நேற்று நண்பர் மகேஷின் பதிவைப் பார்த்தபின் தான் (கிச்சடி 30-11-2008)இந்தப் பதிவு ஐடியா வந்தது..
தமிழராக இருக்கிற அநேகருக்கு இருக்கும் பிரச்சினை பெயர்..
surname,full name,family name என்று விண்ணப்பப் படிவங்களில் இருக்கும் குழப்பத்தினால் அடிக்கடி எங்களில் அநேகமானோருக்கு அப்பாவின் பெயரே எங்கள் பெயராகிவிடுவதுண்டு.
தமிழர் பெயர் எழுதும்போது இந்தக் குழப்பத்தை (full name,surname,family name) இல்லாமல் செய்ய எல்லோரும் ஒரு பொதுவழி நின்றால் தானுண்டு..முரளீதரனைக் கூட இன்றும் முத்தைய்யா என்று அவரது அப்பா பெயரால் அழைக்கிற சிங்கள நண்பர்கள் நிறையப்பேர் உண்டு..
எனக்கு அடிக்கடி இந்தப் பிரச்சினை வங்கி விஷயங்களிலும், credit card விஷயங்களிலும் தான் சிக்கலைத் தரும்.வீட்டுக்கே தொலைபேசி அழைப்பெடுத்து அப்பாவின் பெயரை சொல்லி இன்னமும் இந்த மாத credit card கட்டணம் கட்டவில்லை என்று இனிமையான குரலில் ஒரு பெண் முறையிடுவாள். அப்பாவி அப்பா ஒழுங்காகக் கட்டணம் கட்டி இருப்பார். (தனது credit card க்கு) ஆனால் நம்பாமல் அம்மா திட்டுவது அப்பாவுக்குத் தான்..
அதுபோலத் தான் ஒரு தடவை (ஒரே தடவை தான்) ஐரோப்பா சென்ற போதும் எல்லா இடங்களிலும் அப்பாவின் பெயர் தான் என் திரு நாமம் ஆனது. ;)
ரொம்பக் கஷ்டப்பட்டு எல்லா இடங்களிலும் ஒவ்வொரு விதமாக எனது அப்பாவின் பெயரைப் போட்டுப் படுத்தி எடுத்தார்கள்..
இன்னுமொரு விஷயம்.. பள்ளி நாட்களில் இருந்து இன்றுவரை எனது முழுப்பெயரை பிழையில்லாமல் சரியாக உச்சரித்தவர்கள் மிக,மிகக் குறைவு.(ஆங்கிலத்திலோ,தமிழிலோ)
என் பெயர் அப்படி.. அதுவும் அப்பாவின் பெயரையும் சேர்க்கும் போது தொலைந்தார்கள் என்னை அழைப்பவர்கள்..
ரகுபதிபாலஸ்ரீதரன் வாமலோசனன்.
இந்த அழகான பெயரை எல்லோரும் சிறுவயது முதலே தாங்கள் விரும்பிய மாதிரியெல்லாம் அழைத்தும்,உச்சரித்தும் பாடாய்ப்படுத்தியதாலேயே, நான் வானொலித்துறைக்கு வந்தவுடனே என்னை வீட்டில் அழைக்கப் பயன்படுத்தும் 'லோஷன்' என்பதை என் பெயராக்கிக் கொண்டேன்.. (அப்பாடா ஒரு பெரிய வரலாற்று ரகசியம் சொல்லியாச்சு..)
எங்கள் அப்பாவின் குடும்பத்தில் எல்லோருக்குமே இப்படி நீளமான,மிக நீளமான பெயர்கள் தான்..
அப்பாவின் அப்பா ஒரு தமிழ்ப் பண்டிதர்.அந்தக் காலத்திலேயே சென்னை போய் சமஸ்கிருதத்திலும் பாண்டித்தியம் பெற்றவர்.எனவே தனது பிள்ளைகளின் பெயர் விடயத்திலும் தன் புலமையைக் காட்டி விட்டார்.
பெயர்களைப் பாருங்கள்..
சபாபதி பால கங்காதரன்
இரகுபதி பால ஸ்ரீதரன்
பூபதி பால வடிவேர்கரன்
அமர சேனாபதி பால கார்த்திகைக் குமரன் (எப்படித் தான் சின்ன வயதில் தன் பெயரை இவர் எழுதினாரோ??)
ஸ்ரீபதி பால முரளீதரன்
இவர்களில் என் அப்பா தவிர ஏனைய எல்லோரும் வெளிநாடுகளில்.பாஸ்போர்டில் இந்த ஒரு கிலோ மீட்டர் பெயர்கள் கொள்ளாது என்ற காரணத்தால் குட்டிப் பெயர்களோடும் ,அதற்கு முன் ஏராளமான இனிஷல்களோடும் வாழ்கின்றனர்.
பாடசாலை நாட்களில் பரீட்சைத் தாளில் இவர்கள் பெயர்கள் எழுதிமுடிக்க முதல் பரீட்சை முடிந்து விடுமோ தெரியாது.
ஆண்பிள்ளைகள் தான் இவ்வாறேன்று இல்லை.. எனது மாமிமார் இருவரதும் பெயர்கள்..
அருந்ததி ஆனந்த கௌரி
காயத்திரி ஆனந்த ரமணி
அவதானித்துப் பார்த்தால் எனது பாட்டனார் தனது மகன்களின் பெயர்கள் ஒவ்வொன்றிலும் பால,பதி என்ற சொற்களும்,மகள்களின் பெயர்களில் ஆனந்த என்ற சொல் இடம்பெறுமாறும் பார்த்துக் கொண்டார்.
அந்த நாளில் எங்களுக்கு ஆங்கிலப் பாடம் சொல்லித் தரும் எங்கள் மாமா அமர் சேனாபதி என்று தொடங்கும் சித்தப்பாவின் பெயரை தவறில்லாமல் ஆங்கிலத்தில் முதலில் எழுதிக் காட்டுபவருக்கு சொக்லட் பரிசாகக் கொடுப்பார்.அடிக்கடி எனக்குத் தான் கிடைக்கும்..(நம்புங்கப்பா)
இவ்வளவு நீளமான பெயர்களைத் தன் பிள்ளைகளுக்கு வைத்த அவரது பெயர் ஆனந்தர்!!!
மறுபக்கம் எனது அம்மாவின் குடும்பத்தில்,எனது தாத்தாவான இலங்கை வானொலி புகழ் - சானா என்றழைக்கப்பட்ட (எவ்வளவு சின்னப் பெயர் பாருங்கள்) சண்முகநாதன் (லண்டன் கந்தையா) எனது மாமன்மாருக்கும்,அம்மா,பெரியம்மாவுக்கும் சின்னப் பெயர்களாகத் தேடிப் பார்த்து வைத்துவிட்டார்.
ஆண் பிள்ளைகளுக்கு நான்கு எழுத்துப் பெயர்களும்,பெண்களுக்கு மூன்று மற்றும் இரண்டு எழுத்துகளிலும் பெயர்கள்..
அசோகன்
தேவகன்
அமலன்
ராகுலன்
ஜனகன்
உமா
சுமதி
ஆனால் இரண்டு குடும்பங்களிலுமே ஐந்து ஆண்களும்,இரண்டு பெண்களும்..
இது தான் வேற்றுமையில் ஒற்றுமையோ?
நான் பாடசாலையில் படிக்கும் நாட்களிலும் சரி பின் வேலை புரிகின்ற நாட்களிலும் சரி என்னுடைய நீளமான பெயர்கள் பலருக்கு சிரமம் கொடுத்திருக்கின்றன.
குறிப்பாகப் படிவங்கள் நிரப்பும் போது, அடையாள அட்டைகள்,போலீஸ் பதிவு எழுதும் போது (அண்மையில் நிறையப் பேருக்கு வேண்டாமென்று போய் விட்டது.) என்று பல சந்தர்ப்பங்கள்..
அதிலும் இப்போது வேலை புரியும் இடத்தில் முதல் மாத சம்பளம் வாங்கும்போது (இங்கே மட்டும் வங்கியில் சம்பளம் போடாமல் கை நிறைய,வெள்ளைக் கடித உறையில் இட்டு கொடுப்பார்கள்) எங்கள் வெற்றி பிரிவில் மட்டும் ஆண்களில் எங்களுக்கு சம்பளம் வழங்கப் படாமல் எங்கள் தந்தைமாரின் பெயர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டது. நான் வேடிக்கைக்காக எங்கள் பிரதான காசாளரிடம் "வீட்டில் இருக்கும் எங்கள் அப்பாமாருக்கு சம்பளம் கொடுத்தீங்க, பரவாயில்லை..ஆனால் வேலை செய்த எங்களுக்கும் கொடுக்கத் தானே வேணும்" என்றேன்.. ஆளுக்கு முதலில் எதுவும் புரியவில்லை.. பிறகு விளக்கிச் சொன்னவுடன் சிரித்தார்.
என் பெயரை எங்கள் குடும்பவழக்கதிற்கும் மாறாக (வழமையாக எங்கள் வீட்டில் அனைவரது பெயர்களையும் பாட்டா- அப்பாவின் அப்பா தான் வைப்பார்) தாத்தா தான் வைத்தார்.. சமஸ்கிருத மொழியில் அழகிய கண்களையுடையவன் என்று அர்த்தமாம்.. (பாருங்கப்பா.. அப்பவே என் அழகைப் பார்த்து தீர்க்க தரிசனத்தோடு மனுஷன் வச்சிருக்காரு ;))
எனக்கு வந்த இந்த நீளப் பெயர் ராசி என் மகனுக்கும் தொடர்கிறது.. நியூமறோலோஜியில் நம்பிக்கை உடைய நான் தேடிப் பிடித்து (அம்மா,மனைவி,தம்பியின் உதவியோடு) யாருக்கும் இல்லாத பெயராக வைத்தது தான் இந்த ஹர்ஷஹாசன்.
எனது கமல் பைத்தியம் பெயரில் தெரிவதாக மனைவி அடிக்கடி சாடுவதும் உண்டு.. எனினும் இந்தப்பெயரில் ஒளி பொருந்தியவன்,மகிழ்ச்சிப் படுத்துபவன்,சூரியன்,சிவன் என்று பல அர்த்தங்கள் உள்ளன..
வளர்ந்த பிறகு என் மகனும் நீளமான பெயர் வைத்து அவஸ்தை தந்துவிட்டேன் என்று என்னைத் திட்டுவானோ தெரியாது.. விரும்பினால் பின்னாளில் மாற்றிக் கொள்ளும் முழு உரிமையையும் அவனுக்குக் கொடுப்பேன்..
அவனும் நான் என் அப்பருக்குத் திட்டு வாங்கிக் கொடுத்தது போல அவனும் எனக்கு வாங்கிக் கொடுத்து விடுவானோ என்ற பயமும் உண்டு..