Showing posts with label கஞ்சிபாய். Show all posts
Showing posts with label கஞ்சிபாய். Show all posts

February 27, 2014

விராட் கோளியின் மணிக்கூடு


காலை சூரிய ராகங்களின் பிறகு சாப்பாட்டு அறையில் வீட்டிலிருந்து கொண்டு வந்த ரொட்டியைப் பிய்த்து போராடிக் கொண்டிருக்கும் நேரம், கஞ்சிபாயின் தொலைபேசி அழைப்பு..

நேற்றைய விருதுகள் - பரிந்துரைப்பு பற்றி ஏதாவது மேலதிக சந்தேகம் கேட்கப் போகிறாரோ என்று யோசித்துக்கொண்டே "ஹெலோ" சொன்னேன்...

"இண்டைக்கு சுஜாதா நினைவு தினம் தானே?" தெரிந்துகொண்டே மீண்டும் கேட்கும் அதே கஞ்சிபாய்த்தனம்.

"அதான் காலையிலேயே சொன்னேனே? ஏன்? சுஜாதா பற்றி ஏதாவது விசேஷமா விஷயம் இருக்கா?"

"சீச்சீ.. சும்மா தான்.. சாப்பிடுறீங்க போல?" 

"ம்ம்ம். பசிக் கொடுமை அய்யா. அப்புறம்?" வைக்கமாட்டாரா என்ற அங்கலாய்ப்புடனும் வாயில் மென்று கொண்டிருக்கும் ரொட்டியுடனும் நான்.

"நேற்று இரவு award functionல இருந்தபடியா விராட் கோளிட அடி பார்த்திருக்க மாட்டீங்க என்ன?"

"இல்லை கொஞ்சம் கொஞ்சம் பார்த்தேன்... செம form. அணியைத் தனிய நிண்டு தாங்குறான் போல இருக்கு"



"தோனி fansக்கெல்லாம் நல்ல நோண்டி என்ன? இனி கோளி தான் தொடர்ந்து கப்டன். இந்தியா இனி உருப்படும். நீங்க என்ன சொல்றீங்க?" ஸ்ரீனிவாசன் இதைக் கேட்டால் என்ன சொல்வாரோ என்றெல்லாம் யோசிக்காமலேயே கஞ்சிபாய் அள்ளிக் கொட்டிக்கொண்டிருந்தார்.

விளக்கம் சொல்லி வேலையும் இல்லை, கஞ்சிபாய் விளங்கிக் கொள்ளும் 'கிரிக்கெட் ரசிகரும்' இல்லை என்பதை விட அகோரப் பசியுடன் வாயில் இருந்து வயிற்றுக்குள் அவசரமாக தாவிக்கொண்டிருந்த ரொட்டிகள் சொல்ல விடாமல்,

"ம்ம் பார்ப்போம் பார்ப்போம் அடுத்த போட்டிகளில்" என்று சொல்லி வைத்தேன்.

"அதுசரி, கோளியோட பாகிஸ்தான்காரங்கள் ரெண்டு பேரை ஒப்பிட்டு எதோ tweet பண்ணீங்களாம்" அதே கஞ்சிபாய்த்தனம்.

"ஓமோம்.. அனேக shots, aggression, அடித்தாடுற நேரம் உறுதி, timing  எல்லாம் ஒரே மாதிரி தான் எனக்குத் தெரியுது"

"ஆனா கோளிய நெருங்க முடியாது.அடுத்த சச்சின் கோளி தான்" உறுதியாக கஞ்சிபாய் என்னை இப்போதைக்கு பசியாற்ற விடமாட்டார் என்று தெரிஞ்சு போச்சு.

"அப்பிடியா?" கஞ்சிபாயின் பதில் நீ......ளமா வாறதுக்கு இடையில் இன்னும் ரெண்டு ரொட்டித் துண்டுகளை சம்பலில் தொட்டு வயித்துக்கு அனுப்பலாம் என்று இந்தக் கொக்கி.

"பின்ன? என்ன அடி.. அசுர அடி. அவர்ட்ட battingகு கிட்ட அவனும் இல்ல. அடுத்த Mr.Cricket. லோஷன், நேற்று match பார்த்திருந்தீங்கன்னா விளங்கி இருக்கும்"

"ம்ம்ம் பார்த்தேன் சில shots. பார்த்தவரைக்கும் நேற்று கோளிட Timing சூப்பர்" உண்மையாக நேற்று ரசித்த கோளி இன்னிங்க்ஸை பாராட்டினேன்.

"அட ஆமா... அதான் அவர் அடிக்கடி கையில் கட்டியிருந்த கடிகாரத்தைப் பார்த்து பார்த்தே batting செய்துகொண்டிருந்தார்"

தொண்டைக்குள்ளிருந்த ரொட்டி சளேர் என்று நேரே வயிற்றுக்குள் விழ, காதில் சரித்து வைத்திருந்த மொபைல் சரிந்து சம்பல் அப்பிக்கொண்டது.

---- 
கஞ்சிபாய் என்பதை வேறு யாராவதாக பிரதியீடு செய்துகொண்டால் பதிவர் பொறுப்பாளியல்ல.
உருவகக் கதையாக இதை நினைத்தாலும் பதிவர் பொறுப்பெடுக்க மாட்டார்.
மனைவி சம்பலுக்கு சேர்த்த உப்பு, ரொட்டிக்கு சேர்த்த தேங்காய்ச் சொட்டு போல உண்மை சம்பவத்தில் கொஞ்சம் மேலதிக சுவை சேர்க்கப்பட்டது.


July 08, 2011

டொன்ட்ட டொன்ட்ட டொன்ட்ட டொய்ங்


கஞ்சிபாயிடம் இருநூறு ரூபாய் இருக்கிறது.
ஆனால் அவருக்கு நான்கு நண்பர்கள். ரொம்பவே நல்லவரான கஞ்சிபாய் அந்த நாலு பேருக்குமே ஆளுக்கு நூறு ரூபா வீதம் அதைப் பகிர்ந்து கொடுத்ததாக எனக்கு சொன்னார்.

இருந்த இருநூறு ரூபாயை எப்படி ஆளுக்கு நூறு ரூபாயாக நான்கு பேருக்குக் கொடுக்க முடியும்?
அது எப்படி சரியாகும் என்று நம்ம கஞ்சிபாயிடம் கேட்டேன்..
கஞ்சிபாய் சொன்னது " நாலு பேருக்கு நல்லது செஞ்சா எதுவுமே தப்பில்லை லோஷன்"
டொன்ட்ட டொன்ட்ட டொன்ட்ட டொய்ங் டொன்ட்ட டொய்ங்...

கமல் மாதிரி நான் ஓவென்று வாயைத் திறந்து அழ ஆரம்பித்தேன்..
------------------------

கஞ்சிபாயும் சிங்கப்பூர் சீலனும் சேர்ந்து அப்பாவி லோஷனின் ஆயிரம் ரூபாவை ஆட்டையைப் போட்டுட்டாங்க.

சிங்கப்பூர் சீலன் கஞ்சிபாயிடம் சொன்னார் "இதை நாங்க ரெண்டு பெரும் பிப்டி பிப்டியா எடுத்துக் கொள்ளுவம்"
கஞ்சிபாய் சந்தேகமாகக் கேட்டார் "சரி பிப்டி பிப்டி போனா மிச்ச தொள்ளாயிரம் ரூபா?"

-----------------------------------


கஞ்சிபாயும் மனைவியும் ஒருநாள் வீதியில் நடந்து போய்க்கொண்டிருந்தார்கள்..ஒரு மூலையில் ஒரு குடிகாரன்.. 

அவனைக்காட்டி.. 

கஞ்சிபாயின் மனைவிஎன்னங்க அதோ அங்க உக்காந்து தண்ணியடிக்கிறாரே அவர் என்னை பொண்ணு பார்க்க வந்தாருநான் அவரை கல்யாணம் பண்ணமாட்டேன்னசொல்லிட்டேன். பாருங்களேன் அதை நினைச்சே அவரு இத்தனை வருஷமா தண்ணியடிக்கிறாரு.


கஞ்சிபாய் அவன் கொடுத்து வச்சவன்... அந்த சந்தோஷத்தை இத்தனை வருஷமா கொண்டாடிக் கொண்டிருக்கானேன்னு தான் ஆச்சர்யமா இருக்கு.


-----------------------------
கஞ்சிபாய் எனக்கு சொன்ன ஒரு விஷயம் 

கணவன் மனைவிக்கு கார் கதவை திறந்து கொடுத்தால் அதற்கு மூன்றுகாரணங்களே இருக்க முடியும்.

1. புது மனைவியாக இருக்கும்
2. புது காராக இருக்கும்
3. அந்த பெண் மனைவியாக இருக்க முடியாது.



******

அண்மையில் விடியலில் போட்ட கஞ்சிபாய் மொக்கைகள்..
சிரிக்க முடிந்தால் சிரித்துக்கொள்ளுங்கள்.. 


June 27, 2011

ஆன்டி பேர் டார்லிங் ????


இன்று காலை விடியலில் சொன்ன ஜோக்ஸ்....
எங்கேயாவது  கேட்டிருந்தாலோ, வாசித்திருந்தாலோ கூடப் பரவாயில்லை..
மீண்டும் சிரித்தாலும் ஒன்றும் நஷ்டம் இல்லை...



1.உங்க தாத்தாவா?

நீண்ட காலத்துக்கு முன்பு...
கஞ்சிபாயின் வகுப்பு ஆசிரியர்... "உங்க பொது அறிவை சோதிக்க ஒரு கஷ்டமான கேள்வி...
ஆழமான கடல்.. நீந்தித் தான் போகவேண்டும்..
அந்தக் கடல் நடுவில ஒரு மாமரம் அதுல இருக்கிற ருசியான மாங்காயை எப்படி பறிப்பாய்?

கஞ்சி பாய் : பறவை போல மாறி பறந்து போய் பறிப்பேன்.

ஆசிரியர் : பறவை போல உன்னை உன் தாத்தாவா மாத்துவாரு?

கஞ்சி பாய் : அப்ப கடல் நடுவில மரம் உங்க தாத்தாவா வச்சாரு?

கஞ்சி பாய் என்னிடம் அடித்த பஞ்ச் -
ஒரு பாடம் சொல்லிக் கொடுக்கிற அவருக்கே இவ்வளவுன்னா............, 10 பாடம் படிக்கிற எனக்கு எவ்வளவு இருக்கும்......!


2. பத்து ரூபா 

கஞ்சிபாயின் மகன் : அப்பா, எனக்கு ஒரு பத்து ரூபா வேணும்..

கஞ்சி பாய் :எதுக்கு?

கஞ்சிபாயின் மகன் : சொக்லெட் வாங்கி சாப்பிட அப்பா..

கஞ்சி பாய் : இதப் பாரு மகனே.. நான் எல்லாம் அப்பாவின் காசி இப்பிடி அநியாயமாக்கினது இல்லை. அந்தக் காலத்திலேயே ஒவ்வொரு சதமா எண்ணி, எண்ணி சிக்கனமா செலவளிச்சென் தெரியுமா? அந்தக் காலத்திலேயே எனக்கு ஒவ்வொரு சதத்தின் அருமையும் தெரிஞ்சிருந்தது.. தெரியுமா?
(இப்படியே ஒரு அரை மணி நேரம் லெக்சர் அடித்து மகனின் காதால் ரத்தம் வர்றா மாதிரி செய்த பிறகு.....)

கஞ்சிபாயின் மகன் : சரிப்பா.. இவ்வளவு நீங்க சொல்ற நேரம் நான் அப்பிடிக் கேட்டது தப்புத் தான்.. எனக்கு ஒரு ஆயிரம் சதம் தாங்களேன் ;)



விடியலில் சொல்லாத, சொல்ல விரும்பாத ஆன்டி ஜோக் ;)

ஆன்டி பேர் டார்லிங் 



கஞ்சி பாயின் மகன் : அம்மா! எதிர் வீட்டு ஆன்டி பேர் என்னம்மா?

கஞ்சி பாயின் மனைவி : ஹன்சிகா டா...

கஞ்சி பாயின் மகன் : அப்பாவுக்கு இது கூட தெரிய மாட்டேங்குதும்மா. அந்த ஆன்டியை "டார்லிங்"னு கூப்புடுறார்....



October 13, 2010

ஒபாமா + அமெரிக்காவுக்கு எதிராக போர்



ஒரு நாள் காலை. வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் ஒபாமாவின் தனிப்பட்ட நேரடி தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வருகிறது.
எடுத்தால் 
"மிஸ்டர் ஒபாமா.. உமக்கு எதிராகவும் உம் நாட்டுக்கு எதிராகவும் போர் தொடுக்க முடிவெடுத்திருக்கிறேன்" என்று ஒரு குரல்.


கொஞ்சம் துணுக்குற்றுப் போன ஒபாமா சிரித்துக்கொண்டே "என்னது போரா?ஏன்? யாரது? எங்கிருந்து பேசுகிறீர்கள்?" என்று கேட்டார்.


"நான் இலங்கையின் கொழும்பிலிருந்து கஞ்சிபாய்.உங்க அமெரிக்கா எங்கள் மேதகு ஜனாதிபதியை ஒழுங்கா மரியாதையா கவனிக்குதில்லை.உங்கள் நாட்டில் இருந்து அடிக்கடி இறுக்கியும் உங்க கட்டுப்பாட்டில் இருக்கும் ஐ.நா வும் அடிக்கடி நம்ம ஜனாதிபதியை வம்புக்கு இழுக்குது. அதனால தான் போர்" என்றும் கம்பீரமாக குரல் வந்தது.


பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு "சரி உங்களிடம் இப்போது எத்தனை பேர் படையில் இருக்கிறார்கள்?" என்று கேட்டார் ஒபாமா.


"ம்ம்.. இப்போ நான், சிங்கப்பூர் சீலன்,லபக்கு தாஸ் இப்படி எல்லாமா ஒரு பத்துப் பேர் இருக்கிறோம்" என்றார் கஞ்சி பாய்.


"ம்ம் ஓகே.. ஆனால் மிஸ்டர் கஞ்சி.. என்னிடம் ஒரு பதினைந்து லட்சம் பேராவது படையில் இருக்கிறார்கள்... தெரியுமா?" என்று கெத்தாகக் கேட்டார் ஒபாமா.


"நாசமாப் போக.. ஓகே மிஸ்டர் ஒபாமா.. நான் கொஞ்ச நேரத்தில் யோசிச்சிட்டு மறுபடி எடுக்கிறேனே" என்று அவசரமாக தொலைபேசியைத் துண்டித்தார் கஞ்சி பாய்.


இதை நினைத்து நினைத்து சிரித்துக்கொண்டே இருந்தார் ஒபாமா..


பார்த்தால் மீண்டும் கொஞ்ச நேரத்தில் அழைப்பு..

எடுத்தால் மீண்டும் அதே கஞ்சி பாய்..
"மிஸ்டர் ஒபாமா.. நான் அதே கஞ்சிபாய்.உங்கள் மீது போர் தொடுக்கும் ஐடியாவில் மாற்றமில்லை.எங்கள் படைக்கு கொஞ்சம் வாகனங்களும் ஆயுதங்களும் எடுத்திட்டம்"


பலமாக சிரித்துக் கொண்டே"அப்படியா? என்னென்ன ஆயுதங்கள்?என்னென்ன வாகனங்கள்?" என்று கேட்டார் ஒபாமா.


"ம்ம்.. ஒரு ட்ராக்டர்,ரெண்டு லொறி,நாலஞ்சு கார்,வான் இருக்கு.. அப்ப்பிடியே கொஞ்சக் கத்தி,பொல்லுகள்,அலவாங்குகள்,கோடரிகள்,கட்டுத் துவக்குகள் அப்பிடி ஆயுதங்கள் சேர்த்திட்டம்" என்று நம்பிக்கையாக சொன்னார் கஞ்சி பாய்.


இவனையெல்லாம் என்ன செய்வது என்றே யோசித்துக் கொண்டு "ஐ சே கஞ்சி பாய்.. என்னிடம் உள்ள ஆயுதங்கள் உலகத்திலேயே வேறு யாரிடமும் இல்லை.மில்லியன் கணக்கான ஆயுதங்கள்,சகல விதமான நவீன ஆயுதங்களும் இருக்கு.. அணுகுண்டு உட்பட" என்று ஒபாமா சொன்னார்.


"ஆகா.. இப்பவே கண்ணைக் கட்டுதே" என்று முணுமுணுத்த கஞ்சிபாய் "ஓகே.. இது பற்றி எனது சகாக்களிடமும் கொஞ்சம் பேச இருக்கு. நான் மறுபடி எடுக்கிறேனே" என்று மீண்டும் தொலைபேசியைத் துண்டித்தார்.


எப்படி இப்படியான ஒருவனிடம் தான் மாட்டினேன் என்று புரியாமல் முடியில்லாத தன் தலையைப் பிய்த்துக் கொண்டார் ஒபாமா..


இப்படியே ஒரு நான்கைந்து தடவை கஞ்சிபாய் அழைப்பு எடுப்பதும் ஒபாமா தனது அமெரிக்கப் படைபலத்தைப் பற்றிப் பீற்றுவதுமாக அன்றைய நாள் கடந்துவிட்டது.


அடுத்த நாள் காலை..


மவனே இன்று மட்டும் தொலைபேசி எடு, நிச்சயமா அணுகுண்டு போட்டு அழித்து விடுகிறேன் என்னும் முடிவோடு இருந்தார் பராக் ஒபாமா.


முதல் நாளின் கடுப்பு அவரது தூக்கத்தையே போக்கடித்திருந்தது சிவந்து வீங்கிய கண்களில் தெரிந்தது.


தொலைபேசி கிணுகிணுத்தது..
எடுத்து காதில் வைக்கிறார் ஒபாமா.

"குட் மோர்னிங் மிஸ்டர் ஒபாமா.. நான் கஞ்சிபாய் ப்றோம் ஸ்ரீ லங்கா"

வந்திட்டான்யா வில்லன் என்று மனசில் கறுவிக் கொண்டே " ம்ம் தெரியுது சொல்லுங்க" என்று பல்லைக் கடித்துகொண்டார் ஒபாமா.


"மன்னிக்கணும்.. உங்கள் மீது போர் தொடுக்கும் ஐடியாவை தற்காலிகமாகப் பின் தள்ளிப் போட எண்ணியுள்ளேன்"
என்று கொஞ்சம் கவலையுடன் சொன்னார் கஞ்சிபாய்.


"ஆ? என்னது?" என்று கொஞ்சம் ஆச்சரியப்பட்ட ஒபாமா, "ஏன் திடீரென்று இப்படியொரு முடிவு?" என்று கேட்டார்.


"பயம் எல்லாம் இல்லை. ஆனால் நேற்று ஒரு யோசனை வந்தது. உங்க அமெரிக்காவை நாங்க போரில் வென்ற பிறகு, நாங்கள் சிறைப்பிடிக்கப் போகும் உங்க படைவீரர்கள் பத்து, பதினைந்து லட்சம் பேரையும் எங்கே சிறை அடைப்பது? அதான்.. அதுக்கேத்த ஏற்பாடு செய்யும்வரை போரை ஒத்திவைக்கிறேன்" என்று கஞ்சிபாய் சொல்லி முடிக்க,தொலை பேசி ஒரு பக்கம் விழ மயக்கம் போட்டு ஒபாமா சாய்ந்தார்.


CNN BREAKING NEWS - President Obama faints after attending to a phone call.


இன்று காலை விடியலில் சொன்ன கதை. :)


சிறு தகவல் - இன்று வெள்ளை மாளிகைக்கு அடிக்கல் நாட்டப்பட்டு 218 ஆண்டுகள் ஆகிறதாம்.

May 06, 2010

ஐந்தாம் வகுப்பும் அமெரிக்காவும்



இது நேற்று இரவு கஞ்சிபாய் எனக்கு தொலைபேசியில் சொன்ன கதை..
நாட்டு நடப்புடன் சம்பந்தப்பட்டது என்றார்..


சரி எனக்குத் தான் புரியல.. உங்களுக்காவது புரியுதா என்று பார்த்து எனக்கு சொல்லுங்களேன்..




ஒரு கிராமத்துப் பாடசாலை ஆசிரியர்.. அவரது பாடசாலையில் பல தரப்பட்ட மாணவர்கள். வருங்காலப் பட்டதாரிகள் முதல்,மாடு மேய்க்கத் தான் தகுதி எனப்படும் மக்குகள் வரை பல தரம்..


ஒரு நாள் ஆசிரியருக்கு நகர்ப்புற உயர் பாடசாலை ஒன்றில் மாற்றல் வாய்ப்புக் கிடைத்தது..
அவர் மாற்றலாகி செல்லும் போது தன்னுடன் சில மாணவர்களையும் அழைத்து சென்று அவர்களுக்கான கல்வி வாய்ப்புக்களை அதிகரிக்கலாம் என்று நினைத்தார்.


கெட்டிக்கார மாணவர்கள் சிலரைத் தேர்ந்தெடுத்த அவர், இவர்களுடன் மூன்றாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த கொஞ்சம் துறு துறு துடிப்பான பையனையும் கூட்டிக் கொண்டு போனார்.


பையன் கொஞ்சம் துடிப்பாக இருந்ததால் வகுப்பு உயர்வு (promotion) கொடுத்து ஐந்தாம் வகுப்பில் அவனை சேர்த்து விட்டார்.


நகர்ப்புற நல்ல பாடசாலையில் மற்ற மாணவர்களும் அந்த ஆசிரியரும் வசதிகளுடன் தங்கள் தகுதி,திறமையையும் பெருக்கிக் கொள்ள இவனோ ஐந்தாம் வகுப்பிலும் மூன்றாம் வகுப்பு மாணவன் போலவே நடந்துகொண்டான்;குழப்படி வேறு; மற்றவர்களுக்கும் பல தொல்லைகள்.. இன்னும் நிறையப் பிரச்சினைகள்&விவகாரங்கள் இவனால்..


பல தடவை சொல்லிப் பார்த்தும்,அறிவுரை கூறியும்,எச்சரித்தும் இந்த மாணவன் திருந்தாததால் ஒன்றும் இனி செய்ய முடியாத நிலையில் ஆசிரியர் அதிபருடன் பேசி இவனைப் பாடசாலையிலிருந்து நீக்கி வெளியே அனுப்பி விட்டார்.


இனி என்ன செய்வது என்று யோசித்த மாணவன், மீண்டும் கிராமத்திலிருந்த பாடசாலைக்குப் போனான்.அங்குள்ள அதிபரிடம் கெஞ்சிக் கூத்தாடி மூன்றாம் வகுப்பாவது தருமாறு கேட்டு மீண்டும் மூன்றாம் வகுப்பிலிருந்து படிக்க ஆரம்பித்தான்.


யாராவது ஏன் அந்த நல்ல பாடசாலையிலிருந்து வந்தாய் எனக் கேட்டால் "பாடசாலையா அது.. ஒரு வசதி இல்லை..சிறை மாதிரி.. ஒழுங்காக கற்பிப்பதும் இல்லை..அந்த ஐந்தாம் வகுப்பை விட இங்கே மூன்றாம் வகுப்பே பெட்டர்"
என்று சொல்கிறானாம் அந்த மூன்றாம் வகுப்புக்காரன்.




கலி காலம் லோஷன்.. என்று பெருமூச்செறிந்தார் கஞ்சிபாய்..
எல்லாமே சுத்த சூனியமாக இருந்தாலும்.. ம்ம் சொல்லிவிட்டு தொலைபேசியை வைத்தேன்..


இன்று அலுவலகத்தில் இந்தக் கதையை சொன்னவுடன், ஹிஷாம்(முன்பு பதிவராக இருந்தவர் - மறுபடி எப்ப தொரே எழுதப் போறீங்க) இந்தக் கதையை தான் கற்றது கையளவு நிகழ்ச்சியில் இன்று சொல்லப் போவதாக உரிமையைப் பெற்றுக் கொண்டார்.. 


ஒரு நான்கு மணியளவில் இதை அமெரிக்காவில் நடந்த கதையாக சொல்வார் அல்லது சொல்லியிருப்பார்...

ஹிஷாம் சொல்வது போலவே கந்தசாமி அண்ணே கதையைத் தவற விடாதேங்கோ..



January 13, 2010

சிங்கக் கதை இரண்டும், சில கிசுகிசுக்களும்




ஆப்பிரிக்காவின் அடர்ந்த ஒரு காடு..
சோம்பலான ஒரு நாள் காலை விடிகிறது..
வெட்டியாக இருந்த காட்டு ராஜா சிங்கம், சோம்பல் முறித்துக் கொண்டு தன் குகையிலிருந்து வெளியே வந்தது..

தன்னை நினைத்தால் அதற்கு ஒரே பெருமை.. என்ன கம்பீரம்.. என்ன ஒரு அழகு.. கர்ஜனையின் அதிர்வு என்ன.. ஒவ்வொரு மிருகமும் தன்னைக் கண்டு அஞ்சி ஓடுவதும், தனக்கு அவை வழங்கும் மரியாதையும் என்ன..

என்றாலும் தனது மதிப்பு,தன் மீது மற்றவைகளுக்கு இருக்கும் ஆதரவு என்பவற்றை சுய பரிசோதனை/கணிப்பு செய்துகொள்ள விரும்பியது..

வழியில் அகப்பட்ட ஒரு அப்பாவி முயலைப் பார்த்து " ஏய் முயலே, இந்தக் காட்டிலேயே யார் பலசாலி?" அதட்டியது சிங்கம்..
நாடு நடுங்கிப் போன முயல் ஒரு நொடி கூடத் தாமதிக்காமல் "ஐயா மகாராசாவே.. நீங்கள் தான் .. இதில் சந்தேகம் எதுக்கு?" அன்று விட்டு ஒரே ஓட்டமாக ஓடிவிட்டது..

அடுத்து சிங்கத்திடம் அகப்பட்டது ஒரு நரி ..
சிங்கம் பாதிக் கேள்வி கேட்க முதலே "சிங்க மகாப் பிரபுவே, உங்களைவிட்டால் இங்கே பலசாலி வேறு யார் உள்ளார்கள்" என்று துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடி விட்டது...

இப்படியே கண்ணில் படுகிற ஒவ்வொரு மிருகமும் சிங்கமே பெரும் பலசாலி என்று ஒத்தூதி விட்டு ஓடிக் கொண்டிருந்தன..
பிடிபடாப் பெருமையுடன் நடந்து வந்த சிங்கத்தின் கண்ணில் ஆற்றோரமாக தன்பாட்டில் நீர் அருந்திக் கொண்டிருந்த யானை ஒன்று தென்பட்டது...

யானையின் பின்னாலிருந்து "ஏய் தடியா.. இந்தக் காட்டில் யார் பெரும் பலசாலி?" என தன வழமையான கேள்வியை எழுப்பியது சிங்கம்.

யானை அதைக் கேளாதது போல சிங்கத்தின் பக்கம் திரும்பாமலேயே தன் வேலையிலேயே கவனமாக இருந்தது யானை.

மீண்டும் கூப்பிட்டுப் பார்த்தது சிங்கம்.. ம்கூம். யானை திரும்புவதாயில்லை..

பொறுமை இழந்த சிங்கம் தன் முன்னங்காலால் யானையின் முதுகில் ஓங்கி ஒரு அடி அடித்தது..

கோபத்துடன் திரும்பிய யானை அப்படியே சிங்கத்தை தன் தும்பிக்கையால் நான்கைந்து தடவை விர் விர் என்று சுழற்றி எறிந்த எறியில் சிங்கம் பல காத தூரம் தாண்டிப் போய் விழுந்தது..
எழும்ப முடியாதவாறு பலமான அடியுடன், ஒன்றிரண்டு எலும்புகளும் நொறுங்கி முறிந்ததுடன் எழும்பிய சிங்கம், முக்கி முனகிக் கொண்டு தட்டுத் தடுமாறியவாறு யானைக்கு அருகில் சென்றது..

"அடேய் பாவிப் பயலே.. விடை தெரியலேன்னா தெரியல என்று சொல்லவேண்டியது தானே.. அதுக்கு என் இப்படி ஒரு படுபாதக வேலை செய்தாய்.. யப்பா.. ஏன்னா அடி.. அவ்வ்வ்வவ்வ்வ்வவ்வ்வ்"
என்று புலம்பிவிட்டு போனது.

இது தான் பலரும் அறிந்த ஒரிஜினல் கதை வடிவம்...
ஆனால் அண்மையில் என் நண்பன் கஞ்சிபாய் எனக்கு மின்னஞ்சலிய புதிய வடிவம்(version) இது..

முதல் ஏழு பந்திகளும் மாற்றமில்லை..
அதற்குப் பின் கதை மாறுகிறது..

சிங்கம் கேட்டு முடிக்க யானை மிகக் கூலாத் திரும்பியது..

"அட சிங்கமா? நீ இன்னும் போகல? என்ன கேட்டாய்? யார் இங்கே பலசாலியா?"

யானையின் இந்தக் கேள்வித் தொனியே ஒரு மாதிரியா இருக்க, சிங்கம் குழப்பத்தோடு ஆமாம் எனத் தலையாட்டியது..

"நேற்றுவரை நீ தான் பலசாலி என்று காடெல்லாம் பேச்சு இருந்தது.. இப்போ கொஞ்சம் நிலைமை மாறியிருப்பதாக பேச்சு அடிபடுகுது..கொஞ்ச நாளுக்குப் பிறகு வா.. சொல்றேன்" என்று சொன்ன யானை தன் வேலையைத் தொடர்ந்தது.

அண்மையில் விடியலில் சொன்ன கதை..

முக்கிய குறிப்புக்கள் -

சில கருத்துக் கணிப்புக்கள், பிரசாரங்கள்,அண்மைய நாட்டு நடப்புக்கள் எவற்றோடும் இதற்கு தொடர்பில்லை.

இந்தக் காடு ஆப்பிரிக்காவில் உள்ளதாகவே கஞ்சிபாய் சொன்னார்.


இதுவும் 'சிங்கம்' தானே.. ;)

கொசுறாக சில பதிவுலக கிசு கிசுக்கள்...

அலையடிக்கும் 'நீல' பதிவர் அண்மையில் இலங்கை வந்து சென்ற மயக்கும் பெயர் ஆரம்பிக்கும் இளம் பாடகி மீது மையலுற்று, முகப் புத்தகம் தொடக்கம் வலை, யூ டியூப் என்று சகல இடமும் அவர் பாடிய பாடல்கள் சேகரித்து வருகிறார்.

ஒரு வருடம் தாண்டிய கலாசாரக் காவலர் பதிவர் நாளை பொங்கல் ஸ்பெஷலாக புகைந்து போன அடுப்பிலே விறகு தள்ளும் அரிய முயற்சியில் இறங்கியுள்ளார்.(இது ஒரு பாரம்பரிய விளையாட்டாம்)
அத்துடன் தனது ஜிம் பாடியைப் பற்றி 'புஸ் புராணத்தில்' அவதூறு செய்யப் பட்டிருப்பதால் வெள்ளவத்தையிலுள்ள ஜிம் ஒன்றில் இரவு நேரங்களில் கடும் பயிற்சிகளிலும் இறங்கியுள்ளார்.

சொந்த செலவில் சூனியம் வைக்கும் சூப் பதிவர் மங்கள (மங்கலம் அல்ல) வழியில் எதிர்கால சுகபோகங்களை ஈட்டத் திட்டமிட்டுள்ளாராம்.இதனால் இனி சூப்பிலும் படங்கள் மாறலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

வேட்டைக்காரப் பதிவர் யாழ் பயணத்தின் இரண்டாம் நாளிலேயே வருங்கால வவுனியா வாழ்க்கையை விட யாழ் வாழ்க்கை கலர்புல் என்று கூறிவருகிறார். பார்த்தவரை பரவசம் என்கிறாராம்.. வவுனியா வடலி வாடினாலும் பரவாயில்லை என்கிறாராம்.மாமா வழி தானே மருமகன் வழியும்..

வலையில் குடியிருக்கும் நமீதாவின் தம்பி சிரிப்புப் பதிவர் Facebook, Twitter, Gtalk, Google wave என எல்லாவற்றிலும் புகுந்து விளையாடி அலுத்துப் போனதால் புதுசா யாராவது எதையாவது தொடங்க மாட்டார்களா எனப் பார்த்திருப்பதாகக் கேள்வி. இவர் log in ஆனாலே Twitter, Facebook உரிமையாளர்களும் கலங்கிப் போவதாக CNN செய்தி வெளியிட்டுள்ளது.

இரண்டெழுத்து நடிகரைத் தன் பெயரிலே கொண்ட மூன்றெழுத்து ஒலிபரப்பு பதிவர் அடிக்கடி அழகுப் பராமரிப்பு நிலையம் முன் காணப்படுகிறார். உயரமாவதற்கான உடற்பயிற்சிகளையும் நாடுகிறாராம்.. ராமசாமி அண்ணே.. உண்மை தானா??

சந்திரமுகி திரைப்பட வசனத்தால் அறியப்படும் சர்ச்சைக்குரிய பின்னூட்டப் பதிவர், தனது வழமையான கொடுமைப் பதிவுகளைக் குறைத்து, அண்மைக்காலமாக அரசியல் பதிவராகத் தன்னை இனம் காட்டி வருவது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இவர் அரசியலுக்கும் வந்துவிடுவாரோ என சிவாஜிலிங்கம், மேர்வின் சில்வா, விமல் வீரவன்ச போன்றோர் கிலி கொண்டுள்ளார்கள்.

கிசுகிசுக்கள் கண்டு என் மேல் நீங்கள் சிலர் பொங்குவதெல்லாம் இருக்கட்டும்..

எனது மனம் கனிந்த இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்....


December 18, 2009

வேட்டைக்காரனும் ஜனாதிபதி தேர்தலும்



நான் இப்போ தினமும் டயலொக் செல்பேசிகளில் காலை தலைப்பு செய்திகள் வாசிக்கிறதை அறிந்திருப்பீர்கள்.எத்தனை பேர் கேக்கிறீங்கன்னு தெரியாது.. ஆனால் நம்ம நண்பர் கஞ்சிபாய் மட்டும் தவறாமல் கேட்பதோடு ஒவ்வொரு செய்திக்குமே மறக்காமல் பின்னூட்டம் அனுப்புகிறார்.. (அங்கேயும் பின்னூட்டமா என்று ரூம் போடாதீங்க)

அவை எல்லாவற்றையும் தொகுத்து ஒரு பதிவாக..

இங்கே தரப்பட்ட செய்திகளுக்கோ, கஞ்சிபாய் சொல்லியுள்ள நச் & நக்கல் கொமெண்டுகளுக்கோ நான் எந்தவகையிலும் பொறுப்பாளி அல்ல (அப்பாடா)


செய்தி - சிவாஜிலிங்கம், சிறீக்காந்தா டெலோவிலிருந்து விலகல் - செய்தி

கஞ்சிபாய் - இப்ப தானா?


செய்தி - "இலங்கைத் தமிழர்களுக்கு நம்பகமான தலைவர் எவரும் இன்று இல்லை" - தினக்குரல் செய்தி ஆய்வு

கஞ்சிபாய் - இதையெல்லாம் ஆய்வு செய்தாத் தான் எங்களுக்கு தெரியுமாக்கும்..
அப்போ தமிழினத் தலைவர் என்று சொல்லி ஒருத்தர் தினமும் கவிதை எழுதுறாரே அவர்?




செ - 'மகிந்த சிந்தனை' என்பது ஒரு
கனவுப்புத்தகம் - ஜே.வி.பி

க - அவரோட இருந்து உங்கட கட்சிக்காரர்
தானே அந்தப் புத்தகத்தையே கனவு கண்டு கண்டு உருவாக்கி – பெயரும் வச்சு – போஸ்டர் ஒட்டினீங்க?


செ - இலங்கை ஜனாதிபதித் தேர்தலில்
இம்முறை 23 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்கள்.

க - இவங்க எல்லோரும் நிற்கிறார்களா, நிற்க
வைக்கப்பட்டாங்களா? 2 பேரைத் தவிர வேற யாருக்கும் கட்டுப்பணம் திரும்பாது போல.


செ - சிவாஜிலிங்கம் ஜனாதிபதித் தேர்தலில்
சுயேட்சையாகப் போட்டியிடுகிறார்.

க - பேர்லயே தெரியுதே...(சிவாஜி)
சிங்கம் போல சிங்கிளாயே போறீங்களா?



செ - யாழ்ப்பாணத்தில் ரணிலிடமிருந்து தமிழ்
மக்களுக்கு ஏராளமான வாக்குறுதிகள்

க - செலவில்லாமல் அள்ளிவீசுவதற்கு
அதுதானே ஏராளமா இருக்கு.
வாக்குறுதிகள் கொடுப்பது மட்டும்தான் இவர் வேலை – மக்கள் வாக்கு கொடுத்த பிறகு நிறைவேற்றுவது ஜெனரலோ, மகிந்தவோ தானே...


செ - தேர்தல் விஞ்ஞாபனங்கள் வந்த பிறகே,
தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து முடிவு – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

க - அதுக்குள்ளே 'எல்லா' விஷயமும் 'பேசி'
முடிச்சிடுவீங்களா?
ஆனா இன்னும் எத்தனை பேர் சுயேச்சையா நிண்டிருப்பாங்களோ... நல்லகாலம் கட்டுப்பணம் கட்டுற காலம் முடிஞ்சுது.


செ - நெருக்கடியான காலத்தை நான் கடந்து விட்டேன் -வேட்பாளர் மஹிந்த தெரிவிப்பு

- ஆகா.. அப்பிடியா? இதுவும் வழமையான அறிக்கைகள் மாதிரியா?
அதுசரி ஐய்யா நீங்கள் கடைசியா நடிச்ச சிங்களப் படம் எது?


செ - பயங்கரவாதத்தை வென்றவன் ஜனநாயகத்தையும் வெல்வேன் -வேட்பாளர் பொன்சேகா தெரிவிப்பு

- அதே வழிமுறைகளைப் பயன்படுத்தியா? ஆகா கண்ணை மட்டுமில்லாமல் எல்லாத்தையும் கட்டுதே..

செ - தேர்தலின்போது அரச ஆளணிகள் பயன்படுத்தப்படக் கூடாது : ஆணையாளர் தெரிவிப்பு

- என்னைய்யா விவரம் இல்லாத ஆளா இருக்கீங்க. இதெல்லாம் இல்லாமல் என்ன தேர்தல்?எதுக்காக இப்ப வைக்கிறாங்க..


செ - பொன்சேகா காட்டிக்கொடுத்து
கூட்டுப்பொறுப்பிலிருந்து விலகிவிட்டார் – அமைச்சர் யாப்பா

- கூடச்சேர்ந்து செய்த கூடாத செயல்கள்
எல்லாத்தையும் கூட்டங்களில் சொல்லிவிடுவார் எண்டு தானே பயந்தீங்க? இப்ப தானே எல்லாம் வெளிவரத் தொடங்குது


செ - மூக்குடைபட்ட நிலையில் இத்தாலியப் பிரதமர் ஆஸ்பத்திரியில் அனுமதி;உதட்டிலும் காயம்

- மூக்குடைபடல் என்று சொல்வது இதைத் தானோ?
நம்ம நாட்டில் மட்டும் இப்பிடி எண்டால் எத்தனை பேரின் மூக்குகள் உடைஞ்சிருக்கும்..
குத்துறதுக்கு ஒரு பெரிய கியூவே நிண்டிருக்கும்..


செ - சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்க அர்ஜுண ரணதுங்க தீர்மானம்

- அடிக்கடி மாறி ரன் அவுட் ஆகிடாதேங்கோ..


செ - சிவசக்தி ஆனந்தனின் கூற்றுக்கு மறுப்புத் தெரிவித்து சிவாஜிலிங்கம் கடிதம்

- ஆகா நீங்களும் கடிதம் எழுதத் தொடங்கிட்டிங்களா?
கடிதம் எழுதிற சங்கரித் தாத்தாவைக் காணேல்லை என்று பார்த்தா இப்போ நீங்களா?


செ - வட, கிழக்கு மக்களுக்கு சுதந்திரம் மேல் மாகாண மீனவருக்கு மட்டும் தடையா? கேள்வி எழுப்புகிறார் ஜோன் அமரதுங்க

- ஐய்யா உங்களுக்கு யாரோ பிழையான தகவலைக் கொடுத்திட்டாங்கள்.. அப்பிடி எதுவுமே கிடைக்கலை ஐய்யா..


செ - பெரும்பாலான எமது கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது - அமைச்சர் டக்ளஸ்

- என்ன என்னவெண்டு விளக்கமா சொல்லுவீங்களோ? அப்ப நிபந்தனை எதுவுமே இல்லை என நீங்கள் சொன்னது????
ஓகோ.. நிபந்தனை வேறு கோரிக்கை வேறு தானே.. ;)


செ - தெலுங்கானாவை எதிர்ப்பவர்களை மிரட்ட ஆந்திராவில் புதிய கட்சி உதயம் - தினக்குரல் செய்தி

- ஆகாகா.. எப்பிடி எல்லாம் புதுசு புதுசா சிந்திக்கிறாங்கப்பா.. இது வேட்டைக்காறனைப் புறக்கணியுங்கள், புறக்கநிக்கிறவனைப் புறக்கணியுங்கள் மாதிரி ஒரு விளையாட்டா?
நடத்துங்கைய்யா.. நடத்துங்க..


செ - கொழும்பில் சவோய் திரையரங்கில்
வேட்டைக்காரன் திரையிடப்படவுள்ளது.

- பக்கத்தில உள்ள மெடி கிளினிக் 2
அம்பியூலன்ஸ் புதுசா வாங்கியிருக்காமே...
அதுக்கும் இதுக்கும் ஏதாவது தொடர்பிருக்குமோ?


செ - கொழும்பு பொது வைத்தியசாலையில் நூறு பேர் அவசர அனுமதி.. காரணம் வேட்டைக்காரன் படம் பார்த்தது - வந்தியத் தேவன் எனக்கு அனுப்பிய sms .

- என்னாது? வெறும் நூறு பேர் தானா?
ஓகோ மத்தவங்கள் எல்லாம் ஒன் தி ஸ்போட்டா?

அதுசரி அண்ணே, உங்க மூக்கையும் மூஞ்சியையும் பத்திரப்படுத்திக்கொங்க..


நாட்டு நடப்புக்களை இதைவிட தெளிவாக சொல்ல வேறு வழி தெரியல.. :)


September 18, 2009

ஆதிரையின் எலிக் குஞ்சும் ரெக்கோர்ட் டான்சும்


ஒரு பதிவுலக வாசகராக,பின்னர் பதிவராக, அண்மைக் காலத்தில் நண்பராக, தம்பி போல பழக்கமான ஆதிரைக்கு அண்மைக் காலத்தில் ஒரு பெரும் பிரச்சினை என்று அறிந்து மனம் மிக நொந்துபோனேன்..

எலியால் கிலி கொண்ட ஆதிரை..

வழமையாக எங்கள் இரவுநேர Gmail அரட்டையில் பல விஷயங்கள் அலசப்படுவது உங்களில் பெரும்பாலோனோர் அறிந்தவிஷயமே.. பிரபல,மூத்த பதிவரின் திருமணம் முதல் புல்லட்டின் காதல்கள்,வலையுலக மோதல்கள், கமலின் வழக்கு, நமீதா எடைக் குறைப்பு, நயனின் ஆடைக்கிழிசல் தொடக்கம் விளையாட்டு, அரசியல், பொருளாதாரம் என்று பல பயனுள்ள விஷயங்களும் இங்கே சாறு பிழியப்படுவதுண்டு..

ஒவ்வொருநாளும் சரியான நேரத்துக்கு வரும் ஆதிரை இரண்டு மூன்று நாள் மிஸ்ஸிங்.. என்னவென்று தேடிப் பார்த்தால் ஆளின் வீட்டில் எலிகளின் திருவிளையாடலால் மின்சாரம் துண்டிப்பாம்..

அடப்பாவமே என்று பார்த்தால், தொலைபேசியில் எடுத்து ஒரு அரைமணி நேரம் தங்கள் வீட்டு எலித் தொல்லைப் புராணமே பாடி அழுதுவிட்டார் ஆதிரை.. எனக்கும் வீட்டில் முன்பு எலித் தொல்லை இருந்ததால் அந்த துன்பம் நல்லாவே தெரிந்திருந்தது.

பார்க்க என் முன்னைய எலிப் பதிவு..

எலிகள் ஜோடியாக வீட்டிலே ரெக்கோர்ட் டான்ஸ் போடுமளவுக்கு நிலைமை மிக மோசம் என்று ஆதிரை சொன்னபோது, எனக்கு வீட்டில் இருந்ததை விட நிலைமை கட்டுக்கு மீறிப் போயிருப்பதை உணர்ந்துகொண்டேன்.

எலிக் குஞ்சுகளை பெற்றோரிடம் இருந்து தூர வீசியும், விட்டோம்மா பார் என்று மறுபடி வாரிசுகளை உருவாக்கி ஆதிரைக்கு சவால் விட்டுக் காட்டும் இனப்பெருக்கம் வேறு நடந்துகொண்டிருந்தது.

இதை விடக் கொடுமை இரண்டு நாள் ஆதிரை அலுவலகத்துக்கு லீவு.. ஆதிரை அணியும் டிறௌசர், சேர்ட் தொடக்கம் 'அத்தனை'யையும் கடித்து துவம்சம் செய்திருந்தன ஆதிரை வீட்டு எலிகள்..
(உடுத்திருந்த காரணத்தால் ஆதிரையின் சாரம் தப்பிக் கொண்டது என்று ஆறுதல் பட்டுக் கொண்டார் அவரின் உற்ற நண்பர் புல்லட்)

ஒவ்வொரு நாளும் லேட்டஸ்ட் ரஹ்மான்,யுவனின் பாடல்களுக்கு எலிகள் ஆடும் ரெக்கோர்ட் டான்சினால் நம்ம ஆதிரை தூக்கம் தொலைத்து நொந்து நூலாகி விட்டிருந்தார். உசிலை மணி கணக்கில் இருந்தவர் இரண்டே நாளில் லூஸ் மோகன் கணக்காக (சைசில்) மாறிவிட்டிருந்தார்..

இனியும் பார்த்திருந்தால் நட்புக்கே அர்த்தமில்லை என்று நினைத்தவனாக உதவட்டுமா என்று கேட்டால், வந்து காலிலே விழுந்துவிடுவார் போல.. "ப்ளீஸ் ஏதாவது செய்து என்னை எலியிடமிருந்து காப்பாற்றுங்கள்.. விசாப் பிள்ளையாரை விட்டிட்டு உங்களையே ஒவ்வொரு நாளும் கும்புடுறேன்" என்று தழு தழுக்க ஆரம்பித்தார்..

(என் உடல் அளவை வைத்து பிள்ளையாருடன் உள்குத்தாக ஒப்பிட்டாரோ தெரியல)

அடுத்த நாளே எனது அனைத்தும் அறிந்த அண்ணாமலை நண்பரான கஞ்சிபாயையும் அழைத்துக் கொண்டு ஆதிரை வீட்டுக்குப் போனேன்.

எல்லா தடயங்கள், சேத விபரங்களைப் பார்த்தவர், எலிக் குடும்பம் ஒன்று அல்ல, எலி சமுதாயமே அங்கே குடி பெயர்ந்திருப்பதை அறிந்துகொண்டார்..

"வாடகை எல்லாம் வாங்கிறீங்களோ?" கஞ்சிபாய் கேட்ட இந்தக் கேள்வி சீரியஸா கடியா என்று புரியவில்லை..

எலிப் பாஷாணம், மோர்டீன், தடியடிப் பிரயோகம்(எங்கள் வீட்டில் நாம் நடத்திய என் கவுண்டர் வழிமுறை இது தான்) என்று எதுவுமே பயனளிக்கவில்லை என்று அதிரை அழுததைக் கேட்ட கஞ்சிபாய், நீண்ட நேர சீரியஸ் சிந்தனைக்குப் பிறகு குரலை செருமிக் கொண்டு

"ஆதிரை, உங்கள் வீட்டில் நடக்கும் எலி அக்கிரமத்தை பார்த்தால் பாரம்பரிய எலி அழிப்பு முறை தான் சரிவரும் போல தெரியுது" என்றார்.

பாரம்பரிய முறையா? நானும் ஆதிரையும் கேள்வியோடும் கஞ்சிபாயைப் பார்த்தோம்..

"பூனை ஒன்றை வளர்த்தால் எல்லாம் ஈசி.. " கஞ்சிபாய் பெரிய கண்டுபிடிப்பை வெளியிட்டார்.

"பூனை எண்டால் பால்,சாப்பாடு எண்டு செலவாகுமே.." ஆதிரை இழுத்தார்..

"உங்களை யார் பூனைக்கு சாப்பாடு போட சொன்னது? எலிக்கு கொஞ்ச சாப்பாடு வையுங்க.. இதனால எலிகள் உங்கள் வீட்டு பொருட்களை கடிக்காது.. பூனைக்கு பசிச்சா எலியைப் பிடிச்சு சாப்பிடட்டும்.. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.. எப்பூடி??"
கஞ்சி பாய் கேட்டு முடிக்கவும் ஆதிரை கொலைவெறியோடு என்னை நோக்கி கையில் கிடைத்த ஏதோ ஒரு பொருளோடு துரத்த ஆரம்பித்திருந்தார்..



பி.கு - இந்தக் கதை கொஞ்சமும் கற்பனையில்லை..

இப்போது ஆதிரை எலியால் கடிபட்ட ஓட்டை விழுந்த ஒரு டிரௌசரோடு, இரவுகளில் எலி ரெக்கோர்ட் டான்சால் காணாமல் போன தூக்கக் கலக்கக் கண்களோடு வேகமான,துடிப்பான,மலிவான பூனை தேடிக் கொண்டிருப்பதாக வெள்ளவத்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் பதிவு பற்றியும் தலைப்பு பற்றியும் ஆதிரை மற்றும் அவர்,நான் சார்ந்த நண்பர்களோடும் கலந்துபேசி சம்மதம் பெறப்பட்டுள்ளது.. ஏற்கெனவே எனது விடியல் நிகழ்ச்சியிலும் சுருக்கமாக நகைச்சுவையாக 'கடி'க்கப்பட்டது..

May 16, 2009

நரமாமிச உண்ணிகளிடம் மாட்டிக்கொண்டால்...




மூன்று நண்பர்கள் பயங்கரமான காட்டு வழியாகப் போய்க்கொண்டிருந்த நேரத்திலே நரமாமிசம் உண்போரிடம் - cannibals அகப்பட்டுக்கொண்டார்கள். அந்த மூன்று பேரில் ஒருவர் நம்ம ஹீரோ கஞ்சிபாய்.

மூன்று பேரையும் கம்பங்களில் கட்டிப்போட்டு விட்டு – நரமாமிசம் உண்போரின் தலைவன் சொன்னான். 'உங்களை அவித்துப் பொரித்து பலவிதமாக சாப்பிடப்போகிறோம். அதன் பின் உங்கள் தோல்களினால் படகு, பாய்மரப்படகு செய்து எங்கள் பயணங்களுக்குப் பயன் படுத்துவோம்.'

மூன்று பேருமே பாதி செத்துவிட்டார்கள். 

வெலவெலத்து நடுங்கிய அவர்களைப் பார்த்து நரமாமிச உண்ணிகளின் தலைவன் சொன்னான் 'எனினும் உங்களைப் பார்த்தால் பாவமாகவும் இருக்கிறது. உங்கள் மரணத்தின் முன் இறுதி ஆசையொன்றைச் சொல்லுங்கள். நிறைவேற்றி வைக்கிறேன்'

முதலாமவர் 'எனக்கு துடிதுடித்தெல்லாம் சாக முடியாது. நீங்கள் கொல்ல முதல் நானே இறந்து விடுகிறேன். தயவு செய்து எனக்கு விஷம் கொடுங்கள்' என்றார். 

கொடுக்கப்பட்டது.

அடுத்தவர் 'நான் இறந்தது பற்றி எனது வீட்டவருக்கு தகவல் சொல்லவேண்டும். தாளொன்றும் பேனாவும் கொடுங்கள்' என்று சென்டிமென்டானார்.

கொடுக்கப்பட்டது.

மூன்றாமவர் – நம்ம கஞ்சிபாய்...

'எனக்கு ஒரு முள்ளுக்கரண்டி – fork  கொடுங்கள்' என்றார். 

நரமாமிச உண்ணிகளுக்குப் புரியவில்லை.... முள்ளுக்கரண்டி எதற்கு? 
எனினும் கொடுத்தார்கள். 

அதை வாங்கிய கஞ்சிபாய் தன் உடலெங்கும் சரமாரியாகக் குத்த ஆரம்பித்தார். உடலெங்கும் காயம், துளைகள்... இரத்தம் ஓடுகிறது.

ஒரு இடம் மிச்சமில்லாமல் காயங்கள்.

நரமாமிச உண்ணிகள் பயந்து போய், அசந்து போய், திடுக்கிட்டுப் போய் நிற்கிறார்கள்...

தலைவன் உட்பட எல்லோரையும் ஒரு தடவை பார்த்தார்.

 ஒரு குரூரச் சிரிப்போடு கேட்டார் கஞ்சிபாய் 'ஏனடா என்னைச் சாப்பிட்ட பிறகு என் தோலில் படகு கட்டப் போறீங்களா? இப்ப என்ன செய்வீங்கடா? ஓட்டைப் படகிலே மூழ்கி நரகத்துக்குப் போங்கடா'

இது நேற்றைய காலை நிகழ்ச்சியில் சொன்ன நகைச்சுவை!

இதைக் கேட்ட எனது நண்பரொருவர் 'ஜோக்கிலேயும் நாட்டு நடப்பு சொல்லுறீங்க போல' என்று ளுஆளு அனுப்பிருந்தார். (மறுபடியும் SMSஆ... கிளம்பிட்டாங்கய்யா...)

அப்படியேதாவது இந்தக் கதைக்குள்ள 'பொடி' இருக்கா என்ன?

பி.கு - தொடர்ந்து ஒரே சீரியஸ் & IPL விஷயமே வருவதாக சில மடல்கள் வந்திருந்தன. அவர்களுக்காக(வும்)..



December 17, 2008

பேசும் நாய் விற்பனைக்கு..


ஒரு நாள் நம்ம கஞ்சிபாய், அமெரிக்காவில் அவர் இருந்த நகரத்தின் வீதி வழியாக போய்க்கொண்டிருந்த போது, ஒரு விளம்பரப் பலகையைக் கண்ணுற்றார். (கஞ்சிபாய் எப்போ,எப்படி, அமெரிக்கா என்றெல்லாம் யாரும் கேட்கப்படாது.. இது கௌதம் மேனன் திரைப்படக் கதை மாதிரி.. யாரு வேணாம்னாலும், எப்ப வேணாம்னாலும் அமெரிக்கா போகலாம்) 

அந்த விளம்பரப் பலகையில் இருந்த வாசகம் "பேசும் நாய் விற்பனைக்கு"

ஆச்சரியப்பட்டுப் போன நம்ம கஞ்சிபாய், அந்த விளம்பரப்பலகை காட்டிய வீட்டுக்குள் நுழைந்து பார்த்தார்.
யாருமே இல்லை. யாரும் இருப்பது போலவும் தென்படவில்லை.
வீட்டின் வெளிப்புறத்தில் ஒரு வயதான நாய்.. உழைத்துக் களைத்துபோய் இருக்கும் ஒரு நடுத்தர வயது மனிதன் போல சோர்ந்து படுத்துக் கிடந்தது அந்த நாய்..
பார்த்த உடனேயே நம்ம கஞ்சிப்பாயுக்கு விளங்கிவிட்டது, இது தான் அந்த பேசும் நாய் என்று..

மெல்ல தயங்கியபடி.. "நீ.. நீ.. நீங்க தானே.. " என்று நாயைப்பார்த்து பேச ஆரம்பித்தார்..
அதற்குள் இடை மரித்த் அந்த நாய்,"சந்தேகமே வேண்டாம்.. நானே அந்த விளம்பரத்துக்குரிய பேசும் நாய்.. " என்று அறிமுகப்படுத்திக் கொண்டே பேச ஆரம்பிக்கிறது.. 

அதிர்ந்து போனார் கஞ்சிபாய். என்னடா அதிசயம் என்று..

சுதாரித்துக் கொண்டே, "இவ்வளவு அதிசயமான நாயா இருக்கிறாயே, உன்னை ஏன் உன் எஜமான் விற்க பார்க்கிறான்" என்று கேட்டார் கஞ்சி.

"என்ன செய்ய, எனக்கு வயதேறி விட்டது என்று நினைக்கிறான் அவன்"என்று தனது கதையை சொல்ல ஆரம்பித்தது அந்த அதிசய நாய்.

"சின்ன வயதிலேயே எனது இந்த அதிசய ஆற்றல் பற்றி அறிந்துகொண்ட நான் இதன் மூலம் ஏன் தாய்நாடு அமெரிக்காவுக்கு சேவை செய்யவேண்டும் என நினைத்தேன்... இது பற்றி CIAக்கு தெரிவித்த உடனேயே எனது பணி ஆரம்பித்தது.. பல்வேறு உளவாளிகளோடும்,பல உலகத் தலைவர்கள் கூடும் இடங்களிலும் நானும் அழைத்து செல்லப்பட்டேன்.. யாரும் ஒரு நாய் கேட்கும்,பேசும் என்று நினைக்காததால், எனக்கு முன் பேசப்படும் எந்த ரகசியமும்,திட்டமும் என் மூலம் CIAக்கு கிடைத்து வந்தது. 

இப்படியே பரபரப்பாக ஒரு எட்டு வருடம் போனது.. அதுக்குப் பிறகு வாழ்க்கையில் நிம்மதியாக செட்டில் ஆக விரும்பிய நான் வெள்ளை மாளிகையில் ஒரு உள்ளக உளவாளியாக இணைந்துகொண்டேன்.. அப்படியே ஒரு நாலைந்து மனைவி , ஒரு பத்துப் பதினைந்து குட்டிகள் என்று சொல்லிப் போன வாழ்க்கையில் இப்போ ஓய்வாக இருக்கிறேன்" என்று தனது நீண்ட,அதிசய கதையை முடித்தது. 

அப்படியே அசந்து போன கஞ்சி பாய் இது கனவா நனவா என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே, உரிமையாளர் வந்து விட்டார்..

உடனடியாக எப்படியாவது இந்த நாயை வாங்க வேண்டும் என்று முடிவு செய்த கஞ்சிபாய், விலை பற்றி கேட்டார்.

சற்றும் யோசிக்காமல் உரிமையாளர் பத்து டொலர் எனவே, அதிர்ச்சியடைந்த கஞ்சிபாய் "என்னைய்யா புரியாத மனுஷனாய் இருக்கிறீர்?சாதாரண சொறி நாய் கூட பெரிய விலைக்குப் போகுமே, இந்த பேசுகின்ற அதிசய நாயை பத்து டாலருக்கு விற்கிராயே என்று பொங்கி வெடித்துவிட்டார் கஞ்சி பாய்..(பொழைக்கத் தெரியாத மனுஷன் !!!)

அதற்கு மிக அமைதியாக அந்த உரிமையாளர் சொன்னார் "இந்த நாய் ஒரு புளுகு மூட்டை.. இது சொல்வதெல்லாம் பொய்" 

##   இன்று காலை வெற்றியின் "விடியல்" நிகழ்ச்சியில் சொன்ன கதை.. 
    

December 13, 2008

சனிக்கிழமை - சாப்பாடு ஜோக்ஸ்

சனிக்கிழமை.. இன்று தான் நான் ஓரளவு நிம்மதியா வீட்டில் இருந்து மதியச் சாப்பாட்டை ருசி பார்த்து சுடச் சுட சாப்பிடுகிற நாள்.. ஞாயிற்றுக் கிழமைகளில் கூட என்னால் அது முடியாது..சரி நிம்மதியாக சாப்பிடும் நாளில் சாப்பாட்டு ஜோக்ஸ் இரண்டை அவிழ்த்து விடலாமே என்று யோசித்தேன்.. (வழமையாகவே ஒவ்வொரு நாளும் காலையில் ஜோக் என்று அறுவைகளை அவிழ்த்து விடுபவன் இங்கேயும் தொடங்கிட்டாம்பா என்று சில முணுமுணுப்புக்கள் கேட்டாலும் இன்று நான் சொல்லாமல் விடுவதாய் இல்லை..) 

       *******
நானும், நம்ம நண்பர் கஞ்சிபாயும் (இவர் யாரென்று அறியாதோருக்கு இவர் பற்றிய விரிவான அறிமுகம் வெகுவிரைவில் பிரம்மாண்டமாகக் காத்திருக்கிறது என்பதை இப்போதே தெரிவித்துக் கொள்கிறேன்) சாப்பிடுவதற்காக ஒரு உணவகத்துக்குப் போயிருந்தோம்..

ஒரு நாளும் போயிராத உணவகம்..உணவு சொல்லி வழமையாக எல்லா உணவகங்களிலும் நடப்பது போலவே நீண்டநேரக் காத்திருப்புக்குப் பின்னர் உணவு வந்தது..  (பசியோடு காத்திருந்தால் நிமிஷமும் வருஷமாகும்- வைரமுத்து மன்னிப்பாராக) அப்படியானதொரு கருமமான உணவை இதற்கு முன் நான் சாப்பிட்டதே இல்லை..

பசியோடு இருந்ததால் முடிந்த வரை விழுங்கியும்,விழுங்காமலும் கொட்டித் தீர்த்துவிட்டு எழுந்தோம்.. சபை (அல்லது கடை) நாகரிகம் கருதி உணவின் ருசி பற்றி எதுவும் சொல்லாமலே போக வேண்டும் என்று நான் எண்ணினாலும் நம்ம நண்பர் கஞ்சி பாய் விடுவதாக இல்லை. 

எதோ சொல்லப் போபவர் போலவே அவரது முகத் தோற்றம் உணர்த்திற்று. நான் கஞ்சி பாயிடம் மெல்லிய குரலில் "இனி மேலும் இங்கே நாங்கள் வரப்போவதில்லை.. பிறகேனைய்யா வீண் வம்பு? நீர் என்னைக் கூட்டிக் கொண்டு வந்த பாவத்துக்கு நானே பில்லைக் கட்டுறேன்.. சும்மா சண்டை பிடித்து சீன் ஆக்க வேண்டாம்"என்று சொல்லிப் பார்த்தேன்.. ம்கூம்.. மனிதர் கேட்பதை இல்லை.. 

நான் பில் கட்டும் வரை பார்த்துக் கொண்டிருந்து விட்டு, காசாளர்(அவரே தான் கடையின் முதலாளியும் கூட) கிட்டே போய் "உங்க உணவகத்தின் சமையல் மாஸ்டரைக் கொஞ்சம் பார்க்கணுமே" என்றார் நம்ம நண்பர். சரிடா இன்று எதோ நடக்கப் போகிறது என்று நானும் வருவது வரட்டும் என்று பார்த்துக் கொண்டிருந்தேன்..

ஆடி அசைந்து வந்த சமையல் மாஸ்டர் கிட்ட வரும்வரை பார்த்துக் கொண்டிருந்தார் நாம்ம கஞ்சிபாய். கடை முதலாளி,நான்,அங்கிருந்த ஒரு சிலர் (அந்த உணவகத்தின் திறத்துக்குப் பலபேரை எதிர்பார்க்க முடியுமா?) எல்லாரும் என்ன நடக்கப் போகுது,நம் நண்பர் என்ன சொல்லப் போகிறார் என்று பார்த்திட்டே இருக்கிறோம்..

கஞ்சிபாய் கிட்டப் போனார்.. சமையல் மாஸ்டரின் கைகளைப் பிடித்தார்.. 
"வாழ்த்துக்கள்.. நீங்கள் கொடுத்து வைத்தவர்.. உங்க சமையலின் திறத்துக்கு இவ்வளவு காலம் நீங்கள் இங்கே வேலை செய்யக் குடுத்து வச்சிருக்கணும் " என்று முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் சொல்லிட்டு நம்மை ஒரு பெருமிதத்தோடு பார்த்தார் கஞ்சிபாய்..  

வாழ்க்கையில் அந்த சமையல்காரர் இப்படி ஒரு வாழ்த்து வாங்கியிருப்பாரா தெரியல.. 
கஞ்சி பாயும் அதுக்குப் பிறகு எங்கேயும் எந்த ஒரு சாப்பாட்டுக் கடையைப் பற்றியும் புகழ்ந்து சொல்வதில்லை.. (அடுத்த முறை பில்லை தன்னையே கட்ட சொல்லி விடுவேனோ என்றோ தெரியல்ல) 

---------------------###################---------------------

  ஆனால் விதி யாரை விட்டது.. இன்னொரு முறை.. இதே மாதிரி ஒரு சம்பவம்.. 

அதே மாதிரி ஒரு சாப்பாட்டுக் கடை.. (உணவகம் என்று சொன்னாலே அந்த சொல்லுக்குக் கேவலம்) முன்பு சாப்பிட்டதை விட மோசமான உணவு.. வாயிலே வைக்க முடியாத ருசி;மூக்கையே மரணிக்க செய்கிற மாதிரி கெட்ட நாற்றம்..

எவ்வளவு தான் பசித்தாலும் இதை சாப்பிட முடியாது என்று நானும்,கஞ்சிபாயும் தீர்மானித்து விட்டோம்.. 
இம்முறை கஞ்சிபாய் விட்டாலும் நான் விடுவதாய் இல்லை என்று முடிவு பண்ணி, சமையல்காரரைக் கூப்பிட்டனுப்பினேன்..

வந்தார்.. எங்கள் நாக்கை சமாதி கட்டுகிற மாதிரி உணவு சமைத்த அவரை நாக்கை பிடுங்குகிற மாதிரி ஏதாவது கேட்கலாம்னு நான் வாய் திறக்க முதல் வழமை போலவே கஞ்சிபாய் முந்திக் கொண்டார்..

சமையல்காரர் வந்தவுடன் எழும்பிய கஞ்சிபாய்,சமையல்காரரின் கைகளை அப்படியே பற்றிப்பிடித்துக் குலுக்கி "என்ன அதிசயமைய்யா.. உங்களுக்கு அப்படியே என் மனைவியின் சமையல் பக்குவம் இருக்குது"என்று சொன்னார் பாருங்கள்.. 

கஞ்சிபாயின் மனைவி அங்கே இருந்திருந்தால் கஞ்சிபாய்க்கு மரணம்; அல்லது திருமதி.கஞ்சிபாய் தூக்கிலே தொங்கி இருப்பார்; அல்லது அவர் பற்றித் தெரிந்திருந்தால் சமையல்காரர் நாக்கைப் பிடுங்கிக்கொண்டு இறந்து போயிருப்பார்..

---------------------------------###################-----------------------

யாரோ சொன்னார்களாம் சாப்பாடும் சம்சாரமும் தலைவிதிப்படி என்று.. ;)
(நமக்கு இரண்டுமே நல்லாத்தான் கிடைக்குதுங்கோ.. - 
யாராவது போட்டுக் குடுத்து இரண்டையுமே இல்லாமப் பண்ணிடாதேங்கோ..;) )

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner