ஒன்று, ஒன்றரை வருடங்களுக்கு முதல் கிரிக்கெட் உலகில் அதிகம் பேசப்பட்டவர்களில் ஒருவராகவும்,உலகின் அத்தனை பிரபலத் துடுப்பாட்ட வீரர்களை அச்சுறுத்துபவராகவும் விளங்கியவர் இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப் பந்து வீச்சாளர் லசித் மாலிங்க. இவரது Slinging என்ற சரிவான பந்துவீச்சுப் பாணியும் இலேசில் கண்டுபிடிக்க முடியாத (ஊகிக்க முடியாத) வித்தியாசமான பந்துவீசுக் கோணங்களும் துரிதமாக உலகின் முன்னணிப் பந்து வீச்சாளர்களில் ஒருவராக லசித் மாலிங்கவை உயர்த்தின.
அத்துடன் அடிக்கடி மாற்றிக் கொள்ளும் இவரின் சிகை அலங்காரமும் ரொம்பவே பிரபல்யம்.. பொன்னிற வர்ணம் ஆங்காங்கே தெளிக்கப்பட்டு சிலிர்த்து,விரிந்து நிற்கும் முடியோடு(முடியா அது? சிங்கத்தின் பிடரி மயிர் மாதிரி அப்படி ஒரு அடர்த்தி) மாலிங்க பந்து வீசப் புயலாக வரும்போது யாருக்குமே ஒரு நடுக்கம் வரும்.
மாலிங்க வந்தாலே மைதானமெங்கும் ஒரே பரபரப்பு.. படப்பிடிப்பாளர்களுக்கும் ஒரே கொண்டாட்டம்..அவரது தனிப்பட்ட சிகை அலங்கார நிபுணர் கூட இலங்கையில் ஒரு வி ஐ பி ஆனார்.
அதிலும் கடந்த ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளில் இடம்பெற்ற உலகக் கிண்ணத்தொடரில் உச்சக்கட்டப் புகழ் பெற்ற வீரராக மாறி இருந்தார் மாலிங்க.அவரது hair styleஉம் உலகப் புகழ் பெற்றது.எனினும் கடந்த ஆஸ்திரேலியா சுற்றுலாவின் பின் கடந்த எட்டு மாதங்களாக எந்த ஒரு போட்டியிலும் (சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளிலும் கூட) மாலிங்கவைக் காணோம். முழங்கால் உபாதை என்று சொல்லப்பட்டாலும் கிரிக்கெட் தேர்வாளருக்கும் மாலிங்கவுக்கும் இடையில் முறுகல் என்றும் பரவலாகக் கதை அடிபட்டது. குறிப்பாக அவரது தலைமுடி,தனிப்பட்ட அவரது ஒழுக்கம் என்று பரவலாக கிசு கிசுக்கள்.. என்னால் முடிந்தளவுக்கு விஷயங்களைத் தேடிப்பார்த்தேன்..
இலங்கையின் உள்ளூர் போட்டிகளில் அனைவரையும் பயமுறுத்தும் வேகத்தோடு விக்கெட்டுக்களை வீழ்த்தி வந்த மாலிங்க 2004ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியா சுற்றுலாவுக்குத் தெரிவான பொது அவருக்கு வயது 21.முதல் பயிற்சிப் போட்டியிலேயே 6 விக்கெட்டுக்கள்.. அதன் பின் தனது முதலாவது டெஸ்டின் முதல் ஓவரிலேயே டரேன் லீமன் மற்றும் அடம் கில்க்ரிஸ்ட் ஆகியோரைக் கைப்பற்றி தனது வருகையைப் பறைசாற்றிக் கொண்டார்.
தொடர்ந்துவந்த நியூசீலாந்து சுற்றுலா மாலிங்கவை யாரென்று கிரிக்கெட் உலகயே ஒரு தடவை ஆச்சரியத்தோடு பார்க்க வைத்தது.
மாலிங்கவின் அதிவேக யோர்க்கர் பந்துகள்,முகத்தை நோக்கி எகிறும் பயங்கர பவுன்சர் பந்துகள் என்று நியூ சீலாந்து துடுப்பாட்ட வீரர்களைப் பயமுறுத்தியது. இலங்கையின் பொக்கெட் டைனமோ என்று செல்லப் பெயரிடப்பட்டார்.
இலங்கை அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சாளரான சமிந்த வாசின் வேகம் குறைந்து வரும் வேளையில் படிப்படியாக இலங்கையின் முன்னணி வேகப்பந்து வீச்சு நட்சத்திரமாக மாலிங்க உருவாக ஆரம்பித்தார்.
உலகின் முன்னணி வீரராக மாலிங்க தன்னை இனம் காட்டிக்கொள்ளவும்,முத்திரை பதிக்கவும் கரீபியன் தீவுகளில் நடந்த உலகக் கிண்ணப் போட்டிகள் நல்ல வாய்ப்பை அளித்தன.
எட்டுப் போட்டிகளில் பதினெட்டு விக்கெட்டுக்கள் (15.77 என்ற சராசரியுடன்.. அந்த உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணி இறுதிப் போட்டிவரை வர முக்கிய காரணிகளில் மாலிங்கவும் ஒருவர்.
தென் ஆபிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் நான்கு பந்துகளில் அடுத்தடுத்து மாலிங்க நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியது உலகின் அரிய சாதனைகளில் ஒன்று..
எனினும் உலகக் கிண்ணத்தைத் தொடர்ந்துவந்த ஆஸ்திரேலியா சுற்றுலாவும்,அதன் பின் இலங்கையில் இடம் பெற்ற இங்கிலாந்துக்கெதிரான போட்டிகளும் மாலிங்கவுக்கு வாய்ப்பாக அமையவில்லை.மாலிங்க முழங்கால் உபாதை காரணமாகப் பாதிக்கப் பட்டிருந்தார். இலங்கையின் மிக வேகமான பந்து வீச்சாளராகப் பெயர் பெற்றிருந்த மாலிங்கவின் வேகமும் குறைந்திருந்தது.
அதன் பின் இதோ வருகிறார் ; இப்போ வருகிறார்; நாளை வருகிறார் என்று பேச்சிருக்கும் .. ஆனால் மாலிங்க எட்டு மாதங்களாக விளையாடவே இல்லை.. விளம்பரங்களில் (தொலைகாட்சி,பத்திரிக்கை,வீதியோர விளம்பரப் பலகைகளில்) மட்டுமே மாலிங்கவைக் காணக் கூடியதாக உள்ளது.
ஏப்ரல் மாதம் அணித்தேரிவில் மாலிங்கவின் பெயர் அடிபட்டாலும்,வைத்தியர்கள் மேலும் இரண்டு வார காலம் ஓய்வில் இருக்கவேண்டும் என்று தெரிவித்தனர்.
அப்போது தான் இலங்கை கிரிக்கெட் தேர்வாளர்கள் அல்லது இலங்கை கிரிக்கெட் சபையின் இடைக்காலத் தலைவர் அர்ஜுன ரணதுங்க மாலிங்கவின் தலைமுடியை குறைக்குமாறு கேட்டதாகவும் அதற்கு மாலிங்க மாட்டேன் என்று சொல்லிவிட அதன் காரணமாக ஒழுக்காற்று நடவடிக்கையால் அவரை அணியில் சேர்க்கவில்லை என்றும் ஒரு வதந்தி கிளம்பியது.
பின்னர் இன்னுமொரு வதந்தி.. ஆஸ்திரேலியா சென்ற வேளையில் மாலிங்க குடித்துக் கும்மாளமிட்டார் என்றும் இரவு விடுதி அட்டகாசங்களில் ஈடுபட்டார் என்றும் இதனாலேயே அணியில் அவருக்கு இடம் வழங்கப்படவில்லை என்றும்..
அதன் பின்னர்,நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட பங்களாதேஷ் சுற்றுலாவுக்கான இலங்கைக் குழுவிலும் மாலிங்க அறிவிக்கப்படாததை அடுத்து எனக்குள்ளும் ஒரு கேள்வி..உண்மையிலேயே காயமா அல்லது வதந்திகள் உண்மை தானா என்று..
இலங்கை கிரிக்கெட்டில் எனக்குத் தெரிந்த நண்பர்கள் மூலமாக விசாரித்தபோது சில விஷயங்கள் தெரிய வந்தது.
மாலிங்கவுக்கு முழங்கால் உபாதை இன்னமும் பூரணமாகக் குணமடையவில்லை..
இன்னும் ஒரு சில வாரங்களில் அவர் உள்ளூர் போட்டிகளில் விளையாட ஆரம்பித்துவிடுவார்.
பெப்ரவரி மாதமளவில் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு உள்ளது.
இதற்கிடையில் கடந்த வாரம் மாலிங்க இந்த வருடத்திலும் இலங்கையின் ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். ஆறு மாதங்களுக்கு மேல் விளையாடாமல் இருக்கும் ஒருவர் ஒப்பந்தம் பெறுவது இதுவே முதல் தடவை..
எனவு ரசிகர்களே காத்திருங்கள் லசித் மாலிங்க என்ற சிங்கம் விரைவில் மீண்டும் சிலிர்த்தெழுந்து வரும்..
துடுப்பாட்ட வீரர்களே மீண்டும் உங்கள் கால்களையும்,உங்கள் தலைகளையும் மாலிங்கவின் பந்துகள் பதம் பார்க்கும்..
காத்திருப்போம் அதுவரை..