நாம் இலங்கையில் தான் வசிக்கிறோம் என்பதை உறுதிப்படுத்தும் சில அடிப்படை ஆதாரங்கள்..
ஒவ்வொரு நாளும் பத்திரிகைகளில் உயிர்ப்பலிகளின்எண்ணிக்கை முதல் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம் தவிர ஏனைய எல்லாப் பக்கங்களிலும் இடம்பெறும்.(கடைசிப் பக்கம் பொதுவாக விளையாட்டு செய்திகளுக்கானது)
குண்டு வீச்சு,குண்டு வெடிப்பு போன்றவற்றினால் எங்களை சலனப்படுத்திவிட முடியாது.(எத்தனையப் பார்த்திட்டோம்.. ) இவை எல்லாமே எங்களுக்கு சாதாரணமான,அன்றாட நிகழ்வுகளாகி விட்டன.டக்கென்று சுதாரித்து விடுவோம்.
வன்னிப் பிரதேசத்தின் வரைபடமே இப்போது மனப்பாடம் ஆகியிருக்கும்.(இதை பதிந்து கொண்டே இருக்கும் பொது தான் அரச தொலைக்காட்சியில் கிளிநொச்சியைக் கிட்டத் தட்ட இராணுவம் கைப்பற்றியதாகத் தகவல் சொல்லப்பட்டது)
பொருள் விலைகள் கூடினாலும் நாம் பொருமுவதொடு சரி, பொங்கிஎழ மாட்டோம்;
பெட்ரோல்,எரிவாயு விலை குறைந்தாலும் (அண்மையில் உயர் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் விலைகள் குறைக்கப்பட்டன) பூரித்துப் போக மாட்டோம்.
மறுபடி திடுதிப்பென்று கூடுமென்று தெரியுமே..
பாண் தான் எங்கள் தினசரி காலை உணவாக இருக்கும்.
ஆட்சிக் கவிழ்ப்பு,நம்பிக்கை இல்லாத் தீர்மானம் என்ற எதிர்க்கட்சிகளின் புராணங்கள் கேட்டுக் கேட்டு எம் காதுகள் புளித்திருக்கும்.
(இதோ அரசைக் கவிழ்க்கிறோம் என்று இவர்கள் புறப்படும் நேரம்,இவர்களைக் கவிழ்த்து விட்டு ஆளும் தரப்புக்கு மாறி அவர்கள் அமைச்சர்கள் ஆவது வரலாறு)
கிரிக்கெட் போட்டிகள் நடக்கும் போது குறைந்தது பாண் விலையாவது கூடுமென்று சரியாக ஊகிப்போம்.
தமிழராகப் பிறந்ததனால் ஏமாளிகள்,இளிச்சவாயர்கள் என்று முத்திரை குத்தப்பட்டு எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்பதற்குத் தயாராக இருப்போம்.
எல்லாவற்றிற்குமே தமிழகத்தையும்,இந்தியாவையும், இவற்றிற்கு அடுத்தபடியாக அமெரிக்கா, ஐரோப்பா,ஐக்கிய நாடுகள் சபையை நம்பி இருப்போம்..
(இந்தியாவிலிருந்து உதவிகள்,சினிமா,பாடல்கள்,சஞ்சிகைகள்,சேலைகள்,இன்னும் எல்லாமே.. )
நன்றி : Daily Mirror
எந்த வேளையிலும்,எந்தப் பாதையும்(வீதியும்) தற்காலிகமாகவோ,நிரந்தரமாகவோ மூடப்படும் என்பதனால் தயாராகவே இருப்போம்.
இலங்கையிலே உள்ள தொலைக்காட்சிகளிலும் கூட, இந்தியத் தமிழ்ப் படங்கள்,மெகா சீரியல்கள்,ஏன் நகைச்சுவை காட்சிகள் இன்னும் பலவும் தொடர்ச்சியாகப் பார்ப்பதிலேயே பாதி ஆயுள் கழிப்போம்.(மீதியை அறுவை பேட்டிகளிலும் ,அர்த்தமில்லா புலம்பல்களிலும், சில வேலை எங்கள் வானொலிகலோடும் போய் முடியும்)
எங்கள் குடும்பங்களில் ஒருவராவது வெளிநாடொன்றில் நிச்சயம் இருப்பார்.(குறைந்த பட்சம் இந்தியாவிலாவது)
வாரத்தில் ஒரு நாளாவது கோவில் போகிறோமோ இல்லையோ வங்கிக்கும்,சூப்பர் மார்கெட்டுக்கும்(கவனிக்க மார்க்கெட் அல்ல) போய் வருவோம்.
பொய்கள் கேட்டுப் பழகி இருப்போம்.. எல்லா இடங்கள்,தரப்புக்களிடமும் இருந்து..
நம்பிக்கையே எங்களுக்கு வாழ்க்கையாக இருக்கும்.. அவநம்பிக்கைகள் தான் அதிகமாக கிடைத்திருக்கும்.
பி.கு : இன்றைய என் பதிவை இலங்கையின் மாண்புமிகு ஜனாதிபதியும், நேற்று முதல் எங்கள் ஊடகத் துறையை தன் மேலான பார்வைக்குக் கீழ் கொண்டு வந்து எங்களையெல்லாம் காத்து ரட்சிக்க இருப்பவருமான மகிந்த ராஜபக்ச அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.
நன்றி : Sunday times