December 12, 2008

ஸ்வானுக்கு இரண்டு,சச்சினுக்கு மற்றொன்று..

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இடம்பெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது அறிமுகத்தை மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணியின் சுழல் பந்துவீச்சாளரான கிரேம் ஸ்வான் தான் வீசிய முதலாவது பந்துவீச்சு ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தி சாதனை புரிந்துள்ளார்.

தனது முதலாவது ஓவரின் இரண்டாம் பந்திலேயே நிதானமாக ஆடிக்கொண்டிருந்த (நிதானமா எப்படி ஆடலாம்னு யாரும் கேக்கப்படாது.. ;)) கௌதம் கம்பீரை ஆட்டமிழக்கச் செய்த ஸ்வான் அதே ஓவரின் இருதிப்பந்திலே வந்ததில் இருந்து இன்று தடுமாறிக் கொண்டிருந்த ராகுல் டிராவிடை பவிலியனுக்குத் திருப்பி அனுப்பினார்.(கடந்த இரு தொடர்களாகவே-இலங்கைக்கும்,ஆஸ்திரேலியாவுக்கும் எதிராக சிறப்பாக விளையாடாத ட்ராவிடுக்கு மேலும் ஒரு மரண அடி !)

இதன் மூலம் ஸ்வான் இங்கிலாந்தின் டெஸ்ட் சரித்திரத்திலேயே கன்னி டெஸ்ட் போட்டியில் விளையாடும் வீரர் ஒருவர் தனது முதலாவது ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய முதலாவது சாதனையைப் பதிவு செய்துள்ளார்.
இவர் இந்தத் தொடரில் அறிமுகமாகுவதே கேள்விக்குறியாய் இருந்த வேளையில் இவ்வாறு அபாரமான முதலாவது ஓவர் சாதனை ஸ்வானுக்கே ஆச்சரியத்தை அளித்திருக்கும்!

தனது அணியின் முதல் தர சுழல் பந்துவீச்சாளரான அனுபவம் வாய்ந்த பனேசர் இருக்கையில்,தேநீர் பான இடைவேளைக்கு முன்னர் இங்கிலாந்து அணியின் தலைவர் பீட்டர்சன் ஸ்வானிடம் பந்தை வீசக் கொடுத்தது ஆச்சரியத்தைத் தந்தாலும்,அற்புதம் ஒன்று நடந்து தான் இருக்கிறது.

ஸ்வானின் முதல் பந்து கம்பீரினால் நான்கு ஓட்டங்களாக மாற்றப்பட்டாலும் அடுத்த பந்து கம்பீரை lbw முறை மூலம் ஆட்டமிழக்க்கச் செய்தது.இறுதிப் பந்தில் டிராவிடும் அதே மாதிரி lbw முறையில் ஆனால் தடுமாறி ஆட்டமிழக்க, பாவம் மைதானத்தில் இருந்த சென்னை ரசிகர்கள் மயான அமைதியில்..

நேற்று பிற்பகல் வேளைக்குப் பிறகு இந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது ஆதிக்கத்தை அதிகப்படுத்திய இந்திய அணிக்கு இன்றைய காலை வேளையும் நல்லதாகவே அமைந்து இருந்தது. 316 என்ற ஓட்ட எண்ணிக்கைக்கு இங்கிலாந்தை மட்டுப்படுத்தியது சென்னை ஆடுகளத்தைப் பொறுத்தவரையில் இந்தியாவுக்கு வெற்றிக்கு வாய்ப்பான ஒரு விடயமே.
எனினும் முதலில் சேவாகும், இப்போது தேநீர் பான இடைவேளையின் முன்னர் வீசப்பட்ட இறுதி ஓவரில் இழக்கப்பட்ட இவ்விரு விக்கெட்டுக்களும் இந்தியாவின் மீது அதிக அழுத்தங்களைப் பிரயோகிக்கப் போகின்றன.

ஒரு சில வாரங்களுக்கு முன்னர் தான் தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஆஸ்திரேலியாவின் ஜேசன் கிரேசா பன்னிரண்டு விக்கெட்டுக்களை இந்திய மண்ணில் வைத்தே அள்ளிச் சென்றார்.(இது அறிமுக வீரர் ஒருவர் முதல் போட்டியில் பெற்ற விக்கெட்டுக்கள் வரிசையில் நான்காவது சிறந்த பெறுதி) இப்போது ஸ்வான் தனது முதல் ஆறு பந்துகளிலேயே இரண்டு விக்கெட்டுக்கள்..!!! என்ன நடக்குதப்பா?

இன்று நமக்குப் போயா (முழு பூரணை தினம்)என்று கொஞ்சம் ஓய்வா இருந்து கிரிக்கெட் பார்க்கலாமே என்று பார்த்தால் சேவாக் முதலில் காலி..கம்பீராவது அடிப்பார்னு பார்த்தால் அவரும் போய்ட்டார். டிராவிட் தான் கொஞ்சக் காலமாகவே வாறதும்,போறதுமா இருக்காரே..
ஆகவே இப்ப ஒரே நம்பிக்கை (எனக்கு மட்டுமில்லே,எல்லா இந்திய ரசிகர்களுக்கும் தான்) இப்போது முழுமையான formஇல் இருக்கும் சச்சின் டெண்டுல்கரும்,லக்ஸ்மணும் தான்..

அடுத்து யுவராஜ் வேற இருக்கிறார்.. தனது அணியில் இருப்பை ஸ்திரப்படுத்திக் கொள்ள, அதிலும் கங்குலி விட்டுச் சென்ற வெற்றிடத்தை நிரப்ப அவர் என்ன செய்யப் போகிறார் என்பதையும் பார்க்கலாம்.. டோனி எப்படியும் சிறப்பாக விளையாடுவார் என்ற நம்பிக்கை எனக்குண்டு.. (அவர் தான் தன்னுடைய தலைமையில் விளையாடும் போது அரைச் சதமாவது அடிக்காமல் போக மாட்டாரே)

இதோ பதிவு போடலாம்னு பார்த்தால் நம்ம டெண்டுல்கர் ஸ்வானின் பந்தில் ஆறு ஓட்டங்கள் ஒன்று எடுத்து இன்னொரு மைல்கல்லை எட்டியுள்ளார் (இவர் எட்டிய மைல் கற்களை வைத்தே ஒரு சீனப் பெருஞ்சுவர் கட்டலாம் போல.. ;)) இங்கிலாந்து அணிக்கு எதிரா டெஸ்ட் போட்டிகளில் 2000 ஓட்டங்கள் பெற்ற சாதனையே அது !
உலகளாவிய ரீதியில் சச்சினுக்கு முன்னர் அந்த சாதனையை எட்டிய ஒரே வீரர் கவாஸ்கர் மட்டுமே தான்.
இன்று தானே இரண்டாவது நாள்.. மழை மட்டும் குறுக்கிடாவிட்டால் இன்னும் பல சாதனைகள், சரித்திரங்களை சேப்பாக்கத்தில் பார்க்கலாம்.. .

6 comments:

வான்முகிலன் said...

வணக்கம்.

உங்களது விமர்சனங்கள் விளையாட்டு முடிந்த பிறகு வந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

நன்றி.

Anonymous said...

அண்ணே இது என்னன்னே! இசுக்கூலு பசங்க மாதிரி ஒரு பதிவு இலங்கையில இருக்கீங்க! பதிவேல்லாம் சும்மா சூடா இருக்கவேண்டாமா? சரி உங்க நிலமை புரியுது யாழ்பாண படங்களையாவது கொஞ்சம் அவுத்து வுடுங்க!கதிர் சயந்தன பாருங்க சும்மா கலக்கு கலக்குனு கலக்குறாரு!

ஆதிரை said...

Match பார்ப்பதற்காக நிகழ்ச்சியை இடை நடுவில் விமலின் தலையில் கட்டிவிட்டுப் போனதற்கு எனது வன்மையான கண்டனங்களை பதிவு செய்கின்றேன்.

Anonymous said...

உசுப்பேத்துறங்கள்
பார்த்து பார்த்து!!!!

ARV Loshan said...

நன்றி வான் முகிலன்,அட்டாச்க் பாண்டியன்,ஆதிரை & நந்தரூபன்..

ஸ்வான் சாதனை படித்தவுடன் எழுத வேணும் போல இருந்தது.. பதிந்தேன்.. பதியும்போது இந்தப் போட்டி எந்தப் பக்கமும் திரும்பும் என்று தெரிந்த படியாலே தான் விமர்சனம் எதுவும் செய்யாமல் உளது உள்ளபடி எழுதினேன்..
டிராவிட் பற்றி எழுதியது மட்டும் சரியா நடந்தது..

அண்ணே பாண்டி அண்ணே.. ஏன் அண்ணே இந்த அளவு அதீத அன்பு.. இருக்கிற மாதிரி இருந்திட்டுப் போறேனே.. ;)

யாழ்ப்பாணப் படங்கள் எல்லாம் வெள்ளம் பற்றி அவுத்து விட்டேனே.. ;)

இஸ்கூலு பையன் மாதிரியே இப்ப இருக்கிறது நல்லா இருக்கண்ணே..

ஆதிரை , போட்டி பார்க்க போனதுன்னு யாரு சொன்னா? அந்தக் கொடுமையை ஏன் வெளியே சொல்லி..
உண்மையில வீட்டில இருந்து கிரிக்கெட் பார்கிறதை விட நிம்மதியா ஸ்டுடியோல இருந்து போட்டி பார்க்கிறது சந்தோசம் தெரியுமோ?

ஆதிரை said...

ஆதிரை , போட்டி பார்க்க போனதுன்னு யாரு சொன்னா? அந்தக் கொடுமையை ஏன் வெளியே சொல்லி..
மீண்டுமொரு நண்பரின் திருமண வீட்டில் நிற்கவைத்து பந்தி போட்டுட்டாங்களா?

உண்மையில வீட்டில இருந்து கிரிக்கெட் பார்கிறதை விட நிம்மதியா ஸ்டுடியோல இருந்து போட்டி பார்க்கிறது சந்தோசம் தெரியுமோ?
Highlight பண்ணியிருக்கிறேன். சம்பந்தப்பட்டவர்கள் கவனத்தில் எடுத்து ஆவண செய்யவும். :)

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner