இன்று எனது நூறாவது பதிவு..
(இது சுவாரஸ்யமில்லாத -நூலொன்றின் முன்னுரை,முகவுரை போலிருந்தால் கோபிக்க வேண்டாம்.. இந்த விஷயங்கள் இன்று சொல்லியே ஆக வேண்டும்..)
நினைத்துப் பார்க்கும் போது நேற்றுப் போல இருக்கிறது எனது முதல் பதிவு போட்ட நாள்..
காலத்தின் வேகம் அவ்வளவு துரிதம்.. நான் பதிவுலகத்துக்குள் ஒரு பதிவராக நுழைந்து, என் வலைப்பூவை ஆரம்பித்து நான்கு மாதங்கள் ஆகிறது..
அதற்குள் என்னென்னவெல்லாமோ நடந்துவிட்டது.. பல நல்லவை.. பல நடக்கவேண்டியவை.. அவற்றுள் சில பற்றி எழுதவே வேண்டும்.. ஆனால் இப்போதல்ல.. எனினும் ஒரு சில பற்றி இன்று எழுதிவைக்க விரும்புகிறேன்.
என் வலைப்பூவுக்கான வடிவமைப்பை நான் மேற்கொண்டபோதோ,பெயரிட்டபோதோ,அல்லது முதல் பதிவைப் போட்டபோதோ கூட (வணக்கம்) நான் நீண்ட கால நோக்கிலோ, அல்லது அடுத்த கட்ட நோக்கிலோ கூட எதையும் யோசிக்கவில்லை..
எவ்வளவு பேர் எத்தனை எழுதுகிறார்கள் நானும் எத்தனயோ காற்றோடு கதை பேசுகிறேன், இங்கேயும் முடிந்தவரை என்னை ஈடுபடுத்திப் பார்க்கலாமே என்று தான் ஆரம்பித்தேன்.. எனக்கான பதிவுகள், நான் சொல்ல்வருகின்ற விஷயங்கள் கரைந்து போகாமல் இருக்கத் தேவைப்பட்ட ஒரு ஊடகமாகவே இந்த என் வலைப்பூவை ஆரம்பித்தேன்.. (இது பற்றி முன்பும் ஒரு பதிவில் விபரித்துள்ளேன்)
எனது இந்தப் பதிவு என் பதிவுலகத்தில் இப்போதைக்கு நான் நன்றி சொல்லவேண்டியுள்ள சிலருக்கானது என்பதை சொல்லி வைக்க விரும்புகிறேன்..
சதம் அடிக்கும் எந்த ஒரு துடுப்பாட்ட வீரனும் தன் துடுப்புக்கும்,தொப்பிக்கும் தரும் முத்தங்கள் போலவே என்னுடைய இந்த வலைப்பதிவு சதத்தின் போதும் சில அன்புள்ளங்களுக்கு என் நன்றிப் பகிர்வுகள்..
முதலில் வலைப்பதிவு என்று ஆரம்பித்த உடனேயே நம்ம ஐடியா சிகரம் பிரதீப்பை தான் துளைத்தெடுத்தேன்.. templates,codes,gadget,etc..என்று எனக்கு புரிந்தும் புரியாமல் இருந்த சில,பல சூட்சுமங்களை அவரிடமிருந்து முடிந்தவரை அறிந்து கொண்டு, ஒரு சனிக்கிழமை நான் அவதாரம் நிகழ்ச்சி செய்ய அங்கும் இங்கும் ஓடிக்கொண்டே, நல்ல ஒரு blogger templateஐ எனக்கு தேடி எடுத்து வையும் என்று போய் விட்டேன்..
எனவே இத்தால் யாவருக்கும் சொல்வது யாதெனில் என்னுடைய வலைப்பூ பக்க அமைப்பு நேர்த்தி இல்லை என்றால் உங்கள் சாபங்கள் போகவேண்டிய இடம், வெற்றியில் தற்போது என் கீழே இசைக் கட்டுப்பாட்டாளராக இருக்கும் பிரதீப்புக்கு தான்.. (அவர் எங்க கட்டுப்படுத்துறாறு, அது பாட்டுக்கு போகுது என்று யாரும்,... மூச்.. )
எனினும் அட்சென்ஸ் தொடக்கம், வேறு என்ன டெக்கனிக்கல் சிக்கல் வந்தாலும் பிரதீப்பின் காது தான் புண்ணாகிப் போகும்.. அன்மைக்காலத்திலும் அவர் அனுபவிக்கிறார்..
இன்னுமொருவர் அவர் தொலைபேசி இலக்கம் என் கையில் இல்லாததாலும், அவர் இலங்கையில் இல்லாததாலும் தப்பித்துக் கொண்டவர்..
சுவிட்சர்லாந்தில் குளிர் குடிக்கும் பதிவாளர் சயந்தன்.. என் தம்பியின் நண்பன்.. இப்போ எனது நண்பர்.. (மூத்த பதிவர் என்பதால் இந்த மரியாதை 'ர்' ;))
எங்கள் தொடர்பு,நட்பு, குசல விசாரிப்புக்கள், அவரிடம் இருந்து நான் பெற்ற வலைப்பதிவு ஞாநோபதேசங்கள் எல்லாமே ஜீமெயில் வழி தான்..
வலைப்பதிவு சூட்சும வித்தைகளை எல்லாம் ஒரு சில நாட்களில் சொல்லித் தந்தவர். (அப்படித் தானே சயந்தா?)
இவர் இல்லை என்றால் இப்போ தமிழ்மணத்திலோ, தமிலிஷிலோ எப்படி என் பதிவை ஏற்றுவது என்பதே தெரியாமல் இருந்திருப்பேன்..
கொஞ்ச நாளாய் இவர் ஒன் லைனில் வந்தாலே எனது டெக்கனிக்கல் கேள்விகள் காத்திருக்கும்..
இப்போ தனது டிக்கி (ஹீ ஹீ) மூலமாகவும் நம்மை ஆதரித்து நிற்கும் பெருந்தகை.. (அதுக்கு இன்னும் கொஞ்சம் விளம்பரம் போட்டு மேல ஏத்துங்கப்பா)
இன்னுமொருவர் நம் அலுவலகத்தில் காரியதரிசியாகப் பணியாற்றும் அருந்ததி அக்கா.. (எனது அம்மாவுடனும் பணியாற்றியவர் என்பதால் அம்மா வடிவம் என்றும் கருதலாம்)
சூரியன் காலத்திலிருந்து என்னுடைய பல எழுத்து வேலைகள்,விளம்பர வேளைகளில் துணையாய் இருப்பவர்..தமிழ் தட்டச்சு தடுமாறி தலைவலி தந்த அந்த நாட்களில் இருந்து எனக்கு எல்லா வித டைப்பிங் வேலைகளையும் பிசியான எங்கள் அலுவலக வேலைகளுக்கு மத்தியில் முகம் சுழிக்காமல் செய்து தருவதில் அவர் ஒரு கிரேட். குறிப்பாக வலைப்பதிவு ஆரம்பித்த பிறகு எனக்கு இந்த யுனிகோட் டைப்பிங் கை வந்த கலையாக மாறிய பிறகும் கூட, இன்றும் எனது பல பதிவுகள் அக்காவின் டைப்பிங் உதவியுடன் தான் வந்தவண்ணம் இருக்கின்றன..
எப்போதாவது எதுவாவது எழுதத் தோன்றினாலும் உடனடியாகக் குறிப்பெழுதி வைத்துவிடுவேன்.. அதையெல்லாம் அழகாக தட்டச்சி அக்கா தருவார்.. யுனிகோடுக்கு மாற்றி பதிவிடுவது என் வேலை..
எனவே எனது ஒரே நாளில் இரு பதிவிடளுக்குத் துணை அருந்ததி அக்காவே தான்..
அலுவலக வேலைகளின் சீர்த்தன்மை கெடாமலும் அவரின் பங்களிப்பு உண்மையில் மிக முக்கியமானது.. இல்லாவிட்டால் பதிவாவது நானாவது..
அதுபோல தான் என்னோடு பணிபுரியும் வெற்றி நண்பர்களும்..
ஒரு முகாமையாளன் எப்போதும் முகாமை செய்ய வேண்டுபவன் தவிர வேலை செய்யக் கூடாது என்ற நியதிப்படியே நானும்.. (இது எப்பிடீங்கன்னா இருக்கு?)
மற்ற எல்லாரும் ஒழுங்காக வேலை செய்யும் போது நான் வேலை செய்யவேண்டிய தேவை இல்லை தானே? எப்போதாவது ஐடியாக்கள்,சின்ன சின்ன கமெண்ட்கள் சொன்னால் போதும்..வெற்றி வெற்றிகரமாகப் போகும்..
அறிஞர் அண்ணா வெட்டி வா என்றால் கட்டி வரும் தம்பிகள் என்று சொன்னது போலவே எனது அணியினரும்..
சோ என் பதிவுலகப் பாதை சிக்கலாக அமையா வண்ணம் சேவையாற்றும் அந்த நண்பர்களுக்கும் நன்றிகள்..
இன்னுமொரு முக்கியமானவர் நம்ம உதவி முகாமையாளர் ஹிஷாம்.. அவரும் ஒரு வித்தியாசமான சக பதிவர்.. எனக்கு முதலே பதிவுப்பூ தொடங்கி, பின்னர் எனக்குப் பிறகு பதிய ஆரம்பித்தவர்..;)
இவருக்கும் எனக்கும் ஒரு ஆரோக்கியமான போட்டி.. ஒருவருக்கொருவர் குறுக்கிடாமல்,ஒருவரின் பாதையில் மற்றவர் நுழையாமல் அதே நேரம் நுணுக்கங்களை இருவருமே பகிர்ந்து கொண்டு செல்லும் போட்டி ஒரு தனி சுவாரஸ்யமானது தான்..
ஹிஷாம் திடீர் புயல் போல.. என்னைப்போல எல்லாம் தொடர்ந்து பதிவுகள் தரமாட்டார்.. எப்போதாவது ஒரு பதிவு .. அது பர பர பர.. ;) அவருக்கு நான் வைத்திருக்கும் பதிவுப் பட்டப் பெயரே ஒரு மாதிரி.. ;)
இவர்களோடு ஆரம்பத்தில் பல்வேறு தள,பதிவு விஷயங்களைப் பகிர்ந்து கொண்ட வெற்றி நண்பர்கள் அருண்,சந்துரு ஆகியோரும் ஞாபகப் படுத்த வேண்டியவர்கள்..
அடுத்தவர்கள் என் குடும்ப அங்கத்தினர்.. என் தொந்தரவுகளை, எந்த நேரமும் கணினிக்கு முன்னாலும், எழுத்தோடும் இருக்கிற நேரங்களையும் பொறுத்துக் கொண்டும் இருக்கும் அந்தப் புண்ணிய ஆத்மாக்களுக்கு எத்தனை கோடி நன்றி சொன்னாலும் தகும்..
என் குழப்படிகார மகன் கூட இந்த விதத்திலே ஒரு வயதிலும் ஒரு முதிர்ச்சி காட்டுகிறான்.. ;)
வீட்டாரும் வாசிப்பதிலே ரொம்ப ஆர்வம் இருப்பதால் என்ன எழுதுகிறேன் என்பதை ரொம்பவே உன்னிப்பாக அவதானிக்கிறார்கள்..
அடிக்கடி சொல்கிற ஒரே விஷயம் பார்த்து எழுதும் படி.. ;) நானும் பார்த்து பார்த்து தான் எழுதுகிறேன்..
ஏதோ எழுத்தாலேயா எனக்கு இன்னல்கள் வந்தன?
இன்னும் மறக்காமல் என் பதிவுகளுக்கு வந்து செல்லும் நண்பர்கள் (பல பேர் எனது வானொலியின் வாயிலாக என்னோடு அன்பானவர்கள்), முகம் தெரியாத என் மேல் அக்கறை உள்ளவர்கள், என் எழுத்தை நேசிப்பவர்கள், எத்தனை எத்தனை பேர்..நான் ஆதர்ச வலைப்பதிவு எழுத்தாளர்களாக நினைத்த எத்தனை பேர் இப்போது எனது நண்பர்கள் ஆயிருக்கிறார்கள்.. ஆரம்ப காலத்தில் அவர்கள் எனக்குக் கொடுத்த ஆதரவு மறக்க முடியாதது..
பின்னூட்ட நண்பர்கள்,வாக்களிக்கும் வள்ளல்கள்,இந்த நாட்டிலெல்லாம் தமிழன் இருக்கிறானா என ஆச்சரியப்படும் வகையில் உலகின் ஒவ்வொரு மூளை முடுக்கிலிருந்தும் வந்த போகும் நண்பர்களுக்கெல்லாம் நன்றிகள்..
இவர்களோடு இதுவரை மட்டுமன்றி இன்னும்,இனியும் என் எழுத்துக்களை உலகெங்கும் கொண்டு சேர்க்கும் அத்தனை தளங்கள்,களங்களுக்கும் என் நன்றிகள்..
இதுவரை நான் இட்ட பதிவுகள் எல்லாமே தரமானவை என்று முட்டாள் தனமாக நான் எண்ணப் போவதில்லை.. இந்த நூறில் சில சிலவேளை எதிர்காலத்தில் எனக்கே சிறுபிள்ளைத் தனமான எழுத்துக்களாகத் தோன்றலாம்.. ஆனால் எல்லாமே ஏதோ ஒரு காரணத்துக்காக எழுதப்பட்டவை..
சில உண்மையில் நான் தேடி, தொகுத்து,சிரமப்பட்டு எழுதியவை.. இன்னும் சில அங்கிங்கு பொறுக்கி,அதற்கு நான் கொஞ்சம் அழகு சேர்த்து செதுக்கியவை.. இன்னும் சில வருகைகளை அதிகரிக்க வலிந்து எழுதியவை (இதை தான் மொக்கைனு சொல்லுவாங்களோ???)
என்னிடம் என்னென்ன விஷயங்கள் எதிர்பார்க்கப் படுகின்றன என்பதை விட.என்னென்ன எழுதப்பட வேண்டும் என்பதை எனது மன நிலையும், எனக்கு இருக்கும் நேரமுமே தீர்மானிக்கின்றன..
சில விஷயங்களில் கொஞ்சம் நான் நிதானமாயிருக்கின்றேன்..
ச்சே குவேரா சொன்னது போல, "நாம் என்ன ஆயுதம் தூக்க வேண்டும் என்பதை நமது எதிரியே தீர்மானிக்கிறான்" - புறச் சூழலும்,கண்ணுக்கு முன்னாள் நடக்கும் நிகழ்வுகளுமே எமது எழுத்து சூழலை தீர்மானிக்கின்றன. அது சினிமா தொடக்கம் சிரிப்புக்கான விடயம் வரை.. ஆனால் சில சூழ்நிலைகள் எம்மை சிந்தித்து சில வேகத் தடைகளையும் வைக்கின்றன..
இப்ப தானே நூறு.. இன்னும் போகப் போற தூரம் ரொம்பவே இருக்கு.. வாங்க எல்லாரும் சேர்ந்தே போகலாம்..
நல்லா எழுதும் போது தட்டி தாங்க.. இல்லேன்னா திட்டுங்க.. கோபிக்க மாட்டேன்.. ;)
(இல்லேன்னா எதுக்காக மட்டுறுத்தலை எல்லாம் நீக்கி,துணிச்சலாக யாரும்,பின்னூட்டம் போடலாம் என்று விட்டுள்ளேன்.. )
#########
எனது நூறாவது பதிவு முடிகிற நேரம், சச்சினும் அபூர்வமான நூறோடு (சச்சின் நான்காம் இன்னிங்சில் அடித்த மூன்றாவது சதம் இதுவே தானாம்.. அது போல நின்று ஆடி இந்தியாவுக்கு டெஸ்டில் வெற்றி பெற்றுக் கொடுத்து ரொம்ப நாளாச்சே.. ) இந்தியாவுக்கு அற்புதமான வெற்றியையும் படையல் ஆக்கியுள்ளார்..
இரண்டு சாதனை சதங்கள் ஒரே நாளில்..??? ;)