரிக் கிண்ணம் கிடைக்கவில்லை.
கடந்தவருடம் கொஞ்சம் விஸ்வரூபம் எடுத்தாலும் இறுதியில் கவிழ்ந்துபோனது.
ஆனால் இம்முறை இவ்வளவுகாலமும் இருந்த ஓட்டைகள், ஓடிசல்களை எல்லாம் அடைத்து ஒரு உறுதியான அணியாகக் களம் காண்கிறது.

சச்சின் டெண்டுல்கர், ஹர்பஜன் சிங், லசித் மாலிங்க, கெய்ரோன் பொலர்ட், ரோஹித் ஷர்மா, ஜேம்ஸ் பிராங்க்ளின் ஆகிய நிரந்தர (!!) மும்பாய் இந்தியர்களோடு, இம்முறை ஏலத்தில் மும்பாய் திட்டமிட்டு எடுத்த வீரர்கள் முக்கியமானவர்கள்.

தங்களது கடந்த காலப் பலவீனங்களை உணர்ந்து அவர்கள் தெரிவு செய்த வீரர்களைப் பாருங்கள்....
விக்கெட் காப்புக்கு - தினேஷ் கார்த்திக்
பந்துவீச்சு வரிசையை மேலும் பலப்படுத்த IPLஇன் கூடிய விக்கெட் சேகரிப்பாளர்களான R.P.சிங், பிரக்யான் ஓஜா மற்றும் ஆஸ்திரேலியரான மிட்செல் ஜோன்சன் & கிளின்ட் மக்கே
சகலதுறை வீரர்கள் திசர பெரேரா, ரொபின் பீட்டர்சன்
T20 சர்வதேசப் போட்டிகளில் வேகமான சதம் அடித்து சாதனை படைத்த தென் ஆபிரிக்காவின் ரிச்சர்ட் லெவி
அனுபவம் வாய்ந்த ஹெர்ஷேல் கிப்ஸ் உம் இருக்கிறார்.
இது தவிர கடந்த வருடங்களில் கலக்கிய முனாப் பட்டேல், அம்பாத்தி ராயுடு ஆகியோரும் உள்ளார்கள்.
இவர்களோடு நான் மிக ஆர்வத்தோடு எதிர்பார்க்கும் வயது இளைஞன் இருக்கிறார். சூர்யகுமார் யாதவ்.
சாம்பியன் ஆவதற்கு வேறு என்ன வேண்டும்.

ஆனால் சச்சின் ஆரம்பம் முதல் பிரகாசிக்க வேண்டும்; 'முன்னாள்' இந்திய பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் தன்னை எல்லோரும் பார்க்கும் அரங்கில் நிரூபிக்க வேண்டும் என்ற அழுத்தங்கள் இல்லாமல் இல்லை.
கடைசி நேரத்தில் சச்சின் தலைமைப் பதவியை ஹர்பஜனுக்குக் கை மாற்றியதும் கவனிக்கக்கூடியது.

ஆனால் சச்சின் இல்லாமல் கடந்த வருடத்தின் Champions Leagueஐ வென்றெடுத்த உற்சாகத்தோடு இருக்கும் மும்பாய் இந்தியன்ஸ் இம்முறை அம்பானியினதும் சச்சினினதும் கனவை நிறைவேற்றும் போலவே தெரிகிறது.

(இந்த இடுகையைத் தட்டிக்கொண்டே இன்றைய முதலாவது போட்டியைப் பார்க்கும் நேரம் நடப்பு சாம்பியன் சென்னை மும்பாயிடம் அடி வாங்கித் திணறுவதைப் பார்த்தாலே மும்பாய் இம்முறை ஏதோ சாதிக்கும் போலவே தெரிகிறது.
ஆனால் சென்னை கொஞ்சம் தாமதமாகத் தான் பிக் அப் ஆகும் என்பது அனைவரும் அறிந்ததே..)



பூனே வொரியர்ஸ்



பெரியளவில் எதிர்பார்க்கப்பட்டுக் கடந்த ஆண்டில் யுவராஜின் தலைமையில் புஸ் ஆகிப் போன பூனே, இம்முறை யுவராஜ் இல்லாமல், கங்குலி என்ற கிழச் சிங்கத்தின் தலைமையில் தேடித் பொறுக்கி எடுத்த வீரர்களோடு, பெரிய நம்பிக்கையோடு களம் காண்கிறது.

இவ்வளவு நாளும் IPL பக்கம் வராமல் இருந்த ஆஸ்திரேலியத் தலைவர் கிளார்க் முதல் தடவையாக விளையாடுவதும், ஷகிப் அல் ஹசனுக்குப் பிறகு பங்களாதேஷில் இருந்து ஒரு வீரர் (தமீம் இக்பால்) IPLஇல் விளையாடுவதையும் வைத்துப் பார்த்தாலே கங்குலி தன் அணியை எப்படி சிரத்தையோடு தெரிவு செய்துள்ளார் என்பது தெரியும்.

யுவராஜ் இல்லை; காயம் காரணமாக தென் ஆபிரிக்காவின் கிரேம் ஸ்மித் இல்லை; டெல்லியிலிருந்து வாங்கிய சகலதுறை வீரர் ஜேம்ஸ் ஹோப்ஸ் உபாதை  என்ற பெரிய இழப்புக்களை ஈடு செய்ய, நேதன் மக்கலம், அஞ்சேலோ மத்தியூஸ், மார்லன் சாமுவேல்ஸ், முரளி கார்த்திக், ஆசிஷ் நெஹ்ரா, ஜெசி ரைடர் (குடிகார, குழப்படிகாரன்), ரொபின் உத்தப்பா, வெய்ன் பார்நெல், ஆலோன்சோ தோமஸ், கலும் பெர்குசன் போன்ற தம்மால் முடிந்தளவு தமது உழைப்பை வெளிப்படுத்தக்கூடிய வீரர்களை வைத்து போராட எண்ணியுள்ளது.

ரொபின் உத்தப்பா, தமீம் இக்பால் ஆரமாப் ஜோடியாக இறங்கினால் எப்படி இருக்கும் என்று இப்போதே ஆர்வம் வருகிறது.
அஷோக் டிண்டா அண்மைக்காலமாக சிறப்பாகப் பந்துவீசி வருவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.

மேலே குறிப்பிட்ட முக்கிய வீரர்களுடன் சகலதுறை வீரர்கள் லூக் ரைட், மிட்செல் மார்ஷ், மிதுன் மன்ஹாஸ் (டெல்லியைச் சேர்ந்த இவர் எப்போதுமே தன் பங்களிப்பை உச்சபட்சம் வழங்கக் கூடிய ஒருவர்) இவர்களோடு ஸ்டீவ் 'சகலதுறை' ஸ்மித்தும் இருக்கிறார்.

கங்குலியின் போராட்ட குணமும், சோர்ந்துகிடக்கும் அணியை உத்வேகப்படுத்தி வெற்றிபெறச் செய்யும் குணமும் சரித்திரப்புகழ் பெற்றவையாக இருந்தாலும் இந்தக் குறுகிய ஓவர்கள் T20 போட்டியில் இது இந்த அணியுடன் எவ்வாறு சாத்தியப்படும் என்பது சந்தேகமே.

அரையிறுதி வாய்ப்பு மிக மிகக் குறைவு.



ராஜஸ்தான் ரோயல்ஸ்





ஷேன் வோர்னின் மந்திரஜாலத்தால் முதலாவது IPLஇல் வெற்றி மாங்காய் பறித்த ராஜஸ்தான் அதற்குப் பிறகு அதேயளவு அதிர்ஷ்டங்களை அடைய முடியாவிட்டாலும், அதிர்ச்சிகளை ஏற்படுத்தக் கூடிய அணியாகவே இருந்துவந்துள்ளது.

முதல் தடவையாக ஷேன் வோர்ன் இல்லாமல் களமிறங்கும் ராஜஸ்தான், வோர்ன் இல்லாமல் பார்க்கையில் அடையாளம் தொலைத்த அணியாகவே தெரிகிறது.

ஆனால் ராகுல் டிராவிட் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அவருக்கான ஒரு கௌரவமாக ராஜஸ்தான் தலைமைப் பதவியை இப்போது நாம் பார்க்கலாம்.

இந்த அணியின் துருப்புச் சீட்டாக இருக்கக்கூடிய ஷேன் வொட்சன் மே மாத ஆரம்பத்தில் தான் வருவார் என்பது ஒரு பெரிய இழப்பே. (ஆஸ்திரேலிய அணியின் மேற்கிந்தியத் தீவுகளுக்கான சுற்றுலா முடிந்த பிறகே வொட்சன் வருவார்)

அனுபவம் நிறைந்த பிரட் ஹொட்ஜ், போல் கொல்லிங்க்வூட், பிரட் ஹொக், ஓவைஸ் ஷா, ஜொஹான் போதா என்ற இந்த வரிசையைப் பார்க்கும்போது ராகுல் டிராவிட் போன்றே ஓய்வே பெற்ற/ பெறும் வயதுடைய வீரர்களின் குழாம் (எழுத்தாளராக அதிகம் பிரகாசிக்கும் ஆகாஷ் சோப்ரா வேறு இந்தக் குழாமில் இருக்கிறார்)என்ற நினைப்பைத் தவிர்க்க முடியவில்லை.

ஆனால் வேகம், தாகம் உடைய இளம் வீரர் தினேஷ் சந்திமால், ஆஸ்திரேலிய மின்னல் வேக ஷோன் டெய்ட், மற்றும் ஷேன் வோர்னினால் பட்டை தீட்டப்பட்ட இளம் வீரர்கள் நம்பிக்கை தருகிறார்கள்.
அட மறந்திட்டேன்.. இவர்களோடு இந்தியாவின் அழுகுனிப் பையன் ஸ்ரீசாந்தும் இருக்கிறார்.

பாவம் டிராவிட்.. மிகப்பெரிய சிக்கலான பொறுப்பை சுமக்கப் போகிறார்.

யாரவது ஒருவர் நட்சத்திரமாக எழுந்தால் ஒழிய ராஜஸ்தான் ராஜநடை போடாது.


ரோயல் சல்லேஞ்சர்ஸ் பெங்களுர்



பணக்கார, அதிர்ஷ்டக்காரம் அணி; விஜய் மல்லையா எப்பாடுபட்டாவது நட்சத்திர வீரர்களைத் தன் வசம் ஈர்த்து ஏதோ ஒப்பெற்றிவிட்டுக் கொண்டிருக்கிறார் என்ற நிலையை மாற்றி, கடந்த வருட ஏலத்தில் தேவையான வீரர்களை எடுத்து கிட்டத்தட்ட கிண்ணத்தை வென்றெடுக்கும் நிலை வரை வந்தது.
ஆனாலும் வழக்கமான தடுமாற்றம் கவிழ்த்தது. இதுவரை இரண்டு IPL இறுதிப்போட்டிகள், ஒரு Champions League இறுதிப்போட்டியில் வந்து தோற்றுப்போன துரதிர்ஷ்டசாலி அணி இது.
இம்முறையாவது மாற்றிக்காட்டுவார்களா என்பது தான் மல்லையாவினதும், RCBயின் ரசிகர்களினதும் எதிர்பார்ப்பு + ஏக்கம்.
டானியல் வேட்டோரியின் தலைமையில் கடந்த வருடம் பெங்களூரை வீறு நடை போட வைத்த விராட் கோஹ்லி, கிறிஸ் கெய்ல், சாகிர் கான், டேர்க் நன்னஸ், டீ வில்லியர்ஸ், டில்ஷான் ஆகியோரோடு இம்முறை ஏலத்தில் தேர்ந்து எடுக்கப்பட்ட இலங்கையின் உலகசாதனை நட்சத்திரம் முரளிதரன், அன்றூ மக்டோனால்ட் இவர்களோடு மிலியன் டொலருக்கு வாங்கப்பட்ட இப்போதைய இந்தியாவின் முன்னணிப் பந்துவீச்சாளர் வினய்குமார் ஆகியோர் பலமான அணியொன்றை உருவாக்கி உள்ளார்கள்.

இவர்கள் தவிர தென் ஆபிரிக்காவின் அனுபவம் வாய்ந்த கார்ல் லங்காவேல்ட், இந்தியாவின் எதிர்கால நட்சத்திரம் செடேஷ்வர் புஜாரா, சௌரப் திவாரி, தென் ஆபிரிக்காவின் இளைய வீரர் ரிலீ ரொஸூ, அபிமன்யு மிதுன், அருண் கார்த்திக், மாயன்க் அகர்வால் என்று இன்னொரு நீண்ட இளம் வரிசையும் உள்ளது.

பார்க்கப்போனால் இந்தப் பணக்கார அணி மட்டுமே இப்போதைக்கு மும்பாய்க்கு சவால் விடுக்கக் கூடிய அணியாகத் தெரிகிறது.
(நம்ம முரளிக்கு அணியில் இடம் கிடைக்குமா என்பதே சந்தேகமாக இருக்கையில் பலம் பற்றி வேறு கேள்வி வேண்டுமா?)

-----------------

இன்றைய முதலாவது போட்டியே நடப்பு சம்பியனுக்கு ஆப்பு வைத்திருக்கையில் இனி நடப்பதை யார் அறிவார்?
ஆனாலும் எனது கணிப்புக்கள் சரியாகப் போனால் அத்தனை புகழும் விக்கிரமாதித்தனுக்கே....



ஆரம்பமாகிறது IPL 2012


2012ஆம் ஆண்டுக்கான IPL இதோ நாளை ஆரம்பமாகிறது. இன்று இரவு இடம்பெற்ற கோலாகல ஆரம்ப விழாவுடன்...



எவ்வளவு தான் திட்டினாலும், விமர்சித்தாலும், ராமராஜன், விஜயகாந்த், S.J.சூர்யா, சிம்பு படங்களைப் பார்க்காமல் இருக்கமாட்டோமோ (இன்னொரு மூன்றெழுத்து ஹீரோவை விட்டதை யாரோ சுட்டிக்காட்டுறது தெரியுது) அதேபோல இந்த சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் அட்டவணைகளையும், சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் தாய் நாட்டுக்கான பற்றையும், தமது நாட்டு அணிகளுக்காக விளையாடும் விசுவாசங்களையும் மாற்றி, மறைத்து, கிழித்துப் போட்டாலும், ஏப்ரல், மே மாதங்கள் வந்தால் அனைத்து நாட்டு கிரிக்கெட் ரசிகர்களது பார்வையும், கிரிக்கெட் வீரர்களின் சிந்தனையும் இந்தியாவின் பக்கம் திரும்பிவிடுவதை மறுப்பதற்கில்லை.

இந்தியாவின் அண்மைக்கால சரவதேச கிரிக்கெட்டின் மீதான ஆதிக்கத்தினால் IPL நடக்கும் காலத்தில் சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளுக்கு எல்லாம் கட்டாய ஓய்வு வழங்கப்படவே வேண்டியுள்ளது.
பாருங்கள்.. இலங்கை - இங்கிலாந்து தொடர் இரண்டு டெஸ்ட் போட்டிகளோடு குறை மாச முடிவு எட்டப் படவும் காரணம் இந்த கவனக்கலைப்பான், காசு விழுங்கி IPL தான் என்பதை ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் செயலாளர் நிஷாந்த ரணதுங்க பரிதாபமாக ஒப்புக்கொள்கிறார்.
நல்ல காலம், இலங்கை அணி வீரர்களின் தேசப் பற்று vs பணப் பற்று மோதல் தவிர்க்கப்பட்டது.
(ஆனாலும் ஓராண்டுக்கு மேல் சம்பளம் இல்லாமல் கிரிக்கெட்டின் மேல் உள்ள காதலால் விளையாடிய அர்ப்பணிப்புடைய வீரர்கள் நம்மவர்கள் என்ற மதிப்பு எப்போதுமே உண்டு)

இவ்வளவு நாளும் IPL வேண்டாம்.. நல்ல முறையில் ஓய்வெடுத்துக்கொண்டு தாய் நாட்டுக்காக சர்வதேசப் போட்டிகளில் மட்டும் விளையாடுகிறேன் என்று அறிவித்து வந்த ஆஸ்திரேலிய அணித்தலைவர் மைக்கேல் கிளார்க்கும் இம்முறை களம் இறங்குகிறார் என்றல் பாருங்களேன்.



கடந்த ஆண்டு விளையாடிய பத்து அணிகளில் கொச்சி இல்லாமல் ஒன்பது அணிகள் இம்முறை களமிறங்குகின்றன.
முதல்மூன்றுஆண்டுகளிலும் நான் மனதார ஆதரவளித்தது சென்னை சுப்பர் கிங்க்ஸ் அணிக்கு.. தமிழக அணி என்பதைத்தாண்டி, எங்கள் முத்தையா முரளிதரனுக்காக.. கடந்த ஆண்டு அதே காரணத்தாலும், மஹேலவுக்கும் சேர்த்து கொச்சி டஸ்கேர்ஸ்அணியை விரும்பினேன்.

ஆனால் இம்முறை கொஞ்சம் குழப்பம் தான்.. இவ்வளவு நாளும் அறவே பிடிக்காத இரண்டு அணிகளுக்கு ஆதரவளிக்க வேண்டி வருமோ என்று யோசிக்கிறேன்..
முரளிதரன் விளையாடுவது றோயல் சல்லேஞ்சர்ஸ் பெங்களுர்.. (விஜய் மல்லையா & க்றிஸ் கெய்லினால் பிடிக்காமல் போன அணி)
மஹேல ஜெயவர்த்தன விளையாடுவது டெல்லி டெயார்டெவில்ஸ்.. (ஏனோ முன்பிருந்தே இந்த அணியைப் பிடிக்காது)

இன்னொரு பக்கம் சங்கக்கார விளையாடும் டெக்கான் சார்ஜர்ஸ் அணியும் இருக்கிறது. இந்த அணியில் விளையாடும் கமெரோன் வைட்டும் எனக்குப் பிடித்த வீரர்களில் ஒருவர்.

ஆனால் என்ன தான் இருந்தாலும் மொழியினால் தானாக சென்னை சுப்பர் கிங்க்சில் ஒரு ஈர்ப்பு வந்தேவிடும்.. கடந்த வருட IPL இலும் கொச்சி அணி வெளியேறிய பிறகு சென்னை அணிக்கே எனது ஆதரவு இருந்தது.

இனி இம்முறை விளையாடும் ஒன்பது அணிகளையும் சுருக்கமாக ஒரு அலசல் அலசலாம் என்றிருக்கிறேன்..

முன்னைய IPL பற்றிய அலசல்கள்...

IPL 3 ஆரம்பம்.. அணிகள் ஒரு பார்வை




சென்னை சுப்பர் கிங்க்ஸ்

நடப்பு சாம்பியன்.. இம்முறையும் கிண்ணம் வென்றால் hat trick அடிக்கும் வாய்ப்பு.
தோனியின் தலைமைத்துவமும் இருப்புமே அணியின் மிகப்பெரும் பலம்.
இன்னும் சில முக்கியமான வீரர்களாக மைக்கேல் ஹசி, ரவிச்சந்திரன் அஷ்வின், சுரேஷ் ரெய்னா, ட்வெய்ன் பிராவோ, அல்பி மோர்கல், முரளி விஜய், டக் போல்லின்ஜர், சுராஜ் ரண்டிவ் ஆகியோரைக் குறிப்பிடலாம்.
இலங்கையின் நுவான் குலசெகரவும் இருக்கிறார்.

அதேபோல நல்ல Formஇல் இருக்கின்ற தென் ஆபிரிக்காவின் பாப் டு ப்லேஸ்சிஸ், ஆஸ்திரேலியாவின் பென் ஹில்பென்ஹோஸ் ஆகியோரும் அணியில் இருப்பதால் நல்ல ஒரு சமபலமுள்ள அணியாகத் தெரிகிறது.

கடந்த IPLஇல் ஒரு ஹீரோவாக மாறிய ரவீந்திர ஜடேஜாவும் இம்முறை சென்னையில்.. அண்மைக்கால விமர்சனங்களுக்குப் பதில் கொடுப்பாரா பார்க்கலாம்.

ஹசி தவிர அனைவரும் ஆரம்பம் முதல் விளையாடலாம்.

இளைய வீரர் அனிருத ஸ்ரீக்காந்த் அண்மைய உள்ளூர்ப் போட்டிகளில் நல்ல form இல் இருப்பதால் அவரையும் எதிர்பார்க்கலாம்.
இலங்கை வீரர்களுக்கு பெரியளவில் விளையாட வாய்ப்புக் கிடைக்கும் என நம்பவில்லை.

என்னைக் கவர்ந்த பத்ரிநாத் இம்முறையும் அணியில் ஒரு முக்கிய துரும்புச் சீட்டாக விளங்குவார் என நம்பி இருக்கிறேன்.
தோனி, ஹசி, மோர்க்கல், அஷ்வின் மற்றும் டூ ப்லேஸ்சிஸ் ஆகியோரைக் கவனிக்கலாம்.

அரையிறுதி செல்லும் பலம் நிச்சயம் இருக்கிறது.


டெக்கான் சார்ஜர்ஸ்



குமார் சங்கக்கார தலைமை தாங்கும் அணி என்பதே இவர்களின் அடையாளம். (இரு ஆண்டுகளுக்கு முன்பு கில்க்ரிஸ்ட்டின் அணி என அடையாளப்படுத்தப்பட்டது )
சர்வதேசரீதியில் பிரபலமான ஒரு சில வீரர்களே இருக்கிறார்கள்.
வளர்ந்துவரும் இளைய வீரர்கள் கை கொடுத்தால் ஒழிய பிரகாசிப்பதில் இடர்ப்பாடுகள் இருக்கும்.

முக்கிய வீரர்கள் - டேல் ஸ்டெய்ன், கமேரோன் வெயிட், அமித் மிஸ்ரா, இஷாந்த் ஷர்மா(காயம் காரணமாக விளையாட மாட்டார் என்று கருதப்படுகிறது), டுமினி, பார்த்திவ் பட்டேல், டானியேல் கிறிஸ்டியன் மற்றும் இம்முறை பெருமளவு எதிர்பார்ப்போடு வாங்கப்பட்ட டறேன் பிராவோ ஆகியோர் (ஆனால் பிராவோ துடுப்பாட்டத்தில் ஆஸ்திரேலியாவோடு தடுமாறி அணியை விட்டு அனுப்பப்பட்டுள்ளார்)

உள்ளூர் வீரர்களில் ஷீக்கார் தவான், ரவி தேஜா, இஷான்க் ஜக்கி ஆகியோரை நம்பி இருக்கலாம்.

சங்கா முதலாவது போட்டியில் விளையாட மாட்டார் - டெஸ்ட் போட்டியில் விளையாடுவதால்.

இந்த அணியின் துடுப்பாட்டம் தான் நம்பிக்கை என்கிறார் பயிற்றுவிப்பாளர் டரன் லீமன்.
உண்மை தான்.. சங்கா & குழுவின் துடுப்பாட்ட, சரியாக அமைந்தால் மட்டுமே அரையிறுதியை நினைத்துப்பார்க்க முடியும்.



டெல்லி டெயார்டெவில்ஸ்



கடந்த ஆண்டில் சரியான வீரர்கள், சமபலமான அணி இல்லாமல் மரண அடி வாங்கிய அணி, இம்முறை வீரர்கள் ஏலத்தில் விலைகொடுத்து பிரபலமான, பெரிய வீரர்களை வாங்கி எதிர்பார்ப்போடு களம் இறங்குகிறது.

இந்திய அணியிலிருந்து 'ஓய்வு' வழங்கப்பட்டுள்ள செவாக் தன்னை நிரூபித்துக்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
மஹேல ஜெயவர்த்தன, கெவின் பீட்டர்சன், மோர்னி மோர்கல், டேவிட் வோர்னர், ரொஸ் டெய்லர் (இவரது கை முறிவு அவ்வளவு சீக்கிரத்தில் குணமடைந்து விடுமா என்பது தெரியவில்லை), டேவிட் வோர்னர், கொலின் இங்க்ராம் என்று அடுக்கடுக்காக அதிரடி + அனுபவம் வாய்ந்த வீரர்கள்.

போதாக்குறைக்கு இந்தியாவின் அனுபவம் வாய்ந்த (அணியில் நிரந்தர இடம் இல்லாவிட்டாலும்) அஜித் அகார்கார், இர்பான் பதான் போன்ற சகலதுறை வீரர்களும் தென் ஆபிரிக்காவின் வான் டேர் மேர்வும் இருக்கிறார்கள்.

இதை விட என் மனது சொல்வது சரியாக இருந்தால் டெல்லி இம்முறை ஏலத்தில் எடுத்துள்ள, பெரியளவில் பிரபலமாகாத ஏரன் பிஞ்ச் (ஆஸ்திரேலியா), டக் ப்ரேஸ்வேல் (நியூ சீலாந்து) ஆகியோரும் நம்பி இருக்கக் கூடிய வேணுகோபால் ராவும் இம்முறை ஏதாவது செய்வார்கள்.

இவர்களோடு அண்மைக்காலத்தில் புயல் கிளப்பிவரும் மேற்கிந்தியத் தீவுகளின் புதிய சகலதுறை வீரர் அன்ட்ரே ரசலையும் டெல்லி வாங்கியுள்ளது. ட்வெய்ன் பிராவோ, கெரோன் பொல்லார்ட் வழியில் இவரும் முத்திரை பதிப்பார் என்று நம்பலாம். இம்முறை பங்களாதேசிலும் (BPL) ஒரு கலக்கு கலக்கி இருந்தார்.

உள்ளூர் வீரர்களில் விக்கெட் காப்பாளர் நாமன் ஓஜா, அண்மைக்கால இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் வேகப் பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் ஆகியோர் பிரகாசமாகத் தெரிகிறார்கள்.
டெல்லியின் சகலதுறை சமபலமானது இம்முறை வெல்லக் கூடிய வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக மாற்றியுள்ளது.
ஆனால் வெளிநாட்டு வீரர்கள் நால்வரை டெல்லி எவ்வாறு தெரிவு செய்யப் போகிறது என்பதிலும், செவாக் தன்னை தலைவராகவும், அதிரடி ஆரம்பத் துடுப்பாட்டவீரராகவும் தன்னை வெளிப்படுத்திக்கொள்வதிலும் தான் அரையிறுதி வாய்ப்புத் தங்கியுள்ளது.

ஆனால் வீரர்களின் தற்போதைய formஇல் (குறிப்பாக மஹேல, ரசல், வோர்னர், மோர்க்கல்) டெல்லி அரையிறுதி செல்லும் என்று நம்பியிருக்கலாம்.


கிங்க்ஸ் XI பஞ்சாப் 



நாற்பது வயதிலும் நச்சென்று இளமையோடு அணித் தலைவராகவும், பயிற்றுவிப்பாளராகவும் துடிப்போடு வலம் வரும் கில்க்ரிஸ்ட்டின் விஸ்வரூபத்தை மீண்டும் நம்பிக் களத்தில் இறங்குகிறது பஞ்சாப்.
பாகிஸ்தானின் வீரர் ஒரேயொருவர் இம்முறை IPL இல் விளையாடுவதும் இந்த அணிக்கே.. அசார் மஹ்மூத். உலகில் முதல்தரப் போட்டிகளில் விளையாடும் ஒரு மிகச் சிறந்த சகலதுறையாளர். ஆனால் இவர் பஞ்சாப்பினால் ஏலத்தில் எடுக்கப்பட்டது ஒரு இங்கிலாந்து வீரராக.

டேவிட் ஹசி, ரயான் ஹரிஸ், ஷோன் மார்ஷ் போன்ற ஆஸ்திரேலிய பிரபலங்களோடு, இங்கிலாந்தின் மஸ்கேரனாஸ்,இந்தியாவின் அனுபவம் வாய்ந்த பியுஷ் சாவ்லா, பிரவீன் குமார் மற்றும் உள்ளூரில் கலக்கி வரும் இளையவீரர்களான அபிஷேக் நாயர், மந்தீப் சிங் ஆகியோரும் கடந்த IPLஐ அதிர வைத்த போல் வல்தாட்டியும் இருக்கிறார்கள்.
இவர்களோடு மும்பாய் அணியில் முக்கிய வீரராக இருந்த ராஜகோபால் சதீஷ் இம்முறை பஞ்சாப் அணிக்காக விளையாடுகிறார்.

கில்லியை பிரதானமாக நம்பி இருக்கும் பஞ்சாபுக்கு இம்முறை இங்கிலாந்தின் சகலதுறை வீரர் ஸ்டுவர்ட் ப்ரோடின் உபாதை பெரும் இழப்பே..

அரையிறுதி செல்வதற்கு ஆஸ்திரேலியர்கள் நால்வரின் தொடர்ச்சியான உழைப்பு அவசியம்..


ஏனைய ஐந்து அணிகள் பற்றி நாளை முதலாவது IPL 2012 போட்டி ஆரம்பிக்க முதல் இடுகை வரும்.. (நம்பி இருங்கப்பா.. நம்பிக்கை தானே வாழ்க்கை)



April 02, 2012

முட்டாள்கள் தினம் - முட்டாள்தனமா? முற்றுப்புள்ளியா? முக்கியமா?


நேற்றைய ஏப்ரல் முட்டாள் தினத்தன்றைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தபோது மனதில் தோன்றிய விஷயங்கள்..

ஆனால் நேற்றைய விடுமுறை நாள் வீட்டில் ஒரு குடும்ப ஒன்றுகூடல் நாளாக மாறிப்போனதால் ஒரு நாள் தாமதமாக இந்த இடுகை..
அதனால் என்ன.. அடுத்த ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி எனது இந்த இடுகை உங்களுக்கு ஞாபகம் வரட்டும்..

அதேபோல எனது வழமையான இடுகைகளை விட இந்த இடுகையில் ஒரு விசேடமும் எனக்கு ஒரு வித்தியாசமான அனுபவமும் உள்ளது. கால,நேரம் வருகையில் உங்களோடும் பகிர்கிறேன்..

ஏப்ரல் முட்டாள் தினம் இல்லாமல் போகிறதா?

வேகமாக நகர்ந்துகொண்டிருக்கும் நவீன உலகில் நாங்கள் முன்னைய முட்டாள் தினக் குறும்புகள், மற்றவர்களை முட்டாளாக்கும் முயற்சிகளில் இருந்து மாறி/ விலகி ஊடக வழி, இணைய வழிக் குறும்புகள், இணைய வழியாக ஏமாற்றும் முயற்சிகளிலேயே (media driven jokes & Internet tomfoolery) அதிகமாக இறங்கிவிட்டோம் என்று அண்மைய ஆய்வு ஒன்று கூறுகிறது.

காலம் அப்படி இருக்கே.. நாங்கள் என்ன செய்யலாம் என்று நாமே சொல்லிக்கொள்ளலாம்.

ஆனால் சின்ன வயதிலிருந்து ஒருவரை ஏப்ரல் பூல் ஆக்கி நாம் மகிழ்ந்து சிரித்த அந்த சின்ன, சின்ன சந்தோஷங்கள், சுவாரஸ்யங்கள் இனி முடிந்துவிடுமோ என்றொரு சிறு கவலை வரவில்லையா?
வாழ்க்கை முழுவதும் முட்டாள்களாகவே வாழ்ந்துவரும் எமக்கு மற்றவர்களை முட்டாளாக்க ஒரு தினம் இருப்பதால் ஒரு சந்தோசம் தானே?
இது எங்கே எப்படி ஆரம்பித்தது என்றெல்லாம் அறியாமலே சுவாரஸ்யத்துக்காக உலகம் முழுவதும் தொடர்ந்துகொண்டிருக்கிறோம்..



என்னைப் பொறுத்தவரை இந்த மற்றவரை முட்டாளாக்குவதற்கு ஒரு நாள் தனியாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. எப்போதும் கலகல என்று இருக்கவேண்டும்.. முடியுமானவரை சிரித்து, மற்றவரையும் சிரிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இருக்கும் எனக்கு ஒவ்வொரு நாளும் தான் மற்றவரை முட்டாளாக்க முடிகிறது ; நானும் முட்டாளாக முடிகிறது. (போதாக்குறைக்கு விடியலும் இருக்கே)

முட்டாள்கள் தினம் பற்றி முன்பொரு முட்டாள் தினத்தில் எழுதிய எனது இடுகை..

முட்டாள்களே நில்லுங்கள்! - http://www.arvloshan.com/2009/04/blog-post.html




ஆனாலும் ஆண்டாண்டு காலம் இருந்த ஒரு வழக்கம் வழக்கொழிந்து போகின்றது என உணரும்போது கொஞ்சம் மனதில் ஏதோ போல இல்லை?
இந்த முறை கூட எங்களை சுற்றி அவதானித்துப் பாருங்கள்..

முன்பைப் போல செயல்களால் ஏமாற்றும் practical jokes இம்முறை பெரிதாக எம்மைச் சுற்றி நிகழவில்லை; சின்னச் சின்ன வாய் வழிப் பொய்களால் ஏமாற்றிக் குதூகலிக்கும் அந்த சிறுபிள்ளைத்தனம் இல்லை.
இதற்கான காரணங்கள் என்ன?

ஒன்றில் நாம் (எமது ஒட்டுமொத்த சமூகமே) முதிர்ச்சியடைந்துவிட்டது அல்லது நகைச்சுவையுணர்வை நாம் இழந்துவருகிறோம்.. அல்லது இதற்கான நேரம் இல்லை எனும் அளவுக்கு எங்கள் வாழ்க்கை வேகமாக இருக்கிறது.

உலகின் அத்தனை சமூகங்களுக்குமே இந்த நகைச்சுவை உணர்வு முக்கியமானது. அதிலும் எம்மவர்கள் ஆதிகாலம் தொட்டு இந்த நகைச்சுவையுணர்வில் திளைத்திருக்கிறார்கள்.

இதனால் தான் ஆய்வுகள் மூலம் வெளிவந்துள்ள ஒரு விடயத்தை இங்கே கொஞ்சம் அழுத்தி சொல்லலாம் என்று இருக்கிறேன்..

முட்டாள்கள் தினம் மன அழுத்தத்திற்கு நல்லது... 

முட்டாள்கள் தினம் மன அழுத்தத்திற்கு நல்லதா? அது எப்படி? என்று வினவத் தோன்றுகிறதா? அதாவது, நாம் முட்டாள்கள் தினத்தைக் கொண்டாட வேண்டும். நகைச்சுவை என்பது நம்முடைய கலாசாரத்தில் முக்கிய பங்கை வகிக்கின்றது. காரணம், இதுவே மனிதர்களுக்கிடையேயான பரஸ்பரத்தை அதிகரிக்கவும் செய்கின்றது.

நகைச்சுவை உணர்வானது, எங்களுடைய பதற்றத்தைக் குறைத்து ஆற்றலை வளர்க்கக்கூடிய ஒரு அருமையான கலை. நகைச்சுவை என்பது மட்டும் இல்லாமல் போயிருந்தால் நமது சமுதாயம், வன்முறைகள் பலமடங்கில், அதிகரித்ததோர் சமுதாயமாக இருந்திருக்கும். காரணம், நகைச்சுவை உணர்வு, சமுதாயத்தோடு நாம் கொண்டுள்ள அழுத்தங்களை இலகுவாக்கும்.

சமுதாயத்தோடு மட்டுமல்ல, உங்கள் உடன்பிறப்புகளுடனும், குறும்புத்தனமாக இருப்பது கூட உங்களுக்கிடையிலான உறவை, பிணைப்பை மேம்படுத்தி வலுப்படுத்தும். நகைச்சுவை உணர்வென்பது, எம்மையும் உற்சாகமாக வைத்திருப்பதோடு, நம்மை சுற்றி இருப்பவர்களைக்கூட சந்தோஷமாகவே வைத்திருக்கும். ஏற்கனவே நம்முடன் உள்ள நபர்களை மேலும் நெருக்கமாக்குவதோடு, புதிய நண்பர்களையும் சேர்க்கும்.

நகைச்சுவை உணர்வால் ஏற்படக்கூடிய சிறு புன்னகை, மற்றவரை வரவேற்பதாகவும், மற்றவர்களுக்கு எம்மிடத்தில் ஒரு அங்கீகாரம் இருப்பதாக வெளிக்காட்டுவதுமாக அமையும், இந்தப் புன்னைகையால் ஏற்படக்கூடிய சந்தோஷமான உணர்வுகளை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. மற்றவருக்கு வழங்குவதற்கு மிக இலகுவான, இலவசமான விடயம் இந்த நகைச்சுவை தானே?

முட்டாள்கள் தினமன்று, ஒவ்வொருவரும் தங்களது நண்பர்கள், அலுவலகத்தின் சக ஊழியர்கள், பாடசாலையில் நண்பர்கள் என்று பலரையும் முட்டாளாக்குவது தான் சிறப்பு. இம்மாதிரியான கேலிகள், நக்கல் என்பன பரஸ்பரம் ஒரு நல்லுறவையும் அன்னியோன்னியத்தையும் ஏற்படுத்தும்; நம்முடைய வளர்ச்சியையும் உறுதிப் படுத்தும்.
ஆனாலும் இம்மாதிரியான நக்கல்களும் கேலிகளும், அதைப்பெரிதாக எடுத்துக் கொள்ளாத நபர்களிடம் காட்டுவது முக்கியமாகும். அளவு கடந்த, பொருத்தமில்லாத நகைச்சுவை உணர்வுகள், உறவுக்களுக்கிடையில் விரிசலை ஏற்படுத்தும்.


நகைச்சுவை உணர்வுகள், நக்கலுடன் நிற்பாட்டப்பட வேண்டுமே தவிர யாரையும் ஏமாற்றுவதாகவோ, புண்படுத்துவதாகவோ அமையக்கூடாது என்பதில் நாம் கவனமாக இருக்கவேண்டும் அதேவேளை, நாமும் ஏமாற்றப்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். ஆனாலும் இந்த விடயத்தில் சிறுபிள்ளைகள் இலகுவில் ஏமாந்துவிடுவார்கள். காரணம், பெரியவர்கள் சொல்வதெல்லாம் உண்மை என நம்பிவிடுவார்கள்.
நகைச்சுவை உணர்வுக்காக மற்றவர்கள் சொல்லும் சிறு சிறு பொய்களை இலகுவில் நம்பிவிடாது, பகுத்தறியும் திறன் நமக்கு வேண்டும் என்பது தான் இங்கு மிக முக்கியமானது.

முட்டாள்கள் தினத்தில், நாம் வலிந்து ஏற்படுத்தும் நகைச்சுவை உணர்வு கூட நமது ஆன்மாவிற்கு நன்மையானதாகவே அமைகின்றது. சிறுபிள்ளைகள் போல சிரித்தும், மற்றவர்களை ஏமாற்றியும் நாம் விளையாடும் போது, நமது கவலைகள், கஷ்டங்களை ஒருநாளேனும் மறந்து நாம் சிறுபிள்ளைகளாக மாறி விடுவதே இதற்குக் காரணமாகும்.



நீங்கள் பண்ணுவது குறும்பா அல்லது கொடுமையா?
இது கட்டாயமாக நாங்கள் எமக்குள்ளே எழுப்பிக்கொள்ளவேண்டிய ஒரு கேள்வியாகும்.

சிலசமயங்களில் நம்முடைய குறும்புத்தனம் எல்லை மீறுவதால் அது அபாயமானதாக மாறிவிடுகின்றது.
சமுதாயத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய குறும்புத்தனங்கள் மட்டுபடுத்தப்பட வேண்டும் / வரம்பிற்குட்டபட்டதாய் அமையவேண்டும். அல்லது இம்மாதிரியான எல்லை மீறிய குறும்புத்தனங்களால் நகைச்சுவை உணர்வு கூட வெறுக்கப்பட்டு விடும். சில சந்தர்ப்பங்களில், நாம் செய்யும் குறும்புத்தனம் கொடுமைப்படுத்துவதை போன்று அமைந்து விடக்கூடும். ஆகவே, கொடுமைப்படுத்துவற்கும், குறும்புத்தனத்திற்கும் இடையுள்ள மெல்லிய கோட்டினை அறிந்தே குறும்புத்தனங்களை நாம் செய்யவேண்டும். இருந்தாலுமே இந்த மயிரிழை போன்ற கோட்டினைக் கண்டுபிடித்து நடப்பதே சாமர்த்தியமாக இருந்தாலும், சமூகத்தில் பலபேருக்கு அது கடினமானதாக அமைந்து விடுகின்றது.


சில சமயங்களில் குழுவினருடன் சேர்ந்து செய்யப்படும்  குறும்புத்தனங்களும் எல்லையுடன் இருக்கவேண்டும்.

ஒவ்வொரு விடயங்களும் தனித்துவம் வாய்ந்தாகக் கருதுவதன் மூலம்  இந்த பிரச்சினையைத் தவிர்க்க முடியும். ஆனாலும், குறிப்பிட்ட குறும்புத்தனத்தை ஒருவர் செய்ததுடன் ஒப்பிட்டுப்பார்ப்பது சரியானது. ஆனாலுமே, சமுதாயம் என்ற வகையில் இவ்வாறான தனித்துவமான நோக்கு அவ்வளவு தூரம் சாத்தியமாகாது. அப்படியாயின் சமூகத்தின் மீதான எல்லாருக்கும் பொருந்தும் விதிகளை எவ்வாறு கண்டறிவது? இதற்கான இலகுவான வழிமுறை, முட்டாள்கள் தினத்தன்று கண்டறியப்பட முடியும்.

முட்டாள்கள் தினம் ஒரு தவறான அல்லது கண்டுகொள்ளப்படாமல் விடக்கூடிய நாளல்ல. நகைச்சுவை / குறும்புகள் இல்லாத உலகமே இருக்காது. இருந்தாலுமே இவ்வாறான தினங்களில் மட்டும் அதிகளவான நகைச்சுவை உணர்வுகளோடு இருந்தால் கூட உலகம் ஓரளவு நல்லதாக இருக்க முடியும். மாறாக, கட்டுப்பாடுகளை மக்களில் விதித்தாலும் மக்கள் இயல்பாகவும் சந்தோஷமாகவும் இருக்க முடியாது.


என்னதான், தனிப்பட்ட ஒவ்வொருத்தருக்கும் இருக்ககூடிய நகைச்சுவை உணர்வுகள் மறைந்து / இறந்து கிடந்தாலுமே, முட்டாள்கள் தினத்தின் சிறப்பு / முக்கியத்துவம், இன்னமும் நகைச்சுவைக்கதைகளினூடாகவும், இணைய வலைத்தளங்களினூடாகவும் வாழ்ந்துகொண்டே தான் இருக்கிறது.

இன்னும், விளம்பரதாரர்கள் நிறுவனங்கள் மூலமாகக் கூட இந்த முட்டாள்கள் தினம் இன்னமும் உயிர் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.  இந்த முட்டாள்கள் தினம், மேற்பட்டவாறான நிறுவனங்களுக்கு பெரியதொரு இலாபத்தை உழைத்துத் தரும் ஓர் சந்தை வாய்ப்பாகக் கூடக் காணப்பவதுதான் காரணமாக இருக்கலாம். - Corporate pranking

முட்டாள்கள் தினத்தன்று பிரபலமான நகைச்சுவைகளை தங்களது நிறுவனங்கள் வலைத்தளங்களினூடாக வழங்குவதன் மூலம் மறைமுகமாக தங்களது நிறுவனம் மற்றும் வலைத்தளங்களையும் இலவசமாக பிரபலமடையச் செய்கின்றனர்.

எல்லாத் தினங்களுமே இப்போது வர்த்தக மயப்படுத்தப்பட்டு, வியாபாரம் மையப்பட்டு நிற்கும் காலத்தில் April Fool's day மட்டும் தப்பி விடுமா?

முட்டாள்களாகவே வாழ்வதைப் பெருமையாக நினைக்கும் ஒரு உலகில் வாழும் எங்கள் அனைவருக்குமே இந்த இடுகை வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொள்கிறது.

இந்த இடுகையுடன் ஆரம்பிக்கும் நான் மேலே சொல்லியுள்ள 'சிறப்பம்சம்' உங்கள் ஆசிகளுடனும், எனது ஆசையுடனும் தொடரும் என நம்புகிறேன். :)))



ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner