ஒரு நாள் நம்ம கஞ்சிபாய், அமெரிக்காவில் அவர் இருந்த நகரத்தின் வீதி வழியாக போய்க்கொண்டிருந்த போது, ஒரு விளம்பரப் பலகையைக் கண்ணுற்றார். (கஞ்சிபாய் எப்போ,எப்படி, அமெரிக்கா என்றெல்லாம் யாரும் கேட்கப்படாது.. இது கௌதம் மேனன் திரைப்படக் கதை மாதிரி.. யாரு வேணாம்னாலும், எப்ப வேணாம்னாலும் அமெரிக்கா போகலாம்)
அந்த விளம்பரப் பலகையில் இருந்த வாசகம் "பேசும் நாய் விற்பனைக்கு"
ஆச்சரியப்பட்டுப் போன நம்ம கஞ்சிபாய், அந்த விளம்பரப்பலகை காட்டிய வீட்டுக்குள் நுழைந்து பார்த்தார்.
யாருமே இல்லை. யாரும் இருப்பது போலவும் தென்படவில்லை.
வீட்டின் வெளிப்புறத்தில் ஒரு வயதான நாய்.. உழைத்துக் களைத்துபோய் இருக்கும் ஒரு நடுத்தர வயது மனிதன் போல சோர்ந்து படுத்துக் கிடந்தது அந்த நாய்..
பார்த்த உடனேயே நம்ம கஞ்சிப்பாயுக்கு விளங்கிவிட்டது, இது தான் அந்த பேசும் நாய் என்று..
மெல்ல தயங்கியபடி.. "நீ.. நீ.. நீங்க தானே.. " என்று நாயைப்பார்த்து பேச ஆரம்பித்தார்..
அதற்குள் இடை மரித்த் அந்த நாய்,"சந்தேகமே வேண்டாம்.. நானே அந்த விளம்பரத்துக்குரிய பேசும் நாய்.. " என்று அறிமுகப்படுத்திக் கொண்டே பேச ஆரம்பிக்கிறது..
அதிர்ந்து போனார் கஞ்சிபாய். என்னடா அதிசயம் என்று..
சுதாரித்துக் கொண்டே, "இவ்வளவு அதிசயமான நாயா இருக்கிறாயே, உன்னை ஏன் உன் எஜமான் விற்க பார்க்கிறான்" என்று கேட்டார் கஞ்சி.
"என்ன செய்ய, எனக்கு வயதேறி விட்டது என்று நினைக்கிறான் அவன்"என்று தனது கதையை சொல்ல ஆரம்பித்தது அந்த அதிசய நாய்.
"சின்ன வயதிலேயே எனது இந்த அதிசய ஆற்றல் பற்றி அறிந்துகொண்ட நான் இதன் மூலம் ஏன் தாய்நாடு அமெரிக்காவுக்கு சேவை செய்யவேண்டும் என நினைத்தேன்... இது பற்றி CIAக்கு தெரிவித்த உடனேயே எனது பணி ஆரம்பித்தது.. பல்வேறு உளவாளிகளோடும்,பல உலகத் தலைவர்கள் கூடும் இடங்களிலும் நானும் அழைத்து செல்லப்பட்டேன்.. யாரும் ஒரு நாய் கேட்கும்,பேசும் என்று நினைக்காததால், எனக்கு முன் பேசப்படும் எந்த ரகசியமும்,திட்டமும் என் மூலம் CIAக்கு கிடைத்து வந்தது.
இப்படியே பரபரப்பாக ஒரு எட்டு வருடம் போனது.. அதுக்குப் பிறகு வாழ்க்கையில் நிம்மதியாக செட்டில் ஆக விரும்பிய நான் வெள்ளை மாளிகையில் ஒரு உள்ளக உளவாளியாக இணைந்துகொண்டேன்.. அப்படியே ஒரு நாலைந்து மனைவி , ஒரு பத்துப் பதினைந்து குட்டிகள் என்று சொல்லிப் போன வாழ்க்கையில் இப்போ ஓய்வாக இருக்கிறேன்" என்று தனது நீண்ட,அதிசய கதையை முடித்தது.
அப்படியே அசந்து போன கஞ்சி பாய் இது கனவா நனவா என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே, உரிமையாளர் வந்து விட்டார்..
உடனடியாக எப்படியாவது இந்த நாயை வாங்க வேண்டும் என்று முடிவு செய்த கஞ்சிபாய், விலை பற்றி கேட்டார்.
சற்றும் யோசிக்காமல் உரிமையாளர் பத்து டொலர் எனவே, அதிர்ச்சியடைந்த கஞ்சிபாய் "என்னைய்யா புரியாத மனுஷனாய் இருக்கிறீர்?சாதாரண சொறி நாய் கூட பெரிய விலைக்குப் போகுமே, இந்த பேசுகின்ற அதிசய நாயை பத்து டாலருக்கு விற்கிராயே என்று பொங்கி வெடித்துவிட்டார் கஞ்சி பாய்..(பொழைக்கத் தெரியாத மனுஷன் !!!)
அதற்கு மிக அமைதியாக அந்த உரிமையாளர் சொன்னார் "இந்த நாய் ஒரு புளுகு மூட்டை.. இது சொல்வதெல்லாம் பொய்"
## இன்று காலை வெற்றியின் "விடியல்" நிகழ்ச்சியில் சொன்ன கதை..