நான் முன்பு தந்த வானொலி வறுவல்கள் மூன்றினையும் நிறையப் பேர் ரசித்திருக்கிறீர்கள் என்பது தெரிகிறது. தமிழ் மண நட்சத்திரவாரத்தில் மட்டும் தான் வறுப்பீர்களா என்று நியைப் பேர் கேட்டிருந்தீர்கள். அதுபோல் நண்பர் மதனும்(இவர் தான் இசையுலகம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியர்) இசையுலகம் சஞ்சிகையில் பதிப்பிக்க அனுமதியும் கோரியிருந்தார். ஒ கே சொல்லிவிட்டேன்.
இந்த வார இசையுலகத்தில் (jan 16-31) 'நடக்காத போட்டியின் ஸ்கோர்' வந்துள்ளது. மதனும் தனது வலைத்தளத்தில் தன் கவிப்புலமையையும் திறமையையும் காட்டி வருகிறார்.
இதோ இன்றும் ஒரு வறுவல் அல்லது ஒன்றுக்குள்ளேயே பலது!
சூரியன் எப் எம்இல் நான் பணிபுரிந்தபோது நடைபெற்ற மற்றுமொரு சுவையான சம்பவம். அப்போதும் நான் முகாமையாளர். (ஒன்றா இரண்டா நான்கு வருடங்களாச்சே) குறிப்பிட்ட நம்ம அறிவிப்பாளர் பயிற்சிக்காலம் முடிந்து தனியாக இரவுநேரம் பணி ஆரம்பித்த நேரம். நள்ளிரவு பன்னிரண்டு மணியிலிருந்து காலை 6மணிவரை அவரது கட்டுப்பாட்டில்தான்!
இவரது குரல்வளம் அருமை! அதுதான் அவரிடமிருந்து மிகப் பெரிய பிளஸ் பொயின்ட்! ஆனால் இவருக்கு இருந்த மிகப் பெரிய குறையே தனது குரல் மீது அவருக்கிருந்த அளவு கடற்த காதல்தான்! இதனால் இவருக்கு நான் இட்டிருந்த கட்டாய உத்தரவு அதிகமாக பேசக்கூடாது என்பதே!
அப்படியிருந்தும் எப்பிடியாவது கஷ்டப்பட்டு கிடைக்கும் நேரத்தில் எல்லாம் புகுந்து விளையாடுவார்;. அதிலும் ஆங்கிலத்தில் ஏதாவது வார்த்தைகள் வந்தால் அண்ணாருக்கு அல்வா சாப்பிடுவது போல!
வண்ணத்துப் பூச்சியைக் கூட butterfly என்றும் பாடலினை song என்றும் இந்திய டிவி தொகுப்பாளிகள் பாணியில் break ம் சொல்வதில் அலாதிப்பிரியம். ஆனால் முழுமையாக ஆங்கிலத்தில் ஒரு வசனம் பேசச் சொன்னால் அண்ணன் எஸ்கேப்!
எங்கள் கலையகங்களில் போட்டி வானொலி நிகழ்ச்சி என்ன போகிறது என்பதைக் கேட்க ஒரு பொத்தான் உள்ளது - prefade- pfl.அந்தப் பொத்தானை அழுத்தி அடிக்கடி மாற்ற வானொலியில் என்ன நிகழ்ச்சி, என்ன பாடல் என்று அடிக்கடி கேட்டுப் பார்த்துக் கொள்வோம்.. நம்ம ஹீரோவும் அடிக்கடி மாற்ற வானொலியில் என்ன நடக்குது என்று கேட்டுப்பார்த்துக் கொண்டே நிகழ்ச்சி செய்து கொண்டு இருந்திருக்கிறார்..
திடீரென அந்தப் பக்கம் இருந்த ஒலிபரப்பாளர் விடைபெற, நம்மவரும் ஒலிவாங்கியை இயக்கி, "நன்றி ரௌப், நேயர்களுக்கு இனிய வணக்கம் " என்று தொடங்கி விட்டார்..
கேட்டுக் கொண்டிருந்த நேயர்களுக்கு ஒன்றுமே புரிந்திராது.. இன்றுவரை..
எனக்கு விஷயம் விளங்கி விட்டது.. நம்ம ஏனைய அறிவிப்பாளர்களுக்கும் தான்.. பல பேர் கேட்ட ஒரு சம்பவம் இது.. காரணம் நம்ம ஹீரோ நன்றி சொன்ன நேரம் அப்படி.. அதிகாலை ஐந்து மணி..
இப்போது சிரித்தாலும் அப்போது நான் அடிக்காத குறையாக கண்மன் தெரியாமல் திட்டித் தீர்த்தேன்.. இப்போது இவரும் சூரியனில் இல்லாவிட்டாலும் நல்லதொரு செய்தி வாசிப்பாளர். இன்னொரு நல்ல விஷயம் நன்றி மறக்காத நல்ல தம்பி.