சச்சின் - முதல் தடவை ஒரு உண்மை டெஸ்ட் சம்பியனாக

ARV Loshan
15
நேற்று இந்தப்பதிவு எழுதுவதாக இருந்தாலும், நேற்றைய என் நூறாவது பதிவு அதிக நேரத்தை எடுத்ததாலும், இன்னும் சில விஷயங்களை இன்று சேர்த்ததாலும் இன்றே முழுமை பெறுகிறது.. 

நான் ஒரு வெறித்தனமான இந்திய கிரிக்கெட் ரசிகனோ,சச்சின் டெண்டுல்கர் பக்தனோ, இல்லையெனில்,சேவாக் ரசிகன் கூட அல்ல.. இதையெல்லாம் விட எனக்கு ஏனோ இந்திய அணியின் தலைவர் தோணியைக் கண்ணில் காட்டாது. ஆனால் அவரவரின் சாதனைகள்,பெறுபேறுகள்,திறமைகளை மதிக்க வேண்டும் என்பதில் எந்தவித முரண்பாடும் இல்லை. 

சில நண்பர்களை சீண்டுவதற்காக இந்த வீரர்களை அவர்கள் முன்னால் தாக்கி,கேலி பேசினாலும் கூட மரியாதை எப்போதும் மனசுக்குள் இருக்கும்.

ஆனாலும் சில இந்திய அணியின் வெறித்தனமான இரசிகர்கள் செய்யும் அளப்பறைத் தனமான (ஓவரான) ஆர்ப்பாட்டங்கள் காரணமாக இந்திய அணி பல போட்டிகளில் வெல்வதை விட தோற்கவேண்டும் என்றே நான் அதிகமாக நினைப்பதுண்டு.. ;)

ஆனாலும் இந்திய அணி வெல்லும் பொது ரசிகர்கள் காட்டுகிற மகிழ்ச்சி ஆரவாரம் எவ்வளவு அதிகமோ,அதைவிட இந்திய அணி பரிதாபமாக தோற்கும் பொது அந்த ரசிகர்கள் (அப்பாவி ரசிகர்கள்) படும் துன்பமும்,துயரமும் மிக அதிக மடங்கு என்பதால் சும்மாவே இளகிய மனதுடைய என்னை (அப்படியா என்று யாரது நக்கலாய் கேட்பது?) உருக்கிவிடும்.. 


வாழ்க்கையில் எப்போதுமே ஏமாற்றங்களையே கண்டு கொண்டிருக்கும் சாமான்ய இந்தியர்கள் கிரிக்கெட்,சினிமா இரண்டின் மூலமாகத் தானே கொஞ்சமாவது வெற்றியை சுவைக்கிறார்கள்.. அதிலும் தோல்வி என்றால் உடைந்து போய்விடுவார்களே என்று உண்மையிலேயே இரக்கப் பட்டுக் கவலைப்பட்டுப் போயும் உள்ளேன்..

அதிலும் அண்மைக்காலத்தில் இந்திய மக்கள் மனதில் ஏற்பட்ட மாற்றம்.. (அரசியல் மாற்றம் எதிர்பார்க்கவே முடியாது..) எங்கள் உறவுகளுக்காக கண்ணீர் விடுமளவுக்கு இந்தியாவே இரங்கிய போது, இனிமேலும் முடிந்தளவு இந்திய மக்கள் துயரப்படும் எந்த நிகழ்வும் நடக்கவே கூடாது என்று எண்ணிக் கொண்டேன்.. (கிரிக்கெட்டும் சேர்த்து)

ஆனால் நேற்றைய வெற்றி மும்பை கொடூரங்களால் கலங்கி இருந்த மக்களுக்கு ஒரு மும்பை மைந்தனால் பரிசளிக்கப்பட்ட ஆறுதல் கொடை என்றே சொல்லாம்..
ஸ்ட்ராஸ் இரண்டு சதங்களை ஒரே போட்டியில் பெற்றும் தோல்வியுற்ற அணியில் இடம்பெற்றது அவரது துரதிர்ஷ்டம் தான்.. 
தோனியின் அதிர்ஷ்ட தேவதை தான் இந்தியாவின் மீது நின்று நடனம் ஆடுகிறாள் போல.. மனுஷன் எது தொட்டாலும் துலங்குது..

இந்த சென்னை போட்டி ஆரம்பமாவதற்கு முதலே நான் ஒரு சில விஷயங்கள் பற்றி யோசித்தேன். கங்குலியும் ஓய்வு பெற்றுள்ள நிலையில் இந்திய அணியின் புதிய மாற்றத்துக்கான காலம் ஆரம்பமாகிறது.. transition period. லக்ஷ்மன் தொடர்ந்து சிறப்பாக ஆடிவரும் நிலையில் சச்சின் அல்லது டிராவிட் இந்தப் போட்டியில் சொதப்பினால் அவர்கள் கதி அவ்வளவு தான் என்று நினைத்தேன்..  (ஆனால் சச்சின் போன்ற ஒரு கிரிக்கெட் தெய்வத்தை விலக்குவது அவ்வளவு எளிதா??)

எதிர்பார்த்து போலவே டிராவிட் சொதப்பி,தனது கிரிக்கெட் வாழ்க்கையின்  முடிவை எழுதிவிட்டார் போல தெரிகிறது..
இந்தியாவின் பெரும் சுவராக இருந்த இவர் இப்போ குட்டி சுவராக சிதிலமாகி நிற்பது ரொம்பவே பரிதாபம்.
கங்குலியின் இடத்தை துண்டுவிரித்து தனக்கானது என்று பதிவு செய்து விட்டார் யுவராஜ். (நம்ம அன்புக்குரிய பத்ரிநாத் டிராவிடின் இடத்தை இனிக் குறிவைக்க வேண்டியது தான்)

ஆனால் முதல் மூன்று நாள் விளையாட்டு போன விதத்தில் இங்கிலாந்து இந்திய மண்ணில் வைத்து இந்தியாவுக்கு ஒரு அதிர்ச்சி கொடுக்கும் போலத் தான் தெரிந்தது.. ஆஸ்திரேலியாவுக்கே ஆப்பு வைத்த இந்தியாவுக்கா இப்படி?
யோசித்துக் கொண்டிருக்கும் போதே, 387 என்ற மாபெரும் இலக்கை நோக்கி சற்றும் பயமில்லாமல் இந்தியா வேகமாகவும்,துணிச்சலோடும் துரத்த ஆரம்பித்தது.. 

சேவாகின் அந்த அதிரடியை ஆரம்பத்தில் பார்த்தபோது நானும் யோசித்தேன்.. "நம்ம இலங்கை,இந்திய அணிக்காரங்களுக்கு டெஸ்ட் எப்படி விளையாடுவது என்றே தெரியாது.. இப்ப வேகமா அடிக்கிறாங்க.. கொஞ்ச நேரத்தில ஒவ்வொரு விக்கெட்டா போகும் போது சுருளப்போறாங்க.. இங்கிலாந்து அணிக்கு இலகுவான வெற்றியை குடுக்கப் போறாங்க "

ஒரு கொஞ்ச நேரத்தில் ஸ்கோர் எங்கேயோ எகிறிவிட்டது.. அப்பவும் எனக்கு நம்பிக்கை வரவில்லை.. 
சேவாக் ஆட்டமிழந்தவுடன் இது வழமையான ஆட்டம் தான் என்று நினைத்துக் கொண்டேன்.. 
அடுத்த நாளே டிராவிட் ஆட்டமிழப்பார் என்று பட்சி சொன்னது.. அப்படியே நடக்க, வழக்கமான கடைசி நாள் போட்டியில் சச்சின் உட்பட இந்தியாவின் எல்லா தூண்களும் காலை வாருவது போலவே நடக்கும் என்று நினைத்தேன்.. 

சென்னையில் பாகிஸ்தானுக்கெதிரான ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டி மறக்குமா?

ஆனால் நேற்றுத் தான் சச்சின் தன்னை யாரென்று மறுபடி நிரூபித்துக் காட்டினார். (சச்சினும் தன்னை யாரென்று உலகுக்கு காட்ட வேண்டிய காலம் இது)

சச்சின்,யுவராஜின் ஓட்ட இணைப்பாட்டத்தின் ஒவ்வொரு பந்தும், ஒவ்வொரு ஓட்டமும் தன்னம்பிக்கையின் அடையாளங்கள்.. எகிறிக் குதிக்கும் பந்துகளை லாவகமாக எதிர்கொண்டு தங்கள் கட்டுப்பாட்டில் போட்டியைக் கொண்டுபோன அழகே அழகு..பார்த்துக் கொண்டிருந்த எங்களுக்கே டெஸ்ட் வரலாற்றின் நான்காவது கூடிய இலக்கை இந்தியா துரத்தும் எண்ணம் இருக்கவில்லை.. அவளவு கூல்..

நிதானம் தப்பாமல் இவர்கள் இருவரும் கொண்டு சென்றவிதம் போட்டியை எந்தவித சவாலும் இல்லாமல் செய்துவிட்டது.. விறுவிறுப்பான போட்டியைப் பார்க்கலாம் என்று பார்த்தால் சச்சினும்,யுவராஜும் இலகுவாக இந்தியாவுக்கு போட்டியை வென்று கொடுத்துவிட்டார்கள்..

உண்மையில் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டு வெற்றிகளுக்கு மகுடம் வைத்த ஒரு நேர்த்தியான வெற்றி இது.. 

உண்மையான ஒரு சாம்பியனை சச்சின் வடிவில் முதல் தடவையாக ஒரு டெஸ்ட் போட்டியில் நான் பார்த்து நேற்றுத் தான் என்று சொல்வேன்.. 

அதுபோல யுவராஜையும் ஒரு பக்குவப்பட்ட டெஸ்ட் வீரராக நேற்றுத் தான் பார்க்க முடிந்தது.

இனி டிராவிட் வெளியே அனுப்பப்பட்டு பத்ரிநாத் உள்ளே வர இந்திய அணி அடுத்த கட்டத்துக்குத் தயாராகிவிடும்..

நேற்று சச்சினின் இனிங்சில் சில சிறப்புக்கள்..

நான்காவது இன்னிங்சில் சச்சின் டெண்டுல்கர்  பெற்ற மூன்றாவது சதம் இதுவே தான்.. சச்சினை விட அ திகமாக நான்காவது இன்னிங்க்ஸ் சதம் பெற்றவர்கள் கவாஸ்கரும்,பொண்டிங்கும் மட்டுமே.. (இருவரும் தலா நான்கு சதங்கள்)

சென்னை மைதானத்தில் கவாஸ்கருக்கு அடுத்தபடியாக கூடுதலான ஓட்டங்களை சச்சின் பெற்றுள்ளார்.. கவாஸ்கர் - 1018 சச்சின் -.876 எனினும் காவஸ்கர் பெற்ற சதங்கள் 3.சச்சினோ 5.

நேற்று சச்சின் பெற்ற வது சத்தத்தோடு இந்த வருடத்தில் ஆயிரம் ஓட்டங்கள் கடந்தஆறாவது வீரர் ஆகியுள்ளார்.(சச்சின் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு வருடத்தில் ஆயிரம் ஓட்டங்களைக் கடந்த ஐந்தாவது சந்தர்ப்பம் இது)

ஏனைய ஐந்து பேர்,
சேவாக்,கிரேம் ஸ்மித்,லக்ஸ்மன்,ஹாஷிம் அம்லா,நீல் மக்கென்சி.. எல்லோரும் தென் ஆபிரிக்க்கரும் ,இந்தியருமே..

எல்லாம் பார்த்த பிறகு, நேற்று இரவு நியோ டிவியில் ஆகா ஓகோ என்று சச்சினையும் இந்திய அணியையும் வானளாவப் புகழ்ந்து கொண்டிருந்தார்கள்.. 


அப்போது மனதில் தோன்றிய ஒரு கேள்வி.. 

இப்ப யாரவது கேளுங்களேன்.. சச்சின் டெண்டுல்கர் எப்போது ஓய்வு பெறப்போகிறீர்கள்?

இதையே தலைப்பைப் போடலாம்னு யோசித்தால் இன்று காலையிலே நண்பர் முத்துக்குமார் என்பவர் இதே தலைப்பில் பதிவொன்று இட்டிருக்கிறார்.. 
அதிலே அவரும், இன்னும் பின்னூட்ட நண்பர்களும் சச்சின் பற்றிப் பல கதை பேசி விட்டார்கள்.. எனவே தான் நான் தந்திருக்கிறேன்.. "சச்சின் - முதல் தடவை ஒரு உண்மை டெஸ்ட் சம்பியனாக "
    

     

Post a Comment

15Comments

Please Select Embedded Mode To show the Comment System.*