அழகிய பெண் - என்னை நோக்கி வருவதாக தொடரும் போட்டவுடனேயே... நிறைய எதிர்பார்ப்பு... பல கேள்விகள் பல விதமாக...
எல்லாவற்றுக்கும் மேலாக வீட்டுப்பக்கமிருந்தும் சந்தேகப்பார்வை...
வீண்பிரச்சினை வேண்டாமென்று
இதோ பகுதி- 04
நாகரிக உடையணிந்து என்னை நோக்கி நடந்து வந்த அந்தப்பெண் புன்முறுவலோடு " மிஸ்டர் லோஷன்?" என்று கொஞ்சம் சந்தேகமாகக் கேட்டார்.
' யெஸ்...' என்று தலையாட்டினேன்.
தான் எனது நீண்டகால வானொலி ரசிகை என்றும், பிரபல IT நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் தான் அலுவலக விஷயமாக சிங்கப்பூர் வழியாக மலேசியா செல்வதாகவும், தன்னுடைய சக அலுவலக ஊழியர்கள் மூவரையும் அறிமுகப்படுத்தி வைத்தார்.
விமானத்தில் தன்னுடைய இருக்கை இலக்கம் 36 C என்றும் என்னுடைய ஆசன எண் என்னவென்றும் கேட்டார்..
என்ன செய்ய அவருடைய துரதிர்ஷ்டமோ என்னுடையதோ.. எனது எண் 49 J..
"உங்களைப் பல மேடை நிகழ்ச்சிகளில் பார்த்திருக்கிறேன்.. ஆனால் இன்று தான் இப்படி நேராகப் பேசக் கிடைத்தது ..Nice meeting"என்று குயிலாகக் கூவி, ஒயிலாக விடை பெற்றார் அந்த விமான நிலைய விசிறி.. (பாருங்கடா எப்படி கவிதை நடை வருது)
நிறையப் பேர் நிறைய எதிர்பார்த்து இவ்வளவு தான் கதை என்று போனதுக்கு நான் ஒண்ணுமே செய்ய முடியாது.. காரணம் இந்தத் தொடர் பதிவில் நடந்த எல்லா விஷயங்களையும் அப்படியே எழுதுவதாக உத்தேசம்.. (ஒரு சிலவற்றை சிலரின் நன்மை, அந்தரங்கம் கருதி தவிர்ப்பதை விட)
ஒரு மாதிரியாக விமானம் ஏறும் நேரம் வந்தது..
49 ஆம் இலக்க ஆசனத்தில் எனக்கு அருகில் குருவிட்ட பண்டார.
முன்னால் இருந்த டினாலும், அந்த விசிறியும் (அவர் பெயர் வேண்டாமே) திரும்பிப் பார்த்து புன்னகைத்தார்கள்.
இந்த விமானம் சிங்கப்பூரில் நின்று பின் ஹோங் கொங் செல்வதால் விமானம் நிறைந்தே இருந்தது.
எஞ்சின்கள் இயக்கப்பட்டும் விமானம் புறப்படுவதாக இல்லை.. அரை மணி கடந்தும் அவ்வாறே..
அதற்குள் எந்த ஒரு சிக்கலுமில்லாமல் வீட்டுக்கு பத்திரமாக வந்து சேர்ந்ததாக மனைவியின் sms வந்திருந்தது. அடையாள அட்டையைத் தேடுமாறும் விமானம் புறப்படப் போவதாகவும் பதில் அனுப்பி விட்டு எப்போது விமானம் மேலே ஏறும் என்றும் பார்த்துக் கொண்டிருக்க ஆரம்பித்தோம்.
மேலும் நேரம் செல்ல விமானத்துக்குள்ளே முணுமுணுப்புக்கள்.. ஒரு சில பதட்டமான குரல்களும் கூட.
இதற்கிடையில் விமானியின் கம்பீரமான குரல் அனைவரையும் அமைதியாக இருக்குமாறும் சிறு தொழிநுட்பக் கோளாறு காரணமாகவே இந்தத் தாமதம் என்றும் பாதுகாப்பாக அனைவரையும் தான் உரிய இடத்தில் கொண்டு சேர்ப்பதாகவும் (your destination... அடப் பாவி இப்படியா சொல்றது) உறுதியளித்து பதினைந்து நிமிடங்களில் விமானம் ஊர்ந்து, விரைந்து, கிளம்பியது..
கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் தாமதம்.
மேலே கிளம்பிய பிறகு வயிற்றைக் கிள்ளிய பசியோடு பரிமாறும் பெண்கள் (அவ்வளவு அழகிகள் இல்லை நண்பர்களே.. Cathay Pacificவிமான சேவையிடம் முறைப்பாடு செய்யவே வேண்டும்..)
வரும்வரை காத்துக் கொண்டே விமானத்தில் காட்டப்பட்ட படங்களில் (in flight movies)ஒன்றைத் தெரிவு செய்து பார்த்துக்கொண்டிருந்தேன்.
சில நல்ல, பார்க்கவேண்டும் என்று நான் திரைப்படங்கள் தெரிவுக்காக இருந்த போது நான் தெரிவு செய்து பார்க்க ஆரம்பித்தது The International.
Clive Owen, Naomi Watts நடித்த ஒரு விறு விறு திரைப்படம். ஐரோப்பிய நாடுகளிடையே நடக்கும் ஆயுத வணிகம், மறைமுகக் கடத்தல்கள் பற்றி ஆராயும் ஒரு படம்.
அங்கு Valkyrie என்ற ஹிட்லர் காலத்தைய நிலையைக் காட்டும் அற்புத படம் இருந்தாலும் (இது பற்றி கட்டாரில் இருக்கும் என் தம்பி அடிக்கடி புகழ்ந்து சொல்லிக் கொண்டே இருப்பான்) எனக்காக அதை தம்பி DVDஇல் கொண்டு வந்திருப்பதனால் அதைப் பிறகு வீட்டிலேயே பார்க்கலாம் என விட்டு விட்டேன்.
வந்த உணவை விழுங்கி விட்டு (பசி அப்படிக் கொடுமைங்கோ) படம் பார்த்துப் பார்த்து இருந்த அசதியில் தூங்கி விட்டேன்.. )
இடை நடுவே டினால் வந்து கொஞ்சம் சம்பாஷித்து விட்டு போனார்.. என்னைத் தெரிந்துகொண்ட இன்னொரு நண்பரும் வந்து வெற்றி வானொலி, கிரிக்கெட், நாட்டு நடப்பு பற்றி ஐந்து நிமிடம் பேசி விட்டுப் போனார்..
மீண்டும் தூங்கி விட்டு, சிங்கப்பூர் வான் எல்லைக்குள் பிரவேசிக்கும் நேரம் மொபைலை இயக்கி அதை காமெராவாகப் பயன் படுத்தி கண்ணாடிக்கு வெளியே தெரிந்த சில அழகான காட்சிகளை கிளிக்கிக் கொண்டேன்.
திரள் திரளாக முகில்கள்..
மெதுவாக விமான இறங்கி நாம் பொறுமையாக சிங்கப்பூரின் சங்கி விமான நிலையத்தினுள் கால் பதிக்கையில் சிங்கப்பூர் நேரம் காலை 6.30.
பன்றிக் காய்ச்சல் நோயாளிகளை (சொல்லும்போதே பயங்கரமாக இல்லை?) கண்டறி கருவி(Sensor) தாண்டி (கொஞ்சம் உடல் வெப்பநிலை ஏறி இறங்கினாலும் வைத்தியசாலைக்கு கொண்டுபோய் விடுவார்களாம்) வரிசையாக குடிவரவுப் பக்கம் வருகையில் பல இடங்களிலும் தூய, அழகு தமிழில் இருந்த அறிவித்தல் பல கண்டு உண்மையில் மிக மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருந்தது.
உண்மையில் தெளிவான, அழகான தமிழ்.நம்ம நாட்டிலெல்லாம் சில இடங்களில் தமிழைக் கடித்து துப்பி இருப்பார்கள்.. இல்லை கொடுந்தமிழில் படுத்தி இருப்பார்கள்
எந்தத் தொல்லையும் இன்றி இற்கு வந்து எம் குழுவில் எல்லோரும் வந்திருக்கிறோமா என்ற பார்த்து எந்த ஹோட்டல், எப்படி போகப் போகிறோம், எத்தனை மணிக்கு கண்காட்சி நிலையத்துக்கு போகப் போகிறோம் என்று Chairmanஓடு கலந்துரையாடிக் கொண்டிருந்தோம்.
யாரோ இரண்டு இளம் வாலிபர்கள் தூரத்திலிருந்தே என்னையே உன்னிப்பாகப் பார்த்தபடி ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். என்னைப் பற்றித் தான் பேசுகிறார்கள் என்று விளங்கியது. தமிழர்கள் என்றும் தெரிந்தது.
அப்படியே என்னை நோக்கி நடந்து வர ஆரம்பித்தார்கள்...
(நேரம் கிடைக்கும் போது பகுதி 5 தொடரும்...)