எனக்குப் பிடித்த ஷாந்தி..

ARV Loshan
13

வாரணம் ஆயிரம்..

பல பேர் விமர்சனம் எழுதியாயிற்று.. படமும் நல்லாத் தானிருக்கு.. ஆங்கிலப் படங்களின் டச் அங்கே,இங்கே தெரிந்தாலும் மனதைத் தொடுகிறது..

சூர்யா தனது life time character செய்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.. ஆனாலும் ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்களும்,இசையும் இல்லாமல் இந்தளவுக்கு இந்தப் படத்தை ரசித்திருக்க முடியுமா என்று எனக்குள்ளேயே கேட்டுப் பார்த்தேன்..

கொஞ்சம் கஷ்டம் தான்.. ஏழு பாடல்களையும் ஹாரிஸ் இழைத்து இழைத்துப் பின்னி இருக்கிறார்.திரைப்படத்தின் ஒவ்வொரு நிமிடதொடும் இசை அப்படி இணைந்து போகிறது.ஒரு பாடல் தானும் மோசம் என்றோ,கொஞ்சமாவது நல்லா இல்லை என்றோ சொல்ல முடியவில்லை.. பாடல்கள் வெளிவந்த போதே எனது மனதில் தனியிடம் பிடித்து இருந்துவிட்டன..

ஆரம்பத்தில் அடியே கொல்லுது மற்றும் நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை ஆகியன தான் அதிகமாக எனக்குப் பிடித்தன.. அதற்குப் பிறகு ஒரு வலைப்பதிவில் 'அனல் மேலே பனித்துளி' பாடல் பற்றி உருகி ஒரு நண்பர் எழுதி இருந்தார்.. அதுவும் மனதுக்குப் பிடித்தது..

இப்போ காட்சி அமைப்புக்களால் அஞ்சலையும் மனசில நிக்கிறா.. பாடல் ஆடவைப்பதாக இருந்தாலும்,ஆடத் தோன்றாமல் அழத் தான் தோன்றுகிறது..

நல்ல பாடல்களை இசை அமைப்பாளரிடம் இருந்து வாங்கி (ஹாரிஸ் கௌதமுக்கு தரும் ஸ்பெஷல் எல்லோரும் அறிந்தது தானே.. ) அதைக் காட்சிப் படுத்துவதில் கௌதமை அடிக்க இப்போதைக்கு யாருமில்லை.. (மணிரத்னம்,ஷங்கர் கூட இவருக்குப் பின்னால் தான் என்பேன்)

இந்த வாரணம் ஆயிரம் பாடல்களில் ஒரு சிறப்பு இருக்கிறது.. நேற்று காலை விடியலில் இது பற்றி சொன்னேன்..
ஹாரிஸ் ஜெயராஜ் இந்தப் படத்தின் ஏழு பாடல்களுக்காகவும் மொத்தம் பதின் மூன்று பாடக,பாடகியரைப் பயன்படுத்தியிருக்கிறார்.

வழமையாக இவ்வாறு ஐந்திற்கும் மேற்பட்ட பாடல்கள் ஒரு திரைப்பட ஒலி நாடாவில் (இசைத் தட்டில்) வரும்போது,திரைப்படத்தின் நீளம் கருதி ஒன்றிரண்டு பாடல்கள் திரைப்படத்தில் இடம்பெறாமலே போகும்.ஆனால் இந்த ஏழு பாடல்களுமே படத்தில் வந்திருப்பது தான் சிறப்பே..

எனினும் நான் இன்று எழுத ஆரம்பித்ததும் ஆசைப்படுவதும் அண்மையில் வெளிவந்த புதிய பாடல்களில் என் மனம் கவர்ந்த பாடலான வாரணம் ஆயிரம் ' ஷாந்தி' பாடலைப் பற்றி..

பொதுவாக காலை நேரம் எனது நிகழ்ச்சியில் நீளமான பாடல்களை ஒலிபரப்புவதைக் கூடியளவு தவிர்த்துக் கொள்வேன்.. அதிக நேரம் எடுத்துக் கொள்ளும்போது விளம்பரங்களோடு அதிக பாடல்களை ஒலிபரப்ப முடியாதென்று..(நானும் பேசணும் இல்லே )

எனினும் பாடல் பிரபலமானால் எவ்வளவு தான் நீண்ட நேர அளவை எடுத்துக் கொண்டாலும் போட்டுத் தொலைக்கத் தான் வேண்டும்.. (ரஹ்மானின் பெரும்பாலான பாடல்கள் நீளமோ நீளம்.. அண்மையில் வெளிவந்த சர்க்கரைகட்டி,குசேலன்,தசாவதாரம் பாடல்களும் இதே ரகம் )

எனவே சின்னப் பாடல்களாகவும்,அதே நேரம் அவை பிரபல்யமாகவும் இருப்பதாகப் பார்த்துக் கொள்வேன்.. (முடிந்தவரை) அப்படி எனக்கென்றே ஒரு தனி பாடல்களின் செட்டே இருக்கின்றன.. தொடர்ந்து நம்ம நிகழ்ச்சி கேட்பவர்கள் அந்தப் பாடல்களை இலகுவாக இனம் காண்பார்கள்.அந்தப் பாடல்களை நான் play listஇல் போடாமலேயே நம்ம இசைக் கட்டுப்பாளர் பிரதீப் என் நிகழ்ச்சிக்கு போட்டுவிடுவார்.. ;) இந்தப் பிரதீப் தான் என் வலைப்பூவில் தற்போது காணப்படும் தலைப்புப் பகுதியை எனக்காக வடிவமைத்த திறமைசாலி.. (இப்பிடியெல்லாம் குளிர்வித்தா தான் அடுத்த முறை இன்னும் கொஞ்சம் வேலை வாங்கலாம் ;))

அப்படி அண்மையில் எனக்கு ரொம்பப் பிடித்துப் போனது தான்.. ஷாந்தி.. (தொடுவானம் சிவந்து போகும்)

கேட்டவுடனேயே பிடித்துப் போனது.. 'நெஞ்சுக்குள் பெய்திடும்' பாடலின் கொஞ்சம் மாற்றப்பட்ட வடிவமாக (version) இருந்தாலும் அதை விட இந்தப் பாடலில் எதோ ஒரு ஸ்பெஷல் இருக்கிறது.

ஒரு கிக்.. ஒரு வேகம்.. ஒரு காதலின் குழைவு.. ஒரு நெருக்கம்.. ஒரு கிறக்கம்.. என்று அனைத்துமே கொண்ட ஒரு மயக்கம் இந்தப் பாடலில்..இவை எல்லாவற்றுடனும் சிறிய பாடலாகவும் இருந்தது எனக்கு மேலும் ஒரு பிளஸ் போயின்ட்.

கடந்த வாரம் வரை எனக்கு அந்தப் பாடலைப் பாடியோர் யாரென்று தெரியாது. அந்தக் குரல் யாரென்று தேடியவேளையில் மேலும் ஒரு சந்தோஷம்.. நம்ம S.P.B.சரண் பாடியிருக்கிறார்.

நம்ம சரண் என்று சொன்னதுக்குக் காரணம் SPBஇன் புதல்வர் சில தடவை இங்கு வந்த வேளைகளில் என்னுடன் நெருக்கமான நட்பைப் பேணியவர்.. இந்தியா நான் போன வேளைகளிலும் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் எப்படியாவது என்னை சந்திக்க நேரம் ஒதுக்கி விடுவார். இப்போ கொஞ்ச நாளா டச் விட்டுப் போச்சு.. எனினும் நல்ல மனிதர். பண்பானவர்- அப்பாவைப் போலவே..அவரது தமிழ் உச்சரிப்பும் அற்புதம்.

ஒரு முறை நான் அவரை தொலைக்காட்சியில் (இலங்கையில் தான்) பேட்டி கண்டபோது தான் அழகான தமிழை உச்சரித்துப் பாடுவதால் தான் தனக்கு வாய்ப்புகள் அதிகம் இல்லையோ தெரியாது என்று கவலையோடு சொன்னார் என்னிடம்.

அவரது குரலும் எனக்கு மிகப் பிடிக்கும்.. இன் ஆரம்ப காலக் குரல் போல சற்றும் பிசிறு தட்டாமல் இருக்கும் அவர் குரலைப் பெரிதாக என் யாரும் பயன்படுத்துவதில்லை என்று எனக்கு எப்போதுமே ஒரு ஆச்சரியம்..இத்தனைக்கும் இவர் பாடிய அநேகமான பாடல்கள் ஹிட்!

இந்தப் பாடலும் ஹரிசின் வழமையான டச் உடைய பாடல் தான்.. அவருக்கே உரிய கிட்டார் பின்னணி,துடிப்பான அதிகரித்துக் கொண்டு செல்லும் இசைத் துடிப்பு.. தாமரையின் அழகான வரிகளை சிதைக்காத மெட்டமைப்பு..

வரிகளில் கவித்துவம் பெரிதாக இல்லை.. எளிய,அனைவருக்கும் புரியக் கூடிய வரிகள்.

எனினும் சில வரிகள் மனது தொடுகின்றன..

உனைக் காணும் நேரம் வருமா..
இரு கண்கள் மோட்சம் பெறுமா..


விரலோடு விழியும் வாடும்..

இந்த வரியில் நாகரிகமான காதல் ஏக்கம் தொனிக்கிறது..

எனை வந்து உரசும் காற்றே
அவளோடு கனவில் நேற்றே
கை கோர்த்து நெருங்கினேன்
கண் அடித்து நீ ஏங்க..

இந்த வரிகள் போதும் கதாநாயகனின் ஏக்கம் சொல்ல.. கனவில் காதலியுடன் அவன் சென்றதை காற்று ஏக்கத்துடன் பார்க்கிறதாம்..

தாமரை மீண்டும் கலக்கி இருக்கிறார்..

திரைப்படக் காட்சிகளும் பிரமாதம்..

இந்த ஷாந்தி எனக்குப் பிடித்திருக்கிறது.. உங்களுக்கு என்ன மாதிரி?

சரனின் குரலோடு ஆரம்பத்திலும் இடையிலும் கிளிண்டனின் குரலும் இணைகிறது..

எல்லாம் சரி யார் அந்த ஷாந்தி? காரணம் கதாநாயகியின் பெயர் மேக்னா தான்.. வழமை போல் சினிமாப் பாடல்களில் இதெல்லாம் சகஜம் தானா?

பாடலின் வரிகள் முழுமையாகக் கீழே.. அப்படியே எனக்குப் பிடித்த ஷாந்தியை நீங்களும் முழுமையாகக் கேட்டுப் பாருங்கள்.. கொஞ்ச நேரம் காற்றிலே மிதக்கலாம்..

Post a Comment

13Comments

Please Select Embedded Mode To show the Comment System.*