285/1 இலிருந்து 320க்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து *தங்களை விட்டால் தங்களைத் தாங்களே கவிழ்த்துக் கொள்வதில் வேறு யாரும் சிறந்தவர் இருக்க முடியாது என்பதை பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மீண்டும் ஒரு தடவை நிரூபித்து விட்டது.
* நன்றி - வினையூக்கி
35 ஓட்டங்களுக்கு 9விக்கெட்டுக்களை இழப்பதென்பது சும்மா லேசுப்பட்ட காரியமா?
பாவம் அந்த அறிமுக வீரர் பாவட் அலாமின் அபார சதத்தினையும் கடும் உழைப்பினையும் அநியாயமாக்கிய ஏனையோரை என்ன சொல்வது?
அலாமின் சதம் பற்றிய சுவார்சயமான விஷயம் ஒன்றைப் பற்றிப் பிறகு பதிவிடுகிறேன்.
ஒரு அறிமுக வீரர் இலங்கை அணிக்கேதிராகப் பெற்ற கூடிய ஓட்டங்கள் என்ற சாதனையும், இலங்கை மண்ணில் ஒரு பாகிஸ்தானிய வீரர் பெற்ற கூடிய டெஸ்ட் ஓட்டங்கள் என்ற சாதனையும் இப்போது அலாமின் வசம்.
என்ன இருந்து என்ன?
அணித்தலைவர் யூனிஸ் கானும் அலாமும் பெற்ற 200 ஓட்ட இணைப்பாட்டத்தை தொடர்ந்து எல்லா பாகிஸ்தானிய வீரரும் வருவதும் போவதுமாக ஒரு கிரிக்கெட் catwalk நடாத்தி இருந்தார்கள்.
நேற்று இலங்கை வீரர்களை உமர் குல் தனது ஸ்விங், ரிவேர்ஸ் ஸ்விங் மூலமாக உருட்டியதைப் போல இன்று குலசேகர பாகிஸ்தானிய விக்கெட்டுகளை சரித்தார்.
முதலாவது டெஸ்ட் போட்டியின் ஹீரோ ரங்கன ஹேரத் இந்த இன்னிங்க்சில் ஐந்து விக்கெட் பெறுதியை (5 wicket haul) பெற்றார்.
இது இவரது முதலாவது ஐந்து விக்கெட் பெறுதி.
காலி டெஸ்ட் போட்டியின் பின்னர் தனக்கு இதுவரை ஐந்து விக்கெட் பெறுதி கிடைக்கவில்லை என்றும் விரைவில் எடுப்பதாகவும் சொல்லி இருந்தார்.
அது இவ்வளவு விரைவாக வரும் என்று அவரே யோசித்திருக்க மாட்டார்.
இலங்கை அணிக்கு இப்படியொரு அதிர்ஷ்ட வாய்ப்பு கிடைக்கும் என்று இன்று பகல் போசன இடைவேளை வரை பாகிஸ்தான் ஆடிய அபாரமான ஆட்டம் பார்த்த யாருமே நினைத்திருக்க மாட்டார்கள்.
மதிய போசனத்துக்கு முன் பாகிஸ்தானின் கையில் இருந்த ஆட்டம் இடைவேளையின் பின் முற்றாக இலங்கையின் கைகளுக்கு வந்துவிட்டது. (மதியம் என்ன சாப்பிட்டாங்களோ???)
மீண்டும் ஹீரோ ஹேரத்
ஒரு ஒற்றுமை பாருங்கள்.. இலங்கை அணியின் விக்கெட்டுக்களை பகிர்ந்து கொண்டவர்கள் குல் & அஜ்மல் (4+4)
பாகிஸ்தானிய விக்கெட்டுக்களையும் அதே போல வேகப் பந்து வீச்சாளர் குலசேகர 4 & சுழல் பந்து வீச்சாளர் ஹேரத் 5.
இலங்கை அணிக்கு வெற்றி இலக்கு 171.
கிட்டத்தட்ட காலியில் நான்காவது இன்னிங்க்சில் பாகிஸ்தானுக்கு கிடைத்தது இதே இலக்கு தான்..
ஆனால் இலங்கை அணி பாகிஸ்தான் போல சுருண்டு விடாது..
பாகிஸ்தானிய பந்து வீச்சாளர்கள் தம்மை மடக்கி விடக் கூடாது என்பதற்காகத் தான் ஆரம்பமுதலே வேகமாக அடித்து விளாசி வருகிறார்கள் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள்.
இந்த ஆட்டத்தைக் கவனித்துப் பார்த்தால் பாகிஸ்தானின் குல் ரிவேர்ஸ் ஸ்விங் எடுக்க ஆரம்பித்ததும் குலசேகர இன்று ரிவேர்ஸ் ஸ்விங் எடுத்ததும் அறுபது ஓவர்களுக்குப் பிறகே.
எனவே அதற்கு முன்பாக வெற்றி இலக்கை அடைவதே இலங்கை அணியின் திட்டம்.
வென்றால் இலங்கை ஆண்டுகளாக எதிர்பார்த்த சரித்திரபூர்வ தொடர்வேற்றியும் கிட்டும்.
இதுவரை இலங்கை அணி பாகிஸ்தானை இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடர் ஒன்றில் வென்றதில்லை என்ற அவப் பெயரும் நீங்கும்.
வெற்றி இலங்கை அணிக்கு நிச்சயம் என்று இப்போதே உறுதியாக பதிவிடுகிறேன். (இதென்ன பாகிஸ்தானா சுருண்டு கையில் கிடைத்த வெற்றியைத் தாரை வார்ப்பதற்கு?)
கேள்வியெல்லாம் இன்று ஆட்டம் முடிவுக்கு முன் வெல்லுமா இல்லை நாளை மதிய போசனத்தின் முன்பா என்பது தான்..
பி.கு - இலங்கை அணி வென்றால் ஒன்று கொஞ்ச நாளாக சறுக்கி வரும் என் எதிர்வு கூறல் மீண்டும் பலிக்க ஆரம்பிக்கும்.
இரண்டாவது நண்பர் ஹிஷாம் என்னுடன் பிடித்த பந்தயத்தில் தோற்பதால் எனக்கு மட்டுமல்லாமல் எண் அலுவலக சகபாடிகளுக்கும் ஐஸ் கிரீம் கிடைக்கும்..
(171 இலக்கு என்று தெரிந்து பந்தயத்துக்கு வந்த அவரு ரொம்ப நல்லவரு.. )
நான் இதைப் பதிவேற்றும்போது இலங்கை அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 62 ஓட்டங்கள்..
இப்ப என்ன சொல்லுறீங்க?
முரளி இல்லாமல் மீண்டும் ஒரு டெஸ்ட் வெற்றி..அது மட்டுமல்லாமல் முரளி இல்லாமல் ஒரு சரித்திரபூர்வ தொடர் வெற்றி..ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.. ஆனால் உண்மை..இலங்கைக்கு வெற்றி.. பாகிஸ்தானுக்கு நன்றி..