November 30, 2011

இலங்கை கிரிக்கெட் - வை திஸ் கொலைவெறி???

இன்றைய முன்னைய பதிவின் தொடர்ச்சி....


இலங்கை கிரிக்கெட் அணியைக் காய்ச்சி எடுக்கிறவர்கள் வாங்கோ....





நான் முன்பிருந்து பாகிஸ்தானிய அணியை ரசிக்காவிடினும் ஒரு சில வீரர்கள் காலாகாலமாக என் ரசிப்புக்குரியவர்களாக இருந்து வந்துள்ளார்கள். (நல்ல காலம் சூதாட்டக் கேசுகள் எவையும் அந்த லிஸ்ட்டில் இல்லை)

அண்மைய ரசனைகளில் மிஸ்பா உல் ஹக் முக்கியமானவர். அவரது நிதானமான அணுகுமுறைகள் மிகப் பிடித்தவை.

தலைவராக மிஸ்பா நியமனம் பெற்றவுடன் எமது வெற்றி FM இன் விளையாட்டு நிகழ்ச்சியில் இது பற்றி நம்பிக்கை தெரிவித்திருந்தேன்.
செய்து காட்டிவிட்டார்.

ஆனால் ஆப்பு இலங்கைக்கு.


(ஷஹிட் அப்ரிடி எப்போது மீண்டும் ஓய்வு பெறுவாரோ தெரியாது. அதனால் அவர் பற்றி எதுவும் வேண்டாம்)

தென் ஆபிரிக்காவிடம் இருந்த CHOKERS பட்டத்தை நான் Twitterஇல் இலங்கைக்கு பகிரங்கமாக வழங்கி இருந்தேன்.

டெஸ்ட் தொடரில் தோற்ற பிறகு ஒரு நாள் தொடரிலாவது போராடி வெல்வார்கள் என்று பார்த்தால், கையில் கிடைத்த வாய்ப்புக்களை எல்லாம் பாகிஸ்தானுக்கு பரிசளித்து பல்லிளித்து விட்டு வருகிறது இலங்கை அணி.
சுழல் பந்துவீச்சாளர்களை எல்லாம் பந்தாடிய இலங்கை அணி இன்று சுழலில் சிக்கி அல்லாடுவதும், வெற்றி பெறுவது எப்படி என்று தெரியாமல் திணறுவதும் பரிதாபமாக இருக்கிறது.

நான்காவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் வெல்லும் நிலையிலிருந்து வேண்டும் என்றே தோற்றது போல (ICC ஊழல் ஒழிப்புப் பிரிவிடம் -  ACSU, or the Anti-Corruption and Security Unit எதற்கும் முறையிடப் போகிறேன் விசாரிக்கும்படி) சொதப்பி தோற்றபிறகு இறுதி ஒருநாள் போட்டியையும் போட்டியையும் நான் பார்க்கவில்லை.

பார்ப்பானேன்; வராத இரத்த அழுத்தத்தையும் வரவேற்பானேன்.

டில்ஷான் தலைவராக இருக்கும் வரை உருப்படப் போவதில்லை.
ஆனால் அடுத்து யார்?

மத்தியூஸ்? முன்னைய கிரிக்கெட் பதிவை வாசியுங்கள்.. அவர் இன்னும் தயாரில்லை என்று நினைக்கிறேன்.

Facebookஇல் எம் வெற்றி FM வானொலிப் பக்கத்தில் நடத்திய ஒரு கருத்துக் கணிப்பில் ஆச்சரியப்படும் விதத்தில் குமார் சங்கக்காரவை அதிகமானோர் தெரிவு செய்துள்ளார்கள்.
இதற்கு சங்காவின் அண்மைய சூப்பர் போர்மும் லோர்ட்ஸ் உரையும் காரணமாக இருக்கலாம் என்று நம்புகிறேன்.

ஆனால் என்னைப் பொறுத்தவரை மஹேல ஜெயவர்த்தன சங்காவை விடவும் அருமையான தலைவர். ஆனாலும் வயது? மீண்டும் இலங்கை கிரிக்கெட் பின்னோக்கி செல்லும்.
இவர்களை விட டெஸ்ட் அணியில் வேறு யாரும் நிரந்தர இடம் இல்லாதவர்கள்...

பேசாமல் தேர்வாளர்கள் கொலைவெறித்தனமாக சிந்தித்து ஒரு பெரிய RISK எடுத்தால் தானுண்டு.
சமீபத்திய சர்வதேச கிரிக்கெட் உதாரணம் - மேற்கிந்தியத் தீவுகளின் டரன் சமி.

இன்னும் நாள் இருக்கு.. தென் ஆபிரிக்காவில் வாங்கிக் கட்டி நொண்டிக் கொண்டு வரவும்,  Sri Lanka Cricket புதிய நிர்வாகக் குழு தேர்வாகவும் சரியாக இருக்கும்.
பட்டுத் திருந்துவது தான் ஞானம்.


புதிய ஆஸ்திரேலியா, புதிய இந்தியா - சச்சின் 99 not out ?? + கலக்கும் அஷ்வின்


டெஸ்ட் போட்டிகள் வர வர மந்தமாகின்றன; ரசிகர்களுக்கு டெஸ்ட் போட்டிகள் வெறுத்து விட்டன; டெஸ்ட் போட்டிகளை நேரடியாப் பார்க்க வரும் ரசிகர்கள் மட்டுமல்ல, தொலைக்காட்சியிலும் பார்ப்பவர்கள் குறைந்துவிட்டார்கள் என்று சொல்பவர்களில் ஒருவரா நீங்கள்?

நடந்து முடிந்த ஆஸ்திரேலிய - தென் ஆபிரிக்க கிரிக்கெட் டெஸ்ட் தொடர் பார்த்தால் நீங்கள் உங்கள் மனதை மாற்றிக் கொண்டிருப்பீர்கள் உடனடியாக.
ஆனால் இரண்டே போட்டிகளுடன் முடிந்துபோனது தான் கவலை.

இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் எவை இல்லை?

சிரேஷ்ட வீரர்களின் இட இருப்புக்கான போராட்டம், அறிமுக வீரர்களின் அமர்க்களம், வேகப் பந்துவீச்சு மிரட்டல், துடுப்பாட்ட வீரர்களின் துணிச்சலான பதிலடி, தலைமைத்துவங்களுக்கான சவால்கள், மாறி மாறி அசைந்த வாய்ப்புக்கள் என்று ஒரு சுவையான முழு உணவை கொஞ்சமும் மிச்சம் வைக்காமல் சாப்பிட்ட உணர்வைத் தந்தது இந்த டெஸ்ட் தொடர்.

முதல் போட்டியில் 47க்கு படுமோசமாக சுருண்டு தோற்றுப் போன அணி, தனது மனவுறுதி எல்லாம் குலைந்து போகும் என்று பார்த்தால், அடுத்த போட்டியில் தமது முக்கியமான வேகப் பந்துவீச்சாளரும் இல்லாமல் (ரயன் ஹரிஸ்), முதல் போட்டியில் சிறப்பாக விளையாடிய வீரர் ஷோன் மார்ஷும் இல்லாமல் அறிமுக வீரர் + தள்ளாடும் அணியொன்றுடன் நம்பிக்கையாக மோதி வெற்றியீட்டியது டெஸ்ட் போட்டிகளுக்கே உரிய ஒரு சுவாரஸ்யம்.

பதினெட்டு வயதே ஆன பட் கமின்ஸ் அறிமுகப் போட்டியில் என்ன ஒரு அற்புதமான பக்குவத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

பந்துவீச்சில் அனுபவம் வாய்ந்தவர்களைப் பின் தள்ளி தனது அணிக்கு ஆதிக்கத்தைப் பெற்றுத் தந்ததாக இருக்கட்டும்; பின் வெற்றி இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி துடுப்பெடுத்தாடிய வேளையில் பக்குவமாக ஆடி வெற்றி இலக்கை நின்று அடைய உதவியதாகட்டும் கமின்ஸ் ஆஸ்திரேலியாவின் எதிர்காலம் தான்.

இதே போல தென் ஆபிரிக்க அணியின் கண்டுபிடிப்பாக அமைந்தவர் வேகப் பந்துவீச்சாளர் வேர்னன் பிலாண்டர். இவர் முன்பு சில வருடங்களுக்கு முன்னர் ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் சகலதுறை வீரராக அறிமுகமானபோது எனக்கு நீண்ட காலம் இவர் நிற்பார் எனத் தோன்றியது.. ஆனாலும் காணாமல் போய் இப்போது மீண்டும் புயலாக வந்துள்ளார்.

தென் ஆபிரிக்காவின் நீண்டகாலத் தேடலாக இருந்த மூன்றாவது வேகப் பந்துவீச்சாளராக பிலாண்டர் கிடைத்திருப்பது இலங்கைக்குத் தான் பெரிய இடியாக அடுத்து அமையப் போகிறது.

தென் ஆபிரிக்கத் தொடரை வெற்றி தோல்வியின்றி வெற்றிகரமாக முடித்துக் கொண்டதன் மூலம் மைக்கேல் கிளார்க் இதுவரை தொடர் ஒன்றையும் தோல்வி காணவில்லை என்று பெருமூச்சு விட்டுக் கொள்ளலாம்.
அடுத்து நியூ சீலாந்தும், இந்தியாவும் அதை விட அதிகமாக அச்சுறுத்தும் காயம் + உபாதைகளும் சைமன் கட்டிச்சின் குடைச்சலை விட மைக்கேல் கிளார்க்கை வதைக்கலாம்.

இதேவேளை இந்தத் தொடர் தான் இறுதி என்ற நிலையில் ஒரு மயிரிழையில் தொங்கிக்கொண்டிருந்த ரிக்கி பொன்டிங் , பிரட் ஹடின் ஆகியோரின் கிரிக்கெட் நாட்கள் இறுதி டெஸ்டின் வெற்றியும் அந்த வெற்றியில் இவர்களின் போராட்டமான பங்களிப்பினூடாகவும் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளன.

அந்த வெற்றியில் நின்று ஆடி வெற்றியைப் பெற்றுக்கொடுத்த மிட்செல் ஜோன்சனின் பந்துவீச்சு மீண்டும் தறி கேட்டு அலைகிறது. அணியை விட்டுத் தூக்குப்படு முன்னர் காயம் அவருக்கு கௌரவமான விலகலை வழங்கியுள்ளது எனலாம்.

ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு இது மாற்றங்களுக்கான காலம். முதலில் அணி, பின் தலைவர், அதன் பின் தேர்வாளர்கள்; இப்போது இறுதியாக புதிய பயிற்றுவிப்பாளரும் தேர்வாகியுள்ளார்.

தென் ஆபிரிக்க அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தர்.
தோற்றுக் கொண்டிருந்த தென் ஆபிரிக்காவை கிரேம் ஸ்மித்தோடு இணைந்து இளம் வீரர்களை தேடிஎடுத்துக் கட்டமைத்து உருவாக்கிய பெருமைக்குரியவர்.
இப்போது ஆஸ்திரேலியாவுடன் சேர்ந்து அதே போன்று ஒரு வரலாற்று மாற்றத்தை செய்யவேண்டியுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள அணிகளுக்கு தம் முன்னாள் வீரர்களைப் பயிற்றுவிப்பாளர்களாக ஏற்றுமதி செய்துகொண்டிருந்த காலம் மாறி வெளிநாட்டுப் பயிற்றுவிப்பாளர்களை நாடி நிற்கிறது பரிதாப ஆஸ்திரேலியா.
மிக்கி ஆர்தர் தான் ஆஸ்திரேலியாவில் பிறக்காத முதலாவது ஆஸ்திரேலிய கிரிக்கெட் பயிற்றுவிப்பாளராம்.

ஆனால் ஆர்தரின் தாத்தா ஆஸ்திரேலியாவில் பிறந்தவர் என்று பரம்பரை ஆராய்ச்சி செய்து (அட ஏழாம் அறிவு மேனியாவோ? ;))பெருமைப்படுகிறது கிரிக்கெட் ஆஸ்திரேலியா (Cricket Australia).

மிக்கி ஆர்தர் இந்தப் பயிற்றுவிப்பாளர் பதவிக்காக மேற்கு ஆஸ்திரேலிய அணியின் பயிற்றுவிப்பாளராக இருந்து அனுபவத்தைக் கற்றுள்ளார்.
நியூ சீலாந்துக்கு எதிராக நாளை ஆரம்பமாகவுள்ள தொடர் ஆர்தருக்கு (மைக்கேல் கிளார்க்குக்கும் தான்) முதலாவது சோதனை.

23 ஆண்டுகளுக்குப் பிறகு மிக அனுபவமற்ற ஒரு பந்துவீச்சு வரிசையுடன் களம் புகும் ஆஸ்திரேலிய அணியின் பீட்டர் சிடில் தான் அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர் -  25 டெஸ்ட் போட்டிகள். அடுத்தபடியாக நேதன் லயன் - 5 டெஸ்ட் போட்டிகள்.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னருடன் மொத்தமாக மூன்று அறிமுக வீரர்களுடன் நியூ சீலாந்தை பிரிஸ்பேனில் சந்திக்கப் போகிறது ஆஸ்திரேலியா.

டேவிட் வோர்னர் - இந்த இடது கை சேவாக்கை நான் மிக்க ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன். தனியே Twenty 20 Specialistஆக ஆஸ்திரேலிய தேர்வாளர்கள் முன்னர் இவரை ஒதுக்கி வைத்தாலும் படிப்படியான வாய்ப்புக்கள், பயிற்சிகள் மூலமாக டெஸ்ட் போட்டிகளுக்கான நல்ல முதலீடாக மாற்றியுள்ளார்கள்.

ஆஸ்திரேலியாவின் மற்றொரு மத்தியூ ஹெய்டனாக வரட்டும். வாழ்த்துக்கள்.
நாவு ஊறக் காத்திருப்பது நியூ ஸீலாந்து மட்டுமல்ல; மேற்கிந்தியத் தீவுகளை நார் நாராக உரித்துப் போட்டுள்ள இந்தியாவும் தான்.

-------------

சச்சின் அதிர்ஷ்டசாலி தான். மேற்கிந்தியத் தீவுகளின் பலமில்லாத பந்துவீச்சு, பழகிய மும்பாய் ஆடுகளம் என்று இலகுவான சந்தர்ப்பங்கள் தவறிப்போனாலும் இலகுவான ஆஸ்திரேலிய பந்துவீச்சு வரிசை காத்திருக்கிறது.

படையலை ஆஸ்திரேலியாவில் கடவுள் படைக்கப் போகிறார் போலும்.
(சச்சின் ரசிகர்கள் 'விக்கிரமாதித்தன்' எனக் கோபிக்க வேண்டாம்; மனதில் வந்ததை சொன்னேன்)
சச்சின் மீண்டும் ஒரு தடவை சதம் தவறவிட்டது பலருக்கு அல்வா :) 99 சதங்கள் பெற்ற அந்த சிங்கத்தால் இன்னொன்று பெறவா முடியாது? அவரை ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் அதிகளவில் அழுத்தத்துக்கு உள்ளாக்குகின்றார்கள் என்பது மட்டும் நிச்சயம்.
பாவம் சச்சின்.

அந்த மும்பாய் டெஸ்ட் போட்டி மற்றொரு மகத்தான, விறுவிறுப்பான போட்டி..
T20, ஒருநாள் போட்டிகளில் இப்படியான விறு விறுப்புக்களைப் பார்ப்பதை விட டெஸ்ட் போட்டிகளில் பந்துகளும், விக்கெட்டுக்களும், ஓட்டங்களும் இறுக்கமாகப் போட்டி போடும்போது அது ஒரு தனியான டென்ஷன் தான்..
இறுதிக் கட்டத்தில் டெஸ்ட் போட்டியொன்றில் பெறப்படக் கூடிய நான்கு விதமான முடிவுகளுமே பெறக் கூடிய வாய்ப்பு இருந்தது கூடுதல் சுவாரஸ்யம்.



மேற்கிந்தியத் தீவுகளை white wash செய்யமுடியவில்லை என்பதைத் தாண்டி கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கரின் நூறாவது சர்வதேச சதத்தை மீண்டும் ஒரு தடவை எதிர்பார்த்து ஏமாந்ததை எண்ணி எண்ணி இந்திய ரசிகர்கள் மனம் நொந்தாலும், நான்கு எதிர்கால முதலீடுகள் இந்தத் தொடர் மூலம் கிடைத்திருப்பதை எண்ணி நிச்சயம் பெருமைப்படவேண்டும்.


ரவிச்சந்திரன் அஷ்வின் - அணில் கும்ப்ளேக்குப் பிறகு, ஹர்பஜன் ஒரு சில தொடர்களைத் தனியாக வென்று கொடுத்த அந்தப் பொற்காலத்துக்குப் பிறகு இந்தியாவை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் ஒரு அற்புதமான சுழல் பந்துவீச்சாளர் கிடைத்துள்ளார்.

முரளிக்குப் பிறகு (கிரேம் ஸ்வான், சயீத் அஜ்மல் ஆகியோரும் முப்பதின் நடுப்பராயத்தில் இருப்பதால்) இன்னொரு மிக நம்பிக்கை தரும் off spin பந்துவீச்சாளர் என்று அஷ்வினை இப்போதே கருதுகிறேன்.
இந்த மாதம் அஷ்வின் "என்னடா வாழ்க்கை இது?" என்று ஜாலியாக சொல்லலாம்.

கொல்கத்தா டெஸ்ட்டுக்கு முதல் நாள் திருமணம், அறிமுகத் தொடரிலேயே இரு போட்டிகளில் போட்டியின் சிறப்பாட்டக்காரர் விருது, தொடர் நாயகன் விருது, கன்னி சதம், அதே போட்டியில் ஒன்பது விக்கெட்டுக்கள், அதே போட்டியில் வெற்றி பெறும் வாய்ப்பு அனுபவமின்மை+ பதட்டத்தினால் சறுக்கியது.

சச்சினின் சதத்துக்கு எல்லோரும் தவம் கிடந்த நேரம் அனாயசமாக சதம் அடித்து, 'கொலைவெறி' மோகத்தில் கிடந்த உலகத்தை சில மணித்தியாலங்களாவது தன் பெயரை உச்சரிக்க வைத்து புண்ணியம் தேடிக்கொண்டார் இந்தத் தமிழர்.

ஒரு real masala mixture.

பிரக்யான் ஓஜா (கவாஸ்கருக்கு மட்டும் ஓசா) - நீண்ட காலத்துக்குப் பிறகு மீண்டும் ஒரு இரட்டை சுழல் இணைப்பு உருவாகிறது. சில நேரம் அஷ்வின் ஆதிக்கம் ; சில நேரம் ஓஜா ஆதிக்கம் என்று கலக்கலாக இருக்கிறது.ஆனால் எல்லா ஆடுகளங்களிலும் இந்தியா இரண்டு சுழல் பந்துவீச்சாளர்களோடு விளையாடுவது நிச்சயம் இல்லை என்கையில் யாருக்கு அணியில் இடம் என்ற கேள்வி தான் சுவாரஸ்யமானது.

உமேஷ் யாதவ் - மணிக்கு 140 km வேகத்தில் பந்துவீசுகிறார். தேவையான கட்டுப்பாடு,நிதானம், விக்கெட்டுக்களை எடுக்கும் ஆற்றல் எல்லாம் இருக்கிறது.
இந்தியா கொஞ்ச நாளாகத் தேடிக் கொண்டிருந்த ஒரு 'வேகமான' பந்துவீச்சாளர். நேற்றைய ஒரு நாள் சர்வதேசப் போட்டியிலும் மிக வேகமாகவும் அதேவேளையில் சீராகவும் பந்துவீசி இருந்தார்.
முன்னைய ஆஸ்திரேலிய தொடர்களில் இர்பான் பதான், சஹீர் கான், அஜித் அகர்கார், இஷாந்த் ஷர்மா பிரகாசித்தது போல இம்முறை உமேஷ் யாதவின் முறையா என்று கேள்வி எழுகிறது.

விராட் கோஹ்லி - யுவராஜ், சுரேஷ் ரெய்னா போன்றோருக்கு தற்காலிக bye சொல்லிவிடலாம் டெஸ்ட் போட்டிகளில் இருந்து. எதிர்காலத்துக்கான டிராவிட் + சச்சின் கலந்ததொரு அற்புத கலவை கோஹ்லி. ஒரு நாள் போட்டிகளில் அணியில் நிரந்தர இடத்தைப் பிடித்த இந்த 'எதிர்கால இந்திய அணித் தலைவர்' டெஸ்ட் போட்டிகளில் தனக்கான இடத்தை நீண்ட காலம் தேடியும் இப்போது தான் கிடைத்துள்ளது.

மும்பாய் டெஸ்டின் இரட்டை அரைச் சதங்கள் கோஹ்லியின் பொறுமையையும் எதிர்காலத்தில் அவர் தர இருப்பவையையும் காட்டுகின்றன.


இன்னும் சில கிரிக்கெட் விஷயங்கள் இன்னும் சில மணிநேரத்தில்...
அண்மைக்காலத்தில் கிரிக்கெட்டில் வடிவேலு போல ஒரு பதினோரு பேர் திரியிறான்களே.. அங்கே வாங்கோ சேர்ந்து அவங்களைக் கும்மி எடுப்போம்...





November 20, 2011

நானும் சக்தியும்


பதின்மூன்று வருடங்களுக்கு முன்பு இதே மாதிரியான நவம்பர் 20 மாலை, சந்தோஷக் களைப்புடன் அன்று தான் அணிந்த புத்தம் புதிய இளம் பச்சை ஷேர்ட்டுடன், அதற்கு மட்சிங்காக என் முதல் கிடைத்த சம்பளத்தில் வாங்கிய டையையும் கழற்றாமல் 138ஆம் இலக்க பஸ்ஸில் வந்திறங்கி அப்போது நம் இருந்த வீட்டுக்கு வழியான மயூரா பிளேஸ் ஊடாக நடந்து வரும்போது மனதெல்லாம் ஒரு நிம்மதி, பெருமிதம்; அத்துடன் இன்னும் செல்லும் பாதை நீளமாக ஆனாலும் நல்லதாக இருக்கும் என்றொரு நம்பிக்கை.

வைரமுத்து சொன்னது போல "ஒரு காக்காய் கூட உன்னைக் கவனிக்காது; ஆனால் உலகமே உன்னைக் கவனிப்பதாக எண்ணிக்கொள்வே" என்ற வரிகள் அப்போது எனக்கும் பொருத்தம்.

ஆமாம் நான் ஐம்பது நாட்களாக வேலை செய்துகொண்டிருக்கும் வானொலி, ஐம்பது நாள் பரீட்சார்த்த ஒலிபரப்பு முடித்து உத்தியோகபூர்வமாக நிகழ்ச்சிகளுடன் சக்தி FM என்ற பெயருடன் மிக விமரிசையாக ஒலிபரப்பை ஆரம்பித்த நாள் அது 20-11-1998.

சக்தி FMக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 


அட... பதின்மூன்று ஆண்டுகள்.. எப்படி ஓடி முடிந்து விட்டன?
எத்தனை மாற்றங்கள்?
என் வாழ்க்கையிலும்.. இந்த வானொலியிலும்????

சக்தியில் ஆரம்பித்த என் வானொலிப் பயணம், சூரியனுக்குப் போய் அங்கே கழிந்த ஆறு ஆண்டுகளுக்குப் பின் வெற்றியில் வந்து நிற்கிறது.
DJ Special ஆக சக்தியில் நான் ஆரம்பித்த இந்த நெடும் பயணம், வானொலி தொலைக்காட்சி இரண்டினதும் பணிப்பாளராக என்னை உயர்த்தியிருக்கிறது.

சக்தி FM ஆரம்பிக்கக் காரணமாக அமைந்த எழில் அண்ணாவும் அங்கில்லை; பரீட்சார்த்த ஒலிபரப்புக் காலத்தில் அங்கே இருந்த யாருமே இப்போது அங்கே இல்லை.
ஒலிபரப்பு ஆரம்பித்த முதல் நாள் அங்கே இருந்த எந்தவொரு ஒலிபரப்பாளருமே இப்போது அங்கே இல்லை.(செய்தியாளர்கள் கூட)
வாழ்க்கை என்றால் இப்படித் தான்.

ஆனால் இன்றும் சக்தி FM வானொலிக்கு என்று ஒரு தனியான மதிப்பும், நிலைத்த தன்மையும் இருக்கிறது என்றல் நிச்சயம் அது மகிழ்ச்சிக்குரியதும் நானும் பெருமைப்படக் கூடியதும் தான்.

சக்தியின் முதல் மூன்று பிறந்தநாள் கொண்டாட்டங்களின்போதும் அங்கே இருந்தவன் என்ற பெருமை இன்று வரை மனதில் பசுமையாக உள்ளது.
சக்தி FM + சக்தி TV இனது முதலாவது பிறந்தநாள் கொண்டாடியபோது - 1999
(அப்போது இரண்டு பிறந்த நாட்களுமே ஒரே நாளில் - நவம்பர் 20)

அந்த அத்திவாரமும், சரியான வழிகாட்டலும், பயிற்சியும் தான் இன்றளவு வரை நேர்த்தியாக நான் நடக்கவும், இந்தளவு நான் முன்னேறவும், நான் பழக்கிய, பழக்கும், வழிநடத்தும் இளையவர்கள் சிறப்பாக மிளிரவும் காரணமாக உள்ளது என்பதை எப்போதுமே நன்றியுடன் நினைக்கிறேன்.

சக்தியின் என் ஆரம்பம் பற்றி சுருக்கமாக முன்னைய பதிவொன்றில் சொல்லி இருக்கின்றேன்.


10 ஆண்டுகள்... சாதனை? பகுதி 1


10 ஆண்டுகள்.. சாதனை - பகுதி 2



எழில் அண்ணா இல்லாமல் இந்தப் பயணம் சாத்தியமாக இராது.
இன்று வரை அவரது அன்பும் ஆசியும் இருப்பதை ஒரு வரமாகவே நினைக்கிறேன்.

வானொலிகளில் நாங்கள் ஒலிபரப்புக்காக வைத்துள்ள பதிவுப் புத்தகம் - Log Book என்பது மிக முக்கியமான ஒன்று.
சக்தி - பெயரில்லாமல் ஒரு புதிய பரீட்சார்த்த வானொலியாக ஆரம்பித்த முதல் நாளிலேயே எழில் அண்ணா இதை எங்களுக்குப் பழக்கப் படுத்தியிருந்தார்.

இன்றைய சக்தி வானொலி அறிவிப்பாளர்கள் பலருக்கே தெரியாத ஒரு விடயம் - சக்தியின் பரீட்சார்த்த ஒலிபரப்பு ஆரம்பித்தது 103.9 என்ற அலைவரிசையில்.. அதன் பின்னர் ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு முக்கோணக் கிரிக்கெட் தொடரின் (Carlton & United Series 1998) நேரலை வானொலி ஊடாக மும்மொழியிலும் ஒலிபரப்பானது.
அதன் பின்னர் தான் நிரந்தரமாக 105.1 என்ற அலைவரிசைக்கு மாற்றப்பட்டது.

சக்தியின் பரீட்சார்த்த ஒலிபரப்பின் Log Bookஇன் ஒரு சில முக்கிய பக்கங்களின் புகைப்படங்கள் இங்கே....

ஒக்டோபர் முதலாம் திகதி பரீட்சார்த்த ஒலிபரப்பை ஆரம்பித்தாலும், முழுமையாக ஒரு அணியை உருவாக்கவேண்டும் என்பதிலும், செய்வன திருந்தச் செய்து பூரணமான பின்னரே ஒலிபரப்பை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கவேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்த எழில் அண்ணா ஐம்பது நாட்கள் பரீட்சார்த்த ஒலிபரப்பில் எம்மை ஈடுபடுத்தினார்.

எழில்வேந்தன் அண்ணாவின் முத்து முத்தான கையெழுத்துக்களில் பரீட்சார்த்த ஒலிபரப்பின் முதல் தருணங்கள்..


ஒலிபரப்பை அவர் ஆரம்பித்து வைக்க, ரமணீதரன் அண்ணா (இவர் தொலைக்காட்சிப் பிரிவின் எல்லாமாக இருந்தவர்), ஜானகி ஆகியோர் இணைந்துகொண்டார்கள்.

சரியாக ஒரு மணிநேரத்தில் நான் இணைந்துகொண்டேன்.
என் எழுத்துக்களில் காலையில் பூக்கும் - காதலே நிம்மதி பாடல் முதல்..
எனினும் நானாக ஒலிபரப்பிய முதல் பாடல்
நீ காற்று நான் மரம் - நிலாவே வா

எனது முதலாவது அறிவிப்பு நேரடியாக வானொலியில் ஒலிபரப்பானது ஒரு பரவசமான உணர்வு .
"நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது 103.9 என்ற அலைவரிசையில் ஒரு புதிய தமிழ் வானொலியின் பரீட்சார்த்த ஒலிபரப்பு"

அப்போது சக்தி TVயில் செய்தி வாசிப்பில் ஈடுபட்டு வந்த சூரியப்பிரபா அக்கா (இப்போது திருமதி. சூரியப்பிரபா ஸ்ரீகஜன்), கனடாவில் இப்போது வானொலி பொறியியலாளராக இருக்கும் கௌரிஷங்கர் (ஷங்கர்) ஆகியோரும் அன்று பின் இணைந்து கொண்டார்கள்.

அன்றைய நாளின் ஒலிபரப்பு நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு நிறைவுக்கு வரும் நேரம் அறிவித்த வசனங்கள் என் எழுத்துக்களில் அந்த Log bookஇல்.



 நவம்பர் 20 என் வாழ்வில் மறக்க முடியாத நாள்.
இலங்கையின் இரண்டாவது இருபத்து நான்கு மணிநேர தமிழ் வானொலி சேவையின் பிறப்பு.
காலையில் எனது அறிவிப்புடன் பக்திப் பாடல்கள்...
முழு நாளும் ஏராளமான பரிசுகள் வழங்கல்; துடிப்பான ஒரு புதிய குழுவுடன் புதிய இலக்குகளோடு எமது பயணம் ஆரம்பித்தது.

அன்று முதல் இன்று வரை சக்தி FMஇல் மாறாதிருக்கும் சில விடயங்களை மீண்டும் மீட்டிப் பார்த்தபோது,
அழகான தமிழும் இணைந்த இலச்சினை (Logo), வணக்கம் தாயகம் என்ற காலை நிகழ்ச்சிப் பெயர், 105.1 FM.

இந்த வேளையில் சக்திக்கும் எனக்கும் இருக்கும் ஒரு அற்புதத் தொடர்பு - நான் சூரியனில் இருந்தவேளையில் நான் பயிற்சியளித்து, எனக்குக் கீழே பணியாற்றிய துடிப்பான தம்பி காண்டீபன் இப்போது சக்தியின் பணிப்பாளர். பெருமையும் மகிழ்ச்சியும்.

அவருக்கும் அவர் தம் குழுவினருக்கும் என் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

சக்தி என்ற பெயரை அறிமுகப்படுத்திய வேளையில் எழில் அண்ணா அறிமுகப்படுத்திய நிலையக் குறியிசைகளில் ஒன்று இன்னும் மனதிலே ஒலிப்பது...

புதிய சிந்தனை 
புதிய தகவல்கள்  
புதிய ஒலிநயம்
சக்தி FM

அதே போல அந்தக் காலகட்டத்தில் வந்திருந்த திரைப்படம் ஒன்றில் பாரதியின் பாடல் ஒன்றும் சக்தி என்றே SPBயின் குரலில் ஒலித்திருக்கும்..
அதை அடிக்கடி ஒலிபரப்புவதில் ஒரு பரவசம்..

துன்ப மிலாத நிலையே சக்தி,
தூக்க மிலாக்கண் விழிப்பே சக்தி;
அன்பு கனிந்த கனிவே சக்தி,
ஆண்மை நிறைந்த நிறைவே சக்தி;
இன்ப முதிர்ந்த முதிர்வே சக்தி,
எண்ணத் திருக்கும் எரியயே சக்தி,
முன்புநிற் கின்ற தொழிலே சக்தி,
முக்தி நிலையின் முடிவே சக்தி.





என் தொழிலுக்கும் வாழ்வுக்கும் சக்தி கொடுத்த சக்திக்கு என் இனிய வாழ்த்துக்கள்...

அந்த சக்தியின் சக்திகளுக்கும், சொந்தங்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்....



விட்டதெல்லாம் சேர்த்து - கிரிக்கெட்டெல்லாம் கோர்த்து


பத்து டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் நாடுகளும் மும்முரமாக டெஸ்ட் போட்டிகள் விளையாடி வந்த வேளையில் ஒரு கிரிக்கெட் பதிவு கூட என்னிடம் இருந்து இல்லையே என்று உங்களில் எத்தனை பேர் ஆச்சரியப்பட்டீர்களோ?

அது தான் வாழ்க்கை போலும்..
எழுதவேண்டும் என்று யோசிப்பேன் ஆனால் ஏதாவது ஒரு வேலை.. அல்லது அலுப்பு..
மற்றும் அதிகரித்த கிரிக்கெட்..

இந்த இரு மாத காலங்களில் கிரிக்கெட் உலகை அவதானித்தால் சில முக்கிய விடயங்கள் புலப்படும்....

இந்திய, இங்கிலாந்து அணிகளின் சொந்த மண் ஆதிக்கம்..
பாகிஸ்தான் மிஸ்பாவின் தலைமையில் மீண்டும் ஒரு உறுதியான அணியாக எழுந்து வருவது..
இலங்கை அணியின் தொடர் சரிவு
மேற்கிந்தியத் தீவுகள் அணி தன்னைக் குறைந்தபட்சம் ஒரு சராசரி அணியாகவாவது மாற்றிக்கொள்ளப் போராடி வருவது
சிம்பாப்வே அணியின் டெஸ்ட் மீள்வருகையும் அவர்களின் அணித் தலைவர் பிரெண்டன் டெய்லர் தனியொரு போராளியாக நிற்பதும்
ரொஸ் டெய்லரின் தலைமையில் நியூ சீலாந்து புதியவர்களையும் இணைத்து ஒரு பலமான அணியாக மாற முயற்சிப்பது
தென் ஆபிரிக்கா தா விட்ட இடத்தை மீண்டும் கைப்பற்ற எடுக்கும் புதிய தலைமைத்துவ வியூகங்கள்
ஆஸ்திரேலிய அணியின் சரிவும் அதை மீட்க எடுக்கப்படும் முயற்சிகளும், மூத்த veerargalin மீதான அழுத்தமும்


இந்தியா இங்கிலாந்துக்கு சென்று ஒரு போட்டியையும் வெல்ல முடியாமல் படு தோல்வியுடன் நாடு திரும்பிய வேளையில் எல்லோரிடமும் இருந்த ஒரு எண்ணம் - இந்தியா வழமை போல வெளிநாட்டு மண்ணில் ஸ்விங்கும், எகிறும் பந்துகளுக்கு தடுமாறுகிறது.. அது தெரிந்ததே..
ஆனால் இங்கிலாந்து உலகின் மிகப் பலமான டெஸ்ட் அணியாகிவிட்டது & பலம் வாய்ந்த ஒருநாள் அணியாகவும் மாறிவருகிறது.

ஆனால் இங்கிலாந்து இந்தியா வந்த வேளையில் இரு பக்கமும் காயங்கள் காரணமாக நட்சத்திரங்கள் இல்லாத நிலையில் இந்தியா இங்கிலாந்தைத் துவைத்துத் தொங்கப்போட்டு மீண்டும் கிரிக்கெட் உலகைக் குழப்பி விட்டது.
இந்தியாவிடம் உள்ள புதிய கிரிக்கெட் வளமும், அனுபவம் வாய்ந்த துடுப்பாட்ட வீரர்ககளை இப்போதைக்கு ஓய்வு பெறச் சொல்லத் தேவையில்லை என்பதையும் மட்டுமன்றி, உள்நாட்டில் இந்தியாவில் அசைத்துப் பார்க்க (டெஸ்ட் போட்டிகளிலுமா என்பதை அடுத்த தொடர் தான் சொல்லவேண்டும்) இன்னொரு அணி இப்போதைக்கு இல்லை என்பதையும் இந்தியா காட்டிவிட்டது.

முரளியின் ஓய்வோடு இலங்கை அணியின் சரிவு என்று பலர் புலம்புவதை அவதானித்து வந்திருக்கிறேன்..
ஆனால் முரளியை மட்டுமல்ல, இலங்கை மிக முக்கியமாக சமிந்த வாசையும் இழந்து தவிக்கிறது.
முரளியின் ஓய்வுக்குப் பிறகு விக்கெட்டுக்களை டெஸ்ட் போட்டிகளில் எடுப்பது மிக சிரமமாகியுள்ளது மட்டுமன்றி, போட்டிகளில் தோல்வியடையாமல் தப்பவாவது துடுப்பாட்ட வீரர்களின் பெரிய பங்களிப்பையும் இலங்கை தேடுகிறது.

சங்கக்கார தவிர மிச்ச எல்லோருமே ஒட்டுமொத்தமாக formஐ இழந்துவிட்டார்களோ என்ற ஒரு ஐயம்.
ஒரு நாள் போட்டிகளாக இருந்தால் லசித் மாலிங்க மட்டுமே சரணம்.

கிரிக்கெட் சபைக் குழப்பங்கள் தேர்வாளரின் குழப்பங்கள் அணிகளை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதித்ததை பாகிஸ்தான், இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் மிக சமீபமாக ஆஸ்திரேலிய அணிகளின் வரலாறுகள் சொன்னதைப் போல இலங்கை அணியும் இவ்வாறே தான்.
ஆனாலும் இறுதியாக இடம்பெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு முன்னர் இலங்கை அணியைப் புறக் காரணிகள் பெரிதாகப் பாதித்திருக்கவில்லை; ஆனால் இப்போது நிலைமை அப்படியில்லை.

வெற்றி பெறுவது எப்படி என்று அணிக்கு மறந்து போயுள்ளது. போராடத் தெரியவில்லை.
வெற்றி பெறவேண்டிய போட்டிகளை இலகுவாக எதிரணிக்குத் தாரை வார்க்கிறது.

அணிக்குள் மாற்றங்கள் கொண்டுவர முதல்,  முதலில் அணியின் மனோநிலையை மாற்றவேண்டும்.இதற்கு என்னைப் பொருத்தவரை டில்ஷானுக்குப் பதிலாகப் பொருத்தமானவர் ஒருவரை அணித்தலைவராகக் கொண்டுவருதல் முக்கியமானது.
அஞ்சேலோ மத்தியூஸ் அந்த இடத்துக்குப் பொருத்தமானவர் என்று இன்னும் நிரூபித்ததாக இல்லை.
பூரண உடற்தகுதியும் இல்லை; பொறுப்புணர்ந்து நேரத்துக்கேற்றது போல துடுப்பெடுத்தடுவதும் இல்லை.
உதாரணம் - நேற்றைய ஒருநாள் போட்டி.
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியிலும் (சதம் பெற்ற நிலையில்) இவ்வாறு தான் நடந்தது.

சங்கக்கார மட்டும் ஓட்டங்கள் குவித்து இலங்கை வெல்லப் போவது நடக்காது. அது அவர் மேல் அதிக அழுத்தங்களை ஏற்றி சங்காவையும் விரைவில் வெறுத்துவிட வைக்கப் போகிறது.

இங்கிலாந்தில் இந்தியாவின் டிராவிட் எவ்வாறு தனிநபராக நின்று ஓட்டங்களை மலையாகக் குவித்துப் போராடினாரோ, அதே போலத் தான் மத்தியகிழக்கின் தகிக்கும் வெயிலில் சங்கக்காரவும் பாகிஸ்தானுக்கு எதிராகத் தனித்துப் போராடவிடப்பட்டார்.

சங்கா மூன்று டெஸ்ட், ஐந்து இன்னிங்சில் 516 ஓட்டங்கள்..
(இலங்கை வீரர் ஒருவர் ஒரு டெஸ்ட் தொடரில் ஐநூறு ஓட்டங்கள் கடந்த மூன்றாவது சந்தர்ப்பம் இது)
இலங்கைக்குத் தான் மூன்று டெஸ்ட் போட்டிகளை விட அதிக டெஸ்ட் போட்டிகள் ஒரு தொடரில் தரப்படுவதே இல்லையே.
டிராவிட் நான்கு டெஸ்ட், எட்டு இன்னிங்சில் 461 ஓட்டங்கள்..

வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியின் கெவின் பீட்டர்சன், இயன் பெல் ஆகியோர் ஐந்நூறு ஓட்டங்களைக் கடந்திருந்தார்கள்.

அண்மைக்காலத் தொடர்கள் எல்லாவற்றிலும் காணப்படும் இந்த அதிசய ஒற்றுமை, ஒவ்வொரு அணியினதும் முதுகெலும்புகள் போன்ற துடுப்பாட்ட வீரர்கள் எல்லாப் போட்டியிலுமே திடமாக, தனியாக நின்று ஓட்டக் குவிப்பில் அசத்துவது...
இலங்கையில் வைத்து மைக்கேல் ஹசி, அதன் பின் சங்கா, டிராவிட், பெல், பீட்டர்சன், இப்போது இந்தியாவில் சந்தர்போல் மற்றும் 'புதிய லாரா' டரன் ப்ராவோ, இவர்களுடன் என்றும் இளமையுடன் இன்றும் வலம் வரும் டிராவிட் + லக்ஸ்மன்.

தென் ஆபிரிக்காவிலும் அம்லா, டீ வில்லியர்ஸ் மற்றும் ஷேன் வொட்சன்.
சங்கா, டிராவிட், கலிஸ், லக்ஸ்மன் , ஹசி, சந்தர்போல் போன்ற வீரர்களைப் பார்க்கையில் ஒரு விஷயம் தெளிவாகிறது.

தொடர்ந்து ஓட்டக் குவிப்பில் ஈடுபடும் இவர்கள் அணியின் தேவையறிந்து தங்களை அந்த விதமாக அர்ப்பணிக்கிறார்கள்.
இளையவர்கள் வந்தும் இவர்களின் இடங்களை நிரப்ப முடியவில்லை என்பதும், Twenty 20 வடிவங்கள் வந்தும் இவர்கள் அவற்றிலும் தம்மை நிரூபித்துள்ளார்கள் என்பதும் முக்கியமானவை.

இன்னொன்று, இதுவரை சர்ச்சைகளும், சண்டைகளும், பிரச்சினைகளும், பதவி சிக்கல்களும் இவர்களை சுற்றியதும் இல்லை; இவர்களும் இடம் தான் துண்டு போட்டாச்சே என்று பயிற்சியும் முயற்சியும் இல்லாமல் இருந்ததும் இல்லை.

இனின் வரும் இளைய வீரர்களுக்கு இவர்கள் தான் முன்மாதிரிகள்.

ஆனால் இந்த வரிசையில் இருந்தவரும் இப்போது தன் இடத்தை நிலை நிறுத்தத் தடுமருபவருமான ரிக்கி பொன்டிங் தென் ஆபிரிக்காவில் ஆடவுள்ள இறுதி இன்னிங்க்ஸ் சில வேளை அவரது இறுதி டெஸ்ட் இன்னிங்க்ஸ் ஆகலாம்.
பாவம் பொன்டிங்.




இந்த வருடத்தில் சர்வதேசக் கிரிக்கெட்டில் தன்னை நிலைநிறுத்திய மிகச் சிறந்த இளைய துடுப்பாட்ட வீரராக டரன் ப்ராவோ மிளிர்கிறார்.
லாராவை ஞாபகப்படுத்தும் துடுப்பாட்டப் பிரயோகங்கள், நிதானமும் அதிரடியும் கலந்த அணுகுமுறை, தொடர்ச்சியாகக் கலக்கி வரும் பக்குவம் என்று நீண்ட காலம் நிற்பார் போலத் தெரிகிறது.


இன்னும் ஒரு மேற்கிந்தியத் தீவுகளின் நம்பிக்கை நட்சத்திரம் கேர்க் எட்வேர்ட்ஸ்.
தொடர்ச்சியாக சிறப்பாக செய்து வருகிறார்.

ஆஸ்திரேலியாவின் ஷோன் மார்ஷ் அடுத்த டெஸ்ட் புதுமுகம். காயத்திலிருந்து அடுத்த தொடரில் மீள்வார் என நம்பலாம்.

அதே போல பந்துவீச்சில் பல இளையவர்கள் கைதூக்கிக் காட்டியுள்ளார்கள்.
மிக அண்மையாக அறிமுகப் போட்டியிலேயே 9 விக்கெட்டுக்களை வீழ்த்தி அசத்திய புது மாப்பிளை ரவிச்சந்திரன் அஷ்வின்.

மேற்கிந்தியத் தீவுகளுடன் முதல் போட்டியிலேயே அசத்தினாலும் காயத்தினால் அடுத்த போட்டியில் விளையாட முடியாது போன எலியாஸ் சனி, இந்தியாவில் வைத்து இதுவரை பெரிதாக செய்துகாட்ட முடியாது இருக்கும் தேவேந்திரா பிஷூ, இந்தியாவின் புதிய வேகப்பந்து கண்டுபிடிப்பு உமேஷ் யாதவ், தென் ஆபிரிக்காவின் அறிமுக அசத்தல் வேர்னன் பிலாண்டர், ஆஸ்திரேலியாவின் டீன் ஏஜ் அதிசயம் பட் கமின்ஸ் என்று பலர் வந்துள்ளார்கள்.

பாவம் இலங்கைப் பக்கம் தான் யாருமே புதிதாக இல்லை.

பாகிஸ்தானில் துடுப்பாட்டப் பக்கமாக டெஸ்ட் அரங்கில் ஹபீஸ், தௌபீக் உமர, அசார் அலி என்று இளையவர்கள் நிதானிப்பதையும், மீண்டும் உமர் குல், சயீத் அஜ்மல் எல்லா விதமான போட்டிகளிலும் விக்கெட்டுக்களை எடுக்க ஆரம்பித்திருப்பதும் அவமானங்கள், பின்னடைவுகளின் மத்தியிலும் பாகிஸ்தானுக்கு எதிர்காலம் பிரகாசமாக இருப்பதைக் காட்டுகிறது.

ஆனால் கூடவே ஒரு கேள்வியுடன்..
மீண்டும் எப்போது இவை அனைத்தும் குலையும்?

இலங்கையின் மீது இப்போதைக்குப் பெரிதாக நம்பிக்கையில்லை.

இந்தியா மும்பாயில் தெரிவு செய்யும் அணி பற்றிய ஆர்வம் அதிகமாகவே உள்ளது.
எதிர்காலம் கொஹ்லியா? அல்லது மும்பாய் மைந்தன் ரோஹித் ஷர்மாவா?
புதிதாக வேகப்பந்துவீச்சாளர் வருண் ஆரோன் விளையாடுவாரா ?

மிக முக்கியமாக சச்சினின் நூறாவது சதம் அவரது சொந்த ஊரிலே, அவரது ரசிகர்களுக்கு முன்னால் கிடைக்குமா?
உலகக் கிண்ணத்தை மும்பையிலே வென்று ஜென்ம சாபல்யம் கண்டது போல இதுவும் நடக்குமா?

ஆனால் சச்சின் நூறாவது சதத்தை மும்பையிலே பெற்றால் நூறு பொற்காசுகள் என்பது போல அபத்தம் வேறு ஏதும் கிடையாது.

தன் மீதான அழுத்தங்கள் அதிகரிப்பதையும் அது ஆஸ்திரேலியா வரை தொடர்ந்தால் அணியையும் பாதிக்கும் என்பதையும் தவிர்க்கவாவது சச்சின் மும்பையில் சதம் பெற்றால் நல்லது என்று நான் நினைக்கிறேன்.

இன்று வரை,
இந்த வருடத்தில் டெஸ்ட் போட்டிகளில் கூடுதலான ஓட்டங்களைக் குவித்துள்ள துடுப்பாட்ட வீரர்கள்....
http://stats.espncricinfo.com/ci/engine/stats/index.html?class=1;spanmax1=19+Nov+2011;spanmin1=1+Jan+2011;spanval1=span;template=results;type=batting

இந்த வருடத்தில் ஒருநாள் போட்டிகளில் கூடுதலான ஓட்டங்களைக் குவித்துள்ள துடுப்பாட்ட வீரர்கள்....
http://stats.espncricinfo.com/ci/engine/stats/index.html?class=2;spanmax1=19+Nov+2011;spanmin1=1+Jan+2011;spanval1=span;template=results;type=batting 


டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தியோர்
http://stats.espncricinfo.com/ci/engine/stats/index.html?class=1;spanmax1=19+Nov+2011;spanmin1=1+Jan+2011;spanval1=span;template=results;type=bowling


ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தியோர்
http://stats.espncricinfo.com/ci/engine/stats/index.html?class=2;spanmax1=19+Nov+2011;spanmin1=1+Jan+2011;spanval1=span;template=results;type=bowling




சச்சின் நூறாவது சதம் அடிக்கட்டும்.. அடுத்த கிரிக்கெட் பதிவில் சந்திக்கலாம்.



November 15, 2011

கமல்ஹாசன் - இன்னும் சொல்கிறேன்


நடிகர் கலைஞானி கமல்ஹாசனின் பிறந்தநாளுக்காக இட்ட பதிவின் தொடர்ச்சி இது...



கமல் - இந்தப் பெயரைக் கேட்டவுடன் எனக்கு (உங்களில் பலருக்கும் கூட இருக்கலாம்) மனதில் ஞாபகம் வரும் சில விஷயங்கள் - கலை, காதல், புதுமை, தேடல், அறிவுஜீவித்தனம், துணிச்சல், நாத்திகம், வெளிப்படை...
இன்னும் பல பல...

இவற்றுள் எல்லாமே வரம்புகள் மீறியவையாகவும், மரபுகள் தாண்டியவையாகவும், இதனால் சர்ச்சைக்குரியவையாகவும் அமைந்திருப்பது உண்மை தான்.
அப்படி இருந்தும் பின் வாங்காமல் ஒளிந்துகொள்ளாமல் சமுதாயத்துக்காகத் தன்னை மாற்றிக் கொள்ளாமல், விமர்சனங்கள் பற்றி அலட்டிக் கொள்ளாமல் தான் தானாகவே வாழ்கிறார் பாருங்கள், அந்த விடயம் பதின்ம வயதுகளில் எனக்கு ஒரு கிளர்ச்சியையும் கமல் மீதான அபிமானத்தையும் அதிகரித்தது.

ஊடகத் துறைக்கு வந்து தான் என்னால் பல துறைசார் பிரபலங்களை சந்திக்கக் கூடிய வாய்ப்புக் கிட்டியது.
ஆனால் என் மனதுக்கு மிக நெருக்கமான நால்வரை நான் ஊடகத் துறைக்கு வராத பாடசாலைக் காலத்திலேயே சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது.
ஒருவர் ஆஸ்திரேலியக் கிரிக்கெட் முன்னாள் தலைவர் அலன் போர்டர்.
இலங்கையின் சாதனை மைந்தன் முத்தையா முரளிதரன்
எனக்கு மிகப் பிடித்த கவிப் பேரரசு வைரமுத்து 

அடுத்தவர் ஹீரோ கமல்..

ஆனால் வேதனையான விடயம்...
முதல் மூவரையும் சந்தித்துக் கை குலுக்கி ஒரு சில வார்த்தைகள் பேசும் வாய்ப்புக் கிட்டியது;புகைப்படங்கள் எடுத்துக் கொண்டேன்; கவிஞர் வைரமுத்துவிடம் என் கவிதையைக் கொடுத்து ஆசியும் எழுதிப் பெற்றுக் கொண்டேன்.

ஆனால் கமலை நான் நேரில் கண்டது கொழும்பில் நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசனுக்கு விழா எடுத்த வேளையில் வந்திருந்த நம் ஹீரோவை மிகத் தொலைவிலிருந்து பார்த்துக் கை காட்டியபோது தான்.

அதற்குப் பின்னர் இன்று வரை அப்படியொரு வாய்ப்புக் கூடக் கிட்டவில்லை.
ஆனால் முன்பு சூரியன் FM வானொலியில் வேலை செய்தபோது தொலைபேசி மூலமாகக் கமல்ஹாசன் அவர்களைப் பேட்டி எடுக்கக் கூடிய வாய்ப்புக் கிட்டியது. (2005)

எந்தவொரு தயாரிப்பும் இல்லாமல் அவசர அவசரமாக உடனடியாக எடுத்த பேட்டி அது.
கமலையே நிறைய வாசித்தவன் என்பதால் சுருக்கமாக, ஆனால் சுவாரஸ்யமாக அவரைக் கிளறி ஒரு பதினைத்து நிமிடத்தில் பல விஷயங்களை அவரிடம் இருந்து எடுத்தேன்.

மும்பாய் எக்ஸ்பிரஸ் படம் வர முதல் அவர் அளித்த அந்தப் பேட்டியில் தமிழ்ப் படத் தலைப்பு, அவர் படங்களில் சொல்லும் 'அவரது' கருத்துக்கள், நகைச்சுவை, வாசிப்பு, சகலதுறைத் தன்மை என்று சில விடயங்களை மனம் திறந்து பேசி இருந்தார்.

அந்தப் பேட்டியை ஒலிபரப்பிய நேரம் என் கால்கள் நிலத்தில் நிலை கொண்டிருந்ததா என்று எனக்கு ஞாபகம் இல்லை.

அதிலும் கடைசியாக "உங்கள் தமிழ் அருமை; சென்னை வரும்போது வாருங்கள், சந்திக்கலாம். சில நூல்களும் தருகிறேன்" என்று கமலின் குரலில் கேட்ட வார்த்தைகள் மெய்ம்மறக்க வைத்திருந்தன.

ஆனால் அதன் பின் சென்னை பல தடவை போனபோதும் ஏனோ ஆழ்வார்ப்பேட்டை (அங்கே தானே இன்னும் இருக்கிறார்) பக்கம் போக எண்ணவில்லை.
ஆனால் இன்று அந்த ஒலிப்பதிவும் என்னிடம் இல்லை..

பார்க்கலாம் என்றாவது ஒருநாள் ஒரு முழுப் பேட்டி எடுக்காமல் போய்விடுவேனா?



இன்னொரு விடயம், எனது பதினாறாவது வயதில் முதல் தரம் அம்மாவுடன் இந்தியா போன வேளையில் (அந்த நேரம் தான் கவிஞர் வைரமுத்து அவர்களையும் முதல் தடவையாக அவர்களின் வீட்டிலேயே சந்தித்தது)
தெருவுக்குத் தெரு ஒவ்வொரு நடிகருக்கு ரசிகர் மன்றத் தட்டிகளும்,கதாநாயகர்களின் கட் அவுட்டுகளும் எழுந்து நின்றதைப் பார்த்துக் கொண்டே போன எனக்கு "கமல்ஹாசன் நற்பணி மன்றம்", "கமல் நற்பணி மன்றம் முன்னெடுக்கும் இரத்த தான முகாம்" போன்ற தட்டிகள் மனத்தைக் கவர்ந்தன.

அன்று முதல் இன்று வரை எனது பிறந்த நாளின் போதும், வருடத்தில் குறைந்தது இரு தடவையும் மறக்காமல் இரத்த தானம் செய்து வருகிறேன்.
(அதுவும் உரியவருக்கு மட்டும் என்று உறுதிப்படுத்தியே வழங்குகிறேன். தேவையானவரை எனது இரத்தம் போய்ச் சேரவேண்டும் என்பதில் மிகக் கவனமாக இருக்கிறேன்)

கமல் என்றவுடன் அவரது புதிய முயற்சிகளும் அதனோடு சேர்ந்த riskகளும் ஞாபகம் வருவது இயல்பே..
(சிலரின் பொதுப் பார்வையில் தோற்றுப் போகும் அவரது படங்கள்)
கமலின் தோற்றுப் போன சில அருமையான படங்கள் அந்தந்தக் கால கட்டத்தில் அவர் மீது பெரும் மதிப்பையும், இக்காலத்தில் அந்தத் திரைப்படங்களைப் பார்க்கும் போதும், அதே மாதிரியான தழுவலில் வரும் இந்தக் காலப் படங்களைப் பார்க்கும்போதும் வியப்பையும் தருகின்றன.

அந்தக் காலத்தில் காலத்தால் முந்தியனவாகக் கருதப்பட்டு, தோல்வியைத் தழுவிய கமல் படங்கள், இந்தக் காலத்தில் புதிய இயக்குனர்களால் கொண்டுவரப்பட்டு வெற்றி காணும்போது கொஞ்சம் கடுப்பாகவும் இருக்கும்.

ஆனால் இப்போதைய நடப்புக்களை அப்போதே நினைத்தவர் இந்தக் கலைஞானி என்ற பெருமையும் எட்டிப் பார்க்கும்....

ஒரு நடிகனைத் தாண்டி, படைப்பாளியாக கமலை ரசித்த, வியந்த படங்கள் பல..
 முன்பு ரஜினி 12 தந்தது போல கமலின் ரசித்த படங்களைப் பட்டியல் இட்டுத் தொடர் பதிவாகத் தரும் எண்ணம் இருப்பதால் அவற்றைப் பின்னர் பார்க்கலாம்..

எனினும் கமல்ஹாசன் என்ற கலைஞனின் சில 'தோல்வியுற்ற' (வர்த்தக ரீதியாக) மகாநதி, குணா, குருதிப்புனல், அன்பே சிவம்,ஹே ராம் போன்ற திரைப்படங்கள் எனக்கு மனதில் இன்றும் எதோ சிறு பாதிப்பையாவது ஏற்படுத்தியவை.
அவை தழுவல்கள், உருவல்கள் என்று உணர்ந்த காலம் அண்மையில் வந்தபோதும், தமிழில் அந்தத் துணிச்சலான முயற்சிகள் எடுத்தவர் என்பதால் பெருமையே.

கமலின் சீர்திருத்தக் கருத்துக்கள், சீரியஸ் கருத்துக்கள் சிந்திக்க, சிலிர்க்க வைத்த அளவுக்கு அவரது சமயோசித நகைச்சுவைகளையும், கோர்வையாக வந்துவிழும் சாதுரிய கலகல சிரிப்பு வெடிகளையும் ரசிக்கிறேன்.
அந்த நகைச்சுவைகளிலும் ஒருவித அறிவுஜீவித்தனம் சிந்திக்க வைக்கும் ஆற்றல் விரவிக் கிடக்கும்.
தொடர்ச்சியாக உரையாடலை அவதானிக்காது போனால் தவறிவிடும்..
இதனால் சாதாரண அடி, உதை விழும் / இரட்டை அர்த்த நகைச்சுவைகளை ரசிக்கும் பலருக்கு கமல் பாணி நகைச்சுவைகள் பிடிக்காமல் போவதில் ஆச்சரியமில்லை.

 மைக்கேல் மதன காமராஜன், சதி லீலாவதி, சிங்காரவேலன், தெனாலி, பஞ்சதந்திரம், பம்மல் K சம்பந்தம் என்று கமல் சிரிக்கவைத்த திரைப்படங்களின் வரிசையும் நீண்டது.

அதிலும் கமல் - கிரேசி மோகன் இணைப்பு நான் ரசிக்கும் ஒன்று..
இதே போல கமலின் சில முக்கிய இணைப்புக்களை ஒரு ரசிகனாக இன்றும் ரசிக்கிறேன்..
கமல் - பாலசந்தர்
கமல்- சுஜாதா
கமல் - இளையராஜா
கமல் - வைரமுத்து
கமல் - SPB
கமல் - ரஜினி
கமல் - ஸ்ரீதேவி
கமல் - அம்பிகா
கமல் - K.S.ரவிக்குமார்
கமல் - சிங்கீதம் சீனிவாசராவ்

கமலை வைத்து யார் இயக்கினாலும் நிச்சயமாக மறைமுகமாகக் கமல் தான் அங்கே இயக்குனராகிறார் என்பது அனைவரும் அறிந்ததே என்றாலும் கமல் தனித்து இயக்குனராக வெளிப்பட்ட இரு சிறந்த படங்கள் என நான் நினைப்பது - விருமாண்டி, ஹே ராம்..

இரண்டிலும் கமல் சினிமா விட்டுக்கொடுப்புக்களுக்கு உட்படவில்லை என்பதே நான் உணரும் யதார்த்தம்.
அப்படியான படைப்புக்களை ஒரு கமல் ரசிகனாக அல்லாமல் சினிமா ரசிகனாக எதிர்பார்க்கிறேன்.

மர்மயோகி, மருதநாயகம் இரண்டையும் அதற்காகவேனும் யாராவது தயாரித்தால் என்ன?

கமலை ஒரு பாடகனாக நாம் பலர் ரசித்திருப்போம்..
பேசும்போதே கமலிடம் இருக்கும் அந்தத் தீர்க்கமான ஆழமான கம்பீரமான குரல் பாடலில் வரும்போது உணர்ச்சிகளின் குவியலாக வரும்....

அந்தக் கால பன்னீர்ப் புஷ்பங்களே, மூன்றாம் பிறையில் நரிக்கதை, நினைவோ ஒரு பறவை என்று ரசித்த பாடல்களில் உச்சம் என்று சொல்லக் கூடிய மேலும் சில கமலின் குரலில் பாடல்கள்..
தென் பாண்டி சீமையிலே - நாயகன்
யார் யார் சிவம் - அன்பே சிவம்
கண்மணி அன்போடு - குணா
பேய்களை நம்பாதே - மகா நதி
கடவுள் பாதி - ஆளவந்தான்
தசாவதாரம் பாடல்

உங்களில் யாராவது கமல், அமரர் சுஜாதா ஆகியோரின் பங்களிப்பில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் வெளிவந்த The Blast இசைத் தொகுப்பு பாடல்கள் கேட்டுள்ளீர்களா?
அத்தனை அருமையாக இருக்கும்.

கமலை ஒரு எழுத்தாளராக, கவிஞராக ரசிக்க நிறையவே பொறுமையும், ரசனையும் தேவை..
கமலின் எழுத்துக்கள் அவரையே மாதிரி விரிவானவை, பரந்து சிந்திப்பவை + மேலோட்டமாகப் பார்த்தால் சர்ச்சைகளுக்குரியவை.

உதாரணத்துக்கு இந்தக் கவிதை.....

ஈழத் தமிழர்களின் வலியைப் பதிவு செய்ய ‘போருக்கெதிரான பத்திரிகையாளர்கள்’ உருவாக்கியுள்ள ‘மௌனத்தின் வலி’ புத்தகத்தில்…

‘விட்ட இடத்தில் கதையைத் தொடங்க இன்னொரு குழந்தை பிறக்கும்!’
காக்க ஒரு கனக (AK) 47
நோக்கவும் தாக்கவும் ஒரு நொடி நேரம்
தோற்கவும் அதே கண நேரம்தான்
ஈயம் துளைத்துக் கசிந்து சிவந்த
காயம் தொட்டுக் கையை நனைத்து
விண்ணே தெரிய மண்ணில் சாய்ந்தேன்
முன் காக்க மறந்த அமைதியைக் காத்து.
மாட்டுத் தோலில் தாய்மண் அறைபட
பூட்ஸுக் கால்களால் கடந்தனர் பகைவர்.
விட்ட இடத்தில் கதையைத் துவங்கச்
சட்டென இன்னொரு குழந்தை பிறக்கும்
அதுவரை பொறுத்திரு தாயே, தமிழே
உதிரம் வடியும் கவிதை படித்து…
-கமல்ஹாஸன்

இன்னொன்று மன்மதன் அம்புக்காக கமல் எழுதியது..

சும்மா யோசித்துப் பார்த்தேன்.. இதுவரை கமல் எடுக்காத அவதாரம் எது?
மகளை இசையமைப்பாளராகவும் ஆக்கிவிட்டார்.
எனினும் கமலை ஒரு முழு எழுத்தாளராக ஒரு நூல் வழியாக வாசித்து இன்னும் உணர,அறிய ஆசைப்படுகிறேன்.

கமல் பற்றிப் பதிவிட இன்னும் இருக்கு.. ஏராளம் இருக்கு.
எடுத்துக் கோர்க்கவும் கொட்டவும் நேரம் தான் இல்லை.
கிடைக்கும் நேரத்தில் வருகின்ற விஷயங்களை இனியொரு தடவை தருகிறேன்.


குறிப்பு - படங்கள் அனைத்தும் இணையத்தில் சுட்டு நான் செதுக்கி (சொதப்பி) மெருகேற்றியவை.



November 09, 2011

வந்தி மாமா 16


பதிவுலக பச்சிளம் பாலகன்...
இருபத்தைந்தாவது தடவையாகப் பதினாறாவது பிறந்த நாள் கொண்டாடும் என்றும் மார்க்கண்டேயன்..
பாதிப் பெண்களை தங்கையாகவும் மீதிப் பெண்களை மகள்மாராகவும் ஆக்கி மனோதர்ம வாழ்வு வாழும் மகாத்மா..
எங்கள் ஆன்மீக குரு வந்தியானந்தா மாமாவுக்கு (பெரி.மயூரன் என்ற இயற்கைப் பெயர் கொண்ட வந்தியத்தேவர் ) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..



வந்தி பற்றிப் பதிவுலகமும், பாருலகமும் அறிந்தும் அறியாத விஷயங்கள் 16....

1.ஒருவர், இருவருக்கென்று இல்லாமல் ஊருக்கே மாமாவாக அறியப்பட்டாலும், இவர் மனதார மாமா என்று அழைக்க நினைப்பது இந்த மாமாவுக்கு இரண்டு நாட்கள் முன்னர் பிறந்த/பிறந்த நாளைக் கொண்டாடிய உலக நாயகனைத் தான்.
(ஏழாம் அறிவு ஹீரோயின் தான் காரணம் என்று விளக்கவும் வேண்டுமா?)

2.லண்டன் போனாலும் லங்காவில் இருந்தது போலவே சுத்த சைவமாக (சாப்பாட்டில்) இருந்து கூதல் குளிரையும் ஒரு கை பார்த்த சிங்கம்.

3.எத்தனை விதமாக எங்கெங்கெல்லாமோ தெரிந்த தெரியாதவர்களிடம் மொத்து வாங்கி, சிக்கல் சின்னாபின்னப் பட்டாலும் இந்த 'சிரட்டை' சிங்கத்துக்கு கோபம் கொஞ்சம் கூட எட்டிப் பார்க்காது.

4.அதிகமாகக் கோபம் ஏறி ஆத்திரத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போனால் "பொறுங்கடா, உங்களைப் பற்றிப் புனைவு போட்டுக் கிழிக்கிறேன்" என்று காமெடியாகக் கொந்தளிப்பார்.
ஆனால் அது ரணிலின் 'அரசாங்கத்தைக் கவிழ்க்கப் போறோம்' என்பது போலத் தான்.
அதற்காக வைக்கப்பட்ட ஆயிரமாவது பட்டம் தான் 'பு.மாமா' - புனைவு மாமா (வேற ஏதாவது விவகாரமா நீங்கள் இதுவரை காலம் யோசித்திருந்தால் கும்மி டெரர் சங்கம் பொறுப்பில்லை)

5.இப்போது அடிக்கடி முணுமுணுக்கும் இரு பாடல்கள்
"வாழ்க்கையில் ஆயிரம் தடைக்'கல்'லப்பா தடைக்'கல்'லும் உனக்கொரு படிக்'கல்'லப்பா"
"ஒரு 'குண்டு'ச் சட்டிக்குள்ளே வந்து குதிரையோட்டும் புள்ள"

6.கணிதம் படித்திருந்தாலும், கணினிப் பக்கம் இருந்தாலும் இலங்கை இம்முறை வந்த பிறகு வைத்தியத் துறையில் ஒரு தனியான ஈடுபாடும் தணியாத தாகமும் சேர்ந்திருக்கிறதாம்.

7.கடற்கரையில் நண்பர்களோடு நின்ற நேரம், எங்கிருந்தோ முளைத்த சாத்திரக்காரி தேடி வந்து இழுக்காத குறையாகக் கையை இழுத்து (நம்புங்கப்பா மாமா இழுக்கேல்லை) "நீங்க சொல்லடியையும் கல்லடியையும் நின்று தாங்கும் பிள்ளை" என்று நெற்றிப் பொட்டில் அடித்த மாதிரி எப்படிப் பட்டென்று சொன்னாள் என்று வெவ்வேறு இடங்களில் ரூம் போட்டு (தனியாத்தானா?)யோசிக்கிறார்.


8.இப்போ ஸ்ருதி ஹாசன், தமன்னா பிடிக்கும் என்று சொல்லி வயசைக் குறைச்சுக் காட்ட எத்தனித்தாலும் நம் மாமாவின் all time favorites பூர்ணிமா(பாக்கியராஜ் கோவிச்சாலும் பரவாயில்லையாம்), ராதா (அதான் கோ கதாநாயகியின் அம்மா), சுஹாசினி (மணிரத்னத்தின் அம்மணி) & அம்பிகா (சொல்லணுமா?) தான்.

9.லண்டனில் இருந்தும் எங்கள் திருமலைக் குஞ்சு கேட்டபடி ஜிம்மி அன்டர்சனின் அண்டர் வெயரை வாங்கி வர முடியவில்லை என்பதே அண்மைய சறுக்கல்.

10.லண்டனில் இருந்து பிளைட்டில் வந்த நேரம் ரொம்ப நேரமா இவரையே ஒரு ஆண்டி வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்ததும், என்னடா இது மகள் ஏதாவது இருக்குமோ என்று நம் மாமா யோசிக்க, கட்டுநாயக்க Airport வந்ததும் அந்த ஆண்டி இவரைப் பார்த்து "Excuse me Uncle, Are you Mr.வந்தியத்தேவன்?" என்று கேட்க நம் மாமா அரை மணித்தியாலம் உள்ளே மயங்கி வீழ்ந்து கிடந்தது வரவேற்கச் சென்ற நாம் வெளியே காத்திருந்த கதை இன்று தான் வெளியே விடப் படுகிறது.

11.புலம்பெயர் பதிவர்களின் லண்டன் பிராந்தியத் தலைவராக இருந்தும் அதுபற்றி இன்னமும் காவல்துறை தன்னை அழைத்து விசாரிக்காதது கௌரவக் குறைவு என்னும் மன உளைச்சலால் மட்டக்களப்பு போய் தனியாக, ரகசியமாக இரு நாள் மாநாடு போட்டு வந்திருக்கிறார் மாமா.

12.நாடு திரும்பிய பதிவுலக சிங்கத்தைக் கௌரவிக்கும் வகையில் 'இலங்கைப் பதிவர்களின் நாலாவது பதிவர் சந்திப்பு' பற்றி குழுமத்தில் யாராவது மடல் இடுவார்கள் என்று ஒவ்வொரு மணித்தியாலமும் தன் ஜிமெயிலை refresh செய்து refresh செய்தே களைத்துவிட்டாராம்.

13.(இங்கிலாந்து) அரச குடும்பத்தில் இணையும் வாய்ப்பு சில வருடங்களுக்கு முன் கிடைத்தபோதும் அது கிடைக்காமல் கை நழுவிப் போன சோகம் இப்போதுவரை மனதில் இருந்தாலும் இன்னும் (இன்றும் கூட) மனதில் கோபமில்லாமல் ரசிக்கிறார் இந்தப் பிஞ்ச/பிஞ்சு மனசுக்காரர்.

14.அண்மையில் நடந்த கொலையொன்றில் சம்பந்தப்பட்டு சர்ச்சைக்குரிய ஒரு அரசியல்வாதி, இலங்கையின் பர பர மங்களமான அரசியல் வாதி ஆகியோருக்கும் சரித்திரக் காதலன் சலீமுக்கும் நம் மாமாவுக்கும் ஒரே வித ரசனை.. ஹி ஹி ஹி.. ;)

15.வாசிப்புப் பிரியர் நம்ம வந்தி மாமா அதிக தடவை வாசித்த நூல் - பொன்னியின் செல்வன் அப்பிடின்னு நீங்க நெனச்சா தப்பு.
ஒவ்வொரு நாளும் வாசித்த பின்னரும் இன்னும் அடங்கவில்லை தாகம் என்று மாமா சொல்லும் நூல் - சீரோ டிகிரி
ஆமாம் நம்ம ஹீரோ சாருவின் சீடர்.

16.வந்தியானந்தா என்ற சிறப்புப் பெயரோடு இவர் உபதேசம் செய்து உலகப் புகழ் பெற்று விளங்க வாழ்க்கையில் அடிபட்ட ஞானமும், வாய்த்த முதலாவது சீடன் கன்கோனின் ராசியும் தான் காரணம் என்கிறார்.


மீண்டும் மனதார்ந்த வாழ்த்துக்கள் மாமா + அட்வான்ஸ் நன்றிகள் இன்று மாலை தரப்போகும் விருந்துக்கு ....
அடுத்த பிறந்த நாள் விழாவுக்கு எங்கள் மாமியுடனும், மருமகனுடனும் எங்களை லண்டனுக்கு அழைத்துக் கொண்டாடவுமென்று குதூகலமாக வாழ்த்துகிறோம்..



November 07, 2011

கமல்ஹாசன் - உள்ள நாயகன்

கமல்ஹாசன்....
எனது ஆதர்ச நாயகன்.. .  எனது அபிமானத் திரை நாயகன்..

ஒவ்வொருவருக்கும் வாழ்வில் ஒவ்வொரு role modelகள், முன்மாதிரிகள் இருப்பார்களே.. எனக்கு அது போல இருக்கும் பல role modelகளில் சிறுவயது முதல் மாறாமல் ஆழப் பதிந்து தாக்கத்தை உருவாக்கிய ஒருவர் கமல்.(ஒவ்வொரு துறைகளில் ஒரு பிடித்தவர் இருப்பாரே அதைச் சொன்னேன்.. அவர்கள் என் மானசீக வழிகாட்டிகள்/குருக்கள்)



எனக்கு(ம்) பிடித்த கமலுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

கலைத் துறை, ஊடகத் துறையில் சிறுவயது முதல் கொண்ட ஆர்வம், தேடலும் கூட அதற்கான காரணமாக இருக்கலாம்.
ஆனால் சினிமா என்பதைப் பார்த்து ரசிப்பதோடு, சில விஷயங்களை அதனூடாகத் தேடி அறிந்து கொள்ளும் உசாத்துணையாகக் கொள்வதோடு நின்றுவிட வேண்டும்; வாழ்க்கையை அதற்குள் தொலைத்துவிடக் கூடாது என மனதார நம்பும், மற்றவருக்கு முடிந்தளவு எடுத்துக் கூறி வரும் எனக்கு கமலைப் பிடித்த அளவு வேறு எந்தக் கதாநாயக நடிகரையும் இவ்வளவு காலம் தொடர்ச்சியாக இந்தளவு ஆழமாகப் பிடிக்கவில்லை.

இது ஆச்சரியமான விடயமே இல்லை.

கமல் ஒரு சகலதுறையாளன். தனியே ஒரு சாகசக் காரனாக, எப்போதும் ஒரு திரைப்படத்தின் இறுதியில் வில்லன்களை அடித்து வீழ்த்தி வெற்றிகளையே சுவைக்கும் ஒரு அசாதாரண, ஆச்சரியமான, கற்பனை நாயகனாக இல்லாமல் எம்மைப் போல உணர்ச்சிகள் நிறைந்த, வாழ்க்கையில் தோல்விகளையும் சோகங்களையும் காணுகின்ற சாதாரண மனிதராகவும் சிறுவயது முதல் கமலைத் திரையில் பார்த்தது இதற்கான முக்கியமான காரணமாக இருக்கலாம்.



ஆனால் இன்று வரை கமலின் புகைப்படங்களை வைத்துப் பூசை செய்து பக்தனாகவோ , கமல் செய்வதை எல்லாம் அப்படியே பின்பற்றி ஒரு அடிமையாகவோ, கமல் பற்றித் தப்பாகக் கதைத்த யாரோ ஒருவருடன் சண்டை பிடித்து வெறியனாகவோ நான் நடந்து கொண்டது கிடையாது.
அதில் இன்று வரை மிகத் தெளிவாகவே இருந்து வருகிறேன்.

கமலின் சில படங்கள், அவரது சில கருத்துக்கள், அவரது வாழ்க்கை நடைமுறைகள் பற்றி எழுகின்ற விமர்சனங்களை விமர்சனங்களாகவே பார்ப்பதுண்டு.
கமல் எனக்குப் பிடிக்கும் என்பதால் விமர்சனங்கள் எனக்கு எதிரானவை என்றும், விமர்சிப்போர் என் எதிரிகள் என்றும் நான் எண்ணியது/எண்ணுவது கிடையாது.
ஆனாலும் கமலைப் பிடிக்கும்..

எனக்கு நினைவு தெரிந்த வயதில் முதலில் பார்த்த கமல் படம் எதுவென்று நினைவுகளைப் பின்னோக்கி இழுத்துப் பார்க்கிறேன்..
மூன்றாம் பிறை?? சலங்கை ஒலி?? வாழ்வே மாயம்?? அவர்கள்? இளமை ஊஞ்சலாடுகிறது? நீயா??
சரியாக ஞாபகம் இல்லை.

ஆனாலும் அந்தக் காலக்கட்டத்தில் பார்த்திருந்த மற்ற எல்லாக் கதாநாயகர்களை விடவும் எதோ ஒரு வித்தியாசம் கமலிடம் இருப்பதை உணர்ந்திருந்தேன்.
அப்போது கமல் தான் என் ஒரே favoriteஆ என்று இப்போது யோசித்தால் தெரியவில்லை..

காரணம் ரஜினியின் பொல்லாதவன், தில்லு முல்லு போன்ற படங்கள் அந்தக் காலத்தின் எனது விருப்புக்குரிய படங்களாக இருந்திருக்கின்றன.
அதன் பின் வந்த ஆண்டுகளில் ஆனந்தபாபு, விஜய்காந்த், அரவிந்தசாமி, மாதவன், அஜித், மம்மூட்டி, ஷாருக் கான், அமீர் கான், விக்ரம், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி என்று விருப்பங்கள் நீண்டாலும் நிரந்தரமாக நேசிக்கும் ஒரு திரை நாயகன் என்றால் கமல் மட்டும் தான்.

இத்தனை காலம் ரசனை மாறாமல் கமல் மீதான விருப்பம் இருப்பதற்கான காரணங்களை யோசித்துப் பார்த்தேன்...
இது ஒரு வெறித்தனமான ரசிக விருப்பாக இல்லாமல், வியப்போடும் நயப்போடும் கூடிய ஒரு நேச மதிப்பு என்று தான் கருதவேண்டியுள்ளது.



அண்மையில் நான் மகாநதி திரைப்படப் பாடல் வரிகளை பேஸ் புக்கில் பகிர்ந்திருந்தேன்..
எதை யார் சொன்ன போதும் எதிர்க்கேள்வி ஒன்று கேளு
பெரியோர்கள் சொன்ன பாடம் அறிவாலே எடை போடு..
# மகாநதி
அதில் வரும் இந்த வரிகள் போல சிறுவயதில் இருந்து எதையும் கேள்வி எழுப்பி மறு வாசிப்புக்கு உட்படுத்தியே நம்பி வந்த மனப்பாங்கு எந்த ஒரு விடயத்தையும் அறிவுரீதியாகவும் அணுகி வந்த இருவர் மேல் மனதார நேசிக்கக் காரணமாக அமைந்தது.

அதில் ஒருவரை நேசிக்க இன்னொருவர் காரணமாக அமைந்திருக்கலாம் என்று இப்போது எண்ணுகிறேன்.
ஒருவர் எழுத்தாளர் அமரர் சுஜாதா.
இன்னொருவர் சாட்சாத் கமல்ஹாசன்.

கமலின் வித்தியாசமான சில சிந்தனைக் கருக்கள் அவரது சில பேட்டிகளில் தொனித்த ஒரு ஆழ்ந்த புலமை (அதை சிலர் ஞானச் செருக்கு என்று சொன்னாலும் அதுவும் எனக்குப் பிடித்ததே), 90களுக்குப் பின்னைய படங்களில் கமலின் நவீனத்துவ, பின் நவீனத்துவ சிந்தனைக் கூறுகளும், சில பல தத்துவார்த்தங்களும் இவர் ஒரு genius, something different from others என்று எண்ண வைத்திருந்தன.

சலங்கை ஒலி படம் பார்த்த என் தம்பி செந்தூரன் (அப்போது வயது நான்கு) பாரத நாட்டியம் பழகவேண்டும் என்று அடம்பிடித்துப் பழகியது தனிக் கதை.

அந்த சிறுவயதிலேயே மூன்றாம் பிறை, பதினாறு வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், மீண்டும் கோகிலா, கல்யாண ராமன், அபூர்வ ராகங்கள், சொல்லத் தான் நினைக்கிறேன் என்று வித விதமான கமலின் படங்கள் பார்த்து "அட இந்தாளால் மட்டும் எப்பிடி இது முடியுது?" என்று ஆச்சரியப்பட்டுப் போயிருக்கிறேன்.

அப்போது வெளிவந்த 'இதயம் பேசுகிறது' இதழில் கமல் பேட்டியொன்றில் சொல்லியிருப்பார் "எனக்குப் படிப்பில் பட்டம் இல்லை; ஆனாலும் நானாக சுயமாக கற்க வேண்டியவை என்று நான் நினைக்கும் எல்லாவற்றையும் கற்கிறேன். நிறைய வாசிக்கிறேன். அப்போது தான் இந்த உலகையும் மனிதரையும் வாசிக்கக் கூடியதாக இருக்கும்".

வாசிப்பில் ஈடுபாடு உடைய எனக்கு இது ஒரு புதிய உத்வேகம் தந்தது.
பின்னாளில் வானொலியில் நுழைந்தபோதும் மற்றவர் மாதிரியில்லாமல் வித்தியாசமாக இருக்கவேண்டும்; நிகழ்ச்சிகளை வித்தியாசமாகத் தரவேண்டும் என்ற ஒரு வெறியை வழங்கியதும் கமலின் இதுமாதிரியான விஷயங்கள் தான்.

போட்டி நிறைந்த உலகில் விஷய ஞானத்தோடும், வித்தியாசமாகவும் முன்னேறினாலே மற்றவரிடமிருந்து தனித்துத் தெரியக் கூடியதாக இருக்கும் என்று கமலை விட வேறு யாரைப் பார்த்து அதிகமாக உணர முடியும்?

எம் துறையில் தொடர்ந்து நீடிக்க எம்மை நாமே update செய்துகொள்வது அவசியம் என்பதை தம் தேடல், வாசிப்பு மூலமாக அடிக்கடி சொல்லிவந்த என் வானொலிக் குரு எழில்வேந்தன் அண்ணாவும், மானசீக Role modelஆன திரு.அப்துல் ஹமீத் அவர்களும் போலவே கமல்ஹாசனும் அமைந்துபோனது என்னுடைய ரசனைக்கான வெற்றி.

மனிதனையும் மனசாட்சியையும் நம்புவோருக்கு மதமும் கடவுளும் தேவையில்லை என்று கமல் நினைத்ததை நான் விரும்பவில்லை. நான் மிகுந்த பக்தி நிறைந்த ஒரு குடும்பத்தில் அதுவும் இரு சமய நம்பிக்கைகள் ஒன்றாக இணைந்த ஒரு குடும்பத்தில் வளர்ந்தவன்.

ஆனால் காலப்போக்கில் கேள்விகேட்டு எதையும் ஏற்றுக் கொள்ளும் மனப்பாங்கில் சமயம், கடவுள் பற்றிய என் கேள்விகளுக்கு எங்கணும் பதில் இல்லாமல் பாடசாலை வாழ்க்கை முடியும் தறுவாயில் நான் சமயம் இல்லாதவனாக மாற அங்கேயும் கமலுடன் ஒத்திசைகிறேன்.

தேடல் என்பது எப்போதுமே எனக்குப் பிடித்த விஷயம்.. கமலிடமும் எனக்கு அது மிகப் பிடித்தது.

கமல் ஆங்கிலப் படங்களில் இருந்து சுட்டுத் தந்த படங்களும், வெளிநாடுகளில் இருந்து எமக்குப் பெற்றுத் தந்த தொழினுட்பங்களும் அதற்கான சான்றுகள்..
மற்றவர்கள் ஆங்கிலப்படங்களை scene by scene ஆக சுடும்போதும்,பாத்திரப் படைப்புக்களை அப்படியே எடுக்கும்போதும் உறுத்துவதால் தானே பாய்கிறோம்.

ஆனால் கமல் சுட்டவை, உருவியவை அப்படியே கமலோடும் கதையோடும் பொருந்திப் போவதும், எத்தனை காலத்துக்குப் பின் எமக்குத் தெரியவருவதும் கமலின் தேடலுக்கும் அந்த தேடலின் பின்னதான தமிழோடு இணைத்து மறுவாசிப்புக்கு உட்படுத்தித் தருவதற்குமான வெற்றி என்றே நான் நினைக்கிறன்.

கமலின் அந்த அதீத ஆற்றல் அதிகமாக வெளிப்படும் சகலதுறைத் தன்மை, அறிவு ஜீவித்தனம் - இது தான் கமலை அடிமட்ட ரசிகர்கள், ஒரே கோணத்தில் மட்டும் சிந்திக்கும் பலரிடமிருந்து வேறுபடுத்தி தனிமைப்படுத்துகிறது.
சிலர் கமலை ஒரு வேற்றுக் கிரகவாசியாக நோக்கவும் இது தான் காரணம் என்றும் நான் ஊகிக்கிறேன்.
ஆனால் இந்த விடயம் எனக்கு மிகப் பிடித்த ஒன்று.

ஒரு கலைஞன் பூரணமானவனாக இருக்கவேண்டும் என்று பூரணமாக நம்பும் நான் கமலை ஒரு நடிகனாக மட்டும் அன்றி கவிஞனாக, பாடகனாக, எழுத்தாளனாக, நடனக் கலைஞனாக, இயக்குனராக என்று பல வடிவில் காணும்போது, அத்தனையிலும் வெற்றி பெற்றும் நிறைவு பெற்றும் சாதித்தும் நிற்கும்போது நான் ரசித்த ஒருவர் சரியான தெரிவு தான் என்று ஒரு கர்வம் வருகிறதே அது அது தான் எனக்கும் நிறைவு.

குணாவில் கமல் சொன்னதைக் கொஞ்சம் உல்டா செய்தால் -
 கமலை நினைக்கும்போது எவ்வளவோ அருவியாக வருது.. ஆனால் அதை எழுத்தாக, பதிவாக வடிக்க நினைக்கும்போது தான் வேறு வேலை வந்து வாழ்க்கையை வெறுக்கப் பண்ணிடுது..

அதனால் இப்போதைக்கு கமலின் பிறந்த நாளுக்கு இதுபோதும்.
அடுத்த பாகம் (இன்னும் மனதில் இருக்கும் கொஞ்சம்) நாளை/நாளை மறுதினம்..

மீண்டும்

கமல்ஹாசனுக்கு - என் கனவு நாயகனுக்கு - என் மனதில் ரசனையில் வெள்ளிவிழாக் கொண்டாடிய உள்ள நாயகனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

குறிப்பு - படங்கள் இணையத்தில் எடுத்து நான் மெருகேற்றியவை

November 06, 2011

வாழ்வுக் கனவு - 'பாடிப்பறை' கவியரங்கக் கவிதை

சமூக விஞ்ஞான கற்கை வட்டத்தினால் ஒவ்வொரு மாதத்தின் முழு நோன்மதி (பூரணை) தினத்தில் பாடிப்பறை என்ற பெயரில் ஒரு கவியரங்கம் + கலந்துரையாடல் அரங்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
(பாடிப்பறை என்ற பெயரை முதல் தரம் கேட்டதில் இருந்து ஒரு ஈர்ப்பு + ரசனை. அழகான தமிழ்ப் பெயரில் தமிழை அழகாகத் தரும் நிகழ்வு என்றால் கேட்கவும் வேண்டுமா)

எமது சமூக வாழ்வோடும், தமிழோடும் இணைந்த இந்த நிகழ்வு ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு சிறப்பு நிகழ்வைக் குறித்து அமைவது அர்த்தபூர்வமானதோடு, நாம் மறந்து செல்லும் சிலவற்றையும்,எமது வாழ்க்கையில் கவனிக்காமல் விடும் பல முக்கியமான விடயங்களையும் மனதுள் ஆழப் பதிய வைக்கிறது.


இரண்டாவது 'பாடிப்பறை' நிகழ்வு மகாகவி பாரதியாரின் 90வது நினைவு நாளை ஒட்டிய, சிறப்பு "பாடிப்பறை" கவித்துறை நிகழ்வாக இடம்பெற்ற போது (11/9/2011) என்னையும் கவியரங்கத்திலே இணைந்துகொள்ள அழைத்திருந்தார்கள்.

"கனவேந்தும் பொழுதுகள்"

என்னும் தலைப்பில் அமைந்த கவியரங்கத்தினைத் தலைமையேற்று  நெறிப்படுத்தி இருந்தார் எனது வானொலிக் குருநாதர் திரு.எழில்வேந்தன் அவர்கள்.



எனக்குக் கொடுக்கப்பட்டது - வாழ்வுக் கனவு 

அந்த வேளையில் தான் இருபது வருடங்களின் பின்னர் குடும்பத்துடன் யாழ்ப்பாணம் செல்லும் வாய்ப்பும், திருமணத்தின் பின்னர் மனைவியுடன் முதல் தரமாக யாழ் செல்லக் கூடிய வாய்ப்பும் கிடைத்து அந்த மறக்கமுடியாத யாழ் பயணம் முடிந்த நினைவுகள் மனம் முழுக்க நிறைந்திருந்தன.
அத்தனையையும் முடிந்த வரை கொட்டித் தீர்க்க இந்தக் கவியரங்கக் கவிதை வழிவகுத்தது.

எழில் அண்ணாவின் என்னைப் பற்றிய அறிமுகம்











"வாழ்வுக் கனவு " ஒலி வடிவம்










எழுத்து வடிவம் 



பாடிப்பறை - கவியரங்கம் 




கனவேந்தும் பொழுதுகள்....

வாழ்வுக்கனவு 

வாழ்க்கையின் அங்கங்களைக் கனவுகளாக்கிப் பாடும் மூவருடன், 
வாழ்க்கையையே கவி பாடப் போகும் நானும்..
வணக்கம்..

பாடிப்பறை - அழகான பெயர்.. அர்த்தமுள பெயர்.
மறைந்து செல்லும் தமிழ்ச் சொல்லை 
மீண்டும் மனதில் அறையும் பெயர்
பறை - 
இப்போது அறைந்து வாசித்த கருவியாக,
முந்தாநாள் ஓணம் கொண்டாடிய
எங்கள் செச்சங்கள், சேச்சிகள் சொல்வதற்கு மட்டும் என்று    
ஆகிப்போனது தமிழர் எம் கோலம்...

பாடியும் பறைந்தும்
சேதி சொல்லும் 
இன்றைய நாளில் 
எம் கனவேந்தும் பொழுதுகளைக் கட்டியாள 
வந்துள்ள தலைவர்
சிறுவயது முதல் என்னைத் தட்டி நிமிர்த்தி
தலை நிமிரவைத்தவர்..
தமிழைத் தமிழாக என் நாவு இன்றும் சொல்ல வைத்தவர்.
என் வானொலிக் குரு 
நன்றிகளுடன் வணக்கம் சொல்கிறேன்
அந்தக் கவிஞருக்கு..
ஒரு மாபெரும் கவிஞரின் கவி மகனுக்கு..

சக வணக்கங்கள்
சக கவித் தோழருக்கு..

சந்தோஷ வணக்கங்கள் உங்கள் அனைவருக்கும்....

வீரம், புரட்சி, காதல் இவை சேர்ந்த வாழ்க்கையில்
சராசரி மானிட ஆயுளின் பாதியைக் கடந்து இன்னும் 
கனவுகளுடன் வாழ்வைத் தேடிக் கொண்டிருக்கும் 
சராசரி மானிடன் நான்..
சாகும் வரை கற்கும் மாணவன் நான்..

வசனங்களில் கவி சொன்ன பாரதியின் 
தொண்ணூறாம் ஆண்டு நினைவு நாளில்,  
வசனங்களையே கவிதையாக்கி வந்திருக்கிறேன்..
வார்த்தைகளை எடுத்து 
கவியென்று நினைத்து 
கனிவுடன் பொறுத்து
கருணை கூர்க...


சின்ன வயதில் 
மருதடித் தேரில் ஆர்மி செட் வேண்டுமென்று 
அப்பாவிடம் அடம்பிடித்து ஆசையாய் வாங்கி 
எம் இணுவில் வீட்டின்  
நீண்ட ஹோலில் வைத்து விளையாடிய
காலம் 
அப்படியே மனதில் பசுமையாய் ஒட்டி நிற்கும்..
சற்றே சலனம் கலைத்து நிமிர்கையில் 
பின்னால் நிற்கும் வாகன ஹோர்ன் 
காது கிழிக்கும்..

அதே வீட்டில் 
இந்நாள் இருபத்தைந்து ஆண்டுகளின் பின்னால்,
என் சின்ன மகனும் 
அப்படியே விளையாட்டுப் பொருள் அடுக்கி
நிலத்தில் உருண்டு விளையாடி
செம்பாட்டு மண் பூசி
சிரித்து விளையாடும்போது
சிலிர்க்கும் மனதில்
ஓடி மறைந்த காலங்களின் 
ஒவ்வொரு நினைவுகளும்..

இந்த இருபத்தைந்து ஆண்டுகளில்
எத்தனை நடந்தன..
எத்தனை கடந்தன..
எத்தனை மறைந்தன..
எத்தனை மறந்தன..


கனவுகள் தொலைத்த பொழுதுகள்
எங்களுக்குப் புதியன அல்ல..
கண்களையே தொலைத்த பின்
கனவுகள் எம்மாத்திரம்...

எங்கோ ஒரு புள்ளியில் ஆரம்பித்து
அதே புள்ளியில் வந்து நிற்க இது வட்டமல்ல..
வாழ்க்கை..
வட்டமாக சுற்றிவந்தாலும் 
அதே அப்படியே எதுவுமே இல்லை..

சின்னவயதில் நான் உருண்ட இடங்களில்
தவழ்ந்த மண்ணில்,
குளிரக் குளிரக் குளித்த 
இறைத்துவரும் தோட்டக் கிணற்றில் 
இப்போது நான் அல்ல 
என் மகனே களிக்கிறான்.. ரசிக்கிறான்..
நான் பார்க்கிறேன்...

தொலைந்த பொழுதுகளை மனதில் 
எண்ணி எண்ணி  ஏங்கவே முடிகிறது..
கனவுகளை சில்லறையாய்த் தொலைத்து 
அள்ளி எடுக்கையில்
முக்கியமான குற்றிகள் எங்கேயோ விடுபட்டுப் போனமாதிரியாக..

இளமை தொலைத்து
வேர் மண் பிரிந்து 
பிறிதொரு மண்ணில் வேர் விட்டு 
மரமாகி எழுந்த பின்
மீண்டும் சொந்த மண் பார்க்கும்
வாழ்க்கை கொஞ்சம் கஷ்டமானது..

வாழ்வுக் கனவுகள்
எப்போதும் இனிமையானவை தான்..
பஞ்சுத் தலையணையில் 
தலை புதைத்து
இதமான போர்வைக்குள் முடங்கி 
சுகமாகத் தூங்கும்போது மட்டும்...

கலரும் கறுப்பு வெள்ளையுமாக
ஒவ்வொரு நாளும் கனவும் நனவுமாக
வாழ்க்கையின் காட்சிகள்...

நினைத்ததில் நடந்தவை
நடந்ததில் விரும்பாதவை
வாழ்க்கை என்றால் அப்படித்தான்
தத்துவங்களும் ஆறுதல்களும்
வாழ்க்கை என்பதன் பாகங்களாகிப் போனவை இவையும் தான்....

சின்னவயதில் ஆசைப்பட்டு கிடைக்காமல் போன
சிவப்பு சட்டை 
இப்போது ஒன்றென்ன நூறு வாங்கலாம்..
ஆனால் இப்போது அது அளவும் சின்னது..
எனக்கு ஆசையும் அதில் இல்லை..

பத்துவயதில் பரீட்சைக்கு முதல் நாள்
பார்க்க ஆசைப்பட்ட படம் 
இப்போது நாள் தோறும் கேபிள் டிவியில்
பார்ப்பாரற்று ஓடிக் கொண்டே இருக்கிறது..

பதின்மூன்று வயதில் 
போக ஆசைப்பட்ட கிரிக்கெட் பயிற்சி..
"வெயில் ராசா கறுத்திடுவாய்"
"படிப்பு பாழாப் போயிடும்"
தடுத்த வார்த்தைகளால் வாடிப்போன கனவுகள்
இனி மகனை அனுப்ப மனதில் விரியும்..

படிக்க ஆசைப்பட்ட படிப்பு
வாழ ஆசைப்பட்ட வீடு
ஓட்ட ஆசைப்பட்ட வாகனம்..
எல்லாமே அந்தந்தக் காலத்தில் 
நரிக்கு எட்டாமல் போன முந்திரி போல
அதனால் புளித்துப்போனவை
இப்போது அத்தனையும் கையில் கிட்டும்..
ஆனாலும் 
கிடைக்கையில் பிடிக்காது எவையும்.. 

கோப்பைத் தேநீராக வாழ்க்கை..
சூடு ஆற முதல் குடித்துவிட ஆசை தான்..
ஆனால் நாவு சுட்டுவிடும் என்று காத்திருக்க,ஒரேயடியாக ஆறிவிடுகிறது..

அத்தனைக்கும் ஆசைப்படு..
சொன்னவன் யார் எனத் தேடித் பார்க்கிறேன்..
அளவோடு ஆசைப்பட்டுமே அளந்து தான் கிடைக்கிறது..

அதற்காக ஆசையேபடாமலும்
ஞானியாக வாழ நம்மாலே முடியாதே..

காணி நிலம் வேண்டும் காணியுடன் அங்கிங்கே  
எமது கவிஞன் கேட்டவை பற்றி 
இங்கும் நாம் கேட்டோம்.


என் காதல் கவிஞன் அன்று ஆசைப்பட்டவை
அவன் கவிதைகள் போலவே கட்டுக்கட்டாக
அடுக்கடுக்கா அடுக்கிக் கொண்டே போகலாம்
எம் கவித் தலைவரும் அது பற்றி சொல்லி இருந்தார்..

கால் வயிற்று க் கஞ்சிக்கும் காசில்லாமல்
கற்பனையிலேயே கோட்டை கட்டி
ஆனந்த சுதந்திரக் கனவையும் 
கண்முன்னே பாராமல் 
ஆனையின் காலில் அகாலமானான்..

தமிழனின் வாழ்வு இன்றும் 
அதே கற்பனை, கவிதை, கனவு 
விவாதம், தேடல், விடுப்பு
என்றே திரிகிறது..

சாத்தியமாகும் எந்த விடயமும் சத்தியமாகத் தெரியவில்லை
சரித்திரங்களையும் சாத்திரங்களையும் வைத்து
சந்ததி சந்ததியாக 
கனவுகளின் மீதும் கவலைகளின் மீதும்
எங்கள் காகித மாளிகைகள்
கட்டப்படுகின்றன..

கிடைக்கும் என்றிருந்தவை கிடைக்கா என்று தெரிந்த பின்பும்
கிடைத்த வரை போதும்
என்று வாழும் வாழ்வும் ஒரு சுவை தான்..
கனவிலாவது கிடைக்காமல் போனவை கிடைத்ததாக 
கிளர்வு காணலாமே...


இன்னும் ஒன்று கேள்விப் பட்டேன்...
கனவுகளின் பலாபலன்கள்
நூல் தமிழ்ப் பதிப்பில் தான் அதிகமாக
விற்பனையாகிறதாம்..

கனவு காண்பீர் என்று அப்துல் கலாம்
மட்டும் சொல்லவில்லை..
நானும் தான்..
கண்டவன், காண்பவன், காணவும் போகிறவன்
என்ற உரிமையுடன்...

காலாகாலக் கனவுகள்
கலையும் மேகம் போல ஆனாலும் 
கனவு காண்பதை நிறுத்தோம்..
காணும் கனவுகளில் ஒன்றாவது
நனவாகாதா என்ற நப்பாசை தான்...


ஆனால் 
என்ன முரணோ எனக்குத் தெரியாது 
இப்போதெல்லாம் தூங்கக் கிடைக்கும் 
சில மணித் துளிகளில்
எனக்குக் கனவுகள் வருவதே இல்லை
வரும் கனவுகளும் ஞாபகமில்லை


கண்ட கனவுகள் போதும்
கண்டதை முதலில் மற
பின் புதிய கனவுகள் வரும்
என்று சொல்லாமல் சொல்லும் 
காலத்தின் தகவலோ?


பகற்கனவுகள் காண்பதில் சற்றும் 
ஆர்வமில்லாதவன் என்பதால் 
அர்த்தமுள்ள கனவுகளை மட்டும்
வாழ்வில் பதிவு செய்து
அடுத்து சுழலும் ஆண்டுகளுக்காக
ஆசைகளை அதிகமாக வைத்துக்
காத்திருக்கிறேன். 


படங்கள் சகோதரன் விமலாதித்தன் பேஸ்புக்கில் ஏற்றியவை. 



ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner