கடந்த சில நாட்களாக இருந்த வேறு வேலைகள். விருதுகளால் போடவேண்டியிருந்த பதிவுகளால் சிங்கப்பூர் சங்கி விமான நிலையத்திலேயே ரொம்ப நாட்கள் காக்கவைத்துவிட்டேன்.
இனி வெளியே வரலாம்...
விமானம் ஏறுவதற்கு முன் நடந்த இன்னொரு முக்கியமான விஷயத்தை சொல்லியே ஆகவேண்டும்.
அப்போதைய காலகட்டத்தில் (இப்போதும் கூடத்தான்) சில ஊடகவியலாளர்கள் (தமிழர்கள் மட்டுமன்றி) வெளிநாடு செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது அனைவரும் அறிந்ததே.
அதிலும் எனது நவெம்பர் மாத சம்பவமும் அது சம்பந்தமாக இனியும் ஏதாவது சந்தேகம் இருக்கலாம் என்பதையும் எங்கள் அலுவலக நிர்வாகம் அறிந்தே இருந்தது.
என் மீது அவர்கள் காட்டிய அக்கறை வெளிப்பட்ட தருணம் அது. புலனாய்வு அதிகாரிகள் செயந்துள்ள நுழைவாயில் பகுதியில் மிகப்பக்குவமாக எனக்கு முன்னால் குருவிட்ட அவர்களை அனுப்பிய பின் என்னைப் போகவிட்டு பின்னாலேயே எங்கள் பெரிய தலைகள் வந்திருந்தார்கள்.
தற்செயலாக எனக்கு ஏதாவது சிக்கல் நேர்ந்தாலும் என்று இந்த முன்னெச்சரிக்கை..
கடந்த அங்கத்தில் நான் விட்ட இடம்...
யாரோ இரண்டு இளம் வாலிபர்கள் தூரத்திலிருந்தே என்னையே உன்னிப்பாகப் பார்த்தபடி ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். என்னைப் பற்றித் தான் பேசுகிறார்கள் என்று விளங்கியது. தமிழர்கள் என்றும் தெரிந்தது.அப்படியே என்னை நோக்கி நடந்து வர ஆரம்பித்தார்கள்...
அந்த இருவரும் கிட்ட வந்து புன்னகைத்த பின்னரும் எனக்கு அவர்களை யாரென்று அடையாளம் காணவில்லை.. அவர்களாக அறிமுகப் படுத்திக்கொண்டார்கள்.
அண்ணனும் தம்பியுமான அந்த இருவரும் நீண்டகால எனது நேயர்கள். தம்பி சிங்கப்போரில் தொழில் செய்கிறார்.அண்ணன் கனடாவிலிருந்து விடுமுறைக்காக தம்பியிடம் வந்திருந்தார்.
குசலம் விசாரித்து நாட்டு நடப்புக்கள்,நிலைமைகள் குறித்து கேட்டறிந்துகொன்டார்கள்.
சிங்கப்பூரில் இறங்கிய உடனேயே நம்ம நேயர்களா? பரவாயில்லையே..
எனது Chairmanக்கும் பெரிய பெருமிதம்.. இங்கேயும் இவனுக்கு நேயர்கள் இருக்கிறார்கள் என்று.
லோஷன் அண்ணா என்று இன்னுமொரு குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தால் ஒரு இளம் பெண், அருகே அவரது கணவர் மற்றும் ஒரு சிறுமி.. மகளாக இருக்கவேண்டும்நான் யாரென்று புதிர்ப்பார்வை பார்க்க, தாங்களாகவே அறிமுகப்படுத்தினார்கள்.
எனது நீண்டகால நேயர்களில் ஒருவரான சிசிலியாவின் தங்கை குடும்பத்தினர். சிசிலியா எனது ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் மறக்காமல் ஏதாவது ஒரு பரிசு அனுப்பி வைப்பவர். அவரது பிறந்த நாளும் எனது பிறந்தநாள் அன்றே (ஜூன் 5) எனது ஒவ்வொரு ஒலிபரப்பு மைல் கற்களையும் ஞாபகித்து வைத்து வாழ்த்து சொல்பவர்.
தாங்கள் இங்கே வாழ்ந்து வருவதாகவும், யாரோ உறவினர் ஒருவரை வரவேற்க வந்திருப்பதாகவும் சொன்னார்கள். நலம் விசாரித்து விடை பெற்றேன். வாயில் கடப்பதற்குள் மேலும் ஒரு சிலர்.. இணையத்தளத்தில் வெற்றி FM கேட்கும் நண்பர் ஒருவர் என்னை அடையாளம் கண்டு பேசினார். தனது நண்பர்களையும் அறிமுகப் படுத்தினார்.
"பேசாமல் லோஷனை இங்கேயே விட்டிட்டு போனால் இங்கேயே ஒரு வெற்றியைத் தொடங்கிடுவார் போல இருக்கு " என்று டினால் கிண்டலடித்தார்.
வெளியே வந்து இல ஏறி நாம் தங்கவிருந்த hotelக்கு பயணித்தோம்..
இருபக்கமும் பசுமையான மரங்களும் அழகான சுத்தமான வீதியும், நெடிதுயர்ந்த கட்டடங்களும் எனக்கு ஐரோப்பிய நாடுகளையே ஞாபகப்படுத்தியது.
இந்த நாட்டையா எங்கள் நாடு இன்னும் 25 வருடங்களுள் எட்டிப் பிடிக்கப் போகிறது என்று எண்ணிப் பார்த்தேன்..
எனினும் வியப்பை அளித்த ஓரிரு விஷயங்கள்..
போக்குவரத்து நெரிசல் இல்லா வீதிகள்..
காலை வேளைக்கான எந்தவொரு பரபரப்பும் இல்லை..
2002ஆம் ஆண்டு Modelக்குரிய Toyotaகாரில் மணிக்கு 120என்ற வேகத்தில் பயணித்துக் கொண்டிருந்தும் எந்தவொரு குலுக்கலசைவுகளும் இல்லை.
எங்கள் Chairman,அவரது மனைவி ஆகியோர் வேறிடத்திலும் நாங்கள் கேலாங் என்ற இடத்திலும் (சிங்கப்பூர் நண்பர்கள்/சிங்கப்பூரை நன்கு அறிந்தவர்கள் சிரித்துக் கொள்வார்கள்) தங்குவதாக ஏற்பாடு.
எங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு மூன்று நட்சத்திர விடுதியை அடைந்தோம்.
ஓய்வெடுக்க நேரமில்லை.. அவசர அவசரமாக அலுப்புத் தீர குளித்து ஆடை மாற்றி கண்காட்சிக்கு புறப்பட்டோம்.
ஊர் சுற்றிப் பார்ப்பதற்கும், சிங்கப்பூருக்கு முதன்முறையாக வந்துள்ள எனக்கும்,குருவிட்ட அவர்களுக்கும் இடங்கள்,இடக்குறிப்புக்கள் காட்டுவதற்காகவும் தொடரூந்து மூலமாக செல்வதாக ஏற்பாடு.
போகிறவழியிலேயே காலை சாப்பாட்டை ஒரு இந்தியக் கடையிலே முடித்துக் கொண்டோம்..
உள்ளே நுழைகிற நேரம்
"ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது" ஒலி வானொலிப் பாடல் வரவேற்றது.
அடுத்த அங்கம் கண்காட்சித் திடலில்..
(நேரம் கிடைக்கும் போது பகுதி 6 தொடரும்...)