ஹீரோவான முரளி

ARV Loshan
14


இப்போதெல்லாம் யாரையும் நம்பமுடிவதில்லை! கிரிக்கெட்டிலும் கூடத்தான்!

யார் தான் எதிர்பார்த்தார் அசைக்க முடியாத அணி என்று கருதப்பட்ட அவுஸ்திரேலியா இப்படிக் கவிழ்ந்து போகும் என்றோ, தொடர்ந்து வந்த நிகழ்வுகள், பல முக்கிய வீரர்களின் ஓய்வு, புதிய வீரர்களின் அறிமுகம் என்று யாராவது நினைத்தோமா?

அதுபோல 2007 உலகக்கிண்ணப்போட்டிகளின் போது இந்தியா, தென் ஆபிரிக்க அணிகளை மண் கவ்வச் செய்து பலமான அணியாகத் தம்மைக் காட்டிக்கொண்ட பங்களாதேஷ் தொடர்ந்து வந்த போட்டிகளில் சறுக்கி அண்மையில் சிம்பாப்வேயிடமும் படுமோசமாகத் தோற்றபோது இதே பங்களாதேஷ் தான் 2007 உலகக்கிண்ணப்போட்டியில் அதிர்ச்சிகளை ஏற்படுத்திய அணியா? என்று ஆச்சரியமும் ஏற்பட்டது.

ஆனால் அதே சொங்கி வங்க அணி இலங்கை அணியைக் கடந்த 14ம் திகதி – தைப்பொங்கலன்று துரத்தி துரத்தி அடித்து விரட்டிய போது என்னடா நடக்குதிங்கே என்ற கேள்வி எழுந்தது. முதற் சுற்றுப்போட்டிதானே, இலங்கை அணி சீரியஸா விளையாடி இருக்காதுளூ சிலவேளை பங்களாதேஷில் போட்டி நடப்பதால் இலங்கை இறுதிப்போட்டிக்கு பங்களாதேஷ் அணியை வரச் செய்ய வேண்டுமென்றே தோற்றிருக்கலாம் எனப் பலப்பல அபிப்பிராயங்கள்.

ஆனால் பங்களாதேஷின் ஷக்கிப் அல் ஹசன் மென்டிசையும், முரளியையும் விரட்டி விரட்டி அடித்ததைப் பார்த்த பின் - இந்த அணி இலேசுப்பட்டதல்ல எனப் புரிந்தது.

குறித்து வைத்துக் கொள்ளுங்கள், இன்னும் கொஞ்சக் காலத்தில் ஷகிப் அல் ஹசன் ஒரு உலக தரத்தினாலான சகலதுறை வீரனாகப் போற்றப்படுவார்..அவரது நிதானம்,பக்குவம், இந்த 21 வயதிலேயே காட்டுகிற ஆளுமை ஆகியன நீண்ட தூரத்துக்கு அவரை அழைத்து செல்லப் போகின்றன.

நேற்றைய இறுதிப்போட்டி சப்பென்று போய்விடுமோ என்று நான் யோசிக்க முக்கியமான காரணம் - இலங்கையணி முதற்சுற்றுகளில் எவ்வளவு தான் மிக மோசமாக விளையாடினாலும் இறுதிப்போட்டியில் இரக்கமே இல்லாமல் எதிரணியை நசுக்கிவிடும். ஆசியக்கிண்ண இறுதிப்போட்டியில் இந்திய அணியைத் துவம்சம் செய்தது நல்ல உதாரணம்.

நேற்றும் அறிகுறிகள் அவ்வாறே தென்பட்டன. பங்களாதேஷின் முதல் 5 விக்கெட்டுக்கள் 50 ஓட்டங்களிலே சரிந்த போது டாக்காவிலே இலங்கை வீரர்கள் மாலை வேளை ஷாப்பிங் போகலாம் என்று எண்ணினேன். ஆனால் கொஞ்சம் போராடி 152 வரை ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர். இதில் இலங்கை அணியின் தலைவர் மகேலவின் பங்கும் உண்டு. அண்மைக்காலங்களாகவே ஒருநாள் போட்டிகளில் தனது துடுப்பெடுத்தாட்டத்தில் ரொம்பவே சொதப்பி எதிரணிகளை ஆனந்தக் கண்ணீர் விடவைக்கும் அவர், நேற்று பந்து வீச்சாளர்களைக் கையாண்ட விதத்தில் பங்களாதேஷ் ரசிகர்களின் மனங்கவர்ந்தவரானர்.

ஆரம்ப ஓவர்களில் சிறப்பாகப் பந்து வீசிய குலசேகரவை மீண்டும் பந்துவீச அழைக்கவே இல்லை. இலங்கையின் பந்துவீச்சாளர்கள் மிகச்சிறப்பாகவே பந்து வீசி வருகிறார்கள். துடுப்பாட்டம் தான் அடிக்கடி கை விரித்துவிடுகிறது.

நேற்றும் ஆரம்பத்தில் விக்கெட்டுக்கள் சரிந்த வேகத்தில் குறைந்த ஓட்டம் எடுத்த உலகசாதனையையும் இலங்கை அணி முறியடித்துவிடுமோ என்று ஒரு கணம் யோசித்தேன். 6 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்கள்.

நின்று பிடித்து சங்கக்கார ஆடியவிதம் அவரது உலகத்தரத்தை மீண்டுமொரு தடவை நிரூபித்தது. அதேவேளையிலும், முபாரக், மஹ்ரூப், குலசேகர போன்றோரின் துடுப்பாட்டத்திறமைகள் பற்றித் தெரியுமாதலால் இலங்கை அணி தோற்றுவிடாது என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.

அப்போது யார் நினைத்தார் நம்ம ஹீரோ முரளி தான் நேற்று Match winner ஆகப்போகிறார் என்று.

முபாரக், சங்ககார, குலசேகர என்று விக்கெட்டுக்கள் சரிந்த வேளையில் தான் அலுவலகத்தில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த அறையில் ஒரே பரபரப்பு.

இலங்கைக் கிரிக்கெட்டின் 'கறுப்பு நாள்' இன்று தான் மனதில் நினைத்துக்கொண்டேன். நம் சிங்கள அலுவலக நண்பர்கள் மகேல மற்றும் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்த இலங்கைவீரர்களுக்கு தாறுமாறாகத் திட்டிய வண்ணம் தங்கள் இஷ்ட தெய்வங்களின் வேண்டுதல்களையெல்லாம் தமிழ்மொழி பேசும் மஹ்ரூப், முரளி மீது வைக்கின்றனர்.

இதற்கிடையே தொலைக்காட்சியில் பங்களாதேஷ் இலங்கையை வெல்லும் வேளை எறுமாற் போல, புலி ( வங்கப்புலி ) சிங்கத்தை வீழ்த்துவது போன்ற படம் ஒன்று காட்டப்பட சிங்கள நண்பர் ஒருவர் "மகிந்தவும் மட்ச் பார்ப்பாரோ தெரியல்ல" என்று சொல்ல,அந்த டென்சனிலும் சிரிப்பை பரவியது.

இலங்கை, இந்திய அரசியல் போல முரளியின் துடுப்பாட்டமும் நம்பமுடியாத ஒன்று! கையில் பலமிருந்தும் கபில்தேவுக்கே அடுத்தடுத்து சிக்ஸர் அடித்திருந்தும், துடுப்பாட்டப் பயிற்சிகளில் அதிக கவனம் செலுத்தாமல் இன்னமும் நம்பிக்கை வைக்கமுடியாத ஒருவர்.

ஆனால் நேற்று அவர் வந்த நேரம், மகேலவின் அதிர்ஷ்டம் வேலைசெய்தது.... இலங்கை அணிக்கு 3வது பவர்பிளே கிடைக்க, முரளியும் கிடைத்த வாய்ப்பில் சந்துல சிந்து பாடிவிட்டார்.

அடித்தாடக் கூடிய சகலதுறை வீரர் மஹ்ரூப் பார்த்த வண்ணம் மறுமுனையில் இருக்க, இரண்டு சிக்சர்கள், நான்கு நான்கு ஓட்டங்கள் என்று முரளி அடித்த மரண அடிகள் என்னதான் நடக்குதிங்க என்று மயக்கமே வரவழைப்பது போல இருந்தது.

முரளி அடித்த இரண்டு சிக்ஸருமே நேர்த்தியான, வலுவான அடிகள்; விக்கெட் காப்பாளரின் தலைக்கு மேலால் போய் விழுந்த நான்கு ஓட்டங்கள் என்றால் அதிர்ஷ்ட தேவதை கொடுத்த பரிசுதான் - அதுதான் பங்களாதேஷ் அணித்தலைவர் அஷ்ரபுலுக்கும் கோபம்வந்துவிட்டது. விடுங்க அஷ்ரபுல் - ஒருநாள் கிரிக்கெட்ல இதெல்லாம் சகஜமப்பா.

100 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலே கோடு வரைக்கும் வந்து பதக்கத்தை பறி கொடுத்தநிலை பங்களாதேஷிக்கு.

குருட்டு அதிர்ஷ்டத்தால் இலங்கைக்கு கிடைத்த கிண்ணம் இது. பூஜ்யம் பெற்றாலும் புண்ணியவான் மகேல வெற்றிக்கிண்ணத்தை தூக்கிட்டாருப்பா. தலைவரென்றால் சும்மாவா?

ஒரு மாதிரி மீண்டும் அவமானப்படாமல் தப்பியாயிற்று; கட்டுநாயக்காவில் வந்து இறங்கும் போது கல் வீச்சு நடக்காது. மாலை போடவும் ஆட்கள் வருவார்கள்.

ஆனால் இதே மாதிரி சொங்கி விளையாட்டு விளையாடினால் அடுத்து பயணமாகப் போகிற பாகிஸ்தானில் பட்டை நாமமும், பின் இம்மாத இறுதியில் இலங்கை வரப் போகிற இந்தியாவிடம் எப்போதுமே வாங்காத மரண அடியுமே கிடைக்கும்.

பாகிஸ்தானாவது பரவாயில்லை – பங்களாதேஷ் போலத் தான் இருக்கின்றார்கள். ஆனால் இந்தியா? எமகாதகர்கள் - full form 
கிடைத்த போட்டிகளிலெல்லாம் வெளுத்து வாங்குகிறார்கள். இலங்கை இப்படி துடுப்பெடுத்தாடினால் துவம்சம் செய்துவிடுவார்கள்.

மகேலவுக்கு ஒரு சின்ன ஐடியா – பேசாமல் நம்ம முரளியை – சனத்ஜெயசூரியவுடன் ஆரம்பத்துடுப்பாட்ட வீரராக அனுப்புங்கள்.
களத்திலேயும் ஒரு கிளுகிளுப்பு பார்த்த மாதிரி இருக்கும்...

Post a Comment

14Comments

Please Select Embedded Mode To show the Comment System.*