August 31, 2009

கந்தசாமி... என் பார்வையில் கலக்கல் சாமி..


கந்தசாமி - மூன்று வருட எதிர்பார்ப்பு, காத்திருப்பு, பிரமாண்ட பில்டப்புக்களுக்குப் பிறகு வெளிவந்துள்ள திரைப்படம்.

தேவிஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்கள் நீண்டகாலத்துக்கு முதலே வெளிவந்து பிரபலமாகி கொஞ்சம் ஓய்ந்து, தேய்ந்து கொண்டிருக்கும் நேரத்தில், இதோ புலி வருது புலிவருது, இன்று நாளை என்று ஒரு மாதிரியாக வந்தே விட்டார் கந்தசாமி.

(என் கந்தசாமி பதிவும் இதோ,இதோ என்று இழுத்தடித்து தான் இன்று வருகிறது.. என்ன பொருத்தமோ?)

பாத்திரத்தேர்வு, கடும் உழைப்பு, அர்ப்பணிப்பு போன்றவற்றினால் விக்ரமில் இருக்கும் ஈர்ப்பு, சுசி கணேசனின் முன்னைய படங்கள் (விரும்புகிறேன், திருட்டுப்பயலே) ஏற்படுத்திய வித்தியாசமான எதிர்பார்ப்புக்கள் + கந்தசாமி பாடல்கள் (அநேனமானவை விக்ரம் பாடியதும் - குத்துப்பாடல் + melody இல்லாமல் தேவி ஸ்ரீ பிரசாத் பாணியிலேயே பாடல்கள்) என்பன என்னையும் கந்தசாமியை எதிர்பார்க்க வைத்தன.

எனினும் இவை மட்டுமல்லாமல் கந்தசாமியை நான் எதிர்பார்க்க இன்னுமொரு முக்கியமான காரணங்கள்.

எமது வெற்றி FM வானொலிதான் 'கந்தசாமி' திரைப்படத்தின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ வானொலி. அதற்காக நான் காகம் வெள்ளை என்று சொல்பவனல்ல – குசேலனுக்கும் நாம்தான் அனுசரணை வழங்கினோம். அதற்காக குசேலனை வெற்றிப்படம் என்று சொல்லிவிடமுடியுமா?

இன்னுமொன்று –
கந்தசாமி ஒரு Super Hero படம் என்று விளம்பரப்படுத்தியதும் மனதுக்குள்ளே ஒரு ஆசை எழுந்தது. தமிழில் மிக அரிதாகப் போயுள்ள அதீத சாகச, அபூர்வ சக்தி படைத்த (Super hero subjects)கற்பனை படமாக கந்தசாமி வராதா என்பது தான் அது!

ஆங்கிலத்தில் Super Man, Spider Man, Transformers, Terminator, Harry Potter போன்ற படங்கள் வந்தால் கொடி பிடித்து, மாலை போட்டு வரவேற்பு கொடுத்து, பின் தமிழிலும் மொழிமாற்றி சிலந்தி மனிதன் என்றும் மாயஜால மந்திர வலை என்றும் இஷ்டப்படி பெயரிட்டு வெற்றிவாகை சூடிப் பார்க்கும் எம்மவர் தமிழில் மட்டும் இப்படிப் படம் எடுத்தால் தயாரிப்பாளருக்கு துண்டையும் போட்டு, இயக்குனருக்கும் கதாநாயகனுக்கும் காதிலும் மூக்கிலும் புகை வரவும் பண்ணிவிடுகிறார்கள்..

இதற்கு காரணங்களும் இல்லாமல் இல்லை.

ஆங்கில திரைப்படங்களோடு ஒப்பிடும்போது தமிழ்ப் பக்கம் தொழிநுட்ப வளர்ச்சியும், தயாரிப்பு செலவும் மிகப் பின் தங்கியிருப்பது பிரதான உறுத்தும் காரணம்..

தாணு தாரளமனம் படைத்தவர் என்பதாலும், சுசி கணேசன்,விக்ரமின் பரீட்சார்த்த முயற்சிகள் பற்றிய எனது நம்பிக்கையாலும், ஏற்கெனவே வெளியான பல புகைப்படங்களாலும் கந்தசாமி ஒரு Super hero subject தமிழ்ப் படமாக இருக்கும் என்று நம்பினேன்.

TV விளம்பரங்களில் பார்த்தது போலவும், பட ஆரம்பத்தில் சில காட்சிகளும் தமிழின் முதலாவது சூப்பர் ஹீரோ படமாக இந்தப் படம்தான் அமையுமா? என நம்பியிருந்தால் மன்சூரலிகானை முதல் காட்சியில் துவைத்துப்போட்ட அதே சேவல் - கொக்கரகோ மனிதன்தான் - IPS கந்தசாமி என்று காட்டும்போது எனக்கு கொஞ்சம் ஏமாற்றமே.

எனினும் அந்நியன் போல இருவேறு மனிதர்களல்ல - இருவரும் ஒருவரே. ஏன் சாமி ('சாமி' படமல்ல)அவதாரம் எடுக்கிறார். எப்படி கடவுள் அவதாரமெடுத்து ஊழல் ஆசாமிகள், மோசடிப்பேர்வழிகளை தண்டிக்கிறார் என்பதையெல்லாம் சஸ்பென்ஸ் இல்லாமலே காட்டுவதில் இயக்குனர் தனித்துத் தெரிகிறார்.

சஸ்பென்ஸ் வைத்துப்படமெடுப்பதை விட சஸ்பென்ஸ் எதுவும் இல்லாமல் இப்படிப்பட்ட நேர்க் கதைகளை வித்தியாசமாக எடுப்பது தான் சவால்.. எல்லாத் தோசைகளும் மாவால் தான்.. ஆனால் சில தோசைகள் மட்டும் தனிச் சுவையில்லை? அது போல..

கந்தசாமி அனைவரும் அறிந்த ரோபின்கூட் பாணியிலான ஒரு கதை.. காலாகாலமாக மலைக்கள்ளன் முதல் அண்மைய சிவாஜி வரை பல பேர் கையாண்ட கதை..தெரிந்த கதை தானே என்று யாராவது சிலர் யோசித்திருந்தால் குரு,ஜென்டில்மன்,ரமணா,அந்நியன்,சிவாஜி என்று இவை அனைத்துமே தோற்றிருக்கவேண்டுமே ..

எனவே சினிமாவைப் பொறுத்தவரை கதை என்பதற்கும் அப்பால் திரைக்கதையும் படமாக்கப்படும் விதமுமே மிக முக்கியமானவை.
சுசி கணேசனின் திரைக்கதை அவரது வழமையான படங்கள் போலவே விறுவிறுப்பாகவும், திட்டமிடப்பட்டும்,திசை விலகாமலும் இருப்பது கந்தசாமியின் பலம்.

படத்தின் நீளம் கொஞ்சம் அதிகம் போல் தோன்றுவதும், மூன்று வருடம் படம் வருவதற்கு இழுத்ததும் படத்தின் சுவாரஸ்யத்தையும் விறுவிறுப்பையும் குறைத்தது உண்மை..

இவ்வாறான தனி மனித சாகசப் படங்களுக்கு வலு சேர்ப்பதே /கதாநாயகப் பாத்திரத்துக்கு பலம் சேர்ப்பதே பலமான ஒரு வில்லன் பாத்திரப் படைப்பு..

(ஆங்கிலத் திரைப்படங்கள் பாருங்கள்) அந்நியன்,சிவாஜியிலும் அந்தப் பலவீனங்கள் இருந்தாலும் ஷங்கரின் நுட்பம் அவற்றை மறைத்து விட்டன.

கந்தசாமியில் மூன்று வில்லன்கள்..

ஆசிஷ் வித்யார்த்தி கபடம்..பார்க்கையில் விக்ரமிடம் தோற்றுப் போகிறார்-இலகுவாக..
முகேஷ் ஏற்றுள்ள பாத்திரம் பிற்பாதியில் முக்கியம் பெறுகிற ஒரு மஜா வில்லன்.
மனிதர் அனுபவித்து செய்திருக்கிறார்.. (இதை எந்த அர்த்தத்திலும் படம் பார்த்தவர்கள் எடுத்துக் கொள்ளலாம்)
போக்கிரியில் பொறுக்கி இன்ஸ்பெக்டராக வரும்போதேஇன்னும் கொஞ்சம் பொறுப்பான(!) வில்லன் பாத்திரத்தை இவருக்குக் கொடுக்கலாமே என்று யோசித்தேன்..

மீனாகுமாரி பாடலில் குத்தாட்டம் போட்டுக் கலக்கி இருக்கிறார்.. (முமைத் கானையே பார்க்கவிடாமல் இவர் ஆடும் குத்தாட்டம் ரசனை)

ஆனால் இவரது வில்லன் பாத்திரத்தை(யாவது) இன்னும் கொஞ்சம் கனதியாக்கி இருக்கலாம்.. இதன் மூலம் கந்தசாமியின் பாத்திரத்தின் வீரியம் கூடியிருக்கும்.

அலெக்ஸ் மெக்சிகோவில் உள்ள பினாமியாக வருவது அவ்வளவு பொருந்தவில்லை..

படத்தில் ஹீரோ வில்லன்களின் சவால்களை கொஞ்சம் எளிதாகவே முறியடிப்பதால் சில காட்சிகள் உப்பு சப்பற்று போய்விடுகின்றன.கதாநாயகனின் பாத்திரப் படைப்பை மேலும் வலிமையாக ஒரு சாகச வீரனாகக் காட்ட இயக்குனர் முயன்ற காரணத்தாலேயே வில்லன்களை பல இடங்களில் டப்பாவாக்கி இருக்கிறார் என நினைக்கிறேன்.


மெக்சிகோவில் எடுக்கப்பட்ட படப்பிடிப்பு வேண்டுமென்றே வேறு வர்ணத்தில் எடுக்கப்பட்டுள்ளமை சிலபேருக்கு பிடிக்கவில்லை அல்லது புரியவில்லை.. (இதிலே சில பிரபல பதிவுலக விமர்சகர்களே கண்ணு நோவுது,தலை சுத்துது என்று சொல்வது அவர்களுக்கு வயது போய்விட்டதைக் காட்டுகிறதா தலைமுறை இடைவெளியா என்று புரியவில்லை)

இப்போதெல்லாம் பல தமிழ் படங்களில் இந்த வித்தியாசமான colour tonesஐப் பாவிப்பதன் மூலம் காட்சிகளின் களங்களில் வேறுபாடு ஏற்படுத்துவது தானே trend..

சுசி ஏற்கெனவே தனது 'திருட்டுப்பயலே' படத்திலும் இதே நுட்பத்தை மிக நேர்த்தியாகப் பயன்படுத்தி இருந்தார்.

ஆனால் மெக்சிகோ காட்சிகளை இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பாக எடுத்திருக்கலாமோ என எண்ணத் தோன்றுகிறது..

ஊழல்,கறுப்புப் பணம், ரமணா பாணியிலான ஒரே பள்ளி மாணவர்கள்,புள்ளிவிபரங்கள் என்று பட்டியலிட்டே பார்த்தாலும் ஊழல் ஒழிப்பு CBIஇலிருந்து ஆரம்பிப்பதும்,போலீஸ் குழுவே நல்லது செய்பவனை/பவரை துரத்துவதும் புதுமை என்றால், CBIஇன் தலைவராக வரும் தெலுங்கின் முன்னாள் உச்ச நட்சத்திரம் கிருஷ்ணாவே (கன்னடப் பைங்கிளி சரோஜாதேவியின் காதல் புகழ்) இதற்கு உதவியளித்து ஊக்கப்படுத்துகிறார் என்பது தெரியவரும்போது கொஞ்சம் அதிர்ச்சி தான்..

வடிவேலுவை திணித்திருந்தாலும் கதையின் சம்பவங்களோடு அவரைப் பின்னி (பிரபுவும் மன்சூர் அலிகானும் அவரைப் பின்னுவது வேறு கதை) கொண்டு சென்றுள்ளார் சுசி கணேசன்.

வழமை போல அப்பாவியாக வடிவேலு அடிவாங்கினாலும் தண்ணீர் பீய்ச்ச பீய்ச்ச ஆடும் ஆட்டமும் அசைவும் ரகளை..

பிரபு இருக்கிறார் என்று மட்டும் தான் சொல்ல முடிகிறது.. இன்னும் கொஞ்சம் அவருக்கு வேலை கொடுத்திருக்கலாம்..(இந்தப் பாரிய உடலுக்கு இது கூடக் குடுக்கலேன்னா எப்படி?)

ஆசிஷ் வித்யார்த்தியின் அடிவருடி வழக்கறிஞராக வரும் Y.G.மகேந்திராவின் முகத்தில் தான் எத்தனை பாவங்கள்.. மனிதர் சின்னப் பாத்திரமே ஆனாலும் கலக்கி இருக்கிறார்..

ஸ்ரேயா ஒரு ஆங்கிலப்படங்களில் வரும் வில்லிகள் போன்றதொரு கவர்ச்சி நாயகி.. நிறையப் பேருக்கு ஸ்ரேயாவின் கவர்ச்சி பிடித்திருந்தாலும் அவரது நவீன நாகரிக நடை,உடையலங்காரம்,சிகை அலங்காரம் பிடிக்கவில்லை..

எனினும் சுப்புலக்ஷ்மி என்று அவர் ஏற்றுள்ள வில்லத்தனமான நவநாகரிக நங்கை ப் பாத்திரத்துக்கு அவரது கவர்ச்சியும் சிகை அலங்காரமும் ஆடை வடிவமைப்புக்களும் பெருமளவு பொருத்தத்தையும் படத்தின் செழுமைத் தன்மையையும் ஏற்படுத்தி இருந்தன.

நான் எப்போதுமே ஸ்ரேயாவின் ரசிகன் அல்ல..எவ்வளவு தான் அவர் கவர்ச்சியை வீசியெறிந்து அள்ளித் தூக்கி எங்கள் மீது வாரி இறைத்தாலும் நான் ஸ்ரேயாவை எப்போதும் ரசிப்பவன் அல்ல.. ஒரு சின்ன சில்க்கு, சோனா ரேஞ்சிலேயே அவரை நான் எப்போதும் கணிப்பதுண்டு..

ஆனால் கந்தசாமியின் சுப்புலக்ஷ்மியில் ஸ்ரேயாவை ஆங்கிலத் திரைப்படங்களில் வரும் ஒரு ஸ்டைலிஷ் வில்லியாகப் பார்கிறேன்.. ஒரு கெத்தும் திமிருமாக அவரது நடையும் சுசித்ராவின் ஆம்பிளைத்தனமான குரலும் சேர்ந்து அந்தப் பாத்திரம் உயிர்பெற்று நிற்கிறது.

விக்ரம் - உடல் மொழியாக இருக்கட்டும், நிமிர்ந்த நடையுடன் திமிர்த்துத் தெரியும் அந்த வீரமாக இருக்கட்டும், அளவான உதட்டசைவோடு தெளிவாகப் பேசும் வார்த்தைகளாகட்டும், சண்டைக்காட்சிகளில் கிளர்ந்து தெரியும் கட்டுடலாகட்டும் இந்தப் பாத்திரத்தில் இது போன்ற பாத்திரங்களில் அச்சாக வார்ப்பதற்கு இவர் மட்டுமே என்று நினைவில் நிற்கிறார்.

IPS கந்தசாமியாக வரும்போது இவரது ஆடைகளும் சேர்த்து மிக நேர்த்தியான பாத்திரமாக வடிவமைத்த இயக்குனருக்கும் பாராட்டுக்கள்.

சேவல் மனிதனுக்கும்,IPS கந்தசாமிக்கும் இவர் காட்டும் சின்ன சின்ன வேறுபாடுகளும் ரசனை. காசி,அந்நியன் போன்ற கனதிகளைத் தாங்கிய விக்ரமுக்கு இந்தப் படத்தின் பாத்திரங்கள் ஊதிவிட்டுப் போகக்கூடியவை தான்.

எனினும் சேவல் மனிதனாக வந்து வதம் செய்யும்போது காட்டும் உடல் அசைவுகள்,முகபாவ மாற்றங்கள் அற்புதம்..

விக்ரம் பெண் வேடத்தில் வந்து போடும் கூத்துக்களும் சண்டையும் ரசிக்க வைத்தாலும் பெண் வேடம் பொருந்தவில்லை என்றே சொல்லவேண்டும்.. மயில்சாமி குழுவினர் ஆண்தன்மை கொண்ட அந்தப் 'பெண்'ணைப் பார்த்து மயங்குவது கொடுமை.. ;)

காதல் காட்சிகள் வாய்க்கவில்லை.. ஸ்ரேயா ஒரு வில்லி போலவே தென்படுவதால் உண்மையாக அவர் காதல்வயப்ப்படும்போதும் எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போவது இயக்குனர் விட்ட ஒரு பலவீனம்.

விக்ரமின் நண்பர்கள் அறிமுகப்படுத்தப்படும் இடம்,விக்ரமின் அலுவலகத்துக்கு ஸ்ரேயா வரும்போது விக்ரம் மிக லாவகமாக கேள்விகளாலேயே பதிலளிப்பதும், மெக்சிகோ தடாகத்தில் லவ்வ்வுவது போல Laptopஇன் password அறிந்துகொள்வதும் இயக்குனரின் ஐடியாக்கள் பளிச்சிடும் இடங்கள்.

எனினும் திருட்டுப்பயலே திரைப்படத்தில் ஒளிப்பதிவில் அசத்திய wide angle ரவிச்சந்திரன்(பெயர் சரி என நினைக்கிறேன்) போல ஒருவர் கிடைத்திருந்தால் கந்தசாமி இன்னும் கொஞ்சம் பிரம்மாண்டமாக இருந்திருக்கும்.

ஏகாம்பரம் சில இடங்களில் தாணு செலவழித்த பிரம்மாண்டத்தைக் கொண்டுவரவில்லை என்றே நான் கருதுகிறேன்.

குறிப்பாக அலெக்ரா பாடலில் ஸ்ரேயாவின் குலுக்கல் தவிர வேறு எதுவும் ரசிக்கும் படியாக இல்லை.

ஆனால் ஒரே சிறிய துண்டோடு ஸ்ரேயா ஆடும் மியாவ் பாடலில் சும்மா கிறங்கடிக்கிறார்..எங்கே துண்டு கழன்று விடுமோ என்று நான் பதறிக் கொண்டிருக்க, என்னுடன் பக்கத்தில் இருந்து பார்த்த நண்பர் அந்தத் துண்டை ஊசி கொண்டு குத்தி இருப்பாரா இல்லை கயிற்றால் கட்டி இருப்பார்களா என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார்.

தமிழ் திரைப்பட வரலாற்றிலேயே சிலுக்கு கதாநாயகியாக நடித்த படங்களை விட ஒரு கதாநாயகி படம் முழுவதும் கவர்ச்சியாக நடித்த ஒரே படம் கந்தசாமியாகத் தான் இருக்கவேண்டும்.

அநேகமான பாடல் காட்சிகள்,முகேஷின் நகரும் சொகுசு படுக்கை அறை பஸ் என்று எக்கச்சக்க பணத்தின் தாராளம் தெரிகிறது..

படமோ அதீத பணக்காரர், அவதிப்படும் ஏழைகள் பற்றி போதிக்கிறது.. செலவளித்து சொன்னால் தான் செலவழிக்காதே என்ற கருத்தையும் ஏற்றுக் கொள்வார்கள் போலும்..
சொல்லப்பட்ட புள்ளிவிபரங்கள் கொஞ்சம் போரடித்தாலும் மறுபக்க நிதர்சனம் நெஞ்சை உறுத்தியது.. தங்கள் பங்குக்கு இரு கிராமங்களை கந்தசாமி குழு தத்தெடுத்திருப்பது மகிழ்ச்சி தான்.. எனினும் இன்னும் என்ன செய்யலாம் என்று அவர்கள் இந்தியா சார்பாக நோக்கட்டும்.

தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை பற்றி சொல்லியே ஆக வேண்டும்.

படத்தின் ஆரம்ப எழுத்தோட்டத்திலிருந்து ஆரம்பிக்கிறது அவரின் இசை ராஜாங்கம்..

ஆரம்ப இசையே அதிரடியுடன் கனதியானது.. பின்னணி இசையில் பிரித்து மேய்ந்திருக்கிறார்..தசாவதாரம்,வில்லுக்கு பிறகு தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு பின்னணி இசையில் ஹட் ட்ரிக் அடிக்கும் வாய்ப்பு.

சின்ன சின்ன விஷயங்களிலும் சிரத்தையாக மினக்கெட்டுள்ளார். பாடல்கள் எல்லாம் எப்போதோ பிரபலமானதால் அதுபற்றி நானும் மீள சொல்லத் தேவையில்லை என நினைக்கிறேன்.

நான் கவனித்த இன்னொரு விஷயம் விக்ரமின் தந்தையாரும் இந்தப்படத்திலே நடித்திருக்கிறார். முகேஷின் உதவியாளராக..

படத்தின் மிகப்பெரும் பலவீனமாக நான் கருதுவது சண்டைக் காட்சிகள்.. வேகமும் ஆக்ரோஷமும் போதாது.. நாடகத் தன்மையாக பல இடங்களில் தெரிந்தது.

என்னைப் பொறுத்தவரை இந்தத் திரைப்படத்தை நான் ரசித்தேன்.. அண்மைக்காலத்தில் நான் பார்த்த பல படங்களோடு பார்க்கையில் கந்தசாமி எனக்கு போரடிக்கவும் இல்லை,மோசமாகத் தெரியவும் இல்லை..

ஒட்டுமொத்தமாகப் பல பதிவரும் சேர்ந்து கந்தசாமியை மோசமாகவும் வில்லை விட மோசம் என்று முத்திரை குத்தியதும் பெரும் ஆச்சரியம்..(வில்லு பெட்டர் என்று சொன்னதெல்லாம் ரொம்பவே ஓவர்.. )

இவ்வளவுக்கும் நான் இலங்கையில் கந்தசாமி ஓடுகின்ற பன்னிரண்டு திரையரங்குகளிலும் கேட்டபோது வசூல் நிறைவாக இருப்பதாகவே சொல்கிறார்கள்..

இந்தியாவில் படம் தோற்றுவிட்டதாக சொல்லிக் கொண்ட பலபேருக்காக இன்று நான் பார்த்த ஒரு பதிவு..

சென்னை நகரில் ஒரே வாரத்தில் ரூ.1,73,43,778 லட்சம் வசூல் செய்துள்ளது விக்ரம் நடித்து வெளியாகியுள்ள கந்தசாமி.

தமிழ் சினிமா வரலாற்றில் இது ஒரு வசூல் சாதனை என படத்தின் சென்னை [^] நகர விநியோகஸ்தர் அபிராமி ராமநாதன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

21.08.2009 முதல் 27.08.2009 வரை ஏழு நாட்களில் கந்தசாமியின் மொத்த வசூல் ரூபாய் 1,73,43,778. தமிழ் சினிமா [^] வரலாற்றிலேயே முதன் முறையாக 18 திரையரங்கங்களில் ஒரு தமிழ் [^]ப்படம் திரையிடப்பட்டிருக்கிறது.

இப்போ என்ன சொல்லுறீங்க?

என்னைப் பொறுத்தவரை, இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்திருந்தால்,பாடல்கள் வந்த சூட்டுடனேயே இஅர்க்கியிருந்தால் மிகப்பெரும் வெற்றிப்படைப்பாக வந்திருக்கவேண்டிய கந்தசாமி, ஒரு சராசரி வெற்றிப் படமாக அமைந்துவிட்டது..

சுசி கணேசன் & விக்ரம் உங்களிடம் இருந்து மேலும் நிறையவே எதிர்பார்க்கிறோம்..


பி.கு - எழுத ஆரம்பித்து ஒருவாரத்துக்கு மேல் எடுத்துப் போடும் பதிவு இது.. இன்னும் விட்டால் இந்தப் பதிவு வேண்டும் என்று கந்தசாமிக் கடவுளுக்கு யாராவது துண்டு எழுதிப் போட்டிடுவாங்களோ என்று இன்று பதிவிட்டு விட்டேன்.

இது வக்காலத்தோ, உத்தியோகபூர்வ வானொலி என்பதற்காகவோ நான் வழங்கும் பதிவு அல்ல..
என் ரசனை இவ்வளவு தான் என்று நீங்கள் சொல்லலாம்.. இல்லையேல் மற்றவர்களின் ரசனை அவ்வளவு தான் என்று நான் எடுத்துக் கொள்கிறேன்.. :)

கொஞ்சம் நீளமாக அதேவேளை மனதில் பட்டதை சொல்லும் பதிவு இது.. நிறையப் பேர் சொல்கின்றார்களே என்று ஆமாம் சாமி போடுவதில்லை நான்..

ரசனைகள் வித்தியாசப்படலாம்..
என்னுடைய 'கந்தசாமி'யை வாசித்த பிறகு மீண்டும் ஒரு தடவை கந்தசாமி பாருங்கள்.. புதிதாக தெரியும்..


இனி வரும் இரவுகளில் எட்டு மணிக்கு..



இனிவரும் ஒரு சில வாரங்களுக்கு இரவில் எந்த விருந்தாளிகளும் வீட்டுக்கு வராதீர்கள் Please...

எட்டுமணிக்குப் பிறகு எனக்கு நானே போடுவேன் ஊரடங்கு!

மனைவி பார்க்கும் 'திருமதி செல்வம்' இனி எங்கள் வீட்டுப்பக்கம் வரமாட்டார்.

என் குழப்படிகார செல்ல மகன் அந்த அரைமணி நேரம் அமைதியாய் இருக்கட்டும்.
அலவலகத்தில் தலைபோகும் வேலை என்றாலும் லோஷன் missing in action..
என்னுடைய மொபைலும் அரைமணி நேரம் அணைக்கப்படும்.

வெள்ளி, சனி, ஞாயிறு இவற்றுள் விதிவிலக்கு.





வேறான்றுமில்லை, இன்று முதல் விஜய் TVயில் திங்கள் முதல் வியாழன் 8மணிக்கு
உலக நாயகன் கமல் 50 – பொன்விழா உலாவரப் போகிறார்.

வேறென்ன வேண்டும்.


August 28, 2009

Breaking news...இடிந்து வீழ்ந்த இலங்கை நீதிமன்றம்..

இலங்கையின் நீதிமன்றக் கட்டடம் இடிந்து வீழ்ந்தது..

இலங்கையின் பழம்பெருமை வாய்ந்த நீதிமன்றக் கட்டடம் புதுக்கடையில் (Hulstorf) அமைந்துள்ளது. மிகப் பழைய அந்தக் கட்டடத்தின் ஒரு பகுதி நேற்று இரவுவேளையில் இடிந்து வீழ்ந்துள்ளது..

சிதிலமடைந்திருந்த தூண்கள் ஐந்து நொறுங்கியதால் கூரை கீழே வீழ்ந்துள்ளது..

யாரும் காயம் அடையவில்லை என்று கூறப்படுகிறது...

எப்போது விழும் என்று பயந்துகொண்டே பலர் இங்கே வழக்கு விசாரணைகள்,அன்றாட சட்ட நடவடிக்கைகளுக்காக சென்று வந்துள்ளனர்.

எனக்கு இடம்பெற்ற கடந்தவருடத்தைய சம்பவத்தின் போதும் வழக்குக்காக நீதிமன்றம் கொண்டுசெல்லப்பட்டு விடுவிக்கப்பட்டதும் இங்கே தான்..அப்போதே பயந்து கொண்டிருந்தேன்..யாராவது சத்தமாகப் பேசினால் எங்கே இடிந்து விழுந்திடுமோ என்று.. பின்னே ஆங்கிலேயர் காலத்திலே கட்டப்பட்டு இன்னமும் திருத்தப்படாமல் இருந்தால் எப்படி இருக்கும்?(ஒரு பகுதி புதிதாக அழகாகக் கட்டப்பட்டிருந்தும் )

தீர்ப்புக்களின் கொடுமை தாங்காமல் தான் தூண்கள் சரிந்ததோ என்று ஆதங்கப்படுகிறார் எங்கள் நண்பர் கஞ்சிபாய்..

August 26, 2009

இதெல்லாம் சொல்லியே ஆகவேண்டும்


இன்று எந்தப் பதிவும் போடாமல், (கந்தசாமி பற்றி எழுதியது பாதியிலேயே கிடக்கிறது...) முன்னைய பதிவுகளுக்கு வந்த பின்னூட்டங்களுக்கு பதில் அளிக்கவும் வாசிக்காமல் bookmark செய்து வைத்த நண்பர்களின் பல பதிவுகளுக்கு பிநூட்டமிடவும், அலுவலகத்தில் சில ஆணிபிடுங்கல்களுக்கும் இன்றைய நாளை ஒதுக்கினாலும், சில விஷயங்களை சொல்லியே ஆகவேண்டும் என்று இந்த அவசர மினிப் பதிவு...

இலங்கைப் பதிவர் சந்திப்பு நடந்து நான்கைந்து நாள் ஆகியும் இன்னும் பரபரப்பு குறையவில்லை.. விமர்சனங்கள் பின்னூட்டங்கள் பல கோணத்திலிருந்தும் வருவது குறிப்பிடத்தக்கது.

நான் தட்டச்சு சர்ச்சைக்குள் நுழைந்துகொள்ள ஆசைப்படாத காரணத்தால் என்னுடைய கருத்தை எந்தப் பதிவிலும் இடாமல் வேடிக்கை மட்டும் பார்த்து வந்துவிட்டேன்..

என் தனிப்பட்ட கருத்துக் கேட்டால் எனக்கு இரு வித (பல வித என்றும் சொல்லலாம்) தட்டச்சும் இயலும்.. எனினும் வேகமாகத் தட்டச்ச நான் பயன்படுத்துவது Phonetic முறை தான்..

எப்படி அடித்தாலும் என் தமிழ் வெளிவந்தால் மற்றவருக்கு தமிழாக அது புரிந்தால் போதும்..

-----------------

நேரடியாக பதிவர் சந்திப்பு ஒளிபரப்பானத்தில் தான் எத்தனை அனுகூலங்கள்.. நேரடியாக வராமலே பல பேர் இதில் நேரடியாக இணைந்திருந்தும் கலந்துகொண்ட எம்மை விட அழகாக விரிவாக விமர்சனங்கள் எழுதியிருப்பதும் எங்களுக்கு மிகப்பெரியதொரு வெற்றி..

எனினும் இணையத்தினூடு இணைந்து கேவலமாக உரையாடி கிண்டல் செய்த இருவர் பற்றித் தெரிந்தபோது மனம் சீ என்று போனது..
அதில் ஒருவர் இலங்கைப் பதிவர்.. நண்பராக ஓரளவு அவர் பற்றித் தெரிந்த போதும், அவர் அடிக்கடி வேடிக்கை செய்யும் மொக்கை போடும் ஒருவராக இருந்தபோதும், அவரை நான் இந்த சந்திப்புக்கு இரு காரணங்களுக்காக வர சொல்லி இருந்தேன்.

ஒன்று இலங்கையில்லுள்ள ஒரு புதிய திரட்டி பற்றி அவர் அனைவருக்கும் அறியத்தர.. அடுத்தது அவர் பொதுவாக எம்முடைய பல கருத்துக்களுக்கு மாற்றுக் கருத்துடையவர்..மாற்றுக் கருத்துக்களுடைய ஒருவர் வருவது சந்திப்பை மேலும் பயனுள்ளதாக்கும்..

பார்த்தால் வராமலேயே வந்தேன் என்று எனக்கு புருடா விட்டு விட்டு, onlineஇல் வந்து பெண்கள் பற்றி வம்பளந்து கொண்டிருந்திருக்கிறார்..
ஏன் இந்த வக்கிரம்?

------------------

ஆனாலும் அவருக்கு ஒரு தனிப்பட்ட நன்றி.. இன்று முதல் நான் எனது வலைத்தளத்தை செல்பேசியில் வாசிக்கக்கூடிய தளமாக மாற்றும் வழியை அறிமுகப்படுத்தியவர் அவரே..

இன்று முதல் உங்கள் செல்பேசிகளிலும் தமிழிலே தடங்கலில்லாமல் ஏன் வலைத்தளத்தைப் பார்வையிடலாம்...

----------------------

இன்று இலங்கை அணி நியூ சீலாந்து அணிக்கெதிராக இரண்டாம் டெஸ்டில் விளையாடும் அணியில் செய்துள்ள மாற்றங்கள் மிக ஆச்சரியமானவை..

மத்தியூசின் தசைப்பிடிப்புக்கு பதிலாக அணியுள்ளே கபுகேதரவை அழைத்ததன் மூலம் துடுப்பாட்ட வரிசை பலமாகியுள்ளது..

ஹேரத்தின் வரவு நான் எதிர்பார்த்தது.. ஆனால் மென்டிசின் நீக்கம் ஆச்சரியம்.. மூன்று சுழல் பந்துவீச்சாளர்களோடு இலங்கை அணி களமிறங்கி இருக்கலாம்.

குலசெகரவுக்கு ஓய்வு கொடுத்துள்ளார்களாம்.. தொடர்ந்து வரும் முக்கோணத் தொடர்,சாம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகள் கருதி..ஒரு இளம் வேகப்பந்து வீச்சாளர், அதிலும் FORMஇல் உள்ளவருக்கு ஓய்வு தேவையா?

ஒருவேளை புதிதாக அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ள இலங்கையின் தற்போதைய அதிவேகப் பந்துவீச்சாளரான தம்மிக்க பிரசாத்தை(இவர் சாம்பியன்ஸ் கிண்ண குழுவிலும் உள்ளார்) பரிசொதிக்கிறார்களோ?

இலங்கையின் சாம்பியன்ஸ் கிண்ண குழுவில் இருந்து டில்கார பெர்னாண்டோவை நீக்கியுள்ளார்கள்.. எனினும் என்னைப் பொறுத்தவரை தென் ஆபிரிக்காவின் பந்து மேலெழும் (BOUNCY) தென் ஆப்ரிக்க ஆடுகளங்களில் டில்கார உபயோகமாக இருப்பார்.

பிரசாத்தின் வேகப் பந்துவீச்சும் எதிரணிகளைப் பயமுறுத்தலாம்.. டில்காரவின் தொடர்ச்சியான அவருக்கு எதிரியாகி இருக்கலாம்.

நியூ சீலாந்துக்கேதிரான இரு போட்டிகளுக்கான குழுவில் அண்மைக்காலமாக உள்ளூர் போட்டிகளில் பிரகாசித்துவரும் அதிரடி சகலதுறை வீரர் கிகான் ரூபசிங்க சேர்த்துக் கொண்டிருப்பதில் மகிழ்ச்சி.. தொடர்ந்து சுப்பரின் கொல்லைக்குள்ளேயே நிற்காமல் திறமையான இளம் வீரர்களை தேர்வாளர் எடுப்பது மகிழ்ச்சி.
------------------------

நேற்று இரவு தூங்குவதற்கு முதல் தற்செயலாக தொலைகாட்சி அலைவரிசைகளை மாற்றிக் கொண்டிருந்தபோது K TVஇல் பதினோரு மணிக்கு ஆரம்பித்த 'கரையெல்லாம் செண்பகப்பூ' படத்தை கொஞ்ச நேரம் பார்த்தேன்..(அதிகாலை நான்கரை மணிக்கு எழும்பவேண்டி இருந்தாலும் படத்தின் மேலிருந்த ஈர்ப்பினால் தூங்கும் பொது ஒரு மணியாகி விட்டது)

அமரர் சுஜாதா எழுதிய இந்த நாவலை முன்பு முழுமையாக பல தடவை வாசித்துள்ளேன்.. படமாகப் பார்க்கும் வாய்ப்பு எப்போதும் கிடைக்கவில்லை.முழுமையாகப் பார்க்கலாம் என்றால் காலையில் வேலை.

யாராவது K TVக்கு சொல்ல மாட்டீர்களா இது போன்ற அரிய,வித்தியாசமான, நல்ல படங்கள் போடுவதாக இருந்தால் நாங்கள் பார்க்கிற நேரத்தில் வசதியாகப் போட சொல்லி..

அன்றொருநாள் நாசரின் 'அவதாரம்' திரைப்படமும் இதே நேரத்தில் தான் ஒளிபரப்பானது.

மற்ற நேரங்களில் போடுகிற மொக்கை திரைப்படங்களுக்கும்,தெலுங்கில் இருந்து தருவிக்கப்பட்ட மசாலாப் படங்களுக்கும் இந்த இரவு 11 மணி நேரத்தைக் கொடுங்களேன்...


August 25, 2009

(சில) பதிவர்கள் கவனம் - Making of பதிவர் சந்திப்பு



கடந்த ஞாயிறு இலங்கையில் தமிழ் வலைப்பதிவர்கள் முதன் முறையாக சந்திப்பொன்றை நடத்திய ஒரு வரலாற்றுப் புகழ் மிக்க நாள்!

2004ம் ஆண்டு முதல் இலங்கையிலிருந்து பதிவுகள் எழுதிவரும் பலர் இருக்கையில் முதன் முறையாக இந்தப் பதிவர் சந்திப்பை நடாத்தியதில் எனக்கும் ஏதோ ஒரு குறிப்பிடத்தக்க பங்கு இருக்கிறது என்று எண்ணும்போது ஒரு தனிப்பெருமைதான்!

இவ்வளவு நாட்களாக சென்னை பதிவர் கோவைப் பதிவர் சந்திப்பு, சிங்கைப் பதிவர் சந்திப்பு (அடியேனும் இவற்றிலொன்றில் கலந்துகொண்ட பேறுபெற்றேன்) என்றெல்லாம் கேள்விப்பட்டு பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்த காலம் போய், இவற்றையெல்லாம் நிகர்த்து (விஞ்சியிராவிட்டால்) சாதித்துவிட்டோம் என்பது திருப்தியான மகிழ்ச்சி.

(முன்பொரு தடவை நம்ம கஞ்சிபாய் என்னிடம் நக்கலாக மங்கோலியா, சோமாலியாவிலே கூட தமிழ்ப்பதிவர்கள் சந்திப்பு நடத்தினாலும் நடத்துவார்கள். இலங்கையில் மட்டும் நடத்தவே மாட்டீர்கள் போல என்று நக்கலடித்திருக்கிறார்)

சிங்கப்பூர் போய் வந்தபிறகு இலங்கையில் எப்படியாவது ஒரு பதிவர் சந்திப்பில் கலந்துகொள்ளவேண்டும் என்று ஆசை வந்தது. பரபரப்பான வேலைகளில் ஈடுபட்டுள்ள 30பேர் கிரமமான முறையில் இவ்வாறு பதிவர்கள் சந்திப்பை நிகழ்த்தும்போது – பலநூறு பதிவருள்ள இலங்கையில் ஏன் முடியாது?

வந்தியத்தேவன் முன்பே என்னிடம் ஒருமுறை கேட்டபோது, எனக்கு இருக்கும் வேலைகளுடன் தற்போதைக்கு ஒழுங்கபடுத்தல் முடியாது – எனினும் யாராவது ஒழுங்குபடுத்தினால் உதவுவதிலும், பங்குபற்றுவதிலும் நிச்சயம் ஈடுபடுவேன் என்று பதிலளித்திருந்தேன்.


திடீரென புல்லட்பாண்டி ஒரு மொக்கைப் பதிவில் இலங்கைப் பதிவர் சந்திப்பு தன் கனவில் நடந்ததாகக் கிண்டலடிக்க (உண்மையில் எல்லோருடைய ஆதங்கமும் அதில் தொனித்தது) பரபரவென்று எழுந்த ஆர்வத்தில் வந்தி என்னுடன் தொடர்பை எற்படுத்தி பின் புல்லட்பாண்டி, ஆதிரை ஆகியோரும் எம்முடன் தொற்றிக்கொண்டனர்.

ஒழுங்கபடுத்த நான் முன்வராமைக்கான காரணம், பாடசாலைக் காலத்திலிருந்தே பட்ட அனுபவங்கள் தான்!

விவாதங்கள், விழாக்கள், விளையாட்டு நிகழ்வுகள் என்று பல விஷயம் ஒழுங்குபடுத்தப்போய் கையைச் சுட்டுக்கொண்டதும், பெயர் கெட்டுக்கொண்டதும், படிப்புக் கெட்டுப்போனதும், லோஷன் கட்சி சேர்க்கின்றான் என்று பட்டம் பெற்றதும் தான் கசப்பான மிச்சங்கள்!

பொழுதுபோக்குக்கும், ஆசைக்காகவும் வந்த பதிவுலகத்திலும் இது வேண்டாமே என்றுதான்!

எங்கள் நால்வரின் முதலாவது சந்திப்பு Twitter மூலமாக முடிவுசெய்யப்பட்டது வெற்றி FM நடாத்திய Futsal போட்டிகளின் போது – அன்றே மூன்றுமணி நேரம் பலவிஷயம் பேசி முடிவெடுக்கப்பட்டது.

புட்சால் மைதானத்தில் சந்தித்தேபோதே ஒவ்வொருவர் குணாம்சங்களும், ரசனைகளும் ஒத்த வரிசைகளுடையவை எனப் புரிந்துபோனது.

அதிலே ஆதிரையை நான் புல்லட் என்று நினைத்து கால்மணி நேரம் புல்லட்டைப் பற்றி புகழ்ந்து தள்ளிய சம்பவமும் நடந்தேறியது.


மின்னஞ்சல் மூலமாகவே ஆரம்பத் திட்டங்கள், நாம் நால்வரும் சந்திக்கும் ஏற்பாடுகளைச் செய்துவிட்டு – 23ம் திகதியையும் தெரிவுசெய்தோம் - அது ஒரு ஞாயிறு என்பதாலும் 30ம் திகதி பல திருமணங்கள் வருவதாலும் (குறிப்பாக எங்கள் வெற்றி FM குழுவின் முக்கியமான ஒருவரான பிரதீப்பின் திருமணமும் கூட) தான் 23ம் திகதியை தெரிவுசெய்தோம்.

பின்னர் ஒருநாள் ஆதிரை எமக்கு ஆச்சரியப்பட வைக்கும் வரை அன்றுதான் Blogger தளத்தின் 10வது பிறந்தநாள் என்று எமக்குத் தெரியாது.

திகதி முடிவானதும் உடனேயே மண்டபமாக அனைவருக்கும் தெரிந்த, இலகுவாக அணுகக்கூடிய இடமான கொழும்புத் தமிழ்ச்சங்கத்தை தெரிவசெய்தோம். உடனடியாகவே மண்டபத்தைப் பணம் கட்டிப் பதிவுசெய்து – எமது வலைத்தளங்கள் பதிவிட்டு ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் தொடங்கினோம்.

25 பேராவது வருவார்களா என்று ஆரம்பித்த எங்கள் ஏக்கத்துடனான எதிர்பார்ப்பு வந்துகுவிந்த மின்னஞ்சல்கள், தொலைபேசி அழைப்புக்களால் மகிழ்ச்சியுடன், பயமும் ஏற்பட ஆரம்பித்தது. 100 பேராவது என்ற உறுதிவந்தபோது பெரிய மகிழ்ச்சி.

எம் நான்கு பேருடன், பின்னர் மதுவதனன் (Cowboy மது), பால்குடி, சுபானு, சதீஷ் ஆகியோரும் சேர்ந்துக்கொள்ள நம்பிக்கையும் கூடியது.

சுபானு என்ற சின்னப் பையனையும் கூட்டி வந்தார்கள்.. (இவரை ஒரு வக்கீல் ஆக்க எங்கள் புல்லட் கொடுத்த பக்கத்து வீட்டு ஆச்சியின் கறுப்புப் பாவாடை விஷயம் கொடுமை)...
பால்குடி என்று அறிமுகப் படுத்தியவரோ உயரத்தில் ஒரு பாதிப் பனைமரம்..
பெயரளவிலும் பதிவிலும் பழக்கமான மதுவதனன் உண்மையிலும் ஒரு cowboy தான்.. நீண்ட சுருள் முடியோடு நாடகம் போட்டால் சிவபெருமானாக நடிக்க விடலாம் போலத் தெரிந்தார்..


மேலும் பலபேர் தொலைபேசி, மின்னஞ்சல் மூலமாக இணைகின்றோம் - உதவுவதற்கு – என்ன வேலைகளுக்கு என்று கேட்டபோதும் கொடுப்பதற்கு வேலைகள் பெரிதாக இல்லாததால் அந்த நல்ல உள்ளங்களை சேர்த்துக்கொள்ள முடியவில்லை.

பேரளவில் வருவதே பெரிய விஷயாமாக் இருக்கும் என்று தப்புக் கணக்கு போட்டுக் கொண்டு சிற்றுண்டி விஷயத்துக்கு ஒப்புக் கொண்ட புல்லட் படிப்படியாக அதிர்ச்சிக்கு ஆளாகிக் கொண்டிருந்தார்..

நூறு ஆனவுடன் புல்லட் எங்கே வெடித்துவிடுவாரோ என்று பார்த்துக் கொண்டே இருந்தேன்.. மனுஷன் நம்ம வந்தியுடன் சேர்ந்து சேர்ந்து இன்னுமொரு இடிதாங்கியாக எல்லாவற்றையும் சமாளித்துக் கொண்டு போய்ட்டே இருந்தார்.

எங்களது ஏற்பாடுகளுக்கான சந்திப்புக்கள் ஒவ்வொன்றுமே ஒவ்வொரு பரபர, மொக்கைப் பதிவுகள் மாதிரி – ஆக்கபூர்வமான ஏற்பாடுகளோடு – அடித்த லூட்டிகள் கடிபாடுகள், ரோடிக்கும்மிகள் - அறிந்துகொண்ட சுவாரசிய ரகசியங்கள் பல மாதங்களுக்கு பல சூப்பர் ஹிட் பதிவுகளின் போதும் (வந்தியோ, புல்லட்டோ, யார் முந்துகிறார்கள் தெரியாது – ஆனால் இவற்றையெல்லாம் இரத்தக்களறியாகப் போகின்றவர் எங்கள் மூத்த, பிரபல, மஜா, பம்பல் பதிவரான வந்தியவர்களே தானா? என்பது எமக்கெல்லாம் உற்சாகமான விஷயம்)

அடிக்கடி சந்திப்பது எங்கள் வேலைகளுடன் சாத்தியமில்லை என்பதால் gmail,twitter மூலமான தொடர்புகள், கும்மி அரட்டைகள் வேறு.

Gmail தொடர் மின்னஞ்சல்கள் எல்லாம் ஒவ்வொரு முழு நீள நகைச்சுவைத் திரைப்படங்கள் மாதிரி-

Twitter திண்ணைக் கச்சேரிகள் கொலை வெறியுடன் இரத்தம் சொட்டும்..
வந்தியின் யானை மணாளன் கதை.
புல்லட்டின் 3 கோடி பிரச்சினை
ரணிலின் கோ..., வந்தியின் பருவப்பிரச்சினை என்று பலவித பரம ரகசியங்கள் பரகசியமாகி பரபரப்பானது இங்கே தான்!

இப்போது எங்கள் வந்தி ஒரு இடிதாங்கி போல!


இந்தப்பதிவர் சந்திப்பை பொறுத்தவரை விளைந்த நன்மைகள் பலப்பல அவற்றுள் எனக்கு நல்ல நண்பர்கள் பலர் கிடைத்ததும் முக்கியமான ஒன்று.

நான் தவிர்த்து மற்ற மூவரும் சந்தித்து நளபாகம் என்னும் சாப்பாட்டுக் கடையில் புட்டுக்கட்டிய கதையும் தனிக்காமெடி.

இடையிடையே சில மின்னஞ்சல்கள், அனானி, போலிப் பின்னூட்டங்கள் எம்மை உசுப்பேற்றிவிட்டன.

நால்வரும், மது, சுபானு, பால்குடி, சதீஷும் இறுதியாக ஒரு தடவை தமிழ்ச்சங்கத்தில் சந்தித்து நிகழ்ச்சி நிரல், பொறுப்புக்கள், புதிய எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டோம்.

இன்னொரு முக்கிய விடயம் சங்கம், குழு, கொமிட்டி அமைத்து தலைவர், செயலாளர் பதவிகளோடு குழம்பிக்கொள்ளாமல், பொறுப்புக்களை மட்டும் பிரித்து சரியாக நிறைவேற்றியதே Secret of success.

அறிவித்தல்கள், நிகழ்ச்சி நிரல் போன்ற எழுத்து வேலை (பதிவுபோல) எல்லாவற்றையும் வந்தி ஆரம்பிப்பார் – நாம் எங்கள் பாணியில் அதை மேலும் மாற்றி இட்டுக்கொள்வோம்.

ஏதாவது சந்தேகம், பிரச்சினை வந்தால் Trouble shooting மின்னஞ்சல்கள், smsகள் பறக்கும். ஒவ்வொருவர் சிந்திக்கும் பாங்கும் ஒவ்வொரு விதம் என்பது எமக்குள் இன்னொரு அனுகூலமாக இருந்தது.

உருக்கமாக – ரொம்பக் கஷ்டப்பட்டோம். தூக்கம், பசி நினையாமல் அர்ப்பணித்து இந்த சந்திப்பை நடாத்தினோம் என்றெல்லாம் சொன்னால் அது சுத்த புருடா.

புல்லட் மட்டும் தலையணை மாதிரி வைக்கப்பட்ட ஒரு பதாதைப்பெட்டி செய்யக் கொஞ்சம் கஷ்டப்பட்டார். அவரே தான் அதிக நிதி செலவளித்த ஒரு பங்காளர் (மதுவுக்கு நெட் பில் வந்த பிறகு தெரியும்).

அடுத்த பதிவர் சந்திப்பை ஒழுங்கு செய்வோர் இந்தப் பதிவைப் பார்த்த பிறகு செலவு, ஒழுங்குபடுத்தல் பயங்கள் இல்லாமல் நடத்தவே இந்த Making of பதிவர் சந்திப்பு.

வெகுவிரைவில் எங்கள் பதிவர் திலகம் - மூத்த (வயதிலும்) பிரபல (சகல விடயங்களிலும்) மஜா மூன்றாண்டு கடந்த செம்மல் வந்தியத்தேவனின் திருமண ஏற்பாடுகளையும் இதே போல் குழு அமைத்து கும்மியடிக்க இருக்கிறோம் என்பதால் இப்போதே தயாராகிக்கொள்ளுங்கள்.

முதல் அறிவித்தல் வெகுவிரைவில்...

பி.கு :- யானைகளும், கார் வைத்திருப்போரும் கவனம் என புல்லட் எச்சரித்து விடச்சொன்னார்.

இதில் இணைக்கப்பட்டுள்ள படங்கள் எல்லாம் புட்சால் பார்க்க நண்பர்கள் வந்த பொது எடுக்கப்பட்டவை.. காணப்படுவோர் - வந்தியத்தேவன்,புல்லட் பாண்டி, கடலேறி, ஹிஷாம், சதீஷ் & லோஷன்

விஷேட பிற் குறிப்பு - ஒரே நேரத்தில் சதம் மற்றும் இரட்டை சதம் அடிப்பதற்கு சச்சின் டெண்டுல்கருக்கே முடியாதென்று எனக்கு உறுதியாகத் தெரியும்..
ஆனால் எனக்கு இந்த சாதனை கிடைத்துள்ளது..

ஆமாம் எனது வலைப்பதிவில் என்னைப் பின்தொடர்வோராக (Follower) இருநூறு பெருந்தகைகள் (பாவம் அவர்களுக்கு இப்படியொரு துன்பம்...) வந்து சேர்ந்துள்ளார்கள்..

எங்கள் கச்சேரித் திண்ணையான ட்விட்டரில் (Twitter) என்னைத் தொடரும் அன்புள்ளங்கள் சதம் அடித்துள்ளார்கள்..
(ஒபாமா லெவலுக்கு எண்ணிக்கை அதிகரித்தால்.. ஒரு மில்லியன் கணக்கு.. அத்தனை பேருக்கும் வைர மோதிரம் பரிசளிக்கப்படும் என அன்புத்தம்பி புல்லட் பாண்டி எனது ரசிகர் மன்றம் சார்பாக அறிவித்துள்ளார்.. இதெல்லாம் ரொம்பவே ஓவர்டா என்று யாராவது சொன்னாலும் பரவாயில்லை)


August 24, 2009

முதலாவது பதிவர் சந்திப்பு - சில நிகழ்வுகள் சில தகவல்கள் சில படங்கள்




வழமையாகத் தாமதமாக விடியும் ஞாயிறு காலை எங்களுக்கெல்லாம் நேற்று சீக்கிரமாகவே விடிந்துவிட்டது.

வழமையான கொழும்பு நேர மரபுகளையெல்லாம் உடைத்து சரியாக 9 மணிக்கே எமது பதிவர் சந்திப்பை ஆரம்பிப்பதென்றால் சும்மாவா?

என்னதான் எல்லா ஆயத்தமும் செய்தும், பலபேர் 9 மணிக்கே வந்தும், மரபை அவ்வளவு சீக்கிரம் உடைப்பது நல்லாயிருக்காது என்று கருதியும், மேலும் சிலர் வந்தபிறகு ஆரம்பிக்கலாமென்றும் 9.15 அளவிலேயே எமது சரித்திரபூர்வமான முதலாவது இலங்கைத் தமிழ்ப்பதிவர் சந்திப்பை ஆரம்பித்தோம்.(இதுவே பெரிய விஷயமில்லையா?)

சுமார் 75பேர் தாராளமாக அமரக்கூடிய தமிழ்ச்சங்க வினோதன் மண்டபம் முற்றிலும் நிரம்பும் அளவுக்கு பதிவர்கள், வாசகர்கள், விமர்சகர்கள் என்று வந்திருந்தது நிறைவு.

சில முக்கிய நிகழ்வுகள்:

யாழ்ப்பாணம், மன்னார், கிழக்கு மாகாணம், பதுளை, கண்டி, புத்தளம் என்று நெடுந்தொலைவிலிருந்தும் ஆர்வத்துடன் பலர் வந்திருந்தனர்.

இனிமேலும் பதிவு ஆரம்பிக்கும் உற்சாகத்துடன் பல இளையவர்கள்!
பதிவர்கள் தங்களை அறிமுகப்படுத்திய போது இவ்வளவு நாளும் எழுத்துக்கள், பின்னூட்டங்கள் மூலமாக அறிந்த பல நண்பர்களின் முகங்களைக் கண்டோம்.

தங்களையும் தங்கள் வலைத்தளங்களையும் அறிமுகப்படுத்தியோரில் ஒன்றோ, இரண்டு பேர்தான் சீரியஸ் பதிவு எழுதுகின்றவர்களாம் (அரசியல், சமூக, இலக்கியப் பதிவுகள்) இவ்வளவு சீரியஸான இலங்கையில் சீரியஸான பதிவரே இவ்வளவு பேர் தானா?

அநேகமானவர்கள் என்னைப் போல, நம்மைப்போல பல்சுவை (அதாங்க மொக்கை, மசாலா) பதிவர்கள் தானாம்.... வேறு வழி?

புல்லட்டின் ஆரம்ப வரவேற்புரையே அதிரடி சிரிப்பு வெடிகளைத் தூவிவிட கலகலப்பான ஆரம்பத்துடன் கூட்டம் செல்வது உறுதிப்பட்டது.

6ஆம் வகுப்புப் படிக்கும் ஒரு குட்டி பதிவரும்(தந்தையார் தான் அதிகம் உதவுகிறார் போலத் தெரிந்தது). வந்திருந்தார்.

குட்டிப் பதிவர்..

புல்லட்டின் கடிகள் மொக்கைகள் கூட்டத்தின் கனதியையும் சீரியஸ் தனத்தையும் குறைக்க உதவியதோடு பட்ட (நிதிக்) கஷ்டங்களை வேடிக்கையாக்க உணர்த்தவும் உதவியது.

குறிப்பாக வடை டீ சாப்பிட வந்தவர்கள் பல்லுப்போன கதை இப்போது நினைத்தாலும் சிரிப்புத்தான்.

புல்லட்டின் ஐடியாவில் கொண்டுவரப்பட்ட Blogger இன் 10வது பிறந்தநாள் கேக்கை அறிமுகப்படுத்தி 10 மெழுகுவர்த்திகளை ஏற்றி மின் அனைத்து வெட்டுவதற்கு ஆட்களை சுவாரஸ்யமாகத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை ஆதிரைக்கு வழங்கினோம்.

Happy birthday Blogger...

இஸ்லாமிய சகோதரர்களின் நோன்பினால் நிறைய வடைகள் பற்றிஸ்கள் கேக்குகள் கேட்பாரற்று கிடக்க என் வயிறும் எங்கள் வீட்டு புல்லட் வீட்டு குளிர்சாதப் பெட்டிகளும் அவற்றுக்கு தஞ்சம் வழங்கின.


சுபானு வலைப்பதிவுகளும் சட்டமும் பற்றி கொடுத்த விளக்கங்கள் சிலபேருக்குத் தெரிந்தும் பலபேருக்குப் புதியதாகவும் இருந்தது. இந்தப் பையன் தானா அந்த ஊஞ்சல் காரன் என்று யாரோ பின்னாலிருந்து முனுமுணுத்தார்கள்.

சட்டப்படி விளக்கம் கொடுத்த சுபானு..

யாரோ Law-சன் இருக்க இவர் என்ன law விடுகிறார் என்றார்கள்.

மருதவூரான் திரட்டி பற்றி விளக்கினார்...அது கொஞ்சம் அதிகமாகவே யாழ்தேவி திரட்டி பற்றிய விளக்கமாய்ப் போய் விட்டதோ என்று தான் வற்தியின் காதைக்கடித்தும் வைத்தேன். (பின்னர் கலந்துரையாடலின் சூடான விஷயமாக இந்த யாழ்தேவியே மாறிப்போனது)

திரட்டிகள் பற்றி சொல்லும் மருதமூரான்

சேரன் கிரிஷ் தொழினுட்ப விக்கங்கள் தந்தார். அணுகமுடியாதளவு பயமாக இருந்த சில பிரமாண்ட விஷயங்களும் என்னைப்போல தொழினுட்ப அறிவின் ஆரம்பக் கட்டத்தில் இருப்போரும் மிக எளிதாக புரியக் கூடியதாக இருந்தது.

மதுவதனின் கைவண்ணத்தில் ஊரோடி பகியும் சேர்த்து நேரடி ஒளிபரப்பை மேற்கொண்டது நேற்றைய சந்திப்பின் உச்சக்கட்டம்.

கணினி திருப்பி திருப்பியே கழுத்தையும் கைகளையும் சுளுக்கிக்கொண்ட பகீ, மது

பல பிரபல மிகப்பிரபல சர்வதேசப் பதிவர்களும் நேரடியாக பார்த்ததோடு தங்கள் கருத்துக்களையும் உடனுக்குடன் பதிவு செய்தார்கள்.
ஒரே நேரத்தில் நாற்பது பேர் வரை இணைந்திருந்தது சிறப்பு. தொழிநுட்பம் எப்படியெல்லாம் எம்மை சேர்க்கிறது..

எங்களுக்கும் யாராவது தாய்க்குலம் பேசாதா என்று ஆசைதான். முன்வந்தால் தானே? ஒரேயொரு (மன்னாரிலிருந்து வந்த சகோதரி) கலந்துரையாடலில் பேசினார்.

மின்னும் கமெரா பளிச்கள்

அவர்களது கேள்விகள் உடனடியாக பதிலளிக்கப்பட்டன. பெண்களில் யாராவது ஒருவரைப் பேச விடுமாறு கோரிக்கைகள் தான் அதிகமாகவே chattingஇல் வேகமாக வந்தன.


மன்னார் சகோதரி பேசும் போது எதோ ஒரு இடத்திலே தான் தமிழச்சி என்று சொல்லி வைக்க, யாரோ ஒரு பதிவர் வந்து என்னிடமும் வந்தியிடமும் 'இவர் தான் அந்த 'தமிழச்சி'யா என்று கேட்டது கொடுமையிலும் கொடுமை..

33 வீத ஒதுக்கீடு இங்கே கேட்க மாட்டீங்களா?

சிறப்புரையாற்ற நாம் அழைத்தவர் பிரபல ஒலி ஒளிபரப்பாளர் கவிஞர் விமர்சகர் நல்ல வாசகர் என்று பல பரிமாணம் கொண்ட திரு எழில்வேந்தன்..இலங்கையில் பிரபல கவிஞர் நீலாவணனின் மகன்..

சுருக்கமாகவும் சுவையாகவும் உரையாற்றிவிட்டு கிரிக்கெட் பதிவுகளை மட்டும் அதிகமாகப் போடும் என்னையும் சகபதிவர்களையும் ஒரு பிடி பிடித்துவிட்டுப் போனார்.

எழில் அண்ணா செய்த இன்னுமொரு நல்ல காரியம் நிதி சேகரிப்பு பற்றிய அறிவித்தல்..
எல்லாச் செலவுகளையும் எமக்குள்ளேயே பகிர்ந்து கொள்வது என்று நாம் முடிவெடுத்திருந்தாலும், எமது கைகளை கொஞ்சம் அதிகமாகவே கடித்தாலும் (குறிப்பாக புல்லட்டுக்கு) நாசூக்காக இது பற்றி புல்லட் கடித்திருந்தும் இது பற்றி வெளிப்படையாகக் கோரிக்கை விடத் தயங்கிக் கொண்டிருந்தவேளையில் பெட்டி ஒன்றை உண்டியலாக்கி விரும்பிய தொகையைப் போடுமாறு எழில் அண்ணா தான் ஐடியா கொடுத்தார்..

(எங்களுக்கு தலைமேல் இடி இறக்காமல் ஓரளவு நிதி சேர்ந்துள்ளது.. நன்றிகள் நண்பர்களே... அடுத்தமுறை ஏற்பாடு செய்வோர் தயங்காமல்,பயப்படாமல் நடத்தலாம்.. துண்டு விழாது.. குண்டும் விழாது)

வடை பற்றிஸ் நெஸ்கஃபே பரிமாறும் போது டிஷ்யூவும் கொடுக்கப்பட்டது. (இதையெல்லாம் சொல்றானே என்று பார்க்காதீர்கள்...விருந்தோம்பல் நடந்தது என்றும் ஆதாரபூர்வமாகப் பதிவுசெய்ய ஆசைப்படுகிறேன்..எனக்கு மட்டும் டிஷ்யூ தாராத வந்திக்கு கண்டனங்கள்)

வடை வடையாம்..

அதிரடி ஆட்டக்காரர்களை இறக்கி விட்டுப் பின்னரே நானும் வந்தியும் பேசுவதாக முடிவெடுத்திருந்தோம். (கல்லெறி கூச்சல் குழப்பங்கள் பற்றி சந்திரனுக்கு 'லைக்கா' அனுப்பி பரிசோதித்த பிறகே நாம் இறங்குவது பாதுகாப்பு இல்லையா?)

மைக்கைக் கண்டால் போதுமே.. பெரிய மைக் மோகன் இவர்.. ;)

எப்போதும் வானொலியில் பேச்சோ பேச்சு என்றிருக்கும் நான் யாரையாவது மாட்டிவிட்டு ஒதுங்கலாம் என்று பார்த்தால் எந்தப் புண்ணியவானும் தாமாக முன் வராததால் சரி கச்சேரி நடத்தலாம் என்று ஒலிவாங்கி பிடித்து ஏதாவது பேசியே ஆகவேண்டும் என்ற படியால் வழமையான எனது பதிவு போலவே அங்கொன்று இங்கொன்றாக தொட்டு வைத்து என்னுடைய நேரக் கணக்கை ஒப்பேற்றி வைத்தேன்.. (நிறையப் பதிவுலக நண்பர்கள் அந்த நேரம் வந்து நிறையக் கடித்து வைத்ததாக கேள்வி)

என்னோடு பாட்டுப் பாடுங்கள்.. ;)

என்னுடைய பேச்சைத் தொடர்ந்து கலந்துரையாடல் இடம்பெறவிருந்ததால், பேச்சிலே சில கலந்துரையாடக் கூடிய விஷயங்களையும் தூவி விட்டுப் போனேன்.. (அதையெல்லாம் யார் பார்த்தார்கள்.. காரசாரமாக வந்த விஷயங்களோ வேறு)

கலந்துரையாடலில் அடுத்த பதிவர் சந்திப்பு பற்றிய ஐடியாக்கள், அனானிப் பின்னூட்டங்கள் பற்றிய ஏதாவது நல்ல தீர்மானங்கள், தமிழாக்கம், தொழினுட்பங்கள் பற்றி எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாவது பேசலாம் என்று ஒரு மணிநேரம் வரை பேசலாம் என்றிருந்தோம்..

பார்த்தால் தமிழ் தட்டச்சு, யாழ்தேவி திரட்டி இந்த இரண்டிலுமே கருத்து மோதல்,வாதப் பிரதிவாதம், சர்ச்சை (எப்படி வேண்டுமானாலும் பெயரிட்டுக் கொள்ளுங்கள்) ஏற்பட்டு நேரம் பறந்து விட்டது..

இதிலே சிறப்பு என்னவென்றால் நேரடியாக இணைய ஒளிபரப்பினூடாக இணைந்திருந்த பலரும் முட்டி மோதி இருக்கிறார்களாம்.. ;)

ஒருவாறாக தட்டச்சுப் பொறி, திரட்டி இரண்டு விஷயத்தையும் தட்டி நிறுத்தி முடிவேதும் எட்டாமலேயே முடிவுக்கு கொண்டுவந்தோம்..
தேவையில்லாத சர்ச்சை என்று இதை சொல்ல முடியாது.. பல பயனுள்ள விடயங்கள் வந்தாலும் புதியவர்கள்,புரியாதவர்களுக்கு இதன் நேர நீளம் சிலவேளை போரடிக்கும் என்பதே எங்கள் ஒரே கவலையாக அப்போது இருந்தது.

ஏதாவது சர்ச்சை வரும் என்று தெரிந்தே இருந்தோம்.. ஆனால் இந்தப் பக்கம் இப்படி வரும் என்று யோசிக்கவில்லை..

ஒரே ஒரு கவலை.. கொஞ்சம் பெரிய வாக்குவாதம், சண்டையாக வந்திருந்தால் எங்கள் முதலாவது பதிவர் சந்திப்பு இன்னும் கொஞ்சம் பிரபலமாகி தலைப்பு செய்திகளில் வந்திருக்கும்.. அடுத்த முறை பார்க்கலாம்.. ;)

சரவெடி புல்லட்டின் மற்றொரு டுமீல்..

இந்தக் கலந்துரையாடலில் பதிவு போட்டு போலீஸ் பிடித்தது (நான் இல்லைங்கோ.. இது இன்னுமொருவர்), புல்லட்டின் பெயர்ப் பிரச்சினை, புனைபெயரில் எழுதக் கூடாது, லோஷன் எழுதிய நயன்தாரா சிங்கம்.. (தேவையாடா உனக்கு.. இப்பிடி நாரடிச்சாங்களே),தமிழ் பிழைகள்,இந்திய சொல்லாக்கங்கள், சினிமா மோகம், ஊரோடி பகீ இலவசமாக வழங்கவுள்ள இணையத்தள உதவிகள் என்று பல சுவாரஸ்ய விஷங்கள்..

அனானி எதிர்ப்பு சங்கம் அமைக்கவிருந்த நம்ம சதீஷ், ஹிஷாமுக்கு அனானி பற்றியே பேசாதது பயங்கர ஏமாற்றம் & கோபம்..
இதுக்காகவே இவர்கள் இருவரும் இன்னும் அனானிகளால் பாதிக்கப்பட்ட சிலரும் சேர்ந்தே விரைவில் அடுத்த பதிவர் சந்திப்பை ஏற்பாடு செய்தாலும் செய்வார்கள்.. (அப்படி செய்யும்போது நான் எனது உரையில் குறிப்பிட்ட ஐந்து நட்சத்திர ஹோடேலில் குளிரில் நடாத்துவது பற்றியும் கவனிக்க..)

மறக்காமல் சிங்கை நாதனின் மருத்துவ சிகிச்சைக்கும் நிதி சேகரிப்பு பற்றியும் அறிவித்தல் கொடுக்கப்பட்டது..
ஆர்வமுள்ளவர்கள் விபரம் அறியவும், தொடர்பு கொள்ளவும் நண்பர் கோவி.கண்ணனின் தொடர்பு விபரங்களை அனுப்பி வைக்கவுள்ளோம்.

இறுதியாக இடம்பெறவிருந்த வந்தியத்தேவனின் நன்றியுரைக்கு பின்னூட்டம் என்று பெயரிட்டிருந்தோம்..

இடிதாங்கி வந்தியின் பின்னூட்டம்..

பின்னூட்டம் கொஞ்சம் நீளமாகவே போனாலும் சொல்லவேண்டியதெல்லாம் அவர் மீது நாம் சுமத்தியதால் எங்கள் அண்ணன் இடிதாங்கி வந்தி அத்தனையையும் சொல்லி இனிதே பதிவர் சந்திப்பை நிறைவு செய்தார்..
வழமையான வந்தியின் நக்கல்,நையாண்டி, சீரியஸ் என்று அத்தனையும் கலந்த அவரது சூப் தான் பின்னூட்டம்..

அளவில் இந்த முதலாவது இலங்கைப் பதிவர் சந்திப்பு நிறைவுக்கு வந்தவேளை எங்களுக்கு அப்படியொரு பெருமையும் திருப்தியும்..

எல்லோர் முகத்திலும் அப்படியொரு பூரிப்பு..

ஓடியாடி வேலைகள் செய்த அன்புத் தம்பி பால்குடி, வீடியோ கமெராவை தூக்கிக் கொண்டே லொள்ளு செய்த புல்லட் (அடிக்கடி அவர் என்னிடமும், ஆதிரையிடமும், பால்குடியிடமும் கை மாற்றியது வேறு கதை) இனி நான் DVDக்கு மாற்றும் போது தான் தெரியும் புல்லட் என்ன எடுத்திருக்கிறார் என்று.. , தொகுத்து வழங்கி பெரும் பங்காற்றிய சதீஷ், அழைத்த நேரத்துக்கு வந்த அத்தனை பேர், வராமல் இருந்தும் மனப்பூர்வமாக ஆதரவளித்த அத்தனை அன்புள்ளங்கள், விளம்பரப் படுத்தி ஆட்களை அனுப்பி வைத்த ஊடகங்கள், சஞ்சிகைகளை இலவசமாக வழங்கிய இருக்கிறம் சஞ்சிகை, நூல்களை அன்போடு வழங்கி விற்று வரும் பணத்தை நிதியுதவியாக நல்கிய மன்னார் அமுதன்,தங்கள் வலைத்தளங்களில் செய்திகள்,விளம்பரங்கள் பதிப்பித்த நண்பர்கள், ஆலோசனை சொன்னவர்கள் என்று அனைவருக்குமே இதயபூர்வமான நன்றிகள்..

முக்கியமாக எனக்கும் முந்தி இது பற்றி பதிவுகள் இட்டு தகவல்களை உலகெங்கும் பரப்பிய நண்பர்களுக்கு நன்றிகள்..

முதல் அடி வெற்றி.. திருப்தி.. அடுத்து யார் எங்கே செய்யப் போகிறீர்கள்.. நாம் உதவவும் உழைக்கவும் தயார்..

அடுத்தமுறை பதிவர் சந்திப்பு ஏற்பாடு செய்வோருக்கு இலகு.. நாங்கள் வந்திருந்த எல்லோரது விபரங்களும் தொகுத்து ஒரு விபரக்கொத்தே வைத்துள்ளோம்..


பி கு - படங்களுக்கு மட்டும் தான் Making of... என்று போடுவீங்களா? இந்தப் பதிவர் சந்திப்புக்கும் ஒரு Making of இருக்கிறது.. அதிலும் பல சுவாரஸ்யங்கள்.. அடுத்த பதிவில் (சிலவேளை இன்று மாலையே) எதிர்பாருங்கள்..

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner