வானொலி ஒலிபரப்பு என்பது ஒரு டென்ஷன் மிகுந்த,பரபரப்பான தொழில் என்றாலும் கூட அன்றாடம் நடக்கின்ற பல்வேறு கலகலப்பான நிகழ்வுகளால் மன இறுக்கங்கள் குறைந்து நாமும் புத்துணர்ச்சி பெறுவதுண்டு..
அந்த வேளைகளில் பெரும் பிழையாக இருந்து எங்களுக்கு சங்கடங்களைத் தருகின்ற பல விடயங்கள் கொஞ்ச நாட்களுக்குப் பிறகு நினைவுகளில் மீட்டிப் பார்க்கும் போது மிக வேடிக்கையான விஷயமாக மாறிப் போவதுண்டு..
அவற்றில் சில இங்கே வறுவல்களாக ..
(அவியல்,கூட்டு,கிச்சடி எல்லாம் போட்டுட்டாங்க ..வானொலிக்குப் பொருத்தமாக நான் வறுவல்கள் என்று பெயர் வைத்தேன்)
###################
நடக்காத போட்டியின் ஸ்கோர்
ஒருமுறை பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கை வந்திருந்தது.அப்போது நான் ஷக்தி FMஇல் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.வழமை போல இடையிடையே கிரிக்கெட் ஸ்கோர் விபரங்களைப் பாடல்களுக்கிடையில் கொடுத்துக் கொண்டிருந்தோம்.வழமையாக டிவியில் போட்டிகள் காட்டப்பட்டால் நேரடியாக அதைப் பார்த்தே ஸ்கோர் சொல்வதுண்டு.. தொலைக்காட்சியில் காட்டப்படாத போட்டிகளாயின் மட்டும் இணையத்தளங்கள் மூலமாக ஸ்கோர் விபரங்களைப் பார்த்து அறிந்து நேயர்களுக்கு வழங்குவோம்..
அன்றும் அதுபோலத் தான் தொலைக்காட்சியில் பார்த்து ஸ்கோர் விபரங்களைக் கொடுக்கலாம் என்று எண்ணி இருந்த நேரம்.. மழை காரணமாக அன்றைய நாள் ஆட்டம் ஆரம்பமாவது தாமதமாகியது - அது ஒரு டெஸ்ட் போட்டி.(இலங்கையில் எந்த கிரிக்கெட் அணியாவது விளையாட வந்தால் ஒன்றில் குண்டு வெடிக்கும்,இல்லை மழை பெய்யும்)
என்னுடைய நிகழ்ச்சி முடிந்து வந்து நான் அலுவலக அறைக்குள் இருக்கிறேன். உள்ளே வானொலியில் நிகழ்ச்சி கேட்டுக் கொண்டே நான், இன்னும் அங்கிருந்த ஒரு சிலரும் பேசிக் கொண்டிருந்தோம்..
கிரிக்கெட் போட்டி நடிபெராதது பற்றி, நேற்று நடந்த ஆட்டத்தின் சில கட்டங்கள் பற்றி,இன்னும் ஏராளமான விஷயங்கள் பற்றி கதை போய்க்கொண்டிருந்தது..
சற்று வானொலிப் பக்கம் காதை திருப்பினால் கடமையில் இருந்த அறிவிப்பாளர் கிரிக்கெட் ஸ்கோர் விபரங்கள் கொடுக்கிறார். "இதோ இன்சமாம் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடுகிறார்.. வேகமாக ஓட்டங்கள் பெற்றுக் கொண்டிருக்கிறார். டெஸ்ட் போட்டியாக இருந்தாலும் வேகமாக ஓட்டங்கள் பெறப்படுகின்றன" இப்படி சரமாரியாக விபரங்கள் சொல்லிக் கொண்டுபோகிறார்.
என்னடா இது வெளியிலே மழை விட்ட மாதிரி இல்லையே.. எப்படி போட்டி நடக்கும் என்று பார்த்தால், "இதோ இன்சமாம் அதற்குள் அரைச் சதத்தைக் கடந்து விட்டார்.. மிக வேகமான இன்னிங்க்ஸ்.. நம்பவே முடியவில்லை.. இவ்வளவு வேகமான டெஸ்ட் இன்னிங்க்ஸ்"என்று நம்மவர் பிளந்து கட்டுகிறார்..
அப்போது தான் எனக்குப் பொறி தட்டியது.. அடப்பாவி இன்சமாம் நேற்றே அரைச் சதம் அடிச்சு ஆட்டமும் இழந்தாச்சே.. பிறகெப்படி இன்று மறுபடியும்?
பதறியடித்துக் கொண்டு கலையகதுக்குள் ஓடினால் நம்ம அறிவிப்பாளர் கூலாக ஒலித்துக் கொண்டிருக்கும் பாடலுக்கு தலையாட்டிக் கொண்டே டிவியில் போகும் ஹைலைட்ஸ் பார்த்துக்கொண்டு ஸ்கோர் விபரம் சொல்லிக் கொண்டிருக்கிறார்..
வந்த கோபத்தில் திட்டு திட்டு என்று திட்டிவிட்டு வந்தாலும், சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது..
கொஞ்ச நாளுக்கு அவரது பெயரே ஹைலைட்ஸ் என்று மாறிப்போனது..
###################################
குனித்த புருவமும் ராக்கம்மாவும்
இதுவும் 99-2000 காலத்தில் நடந்த நிகழ்வு..
அதிகாலைவேளையில் பக்திப் பாடல்களை ஒலிபரப்பும் நிகழ்ச்சி இருந்தது.. (இப்பவும் தான்)
அதைப் பொதுவாக இரவுக் கடமையில் இருக்கும்(நள்ளிரவு முதல் அதிகாலை ஆறு மணிவரை) அறிவிப்பாளர் தொகுத்து வழங்க வேண்டும்.
நான் ஒரு நாள் தவிர்ந்த ஏனைய நாட்களில் வந்து ஆறுமணிக்குப் பொறுப்பேற்றுக் கொள்வேன்.. அந்த நேரம் மாற்ற போட்டி வானொலிகளையும் கேட்டுக் கொள்வதுண்டு..என்ன நடக்குதென்று பார்க்க..
அன்றொரு நாளும் இப்படித் தான் பயணம் செய்த அலுவலக வாகனத்தில் நம்ம போட்டி வானொலியைக் கேட்டுக் கொண்டே பயணித்தேன்.. வேடிக்கைக்குப் பெயர் போன அந்த அறிவிப்பாளர் பக்திப் பாடல்கள் ஒலிக்கும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார்.
அவர் ஏதாவது வித்தியாசமாக,வேடிக்கையாக செய்வார் என்பதால் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டே இருந்தேன்.
வழமையான பக்திப் பாடல்களாக அல்லாமல், கிறீஸ்தவ,இஸ்லாமியப் பாடல்களோடு, இந்து மதப்பாடல்களை மட்டும் திரைப்படங்களில் வந்த பக்திப்பாடல்களாய்ப் பார்த்து தெரிவு செய்து தந்துகொண்டிருந்தார்..
இடையில் ஒலித்தது "குனித்த புருவமும்..".. உடனேயே எனக்கு விளங்கிவிட்டது அது தளபதி திரைப்படத்தில் வந்த ராக்கம்மா கையத் தட்டு பாடலின் இடையிலே வரும் தேவாரப் பகுதியென்று..ஆகா நுணுக்கமாக எடிட் செய்து ஒலிபரப்புராரே என்று மனதுக்குள் நினைத்தபடி ரசித்துக் கொண்டிருந்தேன்.. அப்படியே அந்தத் தேவாரம் முடிந்து எஸ்.பீ.பீ "அடி ராக்கம்மா கையத் தட்டு" என்று விரல் சொடுக்கிக் கொண்டு தொடங்கி விட்டார்..
நம்ம வேடிக்கை மனிதர் பாட்டை வெட்டுவதாக இல்லை.. ஒன்றிரண்டு நிமிடங்கள் போன பிறகு தான் அவசர அவசரமாக "பக்திப் பாடல் ஒன்று(!) கேட்டீர்கள்" என்ற அவரின் அறிவிப்பு பாடலை இடைவெட்டி வந்தது..
மாலையில் அவரது வானொலியைச் சேர்ந்த இன்னொரு நண்பர் மூலமாகத் தான் தெரியவந்தது அந்தப் பாடலின் இடையே நம்ம அறிவிப்பாளர் தூங்கிவிட்டார் என்று..
அதற்கிடையில் தான் ராக்கம்மா பக்திப்பாடலுக்கிடையில் வந்திருக்கிறார்.
##########################
இன்னும் பல வரும்.. வறுவல்கள் மூலமாக யாரையும் பெயர் சொல்லி வறுப்பதாய் எண்ணமில்லை..ஆனாலும் அந்தக் காலகட்டத்தில் வானொலிகள் கேட்டவர்களுக்கு இலகுவாக ஊகிக்கலாம்..
மீதி வறுவல்கள் நாளை மாலை..