உலக நாயகன் கமல்ஹாசனின் மர்மயோகி திரைப்படம் முடக்கப் பட்டுவிட்டது என்ற அறிவித்தல் வந்து சில வாரங்கள் ஆகின்றன.. அடுத்த திரைப்படம் ஹிந்தியில் வெளிவந்தது பாராட்டுக்கள் வென்ற புதன்கிழமை அதாங்க The Wednesday என்ற திரைப்படத்தின் தமிழாக்கம் என்று நம்ம கேபிள் சங்கர் எழுதியிருந்தார்.. அதற்கு முதல் பிரபல தெலுங்கு,மலையாள நடிகர்களோடு 'தலைவன் இருக்கிறான்' என்ற படம் வெளிவர இருப்பதாக பேச்சுக்கள் அடிபடுகின்றன..
எனினும் இந்த அறிவிப்புக்கள் எல்லாம் வந்த நேரத்தில் நான் வேண்டிக் கொண்டதெல்லாம், (யாரை,எந்தக் கடவுளை என்றெல்லாம் கேக்காதீங்க.. எனக்கே யாரிடம் வேண்டினேன் என்று தெரியாது.. அதுவும் நாத்திகரான கமல் படத்துக்கேயா? ) அடுத்த கமல் படத்துக்காவது மானா('ம') எழுத்தில் பெயர் வைக்கக் கூடாதென்று தான்..
காரணம் அண்மையில் 'ம' எழுத்தில் ஆரம்பிக்கப் பட்ட இரண்டு கமல் படங்களுமே முடங்கிவிட்டன.. முதலில் மருதநாயகம், பின்னர் இப்போது மர்மயோகி..
இரண்டுமே பிரம்மாண்டத் தயாரிப்புக்கள் என்று பரபரப்புக் கிளப்பியவை.. இரண்டுமே கமலின் கனவுப் படைப்புக்களாகக் கருதப்பட்டவை.
பொன்னியின் செல்வன் போன்றதொரு தமிழ்க்காவியத்தை, அல்லது கிளாடியேட்டர் போன்றதொரு பிரம்மாண்டப் படத்தை தமிழில் எதிர்பார்த்த எம் போன்றோருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.. மொக்கைத் திரைப்படங்களுக்கும், மசாலாக் குப்பைகளுக்கும் கோடிக் கணக்கில் கொட்டிக் கொடுப்பவர்களால் இது போன்ற நல்ல,சவாலான முயற்சிகளுக்குக் கை கொடுக்க முடியாமல் இருப்பது தமிழரினதும்,நல்ல தமிழ்த் திரைப்பட ரசிகர்களினதும் தலைவிதியே அன்றி வேறொன்றும் இல்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது..
கமலின் 'ம' வரிசைத் திரைப்படங்களை எடுத்துக் கொண்டால், நல்ல திரைப்படமாக பாராட்டுக்களை வென்றாலும், வசூலில் படு மோசமாகத் தோற்றுப்போன 'மகாநதி' தான் ஞாபகத்துக்கு வரும்..அவ்வளவு அற்புதமான திரைப்படத்தை வெற்றி பெற வைக்க முடியாததற்கு ரசிகர்களான நாமே தான் வெட்கப்பட வேண்டும்..அதே திரைப்படம் இந்தக் காலகட்டத்தில் வெளிவந்தால் வெற்றி பெற்றிருக்கக் கூடும்..
அதே போல 'ம' வரிசையில் , 'மு' எழுத்தில் வெளியான மும்பை எக்ஸ்ப்றேசும் தோல்வியுற்றது.. அந்தத் திரைப்படத்தின் நகைச்சுவைகளும், சொல்லப்பட்ட சில சமூக நியாயங்களும் நம்மவருக்கு ஏற்புடையதாக இல்லை.. பல பேருக்கு திரைப்படம் புரியவே இல்லை..
கமலுக்கு அப்போ 'ம' சறுக்கல் தருகிற ராசியில்லாத எழுத்தா என்று அவசர அவசரமாக தேடியதில் சில விஷயங்கள் அகப்பட்டன..
ஆரம்ப காலத்தில் கமலின் சகல 'ம' எழுத்தில் ஆரம்பித்த திரைப்படங்களும் பேரு வெற்றியும் ,பாராட்டுக்களும் பெற்றன..
பாலச்சந்தரின் இயக்கத்தில் 'மரோசரித்திரா' (தெலுங்கு), மன்மதலீலை', 'மூன்று முடிச்சு', 'மூன்றாம் பிறை' என்று வரிசையாக எல்லாமே வெற்றி பெற்றவை..
அதன் பின் கமல் எடுத்த மிகப் பெரிய நகைச்சுவை திரைப்படம் மைக்கல் மதன காம ராஜன் கூட ம வரிசையில் இடம் பெரும் திரைப்படம் தான்..
கமல் ஒரு வித்தியாசமான வேடம் ஏற்று நகைச்சுவையில் பின்னியெடுத்த மகாராசன் கூட 'ம' வில் ஆரம்பித்த படம் தான்.. அதுவும் வர்த்தக ரீதியில் எதிர்பார்த்த வெற்றி தரவில்லை என அறிந்தேன்..
எனினும் அண்மைக்கால பெரிய சறுக்கல்கள் 'ம' எழுத்து கமலுக்கு ராசியில்லை என்ற கருத்தையே தருகின்றன..
இதைக் கமல் ஏற்றுக் கொள்வாரா தெரியவில்லை.. அவர் தான் மூட நம்பிக்கை மீது பெரிதாக நாட்டமில்லாதவர் ஆயிற்றே.. (ஆகா.. அது கூட 'ம' வரிசை தான்)
ஆனால்
அன்புள்ள கமல், என்ன தான் இருந்தாலும் தயவுசெய்து அடுத்த படத்துக்கு 'ம' எழுத்திலே பெயர் வைக்காதீங்க.. கோடி புண்ணியமாகும்..
இதற்கிடையில் மர்மயோகியை சண் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கி மீண்டும் எடுப்பதாக அறிந்தேன்... தமிழக நண்பர்கள் யாராவது உறுதிப் படுத்தினால் நல்லது..