ஹெய்டன் விடைபெறுகிறார்..

ARV Loshan
4


எப்போது எப்போது என்று கொஞ்சக் காலமாகவே கேட்கப்பட்டு வந்த கேள்விக்கு இன்று காலையில் விடை கிடைத்துள்ளது. ஆஸ்திரேலிய அணியின் தலைசிறந்த ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக கடந்த ஒரு தசாப்தத்துக்கு மேலாக உலகின் ஏனைய அனைத்து அணிகளின் பந்துவீச்சாளர்களையும் அச்சுறுத்தி வந்த சிங்கம் தனது ஓய்வை அறிவித்துள்ளது.(அந்த சிங்கம் அண்மைக்காலமாகவே தனது கம்பீரமான formஐ இழந்து ஒரு பூனைக்குட்டி போல சுருண்டு குறைந்த ஓட்டங்களுக்கு அடிக்கடி ஆட்டமிழந்து வந்திருந்தார்.)

தனது சொந்த ஊர் பிரிஸ்பேனில் ஏற்கெனவே திட்டமிட்டு வைத்திருந்தது போல ஹெய்டன் தனது மனைவி,பிள்ளைகள் சகிதமாகவும்,தனது நண்பரும் அணித் தலைவருமான பொன்டிங் சகிதமாகவும் இந்த முடிவை அறிவித்தார்..
இந்த முடிவை அறிவிக்கும்போது கிரிக்கெட்டை அதிகமாகவே நேசிக்கும் ஹெய்டன் அழாமல் இருக்க தன்னைக் கட்டுப்படுத்தியபோதும், முடியாமல் பல இடங்களில் தடுமாறி,தழு தழுத்தார்.. அவரை பொன்டிங் ஆசுவாசப் படுத்திக் கொண்டிருந்தார். 

ஹெய்டன் முடிவை அறிவிக்கும் நேரம் பொன்டிங் அருகில்

               ஓய்வை அறிவிக்கும் நேரம் உணர்ச்சிவசப்படும் ஹெய்டன்

இனிமேலும் தனது அதிகமான நேரத்தை மற்றப் பொழுது போக்குகளிலும், குடும்பத்தோடும் செலவழிக்கப் போவதாக ஹெய்டன் தெரிவித்தாலும்,அவர் குரலில் சோகம் இருந்தது.. மனைவி,பிள்ளைகளுக்கு இதில் சந்தோஷமே என்றாலும் ஹெய்டனின் ஆறு வயது மகளுக்கு சின்ன ஏமாற்றமே.. காரணம் அந்த சின்னப் பெண் தனது தந்தை மற்றுமொரு நத்தார் கால டெஸ்ட் போட்டியை மெல்பேன் மைதானத்தில் விளையாட எதிர்பார்த்தாளாம்.. 

             மனைவி,பிள்ளைகளுடன் - ஓய்வை அறிவித்த பிறகு

உலகின் தலை சிறந்த ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக எந்த வித சந்தேகமும் இல்லாமல் சொல்லப்படக் கூடியவர் மட்டுமல்ல;ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் வரலாற்றில் இதுவரை காலமும் அதிக ஓட்டங்களைக் குவித்தவரும் ஹெய்டன் தான்.(8625ஓட்டங்கள் சராசரி-50.73) 
ரிக்கி பொன்டிங், ஸ்டீவ் வோ ஆகியோருக்கு அட கூடுதல் சதங்களை டெஸ்ட் போட்டிகளில் குவித்த ஆஸ்திரேலியரும் இவரே..(30 சதங்கள்) 

இப்படியே பல சாதனைகளை தன் வசம் வைத்துள்ள கிரிக்கெட்டின் - நானே வைத்த செல்லப் பெயர், சுமார் பதினைந்து ஆண்டு காலம் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நின்றுபிடித்து தலைசிறந்த வீரர்களில் ஒருவர் என்ற பெருமையைக் கொண்டிருந்த ஹெய்டன் இந்த வருடம் இடம்பெறும் சரித்திரபூர்வமான ஆஷஸ் தொடருக்குப் பின்னரே தான் ஓய்வு பெறுவதாக அண்மையில் இந்திய கிரிக்கெட் சுற்றுலாவுக்கு முன்னதாக ஊடகங்களில் பேட்டி அளித்திருந்தார். 

ஆனால் விதி வலியது என்பது போல இந்தியாவிலும் சறுக்கிய ஹெய்டன், தொடர்ந்து வந்த நியூ சீலாந்து,தென் ஆபிரிக்கா அணிகளுக்கு எதிராகவும் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் பெற்றது வெறும் 149 ஓட்டங்கள் மாத்திரமே.

ஆஸ்திரேலியா இந்தியா,தென் ஆபிரிக்கா ஆகிய இரு அணிகளையும் வெற்றி கொண்டிருந்தால் ஹெய்டனை ஓய்வு பெறச் சொல்லி யாரும் கேட்டிருக்க மாட்டார்கள்.. ஆனால் உலகின் முதல் தர அணி இன்று தொடர்ந்து தோல்விகளால் துவண்டு கொண்டிருக்கிறது.. புது இரத்தம் பாய்ச்ச வேண்டிய தேவை.. நம்பிக்கை நட்சத்திரமாக,அணியைத் தாங்கி நிறுத்திய ஹெய்டனும் தொடர் இறங்குமுகத்தில் எனும்போது அனைத்து விரல்களும் நீண்டது ஹெய்டனை நோக்கி.. 

ஆஸ்திரேலிய தேர்வாளர்கள் உலகிலேயே மிக இரக்கமற்றவர்கள்.. யாரை வேண்டுமானாலும் பெறுபேறுகள் கொஞ்சம் குறைந்தாலும் போட்டுத் தள்ளி விடுவார்கள்.. வயது ஏறுவதும் இவர்களுக்குக் கண்ணைக் குத்தும் ஒரு விடயம் தான்.. வயது ஏறியவுடனேயே ஒரு சமிக்ஞ்சை தருவார்கள். அது புரிந்து தானாக ஓய்வு பெற்றால் தன்மானம் இருக்கும்.. இல்லையேல் தலைக் குனிவு தான்.. இயன் ஹீலி, மார்க் வோ, ஏன் ஸ்டீவ் வோ கூட இதிலிருந்து தப்பவில்லை.. 

ஹெய்டனுக்கும் இப்போது வயது 37.இனி அவர் formக்குத் திரும்ப முடியும் என்று அவரை மிகவும் ரசிக்கும் எனக்கே தோன்றவில்லை..கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட ஒரு நாள் தொடர், Twenty-20அணிகளிலே ஹெய்டன் அறிவிக்கப்படாமல் விடப்பட்டதும், தலைமைத் தேர்வாளர் நேரடியாகவே அடுத்து வரும் ஒரு நாள் போட்டிகளில் ஹெய்டன் பற்றித் தாங்கள் யோசிக்கவில்லை என்று சொன்னதும் ஹெய்டனுக்கு ஓய்வு பெறுமாறு கொடுக்கப்பட்ட நேரடி சமிக்ஞ்சைகள் என்று எல்லோருக்குமே தெரியும்.


அடுத்த மாதம் இடம்பெறவுள்ள தென் ஆபிரிக்காவுடனான (தென் ஆபிரிக்கவில் இடம் பெறவுள்ளது) டெஸ்ட் தொடருக்கான அணியில் தனக்கு இடம் வழங்கப்படாது என்று தெரிந்தே நீக்கப்படுவதற்கு முன் ஓய்வை மானமுள்ள முறையில் அறிவித்துள்ள ஹெய்டன், தனது முதல் தரப் போட்டிகள் பற்றியோ, இல் சென்னை சூப்பர் கிங்க்சுக்காக விளையாடுவது பற்றியோ எதுவும் தெரிவிக்கவில்லை..

டெஸ்ட் போட்டிகள் போலவே ஒரு நாள் போட்டிகளிலும் ஹெய்டன் பிரகாசித்துள்ளார்..
6133ஓட்டங்கள்,10சதங்கள், மற்றும் இரண்டு தடவை உலகக் கிண்ணம் வென்ற அணியில் இடம் பிடித்தவர்..

ஆஸ்திரேலிய அணிக்கு இவரது இழப்பு இப்போது பெரிதாகத் தோற்றாவிட்டாலும் ஹெய்டன் போல எதிரணியின் பந்து வீச்சாளர்களை அச்சுறுத்தக் கூடிய ஒருவரை தேடுவதென்பது கஷ்டமானதே.. 

எந்த ஒரு பந்து வீச்சாளரையும் துவம்சம் செய்யும் துணிச்சலும், வேகப்பந்தோ,சுழல் பந்தோ அதிரடியாக அடித்து அசத்தக்கூடிய இந்த அசகாய சூரரை இனி ஆடுகளங்களில் பார்க்க முடியாமல் இருக்கும் என்பதே எனக்கு மனதில் எதோ செய்வது போல இருக்கிறது.. டேர்மினடர் போல கம்பீரமாக நடந்து வந்து அவர் அடித்து ஆடும் அழகே அழகு தான்.. ஹெய்டனை வ்வளவு தூரம் ரசித்திருக்கிறேன்.. அவர் போராடி அணிக்குள் வந்தது.. தன்னம்பிக்கை, போராடும் குணம் இவை அனைத்துமே பிடித்திருக்கிறது..

ஹெய்டனின் சொந்த ஊரான பிரிஸ்பேனில் இன்று இடம்பெறும் Twenty - 20 போட்டியின் இடைவேளையில் மைதானத்தின் மத்தியில் அவர் ரசிகர்களிடம் பிரியாவிடை பெறப் போகிறார்..

இறுதியாக அவர் விடைபெறும் பொது சொன்ன வரிகள் "நான் விடைபெறுவது கிரிக்கெட்டில் இருந்து மட்டுமே.. வாழ்க்கையில் இருந்து அல்ல..சாதிக்க இன்னும் பல விடயங்கள் உண்டு"  

தகவல்கள் & படங்கள் நன்றி cricinfo & foxsports

Post a Comment

4Comments

Please Select Embedded Mode To show the Comment System.*