அசினுக்கும் எனக்குமான தொடர்பு ஏற்பட்டது 2005ஆம் ஆண்டில்!
(ஆரம்ப வசனமே அதிர்வைத் தரவேண்டுமென extra build up கொடுக்கப்பட்டுள்ளதைத் தயவுசெய்து கூர்ந்து நோக்குக.)
உண்மையில் எம் குமரன் சன் ஒப் மகாலக்ஷ்மி படத்தின் பாடல் cd பார்க்கும் வரை அசின் என்ற அழகான பெண்ணை நான் பார்த்ததே கிடையாது! பெயரையும் கேள்விப்படவில்லை.
எம் குமரன் சன் ஒப் மகாலக்ஷ்மி திரைப்பட முன்னோடிக் காட்சி பார்க்கும் போது தான் அடடா – இதுதான் அசினா? என்று அசந்துபோனேன்.
அழகு,அம்சம்,துடிப்பு என்று இன்னும் பல கவருகின்ற விடயங்கள் நிறையவே!
எத்தனையோ திரைப்பட ஹீரோயின்களை ரசித்திருந்தாலும் முதல் படத்திலேயே மனதுக்குள் தனக்கென்று தனியான இடத்தைப் பிடித்துக் கொண்டவர் அசின் மட்டுமே! (ஜோதிகா கூட எனக்கு விதிவிலக்குதான்)
அசின் எனக்கு உடனே பிடித்துப்போக இன்னுமொரு காரணம் அழகாக இருந்தாலும் துளியளவு ஆபாசமில்லை! கவர்ச்சி கூட கண்ணைக் குத்தாத - கண்ட இடம் காட்டாத நாகரிக காட்சிப்படுத்தல்.
இந்தப் படங்களைப் பார்த்தால் என் கூற்றுக்கு நியாயம் கிட்டும்!
இந்தப் படத்தின் பின் என்போலவே எனது நண்பர்கள் பலரும் ஒரே படத்தில் அசின் ரசிகர்கள் ஆனோம்!
செல்லடப்பேசி,கணிகள் எங்கும் வோல்பேப்பர், desktop என்று எங்கெங்கு காணினும் அசின் மயம்தான்!
எனக்கு அசின் ஸ்பெஷலாகிப் போக இன்னுமொரு காரணம் என் அம்மா பிறந்த அதே ஒக்டோபர் 26தான் அசினும் பிறந்தநாள்!
எந்தவிதக் கிசுகிசுவும் (அண்மைக்காலம் வரை) அசின் பற்றி வராததால் அசின் ரசிகர்கள் நாம் அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை! (இதை மனோவியலாளர்கள் over possesiveness என்று சொல்வார்களோ?)
படிப்படியாக அசின் பிரபல முன்னணி ஹிரோக்களோடு ஜோடிபோட்டு பரபரப்பாக பரபரப்பாக சந்தோஷம்தான்!
இதற்கிடையில் முன்பு நான் பணிபுரிந்த சூரியனில் முக்கிய பண்டிகை நாட்களில் ரசிகர்களுக்கு வாழ்த்துச் சொல்ல அசினின் மொபைல் இலக்கம் தேடி எடுத்து அவரோடு பேசி ஒலிப்பதிவு செய்தது எதோ ஜென்ம சாபல்யம் மாதிரி!
அந்த ஒரு தொடர்பு மூலம் அவரது தந்தை ஜோசப்பும் நட்பாகிப் போக அளவோடு எப்போதாவது sms மூலம் விசாரிப்பது வழக்கமானது!(அசினுடனும் தான்..)
நான் எப்போதுமே (கமல் தவிர) அதீதமான சினிமா வெறியன் இல்லையாதலால் அசினுக்கு ஆலயம் எழுப்புமளவுக்கு போகவில்லை!
அசினுக்காகவே அதிகளவில் பார்த்து ரசித்த படம் என்றால் கஜினி! இந்த கல்பனா அப்படியே மனதில் ஒட்டிக்கொண்டாள்!
உண்மையில் மலபாருக்குப் பிறகு மனசிலே மறக்கமுடியாதளவு ஒட்டிக் கொண்டவள் கல்பனாதான்!
பாருங்கடா... இடுப்புக்காட்டாமல் தொடை காட்டாமல் தொப்புள் காட்டாமல் ஒரு கதாநாயகி நம்பர் வன் ஆகிட்டாள் என்ற நானும் எனது சக அசின் ரசிகர்களும் பூரித்துப் போவதுண்டு.
அசின் ஹிந்திக்குப் போகிறார் - கஜினி மூலம் என்றவுடனேயே நாம் எல்லோரும் ஆர்ப்பாட்டம் செய்யலாமா என்னுமளவுக்கு அப்செட் ஆகப் போனோம்! (வாழுவதே பிரச்சினையாகிப் போன இந்தப் பூமியில இருந்து இப்படி ஒரு புலம்பலா என்று புழு மாதிரிப் பார்க்காதீங்க – ரணகளத்திலயும் வாழ்க்கையை இப்படியும் ரசிப்பவர்கள் நாங்கள்! )
வைஜயந்திமாலா ஸ்ரீதேவி வரிசையில் அசினையும் ஹிந்தியுலகம் சொந்தமாக்கினால் எங்கள் தமிழுலகம் வறண்டு வாடிவிடுமே என்று ரொம்பவே கவலைப்பட்டோம்! எங்கள் தலைவி எங்கு போனாலும் நம்பர் வன் என்று தெரிந்தாலும் தமிழ்ப்பக்கம் இனித் திரும்பியும் பார்க்க மாட்டார் என்ற எண்ணம் கவலையளித்தது.
எங்கு போனாலும் தங்கத்தமிழை மறக்கமாட்டேன் என்ற அசினின் உறுதிமொழி பால்வார்த்தது.
பொலிவூட் பக்கமிருந்து கஜினி பற்றி பரபரப்பு என்று கூறும்போது கொஞ்சம் பெருமையாகவும் இருக்கும்!
தசாவதாரத்தில் தலைவி நம்ம தலைவரோட ஜோடிபோட்டது ஆத்ம திருப்தி! மிகவும் எதிர்பார்த்த ஜோடி அசத்தியது – அசினின் நடிப்பும் பலர் பாராட்டும்படி இருந்தத மனமகிழ்ச்சி தந்தது.
ஹிந்தி கஜினி பாடல்களும் வர உற்சாகம். அசினின் முதல் ஹிந்தி படம் வரமுதலே அடுத்த படமும் ஒப்பந்தமாகின. இனி பொலிவூடில் அசின் ராஜ்யம் என்ற பேச்சும் வர – ஆகா
ஆடை அவிழ்க்கும் ஹிந்தியிலேயே ஆபாசமில்லாத புரட்சியில் அசின் அசத்துகிறாரே என்று பெருமிதமாக இருந்தது.
அதுக்குப் பிறகு தான் கஜினி பட ஸ்டில்கள் வெளிவர ஆரம்பித்தன.
இவ்வளவு காலமும் பார்த்த அழகான குத்துவிளக்கு போல பாந்தமான அசினா இது என்று ஆச்சரியப்படும் அளவுக்கு கொஞ்சம் கவர்ச்சி தூக்கலான அசின்!
அடப்பாவி நல்லாத் தானே இருந்தாய்? நீயுமா?
இதற்கிடையில் பிரபல பிரித்தானிய ஆங்கிலப் பத்திரிகை நடத்திய கருத்தக் கணிப்பில் ஆசியாவின் கவர்ச்சியான பெண்களில் அசினுக்கு 22ஆம் இடம் கிடைத்தள்ளதாம். இவ்வளவு நாளும் காந்தக கண்களாலும் அழகான உதடுகளாலும் கடைவிரிக்காத அழகான ஓரே ஹிந்திப்படத்தோடு ஏமாற்றிவிட்டாயே...
(குடும்பக்குத்து விளக்காக புன்னகை இளவரசியாக வலம் வந்த சினேகா - இப்போ குத்தாட்ட ராணியாக மாறியதை ஒப்பிடாதீர்கள் இங்கே – அவ ரேஞ்சே வேற!)
மும்பையில் சஞ்சிகையில் அசின் அட்டைப் படம் தாங்கி வந்த இதழை வெளியிட வந்த அசின்..
இனி தமிழுக்கு மீண்டும் வந்தாலும் பழைய எம் உள்ளங் கவர்ந்த அந்தத் துறு துறு பாந்தமான அசினைப் பார்க்கலாமா?
அல்லது ஹிந்தியுலகம் எங்கள் மலபாரை மல்லிகா ஷேராவத் ஆக்கிவிடுமா?