பாவம் மைக்கல் ஜாக்சன்.. இறந்த பிறகும் சர்ச்சைகளும் மர்மங்களும் பிரச்சினைகளும் அவரைத் துரத்தியபடியே....
அவரது மரணம் தொடர்பான மர்மங்கள் இன்னும் முற்றாக விலகவில்லை..
மரண விசாரணைகளுக்கு மேல் மரண விசாரணைகள் நடந்தாலும் இன்னமும் ஜாக்சனின் இறப்பு தொடர்பான சந்தேக மேகங்கள் அகன்றதாக இல்லை.
ஜாக்சன் விட்டு சென்ற சொத்துக்கள், கடன்களை, அவரது பிள்ளைகளை யார் பொறுப்பேற்றுக் கொள்வது என்ற சர்ச்சைகளும் பெரிதாகி ஓரளவுக்கு முடிவுக்கு வந்துள்ளன.
எனினும் பிரபலங்களின் மரணங்கள் தான் பிரச்சினைகளையும் சர்ச்சைகளையும் பல இடங்களிலும், புகழாரங்களை சில இடங்களிலும் தோற்றுவிப்பது வழமை தானே...
இன்னும் சில பிரபலங்களுக்கோ உயிருடன் இருக்கும் போது கிடைக்காத அங்கீகாரங்கள் இறந்த பிறகே தேடி வந்து கிடைக்கும்..
பொதுவாக தமிழரில் இது மிக சகஜம்..
அண்மையில் காலமான பொப் இசை சக்கரவர்த்திக்கோ இறக்கு முன் இருந்து வந்த கறையும் இழிவான குற்றச் சாட்டும் இப்போது அவர் இறந்த பிறகு துடைத்தெறியப்படும் போல தெரிகிறது.
1993ஆம் ஆண்டு மைக்கல் ஜாக்சன் தன்னை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்றும், தானும் ஜாக்சனும் நீண்ட காலமாக பாலியல் நடத்தைகளிலும் அதிலும் சிலவேளை வாய் வழியான பாலியல் செயற்பாடுகளிலும் ஈடுபட்டதாகவும் ஜோர்டான் சாண்ட்லர் என்ற சிறுவன் போலீசாருக்கும் ஒரு மனோநல மருத்துவருக்கும் தெரிவித்ததை அடுத்து மிகப்பெரும் பரபரப்பு எழுந்தது.
ஜாக்சன் இதை மறுத்திருந்தாலும் கூட பெறும் பரபரப்பும் ஜாக்சனுக்கு எதிரான கருத்துக்களும் எழுந்ததை அடுத்து 22 மில்லியன் டாலர்கள் என்ற மிகப்பெரும் தொகை கைமாறியதை அடுத்து ஜோர்டானின் தந்தையார் இந்த வழக்கை வாபஸ் பெற்றுக் கொண்டார்.
இந்த சம்பவம் ஏற்படுத்திய தாக்கமே ஜாக்சன் போதை மருந்துகளின் பக்கமும், வலி நிவாரணிகள் பக்கம் திரும்பவும் காரணமாக அமைந்தன என்கின்றனர் ஜாக்சனின் குடும்பத்தினர்,நண்பர்கள்.
இப்போது என்னடா என்றால் முன்பு பகிரங்கமாக ஜாக்சன் மீது பழிபோட்ட பையன் தான் சொன்னது முற்று முழுதாய் பொய் என்றும் ஜாக்சன் நல்லவர் என்றும் தன் மீது அவர் எந்தவித பாலியல் துஷ்பிரயோகமும் மேற்கொள்ளவில்லை என்றும் சத்தியம் செய்கிறான்.
தனது அப்பா பணத்துக்காக தன்னை அவ்வாறு பொய் சொல்லச் சொன்னதாகவும் ஜாக்சனின் ரசிகரிடமும் மறைந்து போன ஜக்சனிடமும் அவரது ஆன்மாவிடமும் தான் மன்னிப்புக் கோருவதாகவும் சொல்கிறான் இந்த ஜோர்டான்.
இனியென்ன மன்னிப்பும் மண்ணாங்கட்டியும்..
அந்த மாபெரும் கலைஞனின் மாசுபடுத்தப்பட்ட புகழும் இதனால் ஜாக்சன் அடைந்த மனப் புழுக்கமும்,அவமானமும் மறுபடி துடைத்தேறியப்படுமா?
இழந்து போன சொத்தை விடுங்கள் புகழ், நற்பெயர், ஜாக்சன் இதனால் இழந்த நிம்மதியும், ஜாக்சன் இறந்ததினால் இசையுலகமும், கோடிக்கணக்கான ரசிகர் அடைந்த இழப்பும் ஈடு செய்யக் கூடியதா?
போங்கடா பணத்தாசை பிடித்த பிசாசுகளா..
இவர்களுக்கெதிராக எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்க மாட்டார்களா?
மறைந்த MJ இன் ஆத்மா சாந்தியடைவதாக...