இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் + கேள்விகள்..

ARV Loshan
22
நாளாந்தம் பாடல்களோடையே பழகுபவன் எனபதனால் ஒவ்வொரு பாடலைக் கேட்கும் போது பலப்பல எண்ணங்கள் கேள்விகள் பிறக்கும்!
அவற்றுள் சிலவற்றை இன்று எழுப்பியிருக்கிறேன்.

இவையனைத்துமே சீரியசான கேள்விகள்!
சத்தியமாக விடைத் தேடி குழம்பிய கேள்விகள்!
பதில் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்!
இல்லாவிட்டால் மேலும் கேள்விகளைக் கேட்டுக் குழப்புங்கள்!


1.ரஹ்மானின் சில படங்களுக்கு உண்மையில் அவர் இசையமைக்கவில்லையாமே?    (பாடல்கள்,பின்னணி இசை)
 பிரவீன் மணி,செல்வகணேஷ் போன்றவர்களே ஜோடி,பரசுராம் இன்னும் சில முக்கியமற்ற படங்களுக்கு பின்னணி இசை,சில பாடல்களுக்கு இசை வழங்கியதாகச் சொல்லப்படுகிறதே....

இந்த செல்வகணேஷ் தான் அண்மையில் வெண்ணிலா கபடிக் குழு திரைப்படத்துக்காக அருமையாக(ஏ.ஆர்.ஆர் ஸ்டைலில் இசையமைத்து உள்ளார்)

2.மதுஸ்ரீ, உதித் நாராயணன் போன்றவர்கள் ரஹ்மானின் இசையில் பாடும் போது தெளிவாகத் தமிழை உச்சரித்துப் பாடுகின்ற போதும், மற்ற இசையமைப்பாளரின் இசையில் தமிழைக் கொல்வது ஏன்? 
அப்படி இருந்தும் அண்மையில் சர்க்கரைக்கட்டி படப் பாடல் மருதாணியில்,வாலியின் வரிகளைக் கடித்துக் கொன்று விட்டார் மதுஸ்ரீ..
 (இளையராஜாவோ,யுவனோ இவர்களுக்கு வாய்ப்பளிப்பதே இல்லை) 


3.இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது இசையில் ஹரீஷ் ராகவேந்திராவுக்கு பாடும் வாய்ப்பை ஏன் இன்னமும் வழங்கவில்லை?
 (எனது நண்பருமான ஹரீஷூக்கு நேற்று பிறந்தநாள்)
 இவ்வளவுக்கும் ஹரீஷ் ஏனைய எல்லோரது இசையிலும் பாடிவிட்டார்.


4.பாடகர் உன்னிக்கிருஷ்ணன் ஓரங்கட்டப் பட்டாரா? ஒதுங்கினாரா?
 (இப்போதெல்லாம் அடிக்கடி விஜய் டிவியில் சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பார்க்கமுடிகிறது. இறுதியாக இவர் பாடியது வித்யாசாகரின் இசையில் 'தம்பி' என்று நினைக்கிறேன்)

5.முதல் திரைப்படத்தில் பிரமாதமாக இசையமைத்து திரைப்படமும் வெற்றி பெற்று பாடல்கள் பேசப்பட்டும் பல இசையமைப்பாளர்களின் ஒரு சில திரைப்படங்களோடு காணாமல் போனது ஏன்?

 உதாரணம் - பரணி, பாலபாரதி, ஜோஷ்வா ஸ்ரீதர்,ஜேம்ஸ் வசந்தன்,சௌந்தர்யன்.....  இப்படி வரிசை நீளும்.
இவர்கள் இசையமைத்த பெரும்பாலான பாடல்கள் ஹிட்!

6.முன்பெல்லாம் எம் ஜி ஆர், சிவாஜிக்கு டி.எம்.எஸ்,ஜெமினிக்கு பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடினால் தான் பாடல்கள் எடுபடும்;ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற நிலை இருந்தது.
 பின்னரும் கமல் ரஜனி இருவருக்குமே அதிகமாக எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மற்றும் கே.ஜே.ஜேசுதாஸ் பாடவேண்டும் என்ற எழுதப்படாத நியதி இருந்தது.
 இப்போது அப்படி இல்லை! அது ஏன்?

ஒவ்வொரு படத்திலும் உள்ள குறைந்தபட்சம் ஐந்து பாடல்களையும் ஐந்து பேர் பாடுகிறார்களே! 
ரசிகர்களின் ரசனை தான் மாறி விட்டதா?

7.இளையராஜா வைரமுத்துவுடன் இணைந்து தந்த எண்பதுகளின் மிகப் பிரபலமான பாடல்களைப் போல அதே அளவு மிகப் பிரமாதமான பாடல்களைப் பிறகு தரவில்லையே –

 அதுபோல் ரஹ்மான் + வைரமுத்து கூட்டணி தந்த ஹிட் பாடல்கள் போல்
 ரஹ்மானினால் மற்றப் பாடலாசிரியர்களோடு இணைந்த போது தமிழில் தரமுடியவில்லை.  (வாலியை விட)
 ஏன்?

8.ஒரே பாடலில் ஒரே நடிகருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பாடகர்கள் குரல் கொடுப்பது (பாடுவது) ஏன்?
 ஹரிஸ் ஜெயராஜின் இசையில் தான் இது அதிகம் 
 இதன் மூலம் கேட்பவருக்கும் பார்ப்பவருக்கும் குழப்பம் வருவதை உணரமாட்டார்களா?

9.பாடல்களின் கோரஸில் இந்த லாலலா...,ஒகோகோ.....,ம்ம்ம்ம....,நாநநா....,ராரா...., என்ற பலவகை கோரஸ்களில் இதுதான் இந்த பாடலுக்கு என்று இசையமைப்பாளர் எப்படித் தெரிவு செய்கிறார்?

 (இதில் ஹரிஸ் ஜெயராஜ் தனிரகம் -ஏதோ ஒரு புரியாத மொழியிலிருந்து கொண்டுவந்து  பொருத்திவிடுவார்.)

இசையமைப்பாளர் தேவாவிடம் ஒரு பேட்டியில் இந்தக் கேள்வி கேட்டபோது சமாளித்து பூசி மெழுகிவிட்டார்.

பரத்வாஜோ அதுதான் creativity என்று சொல்லித் தப்பித்துவிட்டார்.

***************************************
பத்துக் கேள்வியாகத் தரலாம் என்று பார்த்தால்.. ஒன்பதிலே நின்று விட்டது.. நவக்கிரகம் கூட நல்லது தானே செய்யும்.. எனவே இருக்கட்டும்.. ;)


Post a Comment

22Comments

Please Select Embedded Mode To show the Comment System.*