ஒபாமா வழி.. லிங்கன் வழி !

ARV Loshan
8

இன்று அமெரிக்காவில் ஒரு புதிய மாற்றத்துக்கான யுகத்தின் ஆரம்பம்! மாற்றங்களை நோக்கி அமெரிக்க மக்களை அழைத்த பராக் ஓபாமா அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்கிறார். அமெரிக்க வரலாற்றின் 44வது ஜனாதிபதி. அவர் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பு வைத்துக் காத்திருக்கிறார்கள் அமெரிக்க மக்கள்!

அமெரிக்காவின் முதலாவது கறுப்பின ஜனாதிபதி என்ற பெருமையோடும் தனித்துவத்தோடும் வெள்ளை மாளிகைக்கு வருகின்ற ஒபாமாவுக்கு முன்னால் குவிந்திருக்கும் சவால்கள் ஏராளம். பொருளாதாரம், ஈராக் போர்,உள்ளுர் வேலைவாய்ப்பின்மை என்று பலப்பல. ஆனால் இவை எல்லாவற்றையும் சமாளித்துவிடக் கூடிய வல்லமை ஓபாமாவிடம் இருப்பதாக சொல்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

கடுமையான பிரசாரப் போட்டிகளில் ஒபாமா வெற்றியீட்டியது போல இவையெல்லாவற்றையும் இலகுவாக முறியடிப்பார் என்கிறார்கள். காரணம் ஒபாமாவழி தனிவழியல்ல. ஏற்கெனவே அமெரிக்க வரலாற்றில் தனியிடம் பதித்த அமெரிக்காவின் 16வது ஜனாதிபதியான ஆப்ரகாம் லிங்கன் வழி!

பராக் ஒபாமா தனது பிரச்சார ஆரம்பம் முதல் இன்று பதியேற்பது வரை அமெரிக்க சரித்திரத்தில் The Great Emancipator (அதாவது விடுதலை அளிக்க அவதரித்தவர்)என்ற பெயரால் பெருமைப்படுத்தப்படுகின்ற ஆப்ரஹாம் லிங்கனையே முன்னிலைப்படுத்தி பின்பற்றி வந்திருக்கிறார்.

கறுப்பின ஒதுக்கலுக்கு எதிராகவும்,கறுப்பின மக்களுக்கு சம உரிமை வழங்கப்படவேண்டும் என்பதற்காகக் குரல் கொடுத்து போராடிய லிங்கனை ஒபாமா தனது முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டது மிகப்பொருத்தமானதே!


  • இருவருமே நெடிதுயர்ந்தவர்கள்; கூரிய நாசி,ஆழமான மோவாய்; நேரிய பார்வை உடையவர்கள்; இருவருக்குமே பலரையும் கவர்ந்திழுக்கும் பேச்சுவன்மையே மிகப் பெரிய பலம்!
  • ஒபாமா தான் ஜனாதிபதித் தேர்தலில் நிற்பதைப் பற்றிய அறிவித்தல் விடுத்ததே, லிங்கன் தனது சிறப்புமிக்க விடுதலை உரை ஆற்றிய ஸ்ப்ரிங் பீல்ட் என்ற இடத்திலே தான்..
  • தனது பிரசாரங்களிலே பல இடங்களிலே லிங்கனின் உணர்ச்சிமிகு சொற்பொழிவுகளை ஞாபகப்படுத்தினார்.தான் கறுப்பினத்தவர் என்பதை அழுத்தி சொல்வதை விட எல்லா இனத்தவரும் ஒன்றுபட்ட ஒரு அமெரிக்காவை உருவாக்கவேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டிருந்த அவர், லிங்கன் சொன்ன கறுப்பின விடுதலைக்கான கருத்துக்களையும் சர்ச்சைகள் இல்லாமல் தனது உரைகளில் தூவியிருந்தார்.
  • அமெரிக்க அதிபராகப் பதவியேற்க இருக்கும் பராக் ஒபாமா தான் வசித்து வந்த ஃபிலடெல்ஃபியா (Philadelphia) மாகாணத்தில் இருந்து வாஷிங்டன் டி.சி. (Washington D.C) மாகாணத்திற்கு தனது குடும்பம், துணை அதிபர் மற்றும் சகாக்களுடன் இரயிலில் வந்து இறங்கினார். 1861-ல் அப்போதைய அமெரிக்க அதிபர் ஆபிரஹாம் லிங்கன் இதேபோல், இதே இரயில் பாதையில் பயணம் செய்து தனது அதிபர் பதவியை ஏற்றுக்கொண்டார்.  
  • இன்று இடம்பெறவுள்ள சரித்திரப் பிரசித்தி பெற்ற பதவியேற்பு நிகழ்வுகளிலும் பல இடங்களில் லிங்கன் நினைவுகூரப்பட இருக்கிறார்.
  • இன்றைய பதவி ஏற்புப் பாடல்கள் பல லிங்கனின் பதவி ஏற்போடு தொடர்புடையவை.
  • இன்று தொலைக்காட்சிகளில் ஒபாமாவின் பதவியேற்பு நிகழ்வுகள் நேரடியாகக் காட்டப்படும் நேரம் அவர் ஆப்ரகாம் லிங்கனின் நினைவுத் தூபியிலிருந்தே வருகை தரவுள்ளார்.
  • ஒபாமா சத்தியப்பிரமாணம் செய்து பதவியேற்கவுள்ள பைபிள் கூட தனது பதவியேற்பின்போது லிங்கன் பயன்படுத்தியது என்பது மேலும் ஒரு சிறப்பம்சம்.
  • இதற்கும் மேலாக இன்று பதவியேற்பின் பின் வழங்கப்படவுள்ள மதியபோசன விருந்தில் பரிமாறப்படவுள்ள பெரும்பாலான உணவுகள் லிங்கனுக்குப் பிடித்தவை என்பது இன்னுமொரு சுவாரஸ்யம்.   

லிங்கனின் சுயசரிதையை எழுதிய டோரிஸ் கேர்ன்ஸ் கூட்வின் (Doris Kearns Goodwin) சொல்கிறார் "ஒபாமாவின் மனதிலும்,சிந்தனையிலும் லிங்கன் நிறைந்திருக்கிறார்.. இது நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லதிற்கே"

முன்னாள் ஜனாதிபதியை புதிய அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் பின்பற்றுவது இது முதல் முறையல்ல.. இதற்கு முதல் பில் கிளிண்டனும் முன்னாள் ஜனாதிபதி தொமஸ் ஜெப்பெர்சனை (Thomas Jefferson)பிரசாரம் முதல் பதவியேற்பு வரை பின்பற்றியிருந்தார்.. ஆனாலும் அவரது ஆட்சி பற்றித் தான் உங்களுக்குத் தெரியுமே.. 

ஆச்சரியம் என்னவென்றால் லிங்கன் கூடத் தன் அநேகமான நடவடிக்கைகளில் ஜெப்பெர்சனைத் தான் என்பது தான்..       

எல்லாம் சரி ஒபாமாவின் ஆட்சியும் லிங்கனது போல சிறப்பாகவும்,சீராகவும் நடக்குமா என்பதே அமெரிக்கரும்,மொத்த உலகத்தவரதும் கேள்வியாகும். 

இன்று அமேரிக்காவில் நிலவும் கடும் குளிரிலும் ஏராளமானோர் தலைநகரில் ஒபாமாவை அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாகப் பார்க்கத் திரளவுள்ளார்கள். காலையில் என்னோடு பேசிய கனேடிய நேயர் ஒருவர் கனடாவில் இருந்து மட்டும் முப்பதாயிரத்துக்கு மேற்பட்டோர் செல்வதாகக் குறிப்பிட்டார்.. இதுவரை அமெரிக்க வரலாற்றில் இடம்பெறாத பிரம்மாண்ட ஜனாதிபதி பதவியேற்பாக இது இருக்கப்போகிறது.. நாம் எல்லாம் இலங்கையிலும்,இந்தியாவிலும் இன்றிரவு எட்டு மணி முதல் நேரடியாகத் தொலைக்காட்சியில் பார்க்கலாம்.  


Post a Comment

8Comments

Please Select Embedded Mode To show the Comment System.*