நான் ஹீரோ- வறுவல்கள்-கிளம்பீட்டான்யா

ARV Loshan
18
நான் ஏற்கெனவே காலையில் எழுதியிருந்ததைப் போல இன்று நானே வறுவல்களின் நாயகன் ஆன சம்பவங்கள் பற்றி எழுதுகிறேன்..
என்னோடு கௌரவ வேடங்களில் பிரபல இந்திய நட்சத்திரங்கள்.. 

#############

மெமரி பவர் 

99ஆம் ஆண்டு.. நான் ஷக்திFM இல் தொழில் புரிந்துகொண்டிருந்தேன்.. ஒரு மாபெரும் இசை நிகழ்ச்சிக்காக இசை அமைப்பாளர் தேவாவின் முழுமையான குழுவும் வந்திருந்தது. இவர்களோடு பாடகி சுஜாதா,பாடகர் கிருஷ்ணராஜ்,பாடகர் திப்பு (அப்போது அவர் மின்னலே,விரும்புகிறேன் படங்களில் மட்டுமே பாடியிருந்தார்) ஆகியோரும் வந்திருந்தனர்.

தேவா,கிருஷ்ணராஜ்,சுஜாதா ஆகியோரை நான் கலையகத்தில் நேரடியாக பேட்டி கண்டுகொண்டிருந்தேன்..
ரொம்ப சுவாரஸ்யமாக பேட்டி போய்க் கொண்டிருந்தது..
தேவா ஒரு இயல்பான மனிதர்.. எந்தக் கேள்வி கேட்டாலும் சளைக்காமல் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்..

அவர் பல பாடல்களை காப்பி அடிப்பது பற்றிக் கேட்டபோது கூட சளைக்காமல் "எல்லாக் கடைகளிலுமே தோசை தான் போடுகிறார்கள்.. ஆனால் எல்லாக் கடைத் தோசையும் ஒரு மாதிரி இல்லையே" என்று ஒரு போடு போட்டார். 

அவருடைய பல பாடல்களையும்,திரைப்படங்களையும் ஞாபகப் படுத்திய நேரம்,என்னுடைய தேடலையும்,தமிழ் உச்சரிப்பையும் தேவா மட்டுமல்லாது, கூட இருந்த கிருஷ்ணராஜ்,சுஜாதா இருவருமே மெச்சிப் பாராட்டினர்.

உச்சி குளிர்ந்து போனாலும், தொடர்ந்து கேள்விகளைத் தொடுத்துக் கொண்டிருந்தேன்..

அந்த நேரத்தில் என் உயிர் நீ தானே திரைப்படத்தில் இடம் பெற்ற தேவாவின் இசையில் கிருஷ்ணராஜ்,சுஜாதா பாடிய "ஜனவரி நிலவே நலம் தானா?" என்ற பாடல் எனக்கு மிகவும் மனம் கவர்ந்த பாடலாக இருந்தது;நேயர்கள் மத்தியிலும் அந்தப் பாடல் ரொம்பவே பிரபல்யம்..
அந்தப் பாடலுக்கு இசையமைத்தவர், பாடியோர் இருவர் என்று மூவருமே இருந்த காரணத்தால் பாட சொல்லி கேட்டேன்.. வரிகள் தெரியாதென்று சொல்ல, நானே எனக்கு மிகப் பிடித்த பாடலேன்ற காரணத்தால் ஞாபகித்து எல்லா வரிகளையும் எழுதிக் கொடுக்க, என்னைப் பாராட்டியபடியே நான் ரசிக்க,ரசிக்க பாடினார்கள்..

அந்த பாராட்டின் போதையிலே அதே போன்றதொரு பாடலைத் தேடிப் பிடித்து பாடச் சொல்லலாமென ஐடியா வந்தது.

அப்போது பிரபலமாகவிருந்த "எந்தனுயிரே..எந்தனுயிரே" என்ற உன்னருகே நானிருந்தால் திரைப்படப் பாடலை ஞாபகப் படுத்தி பாடச் சொன்னேன்.

"ஆகா.. உங்க மெமரி பவரே பவர்" என்று தேவாவும், க்ரிஷ்ணராசும் பாராட்டினார்கள். சுஜாதாவோ தனக்கு அந்தப் பாடல் வரிகள் ஞாபகம் இல்லை என்றார். மறுபடி ஐயா ஹெல்ப் பண்ணினார். 

பாடினார்கள்.. பேட்டியும் முடிந்தது..

ரொம்ப நட்போடு மறுபடி மாலையில் அடுத்த நாள் நிகழ்ச்சி ஒத்திகையில் சந்திக்கலாம் என்று விடை பெற்றுப் போனார்கள்..

அன்று பகல் அடுத்த நாள் இடம்பெறவிருந்த மாபெரும் மேடை நிகழ்ச்சிக்கான தொகுப்புக்காக தயார்படுத்திக் கொள்ள இசைத் தட்டுக்கள் வைக்கப்பட்டிருக்கும் களஞ்சிய அறைக்குள் சென்றபோது, தற்செயலாக உன்னருகே நானிருந்தால் பட இசைத்தட்டு கண்ணில் பட்டது..

அதில் எந்தனுயிரே பாடல் பாடியவர்கள் என்று அச்சிடப்பட்டிருந்த பெயர்கள்.. கிருஷ்ணராஜ்,சித்ரா.. 

####################

கிளம்பீட்டான்யா...

2006ஆம் ஆண்டு சூரியன் FMஇல் நான்.  அப்போது நான் முகாமையாளர்.ஒரு மேடை நிகழ்ச்சிக்காக நகைச்சுவை நடிகர் (விஜயகாந்துக்கு மட்டும் இவர் வில்லன்) வடிவேலு வந்திருந்தார்..

இரவு நேரம் எங்கள் பிரபலமான மாலை நிகழ்ச்சியில் இவரை நான் பேட்டி காண்பதாக ஏற்பாடு..கொஞ்சம் தாமதமாகத் தான் வந்தார்.. வரும் போதே பேட்டி களை கட்டும் என்பது அவர் கண்களிலே தெரிந்தது.. 

கண்களைக் குருடாக்கும் பிரகாசமான செம்மஞ்சள் சட்டையுடன் (இதுமாதிரியான நிறத்தில் ஆடைகளை அண்ணன் ராமராஜனும்,வடிவேலுவும் மட்டுமே அணிவார்கள்) வந்தார் வடிவேலு..

அவரது வழமையான கலகலப்புடன் பேட்டி களை கட்டியது.. தொலைபேசியில் நேயர்களும் வந்து வடிவேலுவிடம் கேள்விகள் கேட்டார்கள். தனது பிரபலமான திரைப்பட வசனங்களை வடிவேலு தனக்கே உரிய பாணியில் பேசி,நடித்து கலக்கினார். 

எனது கேள்விகளை ரொம்ப அவதானித்து சுவாரஸ்யமாகப் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்..ஒரு கொஞ்ச நேரத்தில் குரல் தழு தழுத்து, ரொம்பவே உணர்ச்சி வசப்பட்டவராக அவருக்கே உரிய மதுரைத் தமிழில் "உன் தமிழுக்கு நான் அடிமைய்யா..ரொம்ப அருமையா தமிழ் பேசுறே.. "அப்பிடி இப்பிடின்னு ஒரு பாராட்டு விழாவே நடத்தீட்டார்.

எனக்குப் பெரிய பெருமை தான்.. உற்சாகம் ரொம்பவே கூடிப் போச்சு..

வடிவேலுவின் சில வசனங்களை நானும் சொல்லிக் காட்டினேன்.. அவரும் ரசித்தார்..

சற்று நேரத்தில் தொலைபேசி வழியாக ஒரு பெண் நேயர்..

"வடிவேலு அண்ணனிடம் ஒரு கேள்வி" என்று கேட்டார்..

"என்னம்மா கேக்கப் போறே" - வடிவேலு.

"உங்க பிரபலமான வசனம் ஒன்று சொல்லுங்களேன்" அந்த நேயர்.

"என்ன வசனம்மா?" - வடிவேலு..

"கிளம்பீட்டான்  எண்டு சொல்லுவீங்களே ..அது " என்றார் அந்தப் பெண்..

அது என்ன வசனம் என்ற மாதிரி ,குழப்பமாய் என்னைப் பார்த்தார் வடிவேலு..அவருக்கு உதவி செய்யும் நோக்கில், கிட்டத் தட்ட அவரது ஸ்டைலில் "கிளம்பீட்டான்யா கிளம்பீடான்யா" என்று நான் சொன்னது தான் தாமதம்,தொலைபேசி அழைப்பிலிருந்த அந்தப் பெண்"நன்றி வடிவேலு அண்ணா.. அப்படியே படத்துல சொன்னது மாதிரியே இருந்துது" என்று அழைப்பை வைத்து விட்டார்..

வடிவேலு என்னைப் பார்த்த பார்வை இருக்கே,கிட்டத் தட்ட இப்ப விஜயகாந்தை அவர் பார்க்கிற மாதிரி.. 

நல்ல காலம் அவர் கவுண்டமணி இல்லை.. ;)


 

Post a Comment

18Comments

Please Select Embedded Mode To show the Comment System.*