சரிந்தது அவுஸ்திரேலிய சாம்ராஜ்யம்

ARV Loshan
6

நேற்று மெல்போன் மைதானத்தில் தென்னாபிரிக்காவுக்கெதிராகக் கண்ட 9 விக்கெட் தோல்வியுடன் அவுஸ்திரேலியாவின் சொந்த மண் ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளது. 

16 ஆண்டுகளாக சொந்த நாட்டில் வைத்து எந்தவொரு தொடரையும் தோற்காதிருந்த டெஸ்ட், மற்றும் ஒருநாள் போட்டிகளில் முடிசூடி அணி அவுஸ்திரேலியா தென்னாபிரிக்கா அணியிடம் மண் கவ்வியுள்ளது.

இறுதியாக அவுஸ்திரேலியாவில் வைத்து டெஸ்ட் தொடரொன்றில் அவுஸ்திரேலியாவைத் தோற்கடித்த அணி மேற்கிந்தியத்தீவுகள். 1992 – 1993 பருவகாலத்தில் ரிச்சி ரிச்சட்ஸனின் தலைமையிலான அணி.

அந்த தொடரில்தான் இறுதியாக அவுஸ்திரேலியா, அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் தோற்றிருந்தது. நேற்றைய தோல்வியுடன் 16 ஆண்டுகளில் பின் மீண்டும் அடுத்தடுத்த இரு தோல்விகள்.

ஜாம்பவான்களின் விலகலுடன் (வோர்ன், மக்கிரா, லங்கர், மார்ட்டின்) அவுஸ்திரேலியாவின் தளம்பல் படிப்படியாக,வெளிப்படையாத் தெரிகிறது.

இந்திய மண்ணில் கண்ட தோல்விக்குப்பின் - இப்போது கிரேம் ஸ்மித்தின் - உத்வேகமிக்க இளைய தென்னாபிரிக்க அணியிடமிருந்து மரண அடி கிடைத்திருக்கிறது.

                 இந்தக் காலம் மறுபடி எப்போ வரும்? ஆஷஸ் வெற்றிக் கிண்ணத்துடன் - 2007 இல்

இன்னும் ஒரு போட்டி எஞ்சியிருக்கும் நிலையில் டெஸ்ட் தொடரை இழந்துவிட்டுப் பரிதாபமாக இருக்கும் அவுஸ்திரேலியாவில் பல பலிக்கடாக்கள் காவு கொடுக்கப்பட வரிசையாக நிற்கிறார்கள்.

மத்தியூ ஹேய்டனும், மைக்கேல் ஹசியும் நேற்று அறிவிக்கப்பட்ட சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ள சிட்னி டெஸ்ட் போட்டிக்கான 12 கொண்ட குழுவில் பெயரிடப்பட்டாலும் இவர்களுக்கான இறுதிவாய்ப்பாக அமையலாம்.

மக்கிராவுக்குப் பின் அவுஸ்திரேலியாவின் பிரதான வேகப்பந்து வீச்சாளராக மாறிய பிரெட்லீக்கும் மோசமான காலம். அணியிலிருந்து தூக்கப்படப் போகிறார் என்று பார்த்திருந்த வேளை அவரது பாதத்தில் ஏற்பட்ட காயம் வேறொரு புதியவருக்கு வாய்ப்பை வழங்கியுள்ளது.

ரிக்கி பொன்டிங் தலைமைக்கு இப்போதைக்கு ஆபத்தில்லை என்றாலும், இன்னனொரு மோசமான தொடர் நிகழும் பட்சத்தில் மைக்கேல் கிளார்க் அவுஸ்திரேலியாவின் புதிய தலைவராகலாம். இவ்வளவுக்கும் பொன்டிங் - மெல்பேர்ன் போட்டியில் பெற்ற ஓட்டங்கள் முதல் இனிங்சில் 101, இரண்டாம் இனிங்சில் 99.

காயங்களும் தம்பங்குக்கு அவுஸ்திரேலிய அணியை உலுப்பியெழுக்கின்றன. சகலதுறைவீரர் ஷேன் வொட்சன் முதுகு உபாதையால் 6 மாதம் விளையாடமுடியாது. அன்ட்ரூ சைமன்ட்ஸ் முழங்கால் உபாதையால் இருவாரம் ஓய்வு + சத்திரசிகிச்சை.

தொடர்ந்து அண்மைக்காலமாக சிறப்பாக பந்துவீசி வந்த ஸ்டுவார்ட் கிளார்க்கும் காயத்துடன் விலகி இருக்கிறார்.

இப்போதைக்கு சிறப்பாக விளையாடி வருவோர் நான்கே நான்கு பேர் தான்.. ரிக்கி பொண்டிங்,மைக்கேல் கிளார்க்,மிட்செல் ஜோன்சன்,சைமன் கடிச் ஆகியோரே அவர்கள்..

இந்திய அணிக்கெதிராகவும் இப்போது தென் ஆபிரிக்க அணிக்கெதிராகவும் பெற்றுள்ள தோல்விகளுக்குப் பிறகும் ஆஸ்திரேலிய அணி இன்னமும் முதலிடத்தில் இருந்தாலும் தோல்விகள்,காயங்கள் இவ்வாறே தொடர்ந்தால் வெகுவிரைவிலேயே இந்தியாவோ தென்னாபிரிக்காவோ முதலாமிடத்தை சுவீகரித்துக் கோள்ளப்போவது உறுதி. 

வானத்திலிருந்தாவது ஒரு சூப்பர் ஹீரோ வரமாட்டானா என்று ஆஸ்திரேலிய அணியும் எங்கும் காலம் இது.. 

வயதேறிச் செல்லும், வெற்றிபெறும் வழியறியாது தவிக்கும் அவுஸ்திரேலியாவுக்கு புது இரத்தம் பாய்ச்ச வேண்டிய நேரம் இது.

Post a Comment

6Comments

Please Select Embedded Mode To show the Comment System.*