500 பதிவுகளும் சில பகிர்வுகளும்

ARV Loshan
57
இந்தப் பதிவு எண்ணிக்கையின் படி எனது ஐந்நூறாவது பதிவு (இந்தத் தளத்தில்).

சில மீள் பதிவுகள், சில அறிவிப்புகள் (இங்கே அறிவிப்பது நிறையப் பேரை சென்றடைவதால்) என்று மொத்தமாக ஐந்நூறு.
2 ஆண்டுகள் இரண்டு மாதங்களில் இந்த ஐந்நூறு மைல்கல்.
நானூறு பதிவுகள் எழுதி கடைசி நூறு பதிவுகள் எழுத எட்டு மாதங்களாகியுள்ளது.



ஒவ்வொரு காலகட்டத்திலும் நிச்சயம் எமது பதிவுகளில் நாம் மாற்றத்தை உணர்கிறோம்.முன்பு எழுதியவற்றை நாமே மீள் வாசிப்புக்கு உட்படுத்துகையில் நிறைய மாறி இருப்பதை உணர்கிறோம்.கொள்கைகள் சில மாறுபட்டுள்ளன.அல்லது சரியானவிதமாக சொல்லப் போனால் கொள்கைகளில் நாம் கூர்ப்படைந்திருக்கிறோம் எனலாம்.

நீண்ட காலம் மனதில் எழுத வேண்டும் என்று நினைத்த சில விஷயங்கள்..இதெல்லாம் அறிவுரை என்று யாரும் நினைக்கவேண்டாம்.
சில அனுபவப் பகிர்வுகள்.. உங்கள் நண்பர்களில் ஒருவனாக..

பதிவுலகம் என்பது ஒரு மாயை.ஈர்த்து இழுத்துக் கொள்ளும்.மீள முடியாது.
வெட்டி வேலை.பயனற்ற ஒன்று.
குறுகிய கால சுகம் என்ற விமர்சனங்களைப் பார்த்திருக்கிறோம்;கேட்டுக் கொண்டே இருக்கிறோம்.
புகழ் தரும் போதையில் சில காலம் ஊறி நிற்பதும் அதைத் தக்க வைக்கத் தொடர்ச்சியாகப் பதிவு போடுவதும் சில காலம் கிளர்வைத் தரும் இந்த உணர்வு பதிவுலகத்தில் எல்லோருக்குமே ஆரம்பகாலத்தில் நிச்சயம் இருந்திருக்கும்.
இதைக் கடந்து மனதின் ஆசைகளைக் கடந்து லட்சியம்+வாழ்க்கை என்பதை முன்னணியில் இருத்தியும் செல்வோரே நின்று பிடிக்கின்றார்கள் இங்கே.

பதிவுகள் இடுவதை கொஞ்ச நாள் பொழுதுபோக்காக மாற்றிக் கொண்டவர்கள் அதில் தெளிவாக இருக்கவேண்டும்.அதிலேயே ஊறி உங்கள் கல்வி,வேலை,காதல்,வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு பதிவுலகம் பாழாக்கிவிட்டது என்று சொல்வதில் பயனில்லை நண்பர்களே.
முமுரமாக மூச்சுமுட்டப் பதிவுகளை ஒவ்வொரு நாளுமே எழுதிக்கொண்டிருந்த பலர் கொஞ்ச நாளிலேயே காணாமல் போன கதையும் கண்டிருக்கிறோம்.
முழுநேரத் தொழிலாக எழுத்துலகில்/பதிவுலகில் பயணிக்கும் பலர் இருக்கலாம். அவர்கள் முழுநேரம் இதில் மூழ்கி இருப்பதில் தவறில்லை. அவர்கள் உழைக்கும் இடம் இது.
மாணவர்கள்,வேறு தொழில் செய்வோருக்கான பொழுதுபோக்கு இதுவாக இருக்கலாம். அல்லது கருத்துவெளிப்பாட்டுக்கான இடமாக இது இருந்தால் அந்தந்த நேரங்களை மட்டுமே இங்கே செலவளியுங்கள்.
என் தொழில் இதுவல்ல என்பதை நான் நன்கு உணர்ந்துள்ளேன்.
நான் ஒரு முழு நேர ஒலிபரப்பாளன்.என் தொழில் தான் எனக்கு சோறுபோடுவது.
அதில் நான் மிகத் தெளிவாக உள்ளேன்.

ஆனால் என் வலைப்பதிவும் வலையுலகமும் எனக்கு என் தொழிலுக்கு முக்கியமான பங்களிப்பைத் தருகிறது.
தேடல்,நட்பு+ரசிகர் வட்டம், புதிய தகவல்கள்,விளையாட்டு,சினிமா,செய்திகள் என்ற சகல விஷயங்களையும் நான் இணையத்தில் தேடும்போது வலைப்பதிவு உலகம் அதை மேலும் விரித்துத் தருகிறது.


கூடவே ஒரு எழுத்தாளனாக(முக்கியமாக விளையாட்டு எழுத்தாளனாக) இன்னொரு பரிமாணத்தையும் தந்தது இந்தப் பதிவுகளே.



ஆனால் வேறு வேறு தொழில் துறையில் உள்ளோர், வலைப்பதிவு உலகில் வரும் மகிழ்ச்சியும் கிளர்ச்சியும் பற்றிக் கவனமாக இருத்தல் நல்லதே.

நான் இன்னும் பதிவுக்கான வாக்குகள், Alexa RATINGS, பின்னூட்டங்களை கவனித்துக் கொண்டிருந்தாலும் கூட, அதில் எனக்கு முன்பிருந்தே இருக்கும் புள்ளிவிபர ஆர்வம் இருந்தாலும் இது அல்ல என் வாழ்க்கை,இதுவல்ல எனக்கான இலட்சியத்தின் அடைவு எனத் தெரியும்.
ஆனால் பலரை நான் எழுதுவது சென்றடைய இவையும் கொஞ்சம் வேண்டும் என்பதால் அவற்றில் அக்கறையாகவே இருக்கிறேன்.

பல மாணவர்களுக்கு,வாழ்க்கையில் முன்னேற இன்னும் முயற்சி செய்யவேண்டிய சிலருக்கு,பதிவு எழுதுவதை விட இந்தத் திறமைகளை வாழ்க்கையின் இன்னும் சில விடயங்களுக்குப் பயன்படுத்தினால் முன்னேறக் கூடியவர்களுக்கு தனிப்பட அறிவுரை கூறி மயக்கம் போக்கி இருக்கிறேன்.

எதற்கும் வாழ்க்கையில் அளவும்,எல்லையும் இருக்கிறது. அது எது என்பதை ஒவ்வொருவரும் அறிவதே தலையாயது.

எனக்கு தமிழ்ப் பதிவுகளில் இருக்கும் ஈடுபாடு என் தொழிலிலும் உதவுவதைப் பற்றி அடிக்கடி சொல்லி இருக்கிறேன்.
எங்கேயாவது படித்து/பார்த்து சுவைத்த விஷயங்களைப் பகிரும் என் ஆங்கில தளமூடாகக் கொஞ்சம் உழைத்துக் கொண்டும் இருக்கிறேன் என்பது எனக்கான பகுதி நேர சிறு வருமானமாகவாவது ஆகிறது.(கட்டணம் கட்டவாவது)

எனவே புதிய நண்பர்கள் உங்கள் நோக்கத்தைத் திட்டமிடுவது மிகச் சிறந்தது.


வலைப்பதிவுகளுடன் கழிக்கும் பொழுதுகள் பற்றி என்னிடம் கேட்கப்பட்ட சில பொதுவான கேள்விகளுக்கு எனது அலைக் கலைஞனாக இருந்து வலைஞனாக வந்த கதை.. பதிவில் விளக்கங்களைக் கொடுத்திருந்தேன்.

கொஞ்சம் வாசித்துப் பார்த்தால் புதிதாகப் பதிவுலகில் கால் வைத்திருக்கும் (தட்டச்சுவது என்பதால் கை வைத்து என்பது பொருத்தமாக இருக்குமோ?) பலருக்குப் பயன் தரும் என நம்புகிறேன்.

அலைக் கலைஞனாக இருந்து வலைஞனாக வந்த கதை.. 


இன்னுமொன்று இந்த பதிவுலகம் தந்த பல வகை அனுபவங்கள்.
இது எனக்கு மட்டுமல்ல எல்லாருக்கும் அநேகமாகக் கிடைக்கக் கூடியது.
பல்வேறு உணர்வுகளும் பலரால் கொட்டப்படும் இடம் என்பதால் உணர்ச்சிகள் கிளறப்படுவதும் காயப்படுவதும் சகஜமானதே.
எங்கள் உணர்வுகளை நாம் வைத்துக் கொள்வது எவ்வளவு முக்கியமானதோ அதே போல மற்றவர் உணர்வுகளையும் நாம் கொச்சைப்படுத்தாமல்,கேவலப்படுத்தாமல் இருப்பதை முறையாக கற்றோம் என்றால் எந்த சிக்கலுமில்லை. நீங்களும் எல்லோருடைய நண்பரே.

அதேபோல் ஒருவருடைய கருத்துப் பிடிக்கவில்லை என்றால் கருத்தைக் கருத்தால் எதிர்கொள்வது சிறந்ததே. அதையும் அவர் புண்படா வண்ணம் தெரிவிப்பது சிறந்தது.நான் முடியுமானவரை அவ்வாறு முயல்கிறேன்.
ஆனாலும் எனது பட்டதைப் பட்டபடி சொல்லிவிடும் இயல்பும்,ஆறப்போடாமல் ஆற அமர யோசிக்காமல் உடனே சில சமயம் கருத்தை சொல்லிவிடுவிடும் குணத்தாலும் பல இடங்களில் விரோதியாகப் பார்க்கப்படுகிறேன்/பட்டிருக்கிறேன்.

ஆனால் இதில் நான் என்னை மாற்றிக் கொள்ளப் போவதில்லை. எல்லோருக்கும் எல்லா நேரங்களிலும் நான் நல்லவனாக இருக்க முடியாதல்லவா?
அநியாயங்களுக்கேதிராக குரல் கொடுக்க எல்லா இடங்களிலும் முடியவில்லை. வலையுலகம் மூலமாகவாவது கொஞ்சம் இருந்துவிட்டுப் போகிறேனே.


இதில் பல இடங்களில் நான் வலையுலகுக்கு வந்து கவலைப்பட்டது வலையுலக அரசியல்களாலும் போலித் தனமான மோசடிகளாலும் நல்லவர்கள்,அப்பாவிகள் சிலர் மனம் நொந்துபோனதும், மிக மனம் மெல்லியவர்கள் வலையுலகை விட்டு நீங்கியதும்.

அது போலவே பொது வாழ்க்கையில் மிக சகஜமாகிப் போன குழுமனப்பாங்கு,குழிபறிப்பு,துவேஷம்,வெட்டுக் குத்து,எரிச்சல்,ஏளனம் என்று சகலமும் இங்கே உள்ளன.
மனதை நல்லதாக நேர்மையானதாக வைத்துக் கொண்டால் இவற்றையும் கடக்கலாம்.
தெளிவான பாதையை இங்கே நாம் எடுத்துக் கொள்வதும் கிடைக்கும் நல்லவற்றை மட்டும் மனதில் மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டு சலனங்கள் கடந்து சதிகளைக் கண்டு பயப்படாமல் பயணிப்பவராக நீங்கள் இருக்கும் வரை உங்கள் வலைப்பதிவுப் பயணம் வருடக் கணக்கில் தொடர்வதில் தடையேதும் இருக்காது.

 போலியாக உங்களை நீங்களே உயர்த்தி/சில விடயங்களை மறைத்துக் காட்டிக் கொண்டால் அது என்றோ உங்கள் முகத்திரையைக் கிழித்துவிடும் என்பதை நானும் வலையுலகில் பலர் மூலம் கண்டுகொண்டேன்.

வலையுலகம் தந்த பெரிய நல்ல விஷயங்களை இந்தக் காலத்துக்குள் பெற்றிருப்பது மிகுந்த மன நிறைவு..
இடையிடையே சில கசப்பான உணர்வுகள் வந்திருந்தாலும் நிறைவே அதிகமாக இருப்பதால் இன்னும் தொடர்வேன்.

இலங்கையில் மூன்றாவது பதிவர் சந்திப்புக்கு இன்னும் சரியாக எட்டு நாட்களே இருக்கும் நிலையில் ஒரு வருடத்தில் மேலும் விரிந்துள்ள இலங்கைப் பதிவர் சமூகம் மேலும் புதிதான சிந்தனை ஆற்றல் கொண்ட பதிவர்களை இம்முறை சந்திப்பின் மூலம் அறிமுகம் காட்டும் என நம்பிக்கை கொள்கிறேன்.

பதிவுலகத்தில் கூடவே பயணிக்கும் நண்பர்கள்,ரசிகர்கள்,சக பதிவர்கள் அனைவருக்கும் நன்றிகள்.. இனிமையான பொழுதுகளைப் பகிர்ந்துகொள்வதற்கு :)

அடிக்கடி தனித்தனியாக நன்றிகளை சொல்வது உங்களையும் சலிப்புக்குள்ளாக்குமே..
இதனால் என்னுடைய 300௦௦ வது பதிவில் சொல்லப்பட்ட நன்றிகளை மீண்டும் அதே அன்புடனும் நன்றியுணர்வுடனும் இங்கே சமர்ப்பிக்கிறேன்,







பதிவரான பின் நண்பர்களின் சந்திப்பின் சில மகிழ்வான தருணங்களுக்கு..


மேலும் சில பதிவர் சந்திப்புப் படங்கள்.. (இரண்டாவது பதிவர் சந்திப்பில் எடுத்தவை)

தம்பி கங்கோனின் கமெரா சுட்டவை
http://picasaweb.google.com/kanagagopi/BloggersMeeting#


நிமலின் கமெராக் கலை
http://www.flickr.com/photos/nimal/sets/72157623023971738/


உங்கள் அன்பை மேலும் சொரிய ஆசைப்படும் என் மில்லியன் கணக்கான வாசகர்களே/ரசிகர்களே/நேயர்களே ,ஆயிரக்கணக்கான நண்பர்களே, ஐநூற்றுக்கணக்கான Blog Followersஏ தமிழ்மண சிறந்த பதிவுப் போட்டியில் நம் இடுகைகளைக் கவனித்து வாக்களித்து உங்கள் மேலான அன்பைக் காட்டுங்கள்.
(எப்பூடி?) 

முக்கியமான குறிப்பு -

இன்று இரவு வெற்றி FMஇல் இடம்பெறும் 'வெற்றி பெற்றவர்கள்' நிகழ்ச்சியில் இலங்கையின் சிரேஷ்ட அறிவிப்பாளர்,பல விருதுகள்,சாதனைகளைத் தன்னகத்தே கொண்ட,மூத்த ஒலிபரப்பாளர் 'வானொலிக் குயில்' ராஜேஸ்வரி சண்முகம் அவர்களை நான் செவ்வி காண்கிறேன்.

இரவு 9.25க்கு

www.vettri.lk



Post a Comment

57Comments

Please Select Embedded Mode To show the Comment System.*