இது என்னுடைய 250வது பதிவு..
கடந்து வந்த பதிவுலகப் பாதை பற்றி ஏற்கெனவே மைல் கற்கள் கடக்கும்போது சொல்லி இருப்பதாலும் இன்று நேரம் இல்லாததாலும் நேரடியாக மனதில் பதிவிட எண்ணி இருக்கும் விஷயத்துக்கே சென்று விடுகிறேன்...
எனினும் என்னோடு இணைபிரியாமல் இணைந்துள்ள நண்பர்கள்,பின்னூட்டமிடும் பெருந்தகைகள், வாசிக்கும் அன்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.. தொடர்ந்து இணைந்திருங்கள்...
அத்தனை திரட்டிகளுக்கும் மறக்காத மனமார்ந்த நன்றிகள்...
இன்று விடுமுறை நாளில் அவசர அவசரமாக நிகழ்ச்சி முடிந்து விளையாடப் போகிற (இன்று நம்ம வெற்றி FM அணிக்கு ஒரு சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டி இருக்கிறது) என்னுடைய பரபரப்பிலும் இரு பதிவுகள் போட இலகுவாக துரிதமாக தட்டச்சு பண்ணி தந்த சகோதரி வனிதாவுக்கும் ஸ்பெஷல் நன்றிகள்...
ஃபெடரர் எனும் பெரு வீரன்
நேற்று இரவு ரொஜர் ஃபெடரர் என்ற மாபெரும் டென்னிஸ் வீரரின் மகுடத்தில் மற்றுமொரு வைரக்கல் பதிக்கப்பட்ட நாள்.
இன்னுமொரு இறுதிப்போட்டி - இன்னுமொரு ஃபெடரர் வெற்றி என்று இலேசாக சொல்லிவிட்டு போக முடியாதளவு விறுவிறுப்பான நீண்ட நேரம் நீடித்து சென்ற ஒரு பிரமாண்டமான இறுதிப்போட்டி.
வழமையான டென்னிஸ் போட்டிகள் ஒன்றரை அல்லது இரண்டு மணியத்தியாலங்களில் முடிவுறும் போட்டிகளில் நேற்று எனது பொறுமையையும் ஒரு கணம் சோதித்துவிட்டது இந்த இறுதிப்போட்டி.
பின்னே... ஆளுக்கொரு gameஆக வென்று கொண்டே இழுத்தடித்துக்கொண்டே போனால்...
நீண்ட யுத்தம்.. முடிவில் அரவணைப்பு..ஆறுதல்.. வாழ்த்துக்கள்
தத்தம் பரிமாறுதலில்(serve) வெற்றிகளைப் பெற்றுக் கொண்டே முப்பது GAMEகளை இறுதி செட்டில் ஏற்படுத்தி விட்டார்கள்..
இறுதியில் ஸ்கோர்..
5-7,7-6,7-6,3-6,16-14...
ஃபெடரர் ரசிகனான எனக்கு இப்படி ஃபெடரருக்கு தொல்லை கொடுத்தவர்களில் ரஃபேல் நடால், பீட் சாம்ப்ரசுக்குப் பிறகு ஏன் அவர்களை விட அன்டி ரொடிக் அவரது வாழ்க்கையில் விளையாடிய மிகச்சிறந்த போட்டியாக நேற்றைய போட்டியை நான் கருதுகிறேன்.
நேற்று இறுதிவரை உயிரைக்கொடுத்துப் போராடிய அன்டி ரொடிக் ஒரு கட்டத்தில் வென்றால் கூடப் பரவாயில்லை என்றே தோன்றியது.
விம்பிள்டன் வெற்றிக் கிண்ணத்துடன் ஃபெடரர்
ஒருவாறாக 4மணி நேரம் 15 நிமிடங்களின் பின்னர் ஃபெடரர் தனது ஆறாவது விம்பிள்டன் பட்டத்தை அடைந்தபோது அவருக்கு எவ்வளவு மகிழ்ச்சியோ அதைவிட எனக்கு ஒருபடி மேல் திருப்தி!
காரணம் ஃபெடரர் சிறிதுகால இடைவெளிக்குப் பின் மீண்டும் தரப்படுத்தலில் முதலாமிடத்துக்கு வந்துள்ளார்.
2008ம் ஆண்டு ராசியில்லாத வருடமாக அமைந்தபோதும் இந்த வருடத்தின் முதல் இரு கிராண்ட் ஸ்லாம் போட்டிகளிலுமே மகுடம் சூடியிருக்கிறார் ஃபெடரர்.
இப்போது அதிகம் விம்பிள்டன் பட்டம் வென்றவர்களில் அமெரிக்கரான பீட்சாம்ப்ராசை விட ஃபெடரர் ஒன்று மட்டுமே குறைவு.
அத்துடன் நேற்றைய வெற்றியுடன் சாம்ப்ராசின் 14 கிராண்ட் ஸ்லாம்கள் வென்ற சாதனையை ஃபெடரர் முந்தியிருக்கிறார்.
நேற்று இறுதிப்போட்டியைப் பார்க்க சாம்ப்ராஸ் நேரில் வருகை தந்திருந்தும், அமைதியாக, அழகாகப் போட்டியை ரசித்ததும், தனது முன்னாள் எதிர் தன் நாட்டு வீரரைத் தோற்கடித்து தன்னுடைய சாதனையை நெருங்கி வரும் வேளையிலும் புன்முறுவல் மாறாது ரசித்த அழகே அழகு.
முன்னாள் டென்னிஸ் சாம்பியன் பீட் சாம்ப்ராஸ்
உண்மையிலே என்னைப்பொறுத்த வரை கிரிக்கெட்டை விட டென்னிஸ் தான் கனவான்களின் ஆட்டம்.
நான்கு மணித்தியாலங்களுக்கு அதிகமாகப் போராடியும் இறுதிவரை வேகம் குறையாமல் மோதிக்கொண்டோரில் வெற்றி பெற்ற ஃபெடரருக்கு வெற்றிக்கான தங்கக்கிண்ணம்.
ஈடுகொடுத்து சளைக்காமல் போராடித் தோற்ற போதும் பல ரசிகர்களிடமும், முன்னாள் வீரர்களிடமும் பரிதாபங்களையும், பாராட்டுக்களையும் அன்டி ரொடிக் பெற்றுக்கொண்டார்.
அன்டி ரொடிக்
தளுதளுத்து கண் கலங்கி நின்ற ரொடிக்கைப் பார்த்தபோது தோல்வியின் வேதனையும், உயிரைக்கொடுத்து போராடும் போது அது நான்கு நிமிடமோ, நான்கு மணிநேரமோ, நாற்பது வருடமோ தோற்றுப்போனது தோற்றுப்போனது தான் என்ற வாழ்க்கையின் வேதனையின் பாடம் ஏனோ நினைவில் வந்து மனதை சங்கடப்படுத்தியது.
நேற்றைய இறுதிப் போட்டியைப் பார்த்த பொது இருவருமே தோற்கக் கூடாது என்ற எண்ணமும் வந்தது.. அவ்வளவு தூரம் இருவருமே சளைக்காமல் மோதினார்கள்.. ஆனால் என்ன செய்வது வெற்றி என்பது யாரோ ஒருவருக்கு தானே..
ஃபெடரரைப் பற்றி எழுதவேண்டும் என்று பலதடவை நினைத்ததுண்டு. நேற்றைய விம்பிள்டன் இறுதிப்போட்டி இந்த வாய்ப்பளித்துள்ளது.
அமைதியான, சலனமற்ற முகம்.
வெற்றி பெற்றாலும் கர்வம் காட்டாத, தோல்வியுற்றால் துவண்டு போய் அல்லது கோபமடைந்து, கொதித்து உணர்ச்சி வயப்பட்டு போய் கோழையாகி விடாத நேர்த்தியான விளையாட்டு வீரன் - Real sportive player
விளம்பரங்களில் வந்தாலும் ஓவரான அசகாயத்தன, சாகசம் காட்டாத உண்மையான சாம்பியன்.
புகழ்ச்சிகளாலும், வெற்றிகளாலும் மயங்காத, எதிர் வீரர்களை ஏளனப்படுத்தாத, வம்புக்கிழுக்காத நல்ல மனிதர்.
தேவையற்ற பரபரப்பு, கிசுகிசுக்களில் சிக்காதவர்.
இதைவிட ஒரு மனிதருக்கு வெற்றி மேல் வெற்றிகிட்ட வேறென்ன குணங்கள் வேண்டும்?
பி.கு :- இந்த நீண்ட நெடும் போட்டியைப் பார்த்துவிட்டு இந்திய – மேற்கிந்திய தீவுகளுக்கிடையிலான இறுதி ஒருநாள் சர்வதேசப்போட்டி எப்படி என்று பார்க்க அலைவரிசையை மாற்றினால் - வீரர்களுக்குப் பதிலாக மழை விளையாடியிருந்தது. மழையின் கைங்கர்யம் இந்தியாவுக்கு தொடர் சொந்தமாகியுள்ளது.
முக்கியமான வீரர்கள் சிலர் இல்லாமல் பெற்ற வெற்றி என்பதாலும் தோனி சிறப்பாக விளையாடியிருப்பதாலும், தோனியும் இந்திய அணியும் கார்ட்டூன்கள், விமர்சனங்கள், பதிவுகளிலிருந்து கொஞ்சம் தப்பித்துக்கொள்ளலாம்.