வேலை வெட்டியற்ற அமெரிக்கரும்,வேலை தொடங்கிய ஜனாதிபதியும்

ARV Loshan
22
நேற்று இரவு அநேகமாக எந்தத் தொலைக்காட்சியைத் திருப்பினாலும் ஒரே ஒபாமா மயம் தான்! நம்ம தமிழ்மொழியின் சன்,விஜய்,கலைஞர் போன்ற ஒரிரண்டு நல்ல சனல் தவிர ஏனைய அநேக அலைவரிசைகளில் அமெரிக்காவில் 44வது ஜனாதிபதியாக பராக் ஒபாமா பதவியேற்கும் சரித்திரபூர்வ நிகழ்வு நேரடியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.

இன்றும் ஒபாமாவா என்று சலிக்காதீர்கள்.. நிறைய விஷயங்கள் எங்களுக்குப் பாடங்கள்.. படங்களையும் பாருங்கள் புரியும்

அதிகம் நீண்டதாக இல்லாமல் தேவையற்ற ஆளுங்கட்சி வெற்றி பெற்றவரின் புகழ்பாடாமல் முன்னைய ஜனாதிபதிகளையும் மறக்காமல் (அவர்கள் எந்தக் கட்சியாக இருந்தாலும்) சம்பிரதாயபூர்வமாக மிக நேர்த்தியாக நேரந் தவறாமல் சுருக்கமாக பதிவியேற்பு நிகழ்வுகள் இடம்பெற்றன.

அமெரிக்காவின் 1937இல் திருத்தியமைக்கப்பட்ட புதிய அரசியல் யாப்பின்படி ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கும் ஒரு தடவை ஜனவரி 20ஆம் திகதி நண்பகல் 12மணிக்குப் புதிய ஜனாதிபதியும் உப ஜனாதிபதியும் தங்கள் கடமைகளைப் பொறுப்பேற்று சட்டரீதியாகப் பணிகளை ஆரம்பிக்க வேண்டும். நம்நாட்டு அரசியல்வாதிகள் மாதிரி விரும்பிய நேரம் விரும்பிய இடத்தில் ஆடம்பரமாக எல்லாம் பதவியேற்பு விழா நடாத்த முடியாதுங்கண்ணா!

அமெரிக்கர்கள் தங்களைப் பற்றிப் பெருமையுடன் புகழ்ந்து கொள்வதைப் போல அமைதியாக பதவி மாற்றம் புஷ்ஷிடமிருந்து ஒபாமாவுக்கு மாறியது. 

ஒபாமா தேர்தலில் எப்போதோ வெற்றி பெற்றும் நேற்றுப் பதவியை அவர் பைபிள் மீது சத்தியப்பிரமாணம் செய்து பொறுபேற்கும் வரை ஜோர்ஜ் புஷ் மிக மரியாதையுடன் 'ஜனாதிபதி' என்றே அழைக்கப்பட்டார் என்பது நாங்கள் எல்லோரும் கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு அரசியல் நாகரிகப் பாடம்! 

இப்போதே நாற்காலியின் நுனியிலா? சிரிக்கும் ஒபாவும்,சீரியசான ஒபாமாவும்


நான் இதிலெல்லாம் மிக உன்னிப்பாக ரசித்தது நேற்றைய நாளின் நாயகன் பராக் ஒபாமாவை! தனது வழமையான trademark உடை, சிந்தனை வயப்பட்ட முகத்தில் ஒரு கீற்றான புன்னகை!  வெற்றி பெற்ற பெருமிதமோ கர்வமோ பதவியின் கனத்தையோ காட்டாத முகம்! எப்போதையும் விட சற்று பதட்டமாக நெற்றிக் கோடுகள் (இருக்காதா எத்தனை பேரை எத்தனை சவால்கள் எத்தனை விமர்சனங்களை எத்தனை நாடுகளை சமாளிக்க வேண்டும்) இவற்றின் மத்தியிலும் சற்றும் தடுமாறாமல் ஒரு தடவை கூட நின்று யோசிக்காமல் சிறு துண்டு பேப்பர் கூட பார்க்காமல் உரையாற்றிய  விதம் இருக்கே!

என்ன சொல்லலாம்! அற்புதம்! class! marvellous!
கென்னடிக்குப் பிறகு தலை சிறந்த அமெரிக்க பேச்சாளார் இவர் என்கிறார்கள்.. 

ஒரு சீரான நதி நடப்பது போல தெள்ளிய ஆங்கிலத்தில் அழகாக இருந்தது அவர் உரை.. இடையிடையே அமெரிக்கரை உணர்சிப்படுத்த வழக்கமான அமெரிக்க ஜனாதிபதிகளின் பாணியில் வீர வசனங்கள் சொன்னாலும் கூட, அனைவருக்கும் சம உரிமை, அனைவருக்கும் சம பொறுப்பு, புதிய மாற்றத்துக்கான தேவை,பொருளாதார வீழ்ச்சி கண்ட அமெரிக்காவை மீண்டும் கட்டியெழுப்ப அனைவரும் இணையவேண்டும் போன்றவற்றை வலியுறுத்தியபோது, வழக்கமான ஒரு அமெரிக்க ஜனாதிபதியாக இல்லாமல் ஒரு உத்வேகமான புதிய தலைமுறைத் தலைவரை நான் கண்டேன்.


      முன்னைய முதல் தம்பதியும், புதிய முதல் தம்பதியும்

எல்லா நிகழ்வுகளும் முடிந்து ஒவ்வொருவராகக் கிளம்பிய பின் இறுதியாக ஒபாமா தம்பதியரும், உப ஜனாதிபதி ஜோ பிடென் தம்பதியரும் காங்கிரஸ் கட்டட படிக்கட்டுக்களில் நின்று கொண்டு, பதவியில் இருந்து விடைபெற்றுச் செல்லும் புஷ் தம்பதியரை ஹெலிகோப்டேரில் ஏற்றி விடை கொடுத்த காட்சி ஒரு கவிதை..  

 தம்பி, நாடு உன் கையில்;நடத்து நீயாவது நல்லபடியாக .. புஷ் சொல்கிறாரோ ஒபாமாவுக்கு

இனி வெள்ளை மாளிகை எங்கள் வீடு , நன்றி நீங்கள் செல்லலாம் என்று அமைதியாக சொன்னது அந்தக் காட்சி..

எல்லாம் சரி, நேற்று அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்க்டனில் திரண்டவர்கள் மொத்தம் இரண்டு மில்லியன் பேர்.. தொலைக்காட்சிகள் காட்டிய காட்சிகளின் படி அந்த நாட்டின் எல்லா மூலைகளிலுமே ஒபாமா பதவியேற்பை நேரடியாகவே மக்கள் பல்வேறு இடங்களில் திரண்டிருந்து இந்த ஒரு மணி நேர உற்சவத்தைப் பார்த்த வண்ணம் இருந்தனர்..

                  அலைகடலெனத் திரண்டுவந்த அமெரிக்கா   

தேர்தல்,அரசியல்,விழாக்கள் என்றால் பொதுவாக நம் ஆசிய நாடுகளில் தான் மக்கள் நேர,காலமின்றித் திரண்டு வேலைகளையும் விட்டுவிட்டு வெட்டியாவதுண்டு.. உலகின் முன்னணி நாடு அமெரிக்காவிலுமா? 

இத்தனை பேரும் நேற்று ஒரு வேலை நாளில் பகல் வேளையில் திரண்டு நின்றது வேடிக்கையாய் இல்லை? 

ஒரே ஒரு விஷயம் ஒபாமா நேற்றே தனது முதலாவது அரச பணி ஆவணத்தில் கையெழுத்திட்டு விட்டார்.. நடக்கட்டும் நடக்கட்டும்..

புது விளக்குமாறு நல்லாக் கூட்டப்போகுதா? இல்லை எப்போதுமே நல்லவற்றை உலகில் கூட்டப் போகிறதா? (அதிகரிக்க)   

கறுப்பின விடுதலைப் போராளி மார்ட்டின் லூதர் கிங்கை(MLK) ஞாபகப்படுத்தும் பதாகை.. அருகேயே ஒன்றுபட்டு முன்னேற அழைப்பு..

Post a Comment

22Comments

Please Select Embedded Mode To show the Comment System.*