98ஆம் ஆண்டு நான் கடுப்பில் எழுதிய கவிதை..
அண்மையில் எலி வேட்டைக்காக வீடு துப்புரவானபோது அகப்பட்டது. எனது அன்றைய அருமையான,முத்து முத்தான கையெழுத்தைப் பார்த்தபோது உண்மையில் இப்போது மோசமாகி இருக்கும் எனது கையெழுத்தை நினைத்து கவலை தான் வந்தது.. (தலைஎழுத்தும் அப்படித் தான் போலும்)
உயர்தரப் பரீட்சையில்(A/L) நான் ஃபெயில் பண்ணவில்லை என்றாலும் கூட (எல்லாப் பாடங்களிலும் சித்தி அடைந்துவிட்டேன்) பாஸ் பண்ணவில்லையே.. அதாவது பல்கலைக் கழகத்துக்கு தெரிவு செய்யப்படும் அளவுக்கு பெறுபேறுகள் இருக்கவில்லை..
ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் எனது இந்த சாதாரணப் பெறுபேறுகள் மூலமாகவே எனக்கு பேராதெனிய பல்கலைக்கழகத்திலே பௌதீக விஞ்ஞான பீடத்துக்கான வாய்ப்புக் கிடைத்தது.. இந்த ஊடகத் துறை ஈடுபாடு காரணமாக நான் இணையாமல் விட்டது வேறு கதை..
இரண்டாம் முறை பரீட்சை எடுப்பதற்காகத் தனியார் வகுப்பு செல்லும் கொடுமை இருக்கிறதே.. ஒரு தனியான தலைக்குனிவு அனுபவம் அது.. அந்த அவமானம்,வெறுப்பு எல்லாம் கலந்து பிறந்தது தான் இந்தக் கவிதை..
பி.கு - இப்படி கவிதை எழுதுவதிலும்,கண்ட கண்ட விஷயங்களிலும் கவனம் செலுத்தித் தான் இரண்டாம் முறையும் கவிழ்ந்து போனேன்.. ஆனால் முதல் முறையை விடப் பரவாயில்லை.. :)
முன்னறிவித்தல்:- காதலித்துப்பார் – வைரமுத்து இற்குப் போட்டியாக – A.R.வாமலோசனின் (எனது முழுப் பெயர்) ஃபெயில் பண்ணிப்பார்
ஃபெயில் பண்ணிப்பார்
ஃபெயில் பண்ணிப்பார்
பேயிலும் இழிவாகத்தெரிவாய்!
பெற்றோரிற்கு வேண்டா வெறுப்பான
பிள்ளை ஆவாய்!
நீ முகம் பார்க்கும் கண்ணாடியே – உனைக்
கணக்கெடுக்காதது போல நீ உணர்வாய்!
நீ எழுதிய நோட்சிலுள்ள
உனது எழுத்துக்களே-
ஒன்றுடன் ஒன்று
உன்னைப் பற்றி குசுகுசுத்து
எள்ளி நகையாடுவதைப் பார்ப்பாய்!
வீதியில் செல்லும் அனைவருமே
உன் 'ரிசல்ட்ஸ்' கேட்டு
உன்னைக் கிண்டலடிக்க வந்தவரே என
நடுநடுங்குவாய்!
இரவில் கனவுகளில் இரசாயனமும் - பௌதிகமும்
இரட்டை அரக்கராய்த் துரத்த – நீ
விழுந்தடித்துக்கொண்டோடுவதாய் -
விபரீத கனவுகள் காண்பாய்!
படித்த பாடசாலையை
பட்டலந்தை வதை முகாமாய்ப் பார்ப்பாய்!
படிப்பித்த ஆசிரியர் –
பாம்பாட்டிகளாயும் - நீயோ
பல் பிடுங்கிய பாம்பாயும் உணர்வாய்!
வீதியில் திரியும் நாய்கள் கூட
உன்னைப் பார்த்தே
குரைப்பதாய் நினைப்பாய்!
வீதியால் செல்லும் லொறி, பஸ் அனைத்தும்
உன்னைக் கொல்லவே
பறப்பதாய் நினைப்பாய்!
வீதியில் செல்லும் பைத்தியத்தை
வீட்டுக்காரர் திட்டுவதைக்கூட
உன்னையே திட்டுவதாய்
உருவகிப்பாய்!
மனதில் இருக்கும் விரக்திகளால்
முப்பத்தைந்து செல்சியஸ் வெயில் கூட
முதுகில் உறைக்காமலிருப்பாய்!
உடலினை மூடும் உடைகளைக்
கிழித்தெறிந்துவிட்டு வீதியில்
மரதன் ஓட எண்ணுவாய்!
படித்துப் பெற்ற பி.எஸ்ஸி – எம்.எஸ்ஸி
பட்டங்களைவிட –
பாஸாகாமல் பெற்ற – றிப்பீட்டர்
பட்டம் பாரமானதாக உணர்வாய்!
இவையெல்லாவற்றையும் விட-
உலகில் ஒரு முறை மட்டுமே போகக்கூடிய இடம்
கல்லறை எனவும்,
ஒரு முறையும் போகமுடியாத இடம்
கருவறை எனவும்,
எப்போதும் இரண்டாம் முறை
போகக்கூடாத இடம்-
ஏலெவல் டியூசன் வகுப்பறை
என்றும் உணாவாய்!
சுயபுத்தி இருக்கும் போதே
பைத்தியம் பிடிக்க வேண்டுமானால் -
நிச்சயம் ஒரு முறையாவது
ஃபெயில் பண்ணிப்பார்!
( பி.கு:- வைரமுத்துவே மன்னித்துக்கொள்ளுங்கள் )