அண்மையில் ஒரு உணவகத்துக்குக் குடும்பமாக இரவு உணவுக்காகச் சென்றிருந்தோம். வாரத்தில் ஒருநாள் அல்லது நேரமில்லாவிட்டால் சிலவேளை மாதத்தில் ஒருநாள் எப்போதாவது இவ்வாறு வெளியே போய் உற்சாகமாக இருப்பதுண்டு. கிட்டத்தட்ட இருமாத காலத்துக்குப் பின் இவ்வாறு இரவு உணவுக்காக ஒன்றாக வெளியே போயிருந்தோம்!
அந்த உணவகம் ஆரம்பித்தக் கொஞ்ச நாள் (வழமை போல் இம்முறையும் பெயர் சொல்லமாட்டேன்) இடம் சிறிதாக இருந்தாலும் பெரிதாகக் கூட்டம் இல்லாததால் நிம்மதி! உணவும் ஓடர் செய்து கொஞ்ச நேரத்திலேயே வந்தது ருசியும் மோசமில்லை.
பரிமாறியவர் எங்களுக்கு கட்டணத்துக்கான பில்லைக் கொண்டு வர முன் என்னுடைய அருமைத் தந்தையார் கழிவறைக்கு செல்ல வேண்டுமென்று கேட்டுப் போனார்.
அவர் போய் வரவும் பில்லைக் கடைச் சிப்பந்தி கொண்டு வரவும் நேரம் சரியாக இருந்தது.
அந்த நேரம் பார்த்து கழிவறை சென்று வந்த மனமார்ந்த நிம்மதியுடன் என்னுடைய அப்பா அந்த சிப்பந்தியைப் பார்த்து அப்பாவித்தனமாக சொன்னார்.
'தம்பி இண்டைக்குத்தான் முதல் தடவையாக இங்கே வந்தனாங்கள் - சாப்பாடு அருமை – உங்கடை டொய்லெட் - அதைவிட அருமை!'