சிங்கப்பூரில் சிக்கிய சிங்கம்.. தொடர் பயணப் பதிவு... பகுதி 6

ARV Loshan
16


எக்ஸ்போ என்ற சிங்கப்பூரின் கண்காட்சி நிலையத்தில் தான் ஆசியாவின் மிகப்பெரிய தொழிநுட்ப, ஊடக நுட்ப கண்காட்சி நடைபெற்று வந்தது. Communic Asia 2009/ Broadcast Asia 2009

இங்கே விசாரித்துப் பார்த்த போது நம்ம நாடு போல இல்லாமல் வருடத்தின் நாட்களுமே ஏதாவது கண்காட்சி, நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டே இருக்குமாம்.. மிகப் பிரம்மாண்டமான ஒரு இடத்திலே மூன்று கட்டடத் தொகுதிகளாக அமைந்திருந்தது.

ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் உலகின் மிகப்பெரும் தொழிநுட்ப உற்பத்தி நிறுவனங்கள், தொலைத்தொடர்பு, ஊடகங்கள் சம்பந்தமான உற்பத்தியாளர்கள் தங்கள் பொருட்களை மிகப்பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தி விளம்பரம் செய்வார்கள்.

எங்கள் நிறுவனத்தாரும் வருடாந்தம் ஒலிபரப்புக்குத் தேவையான கருவிகள் பலவும் இங்கே தான் வந்து வாங்குவது வழக்கம். இப்போது சியத எனும் பெயரில் தொலைக்காட்சியும் பரீட்சார்த்தமாக இயங்குவதால் அதற்கான ஒளிபரப்பு சாதனங்களும் வாங்குவதாக இம்முறை திட்டமிருந்தது. (வெகு விரைவில் வெற்றியின் தொலைக்காட்சியும் ஆரம்பிக்கும் என்பது பலரும் ஊகிக்கக்கூடிய விஷயமே)

கண்காட்சி நடக்கும் இடத்துக்கு நாம் சென்றது தொடரூந்தில். MRT என்று அழைக்கப்படும் இந்த தொடரூந்து சேவை சிங்கையில் என்னைக் கவர்ந்த இன்ன்னொரு அம்சம்.

விரைவு, நேரம் தவறாமை, இலகுவானது என்பவற்றால் பலரையும் ஈர்த்துள்ள விஷயம் இது.

ஏற்கெனவே 2002இல் நான் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றுக்கு சென்றிருந்ததனால், இது போன்ற மெட்ரோ ரெயில்களில் நான் பயணித்திருந்தாலும் சிங்கை போன்ற ஆசிய நாடொன்றில் கண்டது மகிழ்ச்சியே.

இலகுவாகப் பிரவேசச் சீட்டு எடுக்க முடிவது, செல்லும் இடம், தொடரூந்து வரும் நேரம், இறங்கும் இடங்களை இலகுவாக அறிதல் போன்ற விஷயங்கள் இலகுவாக இருந்ததனால் ஏற்கெனவே சிங்கப்பூர் அனுபவம் பெற்றிருந்த டினால்,நிஷாந்த போனோர் எமக்கு முன்னரே இலங்கை திரும்பிய பின்னரும், கடைசி இரு நாட்கள் நானும், குருவிட்டவும் பல இடங்கள் சுற்றித் திரிய இலகுவாக இருந்தது.

கண்காட்சி நிலையத்தில் வழமையான பதிவு சடங்குகள் முடித்து அத்தை உறுதிப்படுத்தி அவர்கள் வழங்கிய அட்டைப் பட்டியைக் கழுத்தில் தொங்கவிட்டபடி கண்காட்சிக் கூடங்களைப் பார்வையிட ஆரம்பித்தோம்.

ஒன்றா இரண்டா? சிலவற்றை நான் மேம்போக்காகப் பார்த்து தவிர்த்து விட்டேன்.. என் அறிவுக்கு எட்டாத நுணுக்கமான பெரிய விஷயங்களை எல்லாம் மூளைக்குள் போட்டுக் குழப்பிக் கொள்ள விரும்பாமல், நமக்குத் தெரிந்த நம் துறையோடு சம்பந்தப் பட்ட விஷயங்களாகத் தேடி பார்த்து புது விஷயங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள முயற்சித்தேன்.

ஒவ்வொரு காட்சி சாலைகளுக்கும் செல்லும் முன் அங்கே இங்கே திரிந்து கொண்டிருந்த உதவியாளர்களான பெண்கள்(பல பேரும் மொடல்கள் மற்றும் மாணவிகள்) எங்கள் கைகளில் பெரிய வண்ண வண்ண பைகளை கொடுத்தார்கள்..

விளம்பர் யுக்தி என்று யோசித்தேன்.. அதிலே இன்னொரு விஷயமும் அடங்கியிருந்தது..
ஒவ்வொரு காட்சி சாலைகளிலும் கொடுக்கப்பட்ட ஏராளமான நினைவுச் சின்னங்கள், பரிசுப் பொருட்களை போடுவதற்காகவே இதை முன்கூட்டியே கொடுத்திருந்தார்கள் எனப் பிறகு புரிந்தது.

ஏற்கெனவே இந்தக் கண்காட்சிகளுக்குப் பலமுறை விஜயம் செய்திருந்த டினால்,நிஷாந்த மற்றும் எங்கள் நிறுவனத் தலைவர் ஆகியோர் சொன்னார்கள் , ஒவ்வொரு நிறுவனமும் தருகிற பொருட்களை மறுக்காமல் வாங்கிக் கொள்ளுங்கள்.. அவை பிரயோச்னப்ப்படுமாக இருந்தால்..

நாங்கல்லாம் ஓசியில கொடுத்தால் ஓயிலையே குடிப்பவர்கள்.. சும்மா தந்தால் சுண்ணாம்பே சாப்பிடுபவர்கள்.. இதையெல்லாம் விடுவோமா?

பேனாக்கள், பாக்கெட் calculatorகள், digital diaries, momentos, pen drives, சின்ன சின்ன சுவாரசயமான பொருட்கள், bags என்று ஏராளம் ஏராளம்..

குருவிட்ட சிரித்துக் கொண்டே சொன்னார்.. " பெரிதா இங்கே ஷொப்பிங் செய்யத் தேவையில்லை.. bags எல்லாம் நிரப்பிட்டாங்க"
நாகரிகப்படி எங்கள் visiting cardகளையும் பரிமாறிக் கொண்டோம்.. பல முக்கியமான தொடர்புகளை ஏற்படுத்த இது நல்ல வழி.

பார்த்தவரை ஒன்றிரண்டு இந்திய நிறுவனங்களும், ஒரே ஒரு இலங்கை நிறுவனமும் மாத்திரமே கடை விரித்திருந்தன.

காட்சிப்படுத்தப்பட்டிருந்த புதிய நுட்பங்கள், கருவிகளைப் பார்த்த போது தான் எங்கள் நாட்டில் நாம் பயன்படுத்தும் சில உபகரணங்கள் இன்னும் எவ்வளவு பின்தங்கியிருக்கின்றன எனப் புரிந்தது.

எனினும் இலங்கையில் இறுதியாக ஆரம்பித்த வானொலி என்பதால் எங்கள் வானொலியில் நாம் பயன்படுத்துகின்ற இயக்குவிசைப்பலகை( Console board), ஒலிவாங்கிகள், ஒலிபரப்பு மென்பொருள் போன்ற பல விஷயங்கள் ஒப்பீட்டளவில் புதியனவாகவும், கண்காட்சி சாலைகளில் கேள்வி (Demand) உள்ளனவாகவும் இருந்ததைக் கண்டு பெருமையாகவும் இருந்தது.

விலைகளை விசாரித்த போது தலைசுற்றியது.

ஒரு வானொலி நிலையத்தை முதலிட்டு ஆரம்பிப்பதென்பது எவ்வளவு செலவான, ரிஸ்க்கான விஷயமென்று புரிந்தது.

இந்த வேளையில் எனது தனிப்பட்ட துறைசார் வளர்ச்சியில் பெரும் துணையாக இருந்த சூரியன்FM வானொலியின் 11வது பிறந்ததினம் இன்று.

6 வருடங்கள் எனது வாழ்வின் அங்கமாக விளங்கிய சூரியனுக்கு மனமார வாழ்த்துகிறேன்!

சிங்கப்பூர் கண்காட்சிகளின் போதுதான் எனக்கு இலங்கையின் வானொலி, தொலைக்காட்சிகளைப் பற்றிய இன்னுமொரு விஷயமும் புரிந்தது.

அது என்ன?

அது அடுத்த அங்கத்தில்.....

(நேரம் கிடைக்கும் போது பகுதி 7 தொடரும்...)


பி.கு - தலைப்பைக் கொஞ்சம் மாத்திப் போட்டேன்.. கொஞ்சம் கிக்காய் இருக்கட்டுமே என்று.. ;) நண்பர்கள் கேட்டபடியால் மறுபடி சஸ்பென்சில் விட்டுப் போறேன்.. எதிர்பார்ப்பு இருக்கட்டுமே..

Post a Comment

16Comments

Please Select Embedded Mode To show the Comment System.*