துணிச்சல் வேணும் தம்பி !

ARV Loshan
18

நேற்றைய நாள், காலை முதலே பரபரப்புத் தொற்றிய ஒருநாள்!
பலவிதமான பரபரப்புச் செய்திகள்,வதந்திகள்,வாழ்த்துக்கள் என்று குறைவில்லாமல் முழுநாளுமே ஒருவித முக்கியமான நாளாகவே காணப்பட்டது.

அதிகாலையிலேயே (ஞாயிறு என்றால் எனக்கு காலை 9மணியும் அதிகாலைதான்) வந்த வெளிநாட்டு அழைப்பொன்று 'அணைக்கட்டும் 5000உம் சரியாம்' என்று செய்தி சொல்லிப்போனது.

பிறகு வந்த தகவல்கள் (முன்வீடு,பக்கத்துவீடு,பேப்பர்காரன் என்று பலபேரும் சொன்னது) 500 முதல் 10000 வரை பலதரப்பட்டது.

உண்மையைத் தெரிந்த விஷயங்களையே சொல்லமுடியாமல் ஊமையாய் இருக்க வேண்டிய நிர்பந்தமுள்ள எங்கள் இலத்திரனியல் ஊடகங்கள் இதுபற்றி எதுவுமே சொல்லாதது ஆச்சரியமில்லைத் தானே? (துணிச்சலாய் எழுதிய பல பத்திரிகைகளே பேனாக்களை இறுக்கி மூடியபின்னர் டிவி,வானொலிகள் எம்மாத்திரம்)

கலைஞரும் ஜெயாவும் (தொலைகாட்சிகளைத் தான் சொன்னேன்) 1500 என்றன! இணையத்தளங்களும் வலைத்தளங்களும் 500 முதல் 50000 வரை சொல்லின! சில அறுதியிட்டு அப்படியெதுவுமே இல்லை;அவ்வளவுமே பொய் என்றன.

நவம்பர் 14க்கு முன் என்றால் என்வீட்டுத் தொலைபேசிக்கும் என்னுடைய செல்போனுக்கும் அழைப்பெடுத்து விபரம் கேட்டும் பலரும் இம்முறை என் நலனையோ தம் நலனையோ கருத்தில் கொண்டு எந்தவொரு விபரமுமே கேட்கவில்லை. அப்படியும் சிலர் 'தம்பி செய்தி உண்மையோ?' என்று மட்டும் கேட்டு வைத்தனர்.

இன்னும் ஒரு சிலர் அதியுச்ச பாதுகாப்போடு தொலைபேசியில் நான் வீட்டில் இருக்கிறேன் என்று கேட்டு நேரிலே வந்து விஷயம் விபரம் கேட்டனர்.
'உறுதியாகத் தெரியவில்லை. தெரிந்தால் சொல்லுவோம். இணையத்தளங்களில் இவ்வாறு தான் இருக்கிறது'என்று சொல்லி அனுப்பனேன்.

பதினொன்றரை அளவில் இன்னுமொரு புதிய செய்தி பரவ ஆரம்பித்தது. ஆளுகின்ற தரப்பில் மூன்று பெருந்தலைவர்கள் முடிந்தது அல்லது மோசமான நிலையில் என்று.அமைச்சரொருவர்,முடிவெடுக்கும் முக்கியஸ்தொருவர்,அமைச்சராவதாக செய்தி அடிபடும் புதிய நாடாளுமன்ற உறுப்பினரொருவர்.(எனக்கேன் வம்பு? நீங்களே கண்டுபிடிச்சுக் கொள்ளுங்கள் யார்,யாராக இருக்கலாம் என்று)

மீண்டும் அதே தகவலறியும் ஆர்வம் - தேடிப்பார்த்தேன் சாடை மாடையாய் நம் செய்திப்பிரிவு நண்பர்கள் பத்திரிகையுலக நண்பர்களிடம் கேட்டு பார்த்தேன். அவர்களும் தங்களுக்கும் இப்படித் தகவல்கள் வந்ததாகவும் உறுதிப்படுத்த முடியவில்லையென்றும் சொல்லினர். எல்லோர் குரலிலும் சந்தோஸமா, உறுதிப்படுத்த முடியாத கவலையா, சந்தேகமா தொனித்தது தெரியவில்லை.

Facebook,Skype என்று ஒட்டுக் கேட்க முடியாது என்று நாம் ஒரளவு உறுதிப்படுத்தியுள்ளவை ஊடாக இந்த விஷயங்கள் சூடு கிளப்பும் நேரம் எங்கள் ஊடகங்களில் முல்லைக்குள் நுழைந்த கதையை அரசு சொன்னது. எனினும் மாலையில் வெற்றியில் நான் செய்தி வாசித்தபோது என் செய்திகளில் அதுபற்றி எதுவும் இருக்கவில்லை.

வேலை முடிந்து வரும்போது வழமையாக நான் வாழைப்பழம் வாங்கும் கடைக்கு முன்னால் நான் வாகனத்தை நிறுத்தியபோது எங்கள் குடும்ப நண்பரொருவர் என் வாகன ஓட்டி இருக்கைக்கு முன்னால் வந்தார். நானும் கண்ணாடியை இறக்கினேன்.

அவர் இவ்வாறான செய்தி விஷயங்களில் ரொம்பவே ஆர்வமுள்ளவர் - துணிச்சலோடு எங்கென்றாலும் எதுபற்றியும் பேசுவார்.
"என்ன தம்பி அந்தப் பக்கம் சூடு பறக்குது அஞ்சாயிரம் பேர் சரி;இங்கை மூண்டுபேர் முடிஞ்சதாம். நீங்கள் ஒண்டுமே சொல்றியளில்லை?" என்று கொஞ்சம் ஆர்வமும் கடுப்புமாகக் கேட்டார்.

"நாட்டு நிலமை தெரியாதோ" என்றேன்.

"என்ன நாட்டு நிலமை தம்பி – பேப்பர்காரன் றேடியோகாரன் என்டால் துணிச்சல் வேணும். இல்லாட்டி என்னத்துக்கு? உண்மையளைத் துணிஞ்ச சொல்லவேணும். சும்மா பாட்டுப் போடவே றேடியோ"

"அங்கிள் சொல்லுறது – சுலபம் கொஞ்சம் வந்து எங்கட இடத்தில இருந்து பாருங்கோ தெரியும்"

"அப்படியில்லைத் தம்பி – பயப்பிடாமல் உண்மையைப் பட்டென்று சொல்லவேணும். இப்ப பாரும் ஒன்றை அண்ணன்ரை மகன் எப்பிடியெல்லாம் நெட்டிலை எழுதிறான்." பெருமையோடு சொன்னார்.

"நெட்டிலை? இங்கை இருந்தோ" என்று கேட்டேன்.

"சீச்சி அவன் அவ்வளவு முட்டாளே – வெளிநாட்டில இருந்து வேற பெயரிலை" என்று சொன்னவர் கொஞ்சம் மெதுவான குரலில் "தம்பி கனநேரம் ஒருத்தன் எங்களையே உத்துப் பார்க்கிறான் - உம்மோடை கதைக்கிறதை CIDகாரர் கண்காணிக்கினமோ தெரியாதே! தற்செயலா ஆரும் கேட்டா என்னைப் பற்றி ஒண்டும் சொல்லாதேயும் - நீர் வெளில வந்த பிறகு பயத்தில தான் உம்மை வந்து பார்க்கவும் இல்லை" என்று படபட என்று சொல்லிவிட்டுப் பாய்ந்து விழுந்து அந்த இடத்தை விட்டுப் போய்விட்டார்.

Post a Comment

18Comments

Please Select Embedded Mode To show the Comment System.*