அதிர்ச்சி.. அசத்தல்.. இலங்கை வெற்றி.. பாகிஸ்தான் தற்கொலை

ARV Loshan
26


காலி டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி அதிர்ச்சி வெற்றி..
ஐம்பது ஓட்டங்களால் பாகிஸ்தானிய அணியை தோற்கடித்தது..

இலங்கை அணி சற்று முன்னர் காலி மைதானத்தில் ஐம்பது ஓட்டங்களால் பெற்ற டெஸ்ட் வெற்றி இலங்கை அணி வீரர்களே நேற்று வரை.. ஏன் இன்று காலை வரை எதிர்பார்த்திராத ஒன்றாகவே இருந்திருக்கும்.

168 என்ற ஒரு சிறிய மிகக் சிறிய இலக்கை நோக்கி பாக்சிதான் நேற்று துடுப்பெடுத்தாட ஆரம்பித்த போதே நான் நினைத்தேன் ஐந்து நாள் டெஸ்ட் போட்டி நான்காவது நாளான இன்று மதிய போசன இடைவேளைக்கு முன்னதாகவே முடிவுக்கு வந்துவிடும் என்று.

அதுவும் இன்று காலை பாகிஸ்தான் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த போது கையில் எட்டு விக்கெட்டுக்கள் இருக்க, 97 ஓட்டங்கள் மட்டுமே தேவை.

அதுவும் ஆடுகளத்தில் சல்மான் பட்டும், முதல் இன்னிங்ஸ் சதம் அடித்த ஹீரோ மொகமட் யூசுப்பும்...

யார் தான் நினைத்தார்கள் பாகிஸ்தான் அணி 168ஐ பெற முடியாமல் உருண்டு புரண்டு சுருண்டு போகும் என்று..

முரளியும் இல்லாத இலங்கை அணியின் பலவீனமான பந்துவீச்சு என்ன செய்து லிழித்துவிடும் என்று ஏளனமாக நினைத்தவர்களில் நானும் ஒருவன். மழை வந்தால் நன்றாக இருக்குமே என்று வில்லத்தனமாகவும் நினைத்தேன்..

இலங்கையின் பந்துவீச்சாளர்களின் திறமையை விட, உண்மையில் பொறுப்பற்ற பாகிஸ்தானின் துடுப்பாட்டம் தான் இன்றைய வெற்றியை இலங்கை அணிக்கு வழங்கி இருக்கிறது.
பாகிஸ்தான் அணியின் வழமையான சொதப்பும் வியாதி, தற்கொலை செய்து தோற்கும் மனோநிலை தொடங்கி விட்டதோ? (இதே வியாதி இந்திய அணிக்கும் பலவேளைகளிலும், இலங்கை அணிக்கு சிலவேளைகளிலும் இருப்பதும் உண்மை..)

நின்று நிலைத்து ஆடவும் விரும்பாமல், வெற்றியைப் பெற்றுக் கொள்ளும் உத்வேகமும் இல்லாமல் மளமளவென்று பாகிஸ்தானிய விக்கெட்டுக்கள் சரிந்ததை என்னவென்று சொல்வது?

சங்ககாரவின் ஆக்ரோஷமான களத்தடுப்பு ஏற்பாடுகளும், பந்துவீச்சாளர்களை நேர்த்தியாகக் கையாண்டதும் குறிப்பிட்டே ஆகவேண்டிய விடயங்கள்.

எனினும் பாகிஸ்தானின் உண்மையான வில்லன், அஜந்தா மென்டிசின் வருகையால் ஒதுக்கித் தள்ளப்பட்டு, முரளியின் இறுதி நேர காயம் காரணமான விலகல் காரணமாக கடைசி நேரத்தில் அணிக்குள் கொண்டுவரப்பட்ட ரங்கன ஹேரத் தான்.

15 ஓட்டங்களை மட்டுமே கொடுத்து ஹேரத் பாகிஸ்தானின் நான்கு துடுப்பாட்ட வீரர்களை ஆட்டமிழக்க செய்தார்.

பெரிதாக பில்ட் அப் கொடுத்து எதிர்பார்க்கப்பட்ட அஜந்த மென்டிஸ் பெரிதாக சோபிக்கவில்லை. இரண்டாம் இன்னிங்க்சில் அவர் பெற்ற இரண்டு விக்கெட்டுக்களை விட.

இந்த பெறுபேறுகள் மூலமாக போட்டியின் சிறப்பாட்டக்காரர் விருதை மட்டுமல்லாமல் அடுத்த டெஸ்ட் போட்டிக்கான இடத்தையும் ஹேரத் பெற்றுள்ளதாக நான் நினைக்கிறேன்.

இலங்கை அணியில் நிரந்தர இடம் கிட்டாததை அடுத்து இங்கிலாந்தில் கழக மட்டத்தில் கிரிக்கெட் ஆடிவந்த ஹேரத் அவசர அவசரமாக வந்தே இங்கே இந்த முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி இருந்தார்.

இன்றைய ஹீரோ ஹேரத் தான்..

பாகிஸ்தானிய அணியைப் பலமுறை இலங்கை அணி பாகிஸ்தானிய மண்ணில் வெற்றி கொண்டிருந்தாலும், இலங்கையில் வைத்து பாகிஸ்தானிய அணியை டெஸ்ட் போட்டியொன்றில் வெற்றி கொள்வது இதுவே இரண்டாவது தடவை.

அதுவும் 23 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வெற்றி கிட்டியுள்ளது.

இதுவரை இலங்கை பாகிஸ்தானை இலங்கையில் வைத்து டெஸ்ட் தொடரொன்றில் வெற்றி கொண்டதே இல்லை.. இம்முறை அதற்கான வாய்ப்புக்கள் பிரகாசமாக ஏற்பட்டுள்ளது.

இன்னுமொரு விசேடம் முரளிதரன் டெஸ்ட் அறிமுகம் மேற்கொண்டதன் பின்னர் முரளி இல்லாமல் இலங்கை அணி வென்ற நான்காவது டெஸ்ட் போட்டி தான் இது.

இன்னுமொரு வேடிக்கை முதலாம் இன்னிங்க்சில் பாகிஸ்தான் இலங்கை அணியை விட ஐம்பது ஓட்டங்கள் அதிகமாகப் பெற்றது.அதேயளவு ஓட்டங்களால் தோல்வியைத் தழுவி இருக்கிறது.

டெஸ்ட் போட்டியின் ஆரம்பத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய பாகிஸ்தானுக்கும் ,தொட்டதெல்லாம் துலங்கிய அதன் தலைவர் யூனிஸ் கானுக்கும் கடைசி வெற்றி கானல் நீராகப் போய் விட்டது.

இறுதி வரை போராடக் கூடிய அணிகளில் ஒன்று என்ற பெயரை இலங்கை மீண்டும் நிரூபித்துள்ளது.

காலி மைதானம் நான்காம் இந்நிங்க்சுக்கு பயங்கர மைதானம் என்பதை மீண்டும் அழுத்தமாகக் காட்டியுள்ளது.

இங்கே நான்காம் இன்னிங்க்சில் ஒரு அணி வெற்றி ஈட்டிய மிகப்பெரிய ஓட்ட எண்ணிக்கை வெறும் ஆறு ஓட்டங்கள்.

பாகிஸ்தான் இன்று தமக்கு வழங்கப்பட்ட வெற்றி இலக்கான 168ஐ பெற்றிருந்தால் இந்த மைதானத்தில் இறுதி இன்னிங்க்சில் பெறப்பட்ட மூன்றாவது பெரிய ஓட்ட எண்ணிக்கையாக அது அமைந்திருக்கும்.

இந்த அதிர்ச்சி தோல்வியிலிருந்து பாக்சிதான் மீண்டு நம்பிக்கையோடு அடுத்த டெஸ்ட் போட்டிக்குள் பிரவேசிப்பது மிக சிரமமாக இருக்கும்.

அதுவும் இந்த வெற்றி தந்துள்ள அசாத்திய மனத் துணிச்சலோடு முரளிதரனும், பிரசன்ன ஜயவர்தனவும் அணிக்குள் மீண்டும் வரும்போது இலங்கை அணி அசுரபலத்தோடு வரும் என்பது உறுதி. (துடுப்பாட்டம் கொஞ்சம் தடுமாறுகிறது.. கொஞ்சம் டிங்கரிங் செய்ய வேண்டும்)

சங்ககார தலைமை தாங்கிய முதல் போட்டியே வெற்றியைத் தந்திருக்கிறது.

மங்களமான ஆரம்பம்..

தொடரட்டும் வெற்றி நடை..

Post a Comment

26Comments

Please Select Embedded Mode To show the Comment System.*