இன்று இலங்கை பாகிஸ்தானிய அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி ஆரம்பித்துள்ளது..
இலங்கைக்கு white wash (3-0) அடிப்படையில் தொடர் வெற்றியைப் பெற்றுத் தரப் போகிற போட்டி என்பதை விட சமிந்த வாஸ் என்ற இலங்கையின் வரலாற்றில் மிகச் சிறந்த வேகப் பந்துவீச்சாளரின் இறுதி டெஸ்ட் போட்டி என்பது தான் இந்த டெஸ்ட் போட்டியில் செல்வாக்கு செலுத்துகின்ற பிரதான காரணியாக மாறியுள்ளது.
இந்தவேளையில் ஒருவாரம் பின்னோக்கி போய் பார்க்கலாம் வாரீங்களா?
இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு ஒரு Flashback சுருளை சுற்றி விடுங்கள்..
இலங்கை அணிக்கெதிராக நடந்து முடிந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலுமே உருட்டப்பட்டு, பந்தாடப்பட்டுள்ள பாகிஸ்தானிய அணிக்கு ஒரு நம்பிக்கை தரும் கீற்றாகக் கிடைத்திருப்பவர், ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்கள் பிரகாசிக்கத் தவறியதால் தன் முதல் டெஸ்ட் போட்டியிலேயே பலிக்கடாவாக ஆரம்பத்துடுப்பாட்ட வீரராக அனுப்பப்பட்ட இளம்வீரர் பவாட் அலாம்.
சகலதுறைவீரராகவும், குறிப்பாக ஒருநாள் மற்றும் T 20 வகைப்போட்டிகளுக்கு பொருத்தமான சுழல்பந்து வீசும் மத்திய வரிசைத்துடுப்பாட்ட வீரராகக் கருதப்பட்ட அலாம் முதலாவது டெஸ்ட் போட்டியிலேயே விளையாடியிருக்க வேண்டும் என பாகிஸ்தானின் முதலாவது டெஸ்ட் தோல்விக்குப் பிறகு குரல்கள் எழுந்தன.
முதலாவது இனிங்சில் சொதப்பியபோதும் (16 ஓட்டங்கள்) இரண்டாம் இனிங்சில் அலாம் இலங்கை அணிக்கு தனது 168 ஓட்டங்கள் மூலம் ஆபத்து அலார்மை (Alarm) அடித்திருந்தார்.
அலாமின் அந்த கன்னி சதம் - அற்புதமானது, அபாரமானது, அசத்தலானது, அரியது, ஓப்பீடற்றது, பாகிஸ்தானினால் அநியாயமாக்கப்பட்டது என்று எது வேண்டுமானாலும் சொல்லுங்கள்.
ஆனால் சுருக்கமாகச் சொல்லப்போனால் பல மைல்கற்கள், சாதனைகளை உருவாக்கியுள்ளது.
பாகிஸ்தானிய வீரர் ஒருவர் தனது முதல் டெஸ்ட் போட்டியில் பெற்ற 2வது கூடிய ஓட்ட எண்ணிக்கை ( யசீர் ஹமீட் பங்களாதேஷீக் கெதிராகப் பெற்ற ஓட்டம் 170 )
பாகிஸ்தானிய வீரர் ஒருவர் அறிமுகப் போட்டியில் வெளிநாட்டு மண்ணில் பெற்ற முதலாவது சதம் இதுவே. (இவ்வளவு நாளும் எல்லோரும் தங்கள் நாட்டிலே தான் அறிமுக சதங்களை அடித்துள்ளார்கள். )
இதெல்லாம் பலருக்கும் தெரிந்தவை – பலபேர் அறியாத இரு ஆரூடங்கள் அல்லது தீர்க்க தரிசனங்களும் இந்த சதத்தோடு இணைந்திருக்கின்றன.
கிரிக்கெட் என்பது எவ்வளவு தான் கடும் பயிற்சி – விடாமுயற்சியுடன் இணைந்ததாக இருந்தாலும் சில அதிர்ஷ்டங்கள் - நம்பிக்கைகளும் முக்கிய இடம்பிடித்தே இருக்கின்றன.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலாவது இன்னிங்க்சில் பாகிஸ்தானின் விக்கெட்டுக்கள் சுருண்டுகொண்டிருக்க,ஆடுகளத்தில் அலாம் நின்று கொண்டிருந்த நேரம், ஏற்கெனவே ஆட்டம் இழந்திருந்த பாகிஸ்தானிய அணித் தலைவர் யூனிஸ் கான்(இவர் அதிர்ஷ்ட விஷயங்களில் மிகுந்த நம்பிக்கை உடையவர்) வீரர்கள் ஆடை மாற்றும் அறைக்குள்(dressing room) இருந்தவாறே ஒரு கிரிக்கெட் பந்தை எடுத்து அதில் ஓட்டுகிற டேப்பை(tape) எடுத்து சுற்றி (தேவையில்லாத வேலை தான்.. ) அதிலே பேனாவால் "Alam debut century" (அறிமுகப் போட்டி, அலாம் சதம்) என்று எழுதி வைத்தாராம்..
பார்த்தால் அலாம் 16 ஓட்டங்களோடு ஆட்டமிழக்க, பாகிஸ்தானும் 90 ஓட்டங்களுக்கு சுருண்டது.
வெறுத்துப் போன யூனிஸ் அந்தப் பந்தை அப்படியே தூக்கி ஒரு மூலையில் எறிந்து விட்டார்.
ஆச்சரியம் பாருங்கள்..
அடுத்த இன்னிங்க்சில் அலாம் தனது அபார சதத்தைப் பெற்றவேளையில் அவரோடு ஆடுகளத்தில் இருந்தவர் அதே யூனிஸ் கான்..
அலாமைக் கட்டியணைத்து வாழ்த்திய பின்னர் அலாமின் காதுகளில் யூனிஸ் கிசுகிசுத்தது "நீ இந்தப் போட்டியில் சதம் அடிப்பாய் என்று எனக்கு முன்பே தெரியும். dressing roomக்கு வா.. உனக்கொரு அதிசயம் காட்டுகிறேன்"
யூனிசினால் எழுதப்பட்ட பந்தை பார்த்த பின் அசந்து போனார் அலாம்.
இதைவிட இன்னொரு அதிசயம்...
பவாட் அலாமின் தந்தையார் தாரிக் அலாம் பாகிஸ்தானின் கராச்சியில் ஒரு பிரபல துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளர். குறிப்பாக சுழல் பந்துவீச்சாளர்களை எவ்வாறு எதிர்கொள்வது எப்படி என்று நுணுக்கமாகக் கற்றுக் கொடுப்பவர்.
எத்தனையோ வீரர்களை டெஸ்ட் வீரர்களாக அவர் உருவாக்கி விட்டும் கூட தன்னால் பாகிஸ்தானிய அணிக்காக விளையாட முடியாமல் போனது குறித்து அவருக்கு மனக்கவலை.
இறுதியாக மகன் பவாட் விளையாட ஆரம்பித்தது அவருக்கு மிகப் பெருமையும் மகிழ்ச்சியும் தந்த விஷயம்
எனினும் தந்தையின் கனவை தான் நனவாக்கினாலும் முதல் இன்னிங்சில் சரியாகத் துடுப்பெடுத்தாடவில்லை என்று கவலையுடன் தந்தைக்கு அழைப்பெடுத்து மன்னிப்புக் கோரினாராம்.
தாரிக் அலாம் மகனுக்கு சொன்ன விஷயம் "மகனே இன்று தான் முதல் நாள்.. இன்னும் நான்கு நாட்கள் இருக்கின்றன. அடுத்த முறை இவ்வளவு தொலைவிலிருந்து நீ அழைப்பெடுத்து என்னுடன் பேசும்போது சந்தோஷமான செய்தியை பகிர்ந்து கொள்ளுவாய்"
அடுத்த அழைப்பு பவாட் தனது தந்தைக்கு எடுத்தது தனது சதம் பற்றி சொல்லத் தான்..
இது ஆரூடமா இல்லை அதிர்ஷ்டமா.. இல்லை தீர்க்க தரிசனமா? இல்லை குருவி (இளைய தளபதி இல்லீங்க்ணா) உட்காரப் பனம்பழம் விழுந்த கதையா?
நாளை சிங்கப்பூரில் நாங்கள் சேர்ந்து உலாத்தலாம்..