இந்தக் கதை உண்மையிலேயே கடந்த சனிக்கிழமை இரவு முதல் என் வீட்டில் இடம்பெற்ற கதை.. வேறு கிளி, கிலி, புலி பிடிக்கும் கதைகளுக்கும் இதற்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை.. தயவு செய்து நம்புங்கள்.
நேற்று இரவு விஜய் டிவியில் போய்க்கொண்டிருந்த ஒரு ஆங்கில மொழிமாற்றுப் படத்தை (Spy kids 3) பெரிதாக சுவாரஸ்யமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் தான் இந்த சம்பவத்தின் ஆரம்பம்.
நான்,மனைவி,தம்பி ஆகியோர் பார்த்துக் கொண்டிருந்தோம்.. திடீரென்று ஒரு சின்ன உருவம் சுவரோரம் எட்டிப் பார்க்க, திரும்பிப் பார்த்தால் ஒரு குட்டி எலி.. (சுண்டெலி)
நாங்கள் எழுந்து அதை அடிக்கவோ,பிடிக்கவோ முனைவதை அறிந்து எங்கள் சின்னவன் தூங்கிக் கொண்டிருந்த அறைப்பக்கம் விரைந்து ஓடி விட்டது..அதே திசையில் தான் அம்மாவின் அறையும் இருந்ததால் எந்த அறைக்குள் ஓடியிருக்கும் என்பதை எங்களுக்கு உறுதி செய்துகொள்ள முடியாமல் போயிற்று..
என்றாலும் முதலில் எங்கள் சின்ன மகனை அந்த எலி தற்செயலாகவேனும் காயப்படுத்திவிடக்கூடாது என்ற நோக்கில் அவனை என் மனைவி அவனது தூக்கம் கலையாமலேயே தோளில் சாய்த்துக்கொள்ள, நானும் தம்பியும் எலி வேட்டையைத்தொடங்கினோம்.
அறைக்கதவை மூடியபின் அலுமாரி, கட்டில், கட்டிலுக்கு கீழே இருந்த சூட்கேஸ் என்று எதையும் விடாமல் ஆராய்ந்தபடியே பல மாதங்களாகத் தட்டாமலிருந்த தூசிகளையும் அகற்றிய அதே நேரம், எங்கிருந்தாவது எலி வந்தால் அடிப்பதற்கென எங்கள் கையிலிருந்தவை தும்புத்தடிகள்.
எனினும் அந்த அப்பாவி எலியைக் கொல்வதைவிட அதைத் தப்ப வைப்பதற்காக ஜன்னலையும் திறந்தே வைத்திருந்தோம்.
முக்கால் மணிநேரத்தைத் தொலைத்தும் ஒளிந்த எலி அகப்படவே இல்லை.
எனவே எம் அறைக்குள் எலி இல்லை என்ற முடிவுடன், அம்மாவின் அறையைத் துளாவத்தொடங்கினோம். அப்போதே நேரம் நள்ளிரவைத் தாராளமாகத் தாண்டியிருந்தது.
அம்மாவின் அறையில் தான் தம்பி தனது படிக்கும் புத்தகங்கள், விளையாட்டுக்கான பொருட்கள், கசெட்கள், சீடிக்கள், கணினி இயந்திரம் என்று எக்கச்சக்கமான பொருட்கள். பொறுமையாக எல்லாவற்றையும் தேடியும் ம்ஹீம் எலி இல்லவே இல்லை.
மணி 1.45. சரி எங்கேயோ போய்த்தொலையட்டும் என்று எல்லோரும் தூங்க ஆயத்தமானோம்.
எனக்கும் கடுமையான இருமல் என்ற காரணத்தால் கட்டிலில் படுத்துக்கொள்ள, மனைவியும், சின்னவனும் கீழே மெத்தையில் படுத்துக்கொண்டார்கள். இருமல் மருந்தின் தாக்கமும், எலி தேடிய களைப்பும் எனக்குத் தூக்கத்தை இலகுவாகத் தர கொஞ்ச நேரத்தில் அசந்து ஆழ்ந்த தூக்கத்துக்கு சென்ற என்னை மனைவியின் கூச்சல் எழுப்பியது.
தனது கையைத் தொட்டு எலி ஓடியதாகப் பயந்தபடியே சொன்னார். தூக்கக்கலக்கமா? என்று நான் கேட்டபோதும், எலி தான் அது என்று நிச்சயப்படுத்தினார். எலியென்றால் எனக்குப் பயமில்லையென்றாலும் ஒரு அருவருப்பு.
நேரத்தைப் பார்த்தேன் 3.35. அந்தவேளையில் மீண்டும் ஒரு எலி வேட்டைக்கு எனது தூக்கக் கலக்கம் இடம் கொடாமையால் எமது அறையை மூடிவிட்டு, ஹோலிலே படுக்கலாம் என்று முடிவெடுத்தோம். நல்லகாலம் அடுத்த நாள் ஞாயிறு என்பதால்; நிம்மதி. கொஞ்சம் நிம்மதியாகத் தூங்கலாம் என்று.
காலையில் மீண்டும் எலிவேட்டை. சின்னவனை அம்மாவிடம் கொடுத்துவிட்டு, அதிகமான பலத்துடன் மனைவியையும் சேர்த்துக்கொண்டு நானும் தம்பியும் களமிறங்கினோம். அதிக பயத்துடன் புதிய ஆயுதங்கள். ஓரிரண்டு ஸ்பிரேக்கள்: எலி அகப்பட்டால் மயக்கிப்பிடிக்க.
இன்னொரு மணிநேரம் செலவளித்தும் எலி பிடிபட்டமாதிரி இல்லை. ஒரேயொரு நல்ல விஷயம் காணாமல் போன பல பொருட்கள் கிடைத்ததும், அறை ஒழுங்காக அடுக்கப்பட்டதும் தான்.
என்ன மந்திரமோ, மாயமோ, வெறும் அறையைத் தான் பார்த்தோம். எலி கிடைக்கவே இல்லை.
சரி கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை இல்லாமல் போனாலே நல்லது என்று ஒரு நிம்மதியை நாங்களே உருவாக்கிக்கொண்டு எங்கள், எங்கள் வேலைகளைக் கவனிக்க போய்விட்டோம்.
நான், ஞாயிறு மாலை எனக்குரிய 'சினி மாலை' நிகழ்ச்சியை வெற்றி FM இல் தொகுத்து வழங்கிவிட்டு (இருமி, இருமிதான்) ஹாயாக வீட்டுக்கு வருகிறேன், வாசலிலே அம்மா, மனைவி மற்றும் நம் வாரிசு.
இரண்டு நாட்களாக நாம் மாதத் தூக்கத்தைத் தொலைத்தும் தேடிக்கொண்டிருந்ந அந்த எலி அகப்பட்டுள்ளதாக தகவலைச் சொல்லத்தான் என்னை எதிர்பார்த்து வாசலிலேயே வெயிட்டிங். எங்கேயென்றால் எங்கள் உடைகள் வைக்கப்பட்ட அலுமாரியின் கீழ்த்தட்டில். எந்தவிதத் துவாரமும் இல்லாத அந்த அலுமாரியின் சின்னதொரு கதவு இடைவெளியின் உள்ளே நுழைந்து எக்கச்சக்கமான ஆடைகளுக்குள் சிக்கிக்கிடந்த அவரைத் தப்பவிடாமல் அடைத்து வைத்திருந்தாள் எனது வீரமனைவி.
இப்போது இறுதி எலி வேட்டைக்கு நாம் தயார்.
வியூகம் வகுத்து முன்பு போல் கதவடைத்து, ஜன்னல் திறந்து, முடிந்தால் தப்பவிடுவோம். தொல்லை தந்தால் அடித்துக்கொல்வோம் (எனினும் கொல்ல எங்களுக்கு கொஞ்சமும் விருப்பமில்லை, காரணம் அந்த எலி பாவம் என எண்ணத் தோன்றியது) என்பது தான் எங்கள் திட்டம்.
அலுமாரியிலிருந்து உடைகளைக் கொஞ்சம் கொஞ்சமாக அகற்ற, எலியும் எஸ்கேப்பானது. எங்கேயென்று தேடினால் படங்களில் வருகின்ற பயங்கர, வில்லன்கள் போல மறுபடியும் அதே உடைகளிலிருந்து எழுந்துவந்து கொஞ்சநேரம் அங்கு இங்கென்று எங்களுக்கும் போக்குக்காட்டி எரிச்சலூட்டியது அந்த மாயாவி எலி.
ஓரிரண்டு தடவை தப்பவைக்கப் பார்த்தாலும், எப்பவுமே திருந்தாத வில்லன் போல திமிராக எதிர்த்து நின்ற எலியை இறுதியில் போட்டுத்தள்ள முடிவெடுத்தோம் - என்கவுண்டர்.
என்கவுண்டர் எக்ஸ்பேர்ட் தம்பி மயூரன் எலியைத் தனது தும்புத்தடியால் லாவகமாக அலுமாரியின் பக்கவாட்டில் பிடிக்க – என் மனைவி ஒரே அடி! பின் பல அடிகளால் வதம் செய்து கொன்றுவிட்டாள். பெரிதாகப் போராடாமலேயே உயிரை விட்டது அந்தத் துரதிஷ்டசாலி (எலி)
இதற்கு உதவியதென்னவோ மறைமுகமாக நம்மோட ஐடியா தான். நாமதான் டெக்னிக்கல் ஐடியாக்காரராச்சே !எலி ஓடிய இடமெல்லாம் நான் கடுமையாக ஸ்ப்ரே அடிச்சபடியாத்தான் எலி மயங்கியிருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.
உயிரை விட்ட எலியை பத்திரமாக எடுத்து அப்புறப்படுத்திய பின் - இடமெல்லாம் துப்புரவு செய்த பின் - எல்லோருக்கும் நிம்மதி. இன்றிரவாவது நிம்மதியாகத் தூங்கலாமென்று.
நிசப்தமான அறைக்குள் ஒரு சின்ன விசும்பல் சத்தம். யாரென்று திரும்பினால் வீரமாக எலியை அடித்துக்கொன்ற என் மனைவி கண்களில் கண்ணீருடன்
"பாவமப்பா அந்தக் குட்டி எலி... உயிரை விடேக்கை என்ன நினைச்சுக் கொண்டு செத்துதோ"
நிம்மதியாகத் தூங்கலாம் என்று நினைத்த நிம்மதியெல்லாம் அதோடேயே போச்சு...