September 30, 2008

தமிழனுக்குக் கிடைக்குமா வாய்ப்பு?

நாளை (Oct 1st) ஆஸ்திரேலியா அணிக்கெதிராக முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள இந்திய அணி அறிவிக்கப்படவுள்ளது.இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதுமே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் விடயம், இந்தியாவின் மூத்த (சிரேஷ்ட என்று சொன்னாலும் பொருத்தம்)வீரர்களில் ஒருவரான கங்குலிக்கு அணியில் இடம் கிடைக்குமா என்பது தான்..சச்சின்,டிராவிட்,லக்ஸ்மன் ஆகியோர் தங்கள் அணி இருப்புக்களை அனேகமாக உதிப்படுத்தி இருப்பதனால், எஞ்சி இருக்கும் ஒரு  துடுப்பாட்டவீரருக்கான இடங்களுக்காக (ஆறு துடுப்பாட்ட வீரர்களுடன் இந்தியா விளையாடும் எனக் கருதப்படும் இடத்தில்) நான்கு பேர் போட்டியிடப் போகின்றார்கள்.(ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் சேவாக்,கம்பீர், ஏழாம் இலக்கத்தில் டோனி..தற்செயலாக இந்திய அணி ஐந்து முழு நேரப் பந்து வீச்சாளர்களோடு களம் இறங்கினால் நான்கு பேரில் யாருக்குமே வாய்ப்பில்லாமல் போகலாம்)  


கங்குலி,யுவராஜ் சிங்,மொகமட் கய்ப்,சுப்ரமணியம் பத்ரிநாத் ஆகியோரே அந்த நான்கு தலைகள். 


கங்குலி -வீழ்ந்து கிடப்பவர் எழும்புவாரா? 

இவர்களில் கங்குலி இலங்கைக்கான இந்தியாவின் சுற்றுலாவின் பின் கழற்றிவிடப்பட்டவர்.இராணி கிண்ணப் போட்டிக்கான இந்தியக் குழுவில் இவர் இடம்பெறவில்லை.இதன் மூலம் கங்குலிக்கு தெரிவாளர்கள் மூலம் ஒரு சமிக்ஞ்சை வழங்கப்பட்டுள்ளது.இனிமேலும்அணித்தேரிவு கங்குலிக்கு அவ்வளவு இலேசாக இருக்காது என்பதே அது. 
    
யுவராஜ் - இந்திய அணியின் உல்லாச ராஜா உள்ளே நுழைவாரா?
யுவராஜ்,கொஞ்சக் காலம் டெஸ்ட் அணியில் இடம்பிடித்தும் அதை நிரந்தரமாகத் தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை.ஒரு நாள் specialist ஆகவே அவர் இப்போதும் கருதப்படுகிறார்.முன்பு ஒரு காலத்தில் இந்திய எதிர்காலத் தலைவராகவே கருதப்பட்டவர் எல்லாவற்றையும் இழந்திருந்த வேளையில்,கிரிக்கெட் சபைத் தலைவர் அணிக்குத் தலைமை தாங்கி ஆஸ்திரேலியா அணிக்கெதிராக விளையாடும் வாய்ப்பைத் தெரிவாளர்கள் வழங்கியுள்ளார்கள்.எனினும் இந்தப் போட்டி இடம்பெறுவதற்கு முன்பே அணி நாளைய தினம் அறிவிக்கப்பட உள்ளதால்,அந்தப் போட்டிக்கும் அதில் விளையாடவுள்ள வீரர்கள் காட்டவுள்ள திறமைக்கும் தெரிவாளர்கள் கொடுத்திருக்கும் முக்கியத்துவம் தெரிகிறது. இந்த தெரிவு அணியில் எதிர்கால இந்திய அணிக்கான கனவுகளோடு,பத்ரிநாத், ரோஹித் ஷர்மா,வாசிம் ஜாபர்,விரட் கோழி(Virat Kohli) போன்றோரும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. 



கைப் - கைப்பற்றுவாரா மீண்டும்?
முன்னர் ஒரு காலத்தில் இந்திய ஒரு நாள் அணியில் அசைக்க முடியா இடத்தைப் பிடித்தவரும்,அசாருடீனுக்குப் பிறகு அதே நேர்த்தியோடு ஆடுகின்றார் என்று பலராலும் பாராட்டப் பட்டவருமான கைப் இடைநடுவே form இழந்து,மீண்டும் போராடி,தொடர் போராட்டத்தின் பின் மீண்டும் ஒரு டெஸ்ட் வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார்.  


பத்ரிநாத் - இம்முறையாவது அதிர்ஷ்டம் கிட்டுமா?

அடுத்தவர் நம்ம (தமிழ் பேசும் வீரராக இருப்பதால்)பத்ரிநாத்.. தன்னால் டெஸ்ட் அணியில் இடம்பெற என்னவெல்லாம் செய்ய முடியுமோ,அத்தனையும் செய்தும் வாய்ப்புக் கிடைக்காமல் அண்மையில் பொங்கி வெடித்த பிறகு,இலங்கையில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் அறிமுகமாகும் வாய்ப்புக் கிடைத்தது.அண்மையில் இடம்பெற்ற அணிகளுக்கு இடையிலான முக்கோணத் தொடரிலும் இந்திய அணிக்குத் தலைமை தாங்கி சிறப்பாகவே விளையாடி இருந்தார். என்னைப் பொறுத்தவரை முன்பிருந்தே பத்ரியை இந்திய விமர்சகர்கள் சச்சினுக்குப் பிறகு இந்திய அணிக்கு வரவேண்டியவர்கள் சொல்லிக் கொண்டிருப்பதைவிட,இமமுறை டெஸ்ட் வாய்ப்போன்றைக் கொடுக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.(நான் அடிக்கடி எனது வானொலி விளையாட்டு நிகழ்ச்சிகளில் பத்ரியைப் பற்றிப் புகழ்ந்து பேசுவதால், பத்ரியின் பிரசாரப் பீரங்கி என்றே சொல்வோர் பலரும் உண்டு.)

பலம் வாய்ந்த (இப்போது கொஞ்சம் பல் பிடுங்கப்பட்டுள்ள )ஆஸ்திரேலியா அணிக்கெதிராக புதிய வீரர்களை அறிமுகப்படுத்த இந்தியாவின் புதிய தேர்வாளர் குழு தைரியமாக முடிவெடுக்குமா?முன்பு எந்தப் பந்துவீச்சாளர்களுக்கும் அஞ்சாமல்,துணிச்சலோடு அதிரடியாக ஆடும் ஸ்ரீக்காந்த் தலைமையிலான குழு இதில் துணிந்து நிற்குமா?தமிழர் ஒருவர் தலைமை ஏற்றிருக்கும் தேர்வுக்குழு தமிழனுக்கு வாய்ப்பு வழங்குமா?

குடிநீரில் விஷம் ! பரபரப்பு...

                                                           
                                                         


நேற்று இரவு பதினோரு மணி.. தூங்குவதற்குத் தயாராகிக் கொண்டிருந்தபோது எனது அலுவலக செல் பேசிக்கு ஒரு அழைப்பு.. அந்த நேரம் காற்றின் சிறகுகளைத் தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த சுபாஷ். "அண்ணா கண்டிப் பக்கமிருந்து ரெண்டு,மூண்டு பேர் அழைப்பெடுத்தாங்க. குடிக்கிற தண்ணில விஷம் கலந்ததா ஒரே பரபரப்பாம்..ஒருக்கா விசாரிச்சு உண்மையா இருந்தா பிரேக்கிங் நியூஸ் அடிப்பமா " என்று கேட்டார்.நான் உடனடியாக எங்கள் செய்திப் பிரிவின் பென்சியை(இவரைத் தான் நான் தினமும் காலை எனது விடியல் நிகழ்ச்சியில் பெஞ்சி பாய் என்று போட்டுக் கடித்துக் குதறுவதுண்டு) தொடர்புகொண்டு விஷயத்தை சொல்லி விசாரிக்குமாறு சொன்னேன். எனினும் எனக்கு நிச்சயமாகத் தெரியும் முன்பு பல தடவையும் இது போன்றே பல தடவை வதந்திகள் கிளப்பிவிடப்பட்டதால்,இதுவும் ஒரு கட்டுக் கதை தான் என்று,,

ஆனாலும் எதற்கும் இருக்கட்டுமே என்று எனது கண்டிப் பக்கம் உள்ள நண்பர்கள் பலரிடமும் தொடர்புகொண்டு கேட்டால்,கண்டி,கேகாலை பக்கங்களில் ஒரே  பரபரப்பாம்.போலீஸ் வந்து கட்டுப்படுத்தும் அளவுக்கு வதந்திகள் பரவி மக்கள் பலர் வீதிக்கே வந்துவிட்டார்களாம்.. பல பேரிடம் இருந்தும் எனக்குத் தொடர்ந்து அழைப்புக்கள்.. பென்சி எடுத்து சொன்னார் கண்டி நிருபரின் தகவலின் அடிப்படையில் அப்படி ஒன்றும் இல்லையாம் வெறும் வதந்தி தானாம் என்று.. அதற்கிடையில் எனது சிங்கள நண்பர் ஒருவர் தொடர்பு கொண்டு என்னிடம் கேட்டார் "மச்சான் புலிகள் தண்ணீரில் விஷம் வைத்து தங்கள் மக்களையே  (தமிழர்) கொல்ல மாட்டாங்க தானே?".. நான் சிரித்து விட்டு,வாய்ப்பில்லை என்றும் விஷ வாயு அடித்தால் கூட அது இராணுவத்துக்கு மட்டுமே என்றும் சொல்லி அவரைப் பயப்படவேண்டாம் என்று தூங்கச் சொன்னேன்.(ஏதாவது இப்படியான செயல்கள் நடந்தால்,அல்லது குண்டுகள் வெடித்தால் என்னை புலிகளின் உத்தியோகப்பற்றற்ற பேச்சாளராகவே நண்பர்கள் கருதி விடுகின்றனர்)

காலையில் தான் தெரிய வந்தது,குடி நீர் அருந்திய பல சிறார்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அதற்கான உண்மையான காரணம் நீரை சுத்திகரிக்கப் பயன்படுத்தப்படுகின்ற க்ளோரின் அதிகளவில் நீரில் கலந்ததே என்கின்ற விஷயம்.. ஹையோ ஹையோ.. எது நடந்தாலும் புலிகள் தான் காரணமாப் போச்சு நம்ம நாட்டிலே...


                                                  

இரவு உலகம்..


                       இரவுகளில் உலகம் எப்படி இருக்கும் எனக் காட்டும் செயம்மதிப் புகைப்படங்கள்.. பெண்களும்,பூமியும் இரவில் தான் அழகு என யாரோ ஒரு மேலைத்தேயக் கவிஞன் சொன்னது உண்மை தான் போலும்..
ரசியுங்கள்,உங்கள் கருத்துங்களை சொல்லுங்கள்..









                                   
                             

September 29, 2008

பாவனாவின் வளர்ச்சியும் ஏமாற்றிய ஜெயம்கொண்டானும்


நாளாந்தம் புத்தம் புதிய திரைப்படங்கள் வெளிவருகின்ற காலத்திலே (கடந்த 10 ஆண்டுகளாகவே இந்தியாவில் புதிய தமிழ்த்திரைப்படங்கள் வெளிவருகின்ற அதே தினத்தில் இலங்கையிலும் அவை வெளியிடப்படுகின்றன ) சில வாரங்களுக்கு முதல் வெளியான ஜெயம்கொண்டான் திரைப்படத்தை பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கடந்த புதன்கிழமை தான் கிட்டியது.அதுவும் அன்றைய தினமே குறித்த திரையரங்கில் திரைப்படம் திரையிடப்படும் இறுதி நாளென்று நண்பர் விமல் சொல்லியிராவிட்டால் கிடைத்திராது .முன்பெல்லாம் அநேகமான திரைப்படங்கள் திரை இடப்படும் முதல் நாளே பார்த்து விடுபவர்கள் நாம்.(எவ்வளவு தான் என்னுடைய வானொலிக் கடமைகள் இருந்த போதும் இரவுகளை அட்ஜஸ்ட் செய்து பார்த்துவிடுவோம் ) எனினும் எனக்கு வாரிசொன்று வந்த பிறகு,மனைவியையும் என் குழப்படிகார மகனையும் விட்டு விட்டு இரவுகளில் படம் பார்க்க போவதென்பது சாத்தியமாகவில்லை ..என்னுடைய வாகன லிப்ட் கிடைக்காத காரணத்தாலும் , நான் இல்லாமல் பார்ப்பது சுவார்சயமாக இருக்காது என்றதனாலும் மற்றவர்களும் குறைத்துக் கொண்டார்கள் .இதனால் பல திரைப்படங்களைத் தவறவிட்டோம் . பின் dvd,vcdகளில் பார்ப்பதும் தள்ளிப் போய்விட்டது ..அண்மைக்காலத்தில் பார்த்தவை . . பில்லா ,தசாவதாரம் ,குசேலன் மற்றும் சரோஜா மட்டுமே .. இப்போது ஜெயம்கொண்டான்.

தூய,அழகான தமிழ்ப் பெயரே முதலில் என்னைக் கவர்ந்தது .இந்தத் திரைப்படப் பாடல்கள் எனக்கு ரொம்பவே பிடித்துப் போனவை . வித்யாசாகர் அனுபவித்து இசை வழங்கி இருந்தார்.சில விமர்சனங்கள் பிரமாதமாக எழுதி இருந்தாலும் ,ஒரு சில வலைப்பதிவுகள் தாக்கியும் இருந்தன .நல்ல கதையம்சமுள்ள படம் என்று அறிந்ததனால் ஆர்வத்துடன் பார்க்க உட்கார்ந்தேன் .முதல் காட்சிகள் நன்றாகவே இருந்தன.ஆனாலும் வினய்யின் வசனத்துக்கான உதட்டசைவுகளும் ,விவேக்கின் எரிச்சலான குறுக்கீடுகளும் எரிச்சலூட்டுவதாக எனக்குத் தோன்றின .அத்துடன் அழகான,கம்பீரத் தோற்றமுடைய வினயிற்கு ஏன் தான் அந்தத் தொங்கு மீசை கெட் அப்போ தெரியவில்லை. பொருந்தவே இல்லை.

முதல் காட்சிகளில் ஆரம்பித்த விவேக்கின் எரிச்சலூட்டும் குறுக்கீடுகள் படு சீரியசான காட்சிகளிலும் தொடர்ந்தது . சிரிப்பதற்குப் பதில் விவேக் அகப்பட்டால் கழுத்தை நெரித்து விடலாமா என்று தோன்றியது.உதாரணமாக வினயிற்கு தன்னுடைய இறந்து போன தந்தைக்கு ரகசிய மனைவி ஒருத்தி இருக்கிறார் எனத் தெரிய வரும் இடத்தில் ,வினய் கடும் அதிர்ச்சியோடு இருக்க ,விவேக் தன் மனைவியைப் பார்த்து "உன் அப்பனும் சண்டே வந்தால் காணாமப் போயிடுறான் , எதுக்கும் பார்த்துக்க"என்று சொல்கிற இடம்.சரோஜாவில் பிரேம்ஜி இதே போல் குறுக்கிடும் போது ரசிக்கக் கூடியதாக இருக்கிறது .. இதிலோ கொலைவெறி தான் வருகிறது.சின்னக் கலைவாணர் இனிப் புது வழிகளைத் தேடவேண்டும் .

பாவனா - கண்ணுக்கு குளுமை .முதல் படமான சித்திரம் பேசுதடியிலிருந்து இந்தப் படம் வரை கண்ணுக்குப் புலனாகிறது அவரது வளர்ச்சி. :) நடிப்பிலும் தான்.சுற்றி வரும் பூமி பாடலில் அழகான காட்சிகள் வந்தாலும் எங்கள் கண்கள் எங்கே அவற்றைப் பார்த்தன .ஆனாலும் கவர்ச்சியான உடைகளை அணியாமல் இருக்கும் அவரைப் பாராட்டலாம் .சொந்தக் குரலில் அவர் பேசி இருந்தாலும், கொஞ்சம் ஆண் தன்மை தெரிந்தாலும் ,அவரது கிராமியப் பேச்சு நடையும் ,குழைவான அசைவுகளும் , பேசும் கண்களும் அவற்றை மறக்கடித்து விடுகின்றன .அதிலும் நான் வரைந்து வைத்த சூரியன் பாடலில் பாவனாவை நன்றாகவே ரசிக்கலாம் .


IPLஇல் பார்த்த லேகாவா இவர்?கழுத்திலிருந்து கீழ் வரும் ஆடைகளில் பார்த்த இவரை இங்கே முழு ஆடையிலும் ,வில்லத் தனமான நடிப்பில் பிடிவாதத் தங்கையாகப் பார்க்கையில் தமிழுக்கு மற்றுமொரு நல்ல நடிகை கிடைத்துவிட்டார் என நினைக்கிறேன்.கோபப்படுவதிலாகட்டும்,கலங்குவதிலாகட்டும் கலக்குகிறார்.சிம்பு மிஸ் பண்ணிட்டீங்க....கெட்டவன் பட வாய்ப்பைப் பற்றி சொல்லுகிறேன்..

அந்த வில்லன் செல்வம் கலக்கி இருக்கிறார்.மிரட்டுகிறார்.பொல்லாதவனில் பார்த்த அதே பிரமாதம் .மனைவியுடன் கொஞ்சுவதிலாகட்டும் ,மற்றவர்களுடன் எரிந்து விழுவதிலாகட்டும் ,அமைதியாக கண்களாலேயே மிரட்டுவதிலாகட்டும் பின்னி எடுக்கிறார் மனிதர் .விஜய்,அஜித் தங்கள் படங்களில் பயன்படுத்தினால் சவாலான வில்லனைக் காட்டலாம் .ரசித்துப் பார்த்தேன்.

அதிலும் வில்லனுக்குக் காதல்,செண்டிமெண்ட் இப்போது கொஞ்சம் புதுசாக ஹிட் ஆகி வருகிறது.சரோஜாவிலும் வெங்கட்பிரபு இவ்வாறு காட்டி இருந்தார்.

ஹனீபா வருகிற நகைச்சுவை,வில்லத்தனம் கலந்த காட்சிகளை இயக்குனர் கண்ணன் அருமையாகப் பயன்படுத்தி இருந்தார். அந்த மதுரைக்கு ஒரு மகன் ,சென்னைக்கு ஒரு மகன் விஷயம் இயக்குனரின் நக்கல் தர்பார்.எத்தனை பேருப்பா கலைஞரை வம்புக்கு இழுக்கப் போறீங்க? (மதுரையில் இந்தப் படம் எப்பிடிங்க போகுது?)

கிருஷ்ணா வழமியான ஹீரோவின் நண்பன் வேஷம்.தீபா வெங்கட்,பின்னணிப் பாடகர் தேவன் ஆகியோர் இயக்குனரின் நண்பர்களோ தெரியவில்லை...

வித்தியாசமான கோணத்தில் கதையை கண்ணன்(இயக்குனர்) கொண்டு போனதால் முடிவும் வித்தியாசமாக இருக்கும் என்று பார்த்தால்,ஹீரோ விமானத்தில் ஏற ஒரு சில நிமிடங்கள் இருக்கும்போது,வில்லன் தங்கையைக் கடத்திப் பணயம் வைத்துக் கொண்டு கூபிடுகிறார் .பாவனா ,நண்பர்கள் தடுக்க,தடுக்க ஹீரோ தங்கையைக் காப்பாற்றப் போகிறார்.வில்லன்கள் இருக்கும் இடம் எப்போதும் போலவே கைவிடப்பட்ட ஒரு பழைய தொழிற்சாலை.(அங்கே தானே சண்டையின் போது அவசரத்துக்குப் பாவிக்க ஏதாவது இரும்புத் தடிகள் கிடைக்கும்)அவ்வளவு நேரமும் அமிர்தலிங்கம் வழியில் நின்று அகிம்சை,துஷ்டர்களிடம் இருந்து விலகி நடப்பது பற்றிப் போதனை செய்துவந்த ஹீரோ,இப்போதும் அதே வழியில் வித்தியாசமாக ஏதாவது செய்வார் என்று பார்த்தால், திடீரென நான்கைந்து அடிகள் வாங்கி,தன் தங்கையும் வில்லனிடம் அடி வாங்கி குருதி வழிகையில் பிரபாகரன் வழிக்கு(எத்தனை நாளைக்குத் தான் காந்தி ,சுபாஷ் சந்திரபோசையே சொல்வது ?) மாறுகிறார் .அடிக்கிறார்,வில்லனும் அடிக்கிறார். மாறி மாறி நடக்கும்
கை கலப்புக்குப் பின்,துப்பாக்கிகள் கைகள் மாறி,(அது சரி அடியாட்கள் இருக்கும் போதும் கூட,வில்லன் தனியாக ஒண்டிக்கு ஒண்டி தான் மோதுவாராம்..என்ன கொடுமை கண்ணன் இது?)கடைசியில்(வழமைபோல்)போலீஸ் வருகிறது.

ஹீரோவும் தன் பங்குக்கு தான் இதுவரை ஒதுங்கிப் போய்க் கொண்டிருந்த காரணங்களை விலாவாரியாக விளக்குகிறார் .தங்கையும் அண்ணனும் சேர சுபம்.

வித்தியாசமான முடிவைத் தருவார் என்று பார்த்தால் அட்சரம் பிசகாத தமிழ் சினிமா முடிவையே இயக்குனர் தந்திருக்கிறார்.ஏமாற்றி விட்டாயே ஜெயம்கொண்டான்....வீடு போகும் போது வாகனத்தில் ஏறியவுடனேயே நான் வரைந்து வைத்த பாடல்..முடிவு ஏமாற்றினாலும் பாவனா முன்னணி கதாநாயகி ஆகும் காலம் வெகுதொலைவில் இல்லை என்று நினைத்தவாறே இயக்குனரைத் திட்டிக் கொண்டே வந்தோம்.


September 27, 2008

மகிந்தவின் கனவுகள்..

இரு நண்பர்கள் முன்னகர்த்திய (forward என்பதன் தமிழாக்கம் தானுங்க.. ) சில படங்கள் அடங்கிய மின்னஞ்சலை உங்கள் பார்வைக்குத் தருகிறேன்,,

சிந்தனையைத் தந்து துன்பப்படுத்துபவரின் கனவுகள்.. சொல்லமுடியாது இப்பவே இலங்கையெங்கும் கட் அவுட்டுகளில் சிரிப்பவர் எதிர்காலத்தில் இவற்றுக்கும் ஆசைப்படலாம்..

யாரை வைத்தும் நாங்க காமெடி கீமெடி பண்ணுவோமே...
















September 26, 2008

நாசமாப் போங்கடா.....

நேற்று அதிகாலை 3மணியிலிருந்து வெற்றி எப் எம் மற்றும் எமது சகோதர சேவைகளான REAL RADIO, சியத எப்.எம் என்பனவும்  செயலிழந்தன
எங்கள் அலுவலகத்தில் ஏற்பட்ட ஒரு மின்தடை/கோளாறுகள் இதற்கான காரணம்! ஆனால் எங்கே அந்தக் கோளாறு அதை எப்படி சரி செய்வது என்று தெரியாமல் நம் பொறியியலாளர்கள் தவித்தார்களே அதை விட கொடுமையான நகைச்சுவை எங்கேயுமே பார்க்க முடியாது!
காலையில் அலுவலகம் வந்தபோது எல்லா இடங்களிலும் வயர்களும்,toolsம் இறைந்து கிடந்தன. செய்வதறியாது பதற்றத்தோடும், பரபரப்போடும் பொறியியலாளர்கள் , விடிகாலை வந்தும் சஹர் விசேட நிகழ்ச்சி செய்யாமல் சலிப்போடு ஹிஷாம், 6.30 செய்தி ஒலிக்குமோ என்ற சந்தேகத்தோடு செய்தி – பாரதி! இணையத்தளப் பாவனை இல்லாத ஏக்கத்தோடு பலர் ! (நானும் தான் .. என் வலைப்பூவுக்கு வருகை எத்தனை என்று பார்க்கமுடியாதே, விளையாட்டு,புதிய விஷயங்கள் எங்கே எடுப்பது என்ற எரிச்சல் வேறு)
முதல்நாளும் 6 தடவைகள் ஒலிபரப்பு இடையிடையே தடுமாறிய கோபத்தில் இருந்த எனக்கு நேற்றோடு வெறுத்துப்போனது. மென்பொருள் பிரச்சினை கணினிக்கு ஒய்வு வேண்டும் என்று இத்துப்போன பல்வேறு காரணங்கள!
இந்த எல்லா ரோதனைகளோடு ஆரம்பித்த நாள், என் நீண்டகால நண்பனின் திருமணத்திற்கு சென்று ஐந்து நட்சத்திர விடுதியில் நடந்த திருமணத்தில் நின்று கொண்டே சாப்பிடும் நிலைக்கும் - பின் கை கழுவ நீர் தேடி அலையும் நிலைக்கு மாற்றியது!  
அதனினும் நுவரஎலிய சென்று வந்தபின் தொற்றிக் கொண்ட தடிமன் நேற்று முழுவதும் போட்டு வாட்டியது வேறு கொடுமை! 
எல்லா ரோதனைகளும் சேர்ந்து நேற்று இரவு எழுதிய சாப வரிகளே இவை!  
 
நாசமாப் போங்க..... 25.09.2008  

விடியல் காலையிலேயே 3மணிக்கு ஒலிபரப்புத் தடையேற்படுத்தி 3மணித்தியாலமாய் 
வயர் தேடி – பவர் தேடி பாழாய்ப் போன சாபங்களை எனக்கும் என் குழுவினருக்கும் 
வாங்கித்தந்த MCR பொறியியலாளர்கள் - நாசமாப் போங்க..  
மனசுக்கு பிடித்த நல்ல பாடல்களைத் தெரிவு செய்தும் நாளைச் சலிக்க செய்தவர்கள் நாசமாப் போகட்டும்!  
A/C  இல்லாமல் அவியச் செய்து கம்பியூட்டர், இணையத்தளம் செயலற்றுப் போகச் செய்த 
கையாலாதவர்கள் நாசமாப் போகட்டும்!

வெற்றி கேட்கவில்லை என என் விடிகாலைத் தூக்கம் கலைத்த நலன்விரும்பிகளே,நண்பர்களே
நாசமாப் போங்க.. (கோவிக்காதீங்க)

தொலைபேசி,SMSஇல் துக்கம் விசாரித்து சூரியன் போலே வெற்றிக்கு தடையா என்று 
கேள்வி கேட்டுக் குடைந்த நேயர்களுக்குப் பதில் சொல்ல முடியாமல் நாம் விழிக்கக் காரணமாக 
இருந்த MCR மடையர்களே நாசமாப் போங்க!  

தூக்கம் தொலைத்த கவலையுடன் இரு நாட்களில் நிகழ்ச்சிகளை நிம்மதியாகச் செய்யவிடாது 
கொத்திக் குதறிய மென்பொருளோ கணனியோ அதனைத் தயாரித்தவர்களே நாசமாப் போங்க..

இணைய இணைப்பின்றி செயலிழந்த நிலையிலும் மொழிபெயர்ப்பு வேலை தந்த மெயில் 
கிடைத்ததா எனத் துளைத்தெடுத்த AD AGENCY பெண்ணே நாசமாகப் போ!

மூக்கை அரித்து முழுநாளும் வேதனை தந்த தடிமன் முதலில் வந்த 
மூக்குடையவனே நாசமாகப் போ! 
 
தூக்கக் கலக்கமும் சேர்ந்து வண்டி ஒட்டும் போது அழைப்பெடுத்துத் 
தொடராகத் தொல்லை தந்த HSBC CREDIT CARD விற்கும் யமகிங்கரா நாசமாப்போ!

எங்களை உன் திருமணத்தக்கு அழைத்து ஐந்து நட்சத்திர விடுதியில்
பார்க்கிங் கிடைக்காமல் 50ருபாய்க்கு வீதியில் வாகனம் நிறுத்தச் செய்தவனே நீயும் தான்...

200 பேருக்கு மண்டபம் ஒதுக்கி 400பேருக்கு அழைப்புக் கொடுத்து எம்மை 
நின்று கொண்டே சாப்பிடச் செய்தவனே நாசமாப் போ!

கைகழுவ FINGER BOWL கேட்டபோது தவிக்கவிட்டவனே (WAITER)
நீயும் தான் நாசமாப் போ!
  

September 25, 2008

கருணாநிதி மூஞ்சியில் கரி...

இந்த மினிக் கருத்துக் கணிப்பில் வாக்களித்த அனைவருக்கும் நன்றிகள்!

கருத்துக் கணிப்பின் முடிவைப் பொறுத்தவரை தமிழர் தேசிய இயக்கத்தலைவர் நெடுமாறன் தான் எந்தவித ஆதாயமும் நாடாமல் இலங்கைத் தமிழர் மேல் உண்மையான அக்கறை கொண்டவர் எனப் பெரும்பாலானோர் தெரிவித்துள்ளனர்.மிகப் பெரும்பான்மையானோர் என்று சொல்வதே பொருத்தம் -- 75 சதவீதமானோர் ) அவர்தான் மிக நீண்ட காலமாக தேர்தல் ஆதாயங்கள்,அரசியல் ஆதாயங்கள் எதுவுமின்றிஇ பலதடவைகள் சிறைசென்றும் , பொடாவுக்கும் தடாவுக்கும் பயப்படாமல் நெடும் போராட்டம் நடாத்தி வருகிறார்.
                                                                    பழ.நெடுமாறன்
12 சதவீதமானோர் இவர்கள் யாருமே உண்மையாக இலங்கைத் தமிழர் மேல் அக்கறை கொண்டவர்கள் இல்லை என்று குறிப்பிட்டுள்ளனர். ஓருவிதத்தில் தமிழக அரசியல்வாதிகள் மீது கொண்ட அதிருப்தியே இதற்கான காரணம் என நம்புகிறேன்.

தமிழக அரசியல்வாதிகள் மனசுத்தியோடு நினைத்திருந்தால் எப்போதோ இலங்கைத்தமிழரின் பிரச்சனைக்கு சுமுகதீர்வு (எம் ஜீ ஆர் உயிரோடிருந்தால் இன்று தமிழீழம் மலர்ந்திருக்கும் என நம்புவோர் நம்மில் ஏராளம்) கண்டிருக்கலாம் என்பது உண்மையே.

அடுத்த இடம் தமிழகப் புலி என்றே அழைக்கப்படும் (பல தமிழக இதழ்களால் அழுகை மன்னன் என்று கேலி செய்யப்படும்) மதிமுக தலைவர் வைகோவுக்கு. நீண்டகால விடுதலைப்புலிகளின் அனுதாபி; இலங்கைத் தமிழர் மீது உண்மைப் பற்றுக் கொண்டவர் ; தமிழீழத்துக்கு ஆதரவாய் பேசி பொடா தடைச்சிறையிலடைக்கப்பட்டவர் என்று ஈழத்தமிழர்கள் இவர் மேல் நல்லெண்ணம் கொண்டிருந்தாலும்இ அடிக்கடி கூட்டணி மாறுவதும்; அரசியல் ஸ்டன்ட் அடிக்கிறாரோ என்று இவர் மேல் சந்தேகம் இருப்பதனாலுமே 3ம் இடத்திலுள்ளார்.

தமிழீழக் கோரிக்கைகளுக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் ஆதரவானவர்கள் தான் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ,விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாளவன் மற்றும் தேசிய முற்பேர்க்கு திராவிடர் கழக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் ஆகியோர்.

தொடர்ச்சியாக ஈழத்தமிழருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருபவர்கள்; தீவிர விடுதலைப்புலிகளின் எதிர்ப்பாளர் எனக் கருதப்படும் ஜெயலலிதாவுடன் இருந்தபோதும் கூடத் தம் கொள்கையில் மாறாது நின்றார்கள் ராமதாஸூம் திருமாளவனும்.

விஜயகாந்த் நடிகராக இருநதபோதே (அரசியல் ஆசைகள் துளிர்விடாதபோது என்று நம்புவோமாக) நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈழத்தமிழருக்கு உதவிகள் புரிந்தவர், தன்மகனுக்கு விஜயபிரபாகரன் என்று பெயரிட்டவர். இப்போது வடிவேலுடன் மோதிக் கொண்டிருந்தாலும் தமிழக வலைப்பதிவாளருக்கும் இதழ்களுக்கும் மெல்லும் அவலானாலும் , ஈழத்தமிழரிடமும் இவருக்குக் கணிசமான ஆதரவுண்டு.

தமிழக முதல்வர் கலைஞர் மு கருணாநிதி -
உலக வாழ் தமிழரின் தனிப்பெருந்தலைவர் என அழைக்கப்படுபவர்; ஈழத்தமிழருக்காகத் தானும் கவலைப்படுவதாக கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் சொல்லி வருபவர்;;; 1988இல் இந்திய அமைதி காக்கும் படை (அது புரிந்ததென்னவோ அட்டூழியம் தான்) இந்தியா திரும்பியபோது தமிழ்மக்களுக்குப் புரிந்த அநீதிகளுக்காக தமிழக முதலமைச்சராக இருந்தபோதும் வரவேற்கச் செல்லாதவர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்பட்டவர் (எதிராகச் செயற்படவில்லை) என்று காரணம் காட்டப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட்டவர்; தமிழ்ச்செல்வன் மறைந்த போது அஞ்சலிக்கவிதை எழுதி (கவிதை எழுதுவதே அவரது பிரதான தொழில் என வலையுலக வட்டாரங்கள் கூறுகின்றன)பரபரப்பு ஏற்படுத்தியவர்.

எனினும் மத்திய அமைச்சுக்களை கேட்டு வாங்கும் அதிகாரம், காங்கிரசின் தமிழகத் தலைமையை மாற்றும் அதிகாரங்கள் உடைய அவருக்கு இலங்கைத் தமிழர் விவகாரத்தில் இந்திய மத்திய அரசைத் தூண்ட முடியாதா என்ற கேள்வி நான் உட்பட்ட அனைவருக்குமே உண்டு! (கருணாநிதியின் தி.மு.க வின் ஆதரவு விலக்கப்பட்டால் மன்மோகன் சிங்கின் ஆட்சி கவிழும் என்பதும் அனைவருக்கும் தெரியும்)


இலங்கைத் தமிழர் மீது உண்மையான அக்கறையும் அன்பும் கொண்டிருப்பவர் யார்?

பழ.நெடுமாறன்
  232 (75%)
 
கலைஞர்.மு.கருணாநிதி
  3 (0%)
டாக்டர்.ராமதாஸ்
  7 (2%)
 
வைகோ
  15 (4%)
 
தொல்.திருமாவளவன்
  7 (2%)
 
விஜயகாந்த்
  4 (1%)
 
இவர்கள் யாருமே இல்லை
  39 (12%)
 

Votes so far: 307 
Poll closed 

எனினும் நேற்று காலை வெற்றி எப்.எம்மில் விடியல் நிகழ்ச்சியில் இதே கருத்துக்கணிப்பை எமது நேயர்களுக்கு வழங்கியபோது கிட்டத்தட்ட இதே மாதிரியான முடிவுகளே கிடைத்திருந்தன. நெடுமாறன் ஐயா என்று அன்போடு அழைத்து அவருக்கு பெரும்பான்மையானோர் தமது வாக்கை அளித்தனர்.எனினும் தொல்.திருமாவளவன் மூன்றாமிடத்தையும் விஜயகாந்த் நான்காமிடத்தையும் பெற்றிருப்பது அவர்கள் கொண்டிருக்கும் செல்வாக்கையும் முன்பு இலங்கைத் தமிழர் மத்தியில் விருப்பத்துக்குரியவராக இருந்த வை.கோ இப்போது செல்வாக்கு இழந்து வருவதையும் காட்டுகிறது.



இன்னுமொரு குறிப்பிடத்தக்க விஷயம் காலஞ்சென்ற எம்.ஜீ.ஆருக்கு இன்னும் இருக்கும் மதிப்பு. அவர் உயிருடன் இருக்கும்போது ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு அளித்த ஆதரவை மக்கள் மறக்கவில்லை.



வெற்றியின் விடியலில் நேயர்கள் தந்த முடிவு

பழ.நெடுமாறன்
48
யாருமில்லை
41
தொல்.திருமாவளவன்
25
விஜயகாந்த்
20
வை.கோ
15
MGR
14
விஜய.T.ராஜேந்தர்
12
மருத்துவர் ராமதாஸ்
9
கருணாநிதி
2

தவிர திராவிடர் தழகத் தலைவர் கி.வீரமணி, இயக்குநர் சீமான், சுப.வீரபாண்டியன் போன்றோரின் பெயர்களும் குறிப்பிடப்பட்டன.

இன்னுமொரு முக்கியமான விடயத்தையும் இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும். தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியை இந்தப் பட்டியலில் சேர்த்ததே தவறு என்று வலைப்பதிவிலும் வானொலியிலும் பல பேர் என்னுடன் சண்டைக்கே வந்துவிட்டார்கள். அவர்களில் ஒருவர் எனக்கு அனுப்பிய மடல் கீழே.


  அன்புள்ள லோசன் அண்ணாவுக்கு,

உங்கள் கருத்துக்களை தாங்கி வருகின்ற இன்னொரு வடிவத்தினை தந்ததற்கு நன்றி. உங்கள் வலைப்பூக்களை முகர்ந்து கொண்டிருக்கின்றேன். நீங்கள் ஒரு ஒலிபரப்புத்துறையைச் சேர்ந்தவன் என்ற ரீதியில் - அதுவும் கருத்துச் சுதந்திரத்தின் அடிப்படையிலும், ஊடக சுதந்திரத்தின் அடிப்படையிலும் எங்கும் பேசப்படுகின்ற இறைமையுள்ள இலங்கைத் திருநாட்டில் ஏதோவொரு வகையில், ஊடகங்களுடன் பிண்ணிப்பிணைந்து விட்ட உங்களிடமிருந்து இச்சமூகம் நிறைய எதிர்பார்க்கின்றது. நிறைவேற்றுவீர்களென நம்புகின்றேன்.

உங்கள் வலைப்பூவில் சில நாட்களாக நான் கண்ணுற்ற ஒரு விடயத்தை முன்னிட்டு என்னுடைய கருத்துக்களை இங்கு தெரியப்படுத்துகின்றேன். (இதனைத் தெரியப்படுத்தி பின்னூட்டமிட அங்கு பொருத்தமான தலைப்பு இல்லாததினால்). அது வேறொன்றுமல்ல. நீங்கள் உங்கள் வாசகர்களிடமிருந்து பெறுகின்ற ஒருவித கருத்துக்கணிப்பு "இலங்கைத் தமிழர் மீது உண்மையான அக்கறையும் அன்பும் கொண்டிருப்பவர் யார்?" என்பது தான்.

அண்ணா... கோழி ஒரு பறவையினம் தான். அதற்காக அதனை பருந்துடன் ஒப்பிட்டு பறக்க முடியுமா எனக் கேட்பது எவ்வளவு முட்டாள்தனமோ அதைவிட முட்டாள் தனம் அங்கு மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியை பட்டியலிட்டு இருப்பது. 

கருணாநிதியை பட்டியலிட உங்கள் முன் இப்போது இருக்கின்ற காரணங்கள் எவையென அறிய ஆவலாயுள்ளேன்...

நினைத்தால் எவ்வளவோ நடத்தி முடிக்கலாம் எனும் நிலையிருக்கின்ற போதும் - தனது உயிர், மூச்சு, பேச்சு என எந்தத்தமிழை அடுக்கு மொழி பேசி உணர்ச்சி நரம்புகளை சுண்டிவிட்டாரோ, அந்தத்தமிழை 'உண்மையாகச்' சுவாசிப்பவர்கள் அந்தக் காரணத்துக்காக கொன்றொழிக்கப்படும் போது, ஏதோவொரு வகையில் இந்தக் கொலைக்கும் உடந்தையாக இருப்பவர்தான் கலைஞர் என்பது நீங்கள் அறியாததா? 

சொந்த மக்களை - தன்னை பதவிக்கதிரையில் அமர்த்தியதற்காக அவர்களுக்கு இலவச தொலைக்காட்சி வழங்கி உபசரித்த மக்களின் உயிர்களையே காக்க வக்கற்று கடிதப்பிச்சை நடத்தும் கருணாநிதி அவர்கள் எப்படி ஈழத்தமிழர்களின் மேல் கரிசனை கொள்ளப்போகின்றார்?

இதனை வாசிக்கும் போது உங்களின் நெஞ்சத்தின் எங்கோ ஓர் மூலையில் ஒரு வருடல்... அது ராஜீவ் கந்தியை ஞாபகம் செய்து, 'நாங்கள் எல்லாம் திறமா?' எனக்கேட்டு விட்டுச் செல்கின்றதல்லவா? நிச்சயமாக... இல்லையென்று சொல்லவில்லை. நடந்திருக்கலாம்! இலங்கைக்கு வந்த இந்தியப்படைகள் இந்தியா திரும்பிய போது, "தமிழ்ப் பெண்களின் கற்புக்களை சூறையாடியவர்களை வரவேற்கமாட்டேன்" என வரவேற்க மறுத்தவர் கலைஞர் என எங்கோ வாசித்த ஞாபகம். அப்படியாயின், அதற்கு எழுதிய தீர்ப்பை ஏனோ ஏற்க மறுக்கிறார்? அதை விட்டுவிடுங்கள். ஜீவனோபாயம் தேடி கடலேறும் சொந்த மக்களை பிணமாக கரைக்கு அனுப்பி வைப்பவனின் பாசறையில் பயிற்சி வழங்கிக் கொண்டிருக்கும் மத்திய அரசுக்கு முண்டுகொண்டிருப்பதும்... ஒன்றரை தசாப்தங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஒரு கொலைக்காக இதுவரை காலமும் சிறைவாசம் கொண்டுள்ள நளினியை விடுதலை செய்ய வேண்டாம் என மனுத்தாக்கல் செய்ததும் இந்தக் கலைஞரின் அரசுதான்...

ஈழத்தில் - யாழ்ப்பாணத்திற்கான அனைத்து பாதைகளும் மூடப்பட்ட நிலயில், தவிக்கும் உறவுகளுக்காக உணவும், மருந்துப் பொருட்களூம் சேகரித்து அனுப்ப தயாரான நெடுமாறன் ஐயா அவர்களுக்கு எதிராக முட்டுக்கட்டைபோட்டு அவரை சிறைக்குள் தள்ளியது ஜெயலலிதாவல்ல... இந்தக் கருணநிதி அவர்கள்தான்... 

அகவை அதிகமானால் 'அறளை' அதிகமாகும் என்கின்றார்கள்... அதனை உலகத்தமிழர்களின் தலைவன்(?) மேல் காண்கின்ற துர்ப்பாக்கியம்... அவருக்கு இப்போதைய சிந்தனையெல்லாம் குடும்ப அரசியல்... தி.மு.க.வின் எதிர்காலம்... இவைகளேயன்றி வேறெதுவுமல்ல...

நீங்கள் இங்கு வரிசைப்படுத்தியுள்ள பெயர்களில் அரசியல் கற்றுக்குட்டி விஜயகாந்த் அவர்கள் எவ்வளவு பொருத்தமானவர் எனக்கேட்டாலும்... விடை சூன்யமாகவே தெரிகிறது.

அண்ணா... இறுதியாக... ஊடகவியலாளர்களின் நெளிவு சுழிவுகளை தெரிந்து கொள்ளும் பக்குவம் எனக்கில்லை... அவர்கள் தூண்டில் போட்டு மீன் பிடிப்பவர்கள்... இங்கு கருணாநிதி அவர்களின் பெயரை என்னத்திற்காக இட்டீர்கள் எனும் உண்மை நோக்கம் நான் அறியேன்... ஆனாலும், இன்றைய நிலையில் முற்றிலும் இதற்கு பொருத்தமற்ற ஒருவர் தான் கலைஞர்...வேண்டுமென்றால் இப்படியொரு கருத்துக்கணிப்பு இட்டுப்பாருங்கள்...

உலகத்தமிழனின் உண்மைத்தலைவன் கருணாநிதி
1. ஆம்
2. இல்லை


அன்புடன், 
ஆதிரை


எவ்வளவு தூரம் ஈழத்தமிழரிடம் கருணாநிதி தனது செல்வாக்கினை இழந்துள்ளார் என்பதற்கு இது ஒரு சின்ன உதாரணம்.
                         
இனியாவது திருந்துவாரா? ஈழத் தமிழ் மக்களுக்காக வருந்துவாரா?

இல்லைத் தொடர்ந்தும் உளியின் ஓசை,கவியரங்கம், வாரிசுகளுக்கு அரசு கட்டிலைக் கொடுப்பது பற்றி மட்டுமே சிந்தித்தவாறு இறக்கும் வரை முடி துறக்காது இருக்கப் போகிறாரா?


145 000 ???? ஆஸ்திரேலியருக்கு வெற்றி

நேற்று மெல்பேர்ன் நகரில் இடம்பெற்ற ஏலத்தில் 145 000 அவுஸ்திரேலிய டொலர்களுக்கு
(121 938 அமெரிக்க டொலர்கள்) டொனால்ட் பிரட்மனின் முதலாவது துடுப்பு விலைபோயுள்ளது.என்னுடைய முன்னைய வலைப்பதிவில் அவுஸ்திரேலியர்கள் இந்த ஏலத்தில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை என்று ஏலவிற்பனையாளர் சார்லஸ் லேச்கி கவலைப்பட்டதாக எழுதியிருந்தேன்.இதைப் பார்த்து (உனக்கே ஓவரா இல்லையா?) ரோஷம் வந்த அவுஸ்திரேலியர் ஒருவர் இதை ஏலத்தில் எடுத்துவிட்டார். அதுசரி தங்கள் நாட்டின் கௌரவச் சின்னம் ஒன்று தங்கள் நாட்டைவிட்டு செல்ல விட்டு விடுவார்களா?
ஆனால் இதிலுள்ள சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால் பிரட்மன் இந்தத் துடுப்பின் மூலம் தனது முதலாவது போட்டியில் பெற்ற ஓட்டங்கள் 18 மற்றும் 1 மட்டுமே. (இந்தப் போட்டிக்குப் பிறகு அவுஸ்திரேலிய அணியிலிருந்தே பிரட்மன் நீக்கப்பட்டார்.அது தான் தனது வாழ்நாளில் கிரிக்கெட் அணியிலிருந்து பிரட்மன் நீக்கப்பட்ட ஒரே ஒரு சந்தர்ப்பம் ) இங்கிலாந்து அந்தத் தொடரில் அவுஸ்திரேலியாவைத் துவைத்தெடுத்தது. 4க்கு 1 என இங்கிலாந்து வெற்றி பெற்றது.


பின்னர் சிறுவருக்கான நிதி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஒரு சிட்னி செய்திப் பத்திரிகை நிறுவனத்துக்கு இந்தத் துடுப்பை அன்பளிப்பாக வழங்கினார்.(அதுக்குப் பிறகு வாங்கிய புதிய துடுப்புத் தான் சாதனை மேல் சாதனை படைத்ததே) அந்தத் துடுப்பிலே பிராட்மனின் முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய இரு அணி வீரர்களின் கை ஒப்பங்களும் இருக்கின்றன.

துடுப்பாட்ட சராசரியில் 100 இனை மயிரிழையில் நழுவவிட்ட பிரட்மன் வாழ்ந்த காலத்திலும் 100 இனை 8 ஆண்டுகளால் தவறவிட்டார். தனது 92வது வயதில் (2001ம் ஆண்டு) காலமானார்.

இருந்தாலும் 1000 பொன் இறந்தாலும் 1000 பொன் என்று சொல்வது யானைக்கு மட்டுமல்ல பிரட்மனுக்கும் பொருந்தும்.



September 24, 2008

ஏலமோ ஏலம்..


கிரிக்கெட்டின் பிதாமகர் என்று அழைக்கப்படும் டொனல்ட் பிராட்மனின் நூற்றாண்டு இது. எத்தனை சாதனைகள் முறியடிக்கப்பட்ட வண்ணம் இருந்தாலும் கூட,அவரது என்ற அசாத்திய சராசரியை யாராவது நெருங்க முடியுமா என்பது சந்தேகமே..
 
ஏற்கெனவே பிரட்மன் நூதனசாலையில் சேகரித்து வைக்கப் பட்டுள்ள பல்வேறு நினைவுப் பொருட்கள் ஏலம் விடப்பட்டுள்ள நிலையில், இன்று  Leski Auctions  நிறுவனத்தினரால் பிரட்மன் பயன்படுத்திய முதலாவது துடுப்பு ஏலத்துக்கு விடப்படுகிறது.
1928 ஆம் ஆண்டில் இங்கிலாந்து அணிக்கெதிராக பிரட்மன் தான் விளையாடிய முதலாவது போட்டியில் பயன்படுத்திய துடுப்பு இதுவாகும். பிரட்மன் ஒரு தெய்வம் போலக் கொண்டாடப்படும் ஆஸ்திரேலியாவிலிருந்து இந்த துடுப்பு இந்தியா அல்லது பிற நாடொன்றுக்குச் சென்று சேரும் எனத் தெரிவிக்கப்படுகிறது. 
Leski Auctions நிறுவனத்தின் தலைவர் சார்லஸ் லேச்கி (Charles Leski) ,இந்த ஏலத்தில் ஆஸ்திரேலியர்கள் பெரிதாக ஈடுபாடு காட்டவில்லை எனக் கவலைப்பட்டுள்ளார்.இந்த ஏலத்தில் $90,000  முதல் $120,000 வரை பெறப்படும் என எதிர்பார்க்கிறாராம்.

இதை வாசிக்கின்ற உங்களில் யாருக்காவது அந்த சரித்திரப் பிரசித்திபெற்ற துடுப்பைப் பெற்றுக் கொள்ளும் ஆசை இருந்தால்,இன்றே ஆஸ்திரேலியாவுக்குப் புறப்படுங்கள்.. (போறதுக்கு முன்னால தகவலை சொன்ன எனக்கு கமிஷன் வெட்டிட்டுப் போங்க.. )

*படத்தில் Leski பிராட்மனின் முதலாவது துடுப்போடு..


எங்களையும் கொஞ்சம் கவனியுங்க


அண்மைக்காலக் கிரிக்கெட் வீரர்களில் குறைவாக மதிப்பிடப்பட்ட , புகழ் வெளிச்சம் பெரிதாகப் படாத பதினோரு வீரர்கள்..இவர்கள் எல்லோருமே தத்தம் அணிகளுக்காக அபாரமாக விளையாடியுள்ளார்கள்.எனினும் நட்சத்திர அந்தஸ்து ஏனோ கிடைக்காமல் போயுள்ளது..உங்களில் பலபேரின் அபிமான வீரர்களாகவும் இவர்களில் சிலராவது இருக்கக் கூடும்.

ANDY FLOWER - ZIMBABWE
ஜிம்பாப்வே 90களில் முக்கியமான அணிகளில் ஒன்றாக வளர்வதற்குக் காரணமாக இருந்த மிகப்பெரிய தூண்..நவீன கால விக்கெட் காப்பாளர்களில் 50இற்கு மேற்பட்ட சராசரியும் 160இற்கு மேற்ப்பட்ட பிடிகளையும் டெஸ்ட் போட்டிகளில் எடுத்ததோடு,ஒரு நாள் போட்டிகளிலும் ஜிம்பாப்வே பெற்ற பல வெற்றிகளில் இவரது பங்கு முக்கியமானது.நிறவெறி ஜிம்பாப்வே அரசை எதிர்த்து கிரிக்கெட்டில் இருந்து வெளியேறி இங்கிலாந்தில் குடிபுகுந்த இவர்,எஸ்செக்ஸ் பிராந்திய அணிக்காகப் பிரகாசித்து இப்போது இங்கிலாந்தின் துடுப்பாட்டப் பயிற்சியாளராக இருக்கிறார்.


CARL HOOPER - WEST INDIES
அழகான,கண்கவர் துடுப்பாட்டப் பிரயோகங்களை உள்ளடக்கிய வீரர்.ரொம்பவும் பொறுமையான அணுகுமுறை,பொறுப்பான களத் தடுப்பு(குறிப்பாக ஸ்லிப் ஸ்தானத்தில் ),ஆர்ப்பாட்டமில்லாத சுழல் பந்து வீச்சு.. இவை அனைத்தும் கலந்த கலவை தான் கார்ல் ஹூபெர். பல அதிரடி வீரர்களின் வருகையும்,பிரையன் லாராவும் இவரது புகழை அமுக்கி விட்டன.


DAMIEN MARTYN - AUSTRALIA
ஆஸ்திரேலியா அணியில் நிறைந்திருந்த அதிரடித் துடுப்பாட்ட வீரர்களுக்கு மத்தியில்,அழகான துடுப்பாட்டப் பிரயோகங்களுக்குப் பெயர்போன வீரர் மார்டின். அதேவேளை தேவையான நேரங்களில் அதிரடியாக,வேகமாக ஆடவும் தெரிந்தவர்.ஆஸ்திரேலியா அணியில் இரண்டு முறை போராடி இடம்பிடித்த இவர், ஒரு புதிய பரிமாணத்தை அணிக்குள் கொண்டுவந்தார். ஓய்வு பெற்ற பின் தான் இவர் குவித்த ஓட்டங்களின் அருமை புரிந்தது.

NEIL FAIRBROTHER - ENGLAND
இங்கிலாந்து அணியின் மைகேல் பெவானாக ஒரு காலகட்டத்தில் கலக்கியவர்.இங்கிலாந்தின் புதிரான,யாருக்குமே புரியாத தெரிவு முறைகள் மூலமாக தனது பெரும்பாலான இளமையை இருட்டுக்குள் தொலைத்தவர்.ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் ஒரு ஆட்டத்தைக் கட்டமைப்பது முதல் முடித்து வைப்பது வரை கை தேர்ந்தவர்.

MARK BOUCHER - SOUTH AFRICA
தென் ஆபிரிக்க அணியின் அண்மைக்கால இணைப்புப் பாலம். மத்திய வரிசையில் ஓட்டங்களைக் குவித்து அணியைக் காப்பாற்றுவதும்,விக்கெட் காப்பாளராக சிறப்பாக செயற்பட்டு எதிரணிகளுக்கு சிரமங்களைக் கொடுப்பதிலும் இவருக்கு நிகர் இவரே.உலகின் தலைசிறந்த விக்கெட் காப்பாளர்களில் ஒருவராக இருந்தபோதும் எப்போதுமே,சங்ககார,டோனி,கில்கிறிஸ்ட் போன்றோரால் பின்தள்ளப்பட்டே வந்துள்ளார்.


BRAD HOGG - AUSTRALIA
மிகச் சிறந்த ஒரு நாள் சுழல் பந்துவீச்சாளராகக் கலக்கியும் கூட,டெஸ்ட் அணியில் நீண்ட காலம் இடம்பிடிக்க முடியாமல் போன துர்அதிர்ஷ்டசாலி. Shane Warneஇன் நீண்ட டெஸ்ட் பயணம் Brad Hoggஐ ஒரு டெஸ்ட் பந்துவீச்சாளராக மிளிர விடவில்லை.


JAVGAL SRINATH - INDIA
இந்தியாவின் நீண்ட கால சேவையாளர்.கபிலுக்குப் பிறகு இந்தியாவுக்குக் கிடைத்த 'வேகப்'பந்து வீச்சாளர்.கஷ்டமான உபகண்ட ஆடுகளங்களிலும் சிறப்பாகப் பந்து வீசியவர்.

DANIEL VETTORI - NEW ZEALAND
டீன் ஏஜ் வயது வீரராக அணிக்குள் பிரவேசித்த வெட்டோரி, இளவயதில் அணியின் தலைவராகவும் உயர்ந்துள்ளார். பண்பான வீரராகவும்,நல்ல சுழல் பந்துவீச்சாளராகவும் மிளிர்ந்து வரும் இவர் இன்னமும் முன்னணி வீரர்களில் ஒருவராக தன்னைக் காட்டிக் கொள்ளவில்லை.


BRIAN MCMILLAN - SOUTH AFRICA
தென் ஆபிரிக்காவின் தலைசிறந்த சகல துறை வீரர்.நுணுக்கமான வேகப்பந்து வீச்சாளர்,அதிரடித் துடுப்பாட்ட வீரர்,அட்டகாசமான ,நம்பகமான களத்தடுப்பாளர்.பிடிகளை அபாரமாகப் பிடிப்பதால் இவரை bucket என்று செல்லமாக சக வீரர்கள் அழைப்பராம். ரொம்பவும் அமைதியானவர் என்பதாலோ என்னவோ பெரிதாகப் புகழ் அடையவில்லை.


SHIVNARINE CHANDERPAUL - WEST INDIES
உலகின் நம்பகமான துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான இவர்,மிக நீண்ட காலம் லாராவின் நிழலில் இருந்து இப்போது தனது வயதுக்குப் பின் தான் தனித்து மிளிர ஆரம்பித்துள்ளார். அண்மையில் கிடைத்துள்ள சர்வதேச கிரிக்கெட் பேரவை விருது இவருக்குக் கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம்.


JACQUES KALLIS - SOUTH AFRICA
உலகின் மிகச் சிறந்த சகலதுறை வீரர்களில் ஒருவராக இருந்தும்,பத்தாயிரம் டெஸ்ட் ஓட்டங்களை அண்மித்தும் கூட இன்னமும் உலகின் முதல் தர வீரராக இவரை பொதுவாக ஏற்றுக்கொள்வதில்லை.தனது அணியின் தலைமைப் பதவி வாய்ப்பையும் இழந்துள்ள கலிஸ் ,சக வீரர்களாலும் சுயநலவாதி என அண்மைக்காலங்களில் விமர்சிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner