புதிய வருடத்தின் முதல் நாளாவது கொஞ்சம் நல்ல,சிந்திக்கக் கூடிய விஷயத்தை சொல்லக் கூடிய பதிவொன்றைப் போட வேண்டும் என்று சிந்தித்துத் தான் இந்த பதிவு.. ஆங்கிலத்தில் என் வெளிநாட்டு நண்பர் அனுப்பிய smsஇன் எனது தமிழ் மொழி மாற்றம் இது.. (நம்ம டச் தெரியுதா?)
மென்மையாகப் பேசுங்கள்
உறுதியாக செயற்படுங்கள்
அன்பாகப் பழகுங்கள்
ஆழமாக யோசியுங்கள்
அனுபவங்களை மதியுங்கள்
அனுபவித்து உண்ணுங்கள்
நேர்மையாக உழையுங்கள்
நேரத்தைப் பேணுங்கள்
நியாயத்தின் பக்கம் நில்லுங்கள்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
இந்த சிந்தனைகளோடு புது வருடம் என்றவுடன் மனதில் ஞாபகம் வரும் இன்னும் ஒரு சில விடயங்களையும் உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்..
புது வருடம் பிறக்க முதலே நம்ம பங்காளிங்க,பாசக்காரப் பயலுகளுக்கு 31st Night (31ஆம் திகதி இரவு) குடித்துக் கும்மாளம் போடும் பார்ட்டி தான் ஞாபகம் வந்து சேரும்..
கூடி,கும்மாளம் இட்டு புதிய வருடம் பிறக்குது;அந்த சந்தோஷத்தைக் கொண்டாடுகிறோம் என்ற போர்வையில் மட்டை ஆகிற வரை குடித்து,பின் வாந்தி எடுத்துக் குடல் வெளியேறும் அளவுக்குக் கொப்பளிக்கிரார்களே.. அந்தக் கொடுமையை எங்கே பொய் சொல்லி அழ?
ஆங்கிலேயர்களும் அனுபவிக்கிறார்கள்.. ஆனால் என்ன நாகரிகத்தோடு,அளவாக, அழகாக.. நம்மவர்கள் இருக்கிறார்களே.. எந்த அளவும் கிடையாது.. குடித்தால் கடல் அளவு.. கண்மண் தெரியாமல் எந்த சரக்கு கிடைத்தாலும்(அது ஒ.சியாக இருந்தால் இன்னும் விசேஷம்) உள்ளே தள்ளுவது.. பின் ஓயாமல் புலம்புவது.. தேவையற்ற சண்டைகள்.. சில வேளை அது வெட்டு,குத்து,கொலை வரை போய் முடிவதும் உண்டு..
புது வருடம் பிறப்பதைக் கொண்டாடக் குடிக்கிறோம் என்று ஆரம்பிப்பவர்களில் பலர் மணி நள்ளிரவு பன்னிரண்டு ஆக முன்னமே நிறை வெறியாகி,மட்டையாகிக் கட்டையாவது கண்டிருக்கிறேன்.. இது தேவையா?
போதை இல்லாவிட்டால் புதியதாய் வருடம் பிறக்காதா?
இன்னும் சில எரிச்சல் தருகிற புது வருடக் கொண்டாட்ட விஷயங்கள் இந்தப் பட்டாசு கொடுமை.. அவசரமாக வீதிகளில் பயணிக்கும் போதும் குறுக்கே வந்து விழுகிற மாதிரி பட்டாசு கொளுத்திக் கொடுமை பண்ணுவார்கள்.. நடந்து போகிறவர்கள் ரொம்பவே பாவம்.. வாகனத்தில் போகும் போதும் எங்கிருந்து சீறிக் கொண்டு வந்து ஈர்க்கு வாணமோ, சீன வெடியோ வந்து விழுந்து வெடிக்குமே என்று பதற்றத்தோடே வண்டி ஓட்ட வேண்டும்..(நேற்று இரவு பதினோரு மணி போல வாகனத்தில் வீடு நோக்கிப் போய் கொண்டிருக்கும்போது எந்தப் படு பாவியோ விட்ட ஈர்க்கு வாணம் என் விண்ட் ஸ்கிரீனில் பட்டும் படாமலும் வெடித்த டென்ஷன் இருக்கே.. எவனாவது வேண்டும் என்றே செஞ்சிருப்பானோ?)
சதா யுத்த சூழ்நிலையிலும் குண்டு வீச்சு,குண்டு வெடிப்பு அவலத்திலும்,பதற்றத்திலும் வாழும் எங்கள் நாட்டில்(இலங்கையில்) இந்த பட்டாசுக் கேளிக்கை எல்லாம் தேவை தானா?(அடிக்கடி பட்டாசுக்கு எதிராக நான் பதிவு இடுவதால் எனக்குப் பட்டாசு வெடிக்கப் பயம் என்று யாரும் கதை பரப்பக் கூடாது.. அத்துடன் யாராவது நாசகாரிகள் பட்டாசு வியாபாரிகள் சங்கத்துடன் சேர்ந்து எனக்கெதிராக ஆர்ப்பாட்டம் ஏதாவது என்று இறங்கினால்.. தெரியும் கதை..)
அதிலும் பன்னிரண்டு மணிக்கு புது வருடம் பிறக்கும் போது போட்டுத் தள்ளுவார்களே ஒட்டுமொத்த ஊரும் சேர்ந்து.. போர்க்களத்தில் கூட அவ்வாறு கேட்டிருப்போமா தெரியாது.. கொஞ்சம் இதயம் பலவீனமானவர்களாக இருந்தால் (நம்ம பதிவுலக ராமசாமி போல) அந்த இடத்திலே பொட்டென்று போய் விடுவார்கள்..
அடுத்த நாள் காலை வீதியே பனி படர்ந்தது போல,பட்டாசு வெடித்து எஞ்சிய கடதாசிக் கழிவுகளால் மூடப்பட்டு இருக்கும்.. கண்றாவி.. உங்க தாத்தாவா வந்து சுத்தம் செய்வாங்க?
உண்மையில் 'புதிய' என்ற சொல்லை அடிக்கடி சொல்லி,சொல்லியே அதனைப் பழசாக்கி விட்டோம்.. இந்த வருடமாவது அந்தப் 'புதிய' என்ற தாற்பரியத்தை உணர்ந்து,உண்மையான புதிய,நல்ல எண்ணங்களை மனதில் வளர்த்து உண்மையான 'புதிய' வருடமாக இந்த 2009ஐ வரவேற்போம்..
இந்த 2009இலாவது எங்களை சூழ்ந்துள்ள அடக்குமுறை,அட்டூழியங்கள்,அநியாயங்கள்,கவலை,பசி,பிணி,பட்டினி,அச்சுறுத்தல் எல்லாம் நீங்கி உண்மையான நிம்மதியும்,அமைதியும்,மகிழ்ச்சியும் நிலை பெறட்டும் என்று நம்புவோமாக.. (நம்பிட்டே இருப்போம்.. நம்ப மட்டும் தானே முடியுது நம்பளாலே)