விஜய் டிவி ஜெகனும் என் மகனும்!

ARV Loshan
10
விஜய் டிவியில் முன்பு 'ரீல் பாதி ரியல் பாதி' தொகுத்து வழங்கும் போதே எங்கள் வீட்டில் நானும் என் தம்பிமாரும் ஜெகனின் ரசிகர்கள்! (ச்சீய் என்று நிறையப் பெண்கள் சொல்வது கேட்கிறது – ஆனாலும் பெண்களில் பலபேர் ஜெகனை ரகசியமாக ரசிப்பது எனக்கும் தெரியும்) ஜெகன் இரட்டை அர்த்த வசனங்களையே வெண்ணிற ஆடை மூர்த்தி பாணியிலேயே சொன்னாலும் கூட அருவருக்கத்தக்கதாக இல்லாமல் இரசிக்க கூடியமாக இருக்கும்.

அந்த நிகழ்ச்சியில் நண்டு,செண்டு,வண்டு என மூன்று அவதாரம் எடுத்து இந்த ஜெகன் செய்த குறும்புகளும் கூத்துகளும் இளசுகள் மத்தியில் ரொம்பவே பிரபலம்.. 

இதைவிட ஜெகனிடம் பிடித்த ஒரு விஷயம்- சினிமாக்களை,சினிமாக்காரரைப் பயப்படாமல் பகிரங்கமாக அடிக்கும் விமர்சனங்கள் ரசிக்கத்தக்கதும் எப்போது நினைத்தாலும் சிரிக்க வைப்பதுமாக இருக்கும். குறிப்பாக தனுஷ்,சிம்பு,சரத்குமார் ஆகியோருக்கு அடித்த செம நக்கல் கமெண்டுகளை இதுவரைக்கும் யாரும் மறந்திருக்க முடியாது. சம்பந்தப்பட்ட நடிகர்கள் நிகழ்ச்சியைப் பார்த்திருந்தால் இப்போதைக்கு ரிட்டயர் பண்ணிவிட்டு இமயமலையோ,பரங்கிமலையோ தேடி ஒடி இருப்பார்கள்.

அதிலும் இளைய தளபதியை ரொம்ப ஓவராகவே லூட்டி அடித்ததால் ஓட,ஓட ஜெகன் விரட்டப்பட்டதாக எனது இந்திய ஊடக நண்பர் ஒருவர் சொல்லி இருந்தார்.. (விஜயின் தந்தையின் முறைப்பாடு மேலிடத்துக்கு போனதாம்)

இந்த நேரடி தாக்குதல்களாலேயே வந்த தாக்கங்களாலேயே ஜெகனுக்கு நிகழ்ச்சி வாய்ப்புக்கள் இல்லாமல் போய் பல நிகழ்ச்சிகள் ஒரு சில வாரங்களிலேயே நின்று போய் (அதிலொன்றில் தான் இப்போதைய சின்னத்திரைக் கனவுக்கன்னி ரம்யா அறிமுகமானார். ) ஜெகன் என்ற ஜீவராசியே தொலைக்காட்சியிலிருந்து இல்லாமல் போய்விட்டதோ என்றிருந்த வேளையில் தான் அமெரிக்காஸ் ஃபன்னியஸ்ட் வீடியோஸ் - America's Funniest Videos என்ற விஜய் டிவி நிகழ்ச்சி மூலமாக வெளியே வந்தார்.

இன்னமும் அந்த குசும்பு, குறும்பு, வம்பிழுக்கும் தன்மை இன்னும் விட்டுப் போகவில்லையென்றாலும்
கொஞ்சம் அடக்கி வாசிப்பது தெரிகிறது..

ஒரிஜினல் America's Funniest Home Videosஐ முதலிலேயே நான் ஆங்கிலத்தில் பார்த்திருக்கிறேன்.. எனினும் இங்கு குறும்பான ஜெகன் மற்றும் பாபுஜியின் தொகுப்பில் பார்க்கும் போது சுவாரஸ்யம் தான்,,
ஆரம்பத்திலேயே பாபுஜியின் வரவேற்புப் பாடல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வெர்ஷனில்(version) இருக்கும் சுவையே தனி..

மாலையில் 7மணிக்கு இது ஒளிபரப்பினாலும் எனக்கும் எங்கள் வீட்டிலுள்ள எல்லோருக்கும் ரொம்ப வசதியான நேரம் இரவு 10.30க்கு தான்.. எப்போதாவது தான் மணிக்கு ஒன்றாக இருந்து பார்ப்போம்.எல்லோருக்கும் பிடித்த நிகழ்ச்சியாகிப் போனதால் என் செல்ல மகனும் எங்களோடு இருந்து பார்த்தே ஆக வேண்டிய கட்டாயம் அவனுக்கு,.. 

அவனின் வயது அண்மையில் தான் ஒன்றைத் தாண்டியதால் இப்போது தான் பொருட்களையும் ஆட்களையும் உன்னிப்பாக அவதானிக்கிறான்.தான் பார்க்கும் எல்லாவற்றைப் பற்றியும் தனக்கு தெரிந்த மொழியில் பேசுகிறான்.. (சித்தப்பா,அப்பப்பா எல்லாம் த்தா .. அப்பம்மா அவனுக்கு ஆத்தா.. ;) ) 

ஆனால் அவன் மூன்று மாதத்தில் இருந்தே தொலைக்காட்சிகளோடு ஒன்றி விட்டான். கத்தாழைக் கண்ணாலே, முகுந்தா பாடல்கள் முதல் அவனுக்கு ரொம்பவே பிடித்த விளம்பரங்கள் போகும்போது அவனது முகத்தில் ஒரு மலர்ச்சியையும்,கைகள்,கால்கள் தானாகவே ஆடுவதையும் அவதானித்தோம். 

அதிலும் முன்பு இதயம் oil pulling, Sun DTH விளம்பரம் போகும் போது முழங்காலில் நின்று கொண்டே ஆடியவன், இப்போது ஒழுங்காக எழுந்து நிற்க ஆரம்பித்த பிறகு தனக்குப் பிடித்த எல்லாவிளம்பரங்களுக்கும், பாடல்களுக்கும் எழுந்து நின்று அந்தப் பாடல்களின் தாளங்களுக்கு ஏற்றபடி ஆடுகிறான்.. (சூ சூ மாரி, அஞ்சல பாடல்கள் போனால் அவ்வளவு தான்)

இதே மாதிரி எங்களோடு ஒன்றாக இருந்து அவனும் இந்த நிகழ்ச்சி பார்க்க ஆரம்பித்தான்.. மாற்ற சின்னக் குழந்தைகள் போலவே எந்தவொரு நிகழ்ச்சியையும் பொறுமையோடு இருந்து இவனும் பார்ப்பவன் கிடையாது.. (விளம்பரங்கள்,பாடல்கள் மட்டுமே இவனது தெரிவுகள்) எனினும் AFV மட்டும் அவனுக்குப் பிடித்துப் போகக் காரணம்.. அதிலே வருகிற சிறு குழந்தைகளும், நாய்,பூனை,குதிரை போன்றனவுமே.. 

அக்கா, அண்ணா சொல்லத் தெரிந்த நம்ம வாரிசு, தனக்குப் பிடித்த விலங்குகளுக்கெல்லாம் தன் மொழியில் ஒவ்வொரு பெயர் வைத்துக் கூப்பிடுகிறான்..நாய்,பூனை தொலைக்காட்சியில் தோன்றும்போதும்,சின்னக் குழந்தைகள் வந்து விழுந்து எழும்போதும் துள்ளிக் குதித்து தனது மகிழ்ச்சியை எங்களோடும் பகிர்ந்துகொள்ளும் அவனுக்கு ஜெகன் மீண்டும் அந்த கிளிப்ஸ் முடிந்து வரும்போது முகம் போகும் போக்கு இருக்கே.. வார்த்தைகளால் சொல்ல முடியாது..

உதடுகள் கோணி,முகம் தொங்கிப் போய் ஏக்கமாக எங்களைப் பார்ப்பான்.. என் தான் இந்தப் படுபாவி வந்து சேர்ந்தானோ என்பது போல.. இது மட்டுமல்லாமல் அடம்பிடித்து கைகளை ஆட்டி ஆட்டி..தனது புரியாத பிஞ்சு மழலை மொழியில் எதோ திட்டவும் செய்கிறான்.. (அவனது மொழியிலும் கெட்ட வார்த்தை இருக்கும் தானே)

திட்டுன்னா திட்டு அப்பிடி ஒரு திட்டு.. ஜெகன் சிம்பு,தனுஷ்,விஜயிடம் கூட அப்படி ஒரு திட்டை வாழ்க்கையில் வாங்கி இருக்க மாட்டார் என்று நம்புகிறேன்.. ஜெகன் திரையிலிருந்து போகும் வரை சரமாரியான அர்ச்சனை கொடுத்தபிறகு தான் அடங்குவான்..

இப்போதெல்லாம் நாங்கள் கிளிப்ஸ் பார்க்கிறதோட சரி.. ஜெகனின் தொகுப்பை எல்லாம் பார்க்கிறதில்ல.. அந்த நேரத்தில ஏதாவது விளம்பரம் போகும் சனெலுக்கு மாற்றி விடுகிறோம்.. அப்போது தான் நம்ம பெரியவர் அமைதியாக இருக்கிறார்.. 

ஜெகன், அடுத்தமுறை நீங்கள் நிகழ்ச்சியை விட்டு தூக்கப்பட்டால் காரணம் என் மகனே தான்.. இன்னும் எத்தனை அப்பாவி ஜீவன்களின் அர்ச்சனை உங்களுக்கு தினம்தோறும் கிடைக்குதோ? 
  

Post a Comment

10Comments

Please Select Embedded Mode To show the Comment System.*