சனிக்கிழமை.. இன்று தான் நான் ஓரளவு நிம்மதியா வீட்டில் இருந்து மதியச் சாப்பாட்டை ருசி பார்த்து சுடச் சுட சாப்பிடுகிற நாள்.. ஞாயிற்றுக் கிழமைகளில் கூட என்னால் அது முடியாது..சரி நிம்மதியாக சாப்பிடும் நாளில் சாப்பாட்டு ஜோக்ஸ் இரண்டை அவிழ்த்து விடலாமே என்று யோசித்தேன்.. (வழமையாகவே ஒவ்வொரு நாளும் காலையில் ஜோக் என்று அறுவைகளை அவிழ்த்து விடுபவன் இங்கேயும் தொடங்கிட்டாம்பா என்று சில முணுமுணுப்புக்கள் கேட்டாலும் இன்று நான் சொல்லாமல் விடுவதாய் இல்லை..)
*******
நானும், நம்ம நண்பர் கஞ்சிபாயும் (இவர் யாரென்று அறியாதோருக்கு இவர் பற்றிய விரிவான அறிமுகம் வெகுவிரைவில் பிரம்மாண்டமாகக் காத்திருக்கிறது என்பதை இப்போதே தெரிவித்துக் கொள்கிறேன்) சாப்பிடுவதற்காக ஒரு உணவகத்துக்குப் போயிருந்தோம்..
ஒரு நாளும் போயிராத உணவகம்..உணவு சொல்லி வழமையாக எல்லா உணவகங்களிலும் நடப்பது போலவே நீண்டநேரக் காத்திருப்புக்குப் பின்னர் உணவு வந்தது.. (பசியோடு காத்திருந்தால் நிமிஷமும் வருஷமாகும்- வைரமுத்து மன்னிப்பாராக) அப்படியானதொரு கருமமான உணவை இதற்கு முன் நான் சாப்பிட்டதே இல்லை..
பசியோடு இருந்ததால் முடிந்த வரை விழுங்கியும்,விழுங்காமலும் கொட்டித் தீர்த்துவிட்டு எழுந்தோம்.. சபை (அல்லது கடை) நாகரிகம் கருதி உணவின் ருசி பற்றி எதுவும் சொல்லாமலே போக வேண்டும் என்று நான் எண்ணினாலும் நம்ம நண்பர் கஞ்சி பாய் விடுவதாக இல்லை.
எதோ சொல்லப் போபவர் போலவே அவரது முகத் தோற்றம் உணர்த்திற்று. நான் கஞ்சி பாயிடம் மெல்லிய குரலில் "இனி மேலும் இங்கே நாங்கள் வரப்போவதில்லை.. பிறகேனைய்யா வீண் வம்பு? நீர் என்னைக் கூட்டிக் கொண்டு வந்த பாவத்துக்கு நானே பில்லைக் கட்டுறேன்.. சும்மா சண்டை பிடித்து சீன் ஆக்க வேண்டாம்"என்று சொல்லிப் பார்த்தேன்.. ம்கூம்.. மனிதர் கேட்பதை இல்லை..
நான் பில் கட்டும் வரை பார்த்துக் கொண்டிருந்து விட்டு, காசாளர்(அவரே தான் கடையின் முதலாளியும் கூட) கிட்டே போய் "உங்க உணவகத்தின் சமையல் மாஸ்டரைக் கொஞ்சம் பார்க்கணுமே" என்றார் நம்ம நண்பர். சரிடா இன்று எதோ நடக்கப் போகிறது என்று நானும் வருவது வரட்டும் என்று பார்த்துக் கொண்டிருந்தேன்..
ஆடி அசைந்து வந்த சமையல் மாஸ்டர் கிட்ட வரும்வரை பார்த்துக் கொண்டிருந்தார் நாம்ம கஞ்சிபாய். கடை முதலாளி,நான்,அங்கிருந்த ஒரு சிலர் (அந்த உணவகத்தின் திறத்துக்குப் பலபேரை எதிர்பார்க்க முடியுமா?) எல்லாரும் என்ன நடக்கப் போகுது,நம் நண்பர் என்ன சொல்லப் போகிறார் என்று பார்த்திட்டே இருக்கிறோம்..
கஞ்சிபாய் கிட்டப் போனார்.. சமையல் மாஸ்டரின் கைகளைப் பிடித்தார்..
"வாழ்த்துக்கள்.. நீங்கள் கொடுத்து வைத்தவர்.. உங்க சமையலின் திறத்துக்கு இவ்வளவு காலம் நீங்கள் இங்கே வேலை செய்யக் குடுத்து வச்சிருக்கணும் " என்று முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் சொல்லிட்டு நம்மை ஒரு பெருமிதத்தோடு பார்த்தார் கஞ்சிபாய்..
வாழ்க்கையில் அந்த சமையல்காரர் இப்படி ஒரு வாழ்த்து வாங்கியிருப்பாரா தெரியல..
கஞ்சி பாயும் அதுக்குப் பிறகு எங்கேயும் எந்த ஒரு சாப்பாட்டுக் கடையைப் பற்றியும் புகழ்ந்து சொல்வதில்லை.. (அடுத்த முறை பில்லை தன்னையே கட்ட சொல்லி விடுவேனோ என்றோ தெரியல்ல)
---------------------###################---------------------
ஆனால் விதி யாரை விட்டது.. இன்னொரு முறை.. இதே மாதிரி ஒரு சம்பவம்..
அதே மாதிரி ஒரு சாப்பாட்டுக் கடை.. (உணவகம் என்று சொன்னாலே அந்த சொல்லுக்குக் கேவலம்) முன்பு சாப்பிட்டதை விட மோசமான உணவு.. வாயிலே வைக்க முடியாத ருசி;மூக்கையே மரணிக்க செய்கிற மாதிரி கெட்ட நாற்றம்..
எவ்வளவு தான் பசித்தாலும் இதை சாப்பிட முடியாது என்று நானும்,கஞ்சிபாயும் தீர்மானித்து விட்டோம்..
இம்முறை கஞ்சிபாய் விட்டாலும் நான் விடுவதாய் இல்லை என்று முடிவு பண்ணி, சமையல்காரரைக் கூப்பிட்டனுப்பினேன்..
வந்தார்.. எங்கள் நாக்கை சமாதி கட்டுகிற மாதிரி உணவு சமைத்த அவரை நாக்கை பிடுங்குகிற மாதிரி ஏதாவது கேட்கலாம்னு நான் வாய் திறக்க முதல் வழமை போலவே கஞ்சிபாய் முந்திக் கொண்டார்..
சமையல்காரர் வந்தவுடன் எழும்பிய கஞ்சிபாய்,சமையல்காரரின் கைகளை அப்படியே பற்றிப்பிடித்துக் குலுக்கி "என்ன அதிசயமைய்யா.. உங்களுக்கு அப்படியே என் மனைவியின் சமையல் பக்குவம் இருக்குது"என்று சொன்னார் பாருங்கள்..
கஞ்சிபாயின் மனைவி அங்கே இருந்திருந்தால் கஞ்சிபாய்க்கு மரணம்; அல்லது திருமதி.கஞ்சிபாய் தூக்கிலே தொங்கி இருப்பார்; அல்லது அவர் பற்றித் தெரிந்திருந்தால் சமையல்காரர் நாக்கைப் பிடுங்கிக்கொண்டு இறந்து போயிருப்பார்..
---------------------------------###################-----------------------
யாரோ சொன்னார்களாம் சாப்பாடும் சம்சாரமும் தலைவிதிப்படி என்று.. ;)
(நமக்கு இரண்டுமே நல்லாத்தான் கிடைக்குதுங்கோ.. -
யாராவது போட்டுக் குடுத்து இரண்டையுமே இல்லாமப் பண்ணிடாதேங்கோ..;) )