July 15, 2010

ஒரு கிரிக்கெட் மசாலா

என்னை விளையாட்டுப் பதிவர் (விளையாட்டான அல்ல) என்று நிரந்தரப் பெயர் சூட்டினாலும் பரவாயில்லை.
இந்தப் பதிவும் விளையாட்டுப் பற்றியதே..


சுருக்க சுருக் என்று சில,பல கிரிக்கெட் விஷயங்கள்..
(நீளமா இல்லாததால் நிம்மதியா நின்று வாசிச்சிட்டுப் போங்கோ..)


கிரிக்கெட் (நீண்ட நாட்களுக்குப் பிறகு) கொஞ்சம் அலுத்து இருந்தது.. கால்பந்தாட்டத்தின் மீது மீண்டும் ஒரு காதல்.
ஆனாலும் உலகக் கிண்ணப் பரபரப்புக்கள் ஓய மீண்டும் முதல் காதல் எட்டிப் பார்க்கிறது :)இந்தியா vs இலங்கை


இந்தியா இலங்கை வந்த நாளில் இருந்து,ஏதோ இழுபறிப்பட்டு சிக்கல் பட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.
பேசாமல் சீமான் சொன்னது போல வராமலே இருந்திருக்கலாம்னு நேற்று என்னுடைய இந்திய அணியின் ரசிக நண்பர் ஒருத்தர் சொன்னார்.


வர முதலே சகீர் கான் காயப்பட்டுக் கொண்டார்.
வந்திறங்கியவுடன் ஸ்ரீசாந்த் காயம்பட்டு வந்த வேகத்திலேயே திரும்பினார்.
அவரது 'நெருங்கிய' நண்பர் ஹர்பஜன் காய்ச்சலில் படுத்துவிட்டார்.
(முரளி வேற குருவி தலையில் பனங்காய் மாதிரி தன் சாதனையை முறியடிக்க அதிக வாய்ப்புடையவர் இவர் தான் என்று சொல்லிட்டார்.. குளிர் காய்ச்சலோ தெரியல)


இந்திய அணிக்கும் ஏதோ ஒரு காய்ச்சல்..
மூன்று நாள் பயிற்சிப் போட்டியில் இன்று மூன்றாவது நாள்.
போட்டி சமநிலையில் முடிந்தாலும் இளைய இலங்கை வீரர்களிடம் இந்தியா வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளது.


பந்துவீச்சு படுமோசம். துடுப்பாட்டம் பரவாயில்லை.
இது சும்மா ஜுஜுப்பிப் போட்டி தானே?
டெஸ்ட் போட்டியில் பிளந்து கட்டுறோம் பாருங்கள் என்று தோனி + குழுவினர் சொல்லலாம்..
ஆனால் மிதுன்,ஓஜா போன்ற இளையவர்களுக்கு மன அளவில் ஏற்படும் தாக்கம்??
அதுவும் சும்மா அடியில்லை. முதல் இனின்ங்க்சில் மூன்று சதங்கள் + இரண்டாம் இன்னிங்க்சில் மேலும் ஒரு சதம்.
அந்த இன்னிங்சில் துடுப்பெடுத்தாடக் கிடைக்காத இளைய வீரர்களுக்கு இரண்டாம் இன்னிங்க்சில் வாய்ப்பு.அவர்களும் அடித்து நொறுக்குகிறார்கள்.
அதிலும் முக்கியமாக ஓட்டங்கள் பெறப்படும் வேகம்??


இது தான் உலக டெஸ்ட் தரப்படுத்தலில் முதலாவது நிலை அணியா?
காலி டெஸ்ட் போட்டியில் பதில் தருவீங்களா சாமிகளா? ஆனால் ஒரு சின்ன டவுட்..
ஆசியக் கிண்ணப் போட்டியிலும் இப்படித்தான் இறுதிப் போட்டிக்கு முன்னதான போட்டியில் மஹ்ரூபை Hat trick ஹீரோவாக்கி இறுதி அணியில் தெரிவு செய்ய வைத்து வாங்கு வாங்கு என்று வாங்கி இந்தியா கிண்ணத்தையும் தனதாக்கியது.
நேற்று மெண்டிசுக்கு ஆறு விக்கெட்டுக்களைக் கொடுத்திருக்கு..
இதுவரை அவர் டெஸ்ட் குழுவில் இல்லை. 
டெஸ்ட் போட்டிகளில் முரளி ஓய்வு பெற்ற பிறகு மெண்டிசை அணிக்குள் எடுத்து கச்சேரி நடத்தும் சூழ்ச்சித் திட்டம் ஏதாவதோ? இந்தியா குறிப்பாக இந்தியப் பந்துவீச்சாளர்கள் இன்னும் அதிகமாக தம்மை நிலைப்படுத்திக் கொள்ளவேண்டும் இன்னும் மூன்று நாட்களுக்குள்.


துடுப்பாட்ட வீரர்கள் சமாளித்துக் கொள்வார்கள். 
ஆனால் இஷாந்த்,ஹர்பஜனை மட்டுமே நம்பியுள்ள பந்துவீச்சு வரிசை?(ஹர்பஜனின் காய்ச்சல் சுகமாகுமா அதற்குள்?)


சதம் அடித்த நான்கு இலங்கையின் நான்கு வீரர்களில் சமரவீர நிச்சயம் டெஸ்ட் அணியில்.. மற்றைய மூவரில் யார் யாருக்கு வாய்ப்பு?

தரங்க?கண்டம்பி? இத் தொடரில் கிடைக்கலாம்.
திரிமன்னே காத்திருக்க வேண்டும்.
திரிமன்னே - கொஞ்சக் காலம் காத்திரு மகனே 

இந்தியப் பக்கம் கம்பீரின் கம்பீரம் தொடர்கிறது.
யுவராஜ் சிங் வழமை போல் தன் திறமையை சதத்துடன் காட்டி இருக்கிறார். 
தேவ் வட்மோர் யுவ்ராசுக்குப் பதிலாக புஜாராவை எடுத்திருக்க வேண்டும் என்று பெட்டி கொடுத்த நேரத்திலேயே மனிதர் இங்கே பிளந்து கட்டியுள்ளார்.
சிங்கம் மீண்டும் சிலிர்க்கப் போகிறதா?
அதிலும் முக்கியம் யுவராஜ் மெண்டிசுக்கு ஆட்டமிழக்கவில்லை.

இந்தத் தொடரில் இந்தியா இரண்டு டெஸ்ட் போட்டிகள் அல்லது அதற்கு மேல் தோற்காத வரை அதன் முதலாம் இடத்துக்கு ஆபத்தில்லை.
ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான்
வேகபந்து-துடுப்பாட்டம் இரண்டுக்குமிடையிலான போட்டியாகவே இந்தத் தொடர் ஆரம்பித்துள்ளது.
நிச்சயமாக முடிவுகளைத் தருகிற லண்டன் லோர்ட்ஸ் மைதானம்.
இரு அணிகளிலும் ஆக்ரோஷமாகப் பந்து வீசும் தலா மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள்..


அதிரடியான அப்ரிடி ஒரு பக்கம்.. அனுபவசாலியான பொன்டிங் மறுபக்கம்.
விட்டுக் கொடுக்காமல் விறு விறுப்பாக விளையாடுவார்கள் என்று பார்த்தால் பாகிஸ்தான் கவித்திட்டாங்க.
அவர்களது முதலாவது இன்னிங்க்ஸ் துடுப்பாட்ட சொதப்பலால் ஆஸ்திரேலியாவின் கை மிக வலியதாக ஓங்கிவிட்டது.
இன்று மூன்றாவது நாள்.
இப்போதே முந்நூறை நெருங்கிவிட்டது பாகிஸ்தானின் இலக்கு..


ஆஸ்திரேலியாவின் மும்முனை வேகபந்துவீச்சுக்கு முன்னால் அனுபவம் குறைந்த+அக்கறையற்ற 'டெஸ்ட்' துடுப்பாட்ட வீரர்(?) அப்ரிடி கொண்ட பாகிஸ்தானுக்கு இது இமாலய இலக்கு.
பங்களாதேஷ்??
தமது ஆசிய கிரிக்கெட் அண்ணன்கள் வழியில் வளர்ந்து வரும் தம்பி..


                             ஒரு போட்டி உற்சாகம்???


ஒரு போட்டியில் இவர்கள் விளையாடுவதைப் பார்த்தால் எதிர்கால உலக சாம்பியன்கள் இவர்கள் தான் என்று நினைக்கத் தோன்றும்.


அடுத்த போட்டியிலேயே நாங்கள் நினைத்ததெல்லாம் தப்போ தப்பு என்று எங்களையே எங்கள் செருப்பால் அடித்துக் கொள்ள வைப்பார்கள்.


இலங்கையிலே நடந்த ஆசியக் கிண்ணப் போட்டியில் படு சொதப்பலாக விளையாடி வெளியேறியவர்கள்,இங்கிலாந்திலே இரண்டாவது ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் இங்கிலாந்தை வெற்றிகொண்டு சாதனை படைத்தார்கள்.
(உலகக் கிண்ணக் கால்பந்தாட்டப் போட்டிகளுள் இந்த வெற்றி பெரிதாகப் பேசப்படவில்லை)


அடுத்த போட்டியிலேயே 140க்கும் மேற்பட்ட ஓட்டங்களால் தோல்வி.
இன்று மீண்டும் அயர்லாந்திடம் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள்.


அயர்லாந்துக்கு விரைவில் டெஸ்ட் அந்தஸ்து கொடுத்தே ஆகவேண்டும்.
மிக விரைவாகப் பலமான அத்திவாரம் கொண்ட அணியாக முன்னேறி வருகிறது.
அண்மையில் நெதர்லாந்தில் நடைபெற்ற ஆறு நாடுகளுக்கிடையிலான ICC World Cricket League Division Oneதொடரை இலகுவாக வென்றெடுத்தது.


அதுவும் முக்கியமான நான்கு வீரர்கள் இல்லாமல்.
அந்த நான்கு பேரும் இங்கிலாந்தில் பிராந்திய கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
அயர்லாந்து வீரர்கள் தொழில்முறையில் விளையாடி அதன்மூலம் தேசிய அணிக்கு விளையாடுவதை ஊக்குவிக்க வேண்டுமானால் கென்யா போன்ற ஒன்றுக்கும் உதவாத ஊழல் இப்போதே ஆரம்பித்துள்ள அணிகளை ஊக்குவிப்பதை விட ஆர்வமும்,உத்வேகமும் கொண்ட அயர்லாந்து,ஆப்கானிஸ்தான் போன்ற அணிகளை ஆதரவு கொடுத்து உயர்த்த வேண்டும்.
  
Billion Rupees Man தோனி


மனைவி வந்த ராசியோ என்னமோ தோனி இந்தியாவின் மிக அதிக பணம் வாங்கும் விளையாட்டு வீரர் என்ற பெருமையையும் அதிக விளம்பரத்தொகை பெற்ற சர்வதேசக் கிரிக்கெட் வீரர் என்ற பெருமைக்கும் ஆளாகிவிட்டார்.வாழ்த்துக்கள்.


சச்சின் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய சாதனைத் தொகையான 1.8 பில்லியன் இந்திய ரூபாய்களை (3 ஆண்டுகளுக்கு)தோனி மேவி இரண்டு ஆண்டுகளில் 2.1 பில்லியன் ரூபாய்களுக்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார்.


பனப்பாக்கம் சரி.. மனைவி வந்த ராசி போட்டிகளின் பக்கம் எப்படியென்று பார்ப்போம்..


அதுசரி இந்தப் பணத்தையெல்லாம் வைத்து என்னதான் செய்வாங்களோ?


-------------------------


இன்று மதராசபட்டினம் பார்ப்பதாக உள்ளேன்.
பின்னர் நேரமிருந்தால் அது பற்றியும் பார்க்கலாம்..
சொல்ல மறந்திட்டேனே..
இன்னொரு மசாலாப் பதிவும் மனசுக்குள் இருக்கு.. 

13 comments:

SShathiesh-சதீஷ். said...

தகவலுக்கு நன்றி

கன்கொன் || Kangon said...

இலங்கை எதிர் இந்தியா - மென்டிஸை நாங்கள் திறமையாகக் கையாளுவோம் என்று ட்ராவிட் அறிக்கைவிட்டு சில நாட்களிலேயே மென்டிஸ் 6 விக்கற்றுகளைக் கைப்பற்றியிருப்பது மென்டிஸூக்கு மனரீதியான பலத்தை அளித்திருக்கும். :)
6 விக்கற்றுக்களில் சச்சின் (அது ஆட்டமிழப்பில்லையாம். Ball was missing off stump, they say. ), லக்ஸ்மன், கம்பீர் இருப்பது நலம். :)
ஆனால் அணிக்குள் வந்தால் உதைவிழும்.

// (முரளி வேற குருவி தலையில் பனங்காய் மாதிரி தன் சாதனையை முறியடிக்க அதிக வாய்ப்புடையவர் இவர் தான் என்று சொல்லிட்டார்.. குளிர் காய்ச்சலோ தெரியல) //

:P


// தரங்க?கண்டம்பி? இத் தொடரில் கிடைக்கலாம். //

கண்டம்பி அணிக்குள் வந்தால் யார் செல்வது?
தரங்க வர வாய்ப்புள்ளது. பரணவிதான ஓரளவுக்கு சிறப்பாக செயற்பட்டாலும் பெரிய ஓட்டங்களைப் பெறத் தவறி வருகிறார்.
அடுத்து சந்திமாலை நீங்கள் தவற விட்டதற்குக் காரணம்?
எனக்கென்னவோ பிரசன்ன ஜெயவர்தனவும் சந்திமாலிடமிருந்து அழுத்தங்களை எதிர்கொள்வது போல தெரிகிறது.
அருமையாக அடித்தாடுகிறார்.

// யுவராஜ் சிங் வழமை போல் தன் திறமையை சதத்துடன் காட்டி இருக்கிறார். //

நாங்கள் யுவராஜை அணிக்குள் வைத்திருக்க மேற்கொண்ட சதி.
வரட்டும், பார்த்துக் கொள்கிறோம். :P


பாகிஸ்தான்-அவுஸ்ரேலியா - உண்மையைச் சொல்லப் போனால் பாகிஸ்தானிற்கு இது வேண்டும்.
பாகிஸ்தானிற்கு வானிலை ஒத்துழைத்தது. பாகிஸ்தான் பந்துவீசும்போது இருந்த ஸ்விங் அவுஸ்ரேலியா வீசும் போது இருக்கவில்லை.
பாகிஸ்தான் வழமையைப் போல கடைசி விக்கற்றிற்கு ஹசியை கொஞ்சம் அதிகமாகத் துடுப்பெடுத்தாடவிட்டது, பின்பு 3,4ம் இலக்கங்களில் புதுமுகங்களை தேர்வுசெய்து சொ.செ.சூ வைத்துக்கொண்டது.
அப்ரிடி துடுப்பாட்டத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.
டில்ஷான், செவாக் போன்றோர் பொதுவாக ரெஸ்ற் போட்டிகளில் cross batted heaves அடிப்பதில்லை, அப்ரிடி ஏதோ இருபதுக்கு இருபது போல ஆடீனார்.
வொற்சனை குறிப்பிட மறந்தமையை ஆகில உலக வொற்சன் இரசிகர் மன்றத்தின் சார்பில் கண்டிக்கிறேன்.

பங்களாதேஷ் - அயர்லாந்து - சிறிது கவனிக்கிறேன்.
அயர்லாந்தின் முன்னேற்றம் ஆறுதல் தருகிறது.


// அயர்லாந்துக்கு விரைவில் டெஸ்ட் அந்தஸ்து கொடுத்தே ஆகவேண்டும். //

ஐயோ வேணாம்...
முதல்நிலை அணிகளோடு நிறைய விளையாடி பின் கொடுத்தல் சிறப்பு.
இப்போது அவர்கள் முதல்நிலை அணிகளோடு கொஞ்சம் தான் விளையாடுகிறார்கள்.
உபகண்டத்திற்கு அழைத்து விளையாடலாம்.
இந்தியா இலங்கை விளையாடுவதை விட அதை இரசிக்கலாம்.

டோணி - :)))

பெரிய்ய பின்னூட்டம் - ஹி ஹி...
நிறைய நாள் கிறிக்கற் பதிவு வாசிக்காத கொலைவெறி.....

மசாலா கிறிக்கற் பதிவிற்கு நன்றிகள். :)

கன்கொன் || Kangon said...

மற்றது,
நீளமா எழுதினா என்னப் போல வாசகர்களெல்லாம் கோவிக்க மாட்டார்கள்.
எழுதவும். :)

Bavan said...

அப்பாடா.. இப்பதான் இது உங்கட வலைப்பூதான் எண்டு நம்பிக்கை வந்தது..:P

இதுவரை ஏதோ கோல், ரெப்ரீ எண்டு எழுதி தலையைப்பிய்த்துக்கொள்ள வச்சிட்டீங்க..ஹிஹி

ஆங்.. நீங்க இலங்கைக்கு சப்போர்ட் இல்லைத்தானே.. பிறகு ஒக்டோபர்ஸ் சாத்திரம்மாதிரி ஆகி விடக்கூடாது..:P

மென்டிஸ் ஆறு விக்கற் - அவ்வ்வ்வ்..

டோனி= அதிஷ்டம் வேற என்னத்தச் சொல்ல.. இந்தியாவில் சச்சினுக்குப்பிறகு பிடித்த வீரர்..:)

//அதுசரி இந்தப் பணத்தையெல்லாம் வைத்து என்னதான் செய்வாங்களோ?//

ஹோட்டல் அப்பிடி இப்பிடிக் கட்டுவாங்க.. சிலர் உதவி கூட செய்வாங்களாம்.. ஆனால் அந்தப்பணம் செலவழித்து முடிக்க முடியுமா?

Bavan said...

/// கன்கொன் || Kangon said...
மற்றது,
நீளமா எழுதினா என்னப் போல வாசகர்களெல்லாம் கோவிக்க மாட்டார்கள்.
எழுதவும். :)///

ஆமாம், கிறிக்கற் பதிவு 5 என்ன 1000 பக்கத்துக்கு எழுதினாலும் உக்காந்து வாசிக்கத்தயார்..:P

Unknown said...

அன்பின் லோஷன்..,

//..முரளி தன் சாதனையை முறியடிக்க அதிக வாய்ப்புடையவர் ஹர்பஜன் தான் என்று சொல்லிட்டார்..//

இந்த வார்த்தைகள் "முரளியின்" அவையடக்கம் என்றாலும், யாராலும் தனது சாதனையை உடைக்க முடியாது என்றுதான் நம்மைபோலவே நினைத்திருப்பார்.

ஆனால் முன்பு கபில்தேவ் எடுத்த விக்கட்டுகளை யாராலும் முறியடிக்கமுடியாது என்றுதான் நிலைமை இருந்தது.பின்னர் வால்ஷ்,கும்ப்ளே,வார்னே என்று முரளி வரை வந்துவிட்டது(இதில் "வாசிம் அக்ரம்" தான் சாதனை புரிவேன் என பல முறை தன்னம்பிக்கையுடன் கூறியிருக்கிறார்.)

உடைப்பது தானே சாதனை...யாராவது வருவார்கள்.
நன்றி..

shan shafrin said...

நீ.........ளமா எழுதுங்க அண்ணா.... வாசிக்க நாங்க தயாரா இருக்கோம்....:) (கிரிக்கெட் பதிவுகளை மட்டும்)

யோ வொய்ஸ் (யோகா) said...

கிரிக்கட்டா? அப்படினா என்ன?

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

ஹாய் லோஷன்..
முதல் முறை உங்க பதிவை படிக்கிறேன்..
எனக்கு கிரிக்கெட் அதிகம் தெரியாவிட்டாலும்..
உங்க எழுத்து, படிக்கிற ஆர்வத்தை தந்தது.. :-))

சூப்பரா இருக்குங்க..
மறக்காம மதராசப்பட்டினம் படம் பற்றியும் எழுதுங்க.
வருகிறேன்..

anuthinan said...

லோஷன் அண்ணா கிரிக்கெட் பதிவராக மாரிவிட்டார்!!!! இதுவே பெரிய வெற்றிதான்!!

பதிவன் நீளம் அதிகரிக்க வேண்டும் என்று பவன்,கோபி ஆகியோரின் கூட்டுடன் கேட்டு கொள்ளுகிறேன்!!!

//இந்தியா vs இலங்கை//

அதிகம் எதிர்பார்க்கிறேன்!! முரளிக்காக!!

//ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான்//

பாகிஸ்தான் வெற்றி பேரும் என்ற நம்பிக்கை எல்லாம் எனக்கு இல்லை!! ஆனால், இப்போதைக்கு அவர்கள் போராடி தோட்றாலே பெரிய விஷயம்!!!

பங்களாதேஷ் நேற்றும் அயர்லாந்திடம் தோல்வி!!!

அயர்லாந்துக்கு டெஸ்ட் அந்தஸ்து கொடுப்பது அவசியமே

Vathees Varunan said...

பங்களாதேஸ் அணியை பற்றி நீங்கள் கூறியிருப்பது மிகச்சரியே. நியூஸ்லாந்து மட்டும்தான் மிச்சமாம் அதையும் விரைவில் வெல்ல வாழ்த்துக்கள்
பெரிய பதிவானலும் பரவாயில்லை ஒக்ரோபஸ் மாதிரி எதுவும் ஆரூடம் கூறுகிறீர்களா என்று பார்ப்பதற்கே முழுவதையும் மிச்சம்விடாமல் படித்தேன் தகவலுக்கு நன்றி.

Vathees Varunan said...

பங்களாதேஸ் அணியை பற்றி நீங்கள் கூறியிருப்பது மிகச்சரியே. நியூஸ்லாந்து மட்டும்தான் மிச்சமாம் அதையும் விரைவில் வெல்ல வாழ்த்துக்கள்
பெரிய பதிவானலும் பரவாயில்லை ஒக்ரோபஸ் மாதிரி எதுவும் ஆரூடம் கூறுகிறீர்களா என்று பார்ப்பதற்கே முழுவதையும் மிச்சம்விடாமல் படித்தேன் தகவலுக்கு நன்றி

Anonymous said...

நாடுகடந்த தமிழீழ அரசிற்கமைய, தமிழர்கள் உலகில் பல பாகங்களில் பிரிந்து இருந்தாலும், இவர்கள் வாழும் ஒவ்வொரு நாட்டிலும் கிரிக்கெட் விளையாட்டு பயிற்சிகளை வழங்கி, சிறந்த கிரிக்கெட் வீரர்களை தேர்ந்தெடுத்து, நாடுகடந்த தமிழீழ அரசின் கிரிக்கெட் விளையாட்டு குழு ஒன்றை தோற்றுவிக்க வேண்டும். அக்குழு அனைத்துலக கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெறுவதற்கான அனுமதியைப் பெற்று, ஒரு நாட்டுக்கான அங்கீகாரத்துடன் போட்டிகளில் பங்குக்கொள்ளும் நிலையை உருவாக்கப்பட வேண்டும்.

இவ்வாறான செயல்பாடுகளும் உலகின் தமிழரின் ஒருங்கிணைந்த விடுதலையுணர்வையும், தமிழீழ மீட்பையும் வெளியுலகுக்கு வெளிக்காட்டும் செயல்பாடுகளாக அமையும்; மறைமுகமான தமிழீழ அங்கீகாரத்தைப் பெறவும் வழி வகுக்கும்.

அதற்கான ஆதரவுகளை அனைத்து உலகத் தமிழினம் வழங்க வேண்டும்.

நன்றி!

அன்புடன்
உங்களில் ஒருவன்

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner