July 02, 2009

அதிரடிகள் + ஆச்சரியங்கள் + அதிர்ச்சிகள் = Twenty 20 உலகக்கிண்ணம்



இது எப்போதோ பாதியாக எழுதி முடித்த பதிவாக இருந்தது. 'இருக்கிறம்' இதழுக்காக கொஞ்சம் செதுக்கி அனுப்பி வைத்திருந்தேன்.

இன்று ஏதாவது பதிவிடலாம் என்று யோசித்தபோது பூசரம் அறிவிப்பு/அழைப்பு தென்பட்டது.


அதற்காக மேலும் சில விஷயம் சேர்த்து முழுமையான பதிவாக....



அதிரடிகள் + ஆச்சரியங்கள் + அதிர்ச்சிகள் = Twenty 20 உலகக்கிண்ணம்


வேகம் விறுவிறுப்பு என்பவற்றை அடிப்படை அலகுகளாகக்கொண்ட குறுகிய நேரக் குதூகல விளையாட்டான Twenty – 20 கிரிக்கெட் உலகக்கிண்ணப்போட்டிகள் நிறைவுபெற்றுள்ளன.

மீண்டும் உலக்ககிண்ணப்போட்டிகள், குறிப்பாக துரித வகைக் கிரிக்கெட்டில் ஆசிய நாடுகளின் ஆதிக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த இரு T 20 உலகக்கிண்ணங்களுமே ஆசிய நாடுகளைப் போய்ச்சேர்ந்துள்ளன.

2007ம் ஆண்டு தென் ஆபிரிக்காவில் நடந்த அங்குராப்பண T 20 உலகக்கிண்ணம் யாரும் எதிர்பார்ப்பு வைக்காத இளம் இந்திய அணியினால் வெற்றி கொள்ளப்பட்டது. இம்முறையோ 2ம் சுற்றுக்கே வருமா என்று பலராலும் சந்தேகிக்கப்பட்ட பாகிஸ்தானிய அணி முடிசூடியிருக்கிறது. பாகிஸ்தானிய அணியே கடந்த முறை 2ம் இடத்தைப் பெற்றது என்பதும் சிறப்பம்சம்.

இறுதிப்போட்டிவரை எந்தவொரு போட்டியிலும் தோற்காதிருந்த எமது இலங்கை அணி இறுதியிலே பாகிஸ்தானிய அணியிடம் சறுக்கியது.

இறுதிப்போட்டிக்கு முன்னதாக தலைவர் இருவரும்..

நீண்ட நாட்களுக்கு இழுத்தடிக்காமல், நேர்த்தியான ஒழுங்கமைப்புடன் இங்கிலாந்தில் சிறப்பான போட்டித்தொடரில் அசத்தல்கள், அதிரடிகள், ஆச்சரியங்கள், அதிர்ச்சிகள், அறிமுகங்கள் என்று ரசிகர்களைக் கவர்ந்திழுக்க அத்தனை ‘மசாலா' விஷயங்களுமே இருந்தன.

அசுரபலமும், சகலதுறைத் திறமைகளும், அணி முழுவதும் அசத்தும் வீரர்களையும் கொண்டிருந்த இந்தியாவும், தென்னாபிரிக்காவுமே பலராலும் உலகக்கிண்ண சாம்பியன்களாக வரக்கூடிய அணிகள் எனப் பலராலும் எதிர்வு கூறப்பட்டிருந்தன.

அவுஸ்திரேலியா, இலங்கை, நியுசிலாந்து மற்றும் சொந்த மண்ணில் இங்கிலாந்து போன்றவையும் பிரகாசிக்கும் என்று பல்வேறு விமர்சகர்களால் கருதப்பட்டன.

எனினும் முதல் போட்டியிலேயே மிகப்பெரும் அதிர்ச்சி! கிரிக்கெட்டின் தாயகம் இங்கிலாந்தையே – சொந்த மண்ணில் வைத்து மண் கவ்வச்செய்தது பகுதிநேர வீரர்களோடு களமிறங்கிய நெதர்லாந்து.

12 அணிகள் - 4 பிரிவுகளாக விளையாடிய இந்த உலகக்கிண்ணத்தில் அடுத்த அதிர்ச்சியாக இந்தியாவை வீழ்த்துவோம் என்று தன்னம்பிக்கையோடிருந்த பங்களாதேஷைப் பந்தாடி நாட்டுக்கு அனுப்பிவைத்தது மற்றொரு புதுமுக அணிகளில் ஒன்றான அயர்லாந்து.

பயங்கரப்பிரிவு என்று கருதப்பட்ட பிரிவு C இல் - அடுத்தடுத்த அதிர்ச்சிகள் காத்திருந்தன. நடப்பு ஒருநாள் உலக சாம்பியன் அவுஸ்திரேலியா முதலில் மேற்கிந்தியத்தீவுகள் அணியிடமும் பின்னர் இலங்கை அணியிடமும் மரண அடி வாங்கி வெளியேறியது.

அன்றூ சைமண்ட்சின் திடீர் வெளியேற்றம் தந்த அதிர்ச்சியும் அளவு கடந்த தம் அணி மீதான எண்ணமும் ஆஸ்திரேலியாவை நிலை குலைய செய்துவிட்டன.
தங்கள் அணிக்கும் Twenty 20 போட்டிகளுக்கும் அப்படியொரு பொருத்தம் என்று இனிமேலும் Twenty 20 போட்டிகளை ஆஸ்திரேலியா விளையாடாமல் விடப் போகிறதோ தெரியவில்லை.


இரண்டாம் சுற்றான சுப்பர் 8 வரை பலமான அணியாகத் தெரிந்த இந்தியா 3 போட்டிகளிலும் அடுத்தடுத்து அடிவாங்கி வெளியேறிய அதிர்ச்சியும், நோஞ்சானாகவும், ஒற்றுமை குன்றிய அணியாகவும் தெரிந்த பாகிஸ்தான் அசுரபலத்தோடு எழுந்த ஆச்சரியமும் சுப்பர் 8 சுற்றில் அரங்கேறியது.

இந்திய வீரர்கள் களைத்துப் போய் புத்துணர்ச்சி இல்லாமல் இருந்தது பல போட்டிகளிலும் தெரிந்தது. தொடர்ந்து விளையாடிய பல போட்டிகள் அவர்களின் சத்துக்களை உறிஞ்சி எடுத்து விட்டனவோ?

அதிக வாய்ப்புடைய அணிகளாக இலங்கையும், தென்னாபிரிக்காவும், இவற்றோடு இலங்கை அணியிடம் முன்னைய சுற்றுகளில் தோற்றிருந்த பாகிஸ்தானும், மேற்கிந்திய தீவுகளும் என 4 அணிகள் அரையிறுதிகளுக்குத் தெரிவாகின.

அனைவரும் எதிர்பார்த்தனர் தென்னாபிரிக்க - இலங்கை இறுதிப்போட்டியை!

ஆனாலும் தனது அணிபோலவே ஆரம்பக்கட்டத்தில் துடுப்பாட்டத்தில் தட்டுத்தடுமாறிக் கொண்டிருந்த சஹீட் அஃப்ரிடி - துடுப்பாட்டம், பந்துவீச்சு இரண்டிலுமே விஸ்வரூபம் எடுத்து தென்னாபிரிக்காவின் கனவுகளை மண்ணாக்கி பாகிஸ்தானை இறுதிப்போட்டிக்கு அழைத்துவந்தார்.

இறுதிப்போட்டியிலும் அஃப்ரிடியின் அசுர அதிரடியே இலங்கை அணியின் தொடர் வெற்றிகளுக்கு தடைக்கல்லானது.

தொடர் முழுவதும் தடுப்பாட்டத்தில் இலங்கை அணியின் பிரதான ஸ்திரமாக விளங்கிய டில்ஷான் இறுதிப்போட்டியில் கைவிரித்துவிட தலைவராகத் தனித்து தன்னை வெளிப்படுத்திய சங்ககார வெற்றிக்கிண்ணத்தை இலங்கைக்கு பெற்றுத்தர முடியாமல் போனது.

ஏமாற்றத்துடன் இலங்கை ரசிகர்கள்

யூனிஸ்கானின் தலைமைத்துவம் பெரிதாகப் பிரகாசிக்காவிட்டாலும், உமர் குல்லின் துல்லியமான வேகப்பந்துவீச்சும், சஜித் அஜ்மல்லின் சாதுரியமான சுழல் பந்துவீச்சும், கம்ரன் அக்மல்லின் அதிரடி ஆரம்பத்துடுப்பாட்டமும், அஃப்ரிடியின் அசத்தல் திறமைகளும் ICLஇல் இருந்து விலகி பாகிஸ்தானிய அணியில் அவசர அவசரமாகச் சேர்த்துக்கொள்ளப்பட்ட அப்துல் ரசாக்கும் சேர்ந்து படைத்ததே பாகிஸ்தானிய வெற்றிச் சரித்திரம் என்றால் அது நிச்சயம் பொய்யில்லை.

இதன் மூலம் கிரிக்கெட்டின் மதிப்பு மிகுந்த மூன்று உலகக்கிண்ணங்களையும் (உலகக்கிண்ணம், மினி உலகக்கிண்ணம், Twenty20 உலகக்கிண்ணம்) வென்றெடுத்த இரண்டாவது அணி என்ற பெருமையைப் பெறும் வாய்ப்பை இலங்கை இழந்துள்ளது.

இலங்கை இறுதிப்போட்டியில் வென்றிருந்தால் இந்தப் பெருமை இலங்கைக்கு கிடைத்திருக்கும்.

எனினும் பாகிஸ்தானுக்கு அவ்வளவு மகிழ்ச்சி தராத ஏனைய அணிகளுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு தகவல் - இன்னும் 9 மாதங்களில் மேற்கிந்தியத்தீவுகளில் அடுத்த உலகக்கிண்ணம் இடம்பெறவுள்ளது.

இம்முறை உலக்கிண்ணப்போட்டியில் அனுபவித்த சில சுவாரஸ்யங்கள் - தொடரின் சிறப்பாட்டக்காரராகத் தெரிவு செய்யப்பட்ட இலங்கையின் டில்ஷான் வெற்றிகரமாக அறிமுகப்படுத்திய ஸ்கூப் (Scoop) அடி – விக்கெட் காப்பாளருக்குப் பின்னால் பந்தை அடித்து ஏராளமான ஓட்டங்களைக் குவித்தார் டில்ஷான்.

இந்தத் தொடரில் இவருக்கு இணையாக வேறு எவருமே ஓட்டங்கள் குவிக்கவில்லை.. டில்ஷானுக்கும் (317 ஓட்டங்கள்) இரண்டாம் இடம்பெற்றவருக்கும் (ஜக்ஸ் கல்லிஸ்) 79ஓட்டங்கள் வித்தியாசம் என்பதே டில்ஷானின் பெருமையைப் பேசும்.

இப்போது T 20 உலகக் கிண்ணத் தொடரில் மொத்த ஓட்டங்கள் பெற்றவர்கள் வரிசையிலும் இந்தியாவின் கம்பீரைப் பின் தள்ளிவிட்டார் டில்ஷான்.

கடந்த உலகக்கிண்ணம் போலவே இம்முறையும் ஏராளமான விக்கெட்டுக்கள் சரித்த உமர்குல் - 13 விக்கெட்டுக்கள்.

யோர்க்கர் பந்துகளைத் துல்லியமாக வீசி எதிரணியினரைத் திணறடித்த வீரர்களின் வரிசையில் லசித் மாலிங்க, குல் உடன் தென்னாபிரிக்காவில் இளைய வேகப்பந்து வீச்சாளர் வேய்ன் பார்னல்லும் இணைந்து கொண்டனர்.

அதிலும் மாலிங்கவின் மெதுவேகத்தில் வருகின்ற full toss பந்துகள் பல துடுப்பாட்ட வீரர்களையும் தடுமாற வைத்தன.

பந்து வீச்சாளர்களில் இலங்கையின் அஜந்தா மென்டிஸ், பாகிஸ்தானின் சயீத் அஜ்மல் போன்ற சுழல் பந்துவீச்சாளர்களின் மாயவலைகளில் பல விக்கெட்டுக்கள் (12) பறி போனதொடு, தென் ஆபிரிக்காவின் ரெலோப் வண்டேர் மேர்வ், அப்ரிடியும் தத்தம் அணிகளுக்கு பந்துவீச்சினால் பலம் சேர்த்திருந்தனர்.

இலங்கை அணியின் புதிய கண்டுபிடிப்புக்களான சாதூரியமாகப் பந்துவீசும் இசுர உதான மற்றும் சகலதுறைத் திறமைகளை வெளிப்படுத்தி - இலாவகமான சமயோசித களத்தடுப்பில் பலரையும் கவர்ந்த ஏஞ்சலோ மத்தியுஸ்.

புதிய சகலதுறை நட்சத்திரம் மத்தியூஸ்

தென் ஆபிரிக்க அணியை மீண்டும் பெரிய போட்டிகளின் துரதிர்ஷ்டம் துரத்தினாலும் அந்த அணியின் ஒற்றுமை பல பேரைக் கவர்ந்தது.

மீண்டும் வெற்றிக் காற்றை சுவாசிக்கும் ஆற்றலோடு எழுந்துவரும் மேற்கிந்திய அணியிடம் இனி எல்லோரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
consistency என்பதே அவர்களின் பிரச்சினை.
இலங்கை அணியிடம் கண்ட இரண்டு தோல்விகளும் பல விஷயங்களை கெய்லின் குழுவினருக்கு கற்றுக் கொடுத்திருக்கும்.

தான் தலைமை தாங்கிய முதல் தொடரிலேயே இறுதிப் போட்டிவரை அழைத்து வந்த சங்ககார நல்ல தலைவர் என்பதையும் நிரூபித்திருக்கிறார்.
அவரது சமயோசித மாற்றங்கள்,அணுகுமுறைகள்,அதிரடி வியூகங்கள் இலங்கை அணி சங்கா தலைமையில் ஒரு ராட்சத வளர்ச்சி பெறும் என்பதை எடுத்துக் காட்டுகிறது.

டெஸ்ட் அந்தஸ்து பெறாத அணிகளும் மற்றவகைப் போட்டிகளில் பலவீனமான அணிகளாகத் தெரியும் அணிகளும் கூட திட்டமிட்டு,முழுப் பலத்தோடு விளையாடினால் இவ்வகைக் குறுகிய நேரப் போட்டிகளில் ஜாம்பவான்களையும் மண்கவ்வச் செய்யலாம் என்பது இம்முறை T20 உலகக் கிண்ணப் போட்டிகளில் நிரூபிக்கப் பட்டுள்ளது.


இப்போது T20 உலகக் கிண்ணப் போட்டி இறுதிப்போட்டியில் சந்தித்த இரு அணிகளும் இலங்கை மண்ணில் டெஸ்ட் போட்டிகளிலும் ஒரு நாள் போட்டிகளிலும், மற்றும் ஒற்றை T 20 போட்டியிலும் மோதுகின்றன.

இலங்கை அணி சங்கக்காரவின் சாமர்த்தியமான வழி நடத்தலில் பழி தீர்க்குமா எனப் பார்ப்போம்!

4 comments:

கிடுகுவேலி said...

//...இதன் மூலம் கிரிக்கெட்டின் மதிப்பு மிகுந்த மூன்று உலகக்கிண்ணங்களையும் (உலகக்கிண்ணம், மினி உலகக்கிண்ணம், வுறநவெல20 உலகக்கிண்ணம்) வென்றெடுத்த இரண்டாவது அணி என்ற பெருமையைப் பாகிஸ்தான் இந்தியாவுக்குப் பின்னதாக அடைந்துள்ளது.
...//

பாகிஸ்தான் மினி உலகக்கிண்ணம் வென்றதாக எனக்கு நினைவில்லை. 1998 - தென்ன்னாபிரிக்கா 2000- நியூசிலாந்து 2002- இலங்கை+இந்தியா 2004 - மேற்கிந்தியா 2006 - அவுஸ்திரேலியா 2009 - ???(காத்திருக்க வேண்டும்). என் நினைவு சரியானால் இப்படித்தான் வரவேண்டும்.

உங்கள் விபரங்கள் அருமை. நிச்சயமாக மேற்கிந்தியரின் எழுச்சி அபாரம். நீங்கள் குறிப்பிட்டது போல உறுதித்தன்மையை தொடர்ந்து பேணினால் அவர்களை அசைக்க முடியாது. தொடரட்டும் வாழ்த்துக்கள்..!

யோ வொய்ஸ் (யோகா) said...

வாங்க லோஷன் ரொம்ம்ம்ம்ம்ம்ப நாளாகவே எங்கடா நம்ம லோஷன் டுவென்டி டுவென்டி கப் பத்தி பதிவு போடலனு பார்த்துட்டு இருந்தேன் ஒரு மாதிரி போட்டுடீங்க. ரொம்ப சந்தோசம். சிங்கப்பூர் பயணத்தை ஒரு பதிவா போடுற ஐடியா எதுவும் இல்லையா

ஆ.ஞானசேகரன் said...

மீள் பகிர்வு மிக்க நன்றி

ARV Loshan said...

நன்றி கதியால்.. நான் விட்ட தவறைத் திருத்திக் கொண்டேன்..

நன்றி யோகா .. வெகு விரைவில் (அது எப்போது என்று கேட்கப்படாது)

நன்றி ஞானா.. கிரிக்கெட் ஆர்வம் இல்லாவிட்டாலும் நட்புக்காக எட்டிப் பார்த்தமைக்கு நன்றி..

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner