புதிய வருடத்தின் முதலாவது டெஸ்ட் போட்டியாக ஆரம்பித்த போட்டி இன்று இரண்டாவது போட்டியாக முடிவுற்றது.. நேர அடிப்படையில் ஆஸ்திரேலியாவுக்கு தான் முதல் போட்டியில் விளையாடும் வாய்ப்புக் கிடைத்தது பற்றி விளங்கப்படுத்தத் தேவையில்லை தானே..
நேற்று பங்களாதேஷுக்கெதிராக இலங்கை அணி ஒரு மாபெரும் வெற்றியைப் பெற்றது. அந்த 465ஓட்டங்களால் ஆன வெற்றி டெஸ்ட் வரலாற்றில் ஓட்டங்களின் அடிப்படையில் பெறப்பட்ட பிரம்மாண்ட வெற்றிகளின் வரிசையில் ஐந்தாவது பெரிய வெற்றியாகும்..
சிட்னி டெஸ்ட் போட்டியில் ஏற்கெனவே தொடரை இழந்திருந்த ஆஸ்திரேலியா இந்தப் போட்டியில் தென் ஆபிரிச்காவுக்குத் தக்க பதிலடி கொடுக்கும் என்று நான் ஏற்கெனவே எதிர்பார்த்தேன்.. எனினும் பல முக்கிய வீரர்களை ஏற்கெனவே இழந்திருந்த ஆஸ்திரேலியா அனுபவமற்ற பந்து வீச்சாளர்களுடன் என்ன செய்யப் போகிறது என்ற சந்தேகமும் இருந்தது.
ஆனால் இந்தப் போட்டி ஆரம்பித்த நாளில் இருந்து ஆஸ்திரேலியாவின் கரமே ஓங்கியிருந்ததை அவதானிக்கக் கூடியதாக் இருந்தது.
எப்படியாவது தரப்படுத்தலில் முதல் இடத்தைத் தக்கவைத்துக் கொள்வதோடு, முதல் தடவையாக மூன்று போட்டிகள் அடங்கிய ஒரு தொடரை 3-0 என்று சொந்த மண்ணிலே தோற்கும் அவமானத்தைத் தவிர்க்க வேண்டும், அத்துடன் புதிய வருடத்தை நம்பிக்கையுடன் எதிர் கொள்ளும் விதத்தில் வெற்றியொன்றைப் பெற்றுக் கொண்டேயாக வேண்டும் என்ற மாபெரும் அழுத்தங்களோடு களமிறங்கிய பொண்டிங்கின் ஆஸ்திரேலியா சிறப்பாக,வீராவேசத்துடன் இந்தப் போட்டியில் பிரகாசித்தது.
வழமையான வெற்றிபெறும் ஆஸ்திரேலியாவை நீண்ட நாட்களுக்குப் பிறகு ஐந்து நாட்களுமே பார்த்தேன்..
அவர்களது வழமையான ஆவேசம்,போராட்ட குணம்,வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற உத்வேகம் அனைத்துமே..
போட்டியின் சிறப்பாட்டக் காரர் சிட்டில்
அத்துடன் பல இடங்களில் அதிர்ஷ்டமும் கை கொடுத்தது.. தென் ஆபிரிக்காவின் முதுகெலும்பு அணித்தலைவர் ஸ்மித்தின் கை முறிவு, சில ஆட்டமிழப்பு முடிவுகள் என்று நேற்றைய நான்காவது நாளின் முடிவிலும் ஆஸ்திரேலியா பலம் பெற்று விட்டது..(இலங்கையின் நடுவர் அசோகா டீ சில்வா வேற இன்று பௌச்சருக்கு அநியாயமா ஒரு ஆட்டமிழப்புக் கொடுத்தார்)
இன்று காலை, மதியபோசன இடைவேளைக்கு முன்னதாகவே முக்கியமான விக்கெட்டுக்களை இழந்துவிட்ட தென் ஆபிரிக்கா இலகுவாக சுருண்டு விடும் என்றும், கை முறிவின் காரணமாக ஸ்மித் துடுப்பெடுத்தாட வரமாட்டார் என்றுமே நான் உட்பட எல்லா ரசிகர்களும் நினைத்ததுடன், ஏன் உலகின் முன்னணி கிரிக்கெட் விமர்சகர்களும் அவ்வாறே கருத்துக் கூறியிருந்தார்.
ஆனால் நினைப்பதெல்லாம் நடந்து விடுவதில்லையே. அதிலும் cricket is a golden game, in which no one can predict anything until the last ball us bowled என்று சொல்லி வைத்தது போல, இன்டறைய இறுதி நாள் ஆட்டம் இறுதி நிமிடங்கள் வரை சென்று தான் முடிவொன்றை எட்டியது. போட்டியில் இனி வெற்றி சாத்தியமில்லை என்ற நிலையில் தென் ஆபிரிக்கா பொறுமையாக ஆடி சமநிலையில் போட்டியை முடித்துக் கொள்ள முனைந்தது.
ஸ்மித் வருவாரா இல்லையா என்று தெரியாத நிலையிலும் ஒன்பதாவது விக்கெட்டுக்காக இணைந்த ஸ்டைனும் ,ந்டினியும் இணைந்து 17 ஓவர்கள் போராடி 55 ஓட்டங்களை பெற்று ஆஸ்திரேலிய டென்ஷனை அதிகப் படுத்தினார்கள்..ஸ்டைன் ஆட்டமிழக்க, யாரும் எதிர்பாராவண்ணம் ஸ்மித் தனது முறிந்து தொங்கும் கையோடு ஆடுகளம் புகுந்தார்.
சிட்னி மைதானத்தில் திரண்டிருந்த ரசிகர்கள் எழுந்து நின்று அந்த வீரத் தலைவனுக்கு தமது மரியாதையை செலுத்தினர்.இறுதிவரை போராடும் தனது குணமே அண்மைக்கால தென் ஆபிரிக்காவின் வெற்றிகளுக்கான காரணம் என்று அறிவிப்பது போல இருந்தது ஸ்மித்தின் அந்த வருகை.
இன்னும் ஒரு எட்டு ஓவர்கள் போராடித் தப்பித்தால் தோல்வியிலிருந்து தனது அணி தப்பித்துவிடும் என்ற நிலை.. நம்பிக்கையோடு ஆடும் ந்டினிக்கு உதவியாக இருந்தாலே போதும் என்று முடியுமானளவு பந்துகளை தொடாமலேயே விட முனைந்து கொண்டிருந்தார் ஸ்மித்.தனது முறிந்துபோன இடது கரத்தால் துடுப்பைத் தொடவே முடியாதளவு வேதனை தந்ததை ஸ்மித்தின் முகத்தில் காணக் கூடியதாக இருந்தது.
நாற்பது பந்துகள் ஸ்மித்-ந்டினி ஜோடி போராடியது.. இதயம் இரட்டை வேகத்தில் துடிக்கும் விறுவிறுப்பு..போட்டி வெற்றி தோல்வியின்றித் தான் முடிவடையப் போகிறது என்று எண்ணியிருக்கும் நேரம் ஜோன்சனின் பந்து ஒன்று ஸ்மித்தின் விக்கெட்டைத் தகர்த்தது. அப்படியே தென் ஆபிரிக்க்காவின் கனவுகளையும்..
முறிவு தந்த வேதனையை விட இந்த முடிவு ஸ்மித்துக்கு அதிக வேதனை தந்திருக்கும்..
இளைய வீரர்களுடன் துணிச்சலாகக் களம் இறங்கிய ஆஸ்திரேலியா மீண்டும் சாதித்துக் காட்டியது- நீண்ட காலத்துக்குப் பின்.
புதிய வருடம் தெம்பாகப் பிறந்துள்ளது..
தென் ஆபிரிக்க்கா இந்த டெஸ்டில் தோற்றாலும், தொடரை வென்றது.. அணித் தலைவர் ஸ்மித்தோ எல்லா கிரிக்கெட் ரசிகர்களினதும் மனத்தை வென்றார்..
இந்தத் தொடர் முழுவதும் ஒரு துடுப்பாட்ட வீரராகவும்,துணிச்சலான தலைவராகவும், இறுதிப் போட்டியில் இறுதிவரை போராடும் ஒரு வீரனாகவும் தன்னை முன்னிறுத்திய ஸ்மித் தான் தொடரின் சிறப்பாட்டக் காரர்.